இரவில் வந்தவர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 7,396 
 

யாழ்ப்பாணம்-1988

அவள் தன் குழந்தையைப் படுக்கையிற் கிடத்தினாள்.ஓலையால் வேய்ந்த வீட்டின் ஓட்டைக்குள்ளால்,பாதி நிலவின் துண்டுகள் எட்டி விழுந்தன.இப்போதெல்லாம் நிலவு வெளிச்சத்தில் குழந்தைகள் விளையாடுவதில்லை. கோயில் மணியோசைகளும் குழந்தைதகளின் கலகலப்புகளும் சுதந்திரமாக ஒலிப்பதில்லை.

சத்தியா குழந்தையாயிருக்கும்போது,நடந்த எத்தனையோ சந்தோசமான நிகழ்ச்சிகள் இன்றும் அவள் மனதில் இனிமையாகவிருக்கின்றன. பழைய நினைவுகள் தவிர இன்று எதுவும் இனிமையாக இல்லை.

பெரிய குழந்தை பானுமதிக்குப் பத்து வயதாகிறது.அவள் இன்னும் நித்திரை வராமற் புரண்டு படுக்கிறாள்.சின்ன மகன் கேசவனுக்கு எட்டுவயது.அவன் பகலெல்லாம ஓடிவிளையாடிய களைப்பில் நல்ல நித்திரையாகி விட்டான்.

சத்தியா,குழந்தைகள் படுத்திருக்கும் அறையின் கதவைச்சாத்திவிட்டு வெளியில் வந்தாள்

அவளும் நிலவும் ஒருத்தரில் ஒருத்தர் முட்டிக்கொண்டனர்.கிணற்றடி மல்லிiயின் வாசத்திற் தோய்ந்த தென்றலோடு தவழ்ந்து வந்து அவளிடம் சரசம் பண்ணியது.

தூரத்தில் யாரோ அழும் சத்தம்.வாய்விட்டுச் சத்தம்போடாமல் விக்கி விக்கி அழும் சத்தம்.அழுபவரின் சொந்தக்காரர் யாரும் செத்துப்போயிருக்கலாம.

ஓரு சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையான நெருங்கிய உறவுகளை ஒன்று படுத்துவது,பிறப்பும் இறப்புமாகும் இப்போதெல்லாம்,சொந்தககாரரின் மரண வீட்டுக்குப்போவதும் சிலவேளை துரோகச் செயலாகக் கணிக்கப்படுகிறது. இறந்தவர் யார்,எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் என்ற கணிப்பில் அவருக்கு இறுதிச்சடங்குகள் நடக்கும்.

‘துரோகிகளுக்கு ஏன் ஒரு துப்பாக்கி ரவையை வீணக்க வேண்டும் என்ற குரு+ர மனப்பான்மையில்,’தமிழ் வீரர்களின்’ காலணியால அடிபட்டு மிதி பட்டு இறந்த தமிழர் பலர்

தமிழரின்,தற்போதைய போராட்ட சூழ்நிலையில்,தியாகிகளும் துரோகிகளும் சிலவேளை ஒரே குடும்பத்தில் வாழ்கிறார்கள். அவர்களுக்குத் தங்கள் வாழ்க்கையின் திருப்பம் அடுத்த நிமிடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.

சாதாரண தமிழர்களின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால்,மரணங்களும,;வருத்தம் வாதைகளும் வந்து ஒரு உயிரைக் காவிக் கொண்டு போகாமல், சிலவேளைகளில் போகும் வழியில் வெடிகுண்டில்ச் சிதறிச் சிதையும் உயிர்கள் பலவாகிவிட்டன.

ஒரு காலத்தில்,சத்தியாவின் கணவரை,கொழும்புக்குப் போகும் வழியில் ‘பயங்கரவாதிகள்’; என்று சந்தேகித்துப் பிடித்துக் கொண்டுபோனது.அவளுடைன கடைசி மகன் கேசவன் அப்போது கைக்குழந்தை;. ‘மாவீரர்கள்’ என்று போஸ்டர் ஒட்டுப்படாமல் இறந்துபோன ஆயிரமாயிரம் தமிழர்களில் அவள் கணவனும் ஒருத்தனாகி விட்டான்.

எண்பதாம் ஆண்டுகளில்,வியாபாரிகள் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டிக்கடைகளாக,பிள்ளையார் துணிக்கடை,கணேஸ்சாரி எம்போறியம,விநாயகர் சாரி பலஸ்,கணபதி சேலைக்கடை, விக்னேஸ்துணி மாளிகை என்று பல பெயர்கள் வைத்து மக்களைக் கவரப் போட்டிபோட்டதுபோல்,அரசியல்வாதிகளும் பல வீரமான,புரட்சிப் பெயர்களை வைத்துக்கொண்டு ‘தமிழர்களின் விடுதலைக்குப் போராட முன்வந்தார்கள்.

ஆனால்,நடராஜன் எந்த இயக்கத்திலும் சேராமற் தன்வேலையைப் பார்த்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்தினான.

சத்தியாவின் தாய்தகப்பன் எப்போதோ இறந்து விட்டார்கள். சத்தியாவின் ஒரேயொரு தமயன், யாழ்ப்பாணம் வரப் பயந்து கொழும்பிலேயே தங்கி விட்டான். சத்தியாவும் நடராஜனும் ஒருமாதிரித் தங்கள் வாழ்க்கையைக் கொண்டு நடத்தினார்கள்.;

சத்தியா குழந்தைகளைச் சுமக்க நடராஜன் குடும்ப சுமையைத் தாங்கினான். அவர்கள் இருவரும் சொஞ்சம் தூரத்து உறவினர்களென்றாலும் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டவர்கள் என்பதால் குடும்ப சுமையைச் சமமாகப் பகிர்ந்து கொண்டார்கள்.

சுன்னாகம் சந்தையில்; நடராஜன் ஒரு சின்னக் கடை வைத்திருந்தான்.சுமாரான சம்பாத்தியம். வியாபாரம் நன்றக வளர்ந்ததும் வீட்டைத்திருத்திக் கட்டி, ஓடுபோட வேண்டும் என்று சத்தியா கற்பனை செய்திருந்தாள்.அந்தக் கனவு அப்படியே கற்பனையாகி விட்டது. சுன்னாகப் பட்டினத்தை இலங்கை இராணுவம் எரித்து விட்டது. அவன் கடையும் சாம்பலானது. அவர்கள் மனமுடைந்து விட்டார்கள்அவர்களின் ஓலைவீடு ஓட்டை கண்டது.

‘காலங்கள் மாறும் ,இந்தப் பிரச்சினை எல்லாம் தீரும்,கடவுள் வழிகாட்டுவார்’ சத்தியா மனம் தளராமற் சொல்லிக் கணவனுக்குத் தென்பூடடுவாள்.

83ம் ஆண்டுக் கலவரம். இலங்கையிற் தமிழர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டார்கள். நடராஜன் ஏதோ பல வேலைகள் செய்து பிழைத்துக்காட்டினான்.

வீpட்டுக்கு வீடு போராட்டம், வீதிகளில் ஊர்வலங்கள்,உற்சாகக் கோஷங்கள்,தமிழர்களக்கு ஒரு தனிநாடு,’தமிழ் ஈழம’ கிடைத்த விடும் என்று பலர் நம்பினார்கள். 84ம் ஆண்டு ,ஊர்களில் பல திருட்டுக்கள்.ஒரு இயக்கத்தினர் பெயரில் இன்னொரு இயக்கத் திருட்டு.

யாழ்ப்பாணத்தில் நிலமை மோசமாக மாறிக் கொண்டிருந்தது. கொழும்பிலிருக்கும் சத்தியாவின் தமயனிடம் உதவி கேட்க கொழும்பு சென்ற நடராஜன் வீடுதிரும்பவில்லை. போகும் வழியில், ‘இலங்கை இராணுவம் நடராஜனைப் பயங்கரவாதியாகச் சந்தேகித்துப் பிடித்தாகக் கேள்விப்பட்டாள்.

அவனின் நிலை,இலங்கையிலுள்ள ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்களின் நிலையாகி விட்டது.

கைக்குழந்தையுடன் சத்தியா கதறியதைக் கடவுள் மவுனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஓன்றிரண்டு சொந்தக்காரர்களும், இவள் ஏதும் உதவி கேட்பாள் என்பதைத் தவிர்க்க ஒதுங்கி வாழ்ந்தார்கள்.

தனிமை,இளமை, அழகு இவ்வளவும் சத்தியாவின் சொத்துக்களாகவிருந்தன. கை.கழுத்திற் கிடந்த ஒன்றிரண்டு நகைகளும் எப்போதோ அவர்கள் பசியைத் தீர்த்தன.

வாழ்க்கையைக் கொண்டு நடத்த வெறும் பாத்திரங்கள்தான் மிஞ்சியிருந்தன.

அவளின் தமயன் தன்னால் முடிந்தததை எப்போதோ இருந்து விட்டு அனுப்புவான்.

‘கடவுளே நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்,எனக்கேன் இந்த விதி, இந்தக் குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவேன்?’ இப்படி அவள் கடவுளிடம் கேட்டழுவாள்.

பானுமதி பசியாற் துவண்டபோது, கேசவன் பாலுக்குத் தாயின் முலையை உறிஞ்சிப் புண்ணாக்கியபோது அவளின் கண்ணீரும் சிலவேளை வற்றிவிடும்.

1985ம் ஆண்டுகளிற் தமிழருக்கு விடுதலைவாங்கித் தருவதாகப் புறப்பட்ட இயக்கக்கள் ,அவர்களுக்குள் நடந்த போட்டிகளால், ஒருத்தரை ஒருத்தர் வேட்டையாடத் தொடங்கினார்கள்.

யாழ்ப்பாணச் சந்திகளில் வைத்து,தங்கள் எதிரித் தமிழர்களைக் கம்பங்களில் கட்டிக்கொலை செய்ததை,பண்பட்ட பரம்பரையில் வந்த தமிழினம் வேலியால் எட்டிப்பார்த்துத் தங்கள் சம்மதத்தையும் கொடுத்தார்கள்.

கோயிற் திருவிழாக்களுக்கும்.கொடும் கொலைகளுக்கும் வித்தியாசம் காட்டாது பொது மக்கள்,மவுனமான மந்தைக்கூட்டமாக,தெருதிரண்டு,விழியுயர்த்தி,வாய்திறந்து,மனமுடையப் பார்த்துக்கொணடு நின்றார்கள்.

சத்தியாவும்,மற்ற மனிதர்கள்போல்,தன்னைச்சுற்றி நடக்கும் கொடுமைகளைப் பார்த்தும் பாராத குருடியாக,கொடுமைகளை எதிர்க்காத ஊமையாய்,எதையும் கேட்காத செவிடியாய் வாழப் பழகி விட்டாள்.

சத்தியா தன் வாழ்க்கையை நினைத்த துயருடன், குடத்திலிருந்த நீரையெடுத்து முகத்தைக் கழுவிக்கொண்டாள். மனம் எரிந்து கொண்டிருந்தது.

இப்படி அவள் நிம்மதியற்றுத் தவித்த ஒரு இரவிற்தான் அவன் அங்கு வந்தான்.

அவன் பெயர் பாலேந்திரன். சத்தியாவின் கணவன் நடராஜனுக்குத் தெரிந்தவன். நடராஜன் உயிரோடிருக்கும்போது ஒன்றிரண்டு தரம் வீட்டுக்கு வந்திருக்கிறான். சத்தியாவின் கணவன் நடராஜன்மாதிரியே பாலேந்திரனும் எந்த இயக்கத்திலும் சேராதவன்.

எந்த இயக்கத்திலும் சேராமலிருப்பது, எல்லா இயக்கத்தினரினதும் சந்தேகப்பார்வையைத் தங்களிடம் திருப்பும் என்று தெரியாத அப்பாவிகள்.தாங்களுண்டு தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையுண்டு எனிறிருந்த ஒரு சில தமிழ்த் தொழிலாளிகள் அவர்கள்.

அன்று,பாலேந்திரன் சத்தியா வீட்டுக்குத் திடிரென்று வந்தவன்,

‘என்னையவர்கள் தேடுகிறார்கள்’ என்றான். அவளுக்கு விளங்கவில்லை,அவன் எந்த ஒரு இயக்கத்தையும் சேரவில்iயே?

அவள் பயத்துடன் வாசலைப் பார்த்தாள். அவனுடைய ஊரில் அவன் இருக்க முடியாதாம்.

அவள் கொடுத்த சாப்பாட்டைச் சாப்பிட்டபடி அவளுக்குச் சொன்னான்.

சத்தியாவின் கணவன் இறந்த நாளிலிருந்து ,அவளின் தமயன் கொழும்பிலிருந்து அனுப்பும் பண உதவியில் ஏதோ கஷ்டப்பட்டு வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டிருக்கிறாள். ஊராருக்கு அது தெரியும்.

இன்று அவள் வாழ்க்கையில் பாலேந்திரன் வந்து குறுக்கிட்டதும் அவள் மனம் பயத்தில் தடுமாறியது. பாலேந்திரனின் கெஞ்சல் அவளின் இரக்க மனப்பான்மையை இளகப் பண்ணியது.

அவள்’யாரோ’ ஒருத்தனுடன் வாழ்வதாகப் உலகம் பழிசொல்லும் என்று அவளுக்குத் தெரியும். ஆனாலும், ஒரு குற்றமும் செய்யாத அவனை,சத்தியாவின் கணவனை இலங்கை அரசு அழித்ததுபோல்,இயக்கங்களுக்கு எந்தக் குற்றமும் செய்யாத பாலேந்திரனையும் ஒருநாள் ஏதோ ஒரு இயக்கம் தேடி வரும் என்று அவளுக்குத் தெரியும்.

பக்கத்து வீட்டு வேலிகளுக்குக் காதும், கண்களும் கிடைத்து விட்டது. ஊரின் வாய் திறந்து கொண்டது.

ஊரிலுள்ள பெரிய மனிதர்கள் அவளைப் பார்க்க வந்தார்கள். அவளின் ‘நடத்தை’பற்றி அடுத்த வீடுகளில் நல்ல அபிப்பிராயம் இல்லை என்றார்கள்.

அவள் வாயடைத்துப் போய்விட்டாள். கொஞ்சம் அப்பாவித்தனமான பாலேந்திரன் அவளுக்கு ஒரு தமயன் மாதிரி அந்த வீட்டில் இருந்தான் என்பதை,சந்தேகக் கண்கொண்டவர்கள் ஒருநாளும் நம்பமாட்டார்கள் என்று அவளுக்குத் தெரியும்.

‘இதெல்லாம் பொய்க்கதை, நான் எந்த இயக்கத்திலயும் சேராததால என்னைக் கொண்டுபொய்த் தட்டப் போறான்கள்” பாலேந்திரன் பரிதாபத்துடன் முணுமுணுத்துக் கொண்டான்.

அவன் முணுமுணுப்பும் அவளின் பரிதவிப்பும் முடியமுதல், ஒரு முக்கியமான இயக்கத்தைச் சேர்ந்த ஒருசிலர் வந்து,பாலேந்திரனுடன்,’ கொஞ்ச நேரம்’ கதைக்க அவனைக் கூட்டிச் சென்றார்கள்.

கூட்டிக் கொண்டுபோனவர்களின் ‘கொஞ்ச நேரம்’; என்ற கணிப்பின் கருத்து,’உனது ஆயுள் முடிந்து விட்டது’ என்பதை உணர்ந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் பாலேந்திரன் அவர்களுடன் சென்றான்.

அவன் இனித் திரும்பி வரமாட்டான் என்று சத்தியாவுக்குத் தெரியும். அந்த உண்மை அவளின் கண்ணீராகப் பூமித்தாயை நனைத்தது.

ஓரு சில தினங்களில், அன்று வந்திருந்தவர்களிற் ‘தலைவர்மாதிரித் தெரிந்த பிரமுகர்’ அவள் வீட்டுக்கு அவளைப் பார்க்க வந்தார்.

அவளை ஏற இறங்கப் பார்த்தார். அவள் அனுபவிக்கும் ஏழ்மையிலும் அவள் அழகு அழிந்துபோகவில்லை. சோகத்திலும் ஒரு கவர்ச்சி.

பிரமுகர் தன் முகத்தில் பரிதாபத்துடன் அவளைப் பார்த்தார்.’ பாலேந்திரன் போன்றவர்கள் அப்பாவிகள் மாதிரி நடித்துக்கொள்ளும் இனத் துரோகிகள்’ என்றார்.

அவள் மவுனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர் குரல் இரக்கமாயிருந்தது. அவர் பிரமுகர்,அண்டை அயலாரால் மதிக்கப் படுபவர்.

பாலேந்திரனைப் பற்றி அவர் சொல்லிக் கொண்டுபோன விடயங்களைக் கேட்க அவர் சொல்வது சரியா,உண்மையா, என்ற பல கேள்விகள் அவள் மனதைக் குழப்பின. பொய்யையும் பல தடவை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பதை அவள் தெரிந்திருக்காமலே அவர் சொன்னதை நம்பி விட்டாள்.இதுவரை பாலேந்திரன் பற்றி வைத்திருந்த நம்பிக்கை ஊசலாடியது. அவனை நம்பித் தன் கணவரின் வியாபாரத்தைப்; பொறுப்புக் கொடுக்காததையிட்டுச் சந்தோசப் பட்டாள்.

‘உனக்கு பாலேந்திரன் தங்களைப் பற்றிய இரகசியம் எதையும் சொன்னானா?’

‘அரசியல் இரகசியங்கள் சொல்லுமளவுக்கு எங்கள் உறவு இருக்கவில்லை..அவனை அந்த அளவுக்குத் தெரியாது’ விம்மலிடையே உண்மையைச் சொன்னாள் சத்தியா.

பாலேந்திரன் அவள் கணவனக்குத் தெரிந்தவன்.அவனின் பட்டினிக்கு ஏதோ சில உதவிகளைச் அவள் செய்தவள்.

புpரமுகர் நிலவு வெளிச்சத்தில் அவளைப்பார்த்தார். அவளின் சோகமான முகம் பிரமுகருக்குத் தெரியவில்லை.

‘குழந்தைகள் எப்படி?’ அவரின் குரலில் இரக்கமோ நடிப்போ அல்லது உண்மையோ என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

‘செலவுக்கு வைத்துக்கொள்’ புதுநோட்டுக்களை அவள் பார்த்து எத்தனையோ காலமாகிவிட்டது.

நிலவு வெளிச்சத்தில் புது நோட்டுக்கள் மோகனமாய்ச் சிரித்தன.நீpண்ட நேரம் அவள் தயங்க,அவர், குழந்தைகளின் பட்டினி,தாயின் கடமை, பாசம், என்றெல்லாம் மிகவும் இரக்கமாய்ப் பேசினார். அவள் உடைந்து விட்டாள்.

‘உன்ர புருஷன் எங்களுக்கு உதவினவர்’ பிரமுகர் தொடர்ந்தார். இறந்தகால நினைவுகளுக்கும் அவளை இழுத்தார்.

நடராஜன் எந்த இயக்கத்துக்கும் உதவி செய்ததாக அவளுக்கு ஞாபகமில்லை. எந்த இயக்கத்துடனும் தொடர்பு வைத்திருக்கவில்லை. அப்படித்தான் சத்தியா இதுவரை நினைத்துக் கொண்டிருந்தாள்.

இன்று பிரமுகர் என்னவெல்லாமோ சொல்கிறார், இவர் சமூகத்தில் பெரியவர்,பொய் சொல்வாரா?

அவர் மெல்லிய குரலில். தமிழர் ஒவ்வொருத்தரினதும் தேசக் கடமை,இனக்கடமை, சமூகக் கடமை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போனார்.

அவர் நீட்டிய புதுநோட்டுக்கள் இப்போது பக்கத்திற் கிடந்த உரலின் மேல்,ஒருசிறு கல்லின் பாரத்திலமர்ந்து அவளைப் பார்த்துக் கண்ணடித்தன.

அவளைப் பற்றி, அவளின் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி இரக்கமாய்ப் பேசியவர் போய்விட்டார்.

குழந்தைகள் பல மாதங்களின் பின் புது உடுப்புக்கள் போட்டனர்.அவள் அடுத்த நாள்ச் சாப்பாடு பற்றி யோசிக்கவில்லை;.

அதன்பின் அவர் அடிக்கடி வந்தார். அவள் வீட்டுத் திண்ணை தாண்டி,உள்ளுக்கும் வந்து விட்டார்.

இரவிற்தான் வருவார். ஊர் உறங்கும் நேரத்தில்.இருட்டிலும் நிலவிலும் வந்துபோனார்

இன்று அவர் வருகைக்காகச் சத்தியா காத்திருக்கிறாள்.

அவர் பிரபலமான இயக்கத்தின் முக்கிய தலைவர். ஊர் மதிப்பைப் பெற்றவர். திருமணத்திற்குக் காத்திருப்பவர்.ஆனாலும் சத்தியாவிடம் வந்து போனார். அவள் அடுப்பில் உலை பொங்கியது. அவள் உள்ளத்தில் குற்ற உணர்வு தழும்பினாலும் அதை அவரின் ஆறதல் வார்த்தைகள் சமாதானம் செய்தன.

கடைசியாக வந்தபோது,அக்கம் பக்கத்தார் அவள் நடத்தையில் சந்தேகம் கொண்டிருப்பதாகவும்,இயக்கம் இப்படியான விடயங்களில் மிகவும் கடுமையாக இருப்பதாகவும் சொன்னார்.

அவர் என்ன சொல்கிறார் என்பதை அவள் புரிந்த கொண்டாள்.

இனி அவர் அடிக்கடி சத்தியாவிடம் வருவது நல்லதில்லை என்றார். அவர் அதன் பின் ஒன்றிரண்டு கிழமையாக வரவில்லை.

அவள் காத்துக் கொண்டிருக்கிறாள்.

நிலவில் உலகு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. கிணற்றடியில் ஏதோ சலசலப்பு. கிணற்றடியில் யாரோ நிற்பது போன்ற பிரமை.

இந்த நேரம் அவரைத் தவிர யாரும் வரமாட்டார்கள் என்று அவள் நம்பினாள்.

‘நீங்களா?’

அவள் கேட்டபடி நடந்தாள்.

ஓரு வெடிச்சத்தம். அவள் துவண்டு விழுந்தாள்.

வாழ்க்கையுடன் தனித்துப் போராடிய ஒரு தமிழ்த்தாய், ஒரு பெரிய இயக்கத்தைச் சேர்ந்தவருடன் கொண்ட தொடர்பால் செத்து விழுந்தாள்

அடுத்த நாள் இயக்கக்காரர் வந்து, நடத்தை கெட்ட சத்தியாவைக் கையும் களவுமாகப் பிடித்துத் தண்டனை கொடுத்து விட்டதாகச் சொன்னார்கள்.

இரவில் அரைகுறை நித்திரையிற் தானெழும்பும்போது, அம்மாவுடன் இரவில் வந்திருக்கும் பிரமுகர்,இன்று பக்கத்து வீட்டுப் பத்தினிகள் மத்தியில்,அவளின் தாயின் மரணத்திற்கு நியாயம் வழங்கிக் கொண்டிருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தாள் சத்தியாவின் மகள் பானுமதி.

அவள் ஒரு அப்பாவித் தமிழ்க்குழந்தை. தமிழரின் விடுதலை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகள் பல காரணங்களால் அனாதைகளான தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியாதவள்.

-யாவும் கற்பனையே“““

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *