அமெரிக்காவில் ஒரு நகர நீதி மன்றத்தில் கல்லூரி மாணவன் ஜார்ஜ் தன் முகத்தை கைகளில் புதைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அன்றைய வழக்கு ஜார்ஜ் பற்றியது கூட இல்லை… ஆனால், அவன் உள்ளத்தில் சொல்ல முடியாத பயம், நடுக்கம்…எதிர்பார்ப்பும் கூட.
இருபத்து மூன்று வயதான ஓர் இளைஞன் – மைக்கேல் – அவனைப் பற்றின வழக்கு. மைக்கேல் ஜார்ஜின் இளம் வயது நண்பன். மைக்கேல் செய்த குற்றத்துக்காக 15 ஆண்டு தண்டனைக்கு ஆளாகி, ஏற்கெனவே மூன்று ஆண்டுகள் சிறையில் கிடந்தவன். இப்போது அவனுடைய வழக்கு இரண்டாம் முறையாக அதே நீதிபதி முன் விசாரிக்கப் படுகிறது.
மைக்கேல் செய்த குற்றம்? பல வீடுகளில் கொள்ளை அடித்து, பொருள்களை விற்றது.
பணம் இருப்பின் அடுக்கு மாடியில் சுக வாழ்வு, பணம் இல்லையெனில் அடித்தளத்தில் வீழ்வு – மற்ற உலக நாடுகள் போலவே, இதுபோன்ற சமுதாய வேறுபாடுகளை அமெரிக்காவிலும் அப்பட்டமாகவே பார்க்கலாம். இந்த வேறுபாட்டினால் அந்த இளைஞனின் வாழ்க்கையில் சில ஆண்டுகள் அழிக்கப்பட்டன. கைதானபின் நீதிமன்றத்தையே எட்டாமல்போய் சிலரின் வாழ்நாட்கள் அழிவதையும் அமெரிக்காவில் பார்க்கலாம்.
கம்பீரமாக அமர்ந்திருந்த நீதிபதி மேசையை ஒரு முறை மர சுத்தியால் தட்டினார்.
நீதி மன்றம் அமைதியானது. “ இந்த இளைஞனுக்கு ஆதரவாக இங்கு யாராவது இருக்கிறீர்களா?” என்றார் நீதிபதி. அமெரிக்க நீதிமன்றத்தில் ஓர் அதிசயமான கேள்விதான். கூடியிருந்த பொது மக்கள் எல்லோருமே ‘இருக்கிறோம்’ என்பதுபோல ஒட்டு மொத்தமாக கை தூக்கினர். இதை நீதிபதியே எதிர்பாக்கவில்லை என்பதை அவர் முகத் தோற்றமே காட்டியது.
மைக்கேல் தன் கண்களைத் துடத்துக் கொண்டான் – தனக்கு இத்தனை பேரின் ஆதரவா? எப்படி கிடைத்தது? இதற்கு பின்னணியாக…
மைக்கேல் எட்டாம் வகுப்பைத் தாண்டவில்லை…அவனுடன் எட்டாம் வகுப்புவரை படித்த ஜார்ஜ் தற்போது கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவன். சமூக நீதி வகுப்பில் இளம் சிறைக் கைதிகளைப்பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுத ஆரம்பித்தானாம். கொள்ளையடித்த வழக்கில் மைக்கேல் கைதானபோது பத்திரிக்கைகளில் வெளியான அவனுடைய படத்தை ஜார்ஜ் பார்த்திருக்கிறான். மைக்கேல் சிறையில் கிடப்பதும் ஜார்ஜுக்கு தெரிந்தது. மைக்கலுக்கு ஒரு கடிதம் எழுதினான். அந்தக் கடிதம், தன்னைப்பற்றி நினைத்துப் பார்க்கக்கூட ஒருவன் இருக்கிறானா என்ற நம்பிக்கை பொறியை மைக்கேலின் உள்ளத்தில் பெருந்தீயாக வளர்த்தது.
இருவரும் முதலில் அடிக்கடி கடிதம் பரிமாரிக்கொள்ள, பிறகு போனில் பேசிக்கொள்ள, ஜார்ஜின் கட்டுரை வலுவெடுத்தது. ஜார்ஜ் முழுமூச்சாக அதிகாரிகளிடமும், சிறைபட்டவனின் குடும்பத்தாரிடமும், கொள்ளைக்கு ஆளானவரிடமும் நேரில் பேசி விவரம் சேகரித்தான்; கட்டுரையில் சேர்த்தான். சில மாதங்களுக்குப் பின், அதிகாரிகளின் சம்மதத்துடன் இணையதளத்தின் மூலமாக மைக்கேல் ஒரு நேரடிப் பேட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சாதாரண கைதிகளுக்குக் கிடைக்காத மிகப் பெரிய வாய்ப்பு; சமூக வலைதளங்கள் மூலமாக சிறைபட்டவனுக்கு ஆதரவு குவிந்தது.
மைக்கேலின் வழக்கை இரண்டாம் முறையாக விசாரணை செய்ய வாய்ப்பு கேட்டு நீதிபதியை அணுகிய போது, அவரும் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். விசாரணையின் போது மைக்கேல் தன் மனதில் இருந்ததை கொட்டித் தீர்த்தான். அவனுக்கு எப்படித்தான் அவ்வளவு துணிவு வந்ததோ, எப்படித்தான் அவ்வளவு தெளிவாக தன்னைப்பற்றி பேச முடிந்ததோ…தான் செய்த கொள்ளைகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் என்றும் தன் குடும்ப ஏழ்மை நிலையாலும் என்றும் விளக்கினான். சிறையில் இன்னும் 12 ஆண்டுகள் இருந்து, 38ம் வயதில் வெளி வந்து மீண்டும் பெரிய தவறுகளை செய்ய வேண்டுமா? மீண்டும் மீண்டும் சிறை வாசம்தானா – வாழ்நாள் முழுக்க? இனி தன்னால் சமுதாயத்திற்கு எந்தவிதமான தொல்லையுமே இருக்காது என்று உறுதியாக சொன்னபோது அவன் குரல் ஓங்கியது; கன்னத்தில் கண்ணீர் பெருகியது.
அதை அடுத்து, ஜார்ஜும் நீதி மன்றத்தில் மைக்கலுக்காக சாட்சி சொன்னான். மைக்கேல் நல்லவன், ஆனால் ஏன் வழி தவறினான்? காரணம் – மைக்கேலுக்கு பன்னிரண்டை எட்டும்போதே அவனது தந்தை குடும்பத்தை புறக்கணித்து ஓடியதும் பள்ளிப்படிப்பை மூட்டை கட்டிய அவன்… அம்மா, தங்கை என்று அன்றாட சாப்பட்டுக்கு பணம் தேட வேண்டிய நிலை…அவனைச் சுற்றி நடந்த வன்முறைகள், போதைப் பொருள்கள், துப்பாக்கி பிரயோகங்கள் என தவிர்க்க இயலாத சூழ்நிலை அவனுக்கு வழி காட்டுவோரின்றி அவனை படு குழியில் தள்ளியது என விளக்கினான். அமெரிக்காவில் மைக்கேல் போல எத்தனையோ இளைஞர்கள், இளம் பெண்கள் வழி தவறி அலைகிறார்கள். இவர்களது வாழ்க்கை வழுக்கி வழுக்கி வழக்கில் நழுவுகிறது.
பொறுமையுடன் கேட்ட நீதிபதி மீண்டும் மர சுத்தியால் மேசையைத் தட்டிவிட்டு, “மைக்கேல், நீ இன்று முதல் ஒரு சுதந்திர மனிதனாக இங்கிருந்து போகலாம் “ என்று உத்தரவிட்டார். இந்தத்தீர்ப்பு மனிதத்துவம் மிகுந்த நீதிபதியின் இரக்கித்தினால் மட்டுமில்லை. மைக்கேல் போன்ற இளைஞர்களை சிறையில் அடைப்பதால் இளைய தலைமுற எதிர்காலம் என்பதிலேயே நம்பிக்கையை இழந்துவிடும் என்பதை நன்றாக உணர்ந்தவராக இருந்ததால் அமெரிக்க நீதித்துறையில் அத்திப் பூத்தாற்போல நடக்கும் நிகழ்ச்சி இது. கூடியிருத்த கூட்டம் மகிழ்ச்சியால் பெருங் கூச்சலிட்டது. மைக்கேல் குலுங்கிக் குலுங்கி அழுதான்.
நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தவனை வாழ்த்த நின்ற கூட்டத்தை பார்வையால் துழாவியவனுக்கு ஏமாற்றம். தனக்கு வாழ்வு தந்த ஜார்ஜ் எங்கே? காணோமே?
சில நிமிடங்கள் நடந்து கார்கள் நின்றிருந்த இடத்தை அடைந்தபோது, பின்னாலிருந்து திடீரென தன் தோளில் ஒரு கை பட்டபோது திடுக்கிட்டு திரும்பியவனை ஜார்ஜின் சிரித்த முகம் வரவேற்றது. நட்பின் அணைப்பில் நின்ற மைக்கேலுக்கு இதயம் இரட்டிப்பாகத் துடித்தது; இருவரின் கைகுலுக்கல் நெடு நேரம் தொடர்ந்தது.
“உனக்கு நான் எப்படி…” என்று தடுமாறிய மைக்கேலைத் தடுத்து, ஜார்ஜ் “இது உனக்கு இரண்டாம் வாய்ப்பு. புது வாழ்வு. இதை தவற விடாமல் இரு… நான் இருக்கிறேன். உனக்கு ஆதரவாக இந்த சமுதாயம் இருக்கிறது…” என நிதானமாக சொல்லி முடித்தான்.
நட்புக்கு நாடு, மொழி, இனம், மற்றும் பண்பாடு என்ற பாகுபாடு இல்லை. நட்புக்கு பல பரிணாமங்கள். இதுவும் ஒன்று.