பார்வதி தன் மகள் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருப்பதை மனம் பதைபதைக்க பார்த்து கொண்டிருக்கிறாள். அவளை பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டி செல்ல வேண்டும். என்ன செய்வது? யாரும் அருகில் இல்லை, அவரவர்கள் வீட்டில் பதுங்கிக்கொண்டுள்ளார்கள். இவளுக்கும் ஆண் துணை இல்லை. யாராவது வெளியே சென்று ஒரு ஆட்டோவோ, வண்டியோ பிடித்து வந்தால் போதும், எப்படியும் கூட்டி போய்விடலாம். ஆனால் அதற்கு உதவுவது யார்?
காரணம் அன்று அந்த ஊரின் பொது உணவு பண்டகசாலையில் பொதுமக்களை வரிசையாக நிற்க வைத்து பொருட்கள் வழங்க பணியாட்கள் முயற்சித்த பொழுது தவறுதலாக ஒருவரை வேகமாக நகர்த்தி விட அவர் வெயிலில் வரிசையில் நின்ற கோபத்தில் இருந்தாரோ என்னவோ தெரியவில்லை, தள்ளியவனை பார்த்து சில சொல்ல தகாத வார்த்தைகளை, சொல்ல அந்த பணியாளுக்கு கொஞ்சம் கோபம் எட்டிப்பார்க்க அவனும் சில தகாத வார்த்தைகள் சொல்ல, இருவரும் சிறிது நேரத்தில் அடித்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். இருவர் பக்கமும் விலக்கி விட சிலர் முயற்சிக்க இந்த மாதிரி சந்தர்ப்பத்தை ஊதி பொ¢யதாக்க முயற்சிக்கும் ஒரு சிலர், மற்றவர்களிடம் சாதி காரணமாகத்தான் இந்த பிரச்சினை வந்து விட்டது என்று அந்த கூட்டத்தில் பேச ஆரம்பித்தனர்.
அந்த பேச்சு அவர்கள் எதிர்பார்த்தது போலவே வேகமாக பரவி சாதாரணமாக ஆரம்பித்த இருவரின் சண்டை சாதி சண்டையாக ஆரம்பித்து விட்டது.இதை சாக்காக வைத்து இரு பக்க சட்ட விரோதிகள் கூட்டத்தில் புகுந்து கல்வீச்சு, பஸ் எரிப்பு, போன்றவைகளை நடத்த ஆரம்பித்து விட்டனர்.வழக்கம் போல் பொது மக்கள் அங்கும் இங்கும் ஓடி அலைகழிக்கப்பட்டனர். குய்யோ முய்யோ என்ற கூக்குரலுடன் குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த மக்கள் அனைவரும் எங்காவது பதுங்கிக்கொள்ள ஆலாய் பறந்தனர்.
வண்டி வாகனங்கள் எதுவும் நிற்கவில்லை, பேருந்துகள் அனைத்தும் பணிமனையை நோக்கி போக ஆரம்பித்து விட்டன. அதில் பயணம் செய்த ஆட்கள் மனிதாபிமானம் இல்லாமல் இறக்கி விடப்பட்டனர். கடைகள் வரிசையாக ஷட்டரை இழுத்து மூட ஆரம்பித்து விட்டன.
தெருவே கலவரம் ஆரம்பித்த பத்து நிமிடங்களில் வெறிச்சென ஆகிவிட்டன. கண்ணுக்கெட்டிய தூரம் ஆட்டோ வண்டிகள் எதுவும் கண்ணில் படவில்லை. ஆட்களே தெருவில் நடமாட பயந்து கொண்டிருந்த வேளையில் தலைமுடிகளை விருட் விருட்டென சொறிந்து கொண்டு பைத்தியக்கார தோற்றத்துடன் ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள். பார்த்தவுடன் சொல்லி விடலாம், அவளுக்கு மன நலம் பாத்தித்திருக்கிறது என்று. அவள் தனக்குத்தானே பேசிக்கொண்டு, கைகளை தட்டி, பாட்டு பாடியபடி அந்த தெருவில் நடந்து வந்ததை பலர் வீட்டின் ஜன்னலிலிருந்து பார்த்து கொண்டிருந்தனர்.அங்கொன்றும் இங்கொன்றுமாக போலீஸ் வாகனம் இவளை கடந்து சென்று கொண்டிருந்தது.
அவளை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு இருந்த பதை பதைப்பு, அவளுக்கு இருந்ததாக தொ¢யவில்லை.ஒவ்வொரு வீட்டு முன்னால் நின்றவள் யாராவது உணவு கொடுப்பார்களா என்று பார்ப்பதும், பின் தனக்குத்தானே சிரித்துக்கொள்வதும், பின் அடுத்த வீட்டு வாசலுக்கு போய் நிற்பதும், தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள்.
எப்பொழுதும் அவளுக்கு உணவு போடும் ஒரு சில வீட்டுக்காரர்களும், கலவரக்காரர்களுக்கு பயந்து வெளியே வராமல் இருந்து விட்டனர்.
யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த பெண் ஜன்னல் வழியாக ஒரு குழந்தை கையாட்டிக்கொண்டிருப்பதை கண்டவுடன் அந்த குழந்தையின் கவனத்தை கவர ஆடி பாட ஆரம்பித்து விட்டாள். அந்த குழந்தையும் கிலுக்..கிலுக் என கை ஆட்டி சிரித்தது.இவள் தனக்குத்தானே சிரித்துக்கொண்டு, அடுத்த வீட்டை நோக்கி காலகளை நகர்த்தினாள்.
பார்வதி வீட்டு முன் நின்று கைகளை தட்டி ஆட ஆரம்பித்தாள்.இவள் போடும் சத்தம் பார்வதிக்கு கேட்டது. ஆனாள் அவள் நிலைமையோ தன் மகளை எப்படியாவது மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமே என்ற கவலையில் இருந்தது. வழக்கமாக தினமும் அவளுக்கு ஏதாவது இருந்தால் போடுவாள். இவளும் தலைமுடியை வறட்டு வறட்டு என்று சொறிந்து தன் அனபை வெளிப்படுத்துவாள்.பார்வதி “உன்னை” ஒரு நாளாவது ஒரு நாள் தலை முழுக்க தண்ணிய ஊத்தி குளிக்க வைக்கிறனா இல்லையா பாரு என்று சொல்லுவாள்.
அப்படி வம்பாய் பேசும் பார்வதியின் சத்தம் கேட்கவில்லை என்றவுடன் அந்த பெண் கைகளை தட்டுவதை நிற்த்தி விட்டு அமைதியாய் நின்றாள்.உள்ளிருந்த் பிரசவ வேதனையில் துடிக்கும் ஒரு பெண்ணின் சத்தம் கேட்டதை உற்றுப்பார்த்தவள் என்ன நினைத்தாளோ தலை தெறிக்க ஓட் ஆரம்பித்தாள்.
பாதையின் ஓரத்தில் இருந்த கடைகளிலும்,சில வீடுகளில் பதுங்கி ஜன்னல் ஓரம் நினறவ்ர்களும் இவள் தலை தெறிக்க ஓடுவதை பார்த்தனர். எதற்கு ஓடுகிறாள்?அதுவும் பைத்தியக்காரி இப்படி எதற்க்காக ஓடுகிறாள் என்ற ஆர்வமே பலர் மனதில் இருந்தது.
திடீரென ஒரு கல் அவள் நெற்றியை தாக்கியது. ஏதோ சந்தில் மறைந்திருந்த ஒரு கலவரக்காரன் வேண்டுமென்றே அந்த பெண்ணை நோக்கி கல்லை எறிந்தான். அது சா¢யாக அவள் நெற்றியை தாக்க, வெறியுடன் திரும்பியவள், என்ன நினைத்தாளோ மீண்டும் தன் ஓட்டத்தை தொடர்ந்தாள்.
இரண்டு கிலோ மீட்டர் தள்ளி இருந்த அந்த மருத்துவ மனையில் கூட இந்த கலவர பாதிப்பு தொ¢ந்திருந்தது.உள்ளே அமர்ந்திருந்த நோயாளிகள் அமைதியாக உட்கார்ந்திருக்க, வெளியில் வண்டி வாகனங்கள் இல்லாமல் வெறிச்சென இருந்தது.
தலையில் இரத்த பெருக்குடன் ஓடும் பைத்தியக்கார தோற்றமுடைய ஒரு பெண் திடீரென மருத்துவமனைக்குள் ஓடிவந்தவுடன் காத்திருந்த பயணிகள் பயந்து எழுந்தனர். அதற்குள் மருத்துவ்மனை காவலாளி ஓடி வந்து அவளை வெளியே அனுப்ப முயற்சி செய்த பொழுது சத்தம் கேட்டு வெளியே வந்த மருத்துவர் அந்த காவலாளியை தடுத்து விட்டு நர்ஸ்சை கூப்பிட்டு அவளின் தலை காயத்துக்கு மருந்து போட்டு விடச்சொன்னார்.
ஆனால் அந்த பெண் வெளியே கையை காட்ட சிறிது நேரம் புரியாமல், நினற மருத்துவர் மெல்ல அவளை நெருங்கி என்ன வேண்டும்? என்று சைகையில் கேட்டார். அந்த பெண் வெளியே கையை காட்டி வயிற்றை தடவி காட்டி கை தட்டினாள்.
டாக்டர் திரும்பி நர்சிடம் யாராவது ஒருத்தரை இந்த பெண் பின்னால் போகச்சொல் என்று சொல்லி அந்த பெண்ணிடம் ஏதோ சைகை காட்டினார்.
அந்த பெண் திரும்ப ஓட ஆரம்பித்தாள், அவசர அவசரமாய், மருத்துவமனை ஊழியர் ஒருவர் ஓரத்தில் நிற்க வைத்திருந்த ஆம்புலன்சை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணை தொடர்ந்து செல்ல ஆரம்பித்தார்.
மருத்துவமனையில் ஆரம்பித்த ஓட்டம், பார்வதி வீட்டில்தான் வந்து நின்றது.
ஆம்புலன்சை எடுத்து வந்தவர், பார்வதியின் வீட்டுக்குள் நுழைந்து பார்த்துவிட்டு, அந்த பெண்ணின், நிலையை கண்டு உடனே பார்வதியின் துணையுடன் வலியுடன் துடித்த பெண்ணை ஏற்றிக்கொண்டு மருத்துவமனை விரைந்தார்.
அந்த பைத்தியக்கார பெண் தலையில் வடிந்த இரத்ததை தன் சேலையால் துடைத்து அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.
ஒரு வாரம் கழிந்திருக்கும், அந்த மன நலம் பாதித்த பெண்ணின் தலைமுடி சுத்தமாக வழிக்கப்பட்டு தலையில காயத்துக்கு மருந்து போடப்பட்டிருந்தது. உள்ளிருந்த குழந்தை அழும் சத்தம் கேட்டு தானாக பேசி கைதட்டிக்கொண்டு பார்வதி வீட்டு முன்னால் உள்ள திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.