இந்தக் கதையை எழுதலாமா விடலாமா எனப் பலமுறை யோசித்திருக்கிறேன். ஏனெனில் இக் கதையின் முடிவையொத்த வேறொரு கதையை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஓவ்வொருவரது வாழ்க்கையிலும் ஒரே மாதிரியான முடிவையொத்த பல கதைகள் நேர்ந்திருக்கலாம். சில கதாரிசியர்கள்கூட ஒரேவிதமான கற்பனைகளைக் கொண்ட வேறு வேறு கதைகளை எழுதியிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்… எனது கதையொன்றை சினிமாப்படமாக்கிய இயக்குனர் ஒருவர், பின்னர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், ‘நான் அவரது வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தது உண்மைதான்… ஆனால் இது அவரது கதையல்ல… எனது கற்பனையும் அவரது கற்பனையும் ஒன்றாக இருக்கலாம்..!’ என்று கூறியிருந்தார். அந்தக் கதை ஏற்கனவே இந்திய வார இதழொன்றில் பரிசுக்கதையாக பிரசுரமாகியிருந்தது. படப்பிடிப்புக்கு சாதகமான சில லொக்கேசன்களை பார்ப்பதற்காக அவர் அப்போது வந்து என்னைச் சந்தித்திருந்தார். அந்தப் படத்திற்கு அவருக்கு சிறந்த கதை, இன்ன பிற என சில விருதுகளும் கிடைத்திருந்தன. ஆனால் அந்த விடயங்களெல்லாம் இந்தக் கதைக்குள் வராது. ஒரே விதமான கற்பனை அல்லது ஒரேவிதமான முடிவைக் கொண்ட வேறு வேறு கதைகள் வருவதும்… அது இயல்பானதே என ஏதாவது சாக்குப்போக்கு சொல்வதும் ஒன்றும் புதிதல்ல என்பதைக் காட்டுவதற்காகத்தான் அதையெல்லாம் குறிப்பிடவேண்டியிருந்தது.
இந்தக் கதை இரண்டாயிரமாம் ஆண்டு ஆரம்பத்தில்தான் நிகழ்ந்தது. அப்போது எங்கள் கப்பல் ருமேனியாவில் கொன்ஸ்ரான்ரா துறைமுகத்துக்கு வந்திருந்தது.
சிமெந்து ஏற்றுவதற்கான பத்திர வகைகள் ரெடியாகி உள்நுளையும் அனுமதி கிடைக்கும்வரை வெளிக்கடலில் நங்கூரமிட்டிருந்தோம். அவ்வாறு தரித்து நின்ற ஏழெட்டு நாட்களும் வானம் மப்பும் மந்தாரமுமாக கருமை படர்ந்திருந்தது. அதனாற்தான் கருங்கடல் கருமை கொண்டதோ என எண்ணுமளவிற்கு அதன் பிரதிபலிப்பு கடல் நீரையும் கருமையாக்கியிருந்தது. காற்று ஏதோ குணம் கொண்டு மோசமாக வீசத்தொடங்கியிருந்தது. பெரும் புயலொன்று நெருங்கிக்கொண்டிருப்பதாக காலநிலை எதிர்வுகூறல்கள் வந்துகொண்டிருந்தன. ‘கருங்கடலின் காலநிலையும் பெண்களின் மனநிலையும் ஒரேமாதிரித்தான்… எப்போது எப்படி மாறுமென யாருக்கும் சொல்லமுடியாது..!’ என கப்டின் சினத்துடன் கூறிக்கொண்டிருந்தார்.
கப்பலின் என்ஜின் ஸ்ரார்ட் செய்யப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டது. அடுத்த சில மணித்தியாலங்களில் காற்று பெரும்புயலாக கோர இரைச்சலுடன் கடலலைகளைப் புரட்டியடித்துக்கொண்டு வந்தது. கப்டின் அவசரகால கட்டளைகளைப் பிறப்பித்தார். நங்கூரம் இழுத்தெடுக்கப்பட்டு கப்பல் இயங்குநிலைக்குக் கொண்டுவரப்பட்டது. காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல், நூற்றெழுபது மீட்டர் நீளமானதும் முப்பதாயிரம் தொன் கொள்ளளவுடையதுமான அந்தப் பாரிய கப்பல், கடல் அலைகளால் அலைக்கழிக்கப்பட்டது. நாங்களெல்லாம் வாழ்வா சாவா என்ற உயிர்ப்போராட்டத்திலிருந்தோம். ஏற்கனவே இரு கப்பல்கள் கடலில் மூழ்கிவிட்டதாகவும் அவற்றின் பணியாளர்கள் ஐம்பத்திரண்டு பேரும் மூழ்கி இறந்துவிட்டதாகவும்… நிலைமை மிக மோசமெனவும்… தங்களால் எந்த உதவியும் செய்யமுடியாதிருப்பதாகவும்… உங்கள் பாதுகாப்பை நீங்களே பார்த்துக்கொள்ளவேண்டுமெனவும், கொன்ஸ்ரான்ரா துறைமுக அதிகாரி வீ.எச்.எஃப் கருவிமூலம் புயலில் சிக்குண்டிருக்கும் கப்பல்களுக்கு அறிவித்துக்கொண்டிருந்தார்.
காற்றும் கடலும் இந்தமாதிரியெல்லாம் பிரமாண்டமான கப்பல்களையே கவிழ்த்துவிடுமா என்ற பயம் எங்களையும் பிடித்துக்கொண்டது. கப்பலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாமல் கப்டினும் என்ஜினியர்களும் திணறிக்கொண்டிருந்தோம். படபட எனத் தூக்கியடிக்கப்பட்டுக்கொண்டிருந்ததால் கப்பலின் நடுத்தளத்தில் குறுக்குப்பாட்டுக்கு சுமார் மூன்று மீட்டர் நீளத்திற்கு வெடிப்பு ஏற்பட்டிருப்பதாக கண்காணிப்பிலிருந்த பணியாளர்கள் தகவல் தந்தனர். தக்க தருணத்தில் அதைக் காணாமலிருந்திருந்தால் கப்பல் நடுவாக்கில் இரண்டாக உடைந்து மூழ்கியிருக்கும் எனக் கப்டின் கூறினார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மிக நீளமான சில ஒயில் தாங்கிக் கப்பல்களுக்கு இந்தக் கதி நேர்ந்திருக்கிறதாம். வெடிப்பு இன்னும் நீண்டுபோகாமல் தற்காலிக ஒட்டு வேலைகளைச் செய்திருந்தோம்.
அவரவர் பிரார்த்திக்கும் தெய்வங்களின் அருள்பாலிப்போ அல்லது வேறு ஏதாவது இயற்கை அருளோ… சில வேளைகளில் எதிர்பாராத அற்புதங்கள் நிகழ்ந்துவிடுவதுண்டு. அப்படித்தான் அதைச் சொல்லவேண்டியிருக்கிறது. கொந்தளித்து அலைமோதி பேரிரைச்சலுடன் பயமுறுத்திக்கொண்டிருந்த கடல் இப்படியும் சட்டென அடங்கிப்போகுமா என எண்ணுமளவுக்கு இரண்டாவது நாள் கடல் அமைதி நிலைக்கு வந்தது. கடைசியாக கப்பல் துறைமுகத்துக்குள் நுளையும் அனுமதி பெற்று பேர்த் இலக்கம் இருபத்துமூன்றில் எங்களது பெருமூச்சுக்களுடன் கட்டப்பட்டது. ஆனால் இது அந்த விடயங்களைப் பற்றிய கதையுமல்ல.
லியோனிடாஸ் கப்பலில் ஏற்பட்ட உடைவை திருத்தியமைக்கும் வேலைகளை ஒழுங்கமைத்து மேற்கொள்வதற்காக வந்திருந்தான். கிரீஸ் நாட்டிலுள்ள கம்பனியின் தலைமையகத்தில் கப்பல்களின் மேற்பார்வை என்ஜினியராகக் கடைமையாற்றுபவன் அவன்.
கப்பலின் திருத்த வேலைகளுக்காக இன்னும் ஓரிரு கிழமைகளாவது தேவைப்பட்டது. கடலில் அலைக்கழிந்து மனக் கலக்கத்திலும் பதட்டத்திலுமிருந்த பணியாளர்களுக்கு ஓய்வும் ஓரளவு பணமும் கொடுக்கப்பட்டது.
பொதுவாக கப்பற் பணியாளர்களுக்கு வெளியே சென்றுவர துறைமுக அதிகாரியினால் பாஸ் வழங்கப்படும் நடைமுறை உள்ளது. வெளி ஆட்கள் கப்பலுக்குள் வரவும்முடியாது. இங்கே என்னவென்றால் எந்தத் தடையுமின்றி எல்லாம் திறந்துவிட்டதுபோலிருந்தது. கப்பலை ஜெட்டியில் கட்டும்போதே விற்பனை முகவர்கள் வந்து சேர்ந்துவிட்டார்கள். ருத் பேஸ்ட், ஸ்வெட்டர் என இன்ன பல பொருட்கள் மட்டுமின்றி அழகிய இளம் பெண்களையும் கொண்டுவந்திருந்தார்கள். அந்தப் பெண்களும் கப்பலின் பொது அறையிலிருந்து ரீவீ பார்ப்பதுபோல பாசாங்கு செய்து அழகு காட்டிக்கொண்டிருந்தார்கள். இரண்டாம் அலுவலர்நிலையிலுள்ள உக்ரேனியன் ஒருவன் ஒருத்தியை முதுகில் ‘உப்புக்காவு’ காவிக்கொண்டு தனது கபினுக்குப் போனான். இலங்கையைச் சேர்ந்த பல பணியாளர்களும் கப்பலிலிருந்தார்கள். எனக்கு ‘எங்கட பெடியள்’ ஏதாவது வில்லங்கத்துக்கள் மாட்டிவிடுவார்களோ என்று தயக்கமாயிருந்தது. கப்டினிடம் அந்தக் கூத்துக்களைப்பற்றி முறையிட்டேன். கப்டினுக்கு அந்தப் பெண்களை கப்பலிலிருந்து அப்புறப்படுத்தமுடியும். ஆனால் அவர் அதைப் பெரிது படுத்தாது ‘இதெல்லாம் கப்பல் வாழ்க்கையில் சகஜமப்பா..!’ என்பதுபோலப் பதிலளித்தார். கப்டினும் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர். அவர்களது கலாசாரத்துக்கு அது ஒத்துவருவதாயிருக்கலாம் என நானும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டேன்.
மாலையானதும் லியோனிடாசும் கப்டினும் எனது அறைக்கு வந்தார்கள்.
“வெளியே போகலாம் வருகிறாயா..?’
கிழமைக்கணக்காக கப்பலிலும் கடலிலும் உலைந்துவிட்டு வந்ததால் வெளியே சற்று காலார நடந்தவரலாம் என்றுதான் எனக்கும் தோன்றியது. ஆனால் வெளியே பனிமழை தூவிக்கொண்டிருந்தது. இந்த உறை குளிருக்கூடாக நடக்கமுடியுமா என்று மனது பின்வாங்கியது.
“எங்கே போவதாக உத்தேசம்..?”
“நைட் கிளப்… இங்கே நைட் கிளப்களில் நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கும். நல்லவகை வைன்களும் குடிக்கலாம்…”
லியோனிடாஸ் இப்படிக் கூறியதும் நான் சற்றுத் தயங்கினேன். நைட் கிளப் அல்லது இரவுக் கேளிக்கையகம் என நான் அதுவரை சினிமாக் காட்சிகளிலும் ஏதாவது தகவல்கள் மூலமாகவும்தான் அறிந்திருந்தேன். அதெல்லாம் கரிசனைப்படக்கூடிய சமாச்சாரமாக எனக்குத் தெரிந்ததில்லை. நான் எதுவும் பேசாமலிருக்க, லியோனிடாஸ் வற்புறுத்தினான்.
“இங்கேயே கபினுக்குள் அடைபட்டுக் கிடக்காமல் வா போகலாம்..!”
‘சரி…’ எனப் புறப்பட்டுவிட்டோம்.
காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது லியோனிடாஸ் இங்குள்ள நைட் கிளப்களின் தாற்பரியங்களையும் வைன் வகைகளின் மகத்துவங்களையும் இன்னும் விபரித்துக்கொண்டு வந்தான். என்னை வற்புறுத்தி அழைத்தபோது ‘நான் ஒருபோதும் நைட் கிளப்களுக்குப் போனதில்லை…’ என அப்பாவித்தனமாகக் கூறியிருந்தேன். அதனால் என்னை அதற்குரிய விதமாகப் பதப்படுத்துகிறானோ என்று தோன்றியது.
இன்னும் இருளாத அந்த இரவுப்பொழுதில் குறிப்பிட்ட ஓரிடத்தில் இறங்கினோம்.
வர்ண லைட்களினால் ஏற்கனவே வரவழைத்துக்கொண்டிருந்த கூடத்துக்கள் நுளைந்தோம். பூட்டியிருந்த கதவைத் தள்ளியதும் கணகணப்பு உடலைத் தழுவியது. அது இதமாகவுமிருந்தது. உள்ளே அருகருகே அடுக்கப்பட்ட சாப்பாட்டு மேசைகளும் கதிரைகளும், இன்னொரு பக்கமாக குடிவகைப் போத்தல்கள் அடுக்கப்பட்டிருந்த பாருமாக ஒரு உயர்ரக ரெஸ்டோரன்ட் போலத் தோற்றமளித்தது. அவ்வளவு ஆட்கள் இல்லை. ஒரு பக்கத்தில் இசைக்கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. இன்னும் இசைப்பவர்கள் வந்திருக்கவில்லை.
சுவர்களில், பழைய காலத்திலிருந்த வித விதமான கப்பல்களின் ஓவியங்கள் மாட்டப்பட்டிருந்தன. நேர்த்தியான ஓர் ஓவியனின் கை வண்ணத்தில் அவை நிஜமான காட்சிகள்போலத் தோற்றமளித்தன. பாரிய பாய்மரக் கப்பலொன்று கொந்தளிக்கும் கடலலைகளில் தத்தளிக்கும் காட்சி ஒருமுறை என் நெஞ்சைக் கலக்கியது. நவீன இயந்திர வசதிகளற்ற அந்தக் காலங்களில் அவர்களெல்லாம் என்ன பாடு பட்டிருப்பார்களோ… இப்படி எத்தனை கப்பல்களைக் கடல் விழுங்கியிருக்குமோ..!
ஓடர் கொடுத்ததம் வைன் போத்தலும் கிளாஸ்களும் மேசைக்கு வந்தன. படிப்படியாக மற்றய மேசைகளுக்கும் ஆட்கள் வந்துகொண்டிருந்தனர். நான்கைந்து பேர் கொண்ட தனி ஆண்கள் கூட்டமாகவும் தனி பெண்களாகவும் குடும்பத்தினராகவும் வந்து வேறு வேறு மேசைகளின் முன் அமர்ந்தனர். வெளியே இருள் பரவத் தொடங்கியதும் உள்ளே மின்குமிழ்கள் மங்கலாக ஒளிர்ந்தன. இசை மென்மையாக ஒலிக்கத் தொடங்கியது. கண்ணாடி ஜன்னல்களின் திரைத்துணிகள் இழுத்து மூடப்பட்டன.
சில மேசைகளில் மட்டும் மினுக்கிடும் மெழுகுதிரிகள் வைக்கப்பட்டன. எங்களுக்கு முன்னாலும் ஒரு மினுக்கிடும் மெழுகுதிரி..!
எனக்குப் புரியவில்லை. “இது ஏன்..?” என லியோனிடாசிடம் கேட்டேன்.
“கப்பற் பணியாளர்கள் அமர்ந்திருக்கும் மேசைகளுக்கு ஒரு அடையாளமாக மெழுகுதிரிகளை வைக்கிறார்கள். அதோ பார்த்தாயா… அந்தப் பக்கம் அழகான இளம் பெண்கள் வந்திருக்கிறார்கள்… அவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக..!” லியோனிடாஸ் ஒரு கள்ளச் சிரிப்புடன் கூறினான். அந்தச் சிரிப்பைப் பார்த்ததும் எனக்கு அவன் சும்மா கதை விடுகிறானோ என்றும் தோன்றியது. எனினும் எனது சந்தேகம் மேலும் அவனைக் குடைந்தது. “இவர்கள் அந்தமாதிரித் தொழில் செய்யும் பெண்களா..?”
“அப்படியென்றும் சொல்லமுடியாது. அப்படியும் இருக்கலாம். தங்கள் படிப்புச் செலவுகளைச் சரிக்கட்டுவதற்காக யூனியிற் படிக்கும் பெண்களும் இங்கு வருகிறார்கள் என அறிந்திருக்கிறேன். அப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை இருக்கலாம்..!”
“நாங்கள் கப்பலிலிருந்து வந்திருக்கிறோம் என்பது இவர்களுக்கு எப்படித் தெரியும்..?”
“இது ஒரு பெரிய துறைமுக நகரம். தினமும் பல கப்பல்கள் பொருட்களை இறக்கி ஏற்றுவதற்காகவும் திருத்தவேலைகளுக்காகவும் வருகின்றன. அந்த மாலுமிகளுக்காகவென்றே இங்கு இதுபோன்ற பல கிளப்கள் உள்ளன. அவர்களுக்காக இங்கு குடிவகைகள் மட்டுமல்ல… அழகிய பெண்களும் காத்திருப்பார்கள். வருபவர்களின் சாயலிலிருந்தே யார் எவர் எனக் கண்டுகொள்ளும் அனுபவஸ்த்தர்கள் இவர்கள்..!”
லியோனிடாஸ் வேறுவகை வைன் போத்தலுக்கு ஓடர் கொடுத்தான்.
ஒருவர் கை நிறையப் பூ நெட்டுக்களுடன் உள்ளே வந்தார். இலைகளுடன் கூடிய நெட்டுக்களில் அன்றலர்ந்த ரோசா மலர்கள். அவற்றை விற்பனை செய்வதற்காக ஒவ்வொரு மேசைகளாகச் சுற்றி வந்தார். பூக்களென்றால் யாருக்குத்தான் விருப்பமிருக்காது? யாராவது வாங்குவார்களாயிருக்கும் என எண்ணிக்கொண்டிருந்தேன்.
“பூவுக்குரிய பணத்தைச் செலுத்திவிட்டு அதை இன்னாரிடம் கொடுக்கும்படி கூறினால்… அவர் அதை அவர்களிடம் கொடுப்பார். தங்களது விருப்பத்தைத் தெரிவிப்பதற்கு அது ஒரு சமிக்ஞை..!” என எனக்கு விளக்கமளித்துக்கொண்டே லியோனிடாஸ் பூக்காரனை கைச்சைகையில் அழைத்தான்.
எங்களுக்கு அந்தப் பக்கத்தில் ஒரு குடும்பத்தினர் தங்கள் பெண்ணுடன் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தனர். லியோனிடாஸ் ஏற்கனவே அந்தப் பெண்ணிடம் சில கண் சமிக்ஞைகளை விடுத்துக்கொண்டிருந்தான் என்பதை நான் கவனித்துக்கொண்டுதானிருந்தேன். இப்போது லியோனிடாஸ் அந்தப் பெண்ணிடம் கொடுக்குமாறு பூவுக்கு பணத்தைச் செலுத்தினான். குறை சொல்லக்கூடாது… அவள் பார்வைக்கு மிகவும் அம்ஸமாகத்தான் தோன்றினாள். இங்குள்ள கிளப்களில் நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பதாக இவற்றைத்தான் குறிப்பிட்டானோ என்னவோ..! பூக்காரன் அவளிடம் சென்று பூவைக் கொடுத்துவிட்டு எங்கள் பக்கமாகக் கை காட்டி லியோனிடாசின் தகவலைக் கூறினான்.
எனக்கு உதறியது. அவளோ தன் பெற்றோருடன் வந்திருக்கிறாள். நைட் கிளப்களில் பாதுகாப்பிற்காக காவலர்கள் இருப்பார்கள் என்றும் யாராவது தொந்தரவாக நடந்துகொண்டால் உதைத்து வெளியே தள்ளிவிடுவார்களென்றும் காரில் வரும்போது லியோனிடாஸ் கூறியிருந்தான். இது ஏதோ வில்லங்கத்தில்தான் போய் முடியப்போகிறது என எனக்குத் தொடை நடுங்கத் தொடங்கியது.
அந்த அம்ஸத்வதனி எங்கள் பக்கம் திரும்பி ஒரு புன்னகையை உதிர்த்தாள். இவன் அதை ஏற்றுக்கொண்டு பரவசமடைந்தான். பெற்றோர்கள் இந்தப் பக்கம் திரும்பி முகஸ்த்துதித்தனர். இவன் அவர்களுக்காக ஓர் உயர்வகை வைன் போத்தல் ஓடர் கொடுத்தான். சிறிது நேரத்தில் எழுந்து அவர்கள் பக்கத்தில் சென்று பேசினான். பார்த்துக்கொண்டிருக்கும்போதே குனிந்து அவளது கையைப் பிடித்து முத்தம் கொடுத்தான். லியோனிடாசின் உயரத்துக்கு கதிரையில் அமர்ந்திருப்பவருடன் மிகக் குனிந்துதான் அந்தக் காரியத்தைச் செய்யவேண்டியிருக்கும். கம்பீரமான தோற்றம் கொண்டவன். அவன் நடையே ஒருவித கவரும் ஸ்டைலில் இருக்கும். அவனிடத்தில் அவள் இசைந்திருக்கக்கூடியது இயல்பானதுதான். இனி இது எந்த அளவுக்குத் தொடரப்போகிறது… எங்கே போய் முடியப்போகிறது என்றெல்லாம் எனக்குள் எண்ணிக்கொண்டிருந்தேன்.
எங்கள் கம்பனியைச் சேர்ந்தவன் என்ற வகையில் ஏற்கனவே வேறு சந்தர்ப்பங்களில் அவனைச் சந்தித்திருக்கிறேன். ஒருமுறை இத்தாலியிலுள்ள வேலைத்தலத்துக்குத் தனது மனைவியுடன் வந்திருந்தான். அவனது தோற்றத்துடன் பக்கத்தில் பார்த்தால் அவனது மனைவி ஒரு குருவிக்குஞ்சைப் போலிருப்பாள். அந்த அழகான இளம் மனைவியை நினைத்து எனக்குக் கவலையாயிருந்தது. இப்படியெல்லாம் நினைத்து நான் குழம்பிக்கொண்டிருக்க, “இரவு இன்னும் இளமையாயிருக்கிறது… நாங்கள் இன்னொரு கிளப்பிற்குப் போவோம்… அங்கு டான்ஸ் எல்லாம் அமர்க்களமாக இருக்கும்..!” என கப்டினுடன் பேசிக்கொண்டு லியோனிடாஸ் கிளம்ப நானும் எழுந்தேன். அப்போது இரவு பத்துப் பதினொரு மணியளவிலாகியிருந்தது.
அம்ஸத்வதனியைப் பார்த்து ஒரு கையசைவு விடைபெறுதலுடன் வெளியேறினான். நான் நன்றாகப் பார்த்துக்கொண்டுதான் வந்தேன்… இவ்வளவுதானா? அவளது பார்வை அவனை நோக்கியபடியே இருந்தது. எனக்கு அவளுக்காகக் கவலையாயுமிருந்தது.
அடுத்த நடன விடுதிக்குள் நுளைந்தபோது ஆட்டமும் பாட்டும் உச்சஸ்தாயியில் போய்க்கொண்டிருந்தது. ஆட்டமேடைக்கு மட்டும் பளிச்சென வெளிச்சம் அடிக்கப்பட்டிருந்தது. மற்றப்படி மிக மங்கல் விளக்குகள்தான் யாரையும் யாரும் கண்டுகொள்ளாதபடி ஒளிர்ந்துகொண்டிருந்தன. லியோனிடாஸ் உயர்விலை நுளைவுச் சீட்டு பெற்றிருப்பான்போலும்… ஆட்டமேடைக்கு அண்மையாக விசேடமான இருக்கைகளில் அமர்த்தப்பட்டோம். மேசைக்கு வந்த வைன் வகைகள் கிளாஸ்களில் பகிரப்பட்டன.
பெருவட்டமான உயரமற்ற மேடை. இளசுகள் அவரவராகச் சோடி சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். பிரதான ஆடலழகி மார்பிலும் இடையிலும் மட்டுமான சிக்கன அங்கியுடன் ஆடிக்கொண்டிருந்தாள். மேனியெங்கும் ஏதாவது வகை கிறீம் பூசியிருப்பாள்போலும்… ஆடலசைவுகளின்போது பளிச் பளிச் என உடல் மினுக்கிட்டது.
லியோனிடாஸ் உற்சாகமான மனத்தெம்பிலிருந்தான். ‘ஆடலாம் வா..!’ என அழைத்தான். நான் சமாளிப்பாக மறுத்தேன். எனினும் ஆடலிசையின் அதிர்வில் எனது கால்கள் துருதுருத்துக்கொண்டிருந்தன. கப்டினுக்கு ஏற்கனவே எனது ஆட்டத்தைப்பற்றித் தெரியும். ‘வா… ஆடலாம் வா..!’ என எனது கையைப் பிடித்துக்கொண்டு எழுந்தார். அவர் அப்போது கொஞ்சம் தளர்ந்துபோனவராயிருந்தார். அதன் காரணமாகவும் அவர் என் கையைப் பிடிப்பது தவிர்க்கமுடியாததாயிருந்தது.
சற்று நேர ஆட்டத்தின் பின் இசைக்குழுவினரின் ஆசுவாச இடைவேளையில் மீண்டு வந்து அமர்ந்தோம்.
இசையும் ஆட்டமும் திரும்பவும் தொடங்கி மும்முரமடைந்தது.
ஆடலழகி ஆடலுடன் எங்கள் முன் வந்து ஆடியபடி… பின்னர் மேசையின் மேலும் ஏறிநின்று ஆடினாள். நிமிர்ந்து பார்த்தால்… தண்ணீரிலிருந்து வெளியே தூக்கிப் போடப்பட்ட மீனொன்றின் துடிப்பைப்போல அவளது கால்களும் இடையும் துடிநடனம் செய்துகொண்டிருந்தன. கப்டின் எழுந்து தனது பேர்ஸிலிருந்து நூறு டொலர் நோட் ஒன்றை இழுத்து அவளது இடையங்கியில் செருகிவட்டார். கப்டின் ஐம்பத்தைந்து வயதானவரானாலும் இன்னும் மணமாகாதவர். அதனால் உழைக்கும் பணத்தை இப்படிக் கேளிக்கைகளில் வீணடிக்கிறாராக்கும் என நினைத்துக்கொண்டேன்.
இசைக்குழுவினர் மாறுவதற்கான வேளையில் ஆடலழகி மேடையிலிருந்து போக இன்னொரு ஆடலழகி அந்த இடத்துக்கு வந்தாள். இரவு கடந்துகொண்டிருந்தாலும் ஆட்டம் ஒரு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை.
சிறிது நேரத்தில் முதல் ஆடலழகி அதே அரையாடைக் கோலத்தில் எங்களுக்கு அண்மையாக வந்தாள். எனது கையைப் பிடித்து அழைத்தாள். அவளது ஆட்டநேரம் முடிந்துவிட்டது என எண்ணிக்கொண்டிருக்க… திரும்ப வந்து என்னை அழைக்கிறாளே… அவளுடன் சரிக்குச் சரி நானும் ஆடுவதா? அந்த அளவுக்கு ஆட்டத்திலுள்ள நெளிவு சுளிவுகளெல்லாம் எனக்கு வராதே..! அப்படி ஆடப்போக எனது இடுப்பு எலும்போ முதுகெலும்போ சுளுக்கி இடம் மாறிவிடவும்கூடும்! அவளோ என்னை விடுகிறமாதிரித் தெரியவில்லை. கப்டினும் லியோனிடாசும் உற்சாக நிலையிலிருந்தனர். “போ… போ..! போய் ஆடு..!” என ஊக்கமளித்தனர். அவர்கள் முன்னிலையில் கூச்ச சுபாவமுள்ளனாகத் தோன்றாமலிருப்பதற்காக எழுந்து அவளுடன் நடந்தேன்.
அவள் எனது கையைப் பிடித்தவாறு ஆட்டமேடைக்குப் போகாமல் வேறு பக்கமாகப் போனாள். சுவர் மறைவுக்கு மறு பக்கமாக ஒடுக்கமான வழியில் நின்றாள். அப்படியே சுவரில் சாயும் நிலைக்கு என்னைத் திருப்பி… தனது கைகளை எனக்கு இரு பக்கமாகவும் சுவரில் வைத்தாள். எனக்கு நேரெதிராக முகம் காட்டிக்கொண்டு நின்றாள். எப்படி இப்படி அவள் இழுத்த பக்கத்துக்கு நான் நடந்து வந்தேன்? இது எப்படிச் சாத்தியமாகியது?
“என்னுடன் வருகிறாயா..? எனது வீட்டுக்குப் போகலாம்..!”
“நான் கப்பலிலிருந்து வந்திருக்கிறேன்… திரும்ப கப்பலுக்குப் போகவேண்டும்..!”
“காலையில் எனது காரில் கொண்டுவந்து உங்கள் கப்பலில் விட்டுவிடுவேன்..!”
அவளை அப்படியே உதைத்துத் தள்ளிவிட்டு ஓடிப்போகும் மனத்தைரியமும் எனக்கில்லை. அவளை வன்முறை செய்யப்போனதாக பிளேட்டை மாற்றிவிட்டால்… இங்குள்ள பாதுகாவலர்கள் என்னை உதைத்துத் தள்ளிவிடக்கூடும். அதைத் தாங்குகிற சக்தி என் உடலுக்கில்லை.
“இல்லை… எனக்கு இதிலெல்லாம் சம்மதமில்லை… எயிட்ஸ் நோய் தொற்றிவிடக்கூடாது என்ற பயம் எனக்கிருக்கிறது… எங்கு போனாலும் நான் அந்த விடயத்தில் மிக அவதானமாயிருப்பவன்.”
அவள் தனது மார்பங்கிக்குள் கையை விட்டு ஒரு கார்ட்டை எடுத்துக் காட்டினாள். “இது அதற்குரிய டொக்டர்களால் செக்அப் செய்து எனக்கு வழங்கப்பட்டிருக்கும் சேர்ட்டிபிக்கட்… பாருங்கள் எனக்கு எயிட்ஸ் இல்லை..!”
நான் அதைப் பார்க்கவில்லை. எப்படியாவது அவளிடமிருந்து கழரும் வழியைப் பார்க்கவேண்டும். காசுக்காகத்தான் இப்படி வற்புறுத்துகிறாள்… அவளது தொழிலே அதாகத்தானிருக்கும் என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
“என்னிடம் ஒரு டொலர்கூட இல்லை… கப்டினிடம்தான் காசு இருக்கிறது..!” என ஒரு போடு போட்டேன். அது போதும்… அவள் என்னை விட்டுப் போய்விடுவாள் என்றுதான் கருதினேன். ஆனால் அவள் போகவில்லை.
“நான் காசுக்காகக் கேட்கவில்லை..!” அவள் எனக்கு அண்மையாக முகத்தைக் கொண்டுவந்தாள்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கைகொடுக்கும் இன்னொரு அஸ்த்திரத்தை இறுதியாக எடுத்து விட்டேன். அதற்கும் அவள் படியாவிட்டால் அப்பன் கதி அதோ கதிதான்!
“எனக்கு என் மனைவி இருக்கிறாள்..!”
“அவள் இங்கு இல்லைத்தானே..?”
“இல்லை… இங்கேதான் இருக்கிறாள்..!” எனது நெஞ்சைத் தொட்டுக் காட்டினேன்.
அவள் ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். பின்னர் நெருக்கி எனது கன்னத்தில் முத்தமிட்டு, என்னை விட்டு விலகிப் போனாள். அது வித்தியாசமான முத்தமல்ல. நட்பான மரியாதைக்குரிய பிரியாவிடை முத்தம்.
(காட்டிலிருந்து வந்தவன் – சிறுகதைத் தொகுப்பு – காலச்சுவடு பதிப்பகம் – 2017)