இப்படியும் ஆட்கள் உண்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 1, 2024
பார்வையிட்டோர்: 266 
 
 

அந்த அரசு அலுவலகம் வழக்கமான பழைமையிலேயே இருந்தது, அழுக்கான டேபிள், அந்தரத்தில் தொங்கிக்கொண்டு சாகவாசமாக சுற்றும் பேன், வரிசையாய் தூங்கி வழியும் மேசைகள், நாற்காலிகள். ஒவ்வொரு மேசையின்

மேல் குவிந்திருக்கும் கோப்புகள், அதற்குள் தலையை நுழைத்துக் கொண்டிருக்கும் ஒன்றிரண்டு தலைகள். அங்குமிங்கும் நடமாடிக் கொண்டு அவ்வப்பொழுது வெளியே வந்து காத்திருக்கும் மக்களிடம் சள்..புள்..என்று எரிந்து விழுந்து அருகில் இவர்களை நம்பி போட்டிருந்த டீக்கடையில் காப்பி டீ குடித்து விட்டு செல்லும் அலுவலக உதவியாளர்கள், அவர்களை தொற்றிக்கொண்டு அரசாங்க வேலைகளை முடித்து கொடுக்கும் இடைத்தரகர்கள்..

நான் அந்த அலுவலகத்துக்குள் நுழையும் முன் பயத்துடன் தான் நுழைந்தேன். . காரியம் நடக்குமா? வருமான வரி சான்றிதழ் பெற வேண்டும். விண்ணப்பம் வெளியில் வாங்கி அங்கிருந்தவரிடம் பூர்த்தி செய்து கொண்டுதான் வருகிறேன். இருந்தாலும் நெஞ்சில் ஒரு திடுக்..திடுக்..அரசு வேலையல்லவா, இந்த சான்றிதழ் கிடைத்தால்தான் பசங்களை ஸ்கூலில் சேர்க்க முடியும். நான் கூலி ஆள்தான் என்பதை சேர்க்கும்போது பள்ளிக்கு நிருபித்தாகவேண்டும்.

காலை ஒன்பது மணி அளவிலேயே வாசலில் என்னை போல் பத்திருபது பேர் கையில் விண்ணப்பத்துடன் நின்று கொண்டிருந்தனர். அனைவருமே என்னைப்போல தற்குறிகளாகத்தான் தென்பட்டனர். எனக்கு எழுத படிக்க தெரியாது, என் குழந்தைகளாவது நாலெழுத்து படித்தால் ந்ன்றாக இருக்கும். ம்ம்..என்ன செய்வது, அதற்குத்தான் எத்த்தனை கேள்விகள், பதில்கள்..மனம் சலித்துக்கொண்டாலும் உடல் சலிப்படையக்கூடாதே?

யாரையோ கடித்து விட்டு உள்ளே நுழையப்போன அலுவலக ஊழியரை மெல்ல அணுகி ஐயா இந்த அப்ளிகேசனை எங்க கொடுக்கணும்?

இது என்ன பெரிய இடைஞ்சல் என்பது போல முறைத்த அவர் ஏய்யா இத்தனை பேர் நிக்கறாங்கள்ள, அதுக்குள்ள என்ன அவசரம? கடுகடுத்த அவரிடம் இல்லைங்க, இந்த அப்ளிகேசனை கொடுக்க சொன்னாங்க அதான்..வார்த்தையை தடுமாற்றத்துடன் சொல்ல

ஏதோ பரிதாப்ப்பட்டு வாங்கி பார்ப்பது போல பார்த்து விட்டு உள்ளே மூணாவது டேபிள்ள ஒருத்தர் உட்கார்ந்திருப்பாரு அவர்கிட்டே கொண்டு போய் கொடு, அதற்கு மேல் பேச நேரமில்லை போல அந்த விண்ணப்பத்தை என் கையில் திணித்து விட்டு உள்ளே போனார். நான் மூணாவது டேபிளை இங்கிருந்தே எண்ணி அதில் ஆள் இருக்கிறாரா என்று பார்த்தேன். காலியாக இருந்த்து.

இனி அவர் எப்ப வருவார் என்று யாரிடம் கேட்பது? விழித்தேன்.சரி அடுத்த முறை அந்த ஆள் வெளியே வரும்போது கேட்கலாம் முடிவு செய்தவன், கொஞ்சம் தள்ளி வந்து அங்கிருந்த ஒரு கல்லின் மேல் குத்து காலிட்டு அமர்ந்தேன்.

ஐந்து நிமிடம் ஓடியிருந்தது இரண்டு மூன்று பேர் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர். ஒருவர் உள்ளே நுழைய போகு முன், ‘ராஜேந்திரா’ என்று யாரோ கூப்பிட படியில் நின்றாவாறே திரும்பினார். அழைத்தவரை பார்த்த்தும் இவர் முகம் சுருங்கியது.

என்னப்பா ராஜேந்திரா கவர்ண்மென்ட்ல வேலை செய்யறவனுக்கு பணம் கொடுத்தா கரெக்டா வந்துடும்னு சொல்லுவாங்க, ஆனா உனக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து ஆறு மாசம் ஆச்சு, இதா அதான்னு இழுக்கறே? சத்தமாய் பேச அங்கிருந்த் அனைவரும் இவரை திரும்பி பார்த்தனர். நானும் பார்த்தேன்.

ராஜேந்திரன் என்பவரின் சட்டை சற்று கசங்கியிருந்தது. சட்டை காலரில் கொஞ்சம் கிழிசல் கூட தெரிந்தது.

அனைவரின் பார்வையையும் தன் மேல் எனப்தை உணர்ந்த ராஜேந்திரன் அண்ணே கண்டிப்பா அடுத்த மாசம் கொடுத்துடறேன். என்னமோப்பா உன்னைய பார்க்க வரும் போதெல்லாம் கண்ணுக்கே தென்பட மாட்டேங்கறே, அதுதான் உன்னைய வழியிலேயே பார்த்து சொல்லிட்டு போறேன். அடுத்த மாசமாவது கட்டாயமா கொடுக்க பாரு, புரியுதா? அந்த ஆள் வேண்டுமென்றே சொன்னாரா, இல்லை யதார்த்தமாய் சொன்னாரா தெரியவில்லை, சத்தமாய் பேசி விட்டு சென்றார்.

ராஜேந்திரன் முகம் சிவந்திருந்ததை இங்கிருந்தே பார்க்க முடிந்தது, ‘பாவம்’ என்று மனதுக்குள் நினைத்தாலும், அதை விட பாவமாய்த்தான் நான் இருக்கிறேன் என்பது மனதுக்கு புரிய சட்டென பார்வையை திருப்பி அந்த டேபிளை பார்த்தேன். அது இன்னும் காலியாகத்தான் இருந்தது. என்ன இந்த ஆள், மணி பத்துக்கு மேல் இருக்கலாம், இதுவரை இன்னும் காணவில்லை சலிப்புற்று திரும்பியவன் அங்கிருந்து சாலையில் போகும் வண்டிகளை பார்க்க ஆரம்பித்தேன். பக்கத்தில் இருவர் பேசிக்கொள்வது காதில் விழுந்தது

கவர்ன்மெண்ட் ஆளுங்கிறான், கடங்காரன் வாசல்ல வந்து பேசற அளவுக்கு வச்சிருக்கான்

நம்ம கிட்டே கொள்ளை அடிக்கிறானுங்கள்ள, கடங்காரனுக்கு கொடுத்தா என்ன?

ஆமாங்க காசு கொடுக்காம இங்க என்ன வேலை நடக்குது?

இந்த ஆளு உண்மையா பணம் கேட்டானா இல்லை நமக்கெல்லாம் தெரியட்டும்னு நடிக்கறானுங்களா?

அதற்கு மேல் அவர்கள் பேச்சை கேடக முடியாமல் நான் கழுத்தை திருப்ப அந்த டேபிளில் ஆள் உட்கார்ந்திருப்பது தெரிய படாரென்று எழுந்து உள்ளே ஓடுகிறேன். அதற்குள் அந்த ஆளை சுற்றி கூட்டம் கூடி விட்டது.

நான் எப்படியோ அந்த கூட்ட்த்துக்குள் அடித்து பிடித்து நுழைந்து பார்த்தால், ராஜேந்திரனே உட்கார்ந்திருந்தார். அட இவரா? மனதுக்குள் நினைத்துக்கொண்டு மெல்ல எனது விண்ணப்பத்தை நீட்டுகிறேன்.

அதற்குள் அங்கு சுற்றியிருந்தவர்களை ராஜேந்திரன் கோபமாக பேசிக் கொண்டிருந்தார். ஒவ்வொருத்தரா வாங்க, ஒவ்வொருத்தரா வாங்க,. உங்களுக்கு என்ன அப்ளிகேசன் கொடுத்திட்டீங்களா? இந்த பக்கம் உட்காருங்க, நீங்க? இப்படி வாங்க ஒவ்வொருத்தராய் கேட்க அப்ளிகேசன் கொடுக்கப்போறவ்ங்க இந்த பக்கம் வாங்க?

நான் அனிச்சையாய் அப்ளிகேசனை அவர் முன்னால் நீட்ட வந்ததே கோபம் அவருக்கு ஏங்க, நானும் மனுசந்தானே, எத்தனை முறை சொல்றது, போய் அந்த பக்கம் உட்காருங்க, வள்ளென்று விழுந்தார். அவரின் முகத்தை பார்க்க இந்த ஆளா அப்படி வாசலில் நின்றான்? அப்பொழுது அவனுக்கு அடுத்தவன் கத்தியது எவ்வளவு அவமானமாய் இருந்திருக்கும்? இப்பொழுது என்னை பார்த்து இப்படி கத்துகிறானே எனக்கு எப்படி இருக்கும்?. மனதுக்குள் கோபம் எட்டி பார்த்தாலும், காரியம் ஆகவேண்டுமே. சத்தமில்லாமல் அவன் சொன்ன இட்த்தில் போய் நின்றேன். பக்கத்தில் இருந்த ஆள் பாருங்க எல்லாம் காசுக்குத்தானுங்க, இந்த ஆர்ப்பாட்டமெல்லாம்.

அப்ளிகேசன் கொடுக்கப்போகிரவர்களை ஒவ்வொருவராக கூப்பிட்டு அது இருக்கா? இது இருக்கா? ஒவ்வொன்றாய் கேட்டார். வந்திருந்த அனைவரும் அவர் சொன்னதை எடுத்து வந்திருக்கவில்லை. ஒரு சிலர் இது இருக்கு, அது இருக்கு என்று மீண்டும் அவரை மொய்க்க ஆரம்பிக்க மீண்டும் ஒரு கத்தல், நான் சொல்றதை எல்லாம் எடுத்து அப்ளிகேசன்ல வச்சு கொடுத்துட்டு போங்க, ஒரு வாரத்துல கிடைச்சுடும்.

எனக்கு நம்பிக்கையில்லை, என்றாலும் அவர் சொன்ன ஒரு சில சான்றுகளை இணைத்து அந்த கூட்டத்தை விலக்கி கொண்டு போய் கொடுத்தேன். முகம் சிவக்க கோபத்துடன் வாங்கியவர், சட்டு சட்டென்று பிரித்து பார்த்து அப்படியே பக்கத்தில் இருந்த ட்ரேயுக்குள் போட்டார். திங்க கிழமை வாங்க, அவ்வளவுதான். சார் என் பையனுக்கு..இழுக்க. இங்க பாருங்க, திங்ககிழமை வாங்க அவ்வளவுதான், அடுத்த ஆளை விரட்ட ஆரம்பித்து விட்டார்.

என்னுடையதை போல அங்கிருந்து பத்திருபது பேர் கொடுத்து விட்டு வெளியே வந்தோம். அதில் ஒருத்தர்.. எல்லாம் காச கொடுத்தா ஒரு ..மாதிரி வேலை செய்வானுங்க சார், நம்மளை கண்டாத்தான் இப்படி எரிஞ்சு விழுகறது.. புலம்பிக் கொண்டே சென்றார். எனக்கும் எரிச்சலாக இருந்தது, அந்த ஆள் ஏன் இப்படி எரிந்து விழுகிறான். அன்பாய் சொன்னால் ஆகாதா? பலதும் நினைத்தபடி அங்கிருந்து சென்றேன்.

அடுத்த திங்கள் கிழமை அவர் முன் ஆஜராகவும், முன்னர் நடந்த நிகழ்வுகள்தான் இருந்தாலும், உங்கள் அப்ளிகேஷன் எல்லாம் ரெடியாகி கையெழுத்துக்கு வச்சிருக்கோம். புதன் கிழமை வாங்க. சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார். என்னுடன் அதே வேலைக்கு வந்தவர் பாருங்க சார் நமக்கு முன்னாடி கொடுத்தவங்க், பணம் கொடுத்து வாங்கிட்டு போயிருப்பாங்க, நமக்கு மட்டும் இந்த மாதிரி சொல்லுவாஙக. நான் ஒன்றும் பேசவில்லை. புதன் கிழமையாவது கிடைத்தால் நன்றாய் இருக்கும். மனதுக்குள் வருத்தத்துடன் சென்றேன்.

புதன் கிழமை வந்தவுடன் கையில் கொடுத்துவிட்டு நான் நன்றி சொல்வதை காது கொடுத்து கூட வாங்காமல் அடுத்த ஆளை பார்க்க ஆரம்பித்தார்.

வெளியே போகும்போது இடைத்தரகர் ஒருவர் அலுவலக ஊழியரிடம் புலம்பிக் கொண்டிருந்ததை காது கொடுத்து கேட்க வேண்டியிருந்தது. இந்த ராஜேந்திரன் தானும் காசு வாங்க மாட்டான், அடுத்தவங்க வாங்கறதுக்கும்

வாய்ப்பு கொடுக்க மாட்டான். சம்சாரம் ஆஸ்பத்திரியில இருக்கா, இவனே சமைச்சு குழந்தைகளுக்கு கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்பிச்சுட்டு, தானும் எடுத்துட்டு வர்றான். ஆஸ்பத்திரி செலவு தாங்காம எல்லா இடத்துலயும் கடன் வாங்கறான், அப்பவாவது இங்க வர்றவங்க கிட்டே வாங்கினா என்ன தப்பு? எல்லாம் நம்ம பத்தாமைக்குத்தானே வாங்கறோம்.

படிப்பறிவில்லாத எனக்கும் அப்பொழுதுதான் உறைத்தது. அரசு அலுவலகத்தில் சில மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் பிரச்சினை இருக்கிறது. பாவம் மனைவியையும் கவனித்து, குழந்தைகளையும் கவனித்து கையூட்டு எதுவும் வாங்காமல் பணிக்கு வர நினைப்பவனுக்கு எவ்வளவு மன அழுத்தம் இருக்கும். அதுவும் என்னை போல படிப்பறிவில்லாமல் அல்லது படித்தவர்களே எவ்வளவுதான் சொன்னாலும் மீண்டும் மீண்டும் போய் கேட்பதும், அவர் எரிச்சல்படுவதும் மனித இயல்புதானே.?

ராஜேந்திரனின் கசங்கிய சட்டையும், காலரில் இருந்த கிழிசலும் அவரின் பணிக்கு சான்றாக இப்பொழுது எனக்கு தெரிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *