இப்படிக்கு, கங்கம்மா தேவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 4, 2023
பார்வையிட்டோர்: 1,643 
 

பண்டைய ரோமாபுரி பேரரசில் மகாராணியின் பொழுது போக்கிற்காகவும் அவருக்கு மிகுந்த மனச்சோர்வு ஏற்பட்டாலும் அரண்மனைக்கு அருகில் உள்ள கொலைக்’கலை’ மைதானத்தில் பல்வேறு குற்றத்திற்காக வெவ்வேறு வகையான தண்டனைகளை சிறையில் அனுபவித்து வரும் கைதிகளில் இன வெறியுள்ள ஒரு கறுப்பின கைதியையும் ஒரு வெள்ளையின கைதியையும் அழைத்து வந்து கையில் ஆளுக்கு ஒரு வாளைக் கொடுத்து சண்டையிட கட்டளை பிறப்பிக்கப்படும். அவர்களின் வாள் சண்டையில் யார் யாரை வெட்டிச் சாய்ப்பார்கள் என்றோ இருவரும் மாண்டுபோவார்கள் என்றோ குத்துயிரும் கொலை உயிருமாய் உறுப்புகள் தனித்தனியே துடிக்கும் என்றோ எப்போது உயிர் பிரியுமென்றோ யாருக்குத் தெரியும்!

ஒவ்வொரு நிகழ்விலும் வெவ்வேறு வகையான நிலைபாட்டில் ஆன்மா ஓலமிடும் அதை மகாராணி பார்வையிடுவதற்காகவே கட்டி வைக்கப்பட்டுள்ள  மாடத்தில் அமர்ந்திருந்து ரசிப்பார். மனச்சோர்வு நீங்கி நிறைவு பெறும்போது எழுந்து அரண்மனைக்கு திரும்புவார்.  அதன் பின் வாள் வீசிய கைதிகளின் நிலைமைக்கு ஏற்ப நிறைவேற்றுக்  குழு மற்றும் மருத்துவக் குழு தக்க நடவடிக்கை எடுக்கும். இதைத் தழுவி ஆந்திர பிரதேசத்தில் நடத்தப்பட்ட நாடகம்தான் கங்கம்மா தேவி. 

இந்த நாடகம் ஆந்திரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நகர மற்றும் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தடவை நடத்தப்பட்டுள்ளது. அந்த நாடகத்தை இயக்கியவர் சோமானந்த ராவ்.  அதில் கங்கம்மா தேவியாக  நடிப்பவர் அவரது மனைவி  விஜயலெட்சுமி.   முதல் பாராவில் சொன்னது ரோமில் நடந்து உண்மையென்றாலும் சோமானந்தின் கற்பனை முன்னர் கொஞ்சமும் பின்னர் முழுவதுமாக நாடகம் அமையும்.  தழுவல் நாடகம் தானே. அரசி மனச்சோர்வு ஏற்பட காரணம், கைதிகளை அழைத்து வரும் காப்பாளர்களின் செயல்பாடுகள் போன்றவை  நாடகத்திற்கு நாடகம் சற்று வேறுபடும்.    மேலும் கைதிகள் இருவரும் இறந்து விடுவதாக நாடகத்தில் காட்டப்படும்   மகாராணி இன்னும் மன அமைதி படாததால் வேறு கைதிகளை அழைத்துவர உத்தரவிடுவாள்.   பிணங்கள் அகற்றப்பட்டு வேறு இரு கைதிகள் அழைத்து வருவது இரண்டாவது எப்பிஸோட் ஆகும். 

அழைத்து வரப்பட்ட கைதிகளில் கறுப்பின கைதி வாளை வாங்கி ஏளனமாக ஊற்று நோக்குவான். இருவரும் மோத மாட்டார்கள். சற்று மன சஞ்சலம் எற்படும்.  திடீரென ஆவேசப்பட்ட கறுப்பன் “வெள்ளை நாயே!  கீழே உற்றுப்பாரடா.   இங்கே சிந்திக் கிடக்கும் ரத்தம் யாருடையது? உன் இனத்து ரத்தமா என் இனத்து ரத்தமா? இயற்கை இரண்டு ரத்தத்தையும் உள்வாங்கிக் கொண்டுள்ளது. எஞ்சிய பிசு பிசுப்பின் மேல் ஈக்கள் மொய்க்கின்றன. யாருடைய ரத்தமென்று அவற்றிற்குத் தெரியாது  அதுக்குத் தேவை ரத்த வாடை. அவ்வளவே. அதற்கு கைதி ரத்தம் மகாராணி ரத்தம் என்றெல்லாம்  தரம் பிரிக்கத் தெரியாது”

“ஆமாம். வெள்ளையன் என்றால் என்னை விட்டுவிடவா போகிறார்கள்? ஆள்வோருக்கு நாம் அடிமைகள். அவர்களுக்கு கறுப்பு வெள்ளை என்றெல்லாம் இல்லை.  நாம் ஒரே இனம்.  அடிமை இனம்”

“நாம் ஏன் வெட்டிச் சாய்க்க வேண்டும்? ஏன் சாக வேண்டும்?”

“கொசுக்களுக்கு ரத்தம் தேவைப்படலாம்”

“மகாராணி ரத்தம் கூட சுவையாக இருக்கலாம்”

வீறுகொண்டு எழுவார்கள். வாட்கள் இரண்டையும் அன்பால் முத்தமிட வைப்பார்கள். அரசியை நோக்கி ஓடுவார்கள்.  காப்பாளர்கள் தடுக்க முடியாமல் திண்டாட அரசி எழுந்தோடி அரண்மனைக்குள் பதுங்கிக் கொள்வாள்.

இரு கைதிகளின் ஆவேசங்கள், விவாதங்கள், அறிவுரைகள் மெய்காப்பாளர்களின் சிந்தையை தொடும்.  அவர்களை தப்பிக்க விட்டுவிடுவார்கள்.  தங்களை தாக்கி விட்டு தப்பியதாக ஜோடனை செய்வார்கள். தாங்களே உடலில் வெட்டுக் காயங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள்.  வாளை தாங்களே கைதிகளிடம் கொடுத்து அனுப்பிவிட்டு பறித்துக்கொண்டு ஓடி விட்டதாக கதை கட்ட முயற்சிப்பார்கள்.  

ஆனால் அரண்மனைக்குள் வேறு விதமான காட்சி அரங்கேறிக் கொண்டிருக்கும். 

அரண்மனை விருந்துக்கு அடுத்த நாட்டு குருநில மன்னன் வந்திருப்பான்.   கைதிகளின் மோதலை ரசித்துக் கொண்டிருக்கும் கங்கம்மாள் வர நேரமாகும் என்ற நம்பிக்கையில் அடுத்த நாட்டு அரசியுடன் வந்த தோழியுடன் மன்னன் மஞ்சத்தில் கிடந்ததை பார்த்துவிட்டு  வேகம் கொண்டு கங்கம்மாள் வெடித்துச் சிதறுவாள்.   சீறுவாள்.  மன்னன் என்ன இளைத்தவனா. சொற்போர் தொடுப்பான்.  அரசனின்  ஏளன பேச்சும், பார்வையும், அதெல்லாம் மன்னர்களுக்கு பழக்கம் என்றும், மரபு என்றும் கற்பித்த நியாயங்களை உதறுவாள் கங்கம்மாள்.

தன் திருமணத்தின்போது தந்தை கொடுத்த சீதனங்கள் நிலப்பரப்பு ஆகியவற்றை மீள பெற்றுக்கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறுவாள்.  கைதிகளுக்கு தான் செய்த கொடுமைகளை நினைத்து வருந்தி அதற்கு பிரயாசித்தமாய் பெரிய ஆசிரமம் ஒன்றை  ஏற்படுத்தி ஏழை எளியோருக்கு தினந்தோறும் அன்னதானம் வழங்கி வருகிறாள்.   தப்பியோடிய இரு கைதிகளும் ராணியின் திருந்திய நிலையை கேள்வியுற்று ஆசிரமத்திற்கு  வந்து மன்னிப்பு கேட்கிறார்கள்.   அவர்கள்தான் தன் கண்ணைத் திறந்தவர்கள் என தெரிவித்து ஆசிரமத்திலேயே அவர்களுக்கு வேலை கொடுக்கிறாள். கங்கம்மாள் என்ற தன் பெயரை கங்கம்மா தேவி என மாற்றிக் கொள்கிறாள்.  ஏனென்றால் அது அவளுக்குத்தான் தெரியும்.  எல்லா நாடகத்திலும் விஜயலெட்சுமி தான் கங்கம்மாள் பின் கங்கம்மா தேவி.  முன்பகுதி சொர்ணாக்கா போல பின்பகுதி சமூகச் சேவகியாக யாரோ ஒரு அம்மையார் போல.   காலப்போக்கில் நிஜமாவே அவளை கங்கம்மா தேவி என அழைக்கத் தொடங்கினார்கள். 

நாடகம் இடத்திற்கு இடம் மாறும்.   போராட்ட கைதிகளாக நடிக்கும் இருவரும் எல்லா நாடகங்களிலும் மேடையில் என்ன தோன்றுகிறதோ அதை வசனமாக பேசுவார்கள்.  இயக்குனர் அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார்.  அவர்களின் நடிப்பும் எடுத்த பாத்திரத்தை கச்சிதமாக முடிப்பதும் பார்ப்போரை பாராட்ட வைக்கும். கறுப்பின கைதியாக ராஜண்ணா ராஜ், வெள்ளையின கைதியாக தனபால் என்பவரும் நடிப்பார்கள். 

வருவாய் எல்லாம் பெரிதாக வராது.   பயணச் செலவுகள், நடிகர் நடிகைகளுக்கு சம்பளம் போக ஏதோ கொஞ்சம் மிஞ்சும்.

அவர்களுக்குத்  திருமணமாகி இருபதாண்டுகளாகி விட்டன.   வாரிசு  ஏதும் கிடையாது. இந்த நாடத்தை விட சில சமூக நாடகங்களையும் இயக்குவார் சோமானந்த். அவற்றில் கங்கம்மா தேவி நடிக்க மாட்டாள்.

சோமானந்த ராவ் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே போவதும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவதுமாக இருப்பார். மனைவி காரணம் கேட்டால் சொல்ல மாட்டார்.  என்னை நம்பு நான் தவறான வழியில் போகமாட்டேன் என்பார். அந்த மர்ம முடிச்சு எப்போதுதான் அவிழுமோ என கோபத்திலும் எதிர்பார்ப்பிலும் காலத்தை தள்ளி வந்தாள் கங்கம்மா தேவி. 

என்று அவிழும் என்ற மர்ம முடிச்சு ஒரு நாள் அறுந்து போனது.  மாசி மாத விடிகாலை. பக்கத்தில் வருபவர்களைக் கூட பார்க்க இயலாதவாறு பனி பொழிந்து கொண்டிருந்தது.  திடுதிடுவென ஒரு போலீஸ் வேனிலிருந்து ஏழெட்டு காவலர்கள் பூட்ஸ் சத்தம் காதுகளை குத்த வீட்டினுள் நுழைந்து சோமானந்தை தரதரவென இழுத்துச் சென்றனர். நிலை குலைத்தது போனாள் கங்கம்மா தேவி.  பேச்சு வரவில்லை. மூர்ச்சையாகி கீழே விழுந்தாள்.  சீறிக்கொண்டு வேன் கிளம்பிப் போனதை கண்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து முகத்தில் தண்ணீர் தெளித்ததும் மெல்ல மெல்ல நினைவு திரும்பினாள்.  அதே தெருவில் வசித்து வந்த தனபால் விபரமறிந்து ஓடிவந்தான்.  என்ன ஏதுவென தெரியாததால் கங்கம்மாவும் தனபாலும் காவல் நிலையம் சென்று விசாரித்தபோது.  அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டனர்.  கங்கம்மாவை வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு நகரத்துக்கு போய் விசாரித்து வருவதாக கிளம்பினான் தனபால்.  

தன் கணவர் என்ன தவறு செய்தார்.  போலீசும் பிடிக்கவில்லை என்கிறார்கள். யார்தான் இழுத்துச் சென்றது.  கடத்துவதற்கு எந்த அர்த்தமும் இல்லையே என பலவாறு குழம்பிப்போய் கண்ணீர்விட்டு அச்சத்திலும் சோகத்திலும் அமிழ்ந்து கிடந்தாள்.  நேரம் நகர மறுக்கிறது. தனபாலையும் காணவில்லை.  வாசலிலே காத்திருந்தாள். அண்டை வீட்டார்கள்  அவ்வப்போது உரிமையோடும், சிலர் ஒப்புக்கும், சிலர் ஆவலிலும் வந்து வந்து விசாரித்தவாறு இருந்தனர். 

மதியம் ஒரு மணியளவில் ஒரு மாலை நாளிதழோடு வந்தடைந்தான் தனபால்.  அதில் சோமனாத்தின் புகைப்படம் மற்றும் ராஜண்ணாவின் புகைப்படத்துடன் இன்னொருவரின் புகைப்படத்தையும் போட்டு மூன்று தீவிரவாதிகள் கைது.  தீவிரவாத ஒழிப்பு படையினர் அதிரடி நடவடிக்கை என செய்தி வெளி வந்திருந்தது. பார்த்ததும் படித்ததும் ஆடிப்போய் விட்டாள் கங்கம்மா தேவி.

“சொல்லாமல் கொள்ளாமல் அடிக்கடி வீட்டை விட்டு போனது இதற்குத்தானா? பாவி மனுஷா இது உனக்கு தேவையா?”   வாய்விட்டு திட்ட ஆரம்பித்து விட்டாள்.

“இது பத்தி இதுவரைக்கும் ஏங்கிட்ட கூட ஒரு வார்த்த பேசினதில்லையே”  என்றான் தனபால். 

“இந்த ராஜண்ணாவுக்கு என்னாச்சி அவருக்கு புள்ள குட்டியெல்லாம் இருக்கே. அவரு வேற போவணுமா?”

 “அவன் கூட மூச்சு விட்டதில்லையே.  எப்படித்தான் கல்லுளி மங்கன் மாதிரி இருந்தாங்களோ?”

 “போலீஸ் காரங்கங்க என்ன சித்திரவதை பண்ணுவாங்களோ? ஆண்டவா. நான் என்ன பண்ணுறது. ஏன்டா இப்படி சோதிக்கிறே” என கண்ணீர் விட்டாள். 

சமாதானம் செய்ய முடியாது தடுமாறினான் தனபால். 

காலையில் அடர் பனி நடுவே மனதை உடைத்த போலீசாரின் பூட்ஸ் சத்தத்தின் ஊடே ஏற்பட்ட சம்பவம் இன்னும் மனதை விட்டு அகலாத நிலையில் மாலையில் பெரிய மலையை இரண்டாக பிளந்து சாய்த்தது போல ஒரு பேரிடி வந்து விழுந்தது. ஹைதராபாத் வானொலியின் மாநிலச் செய்தி மூலம் மீதமிருந்த எல்லாவற்றையும் உடைத்துப் போட்டது.   “தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் இரண்டு போலீசார் உட்பட ஐந்து பேர் மரணம்.   பிடிபட்ட தீவிர வாதிகளைக் கொண்டு மற்ற தீவிரவாதிகளை அடையாளம் காட்ட அழைத்துச் சென்றபோது காவலர் ஒருவரின் துப்பாக்கியை சோமானந்த ராவ் என்ற தீவிரவாதி பிடுங்கி இரண்டு போலீசாரை சுட்டதில் அந்த இடத்திலேயே இருவரும் மரணம் அடைந்தனர்.  சோமானந்த ராவ் உட்பட தப்பியோட முயன்ற மூன்று தீவிரவாதிகளையும் சுட்டதில் மூவரும் அந்த இடத்திலேயே மரணமடைந்தனர்” என செய்தியாக வாசிக்கப்பட்டது. 

 செய்தி ஒலிபரப்பான பத்து நிமிடத்தில் இரண்டு வேன் ஒரு ஜீப் நிறைய காவலர்கள் கங்கம்மா தேவியின் வீட்டிற்குள் புகுந்து எல்லா இடங்களிலும் சல்லாடைபோட்டு சலித்து அலசி ஆராய்ந்து துருவித் துருவி விசாரணை நடத்தினர். ஆவணங்கள் எதுவும் அகப்படாததால் விசாரணைக்காக கங்கம்மா தேவியை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு ஏற்கனவே ராஜண்ணாவின் குடும்பம் விசாரணைக்காக காவல் நிலையத்தில் குந்த வைக்கப்பட்டிருந்தது. தீவிரவாத ஒழிப்பு பிரிவு காவல்துறை புண்ணியவான்கள். உண்மையில் நியாயமானவர்கள் என்று சொல்லும்படியாக, விசாரணையில் தீவிரவாதிகள் தங்களின் குடும்ப நபர்களுக்குத் தெரியாமல் ரகசியமாக செயல் பட்டிருக்கிறார்கள் என தெரிய வந்ததும் விடியும்போது அவர்களை வீட்டிற்கு அனுப்பினர்கள்.  பெண்களையோ குழந்தைகளையோ துன்புறுத்தாதது மகிழ்ச்சிதானே. 

ஐந்து ஆண்டுகளுக்கு முன் சோமானந்த ராவ், ராஜண்ணா ராவ் மற்றும் ஒரு முனைவர் பட்டம் பெற்ற இளைஞர் ஆகிய மூவரும் ஒரு சித்தாந்த அடிப்படையில் அமைப்பை தொடங்க முடிவு செய்து பல கூட்டங்கள் நடத்தி அறுபது பேர் கொண்ட அமைப்பாக உருவெடுத்தது.  வறியவர்கள் மேலும் வறியவர்களாகவும், பணக்காரர்களும் அரசியல் வாதிகளும் கொழுத்து பெருத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களை எதிர்த்து போராடுவதே அமைப்பின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தும் எத்தனையோ நாடகங்களில் மற்றவர்களுக்கு நடிப்பைச் சொல்லிக்கொடுத்த சோமனந்தால் அமைப்பில் ஒர் அரசின் விசுவாசி இவரோடு நிஜ உறுப்பினர் போல நடித்து வந்ததை கண்டுபிடிக்காமல் போனதுதான் ஆச்சர்யம். 

வயிற்றுப் பசிக்கும் வாடகை கொடுக்கவும் தள்ளு வண்டியில் பழம் மற்றும் பூ வியாபாரம் செய்கிறாள் கங்கம்மா தேவி.  தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவுக்கும் பெரிய கோவிலுக்கும்  இடையில்தான் அவளது பொருட்கள் சந்தைப் படுத்தப்படுகின்றன. காலை பத்து மணிவரை மாலை நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை வியாபாரம் செய்வாள்.  ஐந்தாண்டுகளில் தமிழை ஓரளவு கற்றுக்கொண்டு விட்டாள். ஆரம்பத்தில் புரியாத மொழி போகப்போக புரிய ஆரம்பித்து விட்டது.  நாற்பத்து ஐந்து வயதிலே கிழடு தட்டிப் போனதாக உணர்ந்தாள்.   ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரமே உறக்கம்.  கணவனோடு வாழ்ந்த இன்பமான நாட்கள் கசப்பான அனுபவங்கள் பயமுறுத்தல்கள் போன்ற  எல்லாம் நிகழ் கால  வாழ்க்கையை நிரப்பி  சுமப்பதில் எதிர்காலம் இருப்பது மறந்து போகிறது 

 தூக்கி விடலாம், கண்ணீரைத் துடைத்து விடலாம்.  இன்னும் என்னனென்னமோ செய்யத் தெரிந்த காலம் ஒரு குருவிக் கூட்டையல்லவா பிரித்து எறிந்துவிட்டது.  இனி ஹைதராபாத்தில் இருந்து என்ன செய்வது என ராஜண்ணா ராஜின் குடும்பம் சொந்த ஊரான கடப்பாவுக்கு சென்று விட்டது.  நாடகங்களுக்கு மேக்கப் பொருட்கள் செட்டிங்குகள் செய்து வந்த கிருஷ்ணா என்பவர் வேறு நாடக கம்பெனிகளுக்கு அவற்றை கேட்ட விலைக்கும் இலவசமாகவும் கொடுத்து விட்டு ஒரு சினிமாக் கொட்டகையில் சீட்டுக் கிழித்து வாழ்க்கையை நகர்த்துகிறார்.  எஞ்சிய வரலாற்று நாடக பாத்திர பொருட்களை யாரும் இந்த காலத்தில் தங்கள் கம்பெனியைத் தவிர வரலாற்று  நாடகம் போடாததால் வீட்டை அடைத்துக் கொண்டிருக்கும் மேக்கப் பொருட்களை வேலைக்கு போகும்போது ஒவ்வொன்றாய் எடுத்துக் கொண்டு இடையில் வரும் காட்டுப் பகுதியில் வீசி விட்டுச் செல்வார்.   அவை கேட்பாரற்று கிடக்கின்றன. யாரேனும் சிலர் எதற்கோ எடுத்துச் சென்றும் உள்ளனர். 

தனபால் தன் சொந்த ஊரான தஞ்சாவூர் வந்து தன் வீட்டில் குடியிருந்த தமக்கையுடன் குடியேறிட்டார்.   கங்கம்மாவையும் தஞ்சாவூருக்கு அழைத்து வந்து  தான்  வசிக்கும் தெருவில் பத்து வீடு தள்ளி ஓர் எளிய வாடகை வீட்டில் குடிவைத்தார்.  நல்ல வேளையாக தனது மகன் மெட்ரிக் முடித்திருந்ததால் இங்கே கொண்டு வந்து மேல்நிலை பள்ளி ஒன்றில் சேர்த்து விட்டு தனது மைத்துனருடன் ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

 தனபாலின் மகன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே விடுமுறை நாட்களில் வார மாத இதழ்கள் பேருந்தில் கூவி விற்று பகுதி நேர பணிபுரிந்து வந்தவன், பின்னர் தீவிரவாத அமைப்புகளின் அரசியல் மற்றும் இலக்கிய பத்திரிக்கைகளை மட்டும் விற்பதோடு அதில் உள்ள சாராம்சத்தை சுருக்கமாக விளக்கி விற்கத் தொடங்கியவன் ஒரு நாள் காணாமல் போய்விட்டான். 

ஆந்திரா முழுவதும் சுற்றித் திரிந்த கங்கம்மா தேவியின் கால்கள் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல ஓய்ந்து கிடக்கின்றன. பாதச் சுவடுகளற்ற பாலை நிலமாய், நிலவொளி காயாத காடுகளாய், மேகங்கள் முட்டாத மலையாய், குளவைப் பாட்டு கேட்காத  மருத நிலங்களாய்.  வடக்கு அலங்கத்தில் உள்ள தன் இருப்பிடத்திற்கும் சிவகங்கை பூங்காவுக்குமான தூரமே தனது பயணமாக.

வாழ்ந்து கெட்டவனையும், ஊர்ந்தவன்  உச்சிக்குப் போனதையும், ஏழைகள் எழைகளாகவும், பணக்காரன் தொடர்ந்து பணக்காரனாகவே இருப்பதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.   இந்த மனிதர்களையும் சமுதாயத்தையும் எந்த காரணி இயக்குகிறது?  அகமா, புறமா என்ற கேள்விக்கான பதில்கள் வரலாறு முழுக்க தத்துவங்களால் நிரம்பிக் கிடக்கின்றன.  அவை கற்றும் மறந்தும் போகின்றன.  மறதி மட்டும் இல்லையென்றால் மனிதன் மேலும் அல்லலுறுவான்.  ஐம்பது வயதை கடந்த பிறகே வாழ்க்கை முடியப்போவதையும் எதையும் சாதிக்கவில்லையென்ற ஏக்கமும் பெரும்பாலனோரை வந்து துளைத்து எடுக்கிறது. கடந்த காலமெல்லாம் தொலைந்து போனதாக கருத வைக்கிறது.   எத்தனை சம்பவங்களை பார்த்துவிட்டோம்.  எல்லாம் மனதில் நிற்பதில்லை.  ஏனென்றால், புதிது புதிதாகப் பிறக்கின்றன. நிறைய பேர் காணாமல் போய்விட்டனர். வாழ்ந்தார்களா மூச்சை மட்டுமே இழுத்துவிட்டு இருப்பை நிருபித்து வந்தார்களா பிறந்ததாலும் இறப்பு வரவில்லை என்பதாலும் காலத்தைக் கடத்தினார்களா என ஆராய வேண்டுமானால் தனித்தனித் தத்துவங்களை தோற்றுவிக்க வேண்டி வரும்.  ஆனால், கால நதியில் எல்லாம் கடந்து போகின்றன.   அது தொடக்கமும் முடிவுமற்று ஓடிக்கொண்டே இருக்கிறது.  நீந்துவதற்கில்லை  அது. முடிந்தால் நீந்தியும் ஓடத்தைக் கொண்டும் கடந்தும் போகலாம். வெறும் மனத்தை மட்டுமே கொண்டு அக்கரை போகமுடியாது.   சந்தர்ப்பங்கள்தான் மனிதனை ஆட்டிப் படைக்கிறது.  போராடிக்கொண்டே இருந்தாலும் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை.  பங்கெடுத்துக்கொள்வது மட்டுமே வாழ்க்கையென்ற நிலை ஏற்படுகிறது  ஓய்ந்து சாய்ந்தும் எல்லாவற்றையும் கூட்டி குப்பையாக்கி குப்பையை குப்பையோடு கொட்டி விடுகிறது மரணம். 

தனபாலின் மனைவிக்கு கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் இருவார தீவிர சிகிச்சை பெற்று வந்தாள். மருத்துவமனையில் அவருடன் உடனிருந்து கங்கம்மா தேவி கவனித்து வந்தாள். அது ஆறுதலாகவும் வெளிச் சுவாசம் அவள் மீது வீசுவதாகவும் இருந்தது.   சிகிச்சை பலனற்று தனபாலும் தனி மரம் ஆனான்.

அடிக்கடி காலை நேரம் கங்கம்மா தேவி வீட்டிற்குப் போய் விசாரித்து வந்தான்.  அந்த விசாரிப்பும் கடந்தகால நினையூட்டல்களும் உலகின் ஓர்  ஓரத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வதுபோல் இருக்கும். 

“பாலண்ணா”

“என்னம்மா”

“நானிருக்கிறேன் என்றுதான் உங்கள் மனைவியை கவனிக்காமல் விட்டு விட்டீர்களாம்”

“சிகிச்சையின் போது நீதானே அவளோடு கூட இருந்தாய்”

“இப்படித்தான் இருப்பார்களா?”

“அவர்களுக்கொன்று பேசிக்கொள்ள ஏதாவது பொருள் வேண்டாமா?”

 “ஊர் வாயை மூட முடியாதே”

“உன் காதுகளை மூடிக்கொள்ளேன். மனதை நிலைப்படுத்திக் கொள்ளேன்.  நீ எனக்கு எப்போதும் கங்காதான்.  நம் உறவுகளுக்கு இடையே தங்கையென்றோ நட்பு என்றோ ஏன் பயந்துகொண்டு ஏதோ ஒரு உறவின் பெயரை சூட்டிக்கொள்ள வேண்டும்”

“நான் சீசரின் மனைவிதானே?”

“இன்னோரு சீசர் வரமுடியாது”

“நான் உங்களோடு இருக்கும்போது அனாந்திர வெளியில் தனிமையில் நடப்பதுபோல இருக்கும்.  தனித்தனியே நடப்பது போல உணர்வேன்.”

“நட்சத்திரங்கள் பெருமை படட்டும்”

“அவை எவ்வளவு நாளுக்கு இருக்கும்”

“எவை?”

“நட்சத்திரங்கள்”

“ஒரு நாள் உதிர்ந்து போகும்”

“அதுவரை பெருமைப்படுத்துமா?”

“டெம் பிளேட்டில் வைத்துக்கொள்ளும்” 

“அதன் வாழ்நாள் முழுக்க எழுத்துகளை தேயாமல் வைத்திருக்க சாத்தியமா?”

“இல்லை.  ரோமாபுரி ராணி கங்கம்மா என்னானாள். பின் கங்கம்மா தேவியானாள்.  தற்போது காணாமல் போனாலே அதேபோல என்றேனும் ஒருநாள்”

“கங்கம்மா தேவி இப்போது நிஜமாகவே இல்லையா? உங்களுக்குமா?”

“எனக்கு நீ எப்போதும் கங்காதானே”

“நான் மாலை கட்ட கற்றுக்கொள்ளப் போகிறேன்”

“வாழ்வின் மீது பிடிப்பு வந்தால்  வாழ்வை கொண்டாட வேண்டும்”

“கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். அர்த்தங்கள் நிறைந்து போனதாகத் தெரிகிறது”

“வாழ்வில் கூட அர்த்தங்கள் இருக்கிறதா?”

“ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டுமென்று வைராக்கிய மனதோடு செயல்படும்போது சந்தர்ப்பம் சாதகமானால் அர்த்தம் மிகுந்ததாகத்தான் அர்த்தம்”

“ஆனால் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லையே. எனக்கு இனி வைராக்கியம் ஏதுமில்லை. சந்தர்ப்பங்கள் தேவையில்லை. அர்த்தமென்று ஏதுமில்லை.

“இருக்கலாம்”

“அர்த்தங்கள் அர்த்தமிழக்கும்போது வெறுமையாகிவிடுகிறது”

“அப்படியானால் வாழ்வே இல்லையா?”

“இருக்கலாம்”

“இருக்கலாமா இல்லையா?”

“இல்லாமல் இருக்கலாம்”

“நாளை காலை வருகிறீர்களா?”

 “ஏன்? . . .  வாறேனே”

மறுநாள் காலை வீட்டின் வெளியே காய்கறி தள்ளு வண்டியில் மாலை ஒன்று கிடந்தது. அது ஒழுங்கற்று பூக்கள் பாதி உதிர்ந்த நிலையில் உள்ளது போல வடிவெடுத்து இருந்தது. தொடுத்திருப்பதாலையே மாலையெனச் சொல்லலாமென்ற வடிவில்.  அது கங்காவின் வேலையாகத்தான் இருக்கும்.  பழகப்போவதாகச் சொன்னாளே. கங்கா என்ற அழைப்புக் குரலோடு  வீட்டினுள் நுழைந்தான் தனபால்.  கங்கம்மா தேவி சிரித்த முகத்துடன் அமைதியாக அடங்கிப் போயிருந்தாள்.  மரணங்களை சந்தித்து மரத்துப்போன தனபாலுக்கு பெரிதாய் அழுகை வரவில்லை.  

அக்கம் பக்கத்தாரின் உதவியுடன் அதே தள்ளு வண்டியில் கிடத்தி அவள் தொடுத்த மாலையை போட்டு தள்ளிக் கொண்டுபோய் அவளை பூமிக்குள் புதைத்து வைத்தான்.  புதைத்த இடத்தில் பெரிய சமாதி ஒன்று எழும்பி அதில் ரோமாபுரி பேரரசின் மகாராணி கங்கம்மா தேவி என கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டு கண்களை கசக்கிக் கொண்டான்.  திரை விழுந்தது. அருகே பூத்துக் கிடந்த தும்பைப் பூக்களை கொய்து வந்து புதை மேடையின் ஈர மணலில் தூவிவிட்டு கங்காவின் விட்டிற்குப்போய் தேடிப்பிடித்து ஓர் அகல் விளக்கை ஏற்றி வைத்தவன். அசதியில் குளிக்காமல் அதே இடத்தில் படுத்து உறங்கி விழித்தபோது மறுநாள் மதியமாக இருந்தது.  அங்கு யாரும் வாழ்ந்ததற்கான அடையாளம் ஏதுமில்லை.  எல்லாம் உலர்ந்து போயிருந்தது. அகல் விளக்கு கூட அணைந்து கரிப்பிடித்திருந்தது. 

அவள் குடியிருந்த வீட்டை காலி செய்து தரும்படி உரிமையாளர் கோரியதற்கினங்க தட்டுமுட்டுச் சாமான்கள் துணிமணிகளை என்ன செய்வதென்று புரியாமல் அப்புறப் படுத்தியபோது அவளது தகரப் பேட்டியின் அடியில் ஒட்டப்பட்டிருந்த கவர் ஒரு சரித்திரத்தின் மீதமாய் கிடந்தது.  எப்போதோ கணவனுக்கு கங்கா எழுதிய கடிதம் அது.

சோமா, 

உன்னை இப்படி அழைப்பது தானே எனக்குப் பிடித்தது.  அதனால் உனக்கும் பிடித்தது.  நீ என் மீது கோபம் கொண்டதே  இல்லையே. அது ஏன்?   எனக்கு சில நேரம் சலிப்பு தட்டும் தெரியுமா!  எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என தெரிந்ததும் என்னை ஏன் அடித்து துரத்தவில்லை.  வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கலாமே. மருத்துவ அறிக்கையை கொண்டே விவகாரத்து செய்திருக்கலாமே.  சோமா! எப்படி அதன் பிறகுதான் உன்னால் அதிக அன்பு செலுத்த முடிந்தது.  நமக்கு குழந்தை இல்லையென்று என்றுமே நீ வருந்தியது இல்லை.  ஆனால் எப்பொழுதேனும் உன் மனது சஞ்சலப்பட்டிருக்கும் என நான் சந்தேகப்படாமலா இருந்திருப்பேன்.  சந்தேகப்பட்டேன்.  அதுதான் உன்மீது எனக்கிருந்த ஒரே சந்தேகம்.  ஏனெனில் பலமுறை நான் சஞ்லப்பட்டிருக்கிறேன்.   இப்போது எனக்கென்று ஒரே ஒரு ஆசைதான்.  ஆனால் அதை நீ நிறைவேற்ற இயலாது.  எனக்கு முன்பே நீ இறந்து விட வேண்டும்.  பார்க்க யாருமில்லாமல் என் சோமா அனாதையாகிவிடக் கூடாது.   நீயின்றி நான் வருந்த வேண்டும். அப்போதுதான் நான் வாழ்ந்த வாழ்க்கை பூரணத்துவம் பெற்றதாகும்.  இக்கடிதத்தை படிக்க முடியாதவாறு மடித்து கவரை ஒட்டி என் பெட்டியின் அடியில் வைத்து விடுவேன்.  என் விருப்பம் நிறைவேறி விட்டால் இதை நீ வாசிக்கவே முடியாமல் போகும்.  அதுதான் எனக்கு வேண்டும். நீ போன பிறகு என்றேனும் ஒரு நாள் உன் நினைவுகள் மங்கத் தொடங்கினால் கவரை கிழித்து கடிதத்தை படித்துப் பார்த்து உன்னை புதுப்பித்துக் கொள்கிறேன். 

சோமா !

அழைத்து பார்த்தேன். 

அருகில்தான் இருக்கிறாய்.

இப்படிக்கு,
கங்கம்மா தேவி.

– எட்டி மரக்காடு சிறுகதை தொகுப்பில் வெளியான சிறுகதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *