இரக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 18, 2024
பார்வையிட்டோர்: 473 
 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாகரிக நகரின் முக்கிய வீதி ஜன சமுதாயத்தை இழுத்துச் செல்லும் பெரிய நதி மாதிரி விளங்கிக் கொண்டிருந்தது.

வேகம், அவசரம், அர்த்தமற்ற பரபரப்பு, நெருக்கடி எல்லாம் நிறைந்த காட்சி அது. ஸர்வீஸ் பஸ், பிளஷர் கார், ரிக்ஷா ஆட்டோரிக்ஷா, ஜட்கா தள்ளுவண்டி, இழுக்கும் வண்டி, மோட்டார் பைக், சைக்கிள், வேக உருப்பெற்ற நாகரிக சமுதாயம் பலரக வாகனத் தோற்றங்களாக இயங்கிக் கொண்டிருந்தது.

அவற்றுக்கிடையே – அவற்றின் அருகே, அப்பாவிகளான நடந்து செல்லும் இனத்தவரும் போய் வந்து கொண்டு தானிருந்தார்கள்.

லாரிகள் யானைகள் போல ஊர்ந்து சென்ற ரஸ்தாவிலே, பார வண்டிகளை இழுத்துச் செல்லும் ‘மனித மிருக’ங்களும் அசைந்து அசைந்து முன்னேறிக் கொண்டிருந்தன. சுமக்க முடியாத சுமைகளைத் தலைமீது ஏற்றி, எப்படியோ தாங்கியபடி நடக்கும் – உடலை நெளித்து நெளித்து ஒடும் மனிதப்பிராணிகளும் போய்க்கொண்டிருந்தனர்.

நாகரிகமும் அநாகரிகமும், கலாசாரமும் காட்டு மிராண்டித்தனமும் பகட்டும் வறட்சியும், மேனாமினிக் கித்தனமும் கண்களை அறுக்கும் கோரமும், செல்வ போகமும் தரித்திரக் கொடுமையும், இவ்வாறான முரண்பாடுகள் பலவும் – குறிப்பிட்ட ஏதோ ஒரு நியதிக்கு உட்பட்டது போலவும், குழம்பித் தவித்தும், குழப்பமுறாமல் நெளிந்து சுழித்தும் புரண்டுகொண்டிருந்தன. எல்லாம் கூடி, ‘இதுநகரம்…நாகரிகப் பெருநகரம்’ என்கிற உண்மையை நித்தியமாய், நிரந்தரமாய், புலப்படுத்திக் கொண்டிருத்தன.

நாகரிகம் மனிதரை இயந்திரங்களாகவும், மிருகங்களாகவும் மாற்றிவிட்டது; அலங்கார பொம்மைகனாக வளர்த்து வருகிறது. மனிதரை மனிதராக வாழ வகை செய்யவில்லை அது என்பது மட்டுமல்ல; மனித வர்க்கத்திடையே காணப்பட்ட சிறிதளவு ஈவு – இரக்கம் – தயை– நல்லதனம் முதலிய பண்புகளை வறளடித்து வருகிறது என்பதை மறப்பதற்கில்லை.

இந்த உண்மைக்கு ‘மற்றுமோர் சான்று’ என்று கூறலாம் அன்றொரு நாள் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றை–

முற்பகல் பத்துமணி ஆகிவிட்டது. நாகரிக நகரத்தின் வீதிகள் எல்லாம், வீதிகளில் போகும் வாகனங்கள் எல்லாம், வாகனங்களில் இடம் அகப்படாமல் வேக நடை நடந்து செல்வோர் எல்லாம் நகரின் ஜன மிகுதியை, அவசர இயக்கத்தை அலுவல் பரபரப்பை விளம்பரப்படுத்துகிற நேரம் அது. மனித இனத்தில் நிலைபெற்று வளரும் சுயநலத்தின் தன்மையைப் படம் பிடித்துக் காட்டும் நேரம் அது.

அவ் வேளையில் வீதிவழியே போய்க் கொண்டிருந்தவர்களில் ஒருவன் – தலையில் சிறு மூட்டையும், மனசில் பெருங்கவலையும் சுமந்து நடந்த மனிதன் – சூழ்நிலை மறந்த காரணத்தால் பெரிய விபத்து ஒன்றில் சிக்கியிருக்க வேண்டியவன், சுய முயற்சியினாலோ புண்ணிய வசத்தாலோ தப்பிச் சிறு விபத்தில் விழ நேர்ந்தது. எங்கோ பார்வையும் எதிலோ நினைவுமாக நடந்த அவன் ஒரு காரில் அகப்படவேண்டியவன். கடைசிக் கட்டத்தில் திடுக்கிட்டுச் சமாளித்துக் கொண்டு, துள்ளித் தாவி விட்டான். ஆயினும் தப்பி ஒதுங்கினான் என்று சொல்வதற்கில்லை. கால் சறுக்கித் தள்ளாடித் தரையிலே விழுந்துவிட்டான். ‘தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போயிற்று’ என்ற மாதிரி.

டிரைவர் தனது ஆத்திரத்தைக் கடுமையான சொற்களில் பொதிந்து வீசிவிட்டு, காரை ஒட்டிச் சென்றான். காரில் இருந்தவர்கள் இஷ்டம்போல் பேச ஒரு வாய்ப்பு கிட்டியது.

கீழே விழுந்தவன் விழுந்தே கிடந்தான். அவனால் வாகனாதிகளுக்கோ, வாகனங்களால் அவனுக்கோ எவ்விதமான பாதகமும் ஏற்பட முடியாத இடத்தில் தான் அவன் கிடந்தான்.

எங்கிருந்தோ ஆட்கள் ஒன்றிரண்டு பேராக வந்து கூடிப் பலராக மொய்த்து நின்றனர். வேடிக்கை பார்க்கத்தான்…

நகரம் நாகரிக அந்தஸ்திலே உயர்ந்து நின்றாலும் கூட, வேடிக்கை பார்க்க என்று குழுமுகிற நபர்களின் பண்பாட்டில் மாறுதல் ஏற்படுவதில்லை.

‘குடிபோதையோ? மயங்கி விழுந்து விட்டானே?’ ‘காயம் ஏற்பட்டுவிட்டதா?’ ‘காக்கா வலிப்பாக இருக்கும்’ ‘ரத்தம் வந்திருப்பதுபோல் தெரியுதே!’ ‘எந்த ஊரு ஆளு?’ – இப்படிப் பலரும் பலவாறு கவலைப்படலாயினர்.

புதிதாக வந்தவர்கள் அங்குமிங்கும் சுற்றியும், கழுத்தை நீட்டி எட்டிப் பார்க்க முயன்றும், ‘என்னது? என்னவாம்? யார் அது?’ என்று கேட்டும் விஷயம் அறியத் தவித்தனர்.

சிலர் நின்று கவனித்தனர். பலர் சும்மா பார்வை எறிந்துவிட்டுப் போனார்கள். சிலர் ‘ஏனோ தானோ – என்னவோ ஏதோ’ என்றபடி அவர்கள் போக்கிலே முன்னே சென்றார்கள். வாகனங்களில் அமர்ந்து வேக யாத்திரை போனவர்களின் பார்வையைக் கவரத் தவறவுமில்லை. இச் சிறு கூட்டம்.

‘நமக்கென்ன! நம்ம வேலையே நிறையக் கிடக்குது’ என்ற எண்ணத்தில், பிற விஷயங்களில் தலையிடும் நினைப்போ ஆர்வமோ இல்லாதவர்களாய் நடந்தவர்களின் தொகை அதிகமானதே.

விழுந்தவனைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து விமரிசனம் செய்து கொண்டிருந்தவர்களில் ஒருவருக் கேனும் தோன்றாத ஒரு உணர்ச்சி, வழியே போன வேறொரு ஆசாமிக்கு ஏற்பட்டது.

அவன் தலைமீது ஒரு கூடையை சுமந்து நடந்து கொண்டிருந்தான் என்றாலும், அவன் உள்ளத்தில் ‘இரக்கமற்ற தன்மை’ பாறையாய் படிந்திருக்கவில்லை என்பது புரிந்தது.

விழுந்து கிடந்தவன் மீது அவன் பார்வை பட்டதும் அவன் நின்றான், கவனித்தான். ‘ஏனய்யா எல்லாரும் சும்மா நிக்கிறீங்க? அந்த ஆளுக்கு என்ன – ஏது என்று கவனிக்கப்படாது? எங்கே அடிபட்டிருக்குதோ?’ என்று தன் எண்ணத்தைச் சொன்னான் அவன்.

‘வந்துவிட்டாரய்யா பரோபகாரி! ஏம்பா, நீயே கவனியேன். இவருக்குத்தான் பெரிய கவலை’ – குரல்கள் வெடித்தன. யார் குரல் – எவர் பேச்சு எனப் பிரித்துப் பேச முடியாத விதத்திலே இணைந்து கலந்தது ஏகச் சிரிப்பு.

அவன் கோபிக்கவில்லை. முகம் சுளிக்கவில்லை. தலைக் கூடையை நடைமேடையின் ஒரு ஓரத்தில் இறக்கி வைத்துவிட்டு, கூட்டத்தில் வழி செய்து கொண்டு விழுந்து கிடந்தவனின் சமீபம் சென்றன். அன்புடன் அவனைக் கவனித்தான். ஆதரவாகச் சில வார்த்தைகள் பேசி, அவனை மெதுவாகத் தாங்கி எடுத்து உட்கார வைத்தான். அவன் உடம்பைத் தடவித் துடைத்தான். அவனுக்குத் தாங்கலாக எழுந்து நின்று அவனைக் கைப்பிடித்து மெதுமெதுவாக நடக்கச் செய்தான். ‘குடிக்க ஏதாவது வேண்டுமா?’ என்று கேட்டான். அவனை மேடைமீது உட்கார வைத்து விட்டு, கீழே கிடந்த மூட்டையை எடுத்து அவனிடம் சேர்ப்பித்தான்.

‘நாட்டுப்புறத்தான் எவனோ’ செய்து நின்ற செயல்களில் அக்கறை காட்ட விரும்பாத நகர மகா ஜனங்கள் – கீழே விழுந்தவன் பலத்த காயம் படாமல் பிழைத்து எழுந்ததில் ஏமாற்றம் கொண்டவர்களாய் முனங்கிக்கொண்டே கலைந்தார்கள்.

விழுந்து எழுந்தவன், முகத்தில் நன்றி காட்டி, அதே இடத்தில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான்.

அவனுக்கு உதவி செய்தவன், கீழே வைத்த தனது சுமையைத் தலைக்கு இறக்கி ஏற்றிக் கொள்வதற்குப் பிறர் தயவை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ‘ஐயா, இதை ஒரு கை பிடியுங்களேன்! இதைக் கொஞ்சம் தூக்கி…’ என்று கெஞ்சி நின்றான் அவன்.

‘அட போய்யா! நீ ஒண்னு!’ என்றெல்லாம் சொல்லெறிந்து சென்றார்கள் சில கனவான்கள். அவன் தங்களை அப்படி வேலை ஏவியதன் மூலம் தங்களேயே அவமதித்து விட்டான் என்று நம்பியவர்கள் போல், ‘மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டு’ நடந்தார்கள் பலபேர்.

ஆள் நடமாட்டம் அதிகமிருந்த அந்த வீதியின் ஒரத்திலே, மற்றுமொரு உண்மையான மனிதன் வரமாட்டானா என்று ஏங்கி நிற்பவன் போல, அவன் நின்றான், போகிறவர் வருகிறவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றான்.

நாகரிக நதியின் பெருங்கிளை போன்ற அந்த ரஸ்தாவில் அவசரமும் வேகமும் நெருக்கமும் போக்குவரத்தாக முட்டி மோதிக்கொண்டு அலைபுரண்டதில் குறைவு இல்லைதான். அவரவர் கவலை அவர் அவர்களுக்கு! இதுதானே இந்த யுகதர்மமாக விளங்குகிறது?

– 1959

– ஆண் சிங்கம் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *