இருபது வருஷங்களும் மூன்று ஆசைகளும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 9, 2021
பார்வையிட்டோர்: 4,932 
 

(1973ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான்கு | ஐந்து

பகல் உறக்கங் கொண்டிருந்த என்னை அன்று மாலை சுமணதாசா வலிந்து அழைத்தமையினால் நான் கண்டிக்குச் சென்றேன். வழக்கத்திற்கு மாறாக அன்று சுமண தாசா முழுக்கைச் சேர்ட் அணிந்திருந்தான். அவ னது களைத்த முகத்தினிலே சிந்தனை அடைத்திருந்தது. பஸ்ஸிற்குள்ளிருந்த படியே வெளியே பார்த்துக்கொண்டிருந்த என்னை அவன் வெறித்துப் பார்த் துக் கொண்டிருப்பதனை உணர்ந்தபோதும் அதைப்பற்றி ஏனோ ஒன்றுமே கேட்க அந்நேரத்தில் நான் விரும்பவில்லை.

பஸ், கண்டி பஸ் நிலையத்திலே போய் நின்றதும் நாங்கள் இருவரும் இறங்கிக் கொண்டோம். ‘ எங்கே போகப் போகின்றோம்?’ என்ற மௌன மான என் முகக்கேள்வியை அவதானித்த அவன், பதிலாக “தலதா மாளிகாவிற்குப் போகலாம்” என்றான்.

கண்டி தலதா மாளிகைக்கு எதிரேயுள்ள கண்டி வாவியின் மதிற் புறத்தருகே நின்று கொண்டிருந்த வயோதிப மாதொருத்தி என்னோடு வந்த அவனைக் கண்டதும் புன்னகை பொலிந்த முகத்தோடு “புத்தா…” என்றபடி வந்தாள். வாஞ்சையெல்லாம் சுமந்துவந்த மகனே என்ற அந்த அழைப்பு எவரையும் சிலிர்க்கவைத்துவிடும்; அவ்வளவு கருணையும், வாத் சல்யமும் இழைந்த குரல்.

சுமணதாசா தனது தாயை முதல் தடவையாக எனக்குக் காண்பித்தான்.

தூய மென்மணங் கமழுகின்ற வெள்ளலரிப் பூக்கள் எட்டிப்பார்க் கின்ற சிறிய கூடையினை அவள் தன்னுடைய சுருக்கம் விழுந்த கையிலே வைத்திருந்தாள். எனக்கு அவளைப் பார்த்த முதற் பார்வையிலேயே கண்ணினுள்ளே காட்சியொன்று விரிந்தது. கடுகண்ணாவையின் இருண்ட குகைகளைத் தாண்டிக்கொண்டு புகையிரதம் ஓடிச் செல்கின்றபோது, அதன் இரு புறங்களிலும் கருங்கல் மலைச் சுவரிலே வழிந்து கசிந்து கருங் கல்லிற்குப் பசுமை பூசுகின்ற நீரினது குளுமைபோல – வறுமையிலே விளைந்த அவளின் முகத்திலும் தளிர்த்த பசுமையென புன்னகையும், வாஞ்சையும் பொலிந்து விளங்கின. இருபது வருஷங்களாய் மூன்று தேவை களை மகனுக்குப் பெற்றுக் கொடுப்பதற்காக சகல கஷ்டங்களையும். வேதனை களையும் வெளியே காட்டாது மனதினுள்ளே தாங்கிக்கொண்டு, எதிர்காலம் பற்றிய ஒரே நம்பிக்கையோடு நிற்கும் அந்த முதிய தாயைப் பார்க்க என் இதயம் மிகவும் மரியாதை கொண்டது. அவள் மிக மிகச் சுயநலமான சிந்தனையோடு வளர்ந்து, தன் மகனின் சிந்தனை களையே மருங்கடித்துத் திசைதிருப்பியவளாயினும், அவளை அப்படி வாழச் சிந்திக்க வைத்த – வாழும்படி தூண்டிய காரணங்களைத்தான் நான் மனதாரச் சபித்துக்கொண்டேன்.

நரைத்த தலை. இடுங்கிய கண்கள். கருகிய கோட்டைமானாப்புல் இதழ்கள் போல சுருங்கிய கூனுடல். அவளின் காய்ந்த கைகளைப் பார்த்தேன். கருங்கற்களை உடைத்துக் காய்த்துப்போயிருந்த கையினால், வெள்ளலரிப் பூக்களை உயர்த்தி மிதத்திக்கொண்டு ஒரு பார்சலை எடுத்துச் சுமண தாசாவின் கையிலே கொடுத்துவிட்டு என்னையும் பார்த்துக்கொண்டு சிங் களத்தில் ஏதோ சொன்னாள். மகனுக்காகத்தானே செய்துகொண்டு வந்த கொண்டைப் பணி காரமாம். என்னையும் கட்டாயந் தின்னும்படி சொல் கிறாள் என்று தாய் சொன்னவற்றை எனக்கு சுமண தாசா மொழிபெயர்த் துச் சொன்னான். பிறகு தாயும் மகனும் நிறையப் பேசிக்கொண்டார்கள். தாய் இடையிடையே கண்களிலே துளிர்க்கும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். எனக்குச் சிங்கள மொழி தெரியாவிடினும் தாயின் உணர்ச்சி களும், இருபது வருஷக் கனவுகள் பற்றிய கண்ணீரின் அர்த்தமும் தெளி வாகவே விளங்கிற்று. நான் அவர்களைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.

பிறகு என்னையும், தாயையும் அழைத்துக்கொண்டு சுமணதாசா தேனீர்க் கடைக்குப் போனான். தேனீர் அருந்தியபடியே சுமண தாசா என் னையும் தாயையும் அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தான். நான், அவனது தாய் “எங்கே வசிக்கின்றாள், வீடு எங்கே?” என்று கேட்டபோது அவன் நிராசை தோய்ந்த குரலில், கடையின் மேற்கு மூலைச் சுவரிலுள்ள புத்தர் சிலையின் முன் ஒளியுமிழும் மின்சார விளக்கைப் பார்த்துக்கொண்டே சொன்னான்:

“இருபது வருஷங்களாய்ச் சொந்தமாக நல்ல வீடொன்றினைக் கட்ட அம்மா முயற்சிகள் செய்தாள். திட்டங்கள் இட்டாள். முடியவே இல்லை. இனி நானே தான் தன்னுடைய ஆசையை நிவேற்றவேண்டுமாம் – உத்தியோகம் பெற்றுக்கொண்டு”

தாய் எங்களிருவரையும் பரபரக்க நோக்கினாள்.

அவள் பார்வையின் கேள்வியைப் புரிந்துகொண்ட மகன் சிங்களத் திலே சொன்னான். தாய் அவனை மிக நம்பிக்கையோடு பார்த்துப் புன்னகைத்தாள். அவன் என்னதான் சொல்லியிருப்பானோ?

தாய் எங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்ளும்போது சூழலை அவதானியாது மகனை உச்சிமோந்து முத்தமிட்டாள். சுமணதாசா தாயினுடைய கைகளைப் பாசந்ததும்பப் பற்றிக்கொண்டு, கண்களிலே அவற்றை ஒற்றிவிட்டு தனது சட்டைப் பைக்குள்ளிருந்து ஏழு ரூபாவை எடுத்து, அதிலே ஐந்து ரூபாவைத் தாயின் கைகளிலே கொடுத்தான். முதிய தாய் திகைத்ததைக் கண்டு அவன் ஏதோ சொல்ல, சுருக்கம் விழுந்த தாயின் முகத்திலே மெழுகுதிரியின் வெளிச்சம்போலப் புன்னகை துடித்து நெளிந் தது. தாயை, சுமணதாசா மாத்தளைப் பஸ்ஸிலே ஏற்றிவிட்டான். பஸ் புறப்பட ஆயத்தமாகும்போது அவள் கைகளை இறுகப்பற்றி அவற்றில் முத்தமிட்டுக் கலங்கித் தளும்பிய கண்களோடு விடைபெற்றுக் கொண் டான். அவனது நடவடிக்கைகள் எனக்கே அசாதாரணமாகப்பட்டன.

கண்டியிலுள்ள அனேக கடைகளில் சுதந்திர தினத்திற்காக அலங்கரிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பெரியதோர் அலங்கார வளைவைப் பார்த்துக்கொண்டு சுமணதாசா சொன்னான்:

“எனக்கும் சுதந்திர இலங்கைக்கும் நாளைக்கு ஒரே வயது – இருபது வயது!”

நான் மனதினுள் எரிந்தேன்.

பற்றாக்குறை, சுரண்டல், அந்நியர் ஆதிக்கம் ஆகியன ஒழியாத தேசம் சுதந்திரம் பெற்றிருக்கிறதாம்…. இருபது வருஷ சுதந்திரம்!

சுமணதாசாவும் நானும் அன்று ஒன்றாகவே சாப்பிட்டோம். அவன் என்னைப் பற்றியும், எங்களோடு பழகிய நண்பர்களைப் பற்றியும் நிறை யக் கதைத்தான். “நீங்கள் செய்த உதவிக்கெல்லாம் என்னால் பிரதியுப காரமாக எதுவும் செய்ய முடியாமற் போய்விட்டதே.” என அவன் ஏக்கத்தோடு கூறியபோது. நான் நீர் ஏன் இப்படிச் சொல்கிறீர் எனக் கேட்க அவன் ஏதோ கூறி மழுப்பிவிட்டான். திடீரென்று, கைவலிப்பவன் போல, முகஞ்சுருங்சி சுமண தாசா சேர்ட் கையை இழுத்துவிட்டான். அவனது கையைப் பார்த்தேன். நீண்ட பிளாஸ்டர் ஒட்டியிருந்தது.

“என்ன….என்ன இது?…”

என் பரபரப்பை அவன் மதிக்கவில்லை; எதுவித தயக்கமுமின்றிச் சொன்னான்:

“இன்றைக்கு நான் இரத்ததானம் செய்தேன். இரக்கத்தால் அல்ல பணத் தேவையினால் தான்! ஒரேயடியாக முப்பது ரூபாவுக்கே இரத்தங் கொடுக்க நினைத்தேன். முடியவில்லை. நான் எதிர்பார்ப்பவை ஒன்றும் நடப்பதில்லை…சரிசரி அதெல்லாம் போகட்டும், சிவா – நாளைக்கு லீவு அல்லவா? எப்படிப் பொழுதைக் கழிக்கத் திட்டம்?”

கதையைத் தடம்புரளவைக்கும் சுமண தாசாவின் பேச்சை நான் முற்றாகவே கவனியாது அவனைப் பார்த்தேன்.

“இதென்ன வேலை சுமணா? உடம்பு, அதுவும் உம்முடைய முக்கியமான படிப்புக் காலத்தில் இந்த உடம்பு இவைகளை யெல்லாம் தாங்குமா?”

சுமண தாசா களங்கமற்றுச் சிரித்தான்.

“என்னுடைய படிப்புக்காகவும், வயோதிபத் தாயின் ஆசைக்காகவும் நான் என்னுடைய சதையை விற்கக்கூடத் தயாராயிருக்கின்றேன்; ஆனால் வாங்குவதற்கு ஆளில்லையே சிவா… எவ்வளவு தான் நான் உங்களோடு பழகியிருந்தாலும் எல்லாவற்றிலுமே எனக்கு நம்பிக்கை விட்டுப் போய்விட்டது…”

நான் தர்மபாலாவை நினைத்துக்கொண்டு சொன்னேன்:

“எதிலும் உம்மைத் தனிலமப்படுத்திப்பார்த்து நினைக்கவேண்டாம். பல்லாயிரம் இளைஞர்கள் இதே நிலையிலிருக்கின்றார்கள். பலலட்சம் மக்கள் சுரண்டலின் கொடுமையிலுைம் வறுமையினாலும் அழுந்துண்டு துன பக் கேணியிலே கிடக்கின்றார்கள். நாங்கள் ஒன்றுபட்டுப் போராடி எங்கள் கைவிலங்குகளை அறுக்கவேண்டும். சுரண்டலற்ற, பேதம் எதுவுமற்ற சமுதாயத்திலே தான் நீரும் அம்மாவும் ஆசைப்படும் மூன்று தேவைகளும் எல்லோருக்கும் கிடைக்கும்”

நான் சொல்லி முடிக்கவில்லை; அவன் பட்டென்று கூறினான்:

“அந்தச் சந்தோஷமான நாளில் (அவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு நாக்கைக் கடித்தான்) எல்லாவற்றிற்கும் நான் பிந்திப்போய் விடுகிறேன்… ஐ ஆம் ரூ லேற்…”

எனக்கு அவன்மீது வெறுப்புப் பொத்துக்கொண்டு வந்தது. ஒன்றும் பேசாமலே நடந்து கொண்டிருந்தேன்.

மண்டப வாசலில் ஏறுகின்றபோது, தன்கையிலே இருந்த கொண்டைப் பலகாரங்கள் நிறைந்த பார்சலை என் கையிலே தந்து விட்டு, “சிவா என்னுடைய அறையில் எலி உலாவுகின்றது. நீர் இதனைக் கவனமாக வைத்திரும். காலையிலே சாப்பிடலாம்….உமது அறைக்கும் சில வேளை இரண்டு கால் எலிகள் வந்து உலாவும்…. மிகக் கவனம்…” என்று சொல்லிச் சிரித்தான்.

அன்றிரவு நன்றாய் உறங்கிவிட்டேன். படுக்கையில் கிடந்த என்னைத் தர்மபாலா உலுப்பி எழுப்பினான்.

சில கணங்களில் நான் கண் விழித்தேன். அரண்டு சோம்பலோடு எழுந்த என்னை உடனே உடுத்திக்கொண்டு வரும்படி தர்மபாலா சொன்னான்:

“என்னால் அவதி தாங்கமுடியவில்லை, தர்மே..அப்படி என்ன அவசரம்?” என்றேன்.

“சிவா, சுமணா தற்கொலை செய்து விட்டான்” தர்மபாலா அவ்வார்த்தைகளை வெகு நிதானத்தோடு சொன்னான். “ஆ …?” எனக்குச் சொற்களே வரவில்லை. அடிவயிற்றினுள் ஏதோ செய்தது. இதயம் துடித்துப் பதறியது.

நான் சுமண தாசாவை முதன் முதலிலே சந்தித்த மகாவலி கங்கைக் கரையிலே – வளைந்து முறிந்த பச்சை மூங்கிலருகேயுள்ள சின்னக் கருங்கல்லடியிலே, கைகளால் தரையை விறாண்டி, நகத்தில் வடிந்துகாய்ந்த இரத்தக் கட்டிகளுடன் உடலை வலித்தபடி, வேதனையே முகமாய், முகங்கோணி வாய் நெளிந்து கடைவாயில் பெருகிய நுரையோடு கோரமாகக் கிடந்தான் சுமணதாசா. எனக்கு அழவோ கதறவோ, தலை தலையாய் அடித்துக்கொள்ளவோ தோன்றவில்லை. நெட்டை மரமாகி நின்றேன். அவன் மேலே துளியளவுகூட அனுதாபந் தோன்றவில்லை. மனதின் ஒரு மூளையிலே அவனது வாழ்க்கையின் நோக்கை நினைத்துக் கசப்புணர்சிச் சுரந்தது. இலையான்கள் மொய்க்கும்! அவனது முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றபோதும் மனம் எங்கெல்லாமோ பறந்து பரந்தது. அவன் குடித்த விஷப் போத்தலின் அருகே சிறு பூச்சிகள் செத்துக் கிடந்தன. அவனுடைய பிணத்துக்கு எதிரே தம்மிகா சோகச் சித்திரமாய் நின்றாள். கண்ணீர் கசியும் கண்களால் அவனது உடலைப் பார்த்துக்கொண்டே யிருந்த அவளுக்கும் தன்னை மன்னிக்கும்படி உருக்கமாகக் கடிதம் எழுதி வைத்திருந்தான் சுமண தாசா. அந்த இரக்கமுள்ள கோழை ஆயிரமாயிரம் ஆசைகளற்று மூன்று ஆசைகளுக்காக இளமையின் சுகபோகங்களை யெல்லாம் துறந்து, அந்த ஆசைகளையும் எய்தமுடியாது – தோல்வி மனப் பான்மையோடு புயலின் முன்பு தனியே நின்று வளைந்து முறியும் மூங்கிலென வாழ்வின் போராட்டத்திற்குப் புறமுதுகிட்டு நஞ்சு குடித்து விட்டானே என்ற பாவனையில் தான் அவள் கண்களில் கண்ணீரும் முகத்தினில் சோகமும் பொங்கியிருக்கும்.

தர்மபாலா ஒரு வெள்ளைச் சீலை கொண்டு வந்து சுமணதாசாவின் பிணத்தினை மூடிவிட்டான்.

இன்னும் சில நிமிஷங்களில் பொலிசாரும், சுதந்திர தினக் கொண்டாட்டமொன்றிற்குப் போகவிருந்த மரண விசாரணை அதிகாரியும் அங்கு வந்து விடுவார்கள்.

என்னோடு சுமண தாசா நடந்து கொண்ட விதம், இறுதியாகத் தாயோடு கதைத்துவிட்டு வாஞ்சை ததும்ப விடைபெற்ற மாதிரி…யாவுமே என் மனதிலே நீர்ச் சுழிகளாகக் குமிழியிட்டு மறைந்தன.

விமோசனம் கிடைக்குமென்ற நம்பிக்கையைச் சுமந்த அந்த முதிய தாய், அவளின் இருபது வருஷங்கள் நிறைந்த கனவு கள், அந்தச் சாதா ரண மனிதனுக்குரிய மூன்று ஆசைகள், கருங்கல் உடைத்துக் களைத்துப் போன உழைக்கும் கைகள், இப்போது அனாதையாகிவிட்ட வயோதிப அன்னை, படிப்பிற்காக இரத்தத்தை விற்று ஏழ்மையிலேயே தோன்றி, பூத்து மலர்ச்சி காணாமல் தற்கொலை செய்து கொண்ட – இளமையின் நம் பிக்கையையெல்லாம் துறந்து பிணமாகிவிட்ட சுமண தாசா…

என்னையே பார்த்துக்கொண்டு நின்றான் தர்மபாலா.

தம்மிகா தனக்குச் சுமணதாசா கடைசியாக எழுதிய கடிதத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

விஷத்தால் சதை நொருங்கிய உடலினை மூடிய வெள்ளைச் சீலையில், தெறித்த கறுப்பு மைத்துளிகளாய் இலையான்கள் மொய்த்திருந்தன.

நான் மௌனமாய், மரமாய் நின்றேன்.

சுமண தாசாவோடு நேற்றுக் கதைத்த கதைகளெல்லாம் செவிப் பறையினுள் ஒலித்தன.

“எனக்கும் சுதந்திர இலங்கைக்கும் நாளை ஒரே வயது – இருபது வயது” என்னை மீறி என் நெஞ்சினுள் ஆவேசம் பொங்கிற்று.

“சுமணா, சுமணா, நீ ஒரு வெறுத்தற்குரிய கோழைபோல வாழ்வோடு போராட முடியாது செத்துப்போய் விட்டாயேடா…சக்திமிக்க இளமைக்கே முகத்தில் கரிபூசிவிட்டு, உன் கைகளுக்கு வேலை கொடுக்காது அவச்சாவு செத்துவிட்டாயேடா…”

– முற்றும் –

– ஒளி நமக்கு வேண்டும் (குறுநாவல்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1973, மலர் பதிப்பகம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *