தீர்ப்பு வந்து விட்டது.
எதிர்பார்த்த தீர்ப்புதான் எனிலும், பதினெட்டு ஆண்டு காலம் இருபுறமும் விடாப்பிடியாக வழக்கை நடத்திப் பெற்றத் தீர்ப்பு அது.
தேவசகாயம் & சன்ஸ் வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா வழக்கில் தேவசகாயத்துக்குச் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. வழக்கைத் தொடர்ந்த கேரள அரசின் தொழிலாளர் நலத்துறை, பிரதிவாதிக்கு வழக்கு செலவுத் தொகையாக ரூபாய் பன்னிரெண்டாயிரம் தரவேண்டும் என்கிற கடுமை நாங்களே எதிர்பாராதது.
வழக்கின் பிரதிவாதியான டேவிட் தேவசகாயத்தின் மகன் பீட்டர் தேவசகாயம் இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்காக சிங்கப்பூரிலிருந்து வந்து எனதருகில் அமர்ந்திருக்கிறார். யாருக்கு நியாயம் கோரி, கேரள அரசு இந்த வழக்கை இத்தனை ஆண்டுகளாக நடத்தி வந்ததோ, அந்த மாயோன் & பார்ட்டி இந்த வழக்கில் இருந்து விலகிச் சென்று இருபது ஆண்டுகளாயிற்று.
திருவனந்தபுரத்தில் அந்த நட்சத்திர விடுதி அறையொன்றில் நான் அமைதியாக அமர்ந்திருக்க, எதிரில் பீட்டர் கையில் சிகரெட்டுடன் அந்த விசாலமான அறையில் உலாத்திக் கொண்டிருந்தார். அப்போதே தீர்ப்பின் நகல் கையில் வேண்டும் என்று அவர் பிடிவாதம் பிடித்ததினால், அவரது வக்கீல் இருபதினாயிரம் கூடுதலாக பெற்றுச் சென்றிருக்கிறார்.
இன்னும் ஒரு மணி நேரத்தில் தீர்ப்பைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட வேண்டும் என்று பரபரத்தார் பீட்டர்.
எங்கே சார்? என்றேன்.
வேறெங்க! அந்த மாயனைப் பார்க்கதான்.. அவன் மூஞ்சிலே இந்த ஜட்ஜ்மெண்ட்டைத் தூக்கி எறிய வேணாமா?
நான் மெல்ல எழுந்து, வெளிக்கதவைத் திறந்து கொண்டு பால்கனியில் வந்து நின்றேன்.
பன்னிரெண்டாவது மாடியிலிருந்து பார்க்கையில் தென்னத்தோப்புக்குள் வீடுகளை ஒளித்து வைத்ததைப் போல திருவனந்தபுரம் நகரம் தோற்றமளித்தது. அன்று மாலையும் மழைப் பெய்யப் போகிறது என்பதை முகத்தில் அடித்த காற்றின் வெக்கை சொன்னது. அங்கிருந்து சற்று தொலைவில் பத்மநாபசுவாமி கோவிலை உற்றுப் பார்த்தேன்.
தென் திசையில் தலைவைத்து உறங்கும் பத்பநாபனின் காலடியிலிருந்து வடக்கே இன்னும் வெகு தொலைவில் இருந்தது மேற்குத் தொடர்ச்சி மலை. இடத்தைப் போலவே காலத்தையும் முப்பது ஆண்டுகள் பின் நகர்த்தினால் அங்கே இருந்தது இந்த வழக்கின் முதல் புள்ளி.
தேவசகாயம் குடும்பத்தினர் எங்கள் குடும்பத்துக்கு அறிமுகமான மிகவும் தற்செயலானது. எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் எனது தந்தை சிங்கப்பூர் சுற்றுப்பயணம் செல்கிறார் என அறிந்த எங்கள் ஊர் பள்ளியின் பழைய தலைமை ஆசிரியர் சிங்கப்பூரில் வசிக்கும் அவர் மாணவர் ஒருவருக்குக் கடிதம் எழுத, டேவிட் தேவசகாயம் என் தந்தையை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றாராம். அன்று தொடங்கிய அவர்கள் நட்பு அவரது மகன் பீட்டர் தேவசகாயம் வரை தொடர்கிறது.
இந்தத் தீர்ப்பைக் கேட்க பீட்டர் சிங்கப்பூரிலிருந்து வருவதாக என்னை அழைத்துச் சொன்ன தொனியிலேயே, நானும் அவருடன் உயர்நீதிமன்றம் வர வேண்டும் என்ற அவர் விருப்பம் தெரிந்தது. திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்று அவரை வரவேற்று, அவர் விரும்பிய தீர்ப்பையும் உடனிருந்து பெற்று, அங்கிருந்தே வழியனுப்பி வைத்துவிட்டு ஊர் திரும்பலாம் என்றெண்ணிய வேளையில் மாயனைப் பார்க்கணும் என்கிறார்.
பீட்டரின் தாத்தா கம்பம் பள்ளத்தாக்கின் ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். மலை மீதான காடுகளை ஸ்டேன்ஸ் கம்பெனியார் தேயிலைத் தோட்டமாக்கும் போது கீழ் கிராமங்களிலிருந்து வேலைக்குப் போனவர்களில் இவர் குடும்பமும் ஒன்று. சுறுசுறுப்பாக வேலை செய்த அந்த இளைஞனைப் பிடித்துப் போன வில்லியம்ஸ் துரையும் அவர் மனைவியும் அவரை தன் வீட்டிலேயே தங்கவைத்து ஆங்கிலமும் கற்றுத் தந்திருக்கின்றார்கள். காலப்போக்கில் அவர் குடும்பத்தில் ஒருவரான அவரை தேவசகாயமாக ஞானஸ்தானம் செய்து வைத்து, அவர்கள் ஊர் திரும்பும்போது மொத்த எஸ்டேட்டையும் அவருக்கே எழுதி வைத்தது தேவசகாயம் & சன்ஸ் கம்பெனியின் முன்கதைச் சுருக்கம்.
முதல் தேவசகாயத்தின் மகன் டேவிட் தேவசகாயம் கொடைக்கானல் பள்ளியில் துரைமார் பிள்ளைகளோடு படித்து, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கு மேற்படிக்கச் சென்றார். பட்டதாரியாக ஊர் திரும்பியவரின் கவனத்தை தேயிலைத் தோட்டத்தை விட அதன் மையத்தில் இருந்த கற்பாறைகளே ஈர்த்தன. அந்தக் கற்களின் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி வைக்க, அவை யாவும் உயர்தர கருப்பு கிரானைட் கற்கள் எனத் தெரிய வந்தது. டேவிட் தேவசகாயம் தனது தேவசகாயம் & சன்ஸ் கம்பெனியின் அடுத்தக் கட்டமான கிரானைட் ஏற்றுமதியினைத் தொடங்கினார்.
ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் அனைத்துவிதத்திலும் மையமாக இருந்த சிங்கப்பூரிலும் தனது அலுவலகத்தைத் தொடங்கியவர், அங்கிருந்தபடியே அந்த புதிய நாட்டின் பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்தி, மேலும் பல தொழில்களைத் தொடங்கி பெரிய வளர்ச்சியடைந்தார்.
இங்கே, தேயிலைத் தோட்டத்தில் இலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு குவாரியில் கற்களை வெடிவைத்துத் தகர்க்கும் வேலை அத்தனை சுலபமாக இல்லை. மேலும், மாநில எல்லைப் பிரிப்பில், கேரள எல்லைக்குள் அவர்கள் தோட்டம் அமைந்து விட்டதால், தொழிற்சங்கப் பிரச்சனைகள் அங்கே அதிகம். சிறிய விபத்துகளும்கூட, பல நாட்கள் வேலை நிறுத்தத்துக்கு காரணமாகிவிட, தேவசகாயம் பாறைகளை உடைக்கப் புதிய ஆட்களைத் தேடத் தொடங்கினார்.
சிங்கப்பூரில் தங்கியபோது டேவிட் தேவசகாயத்தின் பிரச்சனையை அறிந்த என் தந்தை, ஊர் திரும்பியவுடன் தேடிக் கண்டுபித்தவர்தான் எங்கள் ஊருக்கு அருகிலிருக்கும் கல்ராயன் மலைக்கிராமவாசியான மாயோன் மேஸ்திரி. அப்போதைய பசுமைப் புரட்சியின் விளைவாக மலைக்கிராம விளைபொருளான தினை வகைகளின் தேவை குறைய வயிற்றுப் பிழைப்புக்கு பயிர் தொழிலை விட்டு, அவர்கள் கல் உடைக்கத் தொடங்கியிருந்தனர்.
எனது தந்தையின் முன்னிலையில், சில ஆயிரம் ரூபாய்களை முன்பணமாகத் தந்து தேவசகாயம் கம்பெனி தன் குவாரிப் பணிகளுக்காக ஐந்தாண்டுகள் கல் உடைத்து லாரியில் ஏற்றும் வேலைக்கான ஒப்பந்தத்தை எழுதி மாயோன் மேஸ்திரியிடம் கையொப்பம் பெறும்போது நான் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். மறுநாள் பள்ளிச் செல்லும்போது, தார்பாயை மேல்திரையாக இட்ட ஒரு லாரியில் இருபதுக்கும் மேற்பட்டக் குடும்பங்கள் தட்டுமுட்டுச் சாமான்களோடு ஏறிச் சென்றபோது உற்சாகமாகக் கையசைத்த எனக்கு பீட்டர் சொன்ன ‘தீர்ப்பை முகத்தில் தூக்கியெறியும்’ முடிவில் சற்றும் விருப்பமில்லை.
தீர்ப்பு நகல் கைக்குக் கிடைத்து, நாங்கள் திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும்போது பகல் முடிந்து விட்டிருந்தது. நாகர்கோவில் வரையிலான அந்தக் குறுகியச் சாலையில் ப்ரேயர் முடிந்து வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள் போல ஒன்றின் பின் ஒன்றாக வாகனங்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. காரின் பின்இருக்கையில் அருகருகே அமர்ந்திருந்தும் நாகர்கோவில் வந்து நான்கு வழிப் பாதை எடுக்கும் வரை நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வழியெங்கும் மழை தூறிக் கொண்டே இருந்தது. வெளியே வீசும் ஈரக்காற்றின் மணத்தை அவ்வப்போது தன் பக்கக் கண்ணாடியை இறக்கி பீட்டர் புகை பிடித்து சூடேற்றிக் கொண்டிருந்தார்.
எனக்கு முன் இருக்கையின் பின்புறம் சொருகப்பட்டிருந்த தீர்ப்பு நகலைக் கையிலெடுத்தேன். என் தலைக்கு மேல் இருந்த ரீடிங் விளக்கு உறுத்தாமல் சன்னமான வெளிச்சத்தை நான் படிப்பதற்கு அளித்தது. அதுவரையிலும் அணிந்திருந்த குளிர்கண்ணாடியை கழற்றி விட்டு நான் முதல் பக்கத்தைப் படிக்கத் தொடங்கியதை பார்த்த பீட்டர் எதுவும் சொல்லாமல் திரும்பி இன்னொரு சிகரெட்டைப் பொருத்திக் கொண்டார்.
முதன்முதலில் வெளியூருக்கு வேலைக்கு அழைக்கப்பட்டபோது முடிவெடுக்க மாயோன் மிகவும் திணறியிருக்கிறார். அதற்கு முன்னர் அவர்கள் யாரிடமும் சம்பளத்துக்கு வேலை செய்ததில்லை. கணிசமான அட்வான்ஸ் தொகையும், நல்ல தினக்கூலியும், வேலைக்குப் போகும் முதலாளி குறித்த எனது தந்தையின் நம்பிக்கையான வார்த்தைகளும் அவர்களை முதன்முதலாக இன்னொருவரிடம் சம்பளத்துக்கு வேலைக்குச் செல்ல வைத்தது.
“நீங்களும் மலைவாசிகள்தானே! அங்கே மலையில் கல்லுடைப்பதில் உங்களுக்கு அதிக சிரமம் இருக்காது” என்று அவர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது. மலையில் வசித்தாலும் எப்போதோ பெய்யும் மழையின் மூலம் மானாவாரி பயிர் செய்து பிழைத்து வந்த அவர்களுக்கு நெடிதுயர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் குளிரும், முதல் நாளே பெய்த தொடர் மழையும் அதிர்ச்சியளித்தது. வாழ்நாளில் முதன்முறையாக அவர்களின் குழந்தைகள் ரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சிகளைப் பார்த்தன.
டேவிட் தேவசகாயம் ஓர் அருமையான மனிதர். கேம்ப்ரிட்ஜ் படிப்பும், சிங்கப்பூர் வாழ்க்கையும் தொழிலாளர்களை எப்படி மதிப்புடன் நடத்த வேண்டும் என்று அவருக்குக் கற்றுத் தந்திருந்தது. தனது குவாரியில் கல்லுடைக்க வந்தவர்களை தனது நிறுவன மேலாளரை கொண்டு வரவேற்கச் செய்து, அவர்கள் அதுவரைக் கண்டிராத வசதியுடன் கூடிய நிரந்தர குடியிருப்புகளையும் கட்டித் தந்திருக்கிறார்.
குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம், பெண்களுக்கும் பகுதி நேர வேலை, எந்த நேரத்திலும் மருத்துவ வசதி என அத்தனையும் செய்து தரப்பட்டிருந்தன. அக்கம் பக்கம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எல்லாம் ஏக்கத்துடன் பார்க்கும் வகையில் அங்கு ஓர் புதிய தொழிலாளர் குடியிருப்பு உருவாகியது.
முதல் நாளன்றே அவர்கள் குடியிருப்பின் அருகில் இருந்த ஓர் சிறிய காலியிடத்தில் அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த ஓர் மகிழ மரக் கன்றை நட்டு, அதன் முன் அவர்கள் முதலில் உடைத்த ஓர் சிறிய கல்லை வைத்து, அதற்கு குங்குமம், மஞ்சளிட்டு பொங்கலிட்டனர். அவர்களின் உற்சாகக் குலவையின் நடுவே பொங்கி வந்த பொங்கலை மாயன் ஓர் தேக்கு இலையில் இட்டுத் தர, தனது ஷூக்களைக் கழற்றி விட்டுவிட்டு, அதை இருகரம் ஏந்திப் பெற்றார் டேவிட் தேவசகாயம்.
எங்கள் கார் கோவில்பட்டியை நெருங்கும்போது “பசிக்குது! சாப்பிட்டலாமா?” என்றார் பீட்டர். அதற்காகவே காத்திருந்த டிரைவர் காரை இருப்பதில் ஒர் நல்ல தாபாவை தேர்ந்தெடுத்து அதில் காரை நுழைத்தார். எனக்கும் பசிக்கத் தொடங்கியிருந்தது. கையிலிருக்கும் தீர்ப்பு நகலை முன் இருக்கையிலேயே மீண்டும் சொருகி விட்டு இறங்கினேன். யாருமற்ற அந்த தாபாவில் ஓரு கட்டிலை தேர்வு செய்து, எதிரெதிரே நாங்கள் அமர எங்கள் நடுவில் டிரைவர் ஒரு கூடையைக் கொண்டு வந்து வைத்தார். பீட்டர் அதைத் திறந்து அவரது ஸ்காட்ச் பாட்டிலையும் உடன் வைத்திருந்த ஐஸ் பெட்டியையும் வெளியே எடுத்தார்.
அவர் எனக்கான கோப்பையை வைக்கும் போதே, நான் மறுக்க, அவர் புன்னகையுடன் தன் கோப்பையில் மட்டும் கொஞ்சம் ஸ்காட்ச் ஊற்றிக் கொண்டார். அதில் நான் ஐஸ் கட்டிகளை அள்ளிப் போட்டேன்.
“நீ என்னை பீட்டர்னே கூப்பிடலாம்! இல்லை, அண்ணன்னு .. எதுக்கு சார், மோர்னுகிட்டு”..
நான் கூச்சத்துடன் சிரித்தேன்.
பீட்டர் என்னை விட பதினைந்து ஆண்டுகளாவது பெரியவர் என்பதால் எனக்கு அவரிடம் சரிக்கு சமமாகப் பழக எப்போதுமே ஓர் தயக்கம்.
நான் மாயனைப் பார்க்கணும்னு சொன்னது ஒனக்குப் பிடிக்கலைதானே? என்றார்.
பிடிக்கலைன்னு இல்லை சார்! இது தேவையான்னு நினைச்சேன். நம்ம கிட்டே வேலை செய்தவங்களோட சரிக்கு சமமா போட்டியிட்டு ஜெயிச்சாப்லே ஆயிடுமேன்னு..
எங்கப்பா எப்படி மனவேதனைப்பட்டு இறந்தார்னு நான் ஒனக்கு சொல்லியிருக்கேன்லே!
நான் மெல்ல தலையசைத்தேன். டேவிட் தேவசகாயம் தூங்கும் போதே மாரடைப்பு வந்து மிக அமைதியாக அவர் உயிர் பிரிந்திருந்தது.
எத்தனையோ தொழில்களில் அவர் ஜெயிச்சிருக்கார்! எத்தனையோ சாதனைகளை சாதிச்சிருக்கார்! சிங்கப்பூர்லேயே பெரிய பணக்காரத் தமிழன்னு பேர் வாங்கியவர். எத்தனை ஆயிரம் தமிழ் பிள்ளைகளைப் படிக்க வச்சவர்! ஆனா, அதுவரைக்கும் அவர் மேலே ஒருத்தரும் கேஸ் போட்டதில்லை. அவரும் அதுவரையிலும் கோர்ட் வாசலை மிதிச்சதில்லை என்றார் ஆவேசமாக.
காலியான வெற்றுக் கோப்பையில் மேலும் கொஞ்சம் விஸ்கியை அவர் ஊற்ற, நான் ஐஸ் கட்டிகளை அதில் போடும் முன் வேகமாக அதை குடித்து முடித்தார்.
கடைசி வரை இந்த மாயன் பண்ண துரோகத்தையே சொல்லிட்டு இருப்பார். உனக்கே தெரியும் நாங்க எவ்ளோ ஆர்த்தடாக்ஸ் கிருஸ்டியன்னு.. எல்லா ஜெபத்திலும் அவர் சொல்றது இதான்.. ஆண்டவரே! என்னை இந்த வழக்கிலிருந்து மீட்டு நான் குற்றமற்றவன்னு அந்தப் பாவிகளுக்கு நிரூபிச்சுடும்பார்..,
அவரோட மொத்த கவனமும் அவர் வீட்டு ஜெபக்கூடத்துக்கு சென்று விட்டிருந்தது. அவர் கண் கலங்க ஆரம்பிச்சுடுச்சு.., நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். கோவில்பட்டியின் வெப்பக் காற்று அப்போது சற்றே பலமாக வீசியும் அவர் முகம் வேர்த்துக் கொண்டிருந்தது.
இதோ! இப்ப, தீர்ப்பு வந்துருச்சு. இது வெறும் கோர்ட் ஜட்ஜ்மெண்ட் இல்லே! கடவுள் தந்த தீர்ப்பு. ஆனா, இதுக்கு ஆசைப்பட்டு வேண்டிட்டு இருந்த அப்பா இல்லை. இப்ப, நான் இதைக் கொண்டு போய் கேஸ் போட்டவன் மூஞ்சிலே வீச வேண்டாமா? அதானே அவனுக்கு கடவுளோட ஜட்ஜ்மெண்ட்?
குவாரியில் பாறைகளை தகர்க்க பெரும் இயந்திரங்கள் ஏதும் இல்லாத காலம் அது. கம்பெனி மேலாளர்கள் பாறைகளை அளந்து குறியிடுவார்கள். அந்த இடங்களில் கையினாலேயே ஆழத் துளையிட்டு வெடி மருந்துகளை இட்டு நிரப்பி வெடிக்க வைத்து, அந்தப் பெரும் பாறைகளை உடையாமல் நகர்த்தி வர வேண்டிய கடினமான வேலை மாயன் குரூப்புக்கு. ஓரிரு சிறிய ரக பளுத்தூக்கிகளைக் கொண்டே பெரிய கற்களை லாரிகளில் ஏற்றிவிடும் சாமர்த்தியத்தை அவர்கள் வெகு விரைவிலேயே கற்றுக் கொண்டனர். எப்போதேனும் ஏற்படும் சிறிய காயங்களைத் தவிர வேறு பெரிய விபத்துகளும் இல்லாமல் அவர்கள் வேலை போய் கொண்டிருந்தது.
தேவசகாயம் & சன்ஸ் கிரானைட் நிறுவனம் தனது லாபத்தை மூன்று மடங்காகப் பெருக்கியிருந்தது. தொழிலாளர்களுக்கு டேவிட் தேவசகாயம் தாராளமாக உவந்தளித்த போனஸ் பணம் அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது. வருடத்துக்கு ஒரு முறை ஆடித் திருவிழாவுக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் என் தந்தையை சந்தித்து தாம்பூலத்துடன் கோவில் பிரசாதமளித்து வாழ்த்துப் பெற்றுச் செல்ல அவர்கள் தவறியதில்லை.
உலகெங்கும் ஓரளவு அமைதி நிலவியக் காலக்கட்டம் அது. பல்வேறு நாடுகளும் நினைவுச் சின்னங்கள், சரித்திரச் சான்றுகளை சுற்றுலாத் தலமாக்க, இந்திய கிரானைட் கற்களுக்கு பெரும் வரவேற்பு ஏற்ப்பட்டது. தேவசகாயத்தின் தேயிலைத் தோட்டத்தில் கிரானைட் பாறைகள் பகுதிகள் விற்கப்பட்டன. ஓர் முழு கிரானைட் கம்பெனியாக உருவெடுத்து பாறைகள் உடைக்க இயந்திரங்கள் வரத் தொடங்கின.
எத்தனை இயந்திரங்கள் வந்தாலும், மாயன் மேஸ்திரிக்கான முக்கியத்துவம் அங்கே குறையவேயில்லை. அவர்களுக்கே அந்த இயந்திரங்களைப் பயன்படுத்தும் பயிற்சிகளை அளிக்கச் சொல்லி தேவசகாயம் உத்தரவிட்டிருந்தார். பணியாளர்கள் குடியிருப்பில் தங்கிப் படித்து வளர்ந்த பிள்ளைகள் அத்தனை பேரும் கம்பெனி செலவில் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் ஒருவரையும் குவாரி வேலைக்கு சேர்க்கக்கூடாது என்பது முதலாளியின் கண்டிப்பான உத்தரவு.
அடுத்த பதினைந்து ஆண்டுகள் என்பது அப்போது வெறுமனே கால ஓட்டம் மட்டுமல்ல! அரசியல் மாற்றங்கள், தொழில் நுட்ப வளர்ச்சிகள் என தேவசகாயம் நிறுவனத்தை வெவ்வேறு தொழில்கள், பெரும் வெற்றிகள் என இட்டுச் சென்றன. ஓர் புதிய தொழிலை தொடங்குவது குறித்து டேவிட் தேவசகாயம் முடிவு செய்யும் அதே நேர்த்தி ஏற்கனவே நடந்து வரும் தொழிலில் இருந்து எப்போது வெளியேற வேண்டும் என்பதிலும் இருக்கும். அப்படியான ஒரு தருணம் தேவசகாயம் கிரானைட் நிறுவனத்துக்கும் வந்தது.
அடர்கருப்பு நிற இந்திய கிரானைட் வகை தங்களைத் தவிர வேறு யாரிடமும் கிடைக்கக்கூடாது என முடிவெடுத்த ஓர் ஜப்பானிய நிறுவனம், தனது இந்திய தொழில் கூட்டாளியின் மூலம், அந்த நிற கிரானைட் குவாரிகளை எல்லாம் விலைக்கு வாங்கி வந்தது. தேவசகாயம் எதிர்பாராத ஒரு ஃபேன்ஸி விலைக்கு அவர் குவாரியை உரிமத்துடன் அந்நிறுவனம் கேட்டபோது இவர் முடிவெடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் விற்கவில்லையெனில், சந்தை விலையைக் கட்டுப்படுத்தும் அந்த நிறுவனத்தால் அவருக்குத் தொழில்ரீதியான நட்டம் உறுதி.
இப்படியாக மாயன் மேஸ்திரி தனது சகாக்களுடன் ஆடித் திருவிழா கோவில் கொடைக்கு ஊர் சென்றிருந்த ஒரு நாளில், ஒரே சந்திப்பில் தேவசகாயம் & சன்ஸ் கிரானைட் நிறுவனம் கைமாற்றப்பட்டது.
காரில் ஏறி அமர்ந்த அடுத்தக் கணத்தில் பீட்டர் தன் இருக்கையை பின்னுக்குத் தள்ளி படுத்து உறங்கத் தொடங்கி விட்டார். திருச்சி வந்தவுடன் ஹோட்டல் அறை எடுத்து உறங்கிவிட்டு, காலை புறப்படலாம் என்று டிரைவரிடம் சொல்லி விட்டு, மீண்டும் எதிரில் இருந்த தீர்ப்பு நகலைக் கையில் எடுத்தேன்.
உயர்நீதிமன்றத்தின் முதல் பெஞ்ச் அளித்திருந்த தீர்ப்பு அது. அதனுடன் இரு தரப்பும் அளித்த பல்வேறு அஃபிடவிட்களும் பட்டியலில் இணைக்கப்பட்டு அவைகள் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. பழைய டைப்ரைட்டரில் அடிக்கப்பட்டிருந்த பல்வேறு ஆவணங்களின் நடுவே தமிழில் நடுங்கும் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்த கடிதமும், அதன் அதிகாரப்பூர்வ ஆங்கில மொழிபெயர்ப்பும் என் கவனத்தை ஈர்க்க, அதை முதலில் படிக்கத் தொடங்கினேன்.
அது தன் முதலாளி டேவிட் தேவசகாயத்தின் பேரில் கேரள தொழிலாளர் துறை ஆணையருக்கு மாயோன் மேஸ்திரி தனது குழுவில் யாரையோ எழுத வைத்து, கைநாட்டு இட்டு அளித்திருந்த புகார் கடிதம்.
மிக மங்கலாக அந்தக் கடிதத்தின் நகல் எடுக்கப்பட்டிருந்தது. மொத்த ஆவணங்களிலும் அது ஒன்றுதான் தமிழ் ஆவணம் என்பதால் அதனைப் படிக்கும் ஈர்ப்பு கூடுதலாக இருந்தது. மேல் விளக்கை மிக அருகில் இழுத்து வைத்துப் பொருத்திக் கொண்டு மெதுவாகப் படித்துப் பார்த்தேன்.
மேஸ்திரி மாயன் தாங்கள் ஊரில் இல்லாத போது தங்கள் வீட்டுச் சாமான்களை எல்லாம் மூட்டைக் கட்டி மெயின்கேட்டுக்கு வெளியே வைத்து விட்டதாகவும், எத்தனைக் கெஞ்சியும் அவர்களில் யாரையும் குவாரிக்குள் அனுமதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுவரையில் அவர்கள் பார்த்திராத புதிய காவலாளியை வைத்து, அந்த இடத்திலிருந்து அவர்களைத் துரத்தியதாகவும், அது கூட பரவாயில்லை! யாராவது தங்கள் குடியிருப்பில் வைக்கப்பட்டிருக்கும் அவர்களின் குலசாமியையும் அதன் மேலிருக்கும் மகிழமரத்திலிருந்து ஓர் இளங்கிளையையும் உடைத்துத் தந்தால் போதும்! தாங்கள் சொந்த ஊருக்கே சென்று விடுவதாக எழுதப்பட்டிருந்தது.
மற்றபடி, அந்தக் கடிதத்தில் அவர்கள் பணிபுரிந்த தேவசகாயம் & சன்ஸ் நிறுவனத்தின் மீது சட்டரீதியான புகார் என்று ஒன்று இல்லவே இல்லை.
ஆனால், அந்தக் கடிதத்தின் ஆங்கில மொழியாக்கத்தில், தாங்கள் நிறுவனத்தின் நிரந்தப் பணியாளர்கள் என்றும், தங்களின் ஒப்புதல் இல்லாமல் கம்பெனியின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதால், தொழிலாளர் நலச் சட்டப்படியான எந்த நிவாரணங்களும் தங்களுக்கு அளிக்கப்படவில்லை என்றும் மாயோன் மேஸ்திரி குறிப்பிட்டிருந்ததைப் போல கூடுதலாக ஒரு பக்கம் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டு, அதையே அவருடைய புகாராக பதியப்பட்டிருந்தது.
இரவு திருச்சியில் தங்கி, அடுத்த நாள் காலை அங்கிருந்து புறப்பட்ட போது பீட்டரைப் போலவே எனக்கும் மாயனைச் சந்திக்கப் போவதைக் குறித்த ஆர்வம் கூடியிருந்தது. பீட்டர் அன்று காலை கம்பெனி போர்டு மீட்டிங் செல்வதைப் போல தனது கருநிற சூட் அணிந்து கொண்டார். தன் வாழ்நாளின் முக்கியமான சந்திப்பாக அதை அவர் எதிர்நோக்குவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
காரில் செல்லும் போது, “நேத்து அவ்ளோ இண்டரெஸ்டிங்கா ஜட்ஜ்மெண்ட்டை படிச்சியே? என்ன சொல்லுது ஜட்ஜ்மெண்ட்?” என்றார்.
எனக்குத் தெரிஞ்சு அதிலே வழக்குக்கான ப்ரைமா ஃபேஸியே இல்லை சார்! யாராவது ஒருத்தர் மாயனை அழைத்துப் பொறுமையா பேசியிருந்தா, கேஸே ரெஜிஸ்டிராகி இருக்காதுனு நினைக்கிறேன்.
என்ன சொல்றே நீ? அவனே எழுதிக் கொடுத்த புகார் அதில் இருந்திருக்குமே?
இருந்தது சார்! ஆனா, அவரோட ப்ரேயரில் நஷ்ட ஈடு கிடையாதே? ஏதோ சாமிங்கிறார்? மரக்கிளைங்கிறார்!
“எல்லாம் ஏமாத்துவேலை! அதுக்குப் போய் யாராவது கேஸ் போடுவாங்களா?” என்றபடி அவர் கண்ணாடிப் பக்கம் திரும்பிக் கொண்டார்.
ஊர் திருவிழா முடிந்து அன்று மாயன் குரூப் குவாரிக்கு திரும்பி வந்தபோது மாலை மங்கி இருட்டத் தொடங்கி இருந்தது. குழந்தைகள் பசியில் அழ ஆரம்பித்திருக்க, குளிருக்கு அவரவர் பையில் வைத்திருந்த போர்வையை பெண்கள் வெளியே எடுத்துத் தந்தனர். மதுரை டிப்போவிலேயே அவர்கள் தனி பேருந்து எடுத்திருந்ததால், அவர்களை நேராக குவாரியின் மெயின் கேட் எதிரிலேயே நிறுத்தி இறக்கி விட்டனர்.
மழைக்காலம் ஏற்கனவே ஆரம்பித்திருந்ததால், குவாரியின் வாசலெங்கும் செம்மண் சேறாக இருந்தது. அப்போது மிக லேசான தூறல் வேறு. யாரோ ஓடிச் சென்று வெளியே குவிக்கப்பட்டிருந்த கற்களைக் கொண்டு வந்து சேற்றில் நடந்து போக ஏதுவாக ஆங்காங்கே போட, தலையில் சுமையுடன் கவனமாக சேற்றைக் கடந்து மெயின் கேட்டுக்குச் சென்றனர்.
மெயின் கேட் சங்கிலியால் பூட்டப்பட்டு அதன் அருகே ஓர் முத்திரையிடப்பட்ட ஒரு தாள் ஒட்டப்பட்டிருந்தது மாயனுக்கு வியப்பாக இருந்தது. அவர் மனைவி மாயனின் தோள் தொட்டு சுட்டிக்காட்டிய திசையில் ‘தேவசகாயம் & சன்ஸ் கிரானைட் கம்பெனி’ பெயர் பலகை அகற்றப்பட்டிருந்தது. மாயனுடன் வந்தவர்கள் காவலாளியின் அறைக்குள் தலையை விட்டு அவர்களுக்குத் தெரிந்த பெயர்களைச் சொல்லி உரக்கக் கத்தினர். வெகுநேரம் கழித்து டைம் ஆஃபிஸின் சிறிய கதவைத் திறந்த வட இந்திய காவலாளி ஒருவன், அவர்கள் அறியாத மொழியில் எதிர்குரல் கொடுத்தபோது மழை வலுத்துப் பெய்யத் தொடங்கியது.
மாயன் மேஸ்திரி தன் வாழ்நாளில் கற்பனை செய்திராத கெட்டக் கனவு கண்டதைப் போல உறைந்து போய் நின்றிருந்தார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்த ஒற்றைக் கதவைத் தாண்டினால் மறுபுறம் அவர்களின் வீடு இருக்க, குழந்தைகளின் கண்களில் பசியும், பெண்களின் நினைவில் சுடுசோறுமாக அந்த மழையில் அப்படியே நின்று கொண்டிருந்தனர். பல ஆண்டுகளாக அந்தப் பகுதி மக்கள் நன்கு அறிந்தவர்கள் பெண்களும், குழந்தைகளுமாக குவாரி வாசலில் நிற்கும் செய்தி பக்கத்து கிராமத்துக்குத் தெரிய வர அங்கே கூட்டம் சேரத் தொடங்கியது.
கார் பெரம்பலூர் தாண்டியிருந்தது. வெயிலுக்கு கண்கள் கூச, எனது குளிர்கண்ணாடியை தேடி எடுத்ததை பீட்டர் திரும்பிப் பார்த்தார்.
யாராவது அவங்களுக்கு கம்பெனியை வித்தாச்சுனு தகவல் சொல்லியிருக்கலாமே சார்? இந்த முறை நானாகவே உரையாடலைத் தொடங்கினேன்.
ஹேய்! என்னது? இப்ப மாதிரி அப்ப என்ன மொபைல் ஃபோன் வசதி எல்லாமா இருந்தது. ஒரே நாளில் முடிஞ்ச டீல் அது. கம்பெனிக்கு புக் வேல்யூவை விட அஞ்சு மடங்கு சேல் வேல்யூ கிடைச்சது. அதை எப்படி மிஸ் பண்ண முடியும்னு அப்பா நினைச்சிருக்கலாம்லே! எந்த பிசினெஸ்மேனும் அப்படித்தான் நினைப்பான்.
அப்ப, வித்த விஷயம் தெரியாம வந்தவங்களை உள்ளேயாவது விட்டிருக்கலாமே! பாவம்! திடீர்னு சொன்னா அவங்க எங்க போவாங்க?
அது வாங்குனவன் செய்ய வேண்டிய முடிவு தம்பி. நம்ம சூப்ரவைஸருக்கு மூணாறுலே வீடு. மறுநாள் காலையில் வந்து அவன் விளக்கம் சொல்லியிருப்பான். அதுக்குள்ளார ஆத்திரப்பட்டு போலீஸ் கம்ப்ளெயிண்ட் பண்ணிருக்கான் ராஸ்கல். எத்தனை வருஷ பழக்கம். எங்க அப்பாவோட குணம் தெரியாதா அவனுக்கு?
பீட்டர் மீண்டும் ஒரு சிகரெட் பொருத்திக் கொண்டார்.
அதுவரையில் எங்களுடனே வந்து கொண்டிருந்த ஒரு பெரிய மேகத்தின் நிழல் எங்களை விட்டு விலகிச் சென்று கொண்டிருந்தது.
அத்தனை வருஷங்கள் கேரளாவில் வசித்திருந்தாலும் அவர்கள் யாருக்கும் மலையாளம் சுத்தமா பேச வராது. குழந்தைகளை முதலாளி மூணாற்றில் உள்ள பெரிய பள்ளியில் இங்கிலீஷ் மீடியத்தில் சேர்த்திருந்தார். அங்கு ஆங்கிலமும், ஹிந்தியும்தான்.
சுற்றிலும் இருந்த பல டீ எஸ்டேட் யூனியன்களுக்கிடையே ஒரே ஒரு கல்குவாரி மட்டும் தொழிலாளர் சங்கம் இல்லாமல் இருந்ததில் அங்குள்ள கட்சிகளுக்கு ஓர் உறுத்தல் இருந்தது. முடிந்த மட்டும் முயன்று பார்த்தும் அவர்களால் மாயனை தொழிற்சங்கம் துவக்க ஒப்புக் கொள்ள வைக்க முடியவில்லை. தொழிற்சங்கக் கொடி ஏற்றுவது முதலாளிக்கு எதிரான செயல் என மாயன் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.
அந்த மழையில் குடும்பத்துடன் சேற்றில் நின்று கொண்டிருந்த போது, முதலில் ஓடி வந்தது தொழிற்சங்கத்தினர்கள்தாம். எங்கிருந்தோ கித்தான் பைகளைக் கொண்டு வந்து மூங்கில் கழிகளைக் கொண்டு அவர்களுக்கு ஓர் மேற்கூரையை அமைத்துத் தந்தனர். யாரோ சைக்கிள் ஓடிச் சென்று பெட்டி நிறைய பிரட் பாக்கெட்டுகளும், கேனில் டீயும் கொண்டு வர தாங்கள் வழிபடும் கடவுள் கைவிடவில்லை என்ற நம்பிக்கை மாயனுக்கு வந்தது.
ஹிந்தி தெரிந்த தொழிற்சங்க வழக்கறிஞர் ஒருவர் அங்கு வரவழைக்கப்பட்டார். அவருடன் சிலர் சென்று வாயில் கதவை கட்டையால் அடித்து திறக்கச் சொன்னதற்கு, எதுவாக இருந்தாலும் காலையில் வாருங்கள்! உயிரே போனாலும் நான் கதவைத் திறக்க மாட்டேன் என்று அவன் மொழியிலேயே மேலும் கடுமை காட்டினான் கூர்க்கா.
அப்போது அவ்வழியே ரோந்து சென்ற காவல்துறை ஜீப் அங்கு வந்து நின்றது. நிலைமையைப் புரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர் அவர் பங்குக்கு ஒரு முறை சென்று கூர்க்காவிடம் பேசிப்பார்த்துப் பலனின்றித் திரும்ப வந்தார். அருகேயிருந்த ஒரு டிராக்டரை வரவழைத்து இவர்கள் அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வரச் சொல்லி விட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
காவல் நிலையத்திலிருந்து எத்தனை முறை முயற்சி செய்தும் அவர்கள் சொன்ன எந்த நம்பருக்கும் தொலைபேசி அழைப்புச் செல்லவில்லை. கடும் மழையில் மலைப் பகுதிகளில் இப்படி அடிக்கடி நடக்கும் என்பதால், மாயனை இன்ஸ்பெக்டர் அழைத்து கம்பெனி மீது புகார் எழுதித் தரச் சொல்லி சொன்னார். அப்படி தந்தால், வயர்லெஸ் மூலமாவது மூணாறு ஸ்டேஷனை அழைத்து அவர்கள் சூப்பர்வைஸரை வரவழைக்க முடியும் என்றார்.
மாயனுக்கு எதையும் எழுத்து மூலமாகத் தருவதில் விருப்பமில்லை. முதலாளிக்குத் தெரியாமல் நடக்கும் தவறுகளுக்கு அவரைப் பொறுப்பாக்கி எழுதித் தருவது சரியல்ல என்று அவன் எளிய அறிவு சொன்னது. தவிர, அவனுக்காக உதவ வந்திருக்கும் தொழிற்சங்கத்தினரின் தோரணையும், கோபமும் மாயனுக்கு நம்பிக்கையளிப்பதற்கு பதிலாக மேலும் திகிலளித்தது.
தனது மனைவியிடம் அந்தப் பேப்பரைத் தந்து மாயன் சொல்ல, சொல்ல அவள் எழுதித் தந்த புகாரைக் கொண்டு சென்று இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தான். புகார் எழுதிய அந்தப் பெண்ணையே அழைத்து அதைப் படிக்கச் சொன்னார் இன்ஸ்பெக்டர். தனது மெல்லியக் குரலில் அவள் அதைப் படித்ததைக் கேட்ட இன்ஸ்பெக்டருக்கும், சங்கத்தினருக்கும் முதலில் ஒன்றும் புரியவில்லை.
புரிந்ததும் மேலும் குழம்பிப் போனார்கள்.
‘எந்தானு! காம்பென்சேஷன் ஏதும் வேண்டாமோ! ஒத்த கல்லும், செடியும் போதுமா? இந்த தமிழங்க விஷயம் எல்லாமே குழப்படிதான்’ என்றுபடி கலைந்து செல்ல, அப்போது இன்ஸ்பெக்டரும், வக்கீலும் ஆலோசித்து வேறொரு முடிவை எடுத்தனர்.
கல்வராயன் மலைக்குச் செல்ல உளுந்தூர்பேட்டையில் இடது புறம் திரும்ப வேண்டும் என்று எனது மொபைல்போன் கூகுள் மேப் சொன்னது. அதற்கும் முன்னமே ஒரு பாதை உண்டு! அது தனக்குத் தெரியும் என்றார் டிரைவர். மாயன் கல்ராயன் மலையில் அவர்கள் வசித்த கிராமத்திலேயேதான் இன்னமும் இருக்கிறார் என்று பீட்டர் ஏற்கனவே உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார்.
வழியில் ஓரிடத்தில் நிறுத்தி டீ அருந்திய போது நாங்கள் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. வழக்கின் சாரம்சங்கள் குறித்த ஏதேனும் அக்கறை, தெளிவு ஏதும் பீட்டர் சாருக்கு இருந்ததைப் போல தெரியவில்லை. அவர் லட்சியம் ஒன்றே ஒன்றுதான். தீர்ப்பு. அது அவர் கையில் இருந்தது.
காரில் ஏறியவுடன் தீர்ப்பு நகலை எடுத்து விட்டுப் போனப் பகுதிகளைப் படிக்கத் தொடங்கினேன். பீட்டர் அதை சிரத்தையின்றிப் பார்த்துக் கொண்டே இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டார்.
மாயன் கொடுத்த புகாரின் மீது தேவசகாயம் கம்பெனியின் மீது வழக்குப் பதியப் பட்டவுடன், தொழிற்சங்களின் புகாரின் பேரில் கேரள தொழிலாளர் நலத்துறையும் இணைந்து மேலும் ஓர் வழக்கைத் தொடர்ந்தது. முதல் நோட்டீஸ் வெளியிட்ட போது டேவிட் தேவசகாயம் அமெரிக்காவில் மேலும் ஓரு தொழிலுக்கான வேட்டையில் இருந்தார். இரண்டாம் நோட்டீஸின் போது சிங்கப்பூர்.
இறுதியாக அவர் கவனத்துக்கு இது வந்தபோது, அவருக்கு வந்த ஆத்திரத்தில் மாயன் குழுவினர் நிரந்தரமாக அவரை அணுக முடியாத தொலைவுக்குச் சென்று விட்டார்.
தேவசகாயம் கம்பெனிகளின் தலைமை அலுவலகத்திலிருந்து வந்த ஒரு குழு, திருவனந்தபுரத்தின் மிகச் சிறந்த வழக்கறிஞரிடம் இந்த வழக்கை ஒப்படைத்துச் சென்றது. மேலும், கம்பெனியின் சார்பில் ஆஜராக ஒரு லோக்கல் பவர் ஆஃப் அட்டர்னியையும் நியமித்துச் செல்ல, வழக்கு மாயனை விட்டு விலகி லேபர் யூனியன்களை மையப்படுத்தி நடக்கத் தொடங்கியது.
என் கையில் இருந்த கேஸ் கட்டின் அடிப்பகுதியில், இன்னொரு கோர்ட் தீர்ப்பும் இருந்தது. அது கீழ் கோர்ட் அளித்திருந்த தீர்ப்பு. கீழ் கோர்ட்டிலும் வழக்கு தேவசகாயம் பக்கமே தீர்ப்பாகியிருந்தது. அது மாயனையோ, தேவசகாயத்தையோ அழைத்து விசாரிக்காமல் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஆதாரங்களின் அடிப்படையில் அளிக்கப்பட்டிருந்த தீர்ப்பு.
அந்த சமயத்தின் கேரளம் இடது சாரிகளின் ஆட்சியில் இருந்த காரணத்தாலோ, மாயன் வழக்கைப் பதிந்த தொழிற்சங்க வழக்கறிஞர் அப்போது அரசு வழக்கறிஞராக ஆகி விட்டிருந்ததாலோ, அரசு அந்த வழக்கின் கீழ்கோர்ட்டு தோல்வியை படு சீரியஸாக எடுத்துக் கொண்டது.
இந்தமுறை அரசு சார்பில் படுதீவிரமாக மேல் முறையீடு செய்யப்பட்டது. அதிலும் இம்முறை அரசு வழக்கறிஞர் மனுதாரர் மாயனையும், பிரதிவாதி தேவசகாயத்தையும் கூண்டில் ஏற்றி விசாரித்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருந்தார்.
திருவனந்தபுரம் உயர் நீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டதின் பேரில், காவல்துறை மாயனை அவன் கிராமத்துக்கே தேடிச் சென்று அழைத்து வந்திருந்தனர். முற்றிலும் புதிய சூழலில் அச்சத்துடன் கோர்ட்டினுள் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தான் மாயன்.
அப்போது வக்கீல்கள் சூழ ஆரவாரமாக உள்ளே நுழைந்த அவன் முதலாளி டேவிட் தேவசகாயம்தான் அவன் அங்கு அறிந்திருந்த ஒரே முகம். படாலென்று எழுந்து நின்று அவரை நோக்கி வணங்கியவனை டேவிட் தேவசகாயம் கண்டு கொள்ளாமல் இருக்க பெரும் பிரயத்தனப் பட்டார். மாயன் தானாகச் சென்று அவர் அருகில் சென்று பேசி விட எத்தனித்தை அரசு தரப்பு கடுமையான எச்சரிக்கையுடன் தடுத்து நிறுத்தியது.
வழக்கின் முடிவு ஓர் ஒற்றைப் புள்ளியில்தான் இருந்தது. மாயன் குரூப் தினக்கூலியா? நிரந்தர தொழிலாளர்களா? என்ற கேள்விக்கான பதில்தான் அது. நிரந்தத் தொழிலாளர்கள் எனில் அவர்களின் அடுத்த ஐந்தாண்டு சம்பளம் வரையில் நட்டஈடு கோர தொழிலாளர் நலச் சட்டம் வழி செய்கிறது. தினக்கூலி எனில் அதிகபட்சம் அன்று இரவு நடந்ததற்கு கம்பெனியின் சார்பில் ஒரு மன்னிப்புக் கடிதம் போதும். வழக்கு நிறைவுற்று விடும்.
பதினைந்து ஆண்டு காலம் குவாரிக்குள்ளாகவே வாழ்ந்து, உழைத்து, உருவாக்கிய ஓரு நிறுவனம் தங்களை தினக்கூலி என்றழைத்தால் என்ன? நிரந்தர தொழிலாளர் என்றழைத்தால் என்ன?தங்களுக்கு பேசிய தொகையை விட அதிகமாகவே அளித்து, அதனினும் சிறப்பான வாழ்வாதாரத்தை தன் நிறுவனம் அமைத்துத் தந்த பிறகு, வெறும் பெயரில் என்ன இருக்கிறது என்று புரியாமல் மாயன் குழம்பிப் போய் அமர்ந்திருந்தான்.
முதலில், புகார்தாரரான மாயன் குறுக்கு விசாரணை செய்யப்பட்டான்.
கேட்கும் கேள்விகளுக்கு ஆமாம்! இல்லை! என்று தமிழிலேயே சொன்னால் போதும் என்று கண்டிப்பாகச் சொல்லப்பட்டிருந்ததால் தேவசகாயம் முகத்தைப் பார்த்தவாறே எல்லாவற்றுக்கும் தலையாட்டி விட்டு இறங்கினான் மாயன்.
தேவசகாயத்தின் முறை வந்த போது, அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை விட, பல வருடங்கள் கழித்து தன் முதலாளியை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மாயனுக்கு அவர் ஆங்கிலத்தில் என்ன சொன்னாரென்று புரியவில்லை.
தலைமை நீதிபதி மாயனை மீண்டும் கூண்டுக்குள் அழைக்கச் சொன்னார். இந்த முறை அரசு வழக்கறிஞரை கைசைத்து பேசாமல் இருக்கச் சொல்லி விட்டு அவரே மழலைத் தமிழில், “இதோ பாருப்பா! மிஸ்டர்.தேவசகாயம் நீ அவரோட கம்பெனியின் தினக்கூலிதான். அப்பப்ப வந்து வேலை செஞ்சுட்டுப் போவே., மத்தபடி உன்னை அவருக்குத் தெரியாதுங்கிறாரே! அது உண்மைதானா?” எனக் கேட்டார். அன்றுடன் அந்த வழக்கை முடித்துவிடும் ஆர்வம் நீதிபதியின் முகத்தில் தெரிந்தது.
மாயன் நிமிர்ந்து தேவசகாயத்தைப் பார்த்தான். அதுவரையில் மாயனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவர் மீண்டும் இவன் பார்வையை தவிர்த்து அவர் நீதிபதியைப் பார்க்கத் தொடங்கினார்.
இந்த முறை மாயன் யாரையும் பொருட்படுத்தவில்லை. மிகவும் சன்னமானக் குரலில், ஆனால் தீர்மானமாக நீதிபதியை நோக்கி, ஆமாங்கையா! என் மொதலாளி என்ன சொன்னாரோ, அதான் நிஜம் என்றான்.
கடைசி அஃபிடவிட்டையும் படித்து முடித்து ஃபைலை மூடி வைத்தேன்.
“என்ன முழுசா படிச்சாச்சா? இப்ப என்ன சொல்லுது கேஸ்?” என்றார் பீட்டர்.
பதிலேதும் சொல்லத் தோன்றவில்லை. இந்த வழக்கில் தேவசகாயம் & சன்ஸ் ஜெயிக்கவில்லை. மாயன் தனது வெற்றியை அவருக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறான்.
வெளியே பார்த்தபடி அமைதியாக சிந்தனையில் ஆழ்ந்து இருந்தேன். எனது பதிலுக்காக நீண்ட நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்ததை சட்டென உணர்ந்தவுடன் அவர் பக்கம் திரும்பி, சார்! எனக்கென்னவோ இந்த வழக்கு ஹைகோர்ட்டில் அந்தக் கடைசி நாளில் ஆரம்பிச்சு, அதற்கடுத்த நிமிஷமே முடிந்தது போல தோணுது என்றேன்.
அவர் வேறெதையோ உணர்ந்தாற்போல, அன்னைக்கு எங்கப்பா சாட்சிக்கூண்டிலே பொய் சொன்னதை சொல்றியா? வேறென்ன வழி இருக்கு சொல்லு? அவ்வளவு தூரம் ஆனபிறகு விட்டுக் கொடுத்துட முடியுமா? என்றார்.
நான் எதுவும் சொல்லவில்லை.
அதுமட்டுமல்ல! நிஜமாவே அவங்கள்லே யாரும் சம்பள ரோஸ்டர்லே இல்லை. கோர்ட்டிலே எங்கப்பா சொன்னபடி அவங்க தினக்கூலி இல்லைன்னாலும், நிரந்தர தொழிலாளர்களும் இல்லையே! அவங்க உடைச்சு ஏத்துற கல்லோட அளவுக்கேத்த சம்பளம்தான். அதையே அன்றைய செலவுக்கு தினப்படியாவும், ஊருக்குப் போகும்போது சம்பளமாவும் பிரிச்சு வாங்கிட்டு இருந்தாங்க. ஆனா, சட்டப்படி எதுக்கும் ஆதாரமில்லையே?
எனக்கும் பதில் சொல்லத் தெரியலை. தொடர்ந்து அமைதியாகவே இருந்தேன். எனது மவுனம் பீட்டர் சாருக்கு லேசாகக் கோபமூட்டியது.
“அந்த ஃபைலை எடு” என்றார்.
எடுத்து அவரிடம் தந்தேன்.
“நீயே திறந்து அதுலே ஒரு நீலக்கலர் கவர் இருக்கும் பார்! அதை எடு” என்றார்.
எடுத்தேன்.
“பிரிச்சுப் பார்” என்றார்.
பிரித்தேன். உள்ளே மாயன் பேரில் இரண்டும், மீதமுள்ள பதினாறு பேர் பேரில் தலா ஒன்றுமாக மொத்தம் பதினெட்டு நிரந்தர வைப்பு ரசீது இருந்தது. ஒவ்வொன்றும் இருபத்தி அஞ்சாயிரம் ரூபாய்க்கான பாரத ஸ்டேட் வங்கியின் நிரந்தர வைப்புத் தொகை சான்றிதழ்கள்.
“மொத்த ஐந்து லட்ச ரூபாய். அந்த டெபாசிட் தேதியைப் பார். தேவசகாயம் & சன்ஸ் பங்குகளை வித்து அதுக்கான பணத்தை வாங்கின அதே தேதி. இன்னைக்கு வரைக்கும் இது யாருக்கும் தெரியாது” என்றார் கொந்தளிப்புடன் பீட்டர்.
நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன்.
மாயன் கேஸ் போட்டது வெறும் சம்பள காம்பென்சேஷனுக்காக! ஆனா, வித்தப்போ அவன் ஊரிலே இல்லைன்னாலும், அன்னைக்கே லாபத்திலே பர்செண்டேஜ் வச்சு அவங்க பேரிலே அப்பா டெபாசிட் போட்டிருக்கார். இன்னைக்கு ஒவ்வொரு டெபாசிட் மதிப்பும் பத்து மடங்கு கூடியிருக்கும். ஒரு ட்ரூ கிரிஸ்டியனா அவர் என்னைக்குமே மனசாட்சியுடன்தான் இருந்தார். ஆனா, அவன் அவர்மேலேயே கேஸ் போட்டிருக்கான். இதை நான் போய் அவன்கிட்ட சொல்ல வேணாமா?
எல்லாவற்றையும் வாங்கி மீண்டும் ஃபைலில் வைத்துக் கொண்டு, ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு அவர் பக்க ஜன்னலைத் திறந்தார். லேசான வெப்பக் காற்று திடுமென உள் புகுந்து உள்ளிருக்கும் குளிர்ச்சியை வெளியே இழுத்துச் சென்ற போது கார் மலைப் பாதையில் ஏறத் தொடங்கி விட்டிருந்தது.
கார் டிரைவர் ஏற்கனவே நன்கு விசாரித்து வைத்திருந்தார் போல! யாரையும் வழி கேட்காமல் சென்று கொண்டே இருந்தார். மூன்று, நான்கு மலைக்கிராமங்களைத் தாண்டி சென்று கொண்டிருந்தோம். எப்போதேனும் எதிரே வரும் பேருந்துக்கு சில சமயம் பின்னுக்கு வந்து வழி கொடுக்க வேண்டியிருந்தது. இதற்கு மேல் போக பாதை இருக்குமா? என்று நான் நினைத்த வேளையில் செம்பாறை என்ற பெயர் பலகைத் தெரிந்தது.
ஊரில் ஒரு டீக்கடையில் நிறுத்தி மாயனை விசாரித்தேன். குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த ஒரு ஒல்லியான வயசாளி எழுந்து வந்து “யாரு? கல்லுடைக்கிற மாயனா? அவனுக்கு இன்னைக்கு கோவில் கொடையாச்சே! இப்படியே நேரா போங்க. சகாய நகர்னு போர்டு வரும். அதுக்குப் பக்கத்துலே பிரியுற செம்மண் ரோடுலே போனா முனீஸ்வரன் கோவில் வரும். அங்கதான் இருப்பான். போங்க” என்றார்.
இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருபது முப்பது வீடுகள் இருக்கும் ஒரு சின்ன குடியிருப்பு சகாயநகர். அந்த போர்டுக்கு அருகில் திரும்பும்போதுதான் கவனித்தேன் அது தேவசகாயநகர் என்று! அதை பீட்டர் கவனித்தாரா என்று தெரியவில்லை. அவர் வெகுநேரமாகவே இறுக்கமாகவே இருந்ததை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
திடீரென்று அந்த செம்மண் பாதை முடிய, அங்கிருந்து பரந்த புல்வெளி ஆரம்பித்தது. காரை விட்டு இறங்கிய உடனேயே நாங்கள் ஒரு குன்றின் உச்சியில் இருப்பதை உணர முடிந்தது. வெயில் சுத்தமாக இறங்கி விட்டிருந்தது. மழை ஏதும் பெய்திராததால் மலையில் இருந்து உலர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. திடீரென பம்பை மேளச்சத்தம் மிக அருகில் இருந்து கேட்க, அந்த சத்தத்தை நோக்கி நடந்தோம்.
அந்த பரந்தவெளியின் நடுவே ஒரே ஒரு ஒற்றை மரம், அதிலும் பிரம்மாண்டமான மரம் அந்த நிலபரப்பின் காட்சிக்கு வெகுவாக அழகூட்டியது. மரத்தின் கீழே ஒரு சிறிய கோவிலும் அதைச் சுற்றிலும் நிறைய மனிதர்களும் இருந்தனர். மரத்தின் ஒரு பகுதியில் பல ஆடுகள் கட்டி வைக்கப்பட்டிருக்க, எதிர் திசையில் ஆடுதொட்டியில் பலி கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
கோவிலை நெருங்கிச் செல்ல பம்பை, உடுக்கையின் சப்தமும், வேகமும் கூடியிருந்ததை உணர முடிந்தது. காற்றில் கலந்து வந்த ரத்த வாடையுடன் கூடிய கற்பூர வாசனை நம் பூர்வஜென்ம வாசனை போல அத்தனை பரிச்சயமாக இருந்தது. ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக ஒரு நூறு பேர் அங்கு இருந்தனர். ஆண்கள் பெரும்பாலும் வெற்றுடம்பாகவும், பெண்கள் சேலை மாராப்பை எதிர்புறமாக மடித்தும் அணிந்திருந்தது வித்தியாசமாகவே இருந்தது.
அருகில் சென்றவுடன், வெளியாட்களான எங்களை உள்ளே செல்லுமாறு அந்த மனித வளையம் விலகி வழி விட்டது. கோவில் என்றால் கோபுரமோ, சுற்றுச்சுவருடனான பிரகாரமோ இல்லை. மரத்தடியில் ஒரு சின்ன சிமெண்ட் பூச்சுக் கட்டிடம். உள்ளே மஞ்சள் குங்குமம் பூசப்பட்ட ஒரு குத்துக்கல். அவ்வளவுதான்.
இதற்கே அங்கிருந்த பலர் ஆவேசம் வந்து சாமியாடுவதையும், அவர்களைச் சுற்றி வந்து பம்பை, உடுக்கைக் கலைஞர்கள் ஆட்டத்துக்கேற்ப இசைப்பதையும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த என்னை பீட்டர் தோள் தொட்டு திருப்பினார். கோவிலுக்கு பக்கத்தில் ஒரு உயரமான பலகைக் கருங்கல்லின் மீது பளபளவென்ற மஞ்சள் நிற நிஜார் அணிந்து வெற்றுடம்புடன் சம்மணமிட்டு அமர்ந்திருந்த மாயனைச் சுட்டிக் காட்டினார்.
என் மனதில் இருந்த அதே நெடு நெடு உயரமான உருவம். தலைமுடி அழுந்த வாரி பின்னுக்கு கட்டப்பட்டிருந்தது. முன் நெற்றி முழுக்க குங்குமம். கருத்த உடலெங்கும் விபூதி. அமர்ந்தபடியே இடுப்போடு சேர்த்து உடல் ஆட்டுக்கல்லின் குழவியைப் போல இடம் வலமாக ஆடிக் கொண்டே இருந்தது விநோதமாக இருந்தது. அங்கே வரிசையில் நின்று கொண்டிருந்த கூட்டம் சாமியைப் பார்ப்பதற்கு அல்ல! மாயனைப் பார்ப்பதற்கு என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். ஒவ்வொருவராக வரிசையில் சென்று மாயன் முன் குனிந்து நிற்க, அவர் கையிலிருந்த வேப்பங்கொத்தை அவர்கள் மேல் அடித்தபடி ஏதோ சொல்லிக் கொண்டே விபூதியைப் பூசி விட்டுக் கொண்டிருந்தார்.
பீட்டர் அதிர்ந்து போயிருப்பதைக் காண முடிந்தது. எங்கோ ஒரு மலைக்கிராம வீட்டில் வறுமை நிலையிலிருக்கும் தங்கள் முன்னாள் வேலையாளை சந்தித்து, கோர்ட் தீர்ப்பைக் காட்டி தன் வெற்றியை உறுதிபடுத்திக் கொள்ளும் காட்சியை பீட்டர் பலமுறை கற்பனை செய்திருப்பார். இறுதியில் அத்தனைப் பேரையும் வரிசையில் வரச்செய்து, அந்த ஃபிக்ஸட் டெபாசிட் பணத்தை தன் கையால் கருணையுடன் அளிப்பது அவர் தந்தையின் ஆன்மாவை மகிழ்விக்கச் செய்யும் என்றுகூட நம்பியிருப்பார்.
ஆனால், ஒரு சிறு தெய்வம் போல கம்பீரமாக அமர்ந்து தம் மக்களுக்கு அருள் வாக்குச் சொல்லும் மாயனைப் பார்ப்போம் என பீட்டர் எதிர்பார்த்திரவில்லை. நானும் கூட அதிர்ச்சியாகி இருந்தேன். பகல் வெளிச்சம் வெகுவாக குறைந்து விட்டிருந்தது. விழா முடியும் தருவாயில் வரும் உற்சாக இசையும், உன்மத்தமான ஆட்டமும், சாராய வாசனையும் அந்தச் சூழலை வெறியேற்றிக் கொண்டிருந்தது.
வெளியூர் ஆட்களுக்கான முன்னுரிமை அளித்து யாரோ எங்களை வரிசைக்கு முன்னால் இழுத்து தள்ள, நான் எதிர்பாராத நொடியில் மாயன் முன்னால் நிறுத்தப் பட்டிருந்தேன். எனக்கு பின்னால் பீட்டர். எங்களை பார்க்கும் நிலையில் மாயன் இல்லை. அவர் கண்கள் எங்கோ நிலைகுத்திக் கொண்டிருக்க, உடல் விடாமல் சுழன்று கொண்டிருந்தது. எல்லோரையும் போல மாயன் முன்னே நானும் குனிந்து நிற்க, என் நெற்றியிலும் விபூதியை அள்ளிப் பூசும் போது மாயன் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது எனக்குத் தெளிவாகக் கேட்டது.
யாரோ என்னை முன்னால் இழுத்துவிட முயலும்போது, விலகாமல் அங்கேயே நின்று பீட்டரின் நெற்றியில் விபூதி பூசும்போது மீண்டும் ஒருமுறைக் கேட்டேன். அதே வார்த்தைகள்தாம்..
“மனுஷன் பொய் சொல்லும்போது, தெய்வம் சொல்லக்கூடாதா?
அடேய்! தெய்வமே பொய் சொல்லியிருக்கு! மனுஷன் சொல்லக்கூடாதா?”
இதையே திரும்ப திரும்ப முணுமுணுத்துக் கொண்டிருந்தார். முதலில் எனக்குப் புரியவில்லை! என்னை இழுத்து விட்டவரை கைபிடித்து தனியே அழைத்து “என்ன சொல்றார்?” என்றேன்.
“அதுக்கு அர்த்தமெல்லாம் இல்லைங்க. பதினாறு வருஷமா மாயண்ணன் இதைச் சொல்லித்தான் துன்னூறு பூசும். வருஷத்துலே இன்னைக்கு ஒரு நாள் அவர் வெறும் கல்லுடைக்கிற மாயன் இல்லைங்க.
எங்களுக்கெல்லாம் அருள் வாக்கு சொல்ற சாமி. இன்னைக்கு அவர் கையாலே விபூதி வாங்கிக்கிறவங்க யாரும் இனிமே நடுத்தெருவிலே நிக்க மாட்டாங்கங்கிறது இங்கத்திய நம்பிக்கை” என்றார்.
விழா முடிவுறும் கட்டத்துக்கு வந்து விட்டதை உணரமுடிந்தது. எனக்கு மிக அருகில் சாமியாடும் ஒரு பெண்ணைச் சுற்றி வந்து பம்பை மேளத்தை அடித்துக் கொண்டிருந்தனர். இந்த முறை ஆடும் பெண்ணின் வேகத்திற்கேற்ப அவர்கள் இசைக்க வேண்டியிருந்தது.
நான் மட்டும் தனியே நிற்பதை உணர்ந்தவுடன், அங்கிருந்து விலகி பீட்டரைத் தேடி நடந்தேன். பம்பை இசை என்னை விட்டு அகலாமல் உடன் வந்தபடியே இருந்தது.
பீட்டர் அந்த மகிழ மரத்தின் மறுபுறத்தின் கீழிருக்கும் ஒர் கல்லின் மீதமர்ந்து தன் இருகைகளாலும் தலையைப் பிடித்தபடி அவர் மடியின் மீது கவிழ்த்திருந்தார். நெருங்கிச் சென்றபோது அவர் உடல் குலுங்கிக் கொண்டிருந்தை பார்க்க முடிந்தது. அருகில், அவர் கையில் வைத்திருந்த கோப்புகளில் இருந்த தீர்ப்பு நகல்கள் சிதறிக் கிடந்தன.
அப்போது யாரோ எங்கோ வாரி வீசிய விபூதியின் துகள்கள் என் கண்ணில் பட்டுத் தெறிக்க, பீட்டர் அழுவதைக் காணச் சகியாமல் கண்களைத் துடைக்க வேறுபுறம் திரும்பிக் கொண்டேன்.
திடீரென அங்கு வீசிய குளிர் காற்று, வியர்த்திருந்த என் நெற்றியை சுத்தமாகத் துடைத்து விட்டுச் சென்றது.
– பெப்ரவரி 2018