இரண்டுமே வேறு! வேறு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 8,029 
 
 

“என்ன….சரவணா…பேப்பரில் அப்படி முக்கியமான நியூஸ்?….அம்மாவும் மகனும் அப்படி விரித்து வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறீங்க?…..”

“அப்பா!….நேத்து சாயந்தரம் என்ன நடந்ததுனு உங்களுக்குத் தெரியாதா?..”

“சொன்னாத்தாண்டா…..தெரியும்.?….”

“நம்ம ரயில்வே கேட் இருக்கல்ல?…..”

“நீ காலேஜூக்குப் போகும் வழியில் இருக்கே!…அதுவா?…”

“அதே தானப்பா!….நேத்து மாலை 5-30 மணிக்கு வழக்கம் போல கேட் மூட மூட உள்ளே ஒரு டவுன் பஸ் புகுந்து விட்டது……அந்த நேரம் பார்த்து சரியாக ரயிலும் வந்து விட்டது……பஸ்ஸில் நூறு பயணிகள்……”

“அப்புறம்……என்னடா ஆச்சு?….”

“ரயில்வே டிரைவர் சற்று தூரத்திலேயே பஸ்ஸைப் பார்த்து விட்டார். உடனே பிரேக் போட்டிருக்கிறார்…..அப்படியிருந்தும் .ரயில் பஸ்ஸை உரசிக் கொண்டே கடந்து விட்டது.!….பயணிகள் உயிருக்குப் பயந்து கூச்சல் போட்டிருக்கிறாங்க!….”

“பஸ்ஸில் நூறு பேரா….ஐய்யோ நினைச்சுப் பாக்கவே பயமா இருக்குதடா!…”

“நல்ல வேளை….மயிரிழையில் எல்லோரும் தப்பிசிட்டாங்க!…ரயில் பஸ்ஸை உரசிக்கொண்டு போவதை ஒருவர் தன் செல்போனில் படம் பிடிச்சிட்டார்!….அதைத் தான் எல்லா பத்திரிகைக்காரங்களும் பெரிசாப் படம் போட்டு திகிலா எழுதியிருங்காங்க!….நானும் அம்மாவும் அந்த செய்தியைத்தான் படிச்சிட்டிருந்தோம்!…”

“ஆண்டவா!….எல்லோரும் எப்படியோ தப்பிச்சிட்டாங்களே….நமக்கு அது போதும்!…நம்ம மக்களுக்கு இந்தப் ரயில்வே கேட் எப்போதும் ஒரு தீராத பிரச்சனையா இருக்கு!….இந்த செய்தியைப் பார்த்தாவது சம்பந்தப் பட்ட அதிகாரிகள் சீக்கிரம் ஒரு பாலத்தை கட்டி முடிச்சா எல்லோருக்கும் சௌகரியமாப் போயிடும்!…..”

-2-

“உங்களுக்கு எப்பப் பார்த்தாலும் ஊர் பிரச்னை தான் முக்கியமாப் படுது!… உங்க மகன் அந்த ரோட்டிலே தினசரி காலேஜூக்குப் போயிட்டு வரான்….அதைப் பற்றி உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா?…” என்று சரவணின் தாய் பார்வதி குறுக்கிட்டுப் பேசினாள்.

“போடி!….நம்ம சரவணன் பொறுமைசாலி….பொறுப்புள்ள பையன்….அவன் ஜாக்கிரதையா போய் வந்திடுவான்…நீ ஒண்ணும் அதற்காhக்கஃ கவலைப் படாதே!….”என்று சொன்னார் சரவணின் தந்தை ராதா கிருஷ்ணன்.
ராதா கிருஷ்ணன் இந்து மதப் பற்று மிக்க ஒரு ஆன்மிகவாதி. ஒரு ஆன்மிக இயக்கத்தின் மாவட்டச் செயலாளரும் கூட. எந்த நேரமும் ஆண்டவனைப் பற்றிய பேச்சு தான்! சிறந்த பக்திமான். வீட்டுப் பொறுப்புகள் அனைத்தையும் அவர் மனைவி பார்வதி தான் பார்த்துக் கொள்வார்கள். ராதா கிருஷ்ணனுக்கு பொது வேலைகளுக்கே நேரம் பத்தாது! வீட்டில் அவருக்கு மனைவி மகனிடம் கூட பேசுவதற்கு கூட சாதாரணமாக அவருக்கு நேரம் இருக்காது. காலையில் நேரத்திலேயே வீட்டை விட்டு வெளியில் கிளம்பி விடுவார். இது பார்வதிக்கும் சரவணனுக்கும் பழகிப் போய் விட்டது!

“ஏப்பா!….நேற்று விடியற்காலையிலேயே எங்கப்பா கிளம்பி போயிட்டீங்க?..”

“அதை ஏண்டா கேட்கிறே?….வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பா கொண்டாட நம்ம தொண்டர்கள் ஏற்பாடு செய்திட்டு இருக்காங்க!….அதற்கு இடையூறு செய்ய சிலர் ரகசிய ஏற்பாடு செய்வதாக தகவல் வந்தது!…உடனே அந்த மத சம்பந்தப் பட்ட பெரியவர்களையும், பிரமுகர்களையும் பார்த்து விஷயத்தை எடுத்துச் சொல்லி ஒரு சுமுகமான சூழ்நிலையை உருவாக்கி விட்டு வந்தேன்.!…..”

“உங்களுக்கு எதற்கு அப்பா இந்த ஊர் வம்பு எல்லாம்!…”

“நீ புரியாத பேசாதேடா!….நான் யார் வம்புக்கும் போக மாட்டேன்….நாம் பக்தியோடு பூஜிக்கும் தெய்வத்தை நாம் வேதனைப் பட வேண்டும் என்பதற்காகவே யார் அசிங்கமாகப்

-3-

பேசினாலும், நம்முடைய மத சம்பிரதாயப்படி நாம் செய்யும் வழிபாட்டை யார் தடுக்க நினைத்தாலும் என்னால் பொறுத்துக் கொண்டு போக முடியாது!…நாம் யாருடைய மதக் கடவுள்களைப் பற்றியோ, அவர்கள் வழிபாட்டைப் பற்றியோ நிந்தனையாக ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை….மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் பண்பாடு நமக்கு இருக்கிறது.!…எல்லோருக்கும் அது இருக்க வேண்டுமென்று தான் ஆசைப்படுகிறேன்! இந்த தமிழ் நாட்டில் தான் பெரும்பான்மையான மக்கள் வணங்கும் தெய்வங்களை எல்லாம் அசிங்கமா பேசி பக்தர்கள் மனசை புண் படுத்துபவர்களை எல்லாம் கூட தலைவர்னு சொல்லறாங்க!…”

“ஏப்பா….அவங்களுக்கும் பேச்சு சுதந்திரம் இருக்கே?….”

“போடா…பைத்தியகாரா!….யார் பேச்சு சுதந்திரம் இல்லை என்று சொன்னாங்க?…என் பெண்டாட்டி மேலே எனக்குப் பிரியம் இருந்தா அவ காலைக் கூட பிடித்து விடுவேன்!. அல்வா கூட வாங்கித் தருவேன்! நீ ஊர் மேயற ஆளு…உனக்கு பொண்டாட்டி அருமையெல்லாம் தெரியாது!…நா என் பெண்டாட்டி மேலே பிரியமா இருக்கிறது எப்படி என்னுடைய பெர்ஷனல் விஷயமோ, அதே போல் தான்.. அவனவனுக்குப் பிடிச்ச தெய்வத்தை வழிபாடு செய்வதும் அவனவன் பெர்ஷனல் விஷயம்! அதை கிண்டல் கேலி செய்யக் கூடாது!…நாங்க யாருடைய பெர்ஷனல் விஷயங்களில் ஒரு போதும் தலையிட மாட்டோம்! அதுதான் எங்க இயக்கத்தோட கொள்கை!…நாங்க என்றைக்குமே மற்றவங்க உணர்வை மதிக்கும் நாகரிகம் தெரிஞ்சவங்க!….”

“காலங்காத்தாலே உங்களுக்கு வேற பேச்சில்லே?…..பொண்டாட்டிக்கு அல்வா வாங்கித் தருகிறாராம்.!….பையனிடம் பேசுகிற பேச்சா இது?…”என்று பார்வதி முணுமுணுத்தாள்.

“நான் உங்கம்மாவுக்கு அல்வா வாங்கித் தரலைனு கோபமடா!’ என்று சிரித்துக் கொண்டே எழுந்து போனார் ராதா கிருஷ்ணன்.

மறுநாள். மாலை கல்லூரியிலிருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான் சரவணன். ரயில்வே கேட் குறுக்கிட்டது.

-4-

சரவணனின் பைக் உள்ளே நுழையும் பொழுது ரயில்வே ஊழியர் கேட்டை மூட எழுந்து வந்தார். ஒரு தனியார் பஸ் டிரைவர், கேட்டை மூட ஊழியர் வருவதைக் கவனித்து விட்டு, அந்தப் பக்கமிருந்து மிக வேகமாக கேட்டைக் கடக்க முயற்சி செய்தார். அந்த சமயத்தில் தான் சரவணின் பைக் கேட்டிற்குள்ளிருந்து வெளியே வேகமாக இந்தப் பக்கம் வந்தது. மின்னல் வேகத்தில் வந்த பஸ் டிரைவர், சரவணனின் பைக்கை கவனிக்கவில்லை. நேருக்கு நேர் பஸ் பைக்கை மோதி தள்ளி விட்டது! சரவணன் தூக்கி நடு ரோட்டில் வீசி எறியப் பட்டான்! ரத்தம் ஆறாக ஓடியது!

தமிழ் மக்களின் இரக்க உணர்ச்சி இன்னும் அழிந்து போய் விட வில்லை. பலர் ஓடிப் போய் சரவணனை ஆட்டோவில் தூக்கிப் போட்டுக் கொண்டு அருகே இருந்த மருத்துவ மனைக்கு விரைந்தார்கள்.

செய்தி காட்டுத் தீ போல பரவி விட்டது. சரவணனின் பெற்றோர்களும், உறவினர்களும், கல்லூரி நண்பர்களும் கூட்டமாக மருத்துவ மனையை சூழ்ந்து கொண்டார்கள்!

தலைவர் மகன் விபத்தில் சிக்கிக்கொண்ட செய்தியைக் கேள்விப் பட்ட ஆன்மீகத் தொண்டர்களும் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, ராதா கிருஷ்ணனை சூழ்ந்து கொண்டு கதறி அழுதார்கள்.

அவர்களுக்குத் தெரியும் ராதாகிருஷ்ணன் தன் ஒரே மகன் சரவணன் மேல் உயிரையே வைத்திருந்தார் என்பது! மகன் மேல் ஒரு தூசு விழுவதைக் கூட தாங்கி்க் கொள்ளாத மனசு அவருடையது!

“அண்ணே!…அண்ணே!…” என்று ராதாக் கிருஷ்ணனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறினார்கள்!

ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு சமாதானம் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது!
ஆபரேஷன் தியேட்டரில் பிரபல டாக்டர்கள் சரவணனின் உயிரைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருந்தார்கள்.

-5-

மருத்துவ மனையில் ஒரு மயான அமைதி நிலவியது! நேரம் ஓடிக் கொண்டே இருந்தது!

தலைமை டாக்டர் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியில் வந்தார். சரவணனின் தந்தை ராதா கிருஷ்ணனின் அருகில் வந்து அவர் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

“வெரி சாரி!…..ராதாகிருஷ்ணன்!…..எங்களால் முடிந்தவரை போராடிப் பார்த்து விட்டோம்!…..நிறைய ரத்தக் கசிவு ஏற்பட்டு விட்டதால் மூளை சாவு நிகழ்ந்து விட்டது!…அதனால் உங்க மகன் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை!…எங்களுக்கே இதை உங்ளிடம் சொல்ல கஷ்டமாக இருக்கிறது!……உங்கள் மகனின் எல்லா உறுப்புகளும் நல்ல நிலையில் தான் இருக்கின்றன….நீங்கள் விரும்பினால் உடல் உறுப்பு தானம் செய்யலாம்!……”

“அப்படியா…..டாக்டர்!….யார் யாருக்கு என்ன என்ன தேவைப் படுகிறது?….”

“உடலுறுப்பு தானத்தை எதிர்பார்த்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் கோவை, சென்னை மருத்துவமனைகளில் உள்ள ஆபத்தான நோயாளிகளின் லிஸ்ட் எங்களிடம் இருக்கு!……நீங்க சம்மதம் கொடுத்தா ….அதற்கான ஏற்பாடுகளை சில நொடிகளிலேயே ஆரம்பித்து விடுவோம்!….”

“டாக்டர்!….அந்த விபரத்தை கொஞ்சம் தெளிவா சொல்லுங்க!….”

“ கோவை கோட்டைமேட்டைச் சேர்ந்த கதீஜா என்ற முஸ்லீம் பெண்ணுக்கு சிறு நீரகம் தேவைப் படுகிறது!……சமீபத்தில் ஜாதி கலவரத்தில் ஈடுபட்டு இப்ப சிறையில் இருக்கும் ஒரு ஜாதி கட்சி தொண்டரின் தாய் சுந்தரம்மா ஒரு சாலை விபத்தில் சிக்கி அவருக்கு கண் பார்வை போய் விட்டது…அவருக்கு கண்கள் தேவைப் படுகிறது!….அதே போல் கல்லீரல் பாதிக்கப் பட்ட முகமது அலி சென்னையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு ஏழை ஆட்டோத் தொழிலாளி!…நீங்க ஒப்புதல் கொடுத்தா….நாங்க உறுப்பு தானத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை உடனே செய்து விடுவோம்!….” என்றார் தலைமை டாக்டர்.

-6-

பக்கதில் நின்று கொண்டிருந்த ராதாகிருஷ்ணனின் வயசான தந்தை, “ஐயோ!…..என் பேரனோட உடம்பையும் தயவு செய்து சின்னா பின்னப் படுத்தி விடாதீங்க!….” என்று கதறி அழுதார்.

அதற்குள் பட்டை தீட்டிய ஒரு பக்தர் குறுக்கிட்டார்.

“ அண்ணே!….நாம நேத்துக் கூட ஊர்வலம் தொடர்பா யாரிடம் நாம யார் யாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம் என்பதை அதற்குள் மறந்து விட்டீங்களா?…..”
“போடா முட்டாள்!……சிறுநீரகம் பாதிக்கப் பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் கதீஜாவும், பார்வை இழந்து தவிக்கும்
சுந்தரம்மாவும் பெண்களடா!…ஒரு பாவமும் அறியாத நம்ம தாய்குலமடா!….. சென்னையில் கல்லீரல் பாதிக்கப் பட்ட முகமது அலி வயசான ஒரு ஏழை ஆட்டோத் தொழிலாளி!.அவர் என்னடா பாவம் செய்தார்?….எல்லோருக்கும் இருக்கும் ரத்தம் ஒரே நிறம் தான்!…..

நம் மதம் உட்பட எல்லா மதத்திலும் பற்றுக்கும், வெறிக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு ஐந்து சதவிகித மக்கள் இருக்கத்தான் செய்யறாங்க! அதை மனசில் வைத்துக் கொண்டு ஒரு மதத்தைச் சார்ந்த எல்லா மக்களையும் தப்பா நினைப்பது முட்டாள்தனம்!

ஜாதி வெறியைத் தூண்டும் ஒரு முட்டாளுக்கு தாயா போன பாவத்திற்காக அந்தப் பெண்மணி ஆயுசு முழுக்க குருடாகவே இருக்க வேண்டுமா?…அது என்னடா நியாயம்?….

ஜாதி வெறி பிடித்தவன் தான் உண்மையான குருடு!…நாம் அவன் மனைவியின் கண்களுக்கு ஒளி ஊட்டுவதைத் தான் நாம் வணங்கும் தெய்வத்தின் விருப்பமாக இருக்கும்!

இதில் எல்லாம் போய் ஜாதி, மதம் எல்லாம் பார்க்கக் கூடாதடா!…நாம் பக்தியோட பூஜிக்கும் நம் கடவுள்களை கேவலமாகப் பேசுவதையும், நம் தெய்வ வழிபாட்டிற்கு இடையூறு செய்வதையும் தான் நாம் எதிர்க்கிறோம்!…………நாம் எந்தக் காலத்திலும் மற்றவர்களுடைய உரிமைகளைகளையும், மற்றவர்களின் தனிப் பட்ட விருப்பங்களையும் விமர்சித்தது இல்லை! குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், அப்பாவி பொது மக்கள்

-7-

ஆகியவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் எல்லாம் ஜாதி, மதம் பார்க்கும் முட்டாள்கள் அல்ல நாம்!…நீங்களும் அதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்க!…”என்று கர்ஜித்தார் அந்த உண்மையான ஆன்மிகத் தலைவர்.
அருகில் இருந்த தலைமை மருத்துவரைப் பார்த்து, “டாக்டர்!….என் மகனுடைய எந்த எந்த உறுப்பு யார் யாருக்குத் தேவையோ அதை எல்லாம் உறுப்பு தானம் செய்ய எனக்கு பூரண சம்மதம்!………அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நீங்க உடனே செய்து விடுங்க!…நான எல்லா எக்ரிமெண்டிலும் கையெழுத்து போட்டுத் தருகிறேன்!…”

என்று தலைமை டாக்டரிடம் சொல்லி விட்டு, அருகில் தன்னை சூழ்ந்து நின்ற கொண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து கண்ணீர் மல்கச் சொன்னார்!

“என் ஆழ்ந்த வருத்ததில் பங்கு பெற இங்கு ஓடி வந்த என் அருமை சகோதரர்களே!…இந்த துக்க நேரத்திலும்கூட உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான்!…..இனி மேல் நீங்களும் அதை புரிந்து கொண்டு செயல் படவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!

மதப் பற்று வேறு, மத சார்பு வேறு இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை, இந்திய நாட்டில் உள்ள பல அரசியல் தலைவர்களே இன்னும் புரிந்துகொள்ளாமல் பாராளுமன்றத் தேர்தல் வரும் நேரத்தில் நாட்டில் கலவரம் உருவாகும்படி பேசுகிறார்கள்!. மதப்பற்று என்பது நம் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயம்! அதே சமயம் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் மதசார்பற்ற நிலையைக் கடை பிடிக்க வேண்டும்! இது தான் இந்திய நாட்டின் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!….”

-8-

அந்த ஆன்மிகவாதி, பொது வாழ்க்கையில் மத சார்பற்ற முறையில் தெளிவாக நடந்து கொண்டதைப் பார்த்த கூடி நின்ற கூட்டம் வியப்பில் ஆழ்ந்து விட்டது!

– 2014 ஆண்டு பாவை மலர் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை!- பாவைமலர் ஜூலை 2014 இதழில்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *