இத்துடன் ‘இலக்கியப் போட்டி’ என்ற எனது தந்தை எஸ். அகஸ்தியரின் சிறுகதையினை அவரது பிறந்த நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அனுப்பி வைக்கின்றேன். (29.08.1926 – 08.12.1995). அத்தோடு கடந்த June மாதம் 8ஆம் திகதி அவரின் ‘சுவடுகள்’என்ற நாவலும் எனது ‘பூப்பும் பறிப்பும்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் லண்டனில் வெளியீடு நடந்தமையையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
அன்போடு,
நவஜோதி
(1963 இல் தமிழ் இலக்கியக் களத்தின் நிகழ்வுகளால் மையப்படுத்தப்பட்ட கதை)
அன்புள்ள செயலாளருக்கு,
தங்கள் எழுத்தாளர் சங்கம் நடத்துகின்ற அகில இலங்கைச் சிறுகதைப் போட்டிக்கென, எனது ‘ஒரே வழி’ என்ற கதை இத்துடன் வருகிறது. போட்டியின் பெறுபேற்றை உரிய காலத்தில் அறிவிக்கவும்.
செல்வி ரோகினி,
28- 4- 63
அன்புள்ள செல்வி ரோகினிக்கு,
நாம் நடத்திய சிறுகதைப் போட்டியில் தங்களின் ‘ஒரே வழி’ என்ற கதை, ‘இரண்டாம் பரிசுக்குரியதென’ நீதிபதிகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பரிசளிப்பு வைபவம், மட்டக்களப்பிலே இம்மாத ஈற்றில் நடைபெறும் முத்தமிழ் விழாவின் ஓர் அங்கமாக இது அமையும். தாங்கள் நேரில் வந்து பரிசு பெற வேண்டும் என விரும்புகிறோம்.
தங்களின் கதை, நமது வெளியீடாக விரைவில் வரும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெறவுள்ளது. ‘பாஸ்போட்’ அளவிலான தங்கள் புகைப்படமொன்றைச் சீக்கிரம் அனுப்பவும்.
சண்முகதாசன்.
11 – 8 – 63
குறிப்பு: மட்டக்களப்பில் தங்குவதற்கும், உணவுக்கும் வேண்டிய ‘வசதிகள்’ செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் பரிசு ரூபா 1500.
வாமதேவன்.
11- 3- 63
அன்புள்ள செயலாளருக்கு,
தங்களிடமிருந்து வர வேண்டிய பரிசுத் தொகை இதுவரை கிடைக்க வில்லை. பத்திரிகை ஒன்றில், ‘ரோகினிக்கு பரிசு வழங்கப்பட்டு விட்டது’ என்ற தங்கள் அறிக்கை வந்திருக்கிறது.
பரிசை உரிய காலத்தில் அனுப்பியிருப்பினும், தபால் பட்டுவாடாவின் சீர்;கேட்டினால் சில வேளை தாமதமாகிறதுபோலும்.
இதனைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதன் மூலம், தக்க நடவடிக்கை எடுத்து அனுப்பி வைக்க அனுகூலமாயிருக்குமெனக் கருதுகிறேன்.
ரோகினி
2-9- 63
அன்புள்ள செயலாளருக்கு,
எனது ‘ஒரே வழி’ என்ற கதை ‘இரண்டாம் பரிசு பெற்றதென்ற தங்கள் கடிதம் கிடைத்தது.
தங்கள் வேண்டுதற்படி, குறிப்பிட்ட தினங்களில் பரிசளிப்பு விழாவிற் கலந்து கொள்ள வசதிவராது. மன்னிக்கவும்.
கதையைப் பிரசுரிக்கும்போது ‘செல்வி ரோகினிக்குப் பதிலாக ‘ரோகினி’ என்று பெயரை மட்டுமே குறிப்பிடவும்.
புகைப்படம் அனுப்பிவைக்க முடியவில்லை. குறிப்பிட்ட பரிசுத் தொகையை உரிய காலத்தில் அனுப்பி வைக்கவும்.
தங்கள் எழுத்தாளர் சங்கம் நடத்தும் இலக்கிய விழா, சகல வகையிலும் சிறக்க என்; வாழ்த்து.
ரோகினி
19-8-63
அன்புள்ள செயலாளருக்கு,
இன்றுவரை எனது கதைக்கான பரிசுத் தொகை கிடைக்கவில்லை. இதுபற்றி இரண்டு கடிதங்கள் அனுப்பியிருந்தேன். பரிசை அனுப்புவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமலே மௌனம் காத்து வருகிறீர்கள். அதேவேளை பத்திரிகைகளில் ‘மூன்று பரிசுகளும் வழங்கப்பட்டன’ என்ற அறிக்கைகளைப் போட்டி போட்டுக் கொண்டு விடுகிறீர்கள்;.
பல சிரமங்களுக்கு மத்தியில் பரிசுத் தொகையை அனுப்பி வைக்கத் தாமதமாகலாம் என்பதாலும், விரைவில் பரிசை அனுப்புவீர்கள் என்ற திடமான நம்பிக்கையிலும் பத்திரிகைகளுக்கு மறுப்பே எழுதாமலிருக்கிறேன். காலந் தாழ்த்தாமல் பரிசுத் தொகையை அனுப்பவும். இது எனது மூன்றாவது கடிதம்.
ரோகினி
2-9-63
அன்புள்ள செல்வி ரோகினிக்கு,
தங்கள் கடிதங்கள் கிடைத்தன.
நாங்கள் வெளியிடவிருக்கும் சிறுகதைத் தொகுதியில் பரிசுபெற்ற மூன்று எழுத்தாளர்களின் புகைப்படங்களுடன் அவர்கள் பற்றிய குறிப்புகளையும் பிரசுரிக்க எண்ணியுள்ளோம்.
கைவசம் புகைப்படமில்லாவிடின் எங்கள் எழுத்தாளர் சங்கத்தின் செலவில் ஒரு படம் பிடித்து அனுப்பும்படியும் தங்கள் வாழ்க்கை, எழுத்துலக சாதனைகள் பற்றி, ‘வாசகர் விரும்பக் கூடிய முறையில்’ எழுதியனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறேன். படத்துடன் புகைப்படப் பிடிப்பாளரின் பற்றுச் சீட்டை அனுப்பினால், அதில் குறிப்பட்டுள்ள தொகையையும் அனுப்பிவைப்போம்.
வாமதேவன்
8- 9. 63
அன்புள்ள செயலாளருக்கு,
தங்கள் கடிதங்கள் கிடைத்தன. பரிசுத்தொகை பற்றி ஒரு வாசகமும் குறிப்பிடாமல், கடிதம் ‘அத்து மீறி’யிருக்கிறது.
கதைக்கான பரிசை அனுப்பாதவரை, அக்கதையைப் பிரசுரிப்பதற்கு நான் அனுமதியளிபபதற்கில்லை. எனது பரிசை உடனே அனுப்பவும்.
ரோகினி
10.-9-63
அன்புள்ள ஐயா,
தங்கள் ஸ்தாபனம், பரிசு பெற்ற எனது ‘ஒரே வழி’ என்ற கதைக்கான பணத்தை இலக்கியப் போட்டி நடத்திய எழுத்தாளர் சங்கத்துக்குச் சன்மானமாக வழங்கியிருப்பதாகப் பத்திரிகைகளில் பார்த்தேன்.
அந்த எழுத்தாளர் சங்கம் பரிசை இதுவரை எனக்கு அனுப்பவில்லை. முடிந்தால், சன்மானம் அளிக்கும் தாங்களே அதனைப் பெற்று எனக்கு அனுப்புங்கள்.
எழுத்தாளர் சங்கம் பரிசை அனுப்பாதவரை எனது கதையைப் பிரசுரிப்பதற்கு நான் அனுமதியளிக்கவில்லை என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ரோகினி
10- 9- 63
அன்புள்ள செயலாளருக்கு,
‘கலைமணி’ சஞ்சிகையில் தங்கள் எழுத்தாளர் சங்க விளம்பரத்தின் பிரகாரமே சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டேன். போட்டியில் கதை தேர்வாகி பரிசுக்குரியதாகியும் விட்டது. கதைக்கான பரிசுத் தொகையையும் தங்கள் விளம்பரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட பெயருக்கு நேர்மையாக அனுப்ப வேண்டியதே யோக்கியமான செயல். இதர சமாச்சாரங்கள் உங்கள் ‘வேண்டுதல்’களேயன்றி ‘நிபந்தனை’களன்று. வேண்டுதல்களை அங்கீகரிப்பதும் நிராகரிப்பதும் கதை எழுதியவனை பொறுத்த விஷயம். சிறுகதைப் போட்டி தரமான இலக்கிய நிர்ணயிப்புக்கு நடத்தப்பட்டதேயன்றி, எழுத்தாளர்களுக்காகவல்ல.
பரிசையே அனுப்பாமல் பத்திரிகைகளுக்கு, ‘பரிசு வழங்கப்பட்டது’ என்று பொய்யான அறிக்கை விடுத்து இலக்கியவாதியான என்னை மட்டுமன்றி, எனது அபிமானிகளையும் பொதுமக்களையும் ஏமாற்றியுள்ளீர்கள்.
இந்தப் பரிசுகேடுக்காக ஐந்து தடவை நினைவுபடுத்தவேண்டிய சங்கடத்தை எனக்கேற்படுத்தினீர்கள். கதைக்கான பரிசை அனுப்புகிறீர்களா? இல்லையா? இறுதியான முடிவை உடனே தெரிவிக்கவும்.
ரோகினி
14 – 9- 63
அன்புள்ள ரோகினிக்கு,
தங்கள் அஞ்சலட்டையும் கடிதங்களும் கிடைத்தன.
ஓர் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் என்ற வகையிலும் இலக்கியவாதி என்ற முறையிலும் தங்களை ஏதாவது ஒரு வகையில் அடையாளங் கண்ட பின் பரிசுத் தொகையை அனுப்பி வைக்க முயன்றேன். தங்கள் ‘ஒத்துழைப்புக் கிடைக்காத’ காரணத்தால் செயற்குழுவின் அனுமதியின்றித் தங்கள் பரிசுக்குரிய பணத்தை அனுப்பத் தயங்குகின்றேன். தங்கள் பரிசுத் தொகையை வழங்காமல் தங்கள் கதையைப் பயன் படுத்தமாட்டோம் என்பதை உறுதியளிப்பதோடு, இனி நேர்முகமாகத் ‘தங்களோடு தொடர்பு’ கொள்ள முயல்கிறேன்.
வாமதேவன்
14- 9 – 63
அன்புள்ள செல்வி ரோகினிக்கு,
தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியின் பரிசு பெற்ற எழுத்தாளர் மூவருக்கும் ‘பாராட்டு விழா’ ஒன்றினை நடத்த எமது இலக்கியக் குழு முடிவு செய்துள்ளது. அதற்கிணங்க இவ்வழைப்பிதழ் தங்களுக்கு அனுப்பப்படுகின்றது.
21-9-63 சனிக்கிழமை மாலை 5 மணிக்குக் கவிஞர் நடராஜன் அவர்கள் தலைமையில் பம்பலப்பிட்டி ‘கிரீன் லண்ட்’ ஹொட்டலில் ஒரு பாராட்டு விழா நடைபெறும்.
தாங்களும் சமூகந் தந்து விழாவைச் சிறப்பிக்க அழைக்கின்றோம்.
விழாக் குழுவினர்
17 – 9- 63
அன்புசால் விழாக் குழுவினருக்கு,
சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற எழுத்தாளர்களை கௌரவிக்கு முகமாகத் தங்கள் இலக்கியக் குழுவினர் நடத்தும் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் கிடைத்தது.
குறிப்பிட்ட எழுத்தாளர் சங்கம் இதுவரை எனது கதைக்கான பரிசுத் தொகையை வழங்கவில்லை. எனவே தாங்கள் நடத்தும் ‘பாராட்டுவிழா’வில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கின்றேன்.
இலக்கியம் என்றால் பாராட்டுவதே சம்பிரதாயமெனின், அத்தகைய ஒரு சம்பிரதாயத்துக்காகவேனும் பரிசு பெற்ற இலக்கிய கர்த்தாக்களுக்குப் பாராட்டு விழா நடத்துவதுபோல், தாங்களே முன் வந்து வழங்கப்படாத எனது பரிசுத் தொகையை அந்த எழுத்தாளர் சங்கத்திடமிருந்து பெற்றுத் தருமாறு வேண்டுகின்றேன்.
அமலதாசன் (ரோகினி)
19-9-63
அன்புள்ள ரோகினிக்கு,
நாங்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசுக்குரிய சிறுகதைக்கான பரிசு வழங்கப்படமாட்டாது.
பல எழுத்தாளர்கள் ‘அக்கதை தங்களுடையது’ என்று உரிமை பாராட்டுவதாலும், ஒருவரேனும் தங்களைப் பற்றி விபரங்களையோ படத்தையோ அனுப்பி வைக்கத் தவறியதாலும், எங்கள் எழுத்தாளர் சங்கச் செயற்குழு மேற்படி முடிவுக்கு வந்துள்ளது.
இரண்டாம் பரிசுக்குரிய கதையைத் தவிர, போட்டிக் கதைகள்’ என்ற தலைப்பில் மிகுதி ஒன்பது கதைகளும் தொகுக்கப்படுகின்றன. இதன் வெளியீட்டு விழா அடுத்த மாதம் ‘வெகுவிமரிசை’யாகக் கொண்டாடப்படும்.
எமது செயற்குழுவின் இம்முடிவினை 20-9-63 இல் வெளியான ‘செய்திக் குறிப்பையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இதனைவிட ஏனைய பத்திரிகைகளுக்கும் எம்மால் தயாரிக்கப்பட்ட ‘அறிக்கை’ அனுப்பப்பட்டுள்ளது.
வாமதேவன்
28 – 9 – 63
குறிப்பு: எங்கள் சங்கத் தலைவர் தங்கள் முகவரிக்கு நேரில் வற்த போதும் நிலைமை தெளிவாகவில்லை. எனவே பரிவுத் தொகையை நன் கொடையளித்தவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படவிருக்கிறது – வா.
அன்புள்ள செயலாளருக்கு,
அதிக நாட்களாக நிஷ்டையிலிருந்த நான் மௌன விரதத்தைக் கலைத்து விட்டு இதனை எழுதுகிறேன்.
தாங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் விரிவான விவரங்கள் வேண்டியிருந்தன என்ற தோரணையில் எழுதியமையால் நானும் விஷயத்தை விளம்புகிறேன்.
தாங்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘ரோகினி’ என்ற பெயரில் எழுதியது நானே.
ரோகினி எனது பத்துமாதப் பெண் குழந்தையின் பெயர். பதிரிகைகள் குறிப்பிட்டதுபோல இக்குழந்தை எட்டு வயதுப் பாலகியல்ல: தாங்கள் கருதியதுபோல் பதினெட்டு வயசு பருவக் குமரியுமல்ல.
அக்கதைக்கு ‘பல எழுத்தாளர்கள் உரிமை பாராட்டினார்கள்’ என்று வேறு ’திடீ’ரெனக் கரடி விட்டுக் கயிறு திரித்தமைக்காக இலக்கியவாதி என்ற வகையில் வருந்துகிறேன். எழுத்துலகில் ‘திடீர் திப்’பென்று தோன்றிய அந்த நவயுக இலக்கியப் பிரமாக்கள் யாரையா?
29- 9 – 63 தினசரியில் ‘ஒரே வழி’என்ற அக்கதை பிரசுரமானதே. அப்போதாவது அந்தப் பல எழுத்தாளர்களும் கொதித்தெழுந்து உரி;மைப் போராட்டத்தில் குதித்திருக்கலாமே? அந்தப் பிரமாக்கள் ஒரு சேர இறந்து விட்டார்களா?
தங்கள் எழுத்தாளர் சங்கத்தின் ;பெருந்தலைவர்’ பணத்துடன் எனது வசிப்பிடம் நாடி வந்தார் என்று குறிப்பிட்டிருப்பதும் இது போன்ற திருகுதாளமே. எனது முகவரிக்குத் தங்கள் தலைவர் எந்தச் சந்தர்ப்பத்திலாவது வரவில்லை என்பதைத் தெரிவிப்பதுடன், எந்த நேரத்திலும் எந்த எழுத்துலகப் பிரம்மாவையும் சந்திக்கக் காத்திருக்கின்றேன். எனது முகவரியைத் தவிர வேறு முகவரியை நான் தங்களுக்கோ இலக்கிய உலகிற்கோ ஒருபோதும் தெரிவித்ததில்லை.
இலக்கியம் கிள்ளுக் கீரையல்ல, சமுத்திரம். அது தவமியற்றும் முனிவர்களுக்கு வெளித்து வரும் நட்சத்திரம்போல் எழுத்தாளர்களிடமிருந்து முகிழ்ந்த வரும் சிருஷ்டி – அந்தச் சிருஷ்டிகளைத் திருகுதாளங்களால் ஒரு போதும் மறைத்துவிட முடியாது. ஒன்று சொல்கிறேன். மானிட இதய வேட்கையோடு சத்தியப் பேனா பிடிக்கிற திராணியும் தகுதியும் தங்களுக்குண்டாவதாக. இனியாவது எதிலும் மோசடி புரியாதிருப்பீர்களாக.
அமலதாசன்
7-10-63
எழுத்தாளர் சங்கத்துக்கு ஒரு பகிரங்கக் கடிதம்.
அன்புடையீர்,
தாங்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற ‘ஒரேவழி’ என்ற கதை ஆசீரியருக்கு அப்பரிசு வழங்கப்படாதெனவும், அறுவர் அதற்கு உரிமை பாராட்டியதால்’ அம்முடிவை மேற்கொண்டதாகவும் 10- 10- 63 ‘புதினம்’ இதழில்; அறிக்கை விட்டீர்கள்.
சுய விளம்பரத்திற்காக – பதவி ஆசைக்காக – பிரபல்யப்படுத்துவதற்காகப் இலக்கியப் போட்டிகளும் பாராட்டுக் கூட்டங்களும் இலக்கிய நபுஞ்சகர்களால் – அநாம தேயங்களால் நடத்தப்படுவதை நினைவிற்கொண்டு, தங்களுக்கும் சிறுகதைப்போட்டி யொன்றை நடத்த வேண்டும் என்ற ஆசை ஏற்படலாயிற்று. தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே பரிசு வழங்க வேண்டும் என்ற விபரீத எண்ணமும் ஏற்பட்டிருக்கலாம். அந்த ஆசைகளையும் இலக்கியம் போட்டி நிபந்தனைகளுடன் சேர்த்திருந்தால் அமலதாசன் போன்ற எத்தனையோ இலக்கியவாதிகளின் சிரமங்கள் தவிர்ந்திருக்கும்.
தங்களுக்கு வேண்டியவர்களுக்கும், தங்கள் முகாமிலுள்ளவர்களுக்குமே பரிசுகள் வழங்கப்பட்டு, அவர்களை விளம்பரப்படுத்தி தாங்களும் மகாஜனங்கள் மத்தியில் பிரபல்யமாகிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இலக்கிய உலகிற்குப் புதியவர்களல்லர். இலக்கியப் போட்டிகளை விளம்பரப்படுத்திவிட்டு, இப்போட்டியில் தங்களுக்குப் பரிசு கிடைக்க வகை வகுக்கப்படுமாதலால் ஏதாவது ஒன்றை எழுதி அனுப்புங்கள்’ என்று சூசகமாக அறிவிக்கின்ற எழுத்துலகச் சிற்பிகள் முதற்கொண்டு, ‘நான் இலக்கிய நூல்களுக்கு முன்னுரையளித்தால் அந்நூல்கள் நிச்சயம் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றுவிடும்’ என்று கூசாமல் தம்பட்டம் அடிக்கும் கலாநிதிச் சட்டம்பிமார்வரை எத்தனையோ பெரிய விமர்சன வித்தகர்கள் இருக்கின்றனர். ஒரு பகுதியை வாசித்துவிட்டே முழுநூலுக்கும் ‘விமர்சனம்’ செய்யும் அதிசூரர்களும் இருக்கின்றனர்.
ஆனால், மக்களை – வாசகர்களை – இலக்கிய அபிமானிகளை வெறும் முட்டாள்கள்’ என்று நினைத்துக்கொண்டு ‘சும்மா’ அறிக்கைகளை விட்டுக் குழப்பியடித்துத் திட்டமிட்டதைச் சாதிக்க முனைவதுதான் சுத்த ஹம்பக், ஆக வெட்கக்கேடு, பெரும் பரிசு கேடு.
தாங்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘செல்வி ரோகினி: என்ற பெயரில் எழுதி இரண்டாம் பரிசு எழுத்தாளர் அமலதாசன் என்பதனை, கதைகளைத் தேர்ந்தெடுத்துப் பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டபின்பே தங்களுக்குத் தெரிந்தது. எனவே மெல்லவும் முடியாமல் தள்ளவும் முடியாமல் விழிபிதுங்கி முழித்தீர்கள். எதிரணி இலக்கியவாதியான அமலதாசனுக்குத் தங்கள் சங்கத்தின் பரிசைக் கொடுக்கத் தங்களுக்கு மனசு வரவில்லை. யாரோ ‘திரி தூண்டி’ விட்டிருக்கிறார். எனவே, உங்கள் சகாக்கள் சிலரையோ ஒருவரையோ பிடித்து வைத்து ‘நான்தான் ரோகினி’ எனக்குப் பரிசை அனுப்பங்கள்’ என்று சில கார்டுகளை – கடிதங்களை எழுதுவித்து அவற்றை ஆதாரமாக வைத்து, ‘அக்கதைக்கு அறுவர் உரிமை பாராட்டினார்கள். அதனால் பரிசு கொடுக்கவில்லை’ என்று அறிக்கைவிட்டு உங்கள் மாளா ஆசையை மீளப்பெற முயன்றீர்கள்.
நியாயத்துக்கும் மனச்சாட்சிக்கும் உங்கள் சங்கத்தினர் கட்டுப் படுவதாகவிருப்பின் கீழே எழுதப்படும் கேள்விக் கணைகளுக்கு ஒழுங்கான பதில் கூறவேண்டும். இன்றேல், யோக்கியமாக எழுத்தாளர் அமலதாசனுக்கு இலக்கியப் பரிசைச் சீக்கிரம் அனுப்ப வேண்டும்.
1-.10-63 பத்திரிகையில் ‘எங்கள் சங்கத்தின் பெருந்தலைவர் பரிசுப் பணத்துடன் சென்றபோது வீடு பூட்டியிருந்ததைக் கண்டு அயலில் விசாரித்தளவில், ‘அப்படி யாரும் அங்கில்லை’ என்ற தகவலுடன் திரும்பினார் என்கிறீர்களே!, அப்படியானால் அந்த வீட்டில் வசித்தவர்களின் நாமதேயங்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டுமல்லவா? அந்த அநாமதேயங்கள் யாவை?
28- 8- 63 தினசரியில், ‘இரண்டாம் பரிசு பெற்ற ஒரே வழி’ என்ற கதையை எழுதிய செல்வி ரோகினிக்குப் பரிசு வழங்கப்பட்டது என்கிறீர்களே, அப்படியாயின் மட்டக்களப்பு விழாவிற் கலந்து அந்தப் பரிசைப் பெற்றுச் சென்ற நவீன ரோகினி யாரையா?
நிரூபர் பிழையான செய்தி அனுப்பினாரெனக் கருதினால், அறிக்ககைகள் விடுவதில் அசகாயசூரரான தாங்கள் அதனை மறித்து மறு அறிக்கை விடாதது ஏன்? ரோகினி உங்களுக்கு எழுதிய கடிதத்தில் இதனைச் சுட்டிக் காட்டி வினவியபோது ஏன் அந்த அறிக்கையை மறுக்கவில்லை. ‘பரிசு வழங்கப்பட்டு விட்டது’ என்ற செய்தி வந்தவுடன் யாவும் ‘கப்சிப்;’பென்று அடங்கிவிடும் என்ற நினைப்பா?
எழுத்தாளர் அமலதாசன் ‘கூழ்முட்டைப் போராட்டத்தின் போது யாழ்ப்பாண மண்டபத்தில் நேரிற் சந்தித்துத் தனது கதைக்கான பரிசு பற்றிக் கேட்டபோது, ‘ஐயோ, எனக்கொன்றும் தெரியாது. ஏல்லாம் இந்த எழுத்துலக பூஜாரிகளின் வேலைதான்’ என்று விட்டு நழுவி ஓடியது ஏனோ? ‘ஒரே வழி’ என்ற கதை பரிசுக்குரியதென தேர்ந்தெடுக்கப்பட்டதும், அதை எழுதியவர் ஒரு ‘செல்வி’ என்றவுடன், செயலாளரை முந்திக் கொண்டு அந்தச் செல்விக்குப் பாராட்டுக் கடிதம் – காதற்காவியமாக எழுதிய எழுத்துலகப் பிரம்மா இவரல்லவா?
‘ஒரே வழி’ என்ற கதையை எழுதிய அமலதாசனே செல்வி ரோகினி என்று
1-10-63ஆம் 22-10-63 ஆம் திகதிப் பத்திரிகைகளில் குறப்பிட்டிருந்ததும், உங்கள் கணக்குப்படி பரிசு கோரிய ஆறு நவின ரோகினிகளுள் ஒருவர்கூட அந்தச் செய்தியை மறுத்து எழுதவில்லையே ஏன்?
29-9-63 இல் ‘ஒரே வழி’ பிரசுரமாகியயோது ஆறு ரோகினிகளும் ஏன் மௌனம் சாதித்தார்கள்? அக்கதையைப் பிரசுரித்த பத்திரிகையிலிருந்து பணம் பெற்றுக் கொண்டவர் எழுத்தாளர் அமலதாசன். அப்படியிருக்க, அறுவரான தேவதூதர்கள் ‘திடீ’ரென்று எங்கிருந்து தோன்றினார்கள்?
பரிசுப் பணத்திற்கு உரிமை கொண்டாடுபவர்களுக்குத் தங்கள் கதை எதுவென்று நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்படியானால், 29-9-63 தினசரியில் அக்கதை பிரசுரமாகியபோது இந்த ஆறுமுக எழுத்துலகச் சாம்ராட்டுகளும் படை எடுத்துச் சென்றிருக்க வேண்டுமல்லவா?
பரிசுத் தொகையைப் பத்திரிகைகள் அறிவித்ததிலிருந்து அமலதாசனுக்கும் செயலாளருக்குமிடையில் ஏற்பட்ட கடிதத் தொடர்பு போன்று இந்த அறுவர்க்குமிடையில் ஏற்பட்டிருக்க வேண்டுமே? தபாற்கந்தோர் திகதியிட்ட கடித உறைகளுடன் கடிதங்களைப் பிரசுரித்து மக்களுக்குப் பிரகடனப்படுத்த முடியுமா?
இலக்கியவாதிகளுக்கோர் அறைகூவல்.
அண்மையில் எழுத்தாளர் சங்கத்தினர் நடத்திய இலக்கிய விழாவொன்றில், இலக்கியப் போட்டியில் பரிசு பெற்றும் அதன் சன்மானம் பெறாத எழுத்தாளர் அமலதாசன், ‘அநீதியைக் கண்டு கொதித்தெழுபவனே உண்மையான எழுத்தாளன்’ என்று மண்டபமதிரக் கொட்டி முழங்கினார். ஏங்கெங்கு அநீதி இழைக்கப் படுகின்றதோ அங்கெல்லாஞ் சென்று ஜனநாயக முறைப்படி கூழ்முட்டையடித்தும் கொதித்தெழத் தயங்காத இந்த எழுத்துலக மன்னர்கள். தங்கள் சங்கத்தைக் கட்டி எழுப்பிய இந்த எழுத்தாளர் அமலதாசனுக்கு இன்னோர் எழுத்தாளர் சங்கத்தால் இழைக்கப்பட்ட அநீதிபற்றி இதுவரை மூச்சும் விடவில்லையே, ஏன்?
மயில்ராவணன்
20- 10- 63
அன்புள்ள ஆசிரியர் மயில்ராவணனுக்கு,
இலக்கியப் போட்டி நடத்திய எழுத்தாளர் சங்கத்துக்கும், இலக்கிய வாதிகளுக்கும் தாங்கள் தங்கள் பத்திரிகையில் எழுதிய பகிரங்கக் கடிதம் பார்த்தேன்.
அநீதியைக் கண்டு கொதித்nழுபவனும், கொடுமைகளை எதிர்த்துப் போராடுபவனுமே எழுத்தாளன் பணி என்று, இதே அநீதி புரியும் காரண கர்த்தாக்களையும் மூல நாயகர்களையும் இனங்கண்டு அவர்களை எதிர்த்தத் துவம்சிப்பதோடு அவர்களின் பரிசுகேடுகளை – பாசாங்குகளை – பசுத்தோல் போர்த்த முகமூடிகளைக் கிழித்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துபவன்தான் நேர்மையான எழுத்தாளன். அவன் தான் மக்களுக்காகப் பேனா பிடிக்கத் தகமையுள்ள இலக்கியவாதி.
இந்நோக்கோடு இந்த அநீதியை கவனித்துச் சாடிய தங்களுக்குச் சத்தியப் பேனா தூக்கிய மக்கள் எழுத்தாளர் சார்பில் நன்றி நவில்கின்றேன்.
இன்றைய இலக்கியப் போட்டி பரிசுகளின் சகல தில்லு முல்லுகளையும் நான் கசடறப் புரிந்தவன். இற்றைவரை பரிசுப் போட்டி வைப்போரின் பரிசு கேட்டைப் பரீட்சிப்பதும் இலக்கியக் களத்தில் என் பணியாகவிருந்தது.
அந்த வகையில் எதிரிகளின் கோட்டைக்குள் சென்று அதனைச் சாதித்து விட்டேன். எழுத்தாளனுக்குக் கிடைக்கிற வெற்றியும் ஆத்ம சுகமும் இது ஒன்றுதான். இலக்கியத்திற்காக அளிக்கப்படுகின்ற பரிசு இலக்கியத்துக்குக் கிட்டும் வரை இலக்கியக் களம் பரிசு கேடாகவே இருக்கும்.
தங்களைப் போன்ற எனது அபிமான எழுத்தாளர் ஒருவர் தர்மாவேசத்தோடு எனக்கு எழுதிய கடிதம் ஒன்று தங்கள் பார்வைக்கு இத்துடன் இணைக்கப் படுகின்றது. இற்றைவரை நிகழ்ந்த – நிகழ்கின்ற இலக்கியப் போட்டிகளின் தகிடுதத்தங்களுக்கு இதுவும் ஒரு சான்று.
அமலதாசன்
25- 10- 63.
மதிப்பிற்குரிய எழுத்தார் அமலதாசனுக்கு,
அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் ‘இரண்டாம் பரிசு’ பெற்ற தங்கள் கதையைப் படித்தேன். ‘முதலாம் பரிசு’ பெற்ற எனது கதையைவிடத் தங்கள் கதையே சிறப்பாகவிருக்கிறது. அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி தங்கள் சிருஷ்டி இலக்கியங்கள் அனைத்தையும் விரும்பிப் படித்து வரும் வாசகர்களில் நானும் ஒருவன். கதைக் களத்தின் மண் வாடை வீசாத தங்கள் சிருஷ்டிகளே கிடையாதெனலாம்.
இந்நாட்களில் மண்வள இலக்கியத்தைப் பொதுவாக எல்லா எழுத்தாளர்களுமே எழுதி வருகின்றார்கள். நானும் அப்படித்தான். ஆனால் அன்றையவர்களுக்கும் இன்றையவர்களக்கும், ஏன், எனக்கு முன்பே துணிவுடனும் சிறப்புடனும் மண்வாசைன சரியாக வீசும் உயிர்த் துடிப்பான யதார்த்தப் படைப்பு இலக்கியங்களை எழுதிச் செயல்முறைப்படுத்தி வெற்றியும் பெற்ற முன்னோடிகளில் நீங்களே முதன்மையானவரெனத் துணிந்து சொல்வேன். இந்தத் துறையில் நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
தங்கள் கதையைத் தவிர்த்து எனது கதைக்கு ‘முதற் பரிசு’ என்று பெரிய கொட்டை எழுத்தில் விளம்பரம் கொடுத்து எனது கதையும் பிரசுரமாதே தவிர, முதற் பரிசுக்கான சன்மானம் இன்னும் கிடைக்கவில்லை. நானும் கடிதத்தில் மேல் கடிதம் எழுதிப் பார்த்துக் களைத்து விட்டேன். பலன் என்னவோ பூஜ்ஜியம்தான்.
இல்கிய உலகில் இந்தப் பரிசு கேடு நீங்க, தயவு செய்து நீங்களே இதனை எழுதுங்கள். அநியாயத்தைப் பொறுக்காது வீராவேசங்கொண்டு கெம்பியெழுகின்ற தங்கள் பேனாவால்தான் அது சாத்தியமாகும்.
எஸ்.ஜே.ராஜன்
6- 9- 63
– 1963 – தினகரன்