இறக்கப் பிறக்க வேண்டும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 27, 2024
பார்வையிட்டோர்: 646 
 
 

எனதருமை குஞ்சுப் பையா!

அப்பா அழைக்கிறேன்.

கேட்கிறதா?

இது குரலின் அழைப்பு அல்ல. உணர்வின் அழைப்பு. அதனால் ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி நீ இருந்தாலும் உனக்குக் கேட்கும்.

காஷ்மீரப் பனிமலைகளின் அடிவாரத்தில் ஸ்ரீநகரிலிருந்து லடாக் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கோனே மார்க் அருகில் ஒரு பள்ளிக்கூடம் ஒன்று அவசரமாக காலி செய்யப்பட்டு, தற்காலிக இராணுவ மருத்துவமனை ஆக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்துதான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் குஞ்சுப் பையா!

உட்கார்ந்து விளக்கமைத்து எழுதவில்லை. படுக்கையில் விழிமூடி எழுதுகிறேன். இது காகிதத்தில் எழுது கோலால் எழுதும் கடிதம் அல்ல மனதில் உணர்வால் எழுதும் கடிதம்.

சாரதாவும் நானும் சேர்ந்து உனக்கு பலவிதமான பெயர்களை யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் யுத்தம் வந்து எனக்கு அழைப்பு வந்து நான் விடுமுறையை ரத்து செய்து புறப்பட்டேன்.

அதனால் உன் அம்மாவின் கர்ப்பபைக்குள் சிரசாசனம் செய்து கொண்டிருக்கும் ஒன்பது மாத சிசுவான உன்னை குஞ்சுப் பையா என்றுதான் அழைக்க வேண்டியிருக்கிறது.

நீ பையன்தான் என்று ஸ்கேனிங்கில் உன் பிறப்புறுப்பு பார்த்துச் சொல்லிவிட்டார்கள். அன்றைய தினம் உன் அம்மா அடிக்கடி பார்க்கும் காலண்டர் குழந்தைக்கு நானே மீசை வரைந்தேன்.

குஞ்சுப் பையா இப்போது நாமிருவரும் விளிம்புகளில் இருக்கிறோம்.

நீ ஜனனத்தின் விளிம்பில்.

நான் மரணத்தின் விளிம்பில்.

உன் உதயத்திற்கு உத்தேசமாக தேதி குறித்து விட்டார்கள்.

என் அஸ்தமனத்திற்கு உத்தேசமாக நேரம் குறித்து விட்டார்கள்.

இன்னும் ஆறு மணிநேரம் மட்டுமே என் உடம்பை வாடகைக்கு எடுத்த உயிர் தங்கியிருக்குமாம்.

நான் பேச முடியாமல் தவிக்கிறேன். தொண்டையில் கட்டுப் போட்டிருக்கிறார்கள். எழுதிக் காட்டவும் முடியாது. முந்தா நாள் என் இடது காலை தொடைக்கு அருகில் துண்டித்து எடுத்து கட்டு போட்டார்கள் அல்லவா நேற்று என் வலது கையை மணிக் கட்டருகில் துண்டித்துவிட்டார்கள். ஆனாலும் என் விழிகள் சுழல்கின்றன. மூளை விழித்திருக்கிறது. காதுகள் கேட்கின்றன. எல்லாம் புரிகின்றது.

மருத்துவர்கள் கூடி என் அருகில் நின்று என்னைக் காட்டி இந்தியில் பேசுகிறார்கள். எனக்கு இந்தி தெரியும். ஏராளமாக ரத்தம் வெளியேறி விட்டதாம். ஒரு காலையும், கையில் ஒரு பதியையும் நீக்கியும் பிரயோஜனமில்லையாம். மற்றும் பல பாகங்களிலும் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதாம்.

ஆகவே, இன்னும் ஆறு மணி நேரம் குஞ்சுப் பையா எனக்கு அழுகை வருகிறது.

உன் பிஞ்சு முகத்தைப் பார்க்காமலேயே நான் மடியப் போகிறேன் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

தாத்தா இராணுவத்தில் கர்னலாக இருந்ததால் அப்பா இராணுவத்தில் மேஜராக இருந்தத்தால் பள்ளிப் பருவத்திலேயே உன் அப்பாவுக்கு இராணுவம் என்றால் அத்தனை பிரியமடா கண்ணா…

ஒரு தீபாவளிக்கு அடம்பிடித்து கரும்பச்சையில் இராணுவச் சீருடைப் போல் உடை தைத்துப் போட்டுக் கொண்டாராம் கண்ணா…

பொம்மைக் கடைக்குச் சென்றால் ரப்பர் குழந்தை, ஓடும் ரயில், துள்ளும் நாய், கரடி என்ற ஆர்வப்படாமல் பொம்மைத் துப்பாக்கி கேட்டு வாங்கி வீட்டுக்கு வருகிற விருந்தினரையெல்லாம் சுட்டு தள்ளி விடுவாராம் கண்ணா .

இராணுவத்தில் சேருவதற்காகவே தினமும் பள்ளி மைதானத்தில் ஓடி நீரோடாத ஆற்று மணலில் ஓடி பக்கத்துக் குன்றுகளில் பாதம் சிவக்க ஏறி உடலைத் தயார் செய்வாராம் கண்ணா …

ஆசைப்பட்டபடியே இராணுவத்தில் ஜவானாகச் சேர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு வீரனாக உருவான பிறகு, உறவினர்களின் வற்புறுத்தலால் திருமணத்திற்கு சம்மதித்து … என்னை பெண் பார்க்க வந்த போது, தனியாக பேச வேண்டுமென்று சொன்னார். அப்போது,

“சாரதா வெளிப்படையாப் பேசறேன். மத்தப் பொண்டாட்டிகளுக்கும், இராணுவ வீரனோட பொண்டாட்டிக்கும் வித்தியாசம் இருக்கு. உன் கழுத்துல நான் கட்டற தாலிக்கு எந்த நிமிஷமும் ஆபத்து வரும். அப்படி ஒரு நாள் வர்றப்போ, உன் கண்ல கவலைக் கண்ணீர் வரக்கூடாது. பெருமிதக் கண்ணீர்தான் வரணும். அந்த தைரியம் உன் மனசுல இருக்கா சாராதா?”

“இருக்கு. தேசத்துகாக உயிரையே விடச் சம்மதிச்சுதான் நீங்க இராணுவத்திலே சேர்ந்தீங்க. தேசத்துக்காக எப்ப வேணும்னாலும் பெருமையோட குங்குமத்தை விட நானும் தயாரா இருக்கேங்க”

“என் மனசுக்கேத்த மனைவி நீதான் சாரதா”

இப்படியெல்லாம் உரையாடினோம் கண்ணா

பின்னொரு நாளில் விடுமுறையில் வந்த போது என் மடி மீது தலை வைத்து படுத்திருந்த போதும் பாரதச் சிந்தனையில் …..

“சாரதா, ஏழு வருஷமாச்சு நான் இராணுவத்துல சேர்ந்து தினம் தினம் எல்லையில் ரோந்து போயிட்டிருக்கேன். என் பயிற்சிக்கும் என் துடிப்புக்கும் தீனி கிடைக்கலை இன்னும் சிகரெட் நிறைய ஊதினதால வயித்து வலி வந்து போன மாசம் டாக்டர்கிட்ட போனப்போ குடல்ல அல்சரன்னு சொன்னார். பகீர்னு ஆயிடுச்சு. உடனே சிகரெட்டை விட்டேன். பத்தியமா சாப்பிட்டேன். மூச்சுப் பயிற்சி செஞ்சேன்.

ஒழுங்கா மருந்து சாப்பிட்டேன்… ஏன் தெரியுமா? உயிர் மேல உள்ள ஆசையால இல்லை … என் மரணம் கொரவமானாதா இருக்கணும் சாரதா. அதுக்காக

ஒரு இராணுவ வீரன் நோய் வந்து சாகறது கேவலம்!

போர் முனையில் மார்ல குண்டு வாங்கி சாகணும். அதுதான் பெருமை. ஒரு பத்து எதிரிகளையாவது அழிச்சுட்டுத்தான் சாகணும். அதுதான் அவனுக்குத் தரப்பட்ட பயிற்சிக்கு மரியாதை. அதான் தேசத்துக்கு அவன் செய்ற் சரியான வணக்கம்.

என் மரணமும் அப்படித்தான் கம்பீரமா அமையணும் சாரதா! யுத்த களத்துல என் திறமை எல்லாம் காட்டணும். சாகசம் எல்லாம் செய்யணும். என் உடல்ல எத்தனைக் குண்டுகள் பாஞ்சாலும் உயிரை தேக்கி வெச்சி ஜெய்ஹிந்த் சொல்லிவிட்டு சாகணும். கடைசி மூச்சு இந்தியக் காற்றுலேர்ந்துதான் சுவாசிக்கணும். என் காது கேட்கிற கடைசி ஓசை பீரங்கிகளோட குண்டு வெடிப்புச் சத்தமா இருக்கணும்.

என்ற உன் அப்பா கம்பீரமாக முழங்கினார் கண்ணா …

இப்படியெல்லாம் என் சாரதா உன்னிடம் ஏராளம் சொல்வாள் குஞ்சுப் பையா!

எல்லாம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு அகலமாக உன் கண்களை விரித்து வைத்து நீ கேட்பாய்!

அப்புறம் அப்பா எப்படி செத்துப் போனாரும்மா?

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சாரதா தன் உதடுகளில் அழுகை பூசிக் கொள்ளப் போகிறாள் குஞ்சுப் பையா!

ஆறு மணி நேரத்தில் நான் இறக்கப் போகிறேன்.

இந்த நிமிஷம் என் கையையும் காலையும் பிய்த்துப் போட்டு விட்டார்கள். உடம்பு பூரா பேண்டேஜ் போட்டிருக்கிறார்கள்.

அதோ தூரத்தில் திராஸ் சிகரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்ற பெயரில் அனுப்பிய இராணுவத்தினர் மற்றும் கூலிப் படைக்கும் நமது இந்திய இராணுவத்திற்கும் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

யுத்த முனையில் குண்டடி பட்ட வீரர்களை குற்றுயிரோடு கொண்டு வந்து சேர்க்கிறார்கள். சிகிச்சையளிக்கிறார்கள்.

அவர்களைப் பார்க்கும் போது எனக்கு ஆதங்கம் பொங்குகிறது குஞ்சுப் பையா!

இதோ எனக்கு இடது புறக் கட்டிலில் தொடையில் பாய்ந்த குண்டை எடுத்து விட்டு படுக்க வைக்கப்பட்டிருக்கும் இராணுவ வீரன் மற்றொருவனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

தோலாலிங்கில் பாய்ண்ட் 4590 சிகரத்தில் இவன் தலைமையில் ஒன்பது பேர் முதல் பேட்சாகப் போய் அங்கிருந்த முகாமை அழிக்கையில் இவன் மட்டும் பதினெட்டு பேரைச் சுட்டு வீழ்த்தினானாம்.

எனக்கு கை தட்ட வேண்டும் போலிருக்கிறது. அவனைக் கட்டியணைத்து முத்தமிட வேண்டும் போலிருக்கிறது.

எனக்கு வலதுக் கட்டிலில் சிகிச்சை பெற்று வரும் வீரன் டைகர் குன்றில் பீரங்கி இயக்கி தான் புரிந்த சாதனைகளைச் சொல்லும் போது என் மனதால் அவனுக்கு மண்டியிடுகிறேன்.

இன்றைக்கு காலையில் மத்திய மந்திரி ஒருவர் இந்த மருத்துவ முகாமிற்கு வந்து சிகிச்சை பெறும் வீரர்களுக்கு ஆறுதல் சொன்னார்.

அவரை ஒவ்வொரு கட்டிலாக அழைத்து வந்து உயரதிகாரி இந்த வீரன் யார் என்ன செய்தான் எதனால் அடிப்பட்டான் என்று விரிவாக அறிமுகப்படுத்தியபோது என்னிடம் வராமல் போனால் நல்லது என்ற மனம் கெஞ்சியது தெரியுமா?

ஆனாலும் வந்தார்கள். அறிமுகம் செய்தார். விபரம் சொன்னார்.

“அடடா! பாவமே! என்று உச்சு கொட்டினார் அமைச்சர்.

அந்த இரக்கப் பார்வை என்னை சாட்டையால் அடித்தது.

நான் என்ன செய்வேன், குஞ்சுப் பையா!

எத்தனை துடிப்புடன் தோள் தட்டிப் புறப்பட்டு வந்தேன். ரயில் நிலையத்தில் கண்ணீர் சிந்தின சாரதாவை எத்தனைக் கோபமாகக் கடிந்து கொண்டேன்.

போரில் கணவனை இழந்து அந்த கம்பீர நினைவுகளை மட்டும் சுமந்த உன் பாட்டி, என் தாய் எத்தனை நெஞ்சுரத்துடன் என் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துச் சொன்னாள்.

உன் தந்தையின் மரணம் நினைவிருக்கிறதா மகனே? பங்களாதேஷ் யுத்தத்தில் நாற்பத்தி இரண்டு எதிரி நாட்டுச் சிப்பாய்களைக் கொன்று உளவு விமானத்தைச் சுட்டு வீர மரணம் அடைந்தார். அவரின் உடல் நம் வீட்டிற்கு வந்த தினம் ஊர் திருவிழா கூட்டம் கண்டது. உனக்கு நினைவிருக்கிறதா? எத்தனை பெரிய வரிசையில் மக்கள் வந்து மாலை போட்டு மண்டியிட்டார்கள். பெருமிதத்தில் என் நெஞ்சடைத்தது மகனே. போய் வா! அப்பாவுக்குக் குறையாமல் சாகசம் செய்து வா! சாதித்துவிட்டு வா! உயிரோடு வந்தாலும் சரி உடலாக வந்தாலும் சரி எனக்குப் பெருமை சேர்க்கும் விதமாக சாதித்துவிட்டு வா.

நரம்புகளில் உத்வேகம் ஊட்டிய வாழ்த்து அது குஞ்சுப் பையா!

அந்த உத்வேகத்தோடுதான் ஸ்ரீநகர் வந்தேன். பணியில் சேர்ந்தேன்.

திராஸ் நோக்கி இராணுவ டிரக்கில் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தேன். என்னோடு சேர்த்து பதினேழு பேர்!

சிகரம் நோக்கி மலைப் பயணம் அது! அபாயகரமான வளைவுகள் கொண்டது. அதிக அகலமில்லாத சாலை.

அதிகாலை நான்கு மணிக்கு எங்கள் டிரக் புறப்பட்டது. சாலையை கிட்டத்தட்ட மூடிவிட்ட பனிக் கம்பளம் மேல் தடதடத்து விரைந்தது டிரக்.

சாலையின் ஒரு பக்கம் மலை. மறுபக்கம் தடால் சரிவுகள். தூரத்தில் பனி உருகி ஓடும் சிற்றாருகள்.

உணர்ச்சியூட்டும் தேசப் பாடலை நாங்கள் அனைவரும் பாடிக் கொண்டிருந்த அந்த நிமிடம் திடீரென்று டிரக் டிரைவர் பனியில் சரியாக பார்வை புரியாமல் டிரக்கை தப்பான அனுமானத்தில் திருப்ப….

சரிவில் எங்கள் டிரக் பனிரெண்டு முறை உருண்டு விழுந்ததாக இங்கே முகாமில் சொல்லித்தான் தெரியும்.

குஞ்சுப் பையா என் வேதனை உனக்குப் புரிகிறதா?

எத்தனையோ சாதிக்கும் கனவுகளோடு சின்ன வயது முதல் காத்திருந்தேன். இராணுவத்தில் சேர்ந்தேன். எத்தனைப் பயிற்சிகள். வீரனாக உருவானேன். என் தாய்த்திருநாட்டிற்கு நான் செலுத்த வேண்டிய வீர மரியாதைக்குத் தயாரானபோது இப்படி ஒரு விபத்தில் சிக்கி… இதோ சில மணி நேரங்களில் மரணம்.

எனக்கு வெட்கமாக இருக்கிறது குஞ்சுப் பையா! இந்த மரணத்தை நான் வெறுக்கிறேன். இப்படி ஒரு மரணத்தையா நான் எதிர்ப்பார்த்தேன்? ஒரு எதிரியைக் கூட சுடாமல் ஒரு குண்டு கூட என் உடம்பைத் துளைக்காமல்…. ச்சே!

இந்த அசிங்கமான மரணத்தை என்னால் தவிர்க்க முடியாது. ஆனால் குஞ்சுப் பையா நான் கம்பீரமாக இறக்க மறுபடி பிறக்க வேண்டும்.

அந்த மரணமாவது என் விருப்பத்திற்கிணங்க வீர மரணமாக இருக்க வேண்டும்.

என் ஆத்மாவுக்கு உன் உடலில் இடம் கொடு குஞ்சுப் பையா! உன் மூலம்தான் என் விருப்பம் நிறைவேற வேண்டும். ஜெய் ஹிந்த்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *