(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காற்றில் ஏறி விண்ணைச் சாடும் அந்தக் காகம். இப் போது மண்ணில் கிடந்தது வரிசை வரிசையாய் இருந்த கடைகளில் ஓர் இரும்புக் கடைக்கு அருகே வெட்ட வெளியில் ஓர் ஓரமாய்ப் போடப்பட்டுள்ள இரும்புச் சுருள் கம்பிகளுக் கும், சரளைக்கல் குவியலுக்கும் இடையே பள்ளத்தாக்கு மாதிரியான இடத்தில் ‘தலை மறைவாய்த் தவித்தது.
தள்ளாடும் முதுமையில், சதிராடும் இளமையும், அல்லா டும் அலுவலகத்தில் ஆட்டம் போட்ட கல்லூரியும், நமக்கு விலகி நின்று வேடிக்கை காட்டுவது போல் அந்தக் காக் கைக்கும் ஓர் அனுபவம் ; பட்டறியும் அனுபவம். அதன் அலகிற்குள் ஆயிரக்கணக்கில் சிக்கக்கூடிய தட்டாரப் பூச்சி களில் ஒன்று, அதோ அந்தக் காக்கையின் தலைக்கு மேல் வட்டமிட்டுத் தரிகிறது. அதன் இறக்கை விரிப்பே இதற்கு ஒரு விஸ்வரூப மாயையாய்த் தோன்றுகிறது. அதன் கால் நகங்களுக்குள் சிக்கித் தவிக்கும் வெட்டுக் கிளிகளில் ஓர் அற்பக்கிளி , அந்தக் காகம் கொத்தும் தொலைவிலேயே துள்ளிக் குதிக்கிறது. ஆனாலும் அந்தக் காகம், மேலே பறக்கும் பூச்சியையும், கீழே திரியும் வெட்டுக்கிளியையும் இரையாகப் பார்க்காமல், ‘இறையாகவே’ பார்க்கிறது. வெள் ளைக் கொண்டையும் கருப்பு மேனியும் முரண்பாடாக, அந்த முரண்பாடே ஓர் அழகாகவும் தோன்ற, கால்களை அடி வயிற்றில் இடுக்கி வைத்துக்கொண்டு , ஆகாயத்தைத் துழாவி, இறக்கைகளை மேலும் கீழுமாய் அடித்தடித்து, அதன் களைப்பிலோ அல்லது உழைப்பின் அனுபவிப் பாகவோ அந்த இறக்கைகளை ஆடாமல் அசையாமல் விரிய வைத்து அந்தரத்திலேயே சுவாசனம்’ செய்யும் அந்தக் காகம் இப்போது பழைய நினைவுகளை நினைத்துத் தன் னையே பரிதாபமாகப் பார்ப்பது போல் முகத்தைச் சுருட்டி வைத்துக் கொண்டது. பத்து நிமிடத்திற்கு முன்புவரை உயிரோட்டத்திற்கு இறக்கை கட்டி விட்டது போல் வெட்ட வெளியில் ஒரு கருப்புக் கட்டியாய் சுற்றி வந்த இந்தப் பறவை ஜீவன் சாய்ந்து கிடந்தது. தென்னை மரத்தில் முறிந்தும் முறியாமலும் எப்போது வேண்டுமானாலும் அற்றுப் போக லாம் என்பது மாதிரி அந்த மரத்தில் தொங்கிக் கிடக்கும் பச்சை ஓலைபோல , அதன் ஒரு பக்கத்து இறக்கை சரிந்து கிடந்தது.
இவ்வளவுக்கும், அந்தக் காகம் எச்சரிக்கையோடு தான் செயல்பட்டது. அந்த இரும்புக் கம்பிச் சுருளுக்கு அப்பால் கிடந்த, ஒரு போண்டாத்துண்டைச் சர்வ ஜாக்கிரதையாகத் தான் வட்டமிட்டது. அதன் அருகே உள்ள ஒரு மணல் குவி யலில் பறக்கும் யத்தனத்துடன் தான் அதைப் பார்த்தது. பிறகு கர்ப்பிணிப் பெண்போல், பையப் பைய நடந்து, அந்த எச்சில் போண்டா எங்கேயும் போய்விடக் கூடாது என்று நினைப்பது போல் அதற்கு இரண்டு கால்களாலும் வேலி யிட்டுக் கொண்டே மீண்டும் ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்து விட்டே , அதன் வாயலகு கொத்தத் துணிந்தபோது, அதன் ஒற்றைக் கண் கடை முன்னால் நின்ற மனிதக் காலடிகளை அளவெடுத்துக் கொண்டுதான் இருந்தது. இதற்குள் கண்ணுக்கு அப்பால் தெரிந்த ஒரு சொறி நாய் வருவதற்குள், அந்தப் போண்டாவைக் கொத்திக் கொண்டு அப்படியே அங்குமிங்குமாய் இன்னொரு தடவை பார்த்துக்கொண்டு தெற்கு நோக்கி நாற்பத்தைந்து டிகிரி சாய்வில் பறக்கப் போனது. நாலடிச் சரிவு உயரத்தில் பறந்துவிட்டது; ஆனால், ஒரு ஆறடி பக்கத்துச் சுவரில் இருந்த பூனை அதே நாற்பத்தைந்து டிகிரி சாய்வில் பாய்ந்தது. இந்த இரண்டிற் கும் இடைவெளி இரண்டே இரண்டு அடி தான். விநாடிக்குள் விநாடியான நேரத்தில் அந்தக் காகம் அலறியடித்து மேற்குப் பக்கமாகப் பறக்கப்போனது. ஆனால் அப்போது தான் ஓர் ஆசாமி , நாலைந்து கம்புகளை உயரவாக்கில் தூக்கிக் கொண்டு பயமுறுத்துவது போல் போய்க் கொண்டிருந்தான். இதனால் அந்தக் காகம் பின் பக்கமாய் உள்வாங்கி, அப் படியே ஆகாயத்தில் எப்பத்தான் போனது. ஆனால் அதன் அச்ச வேகத்தில் இரும்புக் கம்பிகளுக்குள் சிக்கிக் கொண்டது. அது அங்குமிங்குமாகத் துடித்தபோது, கீழே குதித்த பூனை இப்போது அந்தக் காகம் எங்கேயும் போய்விடக்கூடாது என்ற நிதானத்தில் உருமக்கூட சோம்பல்பட்டு. நிதானமாய் முன் கால்களை நகர்த்தி நகர்த்திப் போட்டது. அது எச்சல் போண்டா எங்கேயும் போகாது என்பதுபோல் கால்களை வேலியாக்கிப் பார்த்ததே ஒரு பார்வை, அதே மாதிரியான பார்வை.
அந்தக் காகம், இந்த ஆபத்தைப் புரிந்து கொண்டது போல், உடம்பை அங்கும் இங்குமாய் சுழற்றியது. இரண்டு கால்களையும் இரும்புச் சுருள் வளையங்களுக்குள் அழுத்திப் பிடித்தபடியே உடம்பைக் கரகாட்டக்காரி போல் அங்குமிங்கு மாய் சுற்றி, அக்கம் பக்கத்து மனிதர்களைப் பரிதவிக்கப் பார்த்து அவர்களின் அசட்டையில் அசந்து, பிறகு உயிர் காக்கும் வேகத்தோடு என்ன செய்ததோ , ஏது செய்ததோ, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் கம்பியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது உடம்பை அங்குமிங்குமாய் சுற்றிச் சுற்றி இரும்புக் குவியலுக்சம் மண் குவியலுக்கும் இடையில் போய் விழுந்தது ஆனந்தமாய் பறக்கப் போனது. அப்போது தான், அதற்குத் தெரிந்தது, இந்தத் தப்பிப்பு ஒரு தற்காலிக மரண விடுதலை மட்டுமே. ஒரு மரணம் உடலிலிருந்து ஏற்படும் ஓர் உயிர் விடுப்பே அன்றி ஆன்ம விடுவிப்பு அல்ல என்பதை அந்தக் காகமும் புரிந்து கொண்டதுபோல் தலை யாட்டியது. இப்போது, தான காகம் இல்லை என்பதையும் கண்டு கொண்டது.
அந்தக் காகம், ஆகாயத்தையே அண்ணாந்து பார்த்தது. அங்கே நாலைந்து காகங்கள் வட்டமடித்தன. அவற் றைக் கரைந்து கரைந்து கூப்பிட வேண்டும் போன்ற ஓர் உணர்வு. பிறகு, ‘எங்கப்பன் குதிருக்குள் ஆல்லை’ என்பது போல், அவை அங்கே வந்து மாரடித்துக் கத்தி இது இருக் கும் இடத்தைக் காட்டிக் கொடுக்குமே அன்றி, இதை உய்விக்க முடியாது என்பதைப் புரிந்தது போல் சும்மாவே கிடந் தது. முன்பு ஒரு குடியிருப்பு அருகில் இன்னொரு காகம் இப்படிக் கிடந்தபோது, மறறொரு காகம் அதன் மேல் உட் கார்ந்து அதன் கொண்டையைக் கொத்தியதும், இது அந்தக் காகத்தை விரட்டியதும் நினைவுக்கு வந்தது. ஆகையால் ‘வாழ்ந்து கெட்டவாகள்’ தமது உறவுக்காராகளைப் பார்க்கக் கூசி ஒதுங்கிக் கொள்வதுபோல் கூனிக் குறுகிக் கிடந்த அந்தக் காகம் திடீரென்று கத்தியது.
அந்த சரளைக்கல் மேட்டில் அதே பூனை , சுட்ட சங்கு நிறம்; இடையிடையே வெள்ளையும் ஊதாவுமான புள்ளி கள். கழுத்தில் கறுப்பு வளையம் நானகு கால்களையும் ஒன்றாகக் குவித்துக்கொண்டு வாலை முன்பக்கமாய் சுருட்டி ஒரு யோகி மாதிரி உட்கார்ந்து கொண்டு அந்தக் காகத்தைக் கண்களால் தேடியது. நீண்ட நாட்களாக இந்தக் காகம் பார்த்திருக்கும் பூனை தான. பலதடவை அது மரத்தில் ஏறும்போது இந்த இந்தக் காகம், அதன மேல் தாழப் பறந்து, தனது நகக் கால்களால், அதன் தலையைப் பிராணடியிருக்கிறது. சத்தம் போட்டு மற்ற பறவைப் பிராணி களை உஷார்ப்படுத்தி யிருக்கிறது. அவ்வப்போது அதன் முதுகைத் தட்டி, ‘உன்னால் இப்படிப் பறக்க முடியுமா’ என்பதுபோல் கேட்டிருக்கிறது. ஆனால், இப்போதோ… காலம் கலிகாலம்.
அந்தப் பூனை, இந்தக் காகத்தை இப்போது பார்த்து விட்டது. அதன் அசைவில் இரண்டு கற்கள் உருண் டோடின. அது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தது. அதனருகே நெருங்கியது. கால்களால் இழுத்துப் போட்டு அந்தக் காகத்தை வாயால் கவ்வ வேண்டியது தான் பாக்கி. உடனடி யாக , இதனைப் புரிந்துகொண்ட அந்த முடக் காகம், அங்கு மிங்குமாய்ப் பார்த்துப் பார்த்து அரற்றியது பிறகு, தத்தித் தத்தி, துள்ளித் துள்ளி எப்படியோ குதி போட்டு நகர்ந்த போது, எங்கிருந்தோ வந்த சொறி நாய் , அந்தப் பூனை யைத் தடுத்தது. இரண்டு எதிர்மறைகள் ஒரு நேர்மறை யாக, அந்தக் காகம் அந்தக் கட்டடக் கடைப்படிகளில் லேசு லேசாய் குதித்து, ஒரு பிளாஸ்டிக் கடையின் முகப்பில் போய் நின்றது. அங்கேயும் இங்கேயுமாய் நடமாடிய மனிதர்களின் காலடிக்குள் சிக்காமல் தலையை வளைத்தும், உடம்பை நெளித்தும், அந்த பிளாஸ்டிக் கடையின் எல்லை காட்டும் தடித்த மடிப்புத் தளத்திற்கு நடந்தது. அந்தக் கடையில் பிளாஸ்டிக் குடத்தை ஒருத்தியிடம் காண்பித்துவிட்டு, அந்தக் காகத்தைப் பார்த்த ஒரு லுங்கிக்காரன், அதைக் காலால் இடறி, கையை ஓங்கினான். அதுவோ , இரண்டு கைகளாலும் மாரடித்தது. இதற்குள், இன்னொரு முண்டாசு பனியன் , “பாவம் பறக்க முடியாம அடி பட்டுட்டு போல….. வாயில்லா ஜீவன்…. நாமா எதுவும் செய்ய வேண்டாம்” என்றான். இதற்குள் அந்தப் பூனை அதற்கு எதிரே ஒரு சிமெண்ட் தூணின் அருகே இதையே குறி வைத்துப் பார்த்தது. உடனே இந்தக் காகம் உள்ளே ஓடிப்போய் அந்தக் கடையின் சாத்தி வைத்த கதவுக்கு மறைவில் போய் நின்று கொண்டது. அவ்வப்போது எட்டி எட்டிப் பார்த்து, அந்தப் பூனையை நோட்டமிட்டது. அதுவோ, அங்கேயே தவம் இருப்பது போல் இருந்தது.
ஆயிற்று மஞ்சள் சூரியன் மங்கிப் போய் மெல்லிருள் பரவியது. மாநகராட்சியின் எரியாத் தெருவிளக்குகள் இரு ளுக்கு இருள் சேர்ந்தன. கடைகளில் மங்கலாக எரிந்த விளக்குகள் மஞ்சள் வெயிலாய் அடித்தன. மனித நடமாட்டம் உச்சக்கட்டத்திற்குப் போய் ஓய்ந்தது. செவியையும், புவியை யும் கிழிப்பது போல் பாய்ந்த வாகனங்கள் ஆடி அடங்கின. இதற்குள் கடை முதலாளி வந்துவிட்டார். வேலைகாரர்களை திட்டியபடியே அவர்களை வெளியேறச் சொன்னார். கடிகா ரத்தைக் காட்டி, இன்னுமா கடய மூடலை’ என்பது மாதிரி கத்தினார்; வேலையாட்களில் ஒருவன் வாசற் கதவை இழுத்த போது இந்தக் காகம், வாசலில் வந்து நின்றது. கடை முதலாளி அதட்டினார்.
“இது எப்படிடா இங்க வந்தது?”
“பாவம் ரெக்கை உடைஞ்சிட்டு போலிருக்கு. பறக்க முடியாம தவிக்குது … அதனால் தான் கடைக்குள்ளேயே”.
ஒப்பன் கடைன்னா இப்படிச் சொல்வியா…. முட்டாள் முட்டாள் . காக்கா வீட்டுக்குள்ளேயோ, கடைக்குள்ளேயோ வந்தா , சனீஸ்வரன் வந்த மாதிரி… சனியனைத் தூக்கி வெளியே போடு….. இப்பத்தான் புரியுது, வழியில் ஒருநாளும் கேட்காத வரி ஆபீசரு இன்னைக்கு ஏன மாமூல் கேட் டான்னு …”
அந்த லுங்கிப்பையன், பூவைப் பிடிப்பதுபோல், அந்தக் காகத்தை மெல்லப் பிடித்து அதைத் தூக்கக் கடைக்கு அப்பால் இருந்த சமதளத்தில் விட்டுவிட்டு, கதவை பூட்டினான். வேலையாட்கள், முதலாளியோடு , போனபோது, அந்தக் காகம் கத்தியது. எதிரே இருக்கும் பூனையைப் பார்த்து விட்டு அவர்கள் காலடியில் போய் விழுந்தது. அது, கடை முதலாளியின் காலடி என்பதால், அந்தக் காகம் எதிர் வேகத்தில் தள்ளப்பட்டது. இதற்குள், அவர்கள் போய்விட்டார்கள். மனித நடமாட்டம் அற்றுப் போய்விட்டது.
ஆகக்கூடியது எதுவும் இல்லை என்பது போல், அந்தக் காகம் கண்ணை மூடிக்கொண்டு சுவரோடு சுவராகச் சாய்ந் தது. அப்போது உறுமல் சத்தம். அந்தப் பூனை அடிமேல் அடியெடுத்து அதை நோக்கி வந்தது. அதைப் பார்த்துவிட்ட காகம், அந்த சொறி நாயையே ஒரு கடவுளாக அனுமானித்து, அது வரவேண்டும் என்று பிரார்த்திப்பது போல் தலையைத் தூக்கியது. அதற்குள் அந்தப் பூனை பாய்வதுபோலிருந்தது. அதன் சீற்றச் சத்தம் அதன் காதில் காற்றில் மோதியது. இறக்கையின் பின்னலகில் ஏதோ ஒன்று உரசுவது போலிருந் தது. ஏற்கெனவே வலித்த புண்ணில் வேல் பாய்வது போலிருந்தது. அவ்வளவுதான்.
அந்தக் காகத்திற்கு எப்படி அந்த வேகம் வந்ததோ, தரைபட்ட இறக்கையைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு அரற்றியபடியே ஓடியது. ஒரு தூண் மறைவில் போய் நின்றது. சிறிது நேரம்…சிறிதே சிறிது …. அந்தப் பக்கமாகப் பூனையின் கண்கள் கலர் பல்ப் போல் மீண்டும் தோன்றவே அங்கிருந்து ஓடி , ஒரு செங்கல் அடுக்கிற்குள் நுழையப் போனது. அதற்குள் அந்தப் பூனை இன்னொரு பக்கமாய் வந்து தலையில் நகம் போடப் போவதுபோல் இருந்தது. உடனே, அந்த நகக்காலுக்குக் கீழே தலையை லாகவமாகக் குவித்து, பூனையின் வாலுக்குப் பின்னால் ஓடி ஒரு வைக் கோல் குவியலுக்குள் போய் தன்னை மறைத்துக்கொண்டு மூச்சுவிட்டது. அருகேயே அந்தக் குவியலின் ஒரு பகுதி அங்குமிங்குமாய் அசைவதைப் பார்த்த அந்தக் காகம், அங்கிருந்து பீறிட்டு , தத்தித் தத்திக் குதித்துக் குதித்து ஓடி யது. உயிர் வலி, உடம்பு வலியைத் துரத்த, அது ஓடி ஓடி ஒரு மின்சாரக் கம்பத்தின் அருகே களைப்புத் தாங்க முடி யாமல் லேசாய் தலையைச் சாய்த்தது. அதற்கு முன்னா லேயே அதை எதிர்பார்த்து அங்கு வந்தது போல் அந்தப் பூனை , இப்போது கோபாவேசமாகப் பார்த்தது. இதுதான் அதை வம்புச் சண்டைக்கு இழுத்தது போல், உறுமல் சத் தத்தை இரட்டிப்பாக்கி , புலி பதுங்குவதுபோல் பதுங்கி ஒரே பாய்ச்சலாய் அந்தக் காகத்திற்கு எங்கிருந்து அவ்வளவு அசுர பலம் வந்ததோ, எப்படித்தான் வந்ததோ, வாயுவேகத்தைவிட, ஒலி வேகத்தைவிட அதிகமான ஒரு வேகம். அதுதான் மனோவேகமோ? இறுதி வேகமோ? ஏதோ ஒரு வேகம். அந்த வேகம் அதை உயரத் தூக்குகிறது ஏழடி உயரத்தில் அதைத் தூக்கி நிறுத்துகிறது. ஒடிந்த இறக்கையை ஒட்ட வைக்கிறது. பிறகு இருபதடி இடைவெளிவரை அதைப் பறக்க வைக்கிறது. மனம் அடிக்கடி மாறக்கூடியது தானே? அந்தப் பூனையை இப்போது நினைத்துப் பார்க்கக்கூட அதற்குத் திராணி இல்லை. எங்கே நிற்கிறோம் என்று தெரி யாமலே, அந்தப் பூனை, எங்கே நிற்கிறது என்பதை, இப்போது போன பயம் வட்டியும் முதலுமாய் திரும்பிவர, சுற்று முற்றும் பார்க்கிறது. ஒரு சின்னக்குச்சி பட்டதைக்கூடப் பூனையின் நகமோ என்று மீண்டும் கத்தியபடி உற்று நோக்கி விட்டு, அது பூனை இல்லை என்பதால் எதிர்ப்புறத்தைப் பார்க்கிறது …. என்ன அது?
சற்று நேரத்திற்கு முன்பு வரை, அதற்கு எமபயம் கொடுத்த அந்தப் பூனை ஏதோ ஒரு எமச் சக்கரத்தில் சிக்கி, அந்த நடுச்சாலையில் சதைப் பிண்டமாய்க் கிடக்கிறது. காக்கைக்குப் புரிகிறது சந்தேகமில்லை. லேசாய் நின்ற ஒரு மோட்டார் பைக், கர்ஜித்தபடியே பயணத்தைத் தொடர்கிறது.
அந்தக் காகம், அலகைச் சாய்த்துப் பார்க்கிறது.
அந்தப் பூனைச் சதை மேல் ஏறிக் கொள்கிறது. பிறகு வெறி பிடித்தது போல், அதைக் கொத்துக் கொத்தென்று கொத்துகிறது. அந்தக் காகம், கொத்திய சதையைத் தின்ன வில்லை. ஆனாலும் கொத்திக் கொண்டே இருக்கிறது.
– பூநாகம் (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1993, கங்கை புத்தக நிலையம், சென்னை.