(1995 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நெடுஞ்சாலை உருகிப் பிசுபிசுத்தது. உச்சியில் பீறிட்ட அக்னிப் பிரவாகம் மனித அவஸ்தை பற்றி அலட்டிக் கொள்ள வில்லை. முடுக்கி விடப்பட்ட வாகனங்கள் பாதையை நிறைத் தன. அவரவர் சுயதேடல்களோடு இயந்திர முகம் தரித்த மனிதர்கள் உள் விசாரத்துடன் விரைந்தனர். கட்டிடக் காட்டில் மூச்சுத் திணறி விறைத்துக் கொண்டது தலைநகர். கும்பலில் ஒருத்தியாய் ஒய்யாரமாய் பஸ் தரிப்பிடத்தில் நின்றாள் இவள், போவோர் வருவோரின் முகவிலாசங்களை, முனைப்போடு துருவியவாறு.
நாகரீக உடையும் தோளில் தொங்கிய கைப்பையும், கண்களில் இழைந்த கவர்ச்சியும் இவளை ஒரு அசலான காரியாலயப் பெண்ணாய் இனங்காட்டின. கணிப்பு யாருடைய தாக வென்றாலும் இருக்கட்டும். ஒரு முப்பதைத் தாண்டச் சம்மதிக்காத இளமைத் தோற்றம் இவளுக்கு. பஸ்ஸை எதிர் பார்த்து விசனப்பட்டு கைக்கடிகாரத்தை முறைத்துப் பார்த் தாள். இவளது எதிர்பார்ப்பின் உள்ளார்த்தமே வேறு
இதுபோன்ற ஒருநாளில்தான் காதுக் கம்மல் கச்சிதமாய் வட்டிக்கடையில் போய் குந்திக் கொண்டது. இப்போது ஜொலிக்கும் இமிடேஷனுக்கு எந்த மடையன் பணம் தரு வான். இன்றும் வியாபாரம் படுமோசமாகிப் போனதில் உள்மனம் அழுது தொலைத்தது. என்றாலும் – நம்பிக்கைச் சரடு முற்றாக அறுந்துவிடவில்லை. இன்றைய போஜனத்திற்கு எவனாவது வரலாம் என்ற எதிர்பார்ப்பில், சளைக்காமலிருந் தாள். இந்த எய்ட்ஸ் பயம் வந்த பிறகு, அநேகருக்கு இதிலி ருந்த பிடிப்பெல்லாம் அன்னியமாகி விட்டது.
இதன் காரணமாய் இவள் பிழைப்பிலும் கணிசமான பாதிப்புதான்.. முற்சந்தி சிக்னல் கம்பம், சிவப்பு விளக்கு காட்ட, சீறிச் சினந்து விரைந்த வாகனங்கள் வேகம் குறைந்து தணிந்தன. வாகன ஓட்டிகள் மஞ்சள் நிறத் தரிசனத்திற்கு காத்துக் கிடந்தார்கள். இவளது விழிகள் எதிர்படுவோரின் தொடர்பிற்கு பச்சை விளக்கு காட்டின. ஒரு வரவு நெருங்கும் சமிக்ஞையில் தீவிரமடைந்தாள். குழைந்து, நெளிந்து, பிருஷ் டம் குலுக்கி ஒரு தேவதையைப்போல் புன்னகைத்தாள்.
இந்தப் புன்னகையின் அச்சாரத்தில்தான் இவள் அன்றாடமே அசைகிறது. இவளைப் பொறுத்தமட்டில் அழுகையை மறந்து ஆண்டுகள் பலவாகி விட்டன. மனித இயல்புகளில் ஒன்று ஊனமாக, மற்றது முனைப்பெடுத்து வலிமை பெறும். இவளுக்கு வாழ்வே ஊனமாகிப் போனபின் – எந்த இயல்புகள் பற்றியும் பெரிய சுயவிசாரணைகள் எதுவும் இல்லை . பஸ் ஹோல்ட்டில் நின்றிருந்த வாட்டசாட்டமான வாலிபன் ஒருவ னின் பார்வை இவள்மீது குறுகுறுத்துப் படர்ந்தது. தனக்கும் குஞ்சுகள் இரண்டுக்கும் இராப் போசனத்திற்கு வழி பிறக்கப் போகிறது என்ற நினைப்பில் மகிழ்ந்து அவனைப் பார்த்து கனிவோடு சிரித்தாள். அவன் அருகில் நெருங்கி,
‘புறக்கோட்டை, போற பஸ் வருது! நீங்க எங்க போகனும்?’
‘ஆ… நானும்… அங்கதான்!’
மகிழ்ச்சியில் இவளுக்கு வார்த்தைகள் தடுமாறின. சற்று நேரத்தில் இருவரும் பேருந்தின் நெருக்கத்தில் ஐக்கியமாயி னர். நெரிசலில் இருவர் நயனங்களும் பரிபாஷை பேசின. புறக்கோட்டை, ரயில் நிலையத்தின் முன்னால் இருவரும் இறங்கி மகிழ்ச்சியோடு நெருங்கி நடந்தனர்.
இவ்வளவு அழகாயிருக்கும் இவள் தொழிலுக்கு புதிதாயிருக்கலாம். அவன் மனதில் நிர்ணயங்கள் வலுத்தன.
‘கூல்டிரிங்ஸ் ஏதாவது குடிப்போமா?’
‘இல்ல. இப்ப வேண்டாம்’
‘அப்ப… நான் வரப்போறன். இன்னொரு நாளைக்கு பார்ப்போம்.’
“ஒங்கள எங்க சந்திக்கலாம்?’
இப்படி ஒரு திடீர் மாற்றத்தை அவன் முன் வைப்பான் என்று இவள் எதிர்பார்க்கவேயில்லை. ஏமாற்றத்தால் அதிர்ந்து போய்,
‘ஏனப்படி? என்ன பிடிக்கல்லியா?’
‘நோ, நோ, அப்பிடியெல்லாம் ஒன்டுமில்ல. இண்டைக்கு கையில் காசு அவ்வளவா இல்ல!’
கஷ்டப்பட்டு பிடித்த கிராக்கியை, விட மனமில்லாமல், அவனிடமிருந்து சாதகமான ஒரு பதில் வந்து தொலைக்க வேண்டும் என்ற கரிசனையிலும்,
‘எவ்வளவு வச்சிருக்கீங்க?’ என்று கேட்டாள்.
‘ஒரு இருநூறுக்கு மேல இருக்காது!’
தூரத்தே பாதையில் தெரிந்த கானல் அசைவை அசிரத்தையுடன் பார்த்தவாறு ‘சரி நடங்க போவம்!’ என்றாள். இவள் வாங்கும் வழக்கமான ரேட்டைவிட இது கொஞ்சம் கம்மி தான். இதையும் விட்டால் சுத்த வாய்வும் ஜலமும்தான்! வாடகை அறைக்கு நூறு போக, இரவு சாப்பாட்டுச் செலவுக்கு நூறு என்று மனதிற்குள் மிகச் சிக்கனமாக வரவு செலவு போட்டாள்.
நகரின் பூதாகரமான விலைவாசி ஏற்றத்தில், மிக மலி வான விலைக்கு ஒரு தரமான பொருளின் பண்டமாற்று நிகழவிருப்பது அவனுக்கு உடன்பாடான சங்கதிதான். அவ னது முதுகுத் தண்டில் உஷ்ணம் பரவி அத்துவான வெளியில் சிறகசைக்கும் பறவையாய் உற்சாகமடைந்தான். நகர மையத் தைத் தாண்டி, ஒரு குறுக்குப் பாதை, அதையும் தாண்டி இரு பக்க இடுக்குச் சுவர். இவற்றினூடே பயணம் தொடர்கிறது இவளது வழிகாட்டலில்தான்.
குப்பென்றடித்த காற்று, மிக மோசமான சிறுநீர் நெடியை அவன் முகத்தில் அறைந்து விட்டு விலகிச் சென்றது. அவன் அசூசையில் முகம் சுளித்து ஒருகணம் தயங்கி நின்றான். வழிகாட்டுபவளின் சைகையும் அழைப்பும் உற்சாகம் தரவே மீண்டும் நடந்தான். வரிசை வரிசையாக பலகை வீடுகள். மனித நடமாட்டங்கள் அங்கு அபூர்வமாக இருந்தபோதும், சாத்திய முகப்புகளில் யார் யாரோ, மெல்லிய தொனியில் குசுகுசுத்துச் சிரித்தார்கள். தங்களின் இலக்கு அதுதான் என் பதை இவளது முகபாவம் சற்றென உணர்த்தியது.
வெற்றிலைக் காவி படிந்த பற்கள் வெளியே தெரிய ஒரு கிழவி வந்து இவளை வரவேற்றாள். நூறு ரூபாய் நோட்டு அவள் கைக்குப் பறிமாற்றம் செய்யப்பட்டதும், அது அசலானதுதானா என சூரிய ஒளியில் விரித்துப் பார்த்துவிட்டு திருப்தியோடு அதை இடுப்பில் சொருகிக் கொண்டாள்.
குருவிக்கூடு போன்ற சிறிய அறையொன்று இவர்களது தற்காலிக அந்தப்புரமாயிற்று. குடிப்பதற்கு ஏதும் தேவையா? என்று கிழவி கேட்க இவள் சைகையினால் வேண்டாம் என்றாள். இது போன்ற இடங்களில் வாடிக்கையாளர் தேவை கருதி அநியாய விலையில் சோமபானம் பறிமாறப் படுவதுண்டு. அது பெரும்பாலும் கலவை செய்யப்பட்ட மட்டமான வடிசாராயம் ஆகும்.
பலகைக் கதவை முன்பக்கத்தால் அறைந்து மூடிவிட்டு கிழவி மறைந்தாள்.
‘இந்த தொழிலுக்கு… புதிசா?’ ஆவலோடு கேட்டான் அவன.
‘ஒரு ஆறு மாசமிருக்கும்’
‘புள்ள, குட்டி… புருஷன்?’
‘புருஷனைத் தவிர எல்லாம் இருக்கு!’
‘அவர் இப்ப எங்க?’
‘என்னையும், புள்ளகள் ரண்டையும் படுகுழியில் தள்ளிட்டு நாசமாப் போனவன், ஒருத்தியோட ஓடிப் போயிட்டான்.’ பலகைச் சுவர் வழியே எட்டிப் பார்த்த சூரிய ஒளியை வெறித்தவாறு இவள் நெடுமூச்செறிந்தாள்.
பத்திரிகை நிருபர்கள் போல் வருபவனெல்லாம் இப்படி அசட்டுத்தனமாக கேள்விகளை அடுக்கிக் கொண்டு போவது ஒன்றும் இவளுக்குப் புதிய சங்கதிகளல்ல! வீட்டில் அழகான மனைவியரை வைத்துவிட்டு இதற்காக, கண்ட கண்ட இடங்க ளில் புத்தி தடுமாறிப் பேயாய் அலைபவர்களில் இவனும் ஒருவனாய் இருக்கலாம். இவர்களைப் பார்த்து உறைப்பாய் நாலு கேள்வி கேட்க வேண்டும் என்று இவள் பலமுறை எண்ணியிருக்கிறாள். அது எப்படி சாத்தியமாகும்? இவளே நாய் வேடம் ஏற்றிருக்கும்போது குலைத்துத்தானே ஆக வேண்டும்?
இவன் மேலும் பேசிக் கொண்டேயிருந்தால், கிழவி ரௌத்திரக் காளியாய் மாறி கதவைத் தட்டி ரகளை பண்ணலாம். அல்லது, கூடுதல் நேரம் எடுத்ததிற்கு தண்டப் பணம் மேலதிகமாக வசூலிக்கலாம். இந்த உணர்வுகள் உந்தித் தள்ள அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அவனருகில் வந்து நெருக்கமாய் ஒட்டிக் கொண்டாள். அவனது சட்டைப் பொத்தானை விலக்கி மார்பில் புதராய் அடர்ந்திருந்த ரோமங்களை விரல்களால் மிருதுவாய் ஸ்பரிசித்தாள். உச்சியில் தரித்துவிட்ட சூரியன் உஷ்ண கிரணங்களை வாரி இறைத்தான். நேரம் பகல் இரண்டு மணியைத் தாண்டியிருந்தது.
பிரதான வீதி வழியாகச் சோர்வுடன் இவள் தள்ளாடி நடந்தாள். வயிற்றுப் பசி உக்கிரமாக தொல்லை கொடுத்தது. பக்கத்து ஹோட்டலிலிருந்து தாளித்த எண்ணெய் மணம் மூக்கைத் துளைத்தது. நூறு ரூபாநோட்டைக் கையில் இறுக்கிப் பிடித்துக் கொண்டு வீட்டுக்குப் போய் சேரவேண்டும் என்ற இவளது எண்ணம் பசி மயக்கத்தில் தளர்வு கண்டது.
கண்களைச் சுழற்றிய பசிக்களைப்பில் சோர்ந்து ஹோட்டலுக்குள் நுழைந்தாள். சந்தடிகளுக்கும் ஓசைகளுக்கும் குறைவே இல்லை. மேசைகளைச் சுற்றி ஈக்கள் பறந்தன. இவளைச் சுற்றி மனித ஈக்களின் பார்வை மொய்ப்புகள். ஒருவித அலட்சிய பாவத்துடன் யமப் பசியைத் தணித்துக் கொண்டிருந்தாள் இவள்.
இவள் சாப்பிட்ட கணக்கு முப்பது ரூபாய் ஆகியிருந்தது. பில்லுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு சர்வரிடம் பாக்கிக் காசை வாங்கி பத்திரமாக மடித்து பர்ஸில் திணித்துக் கொண்டாள். முன் மேசை இருப்பில் பதிமூன்று வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் மிக நீண்ட நேரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அழுக்கு உடை, வறுமைத் தோற்றம், அவனது பரபரப்பும் பாவனையும் ஆகாரத்தைக் கண்டு பலநாளாகியிருக்கலாம் என்று இவளுக்கு எண்ணத் தோன்றியது. எழுந்து வெளியே செல்ல எத்தனித்தவள், அதிர்ச்சியில் மலைத்துப் போய் மீண்டும் உட்கார்ந்து கொண்டாள். அங்கு ஒரு ரகளையே நடந்தது.
அந்தச் சிறுவன் சாப்பிட்டு முடித்து நீண்ட நேரமாகியும் பில்லுக்கு காசு கட்டாததால் சந்தேகம் கொண்ட சர்வர்கள் சாப்பிட்டதுக்கு காசு எங்கடா? என்று அதட்டி அவனைச் சோதனையிட்டார்கள்.
காசு எங்க? என்ற சரமாரியான கேள்விகள் நான்கு திசைகளிலிருந்தும் எகிறிப் பாய்ந்தன. அந்த அப்பாவிச் சிறு வன் திருதிருவென்று விழித்தான். அடுத்த கணம் கேஷியரில் இருந்த தடியன் ஓடிவந்து சிறுவனின் கன்னத்தில் பளார் என்று உரக்க அறைந்தான். இன்னுமொருவன் அவன் தலை மயிரைப் பிடித்து இழுத்து தரையில் எறிந்தான்.
அவனது கண்களில் இருந்து கண்ணீர் உருண்டது. அவனை மேலும் அடிப்பதற்காக கடைச் சிப்பந்திகள் வியூகம் அமைத்தார்கள். கடை முதலாளி கரகரத்த குரலால் உத்தரவு போட்டார்.
‘நல்லா அடிங்கடா! திருட்டு ராஸ்கலை பொலிஸில பிடிச்சுக் கொடுப்போம்!’
இவளது பாதாதி கேசமெங்கும் அந்தச் சிறுவனைப் பற்றிய கருணையினால் உருகித் தவித்தது.
இவள் ரௌத்திரமானாள். ‘இதுக்கு மேல, யாரும் அவனை அடிக்கக்கூடாது நீங்களெல்லாம் மனுஷ பொறப்பு தானா? மூளை பிசகோ, வாய் பேச ஏலாத ஊமையோ? அவன் திருட வரல்லயே! வயித்துப் பசிக்குத்தானே சாப்பிட்டான். ஒரு ஏழைக்கு ஒருவேளை சோறு கொடுப்பதால பெரிய நஷ்டம் வந்திடுமா? ஈவு இரக்கமில்லாம இப்படியா அடிக்கிறது?’ முதலாளியின் மண்டையில் உஷ்ணமேறியது.
‘நீ என்ன அவனுக்குப் பரிந்து பேசிக்கிட்டு, வாரவனுக்கு சும்மா சோறு போட இது என்ன அன்னச் சத்திரமா? அவன் மேல அவ்வளவு இரக்கமென்றா, அவனுடை காசை நீ கட்டு, விட்டுடுறோம்!’
‘கொண்டாய்யா பில்லை!’ என்று இவள் அலட்சியமாகக் கூறிவிட்டு ஐம்பது ரூபா நோட்டை அவன் முகத்தில் வீசியெ றிந்தாள். அதில் பாக்கிப் பணமாக பத்து ரூபாய் திரும்பி வந்தது. சிறுவனின் பிடி தளர இவளை நன்றியுணர்வுடன் ஒருதரம் பார்த்து விட்டு பரிதாபமாக வெளியேறினான் அவன்.
இவள் பஸ் ஹோல்டில் வந்து நின்று சிலவு போன கணக்கை மனதால் கூட்டிப் பார்த்தாள். எஞ்சியிருப்பது முப்பது ரூபாய். அதில் பத்து ரூபாய் பஸ்ஸுக்குப் போனால் மீதம் இருபது. இதில் இரவைக்கு எதை வாங்கி சமைத்துப் போட. இவள் மீண்டும் விழிகளில் ஆவல் தேக்கி புன்முறுவல் காட்டி எவனோ ஒருவனின் வருகைக்காக மீண்டும் காத்திருக்கிறாள்.
– 1995 ஜூலை வீரகேசரி – மீறல்கள், மல்லிகைப் பந்தல் வெளியீடு, முதற்பதிப்பு: நவம்பர் 1996