இறுதி முத்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 15, 2024
பார்வையிட்டோர்: 817 
 
 

குமார் அவன் கையில் கொடுக்கப் பட்ட மாத்திரையைப் பார்த்தான். அதே நேரத்தில் அவனுக்கு முன்னால் இருந்த ‘பாதுகாப்பு அதிகாரி’ கவனமாக அவனைக் கவனித்தார். அந்த அதிகாரி இதுவரை அவனுடன் பேசிய தோரணையிலிருந்து, அவர் விரும்பியதை குமார் செய்ய வேண்டும் என்று குமாருக்குத் தெரியும். அவனது இன்றைய வேலையும் எதிர்காலமும் அவனது குடும்பத்தின் எதிர்காலமும் அதைச் சார்ந்திருந்தது. குறிப்பாக திருமண சந்தையில் இருந்த அவனது இரண்டு சகோதரிகள் தங்களுக்கு பொருத்தமான கணவர்களைத் தேடுவதற்காக தங்கள் கனவுகளை நிரப்ப வரதட்சணை கொடுக்க அவனது வருமானத்திற்காக காத்திருந்தனர். மிகவும் வயதான தந்தையும் அவனது பலவீனமான தாயும் குமார் இல்லாமல் தங்கள் மகள்களுக்கு அதிகம் செய்ய முடியாது.

அவனது சகோதரிகள் மிகவும் அழகானவர்கள். பெற்றோர்கள் அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள். ஏழைகளின் அழகு இப்போதெல்லாம் பிரச்சினைகளைக் கொண்டு வருகிறது.

“உனது சகோதரிகள் மிக அழகானவர்கள் என்று கேள்விப்பட்டேன்.’’ இவன் கையில் அந்த மாத்திரையைக்; கொடுத்த அதிகாரி மிகவும் தெளிவாகச் சொன்னார். அவர் பார்வையும் தொனியும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனின் குடும்பம் பற்றி அவர்கள் பலவிடயங்கள் தெரிந்து வைத்திருப்பது அவனுக்குப் புரியத் தொடங்கியது.

“கவலைப்படாதே, அந்த மாத்திரை உனது காதலி அமராவைக் கொல்லாது” அதிகாரியின் குரல் அமைதியாக ஆனால் பயமுறுத்துவதாக இருந்தது. குமார் ஒன்றும் சொல்லாமல் மீண்டும் அவரைப் பார்த்தான்.

தன் காதலி அமராவின் உயிரைப் பற்றிய தேவையற்ற பயம் அவன் மனதில் படர்ந்திருப்பதை அவனால் உணர முடிந்தது. அமரா என்ற பெயருக்கு ‘நித்தியம்’ என்று பொருள்!.

இப்போது அவன் முன்பின் தெரியாத இரண்டு ‘அதிகாரிகளுடன்’ இருந்தான் – அவர்களே தங்களை அவனுக்கு அறிமுகப்படுத்தினர். அனல் காற்று ஜன்னல் வழியாக வீசுகிறது. அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. அது வெளியே நிலவிய வெயில் காரணமாக மட்டும் அல்ல என்று அவனுக்குத் தெரியும்.

பிற்பகல் வெயில் பிரகாசமாகவும் வெப்பமாகவும் இருந்தது. அவர்கள் ‘தானா’ என்ற ஆடம்பரமான கிளப்பில்’ உள்ள ‘குடும்ப அறையில்’ இருந்தனர். இந்த கிளப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காலனித்துவ எஜமானர்களால் அவர்களின் ‘நண்பர்கள்’ மற்றும் குடும்பத்தினரை சந்திப்பதற்கான சிறப்பு இடத்திற்காக கட்டப்பட்டது. நவீன அலங்காரங்களுடன் பழைய அழகு அந்த இடம் அற்புதமாக காட்சியளித்தது. ’’தானா’ என்பது அந்த நகரத்தின் பெயர் தானம் கொடுப்பதில் பெயர் போன இடமாக இருந்ததாம். இந்தக் கிளப்பை “’தானா கிளப்’’ என்று சொல்வார்கள்.அதாவது. அந்த பிரமாண்டமான அன்பளிப்புக்குப் புகழ்பெற்ற நகரின் அழகிய ‘கிளப்’.

இந்த இடத்தில் இன்று அவனிடம் எதைத் ‘தானமாகக்’ கேட்கிறார்கள்?

அதிலிருந்து சற்று தள்ளி பிரதான சாலையிலிருந்தும் நிஜ உலகத்தை இந்த ‘மறைவிடத்திலிருந்தும்’ பிரிக்கும் ஒரு சிறிய கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது. அவன் பார்வை சாடையாக அங்கு சென்றது.

‘உன்னுடைய காதலி அமரா சிறிது காலம் ஒன்றும் எழுதாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்றார் அந்த அதிகாரி. அவன் அதிகாரியின் பக்கம் திரும்பினான். அவர் தொடர்ந்தார்.

அந்த அதிகாரி அவன் மூலம் சிறிது நேரம் அல்லது கொஞ்ச காலம் அமராவை ஒன்றும் எழுதாமல் அடக்கp வைக்க விரும்பியது குரலில் தெரிந்தது.!

அமராவை அடக்கவா?

‘அவளைக் கொஞ்ச காலம் மவுனமாக இருக்கப் பண்ணவேண்டும்.’ அதிகாரியின் கண்கள் மாத்திரையின மீதே இருந்தன.

‘இதை வாயிற் போட்டதும் அவள் மயக்கமடைவாள். அதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு அவள் குழப்பத்தில் இருக்கலாம். அவளால் நிறைய எழுத முடியாமல் போகலாம். அவள் மருத்துவரிடம் சென்றால் அவர் வெறும் சோர்வு காரணம் என்று சொல்வார்’.

அவர்கள் அவனை இன்று காலையில் தொலைபேசியில் அழைத்து அவனுக்கு ஆர்வமுள்ள ‘ஒரு செய்தி’ பற்றியும் அவனது வாழ்க்கையையும் அதிர்ஷ்டத்தையும் மாற்றுவதைப் பற்றியும் பேச இங்கே வந்து தன்னைச் சந்திக்க வேண்டும் என்று அழைத்தபோது, அவன் இப்போது இருக்கும் சூழ்நிலையுடன் பயந்து தவித்துப் போவான் என்று எதிர்பார்த்து வரவில்லை. குமார் இப்போது மிகவும் பயத்துடனிருக்கிறான்.

சில மணி நேரங்களுக்கு முன்புதான் குமார் பிரதான வாயிலில் இருந்து கிளப்பிற்கு நடந்து சென்றான். பல்வேறு உயரமான மரங்கள் மற்றும் தாவரங்களைக் கடந்து சென்றான். பெரும்பாலான செடிகளும் மரங்களும் அவனுக்கு அறிமுகமில்லாதவை. அயல் நாட்டார் ஆண்ட காலத்தின் அடையாளங்கள் அவை. பசுமையும் நறுமணமும் அவனை மகிழ்வித்தன. ஆச்சரியப்படுத்தின. அவன் உண்மையிலேயே தாய் நாட்டில்தான் இருக்கிறானா என்று யோசிக்க வைத்தது.

கிளப்பை அடைந்தபோது, உயரமான, புத்திசாலித்தனமான தோற்றமுடைய இரண்டு அதிகார நபர்களைக் கண்டு அவர் குழப்பமடைந்தான். ஒருவர் வரவேற்கும் புன்னகையுடனும் மற்றொருவர் முகத்திலோ அல்லது முகபாவத்திலோ அதிக உணர்ச்சி இல்லாத புன்னகையுடனும் இருந்தார். மிகவும் சக்திவாய்ந்த தொடர்புகளைக் கொண்ட பிரபலமான ‘நிறுவனத்தின்’ பாதுகாப்பு அதிகாரிகள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்!.

அவனுடன் அவரது வேலை பற்றியும், அவன் எழுதிய பத்திரிகைச் செய்திகள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர். ‘நாங்கள் உனது எழுத்துக்களால் மிகவும் ஈர்க்கப்பட்டோம்’ என்று அவர்களில் ஒருவர் அவருடன் விலையுயர்ந்த உணவை சாப்பிட்டபோது கூறினார்.

ஆனால் இப்போது? சில மணி நேரங்களில் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. அவனால் என்றுமே எழுத முடியாத செய்தியாக ஒரு விடயத்தை அவர்கள் சொல்கிறார்கள். கற்பனைக்கு எட்டாத கதை ஒன்று அவன் கண்முன்னே விரிந்து கொண்டிருந்தது.

அவனது அழகான, புத்திசாலியான, கனிவான மற்றும் அதிசயிக்கத்தக்க காதல் தரும் அவனது காதலி அமராவை செயலிழக்கச் செய்ய ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் அவனிடம் கேட்கிறார்கள்?

‘என் மனதில் குடியிருக்கும் எனது அன்பான அமராவை இவர்கள் தந்திருக்கும் மாத்திரையைக் கொடுத்து அவள் சிந்தனையை மழுங்கடிக்கவா?’

‘அமரராவைக் குழப்ப இந்த விஷப் பொருளைப் பயன்படுத்துவதா? அவர்கள் அவளை பைத்தியமாக்கப் போகிறார்களா? அவளது அழகிய முகத்திலிருந்து பிரகாசமான புன்னகையைத் துடைப்பதற்காக, அவளுடைய சக்திவாய்ந்த கண்களை மங்கச் செய்வதா? அவளது கிசுகிசுப்பையும், அவளது இனிய உதடுகளிலிருந்து அவனது உதடுகளுக்கு வரும் இனிய முத்தங்களையும் அழித்துவிடவா?.

அவனுக்குத் தெரிந்த வரையில் அமரா ஒரு இலக்கியப் படைப்பாளியாக வரவேண்டும் என்று தன்னைப்பற்றிச் சொல்கிறாள். இது வரை அவள் விசேடமாக ஒன்றும் எழுதவில்லை. ஆனால், அவன் அருமைக் காதலி அமரா பற்றி குமார் கற்பனை கூட செய்யாத விஷயங்களை அவர்கள் சொல்கிறார்கள். அவளைப் பற்றி அவனுக்கு சில தகவல்களைக் கொட்டிக் கொண்டிருந்தார்கள். அவனும் அவளை நினைத்து அவன் மனதுள் இப்போது பயப்படுகிறான்.

அவர்கள் விரும்பியதை அவன் செய்ய வேண்டும், இல்லையென்றால்? மேற்கொண்டு அவனால் யோசிக்க முடியவில்லை..

மாத்திரையின் விளைவுகளை விரிவாக அறிய அவன் விரும்பினான். ஆனால் இப்போது அவனுக்கு எந்த பதிலும் கிடைக்காது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். ஒருவேளை அந்த அதிகாரி பதில் சொன்னாலும் அது நேர்மையானதாக இருக்குமா?

‘கேஸ் முடியற வரைக்கும் நாங்க அவதானித்துக் கொண்டிருப்போம். இதை பழச்சாறு அல்லது தண்ணீரில் கலக்கவும், அவள் எதையும் வித்தியாசமாகச் சுவைக்க மாட்டாள். பழச்சாறு ருசிதான் இருக்கும். இது உங்கள் கண்களுக்கு முன்னால் வேகமாக வேலை செய்யும். தாமதிக்காமல் இன்றே சிகிச்சையைத் தொடங்குங்கள்’

இரண்டாவது அதிகாரி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அல்லது அவசரமான தொனியில் அவருக்கு உத்தரவிட்டார்.

இன்று? உடனே? ஏன்?

அவர்களிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் தன் சட்டைப் பையில் ஒரு மாத்திரையுடன் கனத்த இதயத்துடன் வெளியே வந்தான். சில மணி நேரங்களுக்கு முன் இந்த கிளப்பில் நுழைந்த குமார், இப்போது வெளியேறும் குமார் இருவரும் வேறு மனிதர்கள் என்பது தெரிந்தபோது அவன் மனச் சாட்சி அவனையிடித்தது. தான் தற்போது வேறு வழி தெரியாத ஒரு புலனாய்வுச் சதிவேலையின் சேவகன் என்பதை உணர்ந்தான். அவர்கள் விரும்பியதைச் செய்ய குமார் தயங்கினால், அதன் தாக்கங்கள் மிகப்பெரியதாக இருக்கும்.

‘இந்தக் கொடியவர்கள் அமராரவைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். அவள் எழுதிய அல்லது எழுதிக் கொண்டிருக்கும் ஏதோ ஒன்று அவளைப் பலியெடுக்கப் போகிறது. அவர்கள், இவனுக்குச் சொன்ன விடயத்தை இவன் நிறைவேற்றாவிட்டால் இவர்கள் அமராவுக்கு ஒரு விபத்து ஏற்பாடு செய்யலாம். அவளை ஊனமாக்கலாம். அவளைச் சிதிலமாக்கிச் சிந்தனையைக் குழப்பலாம். மூளைச் சாவு அடையச் செய்யலாம் அல்லது அவளைச் சீரழித்துக் கொலை செய்து என்றுமே யாராலும் தேடமுடியாத விதத்தில் அழித்து விடலாம். குமார் ஒரு பெரிய செய்தியாளனாக வளர்ந்து கொண்டிருக்கிறான். அமராவுக்கு ஏதும் நடந்தால் அதை அவன் விசாரிக்கக் கூடாது என்பதால் அவனையே அமராவின் அழிவுக்குப் பாவிக்கிறார்களா!’

அவனது பாதி உயிரான அவனின் அன்பு அமரா அவனை நம்பி இந்தத் தலைநகருக்கு வந்தவள். நாட்டின் மிகப் பெரிய பகுதியின் தலைநகரான இந்த வலிமையான ‘தானா’ நகரத்தில் அவளைப் பாதுகாக்க எதையும் செய்யத் தயாராக இருப்பதாக அவன் அவளுக்கு வாக்குறுதி அளித்திருந்தான்.

வாழ்க்கையில் சட்டென்று பல மாற்றங்கள் வருவது எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு தடவையென்றாலும் வரும் என்பதைத் தெரிந்தவன் அவன்.அமராவைச் சந்தித்ததும், அவளின் அறிவு, சமுதாயம் பற்றிய ஆழமான தேடல்கள் மூலம் அவளையுணரத் தொடங்கி அவன் தன்னையறியாமல் அவளை நினைத்து நித்திரையற்றுத் தவித்ததும் அவன் எதிர்பாராத மாற்றங்களில் ஒன்றுதான்.

பல்கலைக்கழகத்திலும் வேலை பார்க்கும் இடங்களிலும் அவனது திறமையையும், கவர்ச்சியையும் மதித்து அவனையணுக முனைந்த பெண்கள் அதிகம். அமரா அவர்களில் ஒருத்தியல்ல. தனித்துவமானவள் தனது அக, புற அழகைப் பறைசாற்றாதவள். செயல்களில் அவளின் திறமையைக் காட்டுபவள். முடிந்தவரைக்கும் தன்னுடன் பழகுபவர்களைக் கௌரவமாகவும் கனிவாகவும் இணைத்துக் கொள்பவள்.

அமராவும் குமாரும் தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கையைப் பற்றி, அவர்கள் பல்கலைக்கழகத்தில் ஒன்றாய்ப் படிக்கும்போது ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை, ஏனெனில் அவளுக்கு ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக வேண்டும் என்ற கனவு இருந்தது.

அவன், மேற்படிப்புப் படித்து ஒரு வழக்கறிஞராக வரவேண்டும் என்று விருப்பினான். ஆனால் ஒரு பத்திரிகையாளனாக வந்து விட்டான். அவன் வழக்கறிஞராக வருவதை அமரா விரும்பவில்லை என்பது அவனுக்குத் தெரியும். ‘தங்கள் வருவாய்க்காக நேர்மையறவர்களைக் குற்றமற்ற நல்லவர் என்று வாதாடுவதும் வழக்கறிஞர்கள்தானே’ என்று கிண்டலடித்தாள்.

பத்திரிகையாளனாக வந்தபோது ’பத்திரிகைத் துறை, மக்கள் வாழ்வில் மிகப் பலம் வாய்ந்த இடத்தை எடுத்திருக்கிறது. ஒரு சமயக் கருத்துப் பரப்பாத வேலையை, ஒரு அரச சக்தியால், ஒரு பண சக்தியால் செய்ய முடியாத பல பிரமிப்பான வேலையை ஒரு எழுத்தானால் அல்லது ஒரு பத்திரிகையாளனாற் செய்ய முடியும்’ என்று அவனுக்குச் சொன்னாள்.

ஆனால் திடீரென்று, சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, அவள் அவனுக்கு போன் செய்து, அவள் ‘தானா’ நகரத்திற்கு செல்ல வேண்டும் என்று சொன்னாள். குறிப்பாக அவள் இலக்கியப் படைப்புகள் செய்ய விரும்பினாள்.

அக்கால கட்டத்தில் குமாரின் எழுத்து பலரையடைந்து கொண்டிருந்தது.பிரபல ஊடகம் ஒன்றில் அவனுக்கு நல்ல பதவி வழங்கப்பட்டதால் அவனும் ‘தானா’ நகருக்கு வந்தான். அவன் அவள் அருகில் வந்தான். ‘தானா’ நகருக்கு ஏன் திடீர் மாற்றம்?’ என்று கேட்டான்.

’ம் நான் எழுத்தாளனாகப் போகிறேன்’ என்றாள் அமரா.

‘எழுத்தாளனா?’அவன் ஆச்சரியப் பட்டான். ஏழைக்குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்கும் வேலையைச் செய்யவேண்டுமென்று ஆசைப் பட்டவள் இன்று இலக்கியவாதியாக ஆசைப்படுவதை அவன் எதிர்பார்க்கவில்லை.

‘ஆமாம், ஏன் ஆச்சரியப் படுகிறீர்கள்? நான், பெண்களும் சமுதாயமும் சம்பந்தப் பட்ட சில விடயங்களையிட்டுக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்கிறேன். அவை பற்றி எழுதப் போகிறேன்’ என்றாள். அவன் அவளிடம் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.

அவர்களின் பல்கலைக் கழக மூன்று வருட நல்ல நட்பு ‘தானா’ நகரில் இருவரும் இணைந்தபோது அழகான காதல் கதையாக மாறியது. அவர்களின் காதல் உறவு கோடை மலர்களாக மலர்ந்தது. ‘ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருத்தரில் ஒருத்தருக்கு உண்டாகும் ஈர்ப்பு பாலியல் சம்பந்தமானது மட்டுமல்ல, அந்த உறவின் இணைவில் மூலம் உலக மனிதர்களின் சிக்கலான சிந்தனையையே எங்கள் இருவரிலும் தேடலாம்’ என்று சொன்னாள்.

அவன் அமரா சொல்வது புரியாது அவளைப் பார்த்போது ’ஒன்றாக உடலுறவில் இணையும் ஆண் பெண் உறவு வெறும் இனவிருத்தி குடும்ப நலன், சமுதாயக் கோட்படுகளைக் கடைப் பிடித்தல் அத்துடன் சமய நம்பிக்கைகளைத் தொடருதலாக மட்டுமிருக்க முடியாது. ஒன்றாய்ச் சேரும் இரு மனிதர்கள் காலக்கிரமத்தில் பல அனுபவங்கள், அறிவுத் தெளிவுகள், அசாதாரண காரணிகள் காரணமாக மாறலாம். உலகில் பலரும் அப்படித்தான். நாங்களும் ஒருகாலத்தில் அன்னியர்களாக மாறலாம். சிலவேளைகளில் சில மனிதர்கள் இதயம் நிறைந்த காதலுடன் கலவி செய்து விட்டுக் காலனாகவும் மாறலாம்’ அவளின் விளக்கங்களுக்கு அவன் சிரித்தான். அவளின் ஆழ்மனதின் தீர்க்க தரிசன சக்தியை அவன் அப்போது புரிந்து கொள்ளவில்லை.

அவளுடன் காதல் புரிவது அசாதாரண உணர்வை அவனுள் நிறைத்தன என்பதை அவன் உணர்ந்ததை புரிந்து கொண்ட அவள் ’காதல் புரியும்போது உடல், உள தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம் என்று மட்டுமில்லை. எங்களுக்குள் இருக்கும், எங்களாலேயே அடையாளம் காணப் பட்டிராத அரிய உணர்வுகளின் விளிப்புகளையும் உணர்ந்து கொள்கிறோம்’ என்றாள் ஒருநாள்.

அவளுடன் இருக்கும்போது குமார், ஒரு அழகான வேறு உலகத்திலிருப்பதாக உணர்வான். ஆனால் அண்மையில் அவள் மிகவும் பிஸியாக இருக்கிறாள். சில சமயம் வெளியூர் போயிருப்பாள். அவனால் அவளின் அண்மைக்கால மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

சமீப காலமாக அவளை அவ்வளவாகப் பார்க்கவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்கள் அதைப் பற்றி விவாதித்தனர்.

‘தயவு செய்து என்னைக் கட்டுப்படுத்த முயற்சிக்காதீர்கள்’ என்று சொன்னவள் கலக்கத்துடன் இருந்தாள்.

‘இப்ப எதுக்கு என்னைப் பிரிந்து அடிக்கடி வெளியே செல்கிறாய்? இன்றைக்கு சாயங்காலம் உன்னைப் பார்க்க வரலாமா?’ என்று தாங்க முடியாத காதல் தாபத்தில் இன்று அதிகாலையில் கேட்டான். அவனையே மறந்து ஆழமாக அவள் ஈடுபடும் விடயம் என்னவாக இருக்கும் என்று அவளைப் பற்றி கவலைப்பட்டவன், இன்று கிளப்புக்கு வருவதற்கு முன் அவளுக்கு போன் செய்த போது. ’தயவு செய்து எனக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்கமாட்டாயா’ என்று கெஞ்சினான்.

‘என் அன்பே, நான் என் நாவலை கிட்டத்தட்ட முடிக்கிறேன். நான் இப்போது தனியாக இருக்க விரும்பினேன், இன்று உன்னைப் பார்க்க விரும்பவில்லை’ என்றாள் சோகமான குரலில்.

அவனை அந்த அதிகாரிகள், இன்று மதியம் அழைக்கும் வரைக்கும் அவள் எழுத்துக்கள் பற்றி அவன் பெரிதாக யோசிக்கவில்லை.

‘ஒரு நாவல்?’அவன் சிந்தித்தான். அவள் இதுவரை இன்னும் பெரிதாக எதுவும் வெளியிடவில்லை. ஆனால் ஒரு நாவலா? அது ஒரு நாவலாக அலலது அவளது எதிர்காலத்தை அழிக்கக்கூடிய ஆபத்தான அறிக்கையாக இருக்க முடியாதா?

அவன் பாக்கெட்டில் மாத்திரைகள், கொஞ்சம் கொஞ்சமாக அவள் நாவலின் அர்த்தத்தையும் அது இப்போது என்னவென்று புரிய ஆரம்பித்தான். அவளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிகாரிகள் ஏன் நினைக்கிறார்கள் என்பது இப்போது அவனுக்குப் புரியத் தொடங்கியது!

கொஞ்ச நேரம் தயங்கிநின்றான்.

‘அவள் ‘தானா’ நகருக்கு வந்து சில முக்கிய நபர்களை விசாரிப்புக்குள் இழுத்தால் பெரிய குழப்பம் ஏற்படும்’ என்று அதிகாரிகள் இன்று அவரிடம் தெரிவித்தனர். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘அவளால் ஆரம்பிக்கப்படவிருக்கும் விசாரணை மிகவும் ஆபத்தானது. அதை நிறுத்த வேண்டும் அல்லது அவள் சிக்கலில் மாட்டிக் கொள்வாள்’ என்றும் அவர்கள் அவரிடம் கூறினர். அவளது விசாரணையின் கீழ் இருந்தவர்கள் அரசுக்கு நெருக்கமான மிகவும் சக்திவாய்ந்த நபர்கள். அவள் தனது வேலையில் தவறான திசையில் அடியெடுத்து வைத்தால் அவளின் எதிர்காலமே பாதிக்கப் படலாம். எனவே, ஒரு நல்ல குடிமகனாக, குமார் உங்கள் வேலையைச் செய்ய வேண்டும். இது நீங்கள் எங்கள் தாய் நாட்டுச் செய்யும் கடமை’

அதிகாரிகள் சொன்ன சில விஷயங்கள் அவன் மனதில் பயத்தை உண்டாக்கத் தொடங்கின.

குமார் மாத்திரையைத் தொட்டான். அமராவை இந்த உலகிலிருந்து ஒட்டு மொத்தமாக அகற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களா?

டாக்ஸியில் ஏறியதும் அவன் மனம் சுழன்று கொண்டிருந்தது. சுற்றியுள்ள கோயில்களில் மாலை நேர பூஜைகள் மணியோசையுடன் தொடங்கியிருந்தன. மக்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். தெருக்களின் துர்நாற்றம் வீசியது.

அவள் இப்போது என்ன செய்வாள் என்று அவனுக்குத் தெரியும். அவள் அடிக்கடி பால்கனியில் உட்கார்ந்து ஒரு அழகான மாலை நேரத்தில் தனது பால்கனியின் கீழ் தெருவில் பன்முக மக்களால் நிறைந்த ஒரு பரந்த உலகம் நகர்ந்து செல்வதைப் பார்ப்பாள்.

‘அவர்களின் ஆடைகளின் நிறம் குரல் செயல்பாடுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டவை. அவர்கள் ஏழையாக இருக்கலாம் அல்லது பணக்காரராக இருக்கலாம். அசிங்கமாக இருக்கலாம் அல்லது அழகாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் நேசிக்கும் ஒருவருக்கு சிறப்பு வாய்ந்தவர்கள். அதுதான் மனிதகுலத்தின் மகத்துவம்’ என்று அவர் அடிக்கடி மக்களின் அன்பு மற்றும் கருணை பற்றி பேசுகிறாள்.

இன்று அவன் அவளையும் அவளது எண்ணங்களையும் செயலிழக்கச் செய்யப் போகிறானா? அவனால் உண்மையில் அப்படி செய்ய முடியுமா? அவன் எண்ணங்கள் மனதில் வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தன.

டாக்ஸியிலிருந்து இறங்கினான். கொஞ்சம் உணவு மற்றும் அவளுக்கு பிடித்த அன்னாசிப்பழம் வாங்கினான்.

அன்னாசி பழச்சாறு! அவளைப் பார்க்கப் போகும் போதெல்லாம் கொண்டு செல்வான். அவன் அவளுக்குப் பிடித்தவற்றைத் தயக்கமின்றி அப்படித்தான் செய்வான்

அவள் இருக்கும் மாடிவீட்டின் லிப்டுக்காக காத்திருக்கப் பொறுமையில்லாமல், அவன் முன்னால் படிகளில் ஏறிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு படிகளும் அவன் காலடியால் அமராவின் முடிவை நிர்ணயிக்கப் போகிறதா?

அவள் வீட்டு வாசலில் அவனைப் பார்த்ததும் அவள் ஆச்சரியப்பட்டாள் என்பதை அவனால் உணர முடிந்தது. மேலும் அவளின் கதவு சாவி தன்னிடம் இருப்பதால், அவன் தன்பாட்டுக்குத் திறந்து வராமல் அவளின் கதவைத் தட்டியதால் அவள் குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை அவள் முகபாவனை எடுத்துக் காட்டியது.

‘என்னை உள்ளே கூப்பிடத் தயக்கமா?’ என்று அவளிடம் கேட்டான். தனக்குப் பிடித்த பானத்துடனும் அன்பான புன்னகையுடனும் அவர் நிற்பதைப் பார்த்தது அவள் கண்களில் காதல் பொங்கியதை அவன் அவதானித்தான்.!

‘அட கடவுளே, இரெண்டு வாரமா அவளை மிஸ் பண்ணிட்டேன்’ என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது

அவளைக் காணாமல் போனதைப் பற்றியும், அவளுடன் காதல் செய்வதைப் பற்றியும், அவளுடைய கிசுகிசுப்பைக் கேட்பதைப் பற்றியும், அவளுடைய மென்மையான முத்தங்களையும், இனிய உணர்வை காதல் அலையாக்கும் தொடுதலைப் பற்றியும் அவன் நினைத்தான். அவள் தன் வேலையில் மும்முரமாக இருந்தபோது தன்னைப் பற்றி அவ்வளவாக நினைத்ததில்லை என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் இன்று அவள் சுதந்திரமாக இருக்கிறாள். ஆமாம் அவளும் அவனைப் பார்க்காமல் தவித்திருக்கிறாள்; என்பதை அவனால; சொல்ல முடியும்.

‘ரொம்ப கவலையா இருப்பதுபோல் தெரிகிறதே’ என்று அவனை அன்புடன் பார்த்தாள். அவள் குரல் கனிவாக இருந்தது. அவள் தனியாக ஓய்வெடுக்க திட்டமிட்டிருந்தபோது கதவைத் தட்டியதற்காக அவள் அவனை மன்னித்தாள் என்பது அவளின் தொனியிற் பிரதிபலித்தது.

அவன் அவளை உற்றுப் பார்த்தான். ‘அவள் மிகவும் அழகாகவும் அன்பாகவும் அக்கறையுடனும் இருக்கிறாள்’

‘இன்றைக்கு நீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கிறாய் அமரா’ அவன் அப்படிச் சொல்லிக் கொண்டுஅவளது அப்பாவித்தனமான முகபாவத்தை கவனித்தான்.

‘நானா?’ என்று சிரித்தாள்.

கடந்த சில வாரங்களாக அவள் ஏன் பிஸியாகவும் சுறுசுறுப்பாகவும், கவலையுடனும் மனநிலையுடனும் இருந்தாள்! ஆனால் அவனும் அவளுக்குப் பிடி கொடுத்துப் பேசாமல் அவனுக்குக் கொடுத்த உத்தரவை நிறைவேற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அவன், தன்னையழைத்த அதிகாரிகளுடன் ஒரு பெரிய மதிய உணவை சாப்பிட்டதால் அவனுக்கு பசி இல்லை. உணவு விஷயத்தில் அவள் மிகவும் கவனமாக இருப்பவள் என்பது அவனுக்குத் தெரியும். அவன், தான் கொண்டு வந்த உணவு மற்றும் பானத்தையும் சமையலறையில் வைத்தான். அவளது இருப்பிடம் அசுத்தமாக இருப்பதைக் கவனித்தான். இது அசாதாரணமானது அமரா. அவள் எவ்வளவு மிகவும் பிஸியாக இருந்தாள் என்பதை அது அவனுக்கு உணர்த்தியது.

அவன் வந்து அவளை அணைத்துக் கொண்டு உட்கார்ந்தான். கீழே தெருவில் சத்தம் தாங்க முடியாததால் அவள் எழுந்து சென்று ஜன்னலை லேசாக மூடினாள். அவர் தனது பாக்கெட்டில் இருந்த மாத்திரையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.

அவன் அதை தனது அழகான காதலியின் அதிர்ச்சியான வாழ்க்கை மாற்றத்திற்காகப் பயன்படுத்துவானா? அவன் பயந்து போனான்.

இந்த அழகை சிறிது நேரம் அல்லது சில நாட்கள் செயலிழக்கப் பண்ணுவது எப்படி? இந்த மாத்திரை உண்மையில் அவளைக் கொஞ்ச காலம் சாதாரண வாழ்க்கையிலிருந்து முடக்குமா அல்லது?

அவன் அதைப் பற்றி சிந்திக்க விரும்பவில்லை. அவன் ‘அதிகாரிகளை’ நம்பி கொஞ்ச காலம் அமராவின் பாதுகாப்பிற்கும் அவனது எதிர்காலத்திற்கும் சிறந்த வேலையைச் செய்ய வேண்டும்!.

அவள் தன் வேலையைப் பற்றிக் கேட்கக்கூடும் என்று அவன் உணர்ந்தான். தான் வேலை பார்க்கும் மீடியா கம்பெனியை அவளுக்குப் பிடிக்காது என்பது அவனுக்குத் தெரியும். அதிகாரத்தில் இருந்து, ஊழல் செய்த அன்பற்ற, மதம் மற்றும் பேராசை பிடித்தவர்களுடன் தொடர்புடைய ஒழுக்கக்கேடான மற்றும் சட்டவிரோதமான ஒரு கும்பலால் நடத்தப் படும் பத்திரிகை அது என்று அவள் அவனைத் திட்டியிருக்கிறாள்.

‘உனது நாவலை எழுதி முடித்து விட்டாயா டார்லிங்?’ என்று தன் பதட்டத்தை மிகவும் கவனமாக மறைத்துக் கொண்டு அன்பாக குரலில் கேட்டான். அவள் பதிலாக புன்னகைத்தாள். ஆம் அவள் அதைச் செய்திருந்தாள் என்பது அவளின் மலர்ச்சியான முகத்தில் தெரிந்தது. அவர்கள் சொன்னது சரிதான். அவள் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். ரொம்ப சீரியஸான விஷயம். நிலைமையை நினைத்து அசௌகரியமாக உணர்ந்தான்.

திடீரென்று அவர்களுக்கிடையே ஆழ்ந்த மௌனம் நிலவியது.

‘உன் நாவல் எதைப் பற்றியது?’ என்று அவளிடம் கேட்டான்.

‘நிஜமாவே தெரிந்து கொள்ள வேண்டுமென ஆசைப்பட்டீர்களா?’ அவள் சற்றே தயங்கினாள். அவளது கூர்மையான பார்வை அவன் இருதயத்தைத் துளைத்தது.

‘ஏன் முடியாது?’

‘இது ஒரு வேதனையான கதை’அவள் பெருமூச்சு விட்டாள்.

‘சோகமா?’ முடிந்தவரை குரலை மென்மையாக வைத்திருந்தான்.

அவள் அவனைப் பார்த்தாள். அவள் தொடரட்டும் என்று காத்திருந்தான்.

‘பத்திரிகைகளில் அடிக்கடி வரும் திடுக்கிடும் கதைகள் போல’ அவள் சொன்னாள்.குரல் கரகரத்தது. அவன் இன்னும் அவளின் விளக்கத்திற்காகக் காத்திருந்தான்.

‘கதைக்களம் யாரைப் பற்றியது என்று தெரிந்தால் அதை நான் வெளியிடும்போது ஒரு சிலர் என்னைக் கொல்லவும் முயற்சிக்கலாம்.’ அவளுடைய புன்னகை இப்போது அவள் முகத்திலிருந்து முற்றிலுமாக மறைந்துவிட்டது.

‘பணம், மதப் பின்னணி மற்றும் அதிகாரத்தைக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் எழுப்பவும் அவர்களுக்கு நீதி கேட்கவும் பலர் இல்லாததால் பலவீனமானவர்களை பாலியல் பலாத்காரம் செய்யலாம். அவமானப்படுத்தலாம். கொலை செய்யலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்’. அமராவின் கோபம் அவள் குரலில் பிரதிபலித்தது.

‘சட்டம் ஒழுங்கு நீதி ஆகியவற்றை நம்பும் ஒருவர் எப்படி உண்மையை விட்டு அமைதியாக இருக்க முடியும்?’ அவள் முகத்தை நேரடியாகப் பார்த்துக் கேட்டாள்.

அவன் மரத்துப் போனான். அவள் ஏற்கனவே அதைச் செய்திருந்தாள் என்பது புரிந்தது ஆனாலும் அவர்கள் சொன்னதை அவன் செய்யவில்லை என்றால் என்ன செய்வது?

‘நான் ஏதும் குடிக்கப் போறேன், உனக்கு ஜூஸ் வேணுமா?’ அவன் குரல் லேசாக நடுங்கியது. ஆனால் அவள் அதை கவனிக்கும் மனநிலையில் இல்லை. அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் கன்னத்தில் கண்ணீர் விழுந்தது. ‘குடிப்பதற்காக ஏதும் வேணுமா’ என்று அவன் கேட்டபோது ‘ஆம்’ என்று தலையை அசைத்தாள்!

சமையலறைக்குச் சென்றான். அவன் பழரசத்துடன் திரும்பி வர சில நிமிடங்கள் ஆனது. அவன் ஹாலுக்கு திரும்பியபோது அவள் லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருந்தாள்

அவள் இப்போது என்ன செய்து கொண்டிருந்தாள்? அரசியல், சமூக பூகம்பத்தை உருவாக்கக்கூடிய ஆதாரங்களுக்கு அடிப்படையான ‘நாவலை’ உரிய இடங்களுக்கு அனுப்பியிருப்பாளா?

அவள் லேப்டாப்பை மூடிவிட்டு சோபாவில் போய் உட்கார்ந்தாள். ‘இப்போதைக்கு என் உணர்வை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. மக்களைப் பல காரணங்களால் பிரித்து அவர்களை ஒன்றுபட விடாமல் செய்த ஒரு சில அரசியல்வாதிகளின் பேராசையால் உலகம் குழப்பமும் அமைதியின்மையும் வறுமையும் பல பக்கமும் நிறைந்திருப்பதைப பாருங்கள்’ அவள் அவனுக்கு விரிவுரையாற்றும் மனநிலையில் இருந்தாள் என்பது அவனுக்குப் புரிந்தது .

அவன் கைகள் விஷ பானத்தைப் பிடித்திருந்தது. நடுங்கிக் கொண்டிருந்தது. முகம் வெளிறிப் போயிருந்தது. அவள் ஒரு சோகமான புன்னகையுடன் அவனை நேரடியாகப் பார்த்தாள். ‘வெளியில் பயமுறுத்தும் உலகத்திலிருந்து நாம் விலகி இருப்பதால் நான் உங்களுடன் இருக்கும்போது நான் பாதுகாப்பாக உணர்கிறேன்’ அவளுடைய குரல் சோகமாக இருந்தது. ஆனால் அவள் என்றுமில்லாத விதிவிலக்காக அழகாக இருந்தாள்.

பானக் கோப்பைகளை காபி மேசையில் வைத்துவிட்டு அவளுடன் அமர்ந்தான். அவள் தன் தலையை அவன் தோளில் சாய்த்து மென்மையாக முத்தமிட்டாள்.

அவள் நெருக்கம் அவனைப் படாதபாடு படுத்தியது. அவள் முத்தங்கள் அவனை நிலை மறக்கச் செய்தது. இருவரும் ஒருத்தரில் ஒருத்தர் இணைந்து அயல் உலகத்தை மறந்து அந்தி நேர வேளையில் காதல் புரிந்தார்கள். வெளியில் உலகம் இருள முதல் மக்கள் கூட்டம் தங்கள் குடியிருப்பை அடையும் ஒலிகள், வாகன சந்தடிகள், வியாபார ஓலங்கள், கோயில் மணியோசை அத்தனையும் அவர்களின் இணைவு நிலையைப பாதிக்கவில்லை. இருகிழமைப் பிரிவு அவர்களின் இணைவில் மிகவும் அன்னியோன்யத்தை எட்டியது..

சட்டென்று எங்கோயோ இரு வாகனங்கள் மோதிக் கொண்ட பயங்கர தொனி இருவரையும் உலுக்கியது. அவள் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

‘இந்த நிமிடம் என்றென்றும் தொடர விரும்புகிறேன்’. என்று அவனை முத்தமிட்டபடிமுணுமுணுத்தாள். அவனுக்குநெஞ்சு வலித்தது. மனம் நடுங்கியது.

முகம் வெளிறிப் போயிருந்தது. எதுவும் அவளை அவனிடமிருந்து பிரிக்க முடியாது என்பதால் அவன் அவளை முடிந்தவரை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். அவள் முன்னால் இருந்த விஷ பானத்தை வெறித்துப் பார்த்தான்.

‘டார்லிங், மக்கள் இந்த உலகத்திற்கு வந்தவுடன் ஏதோ ஒரு வழியில் இறந்துதான் போகிறார்கள். இப்போது உங்கiள என் இதயத்தில் நிறைந்த காதலுடன் தழுவுகிறேன.என் முத்தங்கள் உன்னிடமுள்ள எனது காதலின் அடையாளங்கள். இந்த நிமிடம் நான் இவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கும்போது இறந்தால் நல்லது. நான் இப்போது உனக்குத் தந்த முத்தம் எனது இறுதி முத்தமாக இருக்கலாம். ஆனால் என் நண்பரின் சகோதரி பிரேமாவைப் போன்ற ஏழைப் பெண்களை கற்பனை செய்து பாருங்கள். அவள் மற்றவர்களின் காமவெறி மகிழ்ச்சிக்காக மட்டுமே தனது வாழ்க்கையை இழந்தாள்’ அமரா அழுதபடி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

‘என் நாவலில் நான் மிகவும் மோசமான செயல்களைச் செய்யும் சக்தி வாய்ந்த மனிதர்களைப் பற்றி பல உண்மைகளை எழுதியிருக்கிறேன்’ அமரா தொடர்ந்தாள்.

‘அதாவது, சமூகத்தின் மேல் மட்டத்தில் உள்ள அதிகாரம் படைத்த மனிதர்களைப் பற்றி உண்மையை எழுதிவிட்டாயா?’ என்று அவன் தன் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு மென்மையான குரலில் அவளிடம் வினவினான். அவள் சில நொடிகள் பதில் சொல்லாமல் அவன் மார்பில் காதலுடன் துவண்டு, அவன் முகத்தை வருடியபடி தன் பேச்சைத் தொடர்ந்தாள்.

‘இளம் பெண்களை வேட்டையாடும் மிருகத்தனமான; பாலியல் வேட்டைக்காரர்களின் கும்பலிடம் தனது பதினான்கு வயது அழகான மகளை இழந்த எனது சினேகிதி பிரேமாவின் தந்தையாக உங்களை கற்பனை செய்து பாருங்கள்’.

தன் தோழி பிரேமாவின் குடும்பத்திற்கு நீதி கேட்கும் அவள் பேச்சைக் கேட்டு அவன் பேசாமலிருந்தான். அவள் சொல்லும் விடயம் பலரின் இருதயத்தை உலுக்கிய ஒரு கொடிய விடயம். வலிமையற்றவர்களுக்கு நடக்கும் கொடுமை கண்டு மவுனமாகவிருக்கும் கோழைகளின் மனச்சாட்சிக்கு விழுந்த சாட்டையடி அந்தச் செய்தி.

‘எனது கதாபாத்திரங்கள்..’ அமரா தொடர்ந்தாள்.

குமார் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ‘உங்கள் காதலி அமரா, உங்களால் கனவிலும் நினைத்துப் பார்க்காத சிலருடைய விடயங்களைத் தோண்டிக் கொண்டிருக்கிறாள்’ என்ற அதிகாரியின் வார்த்தைகள் அவன் மனதில் ஒலித்தன.

‘தனது அழகான மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சிதைக்கப்பட்டு, பாதி எரிக்கப்பட்ட உடல் காட்டில் மிருகத்தால் இழுத்துச் செல்லப்பட்டதைப் பார்த்து தற்கொலை செய்து கொண்ட என் தோழியின் தாயைப் பார்த்தபோது நான் எப்படி அமைதியாக இருக்க முடியும்?’

அமரா அழுது கொண்டிருந்தாள். தன் காதல் நண்பன் குமார் ஆசையுடன் அவளுக்காக வாங்கி வந்த பானத்தை எடுத்துக் கொண்டாள். அவன் அவளைத் தடுக்கவில்லை. ஜன்னல் வழியே பார்த்தான். அவன் கொண்டு வந்து வைத்த நச்சுப் பானத்தை அவள் அருந்துவதை அவன் கண்கள் பார்க்க மறுத்தன.

‘நான் என்ன செய்ய முடியும்? என்னால் அமைதியாக இருந்து இந்த விஷயங்களை புறக்கணிக்க முடியவில்லை. அதிகார வர்க்கத்தின் பாசாங்குத்தனத்தை பரந்த உலகிற்கு சொல்ல சில கற்பனை கதாபாத்திரங்கள் வழியாக இந்த விஷயங்களை என் நாவலில் எழுத வேண்டும் என்று தோன்றியது’.

அவளுடைய குரல் திட்டவட்டமாகவும் கனமாகவும் இருந்தது.

அவர்கள் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்கள. அவர்கள் ஒருவரையொருவர் மிகவும் இறுக்கமாகவும் அன்பாகவும் அணைத்துக் கொண்டனர்.

அவளது இதயத் துடிப்பு குறைந்து வருவதை அவன் அறிந்திருந்தான். மேலும் அவள் மூச்சு வித்தியாசமாகிக் கொண்டு வருவதையும் அவன் உணர்ந்தான்.

‘ஐ லவ் யூ’ என்று அவளிடம் கிசுகிசுத்தான். அவள் அவனைப் பார்த்தாள். அவன் அழுது கொண்டிருந்தான்.

‘ஏன் அழுகிறாய் குமார்’ என்று கேட்டாள். அவள் குரல் மெதுவாக இருப்பதையும், வார்த்தைகள் சிதறுவதையும் அவள் உணரவில்லை. அவள் கண்கள் அவன் முகத்திலேயே நிலைத்திருந்தன.

ஓரு சொற்ப நேரத்தில் அவள் தன் மடியில் மயங்கி விழுவதைப் பார்த்தான். ‘அவை வேகமாக வேலை செய்யும்’ என்று தனக்கு மாத்திரை கொடுத்த அதிகாரியின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தபடி அவன் அங்கு அமர்ந்திருந்தான்.

அவளுடைய சுவாசம் ஆழமற்றதாக இருந்தது. கண்கள் மூடியிருந்தன. அவன் அவளை அன்புடன் முத்தமிட்டு, அவளை மெதுவாக தன்னிடமிருந்து விலக்கினான்.

சில நிமிடங்கள் அங்கேயே நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பல்கலைக் கழகத்தில் சந்தித்த முதல் நாளிலிருந்தே அவன் அவளைக் காதலித்தான். அவன் அழகானவன். பேச்சாற்றல் மிக்கவன். ஒழுக்கமானவன். எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் அன்பானவன் என்று பல பெண்கள் அவனை அண்டியபோதும் பொறுமையாக அமராவினால் நேசிக்கப்படுவதற்காக நீண்ட நேரம் காத்திருந்தான்!

‘எனது உயிர் இருக்கும் வரை உன்னுடன் நானிருப்பேன்’ எனறு அவளுக்கு ஒரு காலத்தில் வாக்குக் கொடுத்தவன் இன்று உயிரற்றுக் கிடந்த தன் நித்தியக் காதல் அமராவிடமிருந்து விலகிச் சென்றான். மாத்திரையின் விளைவு ஒரு பாரிய தாக்கத்தையுண்டாக்காது என்ற அதிகாரியின் வார்த்தையை இப்போது கூட அவன் நம்புகிறானா?

இல்லை, ஆளும் சக்திகளுக்கு ஒரு கருவியாக இருந்த அதிகாரியை அவன் நம்பவில்லை. அவர்களதுது வார்த்தையை நம்பவில்லை. குமார் அவர்கள் சொன்னதைச் செய்ய மறுத்திருந்தால். அவர்கள் வேறு வழியைக் கண்டுபிடித்து, தனது அழகான அமராவை அகற்றியிருப்பார்கள். அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அவனை இப்போதும் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள் என்று மனம் சொன்னது. அமராவின் வீட்டில் அவளைக் கண்காணிக்க எப்போதோ அவர்கள் இரகசிய கமராக்களைப் பூட்டியிருக்கலாம். தங்களின் கட்டளையை நிறைவேற்றியிருக்காவிட்டால் குமாரின் உடலும் எங்கேயோ கண்டெடுக்கப் பட்டிருக்கும். அவனின் தங்கைகளின் வாழ்க்கை அழிந்திருக்கும்.

குமார் அமராவைப் பார்த்தபடி நின்றான். இவன் இவ்விடம் வந்தததை யாரும் பார்க்கவில்லை. அமரா இறந்து கிடப்பதை பக்கத்து பிளாட்டில் இருப்பவர்கள் யாரோ கண்டு போலிசாருக்கு அறிவிக்கலாம். அவளது மரணம் பற்றிய அறிக்கை யாரால் தயார் செய்யப்படும் என்றும் அவனுக்குத் தெரியும். அமரா, இதுவரையும் மருத்துவர்களால் கண்டறியப்படாத இதய நோயால் இயற்கை மரணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப் படும்? அல்லது மாத்திரையில் என்ன இருந்தது என்பது மரண விசாரணையில் மறைக்கப் பட வேலைகள் இரகசியமாக நடக்கும். அல்லது பிரேத பரிசோதனை செய்பவர்களால் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லப் படலாம்.. யாருக்குத் தெரியும் பிரேத பரிசோதனை அதிகாரியே இவனை ஏவிவிட்ட அதிகாரிகளின் நண்பனாக இருக்கலாம்.

குமார் நடந்தான். அமராவின் இறுதி முத்தங்கள் அவனின் நினைவில் எரிந்தன..அமரா அவன் மனதில் நித்தியமாகி விட்டாள். அவன் அவளுக்குக் கொடுத்த நச்சுப்பானத்தின் குற்ற உணர்வு அவன் நினைவிலும் இரண்டறக் கலந்து விட்டதுபோல் உணர்ந்தான். இக்கணத்திலிருந்து அவனை அந்த நஞ்சு நினைவு அணு அணுவாக அழித்துக் கொண்டிருக்கும். அவன் கண்களில் நீர் வழிய நடைப்பிணமாக நடக்கிறான்.

(யாவும் கற்பனையே)

இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் - கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். -கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம்(எம்.ஏ) திரைப்படத்துறையில்பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் -எழுத்துக்கள்: 7 நாவல்கள்,6 சிறுகதைத்தொகுப்புக்கள்,2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. -இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. -கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்போட்டி நடத்திப் பல பெண்களை எழுதப்பண்ணியிருக்கிறேன்.அவற்றில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *