இரத்தக்களறி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 29, 2024
பார்வையிட்டோர்: 574 
 
 

“அம்மாடி… எனக்கு நெஞ்செல்லாம் பதறுது. இப்படியா… செய்வானுங்க. எனக்கு ஐந்தடி  தூரத்தில…. நட்ட நடு ரோட்டுல ….கார்ல உட்கார்ந்து இருந்தவரை புடிச்சு இழுத்து… அப்பப்பா… ரோடு  பூராவும்… ஒரே இரத்தக்களறியா இருக்கு.”

“வந்தவனுங்க… வந்த வேகத்துல  காரில் சிட்டா  பறந்துட்டானுங்க. ஐயோ….சினிமாவுல நடக்குற மாதிரியே இருக்கே.”

புலம்பியபடியே  பக்கத்தில் உள்ள தெருவுக்கு போய் ஒரு வீட்டின் வாசற்படியில் அமர்ந்தாள் ரேணுகா.

“அம்மா… கொஞ்சம் தண்ணி குடுமா… ஒரே…. மயக்கமா வருது. இப்படியா பண்ணுவாங்க. படுபாவி பயலுக”.

“என்னம்மா… என்ன ஆச்சு…?”

“ஏன்… கேக்குறீங்க….போங்க…”. கொஞ்சம் பத்தடி தள்ளி… ரோட்ல போய் பாருங்க… அந்த ரத்தக்களரிய.

அப்போதுதான் அந்த தெருவிற்கே‌ தெரிந்தது. ரோட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று.

செய்தி காட்டுத்தீயாய் பரவியது. தெருவெல்லாம் ஒரே பரபரப்பு. இப்படியும்  நடக்குமா…? பட்ட  பகல்ல…. நடு ரோட்டுல… ரோடு எல்லாம்  ஒரே இரத்தம். பார்க்க முடியல. 

“என்ன ஆச்சு… என்ன ஆச்சு…” பலரும்.

“நம்ம பஞ்சாயத்து தலைவரைத் தான்… வெட்டி போட்டுட்டு ஓடிட்டானுங்க.”

“அடக்கடவுளே… இவரையுமா…?”

“அந்த பழைய  தலைவர் அம்மாவா… பொம்பளையுனும் கூட பாக்காம… பஞ்சாயத்து ஆபீஸ்லயே… வச்சு வெட்டுனானுங்க. இரண்டாவது தலைவரை… அவர் வீட்டிலேயே வச்சு வெட்டுனானுங்க. இப்போ மூணாவதா இவரையும்…. இப்படி நட்ட நடு ரோட்டில கொலை பண்ணிட்டாங்களா…!”

“என்னதான் நடக்குது இந்த ஊர்ல…?”

“எல்லாம் ரியல் எஸ்டேட் தகராறு தான். பஞ்சாயத்து தலைவர் ஆனவுடன்… அதிகாரம் இருக்குதுன்னு ஊர்ல உள்ள… பொறம்போக்கு  நிலத்த எல்லாம் பட்டா போட்டு… இஷ்டத்துக்கு ‌விக்கிறாங்க. காசு… கொள்ளை காசு வருது. அதுல வர்ற பங்கு தகராறு தான்… வேற என்ன…?”

“நம்ம ஊருக்கு.. ரோடு போட கவர்மெண்ட் கொடுக்கிற பணத்தையும்… பொய் கணக்கு எழுதி.. அங்கே ரோடு போட்டேன்…இங்கே ரோடு போட்டேன்….ன்னு  சொல்லி வாயில போட்டுக்கிறாங்க.”

“தெரிஞ்சவன் சும்மா இருப்பானா….?  எனக்கும் பங்கு வேணும்னு  கேட்பான்..! குடுக்கலைன்னா வெட்டு.”

இவங்களுக்கு கொஞ்சம் கூட….உயிர பத்தி கவலையே இல்லையே.

முன்னாடி ரெண்டு தலைவரையும் தான் வெட்டுனாங்களே…! இப்பவாவது கவனமா இருக்கணும்னு நினைச்சாங்களா..!. காச வச்சு என்னத்த பண்ண போறாங்க…? இப்போ உயிரே போச்சே..! இப்படி சிலர்.

இனிமே இந்த ஊருல பஞ்சாயத்து தலைவரா யாரும் நிக்கவே மாட்டாங்க..! அடுத்தடுத்து மூன்று  உயிர் போயிடுச்சே. இது பலரின் அங்கலாய்ப்பு.

இந்த ஊரை நினைச்சாலே பயமா இருக்கு… ஏன் இவனுங்க இப்படி இருக்காங்க…? கொலை செய்ற அளவுக்கு..! ஒன்னும் புரியல. ஒரு கொலையா…? ரெண்டு கொலையா…? மூனு கொலை…! மூனு பஞ்சாயத்து தலைவர்களையும் வெட்டி சாய்ச்சுட்டாங்களே….!  புலம்பித் தீர்த்தாள்  ரேணுகா.

மூன்று பஞ்சாயத்து தலைவர்களும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு விட்ட நிலையில் இனியாவது… யாராவது  நேர்மையான, உண்மையில்  சேவை செய்யும் மனப்பான்மையோடு பஞ்சாயத்து தலைவராக வருவார்களா என்ற ஏக்கம்… அந்த ஊர் மக்களுக்கு.

கட்சிக்கு எவன் காசு கொடுக்கிறானோ அவனுக்கு சீட்டு. ஓட்டு  யாருக்கு போடுறதுன்னே… தெரியல. மூஞ்சியிலயே  ரவுடி..ன்னூ எழுதி ஒட்டி இருக்கு. ஓட்டு போடணும் தான். அது ஜனநாயக கடமை ஆச்சே. ஆனால் நேர்மையான மனிதர்கள் தேர்தலில்  நிற்பதில்லையே. இந்த ஊரோட கதி  இப்படி… ஆயிடுச்சே..பலரின் ஆதங்கம் இதுதான். 

வீட்டு வரி, தண்ணீர் வரி அவ்வளவு கட்றோம். 15 வருஷத்துக்கு முன்னாடி போட்ட ரோடு. குண்டும் குழியுமா இருக்கு. நடக்கவே முடியல..!. ரோடு போட சொல்லி எத்தனை தடவை தான் மனு கொடுக்கிறது. ஒரு பிரயோஜனமும் இல்ல…! மனசாட்சின்னு ஒன்னு அவங்களுக்கு இருக்குமான்னு தெரியல..? புவனா புலம்பி தீர்த்தாள்.

எலக்க்ஷன் வருதுன்னா மட்டும்… எவ்வளவு ரூபாயை வேஸ்டா செலவழிக்கிறாங்க..! மேள தாளம் …நோட்டீஸ்… விளம்பரம்…  மேடைப் பிரச்சாரம். இப்படி எவ்வளவு பணத்தை வாரி இறைக்கிறாங்க…? அந்தப் பணத்தை  ஊர் நலத்திற்கு பயன்படுத்தினா, திரும்ப திரும்ப அந்த தலைவருக்கு தானே ஓட்டு போடுவாங்க…? இது தெரியாதா..? 

பக்கத்து ஊரு பஞ்சாயத்து தலைவர் எப்படி அந்த ஊருக்கு நல்லது செய்கிறார்…?. ஊர் முழுவதும்  நல்லா ரோடு  போட்டிருக்கார். குழந்தைகள் விளையாடப் பூங்கா. குடி தண்ணீர் வசதி. மூன்று தடவையும் அவரே தான் ஜெயித்து வர்றார். நம்ம ஊருக்கு அப்படி ஒரு நல்ல காலம் விரைவில் வராதா..?. இப்படி ரேணுகாவின் மனசுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. 

ஒரு வருடம் ஓடி விட்டது..அடுத்த பஞ்சாயத்து தேர்தல் வரப்போகிறது. இந்த தேர்தலில் கொலை செய்யப்பட்ட தலைவரின் மனைவி கமலா போட்டியிட போவதாக தகவல்.

அனைவருக்கும் ஆச்சரியம். இத்தனை கொலை நடந்த பிறகும்மா..! கணவர் இறந்தும் கூடவா…! ஊரைவித்து உலையில போட்டவங்க. இருக்கிற காசு பத்தாதா…? ஊர் மக்கள் மனசுக்குள் புகைந்தனர்.

கட்சி பெயரை சொல்லியே ஓட்டு கேட்டு ஜெயிச்சிடுறாங்க. கட்சி  தலைமையை மட்டும்  பார்த்து, ஓட்டு போட்டு…வெற்றி பெற செய்கிறார்கள். நிக்கிற தலைவர்கள் நல்ல மனுஷங்களா இருக்க வேண்டாமா..? இது ரேணுகாவின் கேள்வி. 

ரேணுகா… நான் சொல்றதை கேளு. இந்த கமலா அம்மா, அவங்க வீட்டுக்காரர் மாதிரி இல்ல. அவங்க வீட்டுக்காரர் செய்றத தட்டிக் கேட்க முடியாமல், அவங்க மௌனமா இருந்தாங்க. எனக்கு தெரியும் அவங்கள பத்தி. அவங்க கொஞ்சம் விவரம் தெரிஞ்சவங்க. பாவம் புண்ணியம் பாக்குறவங்க. இப்போ இந்த ஊர் மக்களுக்கு ஏதாவது செய்தே ஆகணும் என்கிற நினைப்பு அவங்க மனசுல ஆழமா இருக்கு. அவங்க மகன் தான் அப்பா மாதிரி. இது கமலா அம்மாவின் உறவுக்கார பெண்  மகேஸ்வரியின்  பதில்.

பஞ்சாயத்து தேர்தல் நெருங்கி வருகிற நிலையில்… கமலாம்மா…  மெல்ல தன்னை வெளிப்படுத்திக் கொள்ள தொடங்கினாள்.  

இந்த ஒரு வருட காலத்தில் கமலாவின் மனதிற்குள் ஆயிரம் மாற்றங்கள்… கணவரே போய்விட்டார்.  இனி இந்த காசை வைத்து நான் என்ன செய்ய….?  என்ற கேள்வி அவளை  சதா துளைத்துக் கொண்டே இருந்தது. இனி இப்பணத்தை இந்த ஊர் மக்களுக்காக செலவழிப்பது மட்டுமே எனது குறிக்கோள்… என திடமாக முடிவு செய்து இருந்தாள். 

முதல் முறையாக  அவ்வூர் அரசாங்க பள்ளிக்கூடத்திற்கு ஒரு நூலகம் கட்டுவதற்கும் , கழிப்பிட வசதிக்கும் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தாள்.   புறம் போக்கு நிலத்தில் குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு திடல் அமைத்துக் கொடுத்தாள்.மேலும்  பெண்களை  எல்லாம் ஒன்று திரட்டி அவர்கள் இருக்கும் பகுதி முழுவதும் மரக்கன்றுகளை வாங்கி கொடுத்து ,நட வைத்தார். அவ்வூர் மக்களுக்கு , தற்போது அவள் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் சமீப காலத்தில்  ஏற்பட்டது. 

நகரத்துக்கு இணையா இந்த ஊர்லயும் ரோடு எல்லாம் நல்ல போட்டு கொடுக்கணும். அனைவருக்கும்  குடிக்க நல்ல தண்ணி கொடுக்கணும். நெகிழி குப்பை இல்லாத அழகான  பசுமையான ஊரா மாத்தணும் , நிறைய  மரங்கள் நட வேண்டும்  என்ற பல திட்டங்கள் அவளுக்குள்  இருப்பது, அவ்வூர் மக்களுக்கு அரசல் புரசலாக தெரிய வந்தது.

இந் நிலையில்  எலக்சன் தேதி அறிவிக்கப்பட்டவுடன் , கமலாம்மா  வாக்கு சேகரிக்க புறப்பட்டாள்.  

கமலாவின் பேத்தி …”பாட்டி பாட்டி எலக்சன்ல நிக்காதீங்க.. தாத்தா மாதிரி உங்களுக்கும் ஏதாவது ஆயிரும். வேண்டாம் நீங்க வீட்டிலேயே இருங்க.” புடவையைப் பிடித்துக்  இழுத்து… பாட்டியை  தடுத்தாள் பேத்தி. 

கமலாவின் மகன் சீக்கிரம் கிளம்புமா..!!! .அதுக்கு என்ன..?  . பவித்ரா முதல்ல உள்ளே போ.  அதட்டினான்.‌

 12 வயது பவித்ரா போச்சு… போ… எனக் கையை ஆட்டிக்கொண்டே  உள்ளே போனாள்.

அம்மா… வாமா…என அவசரப்படுத்தினான்…அடுத்து தலைவராய் வலம் வர போகும் அவளின் 35 வயது மகன்.. 

அம்மா…. பேருக்கு  தானே தலைவி . அதிகாரம் செலுத்தப் போவது நாம்  தானே… என்ற நினைப்பு இவனுக்குள்….!

 20 பெண்கள்  புடைசூழ… கமலாவை நடுவில் நிற்க வைத்து…மேள தாளத்துடன்…ஓட்டு கேட்க…பயணம் தொடர்ந்தது. கமலா….மகனின் நினைப்பு என்ன என அறிந்திருந்தாள்.

இருந்தாலும், நான் ஜெயித்த பிறகு, மகன் எனவும் பார்க்காமல்… அவனை  ஓரங்கட்டி விடுவேன் என தனக்குள் சொல்லிக் கொண்டாள். இந்த தடவை நான் வெற்றி பெற்றால்… இந்த  ஊர் மக்களுக்கு, இந்த ஊருக்கு… என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும்  செய்து, என் கணவர் செய்த பாவங்களுக்கு…பிரயாச்சித்தம் செய்தே தீருவேன்…! என்ற ஒரு  திடமான முடிவோடு… பிரச்சார பயணத்திற்கு…காலடி எடுத்து வைத்தாள்…!

இனி இந்த ஊர் மக்களுக்கு நல்ல காலம் பிறந்தாச்சு.

Print Friendly, PDF & Email
இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *