சந்திரனைப் போன்ற இரதியக்காவின் வட்டமுகம் அடிக்கடி சூரியனைப் போலச் சிவந்து போவது உண்டு. பெண்விடுதலை பற்றி இரதியக்கா கதைக்கத் தொடங்கினால் சூரியனைத் தலைக்கு மேல் வைத்ததாகக் கோபம் அவவிடம் இருந்து பீறிட்டுப் பாயும். அவவின் கோபாக்கினி தாங்கதா பல ஆண் சூரியர்கள் முகத்தைச் சந்திர கிரகணமாக்கிக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியே நழுவிவிடுவார்கள். அப்படி ஆண்கள் வெளியே செல்வது ரதியாக்காவுக்குப் போரில் புறமுதுகிட்டு ஓடும் படையைத் துரத்திய குசியை ஏற்றும். ஆண்கள் இல்லாத அரங்கத்தில் ஓங்காரமாய், ஓங்கியறைந்து தனது கருத்தை இரதியக்கா சொல்லுவா. இரதியக்கா சொல்லும் கருத்தைக் கேட்க ஒருகூட்டம் பெண்கள் வருவார்கள். அவர்கள் இரதியாக்காவின் தேவவாக்கிற்கு ஆமாம் போட்டு ஆமோதிப்பார்கள்.
இரதியக்கா பச்சைச் சந்தனமாக மினுங்கும் தங்க நிறம். தன்னை அழகு படுத்துவதில் பிரம்மலோகத்து இரதிக்குத் தங்கை என்பது அவவின் நினைப்பு. நாற்பது வயதை எட்டிவிட்டாலும் பதினெட்டு வயது என்கின்ற பௌவுசு குறையாத நடப்பு. இரதியக்காவிடம் யாரும் வயதைக் கேட்பதில்லை. வாயைக் கொடுத்து எதையும் புண்படுத்திக் கொள்ள எவரும் விரும்புவதில்லை. இரதியக்கா நடந்து போனால் பின்னழகு தேரழகாகத்தான் ஜெலிக்கும் அல்ல நெளிக்கும். அதைப் பார்த்து விசிலடிக்க பலருக்கும் விருப்பம். துணிவு யாருக்கும் கிடையாது என்பது ஒஸ்லோவின் யாதார்த்தம். அடிக்க வேண்டும் என்கின்ற ஆசை எழுந்தாலும் கமுக்கமாக மடக்கி வைத்துக் கொள்வது சர்வ நிட்சயம். கரைச்சலைக் காதலிக்க யாருக்குத்தான் விருப்பம்?. அவமானப்படுவதில் யார்தான் குசிகாண முடியும்?.
இரதியக்காவைப் பொறுத்தவரை ஆண்கள் மிருகங்கள். பெண்களை காமத்திற்காக மட்டும் வேட்டையாடும் மிருகங்கள். இச்சை தீர்த்துச், சந்ததி பெருக்கும் இயந்திரங்கள். அந்த இயந்திரங்களின் பசிக்காக நித்தமும் கயங்கும் மாதர்கள். கயங்கிய பின்னும் அடிமையாகக் காலம் கழிக்கும் தியாக தீபங்கள். அந்த அபலைகளின் விடுதலைக்காகக் கொடிய மிருகங்களை எதிர்த்துப் போராடும் வீராங்கணை தான் என்பது அவவின் நினைப்பு.
காமத்தைப் பெண்களும் பங்கு போடுகிறார்கள் அல்லவா? காதல் என்கின்ற உணர்ச்சி போர்த்தி, ஊடல் என்கின்ற கொக்கி போட்டுக், கலவி என்கின்ற கழிப்பில் திளைத்து. பங்குதானே? இரண்டு கைகள் தட்டாதபோது ஒலி எங்கே பிரசவிக்க முடியும்? இரவில் பெண்கள் எல்லாம் கற்பழிக்கப்பட்டால் பகலில் உலகவாழ்கை எப்படி இருக்கும்? பெண்விடுதலைக்கு எதிராய் இருப்பதே பெண்கள் அல்லவா? ஆண்களை ஆளுவதும் பெண்கள்… பெண்களை அடிமையாக்குவதும் பெண்கள். இப்படி யெல்லாம் யாராவது மடத்தனமாய் கதைத்துவிட்டால், கழுத்திற்கு மேல் தொங்கும் சூரியனை் வெடித்துச் சிதறுவதை யாரும் தடுக்க முடியாது. இரதியக்காவைத் தெரிந்தவர்கள் யாரும் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வதில்லை. வீட்டில் குடுமி பிடிப்பவர்கள்கூட இரதியக்காவைக் கண்டால் கூஜா துாக்கத் தயாராகி விடுவார்கள்.
ஒருபகுதி ஆண்கள் பெண்களைப் போகப் பொருளாக வேட்டையாடுவது உலக நிதர்சனமே. காமத்திலும், மோகத்திலும் மனநோய்பட்ட ஆண்கள் உண்டு. பெண் என்பவள் ஆளப்பட வேண்டியவளே என்கின்ற எண்ணம் கொண்ட கற்கால ஆண்களும் எம்மிடத்தில் உண்டு. சீர்தனம் வேண்டுவது வெளிநாட்டில் வாழும் தமிழருக்குகூடப் பெருமை தரும் சிறுமை என்பதும் உண்டு. வாங்கப்படுகிறோம், விற்கப்படுகிறோம் என்பது எங்கள் கலாச்சாரத்தில் பேரம் என்று பெருமை பேசப்படுகிறது. ஒருபானை சோற்றிற்கு ஒருசோறு பதம் என்பது மனித மனத்திற்கு ஒத்துப் போகாது. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன் என்பது உலகம் உருளுவதைப் போல மாறாத உண்மை. யாரும் இரதியக்காவிற்கு முன்பு ஆண்களிலும் நல்லவர்கள் உண்டென்று நியாயம் கதைத்தால்…? வேண்டாம். யாரும் கதைக்க வருவதில்லை.
தமிழ்ச்சங்கக் கூட்டத்திற்குச் சிவராமன் வந்து இருந்தார். அவர் இப்பொழுதுதான் வடநோர்வேயின் குளிரில் இருந்து விடுபடவேண்டும் என்பதற்காய் ஓஸ்லோவிற்கு மாறியிருக்கிறார். ஒஸ்லோவில் இருப்பவர்கள் இந்தக் குளிரை விட்டு இங்லாந்திற்கு அல்லது ஸ்பானியாவுக்குப் பாயவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
சிவராமன் தனக்கு அருகில் இருந்தவரோடு இலக்கியம் பற்றிக் கதைத்தார். ‘இலக்கியம் என்பது அனைத்து மக்களாலும் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்’ என்பது அவருடைய வாதமாகிற்று. ‘வித்துவத்தைக் காட்டுவதற்காய் வரையப்படுபவை வேண்டும் என்றால் விமர்சைப் படுத்தப்படலாம், என்றாலும் அது மக்களிடம் சென்றடையாத, விரையமான படைப்பே! ‘ என்று அவர் வாதிட்டார். ‘படைப்பின் தரம் அழியா முத்திரை. அதில் பழுதுபடவும் விடலாகாது’ என்றார். அவர் அப்படிச் சுவரசியமாகக் கதைத்துக் கொண்டு இருக்கும் பொழுதுதான் அவரை மேலும் கீழுமாக அளவெடுத்த வண்ணம் இரதியக்கா அவர் அருகே வந்து அமர்ந்தா.
சிவராமனைச் சுற்றித் திடீரெனச் சுனாமியாக வந்து இறங்கிய அமைதி. ரதியாக்கா சிவராமைப் பார்த்துச் சிரித்தா. சிவராமனும் தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடல் எடுத்து… என்கின்ற கண்ணதாசனின் வசன நினைவுகளோடு சிரித்தார்… நெளிந்தார். யார் என்று சிந்தியாது இலக்கியத்தில் பெண்கள் பற்றிய விவாதத்தில் இறங்கினார்.
சிறிது நேரம் விவாதம் நடந்தது. பலர் மௌனத்திடம் மண்டியிட்டனர். இரதியக்கா தனது கட்டுப்பாட்டை இளந்து இருந்தா. சிவராமன் நியாயம் என்று தனக்குப் பட்டதைக் கணிரென்று உரைத்தார். சூரியனுக்கு உள்ளே என்ன நடக்கிறது? எதனால் அவன் கொதிக்கிறான்? அணுக்களின் சேர்க்கையில் உருவாகும் அபரிமிதமான சக்தியில் அவன் கொதிப்பது உண்மையானால், பெண்களின் உரிமைக்குப் போராடும் உத்தமி என்கின்ற நினைவின் சேற்கையில் உருவாகும் தீமூழும் கோபத்தில்… தாக்கத்திற்கு எப்பொழுதும் மறுதாக்கம் உண்டு என்கின்ற விதி உண்மையானால், ஆண் என்னும் பேயின் நியாயத்திற்கு ஏதிராக இரதியக்காவின் அமைதி என்னவாகும் என்று எல்லோரும் திகைத்த பொழுது, கோபத்தில் பொங்கியெழுந்த இரதியக்கா, சிவராமனைப் பார்த்து ‘வேசைமகனே’ என்றா.
– nortamil.no இல் பிரசுரிக்கப்பட்டது