இரட்டைத் தத்துவங்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 8,109 
 
 

லண்டன் 1991

“எனக்காக இவ்வளவு சிரமம் எடுத்ததற்கு நன்றி” டொக்டர் ரமேஷ் பட்டேலின் குரலில் நன்றிபடர்ந்தது.

“இந்த நாட்டில் கறுப்பு டொக்டர்களாக வேலை செய்கிறோம். எங்களில் எப்போது என்ன பிழை பிடிப்போம் என்று பார்த்திருக்கிறார்கள் இந்த வெள்ளையர்கள். அவர்களை எதிர்நோக்க நாங்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்பது என் கருத்து”

டொக்டர் கார்த்திகேயன், டொக்டர் ரமேஷ் பட்டேலுக்கு மறுமொழி சொன்னான்.

இருவரும் அவர்களின் தலைமை டொக்டரின் அறையிலிருந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

கார்த்திகேயன் இலங்கையைச் சேர்ந்த தமிழ் டொக்டர். ரமேஷ் லண்டனில் பிறந்து வளர்ந்த இந்தியன். இருவரும் இந்தக் குழந்தைகளின் வார்ட்டில் வேலை செய்கிறார்கள். டொக்டர் ரமேஷ் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டிருக்கிறான்.

இவர்களைக் கடந்து சில நேர்ஸ்மார் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி ஜேன் மார்ட்டின். அவள் டொக்டர் கார்த்திகேயனை அர்த்தத்துடன் பார்த்தாள். இவனுடன் தனியாகப் பேச வேண்டும் என்ற துடிப்பு அவள் கண்களில் தெரிகிறது. ரமேஷ் இருக்கும்போது கார்த்திகேயன் யாருடனும் பேசவிரும்பவில்லை.

இவனைக் கடந்து போன ஜேன்,; கார்த்திகேயனை திரும்பிப் பார்த்தாள். ரமேசுக்குத் தெரியாமல் ஜேனுடன் சாடையாய் கண்காட்டினான். ‘உன்னை நான் இரண்டு மணிக்குச் சந்திப்பேன்’ என்பது போல் தன் மணிக்கூட்டைக் காட்டிச் சைகையிற் பேசினான்.

நேரம் இப்போது பன்னிரண்டு மணியாகிறது. ஜேன் அவளுடைய மத்தியானச் சாப்பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். திரும்பி வந்ததும் மிகவும் பிஸியாக இருப்பாள். பின்னர் மூன்றரை மணிக்கு அவளின் வேலை முடிந்து போய்விடுவாள்.

ரமேசுக்கு என்ன நடந்தது என்று அறிய அவள் ஆசைப்படுவாள் என்று கார்த்திகேயனுக்குத் தெரியும்.

ரமேஷ் தன் நேரத்தைப் பார்த்தான்.

‘எனக்கு அவசரமான வேலையிருக்கு’ என்று முணுமுணுத்துக்கொண்டான்.

“பின்னேரம் ‘பாரில்’ சந்திக்கிறேன்” கார்த்திகேயனும் அவசரப்பட்டான். அவன் கிளினிக்குக்குப் போக வேண்டும். இன்று இரண்டு டொக்டர்கள்தான் வேலை செய்கிறார்கள். மிகவும் பிஸியாக இருக்கும். கார்த்திகேயன் நடையைத் துரிதப்படுத்தினான்.

இவனைத் தெரிந்த ஒரு சில நோயாளிகள் தங்கள் மரியாதையைப் புன்சிரிப்பில் வெளிப்படுத்தினர். சிலர் இவனைத் தெரியாதவர்கள் போல் கடந்து சென்றனர். இறப்பையும், பிறப்பையும் நிர்ணயிக்கும் வைத்தியசாலை. மனிதர்கள் இயந்திரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

தனக்குத் தேவையில்லாவிட்டால் மற்றவர்களுடன் ஒரு தொடர்பும் வைத்துக்கொள்ளாதவர்கள் ஆங்கிலேயர்கள்.

அறிமுகம் செய்து வைக்காவிட்டால், அடுத்தவனின் முகத்தையும் பார்க்காதவர்கள் ஆங்கிலேயாகள்;. ஆனாலும், இந்த கட்டுப்பாடான பழக்கவழக்கங்களைத் தாண்டி ஜேன் இவனுடன் பழகுவாள்.

அவள் வித்தியாசமானவள். இரக்க மனப்பான்மையுடையவள். மற்றவர்கள் அநியாயமாகத் தண்டிக்கப்படுவதைத் தாங்க மாட்டாதவள்.

அவளை முதற்தரம் சந்தித்தபோது ஆழ்கடலின் நிறத்தில் இவனை வெறித்துப் பார்த்த அவளின் நீல விழிகளுக்குள், இவன் தடுமாறி விழுந்து விட்டான். இப்படியும் ஆழமாக விழிகள் துளைத்துப்பார்க்குமா?

“நீங்கள் இந்தியனா” அறிமுகமாக முதலே அவள் கேட்ட முதற்கேள்வியது.

“சமய ரீதியில் நான் இந்து, அரசியல் ரீதியில் அனாதை, பிரித்தானிய சமுதாய ரீதியில் ஒரு கறுப்பன்”

இவன் இப்படிக் குதர்க்கமாக மறுமொழி சொன்னது அவளுக்கு வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும். தன் நீல விழிகளால் இவனை இன்னொரு தரம் ஆழம் பார்த்தாள். இவனின் அடிமனத்தின் ரகசியங்களை கண்டுபிடிக்கவேண்டும் என்ற ஆவல் அந்தப் பார்வையில் பதிந்திருந்தது.

பழகத்தொடங்கிச் சில மாதங்களில் இவன் கேட்டான். “ஏன் என்னைக் கண்ட அடுத்த வினாடியே நான் இந்தியனா என்று கேட்டாய்”

“இந்தியக்கலாசாரத்தில் எனக்கொரு பயம்”. அவள் இவனை ஏற இறங்கப்பார்த்தாள்.

இவன் அவளுடனிருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். இவன் மரக்கறிச் சைவம். ஆங்கிலேயர் தங்கள் முறையிற் செய்த சுவையற்ற மரக்கறச் சாப்பாட்டை ஏனோ தானோ என்று சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

“ஏன் இந்தியக் கலாசாரத்தில் என்ன பயம்” என்று கேட்கமாட்டானா என்ற ஆதங்கம் அவள் பார்வையிற் குறுகுறுத்தது. கேள்வியைக் கேட்டவள் மறுமொழிக்குத் துடிப்பாள் என்று அவனுக்குத் தெரியும்.

“உங்கள் கலாசாரமும் என்னைப் பயமுறுத்துகிறது” அவன் எடுத்தெறிந்து சொன்னான்.

அவள் இவனை வழக்கம் போல் நிதானமாக அவதானித்தாள்.

வெள்ளைத் தோலைக் கண்டால் வாயெல்லாம் பல்லாய்ச் சிரித்து வந்தனம் செய்யும் கறுப்பனாக இவனில்லாமலிருப்பது அவளுக்கு வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும். இவனிடம் பேசிக்கொண்டிருப்பதில் அவளுக்கு விருப்பம் என்றும் அவனுக்குத் தெரியும்.

“இந்தியக்கலாசாரத்தில் உனக்கு என்ன பயம்? நரபலி கொடுப்பதும், உடன்கட்டையேற்றுவதும் இந்தியாவில் எப்போதோ தடைசெய்யப்பட்டு விட்டது” அவன் கிண்டலாகச் சொன்னான்.

“சிசுக்கொலை செய்கிறார்களே..பெண் சிசுக்கொலை செய்கிறார்களே….” அவள் குரலில் ஆத்திரமா அல்லது பரிதாபமா?

அவன் அவளையேறிட்டுப் பார்த்தான். பொஸ்னியாவில் ஒட்டுமொத்த மனிதக்கொலை பயங்கரமாக நடப்பதை இவள் அறியாளா?

“காந்தி அஹிம்சை சொன்னாரே” அவள் தொடர்ந்தாள். இந்தியக் கலாசாரத்தின் ‘புனித’ மான பகுதிகளை நிஜமாக்க நினைக்கும் கனவுகளில் வாழ்பவளா இவள்?

“உலகமெல்லாம் கொடுமைகளும், கொலைகளும் நடக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் படிப்பது தேவாரம், உடைப்பது திருக்கோயில் என்ற பொய்மையிற்தான் வாழ உலகம் எதிர்பார்க்கிறது”

“உலகம் சிசுக்கொலையை ஏற்கிறதா, அது பாவமில்லையா”

“உன்னுடைய நாட்டில் இனத்துவேசமில்லையா, மனிதனை மனிதன் இப்படித்துவேசத்துடன் நடத்தலாமா, உன்னைச் சுற்றி உலகமெல்லாம் கொலைகள் அரசியலால் நடக்கிறதே” அவன் விட்டுக்கொடுக்காமற் சொன்னான்.

“இனத்துவேசமும் சிசுக்கொலையும் வித்தியாசமான விடயங்கள்” அவள் தன் குரலையுயர்த்தி விவாதம் செய்தாள். நீலவிழிகளில் குழப்பம்.

“ஏகாதிபத்தியமும் இனத்துவேசமும் வித்தியாசமான விடயங்களா” அவன் கிண்டலாகக் கேட்டான்.

ஜேன், கார்த்திகேயனுடன் விவாதிப்பதில் ஆர்வம் காட்டினாள்.

அவன் ஒரு டொக்டர். இலங்கையிலிருந்து மேற்படிப்புக்காக வந்தவன். சிங்கள அரசாங்கம் இலங்கைத் தமிழர்களை மிருகங்கள் போல் வேட்டையாடுவதால் அவன் தான் பிறந்த தாய் நாட்டுக்குத் திரும்பிப் போகாமற் தங்கி விட்ட பிரயாணி. போக இடமற்ற அகதி.

இங்கிலாந்து அவனை ஒரு நாளும் ‘கவர்ந்து’ பிடிக்கவில்லை. தாங்கள் வெள்ளையர்கள், உலகத்தையாண்டவர்கள் என்ற மமதையில் ஆங்கிலேயர் நடந்து கொள்ளும் விதம் அவனின் சுயமரியாதையைச் சீண்டியிழுத்தது. வெள்ளையர்களின் ஆஸ்பத்திரிகளில் கறுப்பு டொக்டர்களான ரமேஷ் பட்டேல் போன்றோரை அவன் செய்யும் வேலையில் திறமையாக இல்லை என்று குற்றம் சாட்டி இந்த வெள்ளையர்கள் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமில்லை.

ரமேசின் வார்ட்டில் ஒரு குழந்தை அகாலமாக மரணமடைந்து விட்டது. அந்த வார்ட் ஆங்கில நேர்ஸ் ரமேஷின் கவனக்குறைவால் அந்தக் குழந்தை இறந்து விட்டது என்று குற்றம் சாட்டி புகார்செய்திருந்தாள்.

அவள் செய்திருந்த குற்றச்சாட்டு நிரூபணமானால் ரமேசுக்கு வேலை போகலாம். ரமேசின் வாழ்க்கையே பாழடையலாம்.

கார்த்திகேயன் அந்த வார்ட்டின் சீனியர் டொக்டர். தன்னைப்போல் ஒரு கறுப்பு டொக்டர் படும் துன்பத்தையுணர்நதவன்.

இன்று ரமேசைக் கூட்டிக்கொண்டுபோய் அவர்களின் தலைமை டொக்டரிடம் பேசினான்;.

ரமேசுக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. கார்த்திகேயன் யோசனையுடன் தன் வார்ட்டுக்குள் நுழைந்தான்.

வயிற்றில் பசி கிள்ளியது. யாரும் நேர்ஸ் தென்பட்டால் காப்பி போட்டுத் தரமாட்டாயாயென்று கேட்க வேண்டும் போலிருந்தது.

தானாகப் போய் ஒரு கோப்பி போட்டுக்கொண்டான். பின்னேர ‘வார்ட் ரவுண்ட்’ தொடங்க வேண்டும்.

இவனின் மேலதிகார டொக்டர் இரண்டு கிழமைகளாக லீவிலிருந்து இன்று தான் வந்திருந்தார். வார்ட்டைப் பராமரிக்கும் பொறுப்பின் பெரும் பகுதி கார்த்திகேயனின் தலையிற் கிடந்தது.

“கார்த்தி” ஜேன் இவன் பின்னால் வந்து இவன் கோட்டைச்சுரண்டினாள்.

‘என்ன’ என்பது போல் திரும்பிப்பார்த்தான்.

“ரமேசுக்கு என்ன நடந்தது”

“ஒன்றும் நடக்கவில்லை. விசாரணைக்குப் போக முதல் தன்னை வந்து இன்னொரு தரம் பார்க்கச்சொல்லிப் பெரிய டொக்டர் சொன்னார்.

“டொக்டர் ரமேஷ் ஒரு நல்ல டொக்டர். இந்திய டொக்டர்களைப் பிடிக்காத படியால் இந்த ஸிஸ்டர் சும்மா குற்றம் சாட்டுகிறாள்”

ஜேன் பெருமூச்சுடன் சொன்னான். இனவாதம் பிடித்த இந்த லண்டனில் ஜேன் போன்ற பல பெண்கள் இருப்பதனால் தான் நீதியும் நேர்மையும் நிலைத்து நிற்கிறதோ.

“பலமுள்ளவன் ஜெயிக்கும் உலகமிது. நாங்கள் கறுப்பர்…வலுவிழந்தவர்கள்” கார்த்தி எரிச்சலுடன் முணுமுணுத்தான்.

“ஸிஸ்டர் ஸிம்சன் பலமுள்ளவளா” ஜேன் வழக்கம் போல் தன் அழகிய நீலவிழிகளை இவனிற் தவழவிட்டாள்.

இவன் மறுமொழி சொல்லவில்லை.

“அவள் ஒரு…நீ சொல்லுவது போல் ஒரு இனவாதி…அவர்களைத் திருப்பித் தாக்காதபடியால்தான் அவர்களுக்கெல்லாம் பலம்வருகிறது”

அவன் மௌனமாக இருந்தான். புதிதாக வந்த ஒரு துருக்கியக் குழந்தையின் நோட்சைப் படித்துக்கொண்டிருந்தான்.

ஜேன் அங்குமிங்கும் பார்த்தபடி அவனின் முகத்தருகே குனிந்தாள்.

“கார்த்தி இந்தக் குழந்தையின் உண்மையான வருத்தத்தைப்பற்றி எங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று நினைக்கிறாய்” ஜேன் என்ன சொல்ல வருகிறாள் என்று தெரியும். கறுப்பர்களை ஏனோ தானோ என்று நடத்துமுலகமிது. துருக்கியக் குழந்தையின் பெற்றோருக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்கள் மொழிபெயர்க்கவென்று கூட்டிக்கொண்டு வந்த சொந்தக்காரனும் சரியான விதத்தில், குழந்தையின் நோயைப் பற்றிய காரணங்களைச்சொல்லவில்லை.

குழந்தைக்கு என்ன வருத்தம் என்று தெரிந்து கொள்ள டொக்டர்கள் பல பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

துருக்கிய குழந்தைக்கு வயது நான்கு மாதம். துரும்பாய் இளைத்துப்போன தோற்றம். எந்த நேரமும் சிணுங்கிக்கொண்டிருக்கும். பாவம். பால் குடிக்காமல் அழுது கொண்டேயிருக்கும். குழந்தை ஒன்று பால் குடிக்கமறுத்தால், ஒன்றில் குழந்தையின் குடலிற் பிழையாக இருக்கலாம். பால் குடிக்கத் தேவையான சக்தியை குழந்தையின் இருதயம் கொடுக்காமலிருக்கலாம்.

துருக்கிய குழந்தை பால் போத்தலை வாயில் வைத்த ஒரு சில நிமிடங்களில் மூச்சு வாங்கத்தொடங்கிவிடும். சிலவேளை குடித்த பாலையே சத்தி எடுத்துவிடம்.

பரிதாபமான அந்தக் குழந்தையின் தோற்றம் கார்த்திகேயனின் உணர்வைச் சிலிர்க்கப் பண்ணும்.

“இந்தத் தாய்கள் சரியான சோம்பேறிகள்” அந்த வார்ட் ஸிஸ்டர் சிலவேளை முணுமுணுப்பாள்.

கார்த்திகேயன் அவசரமாக வேலையிலீடுபட்டுக்கொண்டிருந்தான்.

வார்ட்டில் எங்கேயோ அபாய மணி ஒலித்தது. யாரோ குழந்தை இறக்கும் தறுவாயிலிருக்கிறது என்று அர்த்தம்.

கார்த்திகேயன் ஸ்டெதெஸ்கோப்பை எடுத்துக்கொண்டு ஓடினான்.

துருக்கிய குழந்தையின் உடல் அடித்துப்போட்ட வாழைத்தண்டாய்க் கிடந்தது. ஜேன் அந்தக்குழந்தைக்குப் பிராணவாய்வுக் குழாய்களைப் பூட்டிக்கொண்டிருந்தாள்.

கார்த்தி உடனடியாகக் குழந்தைக்குத் தேவையான சிகிச்சை செய்தான். ‘இன்றாவீனய்ட்ரிப்’ ஏற்றினான் (ஐஎ). துருக்கிய குழந்தை மூச்செடுக்கத்துடித்தது.

உடனடியாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

“இந்தக் தாயின் முதல் இரண்டு குழந்தைகளும் இருதய நோயால் இறந்து போனார்களாம்.

ஜேன் முணுமுணுத்தாள்.

“என்ன” கார்த்திகேயன் பதட்டத்துடன் கேட்டான்.

ஜேன்தான் முதற் சொன்னதை இன்னொரு தரம் திருப்பிச்சொன்னாள்.

இந்தத் துருக்கியக் குழந்தைக்கு இருதயநோய் இருக்கிறது என்ற செய்தி முதலே கிடைத்திருந்தால் இந்தக் குழந்தைக்கான நோயின் காரணத்தைக் கண்டறிய டொக்டர் கார்த்திகேயன் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பான்.

குழந்தை இறந்து கொண்டிருக்கிறது. ஏழைத்துருக்கியத் தாய் கண்ணீரும் கம்பலையுமாக முன்னின்றழுதாள். இவளைப்போல் எத்தனை தாய்கள், இனத்துவேசத்தாலும், ஏகாதிபத்திய வெறியாலும் தங்கள் குழந்தைகளையிழந்தார்களோ? அந்தக் குழந்தையைப் பிழைக்க வைக்க பட்டபாடு டொக்டர் கார்த்திகேயனுக்குத்தான் தெரியும்.

“இந்த வார்ட் ஸிஸ்டர் இனவாதம் பிடித்தவள் என்று சொன்னேனே நான் சொன்னது சரிதானா..”

ஜேன் கேள்வி கேட்பதில் கெட்டிக்காரி.

‘சரியான நேரத்தில் சிகிச்சை செய்யாதபடியால் யாரோ ஒரு குழந்தையிறந்து விட்டதாக ரமேசின் மேல் பழியைப் போட்டாளே இந்த ஆங்கிலேய ஸிஸ்டர். இப்போது என்ன மறுமொழி சொல்லப்போகிறாள். அவள் காலாகாலத்தில் இந்தக் குழந்தையின் உண்மையான நிலையயறிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தக் குழந்தைக்கு இந்த நிலை வந்திருக்குமா’?

“ஜேன் ஏழ்மைக்கு முகம் கொடுக்க முடியாத இந்தியாவில் மட்டும் தான் சிசுக்கொலை நடக்கிறது என்று நினைக்கிறாயா” கார்த்திகேயன் நிதானமாகக் கேட்டான்.

ஜேன் மறுமொழி சொல்லவில்லை. வெள்ளையினத்தின் பாரபட்சத்ததால் எங்கேயோவெல்லாம் மனிதக்கொலைகள் நடப்பதை அவள் எப்படி மறுப்பாள்?

(யாவும் கற்பனையே)

பனிமலர் பத்திரிகை-லண்டன் பிரசுரம் ;1991

Print Friendly, PDF & Email

1 thought on “இரட்டைத் தத்துவங்கள்

  1. மிகவும் நல்ல, கருத்தாழமிக்க கதை. ஜாதி வெறி என்பது இந்தியா முதல் இங்கிலாந்து வரை எல்லா இன மக்களிடமும் பரவிக்கிடக்கிறது. இதில் ஒருவர் இன்னொரு சமுதாயத்தைக் குறை சொல்ல என்ன தகுதி உள்ளது? இந்த சிந்தனையைத் துவண்டும் சிறந்த கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *