கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 26, 2011
பார்வையிட்டோர்: 12,920 
 
 

அழைப்பு மணியின் சப்தம் கேட்டு கதவைத் திறந்தேன். வாசலில் ஒரு மனிதக்குரங்கு நின்றிருந்தது. நீல நிறத்தில் கோடு போட்ட சட்டை, தோளில் ஒரு லெதர் பேக், மெல்லிய பிரேம் உள்ள கண்ணாடி. ஒட்ட வெட்டப்பட்ட தலை. அகலமான கைகள். காலில் நைக் ஷீ. உள்ளடங்கிய புன்னகை. சற்றே குழப்பமான நிலையில் என்ன வேண்டும் என்று கேட்டேன்.

அந்தக் குரங்கு இனிமையான குரலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. தான் ஒரு விற்பனை பிரதிநிதி என்றும், கொரியத் தயாரிப்பான அதிநவீன செல்போன் விற்பதற்காகத் தான் வந்துள்ளதாக சொல்லி தயாராக கையில் வைத்திருந்த விளம்பர அறிக்கை ஒன்றை என் முன்நீட்டியது.நான் வியப்புடன் மனிதக்குரங்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தில் மிக நளினமாக அது தன் விற்பனை பொருளின் மேன்மைகளைப் பற்றி எடுத்து சொல்லிக் கொண்டிருந்தது.

என் மனதிலே அது மனிதக் குரங்கு, மனிதக் குரங்கு என்ற ஒரு ஒற்றைக்குரல் ஒயாமல் எதிரொலித்தபடியே இருந்தது. என் குழப்பத்தைப் புரிந்து கொண்டது போல மெல்லிய வெட்கத்துடன் இதன் முன்பு என்னைப் போன்ற பிரதிநதிகளை நீங்கள் கண்டதில்லையா என்று ஆங்கிலத்தில் கேட்டது.

இல்லை என்று தடுமாறியபடியே சொன்னேன். விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு நாம் நகர்ந்துவிட்டோம் என்ற உண்மையை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். செயற்கை அறிவு கொண்ட ரோபேக்களை விடவும் எங்களைப் பார்த்து தான் அதிகம் பேர் வியப்படைகிறார்கள். அது ஏன் என்றே புரியவில்லை என்றது.

அப்படியெல்லாம் இல்லை. இது என்னுடைய தவறு தான் என்று தயங்கியபடியே சொன்னேன்.

தான் ஹோமேசெபியன் வகை குரங்கு என்றும் தனது மூதாதையர்களான நியான்டர்தால், குரோமகனான் பற்றி நிச்சயம் நான் அறிந்திருப்பேன் என்றபடியே தனது குடும்பம் முப்பது வருசங்களுக்கு முன்பாகவே அடர்ந்த வனத்திலிருந்து இடம்பெயர்ந்து நகரம் நோக்கி வந்துவிட்டதாகவும் தான் முறையாக பள்ளி கல்வி கற்று, நான்கு மொழிகளில் பயிற்சி பெற்றுள்ளதோடு, டெல்லி பல்கலைகழகத்திலிருந்த விற்பனையுத்திகள் குறித்த சான்றிதழ் பட்டயமும் பெற்றிருப்பதாக சொல்லியது.

நான் தயக்கத்துடன் இப்படி ஒருவரை நான் முன்பு சந்தித்ததேயில்லை என்று சொன்னேன். அது தலையசைத்தபடியே இந்த நகரில் என்னைப் போன்றவர்கள் அதிகமில்லை. ஆனால் என் நண்பர்களில் பலர் வெளிநாடுகளில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறார்கள். பேராசிரியர்களாக, விமானியாக, ஏன் ஊடக விற்பன்னர்களாக கூட பணியாற்றுகிறார்கள். அங்கே அவர்களை எவரும் பேதமாக நடத்துவதில்லை, கேலி செய்வதில்லை என்றது.

அது சரி தான் என்றபடியே அதன் கைகளை பார்த்து கொண்டிருந்தேன். அகலமான கைகள். விரல்நகங்கள் கவனமாக வெட்டப்பட்டிருந்தன. மனிதக் குரங்கு என் வீட்டில் அலங்காரத்திற்கு வைக்கப்பட்ட பொருள்களை பார்வையிட்டபடியே உங்கள் ப்ரிட்ஜில் முட்டையொன்று உடைந்து போயிருக்கிறது என்றது. அவசரமாக குளிர்சாதன பெட்டியின் கதவைத் திறந்து பார்த்தேன். நிஜம் ஒரு முட்டை உடைந்து வழிந்து போயிருந்தது,

அதை எடுத்து வெளியே வைத்தபடியே எப்படி அதற்கு தெரிந்தது என்று கேட்டேன.

மனிதக் குரங்கு சிரித்தபடியே தலைமுறை தலைமுறையாக காட்டில் தான் வாழ்ந்தோம். வாசனையை எங்கிருந்து கசிந்தாலும் அறிந்துவிட முடியும் என்றது.

என்னால் சமையலறையில் இருந்து வரும் வாசனையை கூட எது என்னவென்று பிரித்து அறிய முடியவில்லை என்றேன்.

குரங்கு சிரித்தபடியே வாசனை, சிறு சப்தம், பயம் யாவும் அடிமனதில் அப்படியே தானிருக்கிறது. இன்னும் மறையவில்லை என்றபடியே உங்கள் வீடு இருக்குமிடம் ஒரு காலத்தில் பெரிய ஏரியாக இருந்தது என்றும் அதில் எண்ணிக்கையற்ற வாத்துகள் நீந்திக் கொண்டிருந்தது என்று வாசித்திருக்கிறேன். நீங்கள் எப்போதாவது ஒரு ஏரியின் மீது உறங்குவதை போல உணர்ந்திருக்கிறீர்களா என்று கேட்டது

அந்த மனிதக் குரங்கு சொல்வது உண்மை. இந்த இடத்தில் நாற்பது வருசங்களுக்கு முன்பு வரை பெரிய ஏரியிருந்தது. அதை மூடி அந்த இடத்தில் தான் புதிய கட்டிடங்கள் கட்டினார்கள். இன்றைக்கும் இதன் நிலப்பதிவுகளில் அந்த ஏரியின் பெயர் குறிப்பிடப்படுகிறது என்று சுட்டிகாட்டினேன்.

மனிதக்குரங்கு சிரித்தபடியே மனிதர்களால் ஆகாசத்தையும் மேகங்களையும் மட்டும் தான் விலைக்கு வாங்க முடியவில்லை. நகரங்கள் அலுப்பூட்டுகின்றன. இங்கே இலைகள் உதிரும் ஒசை கேட்பதில்லை. வண்டின் சிறகொலியோ, பறவைகளின் ரெக்கையடிப்போ, தவளைகளின் புலம்பல்களோ கேட்பதேயில்லை. ஒரே வாகன இரைச்சல். உலகிலே தண்ணீரை விலைக்கு வாங்கும் ஒரே உயிரினம் மனிதர்கள் தான் என்றபடியே தனது பையில் இருந்த மாதிரி செல்போன் ஒன்றை எடுத்து பிரித்தது.

அதற்கு திருமணமாகி விட்டதா என்று கேட்டேன்.

குரங்கு சிரித்தபடியே தன்னைக் காதலிக்க இளம் பெண்கள் எவருக்கும் விருப்பமில்லை என்பதால் உறவினர்களிலே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுவிட்டதாக சொல்லி தனது பர்ஸ திறந்து அதிலிருந்த பெண்குரங்கு ஒன்றின் புகைப்படத்தைக் காட்டியது. எனக்கு அந்த புகைப்படத்தை விடவும் பர்ஸில் வைத்திருந்த இரண்டு கிரிடிட் கார்டுகள் மற்றும் பிரபலமான கிளப் ஒன்றின் உறுப்பினர் கார்டு , வானகம் ஒட்டும் சைலன்ஸ் யாவும் கண்ணில் பட்டது.

நான் அந்த திகைப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமலே ஏன் அது விற்பனை பிரதி வேலையை த்தேர்வு செய்தது என்று கேட்டேன். இது தான் சவாலாக இருக்கிறது, ஒவ்வொரு நாளும் வாழ்க்கை எதிர்பாரமல் இருக்க வேண்டும். புதிய மனிதர்கள். புதிய சவால்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட என்னால் பார்க்க முடியவில்லை. மனிதர்கள் அலுப்பூட்டும் வேலைகளில் தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்பணித்து கொள்கிறார்கள். அது என்னால் ஒரு போதும் இயலாது. அந்தந்த நிமிசத்தில் வாழ வேண்டும் அப்படி நம்மால் இயலாமல் போவதற்கு காரணம் நம் நினைவுகள் தான் என்கிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. அது சரியென்றே தோன்றுகிறது என்றது.

நான் திகைப்போடு ஜே.கிருஷ்ணமூர்த்தி படித்திருக்கிறதா என்று கேட்டேன். தனக்கு கிருஷ்ணமூர்த்தியை பிடிக்கும் என்றதோடு டேவிட் போம் என்ற இயற்பியல் அறிஞருடன் ஜேகே காலத்தின் முடிவின்மை பற்றி நிகழ்த்திய உரையாடல் அற்புதமானது என்று சொல்லி வியந்தபடியே தனக்கு குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று மிக அன்புடன் கேட்டது.

நான் பிரிட்ஜில் இருந்த குளிர்ந்த தண்ணீரை எடுத்து வந்து தந்த போது உதட்டிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் வெளியே சிந்திவிடாமல் அது கவனமாக குடித்துவிட்டு தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்து வெண்ணிற கைக்குட்டையை எடுத்து உதட்டை துடைத்து கொண்டது. பிறகு தன்னியல்பாக புதியரக செல்போன்களின் சாத்தியபாடுகளை விளக்கி சொல்ல துவங்கியது.

அரை மணிநேர பேச்சிற்கு பிறகு நான் அதனிடமிருந்து ஒரு புதிய போனை வாங்கிக் கொள்வது என்று முடிவானது. தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த லெதர் பையை எடுத்து அதிலிருந்த பில் புத்தகத்தில் என் பெயர் விலாசம் மற்றும் சுயவிபரக்குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தது.

நான் அந்த தோள்பையினுள் பார்த்து கொண்டிருந்தேன். ஒரு புத்தகம், இசைகேட்பதற்கான சிறிய ஐபேடு. ஒரு பிஸ்கட் பாக்கெட் மற்றும் சிறிய வாசனை திரவியப்புட்டி காணப்பட்டது.

அழகான கையெழுத்துடன் சுயவிபரங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்த குரங்கு பையிலிருந்த புத்தகத்தை நான் கவனிப்பதை அறிந்து அதை எடுத்து என்னிடம் நீட்டியபடியே இது நீட்சே.. மிக முக்கியமான சிந்தனாவாதி. சோர்வுறும் போது அடிக்கடி இதை வாசிப்பேன்என்று சொல்லி சிரித்தபடியே படிவத்தில் என்னிடம் கையெழுத்து கேட்டது.

நான் கையொப்பமிட்டபடியே காசோலை ஒன்றினை தந்தேன். மிகுந்த அன்புடன் நன்றிதெரிவித்துவிட்டு தங்கள் கம்பெனி எனக்குரிய புதிய செல்போனை தபாலில் அனுப்பி வைக்கும் என்றபடியே என்னிடமிருந்து விடைபெற்று போனது.

மனிதர்களிடம் கூட காணமுடியாத ஒழுங்கும் அன்பும் மிருதுவான பேச்சும் கொண்டிருந்த அந்த குரங்கை வியந்தபடியே இருந்தேன்.

மின்சாரம் தடைபட்டு இருந்ததால் லிப்ட் வேலை செய்யவில்லை போலும் எரிச்சலும் அலுப்புமாக மனிதகுரங்கு லிப்டின்பொத்தான்களை அமுக்கியபடியே நின்றிருப்பது தெரிந்தது. நான் ஜன்னல் வழியாக பார்த்து கொண்டிருந்தேன். மனித குரங்கு லிப்டை வெறித்து பார்த்தபடியே ஆத்திரத்துடன் முணுமுணுத்தது.

மசிரானுங்க. இவங்க ஒவ்வொருத்தரையும் உருவி உருவி செல்போன் விற்கிறதுக்குல்லே நாக்கு தள்ளி போயிருது. இதுல கரண்ட் மசிரு வேற வேலை செய்யலை என்று ஆத்திரத்துடன் சொல்லியபடியே லிப்டிலிருந்து விலகி நடந்து அங்குமிங்கும் பார்த்தது,

எவரும் தன்னை கவனிக்கவில்லை என்று உணர்ந்த மறுநிமிசம் எனது வீடிருந்த பனிரெண்டாவது தளத்திலிருந்து ஒரே தாவாக வெளியில் தாவி பூமியை நோக்கி குதித்து எதுவும் நடக்காதது போல தன் பைக்கை எடுத்துக் கொண்டு சாலையை நோக்கி போய்க் கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *