இப்படி பண்ணலாமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 853 
 
 

எனக்கும் அந்த நாயிற்கும் இப்படி ஒரு மனகசப்பு ஏற்பட்டு விட்டது. தினம் தினம் அந்த பாதை வழியாகத்தான் சென்று கொண்டிருக்கிறேன். கடந்த மூன்று மாதங்கள் முன்னால் வரைக்கும் நாய் அது பாட்டுக்கு இருக்க நான் பாட்டுக்கு வந்து போய்க்கொண்டிருந்தேன்..

அந்த பாதை வாகனங்கள் போக்குவரத்தில் இருக்கும் பாதை. நடைவாசிகள் நடந்து செல்ல ஓரமாய் வெள்ளை கோடு போட்டு வழி விட்டிருப்பார்கள். தினமும் அதில்தான் சென்று,வந்து கொண்டிருக்கிறேன்.

நான் கருமமே கண்ணாய் நடந்தாலும் சாலை ஓரத்தில் பார்வைகளை செலுத்தி கொண்டுதான் நடப்பேன். காரணம் வாகனங்களின் வேகம் என்னை அடிக்கடி பயமுறுத்தும்..

அப்படி செல்லும்போது தான் இந்த நாயை பார்த்தேன். சுமார் ஒரு வருட வயது இருக்கலாம். பார்ப்பதற்கு குட்டியாகத்தான் தெரிந்தது. நான் நடந்து செல்வதை அது தலை நிமிர்த்தி பார்த்துக்கொண்டுதான் இருக்கும். நான் அதன் மீது எந்த ஆர்வமும் இல்லாததால் வாலை ஆட்டுவதோ, எழுந்து நிற்பதோ எதுவும் செய்யாது. முடிந்தவரை நான் அதை தாண்டி செல்லும் வரை தலையை தாழ்த்தி வைத்துக்கொள்ளும்.

தினமும் போகும் போதும் வரும் போதும் கண்ணில் படாமல் போவதில்லை. இப்பொழுதெல்லாம் அதை கண்டு கொள்வதில்லை என்றாலும் என் பாதையில் அதுவும் ஒரு முக்கியமான நபராக ஆகியிருந்ததால் அதை கவனித்து செல்வேன்.. என்றாலும் நாயை பார்வையால் தள்ளியே வைத்திருந்தேன். நாயிடம் ஒரு குணம் உண்டு. நீங்கள் அன்பாய் அதனை பார்த்தால் போதும் உங்களின் உணர்வுகளை எப்படித்தான் தெரிந்து கொள்ளுமோ தெரியாது மெல்ல அருகில் வந்து வாலை ஆட்ட ஆரம்பித்து விடும். அதன் குணம் ஓரளவுக்கு புரிந்ததால் அதனை கண்டு கொள்ளாமல் இருப்பது போல் பாவனையுடன் தள்ளி சென்று விடுவேன்..

முன்று மாதத்திற்கு முன்னால் என் பக்கத்து தெருவில் வசிக்கும் நண்பர் ஒருவர் எனக்கு நடந்து செல்வதற்கு துணைக்கு கிடைத்தார். அதனால் இருவரும் ஒரே நேரத்திற்கு அலுவலகம் போவதால் பேசிக்கொண்டே அந்த பாதையில் நடப்போம். அப்படி நடக்கும்போது, நண்பர் அந்த நாயை பார்த்தவுடன் “ஐயி நாய்” என்று வியப்பாய் சொன்னார்.

ஏன் சார் நாயை பார்த்ததில்லையா? இல்லை இவ்வளவு அழகான நாயை பார்த்ததில்லை, முகம் நுனியில் கருப்பும், செவலை கலரும், நல்லாயிருக்கு. சொன்னவரிடம் சார் நாய் ரொம்ப நாளா இங்கதான் இருக்கு, நீங்க வாங்க, அவரை ஏறக்குறைய இழுத்துக் கொண்டு நடந்தேன்.

தினமும் இருவரும் நடந்து வரும் பொழுது அவர் நாயை அன்புடன் பார்க்க நாய் நாங்கள் வந்தவுடன் அந்த இடத்தை விட்டு எழுந்து இவர் அருகில் வந்து வாலை ஆட்டும். எனக்கு கோபமாய் இருக்கும், அதை அசூயையாய் பார்ப்பேன். இவரோ அதை முதலில் தலையை.தட்டி செல்ல ஆரம்பித்தவர் கொஞ்ச நாள் போகவும் தடவி கொஞ்சவும் ஆரம்பித்து விட்டார். எனக்கு எரிச்சலாய் இருந்தது. சில வேளைகளில் காலையில் இவர் நாயை கொஞ்சி விட்டு வர அலுவலகத்திற்கு தாமதமாக கூட ஆகி விடும். மாலையும் இப்படித்தான் நாயிடம் ஐந்து நிமிடம் கொஞ்சி விட்டு வருவார்.

இவர் செய்வது எனக்கு அதிகபட்சமான செயற்கையாக தெரியும். சில நேரங்களில் பிஸ்கட் பாக்கெட் வாங்கி அதன் வாயில் ஊட்டி விட்டு வருவார்.

அந்த நாயிற்கு என்னுடைய முக சுழிப்பும், விட்டேற்றியான பார்வையையும் இப்பொழுது கண்டு கொள்வதில்லை. உனக்கென்ன? உன்னை தொந்தரவு பண்ணுகிறேனா? அவர் என்னை கொஞ்சுறாரு, கவனிக்கிறாரு, உனக்கென்ன பொறாமை என்பது போல பார்த்தது. இப்படியாக நண்பரால் எங்கள் இருவருக்கும் ஒரு மன கசப்பு ஏற்பட்டு விட்டது என்பது உண்மை.

அன்று விடுமுறை, காலையில் பொழுது போகாமல் வாசலில் ஒரு நாற்காலியை போட்டு உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொழுது நண்பர் அந்த நாயை கழுத்தில் பட்டை போட்டு சங்கிலியினால் இழுத்து நடந்து சென்று கொண்டிருந்தார். எனக்கு ஆச்சர்யம், என் வீடு தாண்டும் பொழுது அவர் என்னிடம் ஐந்து நிமிடம் பேச நின்றவரை அந்த நாய் இழுத்தது. அந்த ஆளிடம் என்ன பேச்சு? இவன் மனுசனே இல்லை, என்பது போல பார்த்தது.

நான் நண்பரை பார்க்க, அவர் அதை புரிந்து கொண்டு நேத்து நான் இந்த நாயை கூட்டிட்டு வந்துட்டேன். பார்க்க அழகா இருக்கு, நம்ம வீட்டுல இருக்கட்டும், பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தவரை நாய் மீண்டும் இழுக்க, சாரி இதுக்கு பொறுமையில்லை, அப்புறம் கவனிக்கலாம், நாயுடனே போனார்.

இப்பொழுது நாங்கள் இருவர் மட்டும் நடந்து கொண்டிருக்கிறோம். அந்த இடத்தில் நாய் இல்லாமல் வெறுமையாய் இருந்தது. கொஞ்சம் மனசு கஷ்டப்பட்டாலும் சரி நண்பர் வீட்டிலதான இருக்குது, மனசை சமாதானப் படுத்திக்கொண்டேன்.

அடிக்கடி நாயை பற்றி பெருமையாக சொல்லி கொண்டிருப்பவர் இந்த இரண்டு மூன்று நாட்களாக எதுவும் சொல்வதில்லை. நானும் பார்த்து பார்த்து ஒரு நாள் கேட்டு விட்டேன். என்ன சார் எப்படி இருக்கு உங்க நாய்?

பதில் விட்டேற்றியாய் “ச்சூ” என்று சூழ் கொட்டி வரவும், ஆச்சர்யமாகி விட்ட்து, என்ன சார் இப்படி சொல்றீங்க. பின்னே என்ன் சார் ஒரு பழமொழி சொல்லுவாங்க, அது கரெக்டாத்தான் சார் இருக்கு.. சலிப்புடன் சொன்னார்.

மூன்று மாதம் ஓடியிருந்தது, காலையில் அலுவலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன்.. நண்பர் இரண்டு சக்கர வாகனம் வாங்கி விட்டதால் என்னுடன் வருவதில்லை.. அது என்ன அந்த இடத்தில்? பார்வையை கூர்மை படுத்தி பார்க்க அதே நாய் மீண்டும் அந்த இடத்தில்….

நான் அதனை தாண்டி செல்லும்போது அதனை பார்க்க, அது என்னை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக உட்கார்ந்த நிலையிலேயே வாலை மட்டும் ஆட்டியது.

இப்பொழுதெல்லாம் நாயை பார்த்து விட்டுத்தான் செல்கிறேன், இருந்தாலும் அதே தள்ளி வைத்த பார்வையுடன் தான். நாயும் அதை ஏற்றுக்கொண்டு உட்கார்ந்த நிலையிலேயே வாலை ஆட்டி புரிந்து கொண்டதாய் காட்டும்.

அதற்கு அனுபவம் வந்து விட்டதல்லவா? திடீர் பாசம் காட்டி வீட்டுக்கு கூட்டி போய் விரட்டி விடும் மனிதர்கள் மத்தியில் என்னையும் ஒரு உயிருள்ள ஜீவனாய் மதித்து சென்று கொண்டிருக்கிறானே இவனை நம்பலாம் என்று பார்வையால் உணர்த்தியது எனக்கு புரிந்தது.

பக்கத்து வீதி நண்பரிடம் ஒரு நாள் இதற்காக சண்டையிட்டேன், என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க, அது கேட்டுச்சா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போய் கவனிச்சுக்கன்னு, பாவம் சிவனேன்னு அதோட இடத்துல இருந்துச்சு, அதைய பாசம் காட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போய் இப்ப அம்போன்னு …

சொல்லிக்கொண்டு போனவனை ஒரு பைத்தியக்காரனை போல் பார்த்து விட்டு போங்க சார் ‘ஆப்ட்ரால்’ ஒரு நாயிக்கு இவ்வளவு பீல் பண்ணறீங்க.

இவரிடம் என்ன பேசுவது? நாயை நாயாய் மதித்து உங்கள் வேலையை பார்த்து போயிருக்கலாம், அதை கொஞ்சு கொஞ்சு என்று கொஞ்சி, மூன்று நாலு மாதம் வீட்டுக்கு கொண்டு சென்று அதன் பின் விரட்டி விடுவது என்ன நியாயம் என்று அவருக்கு புரியவைக்க முடியுமா?

ஆனால் என் எண்ணத்தை அந்த நாய் புரிந்திருக்கும் என்ற நிம்மதி மட்டும் எனக்கு இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *