இன்ப வேட்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 2, 2024
பார்வையிட்டோர்: 254 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டான். பாலைவனத்திலே பிருந்தாவனத்தைக் காணமுடியுமா? காட்டுத் தீயின் நடுவில் நில வொளியின் அமுத இன்பத்தை அனுபவிக்கக் கூடுமா? உலகம் அவனுக்குத் துன்ப மயமாகத் தோன்றியது. விடுதலைக்கு வழி இல்லையா? 

அவன் ஒரு பக்தன். உடலும் உள்ளமும் குழைய ஈசுவர நாமத்தைப் பாடுவதே அவன் தொழில். ஆனால் பக்தியும் பஜனை யும் அவனுக்கு ஆறுதல் கொடுக்கவில்லை. அலை எப்போது ஓயும்? சாந்தி வெள்ளத்தைப் பருகி எப்போது ஆன்ம வேட்கை தணியும்? விடுதலைக்கு வழியே இல்லையா? 

தற்கொலை? – அதற்கு அவன் தயாராயில்லை. தற்கொலை மகாபாவம் என்னும் சாஸ்திர நியதியை அவன் பரிபூரணமாக நம்பினான். துறவு? – சர்வ சங்க பரித்தியாகத்துக்கு மேலான மோக்ஷ மார்க்கம் இல்லை யென்பது உண்மைதான். ஆனால் அவன் மனம் அதற்கு ஏற்ற பக்குவும் அடையவில்லை. ஒருநாள் வழக்கம் போல் அவன் கோவிலுக்குப் போனபோது உடலெங்கும் விபூதி அணிந்து திகம்பரனாகிய ஒரு துறவியைக் கண்டான். ஆலயத் துக்கு எதிரில் இருந்த பெரிய ஆலமரத்தின்கீழ் அந்த முனிபுங் கவன் உலகத்தை மறந்து அசஞ்சல பக்தியால் விழிகளைப் பாதி மூடித் தியானத்தில் வீற்றிருந்தான். வலிய ஆகர்ஷிக்கும் கம்பீர மான தோற்றம்; மாசற்ற இன்பத்தினால் ஒளிவாய்ந்த மணி வதனம். 

பக்தன் அவனை அணுகி, “ஐயனே! இந்த ஆனந்தத்துக்கு வழியென்ன? என் மனத்துயரம் என்று தீரும்? கொஞ்சம் கருணை செய்யுங்கள் என்று வேண்டினான். 

துறவி கண்களை அகல விரித்துப் புன்முறுவல் பூத்த முகத் துடன், “குழந்தாய்! உன் ஆசை நிறைவேறும். பக்தியும் பஜனை யுமே அதற்கு மார்க்கம்’ என்றான். 

பக்தன் ஆச்சரியத்தினால் மலைத்தான். ‘நான் இப்போது மேற் கொண்டுள்ள பக்தியும் பஜனையும் போதாவா? இந்த ஊரில் என்னைவிடச் சிறந்த மெய்யன்பன் இல்லையென்பது பொதுஜன வாக்கு. இதைவிட மேலான பக்தி எங்கிருந்து உண்டாகும்? எப்படி உண்டாகும்? உண்டாக வழியிருக்க வேண்டும். இல்லை யென்றால் எனக்கு மன அமைதி இல்லாததன் மர்மம் என்ன? இந்த யோகியின் அருள் வாக்கு ஒருபோதும் பொய்யாகாது. ஆனால் என் பக்தியில் என்ன குறையிருக்கிறது? என்ன பிழை யிருக்கிறது?’ என்று சிந்திக்கத் தொடங்கினான். 

அதன்பின் இக்கேள்விக்கு விடை கண்டுபிடிப்பதே அவன் நோக்கமாயிற்று. உறக்கத்திலும் கனவிலும் அந்தத் துறவியின் வார்த்தை அவனை அலட்டத் தொடங்கியது. ஞானிகளை அணுகினான். அறிஞர்களை அடைந்து ஆலோசனை கேட்டான். பலரும் பலவிதமாகச் சொன்னார்கள். ஒன்றும் அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை. 

முடிவில் ஆசையும் சஞ்சலமும் பிடர்பிடித்துத் தள்ள அவன் ஊரை விட்டுப் புறப்பட்டான். ‘உண்மையான ஆனந்தத்தை எங்கே பெறலாம்? குற்றமில்லாத பக்திச் சுடரை எங்கே அடையலாம்?’ 

உலகப்புகழ் வாய்ந்த ஒவ்வொரு கோவிலுக்கும் அவன் சென்றான். குயில் நாதம் தோல்வியுறும் மதுரமான குரலில் றைவனுடைய ஆயிர நாமங்களையும் பாடி உருகினான். மதுரை, காஞ்சி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேசுவரம் ஆகிய எல்லா ஆலயங் களிலும் அவனுடைய அன்புவெள்ளம் பெருக்கெடுத்தோடியது. ஆனால், சாந்திமயமான இமயத்தின் சிகரத்திலே எழுந்தருளி மீனாக்ஷியும், பறையனைப் பார்ப்பனனாக்கிய சிதம்பர மூர்த்தியும், காத்தலே தொழிலாகக் கொண்ட அரங்கநாதனும் அவனைக் கைவிட்டனர். 

உலகம் அவனைத் தொழுதது. அன்பர்கள் அவன் அடித் துகளைத் தலைமேல் அணிந்து மகிழ்ந்தனர். அவன் கீர்த்தி எங்கும் பரவியது. ஆனால் அந்தப் புகழும் ஆராதனையும் அவனுடைய ஆன்ம அதிருப்தியையே அதிகமாக்கின. 

கால்கள் ஓய்வு கொள்ளவில்லை. ஓய்வுக்கு இடந்தான் ஏது? காடும் மலையும் கடந்தான். நதியும் பொழிலும் தாண்டி நடந்தான். கடைசியில் அவன் இயற்கை வனப்பு வாய்ந்த ஒரு சிற்றூரை அணுகினான். வாவென்று அழைக்கும் கோபுரங்களும் ஆயிரக்கால் மண்டபங்களும் தங்கச் சிலைகளும் உள்ளங்கவரும் சிற்பங்களும் அங்கே காணக் கிடைக்கவில்லை. வியாபாரிகள் தங்கள் சரக்குகளை விற்றுவிடவும், தாய்மார்கள் தங்கள் பெண்களுக்கு மணமக்களைத் தேடிப் பிடிக்கவும் அந்த அந்தப் பொருள்களுக்கு இல்லாத குணங்களையெல்லாம் ஏற்றிச் சொல்வதுபோலத் தங்கள் தங்கள் ஆலயங்களிலுள்ள விக்கிரகங்களின் தனி வல்லமையைப்பற்றிக் கொட்டி முழக்கும் க்ஷேத்திர அதிகாரிகளும் அங்கே இருக்கவில்லை. ஒரு சிறு கோவில், யாதோர் அலங்காரமும் இல்லாத ஒரு சின்னஞ் சிறு சிவாலயந் தான் அந்த ஊரில் இருந்தது. சிவலிங்கத்தின் முன்னால் ஒரு ரிஷப விக்கிரகமும் உண்டு. 

பக்தன் நடந்த களைப்பினால் அயர்ந்து தூங்கினான். ஆனால் வழக்கம்போல் அதிகாலையிலேயே கண் விழித்துப் பா ஆரம்பித்தான். – 

அது நடவு காலம். கோவிலின் உள்ளிருந்து வெளியே பார்த்தால் குடியானவர்கள் வயற்புறங்களில் பயிர் நடும் காட்சியைக் கண் எட்டும் திக்குகளிலெல்லாம் காணலாம். 

பக்தனுடைய குரலிலே இனிமை இருந்தது. ஆனால் மனத்திலே இனிமை இருக்கவில்லை. இந்த ஏழையின் சஞ்சலம் எப்போது நீங்கும்? அருட்பெருங் கடலாகிய இறைவனே! எனக்கு விமோசனமே இல்லையா?” என்று வேண்டிக்கொண்டு அவன் எழுந்தான். 

உடனே அவன் எதையோ கண்டவன்போலத் திடுக்கிட் டான். கோவிலுக்கு முன்னால் இருந்த ரிஷப விக்கிரகம் அவனைப் பார்த்து இரங்கிக் கண்ணீர் விட்டு, “அன்பனே, உன்னை ஸ்வீகரிப் பதற்குப் பகவான் அந்த மூலஸ்தானத்தில் இல்லை ” என்று சொல்வது போலவும், பிறகு மௌனமாகத் தலையை வயலின் பக்கம் திருப்புவது போலவும் தெரிந்தது. என்ன ஆச்சரியம்! பக்தன் நந்தியைக் கூர்ந்து கவனித்தான். இது உண்மைதானா? அல்லது வெறும் மன மயக்கமா? தலை வயற்புறந்தான் திரும்பி யிருந்தது. ஆனால் அதன் கண்களில் நீர்த்துளி தென்படவில்லை. நான் கோவிலுக்குள் நுழைந்தபோது ரிஷபத்தின் தலை எந்தப் பக்கம் திரும்பியிருந்தது?’ என்று அவன் நினைத்துப் பார்த்தான். ஆனால் அதற்குச் சரியான பதில் கிடைக்கவில்லை. 

பக்தன் வாயிற்படியில் நின்றுகொண்டு வயலை நோக்கினான். நாட்டுப்புறத்தின் தெய்விக அழகு அவன் கண்வழியே நுழைந்தது. எங்கே பார்த்தாலும் தூய்மையின் நடனம்! காலையிளங் காற்று ஆனந்தமாகத் தவழ்ந்து கொண்டிருந்தது. உதய சூரியன் செங் கதிர்களை அள்ளித் தெளித்து இந்திர ஜாலம் செய்துகொண்டிருந் தான். பக்தனுடைய உள்ளத்தில் அவனை அறியாமலே ஒரு மாறுதல் ஏற்பட ஆரம்பித்தது. ஆத்ம வஞ்சனையின் நர்த்தன ரங்கமாகிய நகரங்களில் செல்வத்தின் நடுவில் இருந்து பழகிய அவனுக்குப் பிரகிருதி தேவியின் பரிசுத்தமான தோற்றம் ஆச்சரியகரமாக இருந்தது. நள்ளிரவில் ஒருவர் கண்ணுக்கும் தெரியாமல் வானின்றிழிந்து மலரிதழ்களை அவிழ்க்கும் பனித்துளி போல அந்தக் காட்சி அவன் மனத்தை மலரச் செய்தது. 

பக்தன் அசையாமல் நின்றான். ரமணீயமான அந்த வயல் வெளியைக் கண் கொட்டாமல் பார்த்தான். அங்கே அரை நிர்வாணிகளான குடியானவர்கள் ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டிருந்தார்கள். பச்சைப் பசேலென்ற நெற்பயிர்கள் மந்த மாருதத்தில் அசைந்தாடின. கொஞ்சம் தூரத்தில் காய்த்துக் குலுங்கும் தென்னை மரங்கள் தலை தூக்கி நின்றன. உழவர்களின் பாட்டும் காற்றிலே மிதந்து வந்து அவன் காதுகளில் இன்பத் தேனை ஊற்றியது. ஒருபுறம் பாம்பு நெளிவதுபோல் வளைந்து வளைந்து சென்ற சிற்றருவி ஒன்று தென்பட்டது. மற்றொரு புறத்தில், வயலுக்கும் தோப்புக்கும் அப்பால், ஒரு பெரிய குன்று நிமிர்ந்து நின்றது. 

திடீரென்று கிடைத்த அந்த மன அமைதியைக் குறித்துப் பக்தன் சிந்தித்தான். அந்தி நேரம் வரையிலும், பின் உறங்கும் வரையிலும், அதற்குப் பிறகு கனவிலும் அதே எண்ணந்தான் அவன் நெஞ்சில் குடிகொண்டிருந்தது. 

மறுபடியும் மனமயக்கந்தானா? அல்லது ரிஷபம் உண்மை யிலேயே பேசுகிறதா?- பக்தன் மீண்டும் நந்தியின் தோற்றத்தைக் கண்டான். 

“அன்பனே! உன் துயரத்தைக் கண்டு மனம் இரங்கினேன். அதனால்தான் கண்ணீர் விட்டு வருந்தி வயற்புறம் திரும்பி உனக்கு ஆனந்த மார்க்கத்தைக் காட்டினேன். நீ ஒரு பக்தன் என்பதில் சந்தேகம் இல்லை. உன் பஜனை குற்றமற்ற தென்பதிலும் ஐயம் இல்லை. ஆனால் இறைவன் இருக்கும் இடத்தை இது வரையிலும் நீ கண்டுபிடிக்கத் தவறினாய். மீண்டும் சொல்லு கிறேன்: நீ ஒரு சிறந்த பக்தன். ஆனால் யாருடைய பக்தன்? கடவுளின் பக்தனா? அல்லது உன் சொந்தச் சகோதரர் களின் பக்தனா? ? நாள் முழுதும் வயலிலே உழைத்து மகிழும் அந்தப் பேதைகள் உன் உடன்பிறப்பல்லவா? ஜீவனத் துக்கு வழியில்லாமல் தயங்கினாலும் மனத்திருப்தியைக் கைவிடாத அந்த ஏழைகள் உன் சகோதரர்களல்லவா? நீ அவர்களைத் தொழுவதுண்டா? இறைவனை பஜிப்பதால் நீ என்ன எதிர் பார்க்கிறாய்? செல்வமா?ஆம் என்றால், பூமித்தாய் தங்கக் கர்ப்பம் உள்ளவள். அந்த ஏழைகளுடன் ஏழையாய் நீயும் வயலில் இறங்கி வேலை செய்தால் கிடைக்காத பொருளும் உண்டோ? கடவுளின் மக்களைக் கை தூக்கி விடுவதைக் காட்டிலும் சிறந்த பஜனை ஏது? பக்தனே, உனக்குத் துக்கத்திலிருந்து விடுதலை வேண்டுமா? அப்படியானால் முதலில் உன் ஆத்மாவை மறந்துவிடு. அந்தப் பேதைகளை உன்னத நிலைக்குக் கொண்டுவரும் பெரும் பணியில் இறங்கு. உன் இன்ப வேட்கை தீருவதற்கு இதுவே சிறந்த வழி” என்று தூக்கத்தின் நடுவில் ரிஷபம் பேசுவதுபோல் இருந்தது. 

அதற்குப் பின்னும் அவன் பக்தனாயிருந்தான்: கடவுளின் மக்களைப் பஜிக்கும் பரம பக்தன். ”எனக்கு விடுதலை வேண்டும் என அவன் ஆலயந்தோறும் நடந்து திரிந்து வருந்தவில்லை. பாடு கிடந்து உடலை வருத்தித் துன்பம் கொள்ளவும் இல்லை. 

அந்தச் சிறிய கோவில் இன்னும் இருக்கிறது. வயலின் பக்கம் திரும்பி அவனுக்கு இன்பவழியைக் காட்டின ரிஷப விக்கிரகமும் இருக்கிறது. ஏழைக் குடியானவர்கள் இன்னும் வயல்களில் வேலை செய்கிறார்கள். அந்தப் பக்தன் தன் இஷ்ட தெய்வத்தை ஏழைகளின் மத்தியில், ஏழையின் உருவத்தில் னென்று மக்கள் நம்புகிறார்கள். அதையொட்டி அந்தச் சிறு கோவிலில் ஓர் உத்ஸவமும் நடக்கிறது.ஆனால் இன்று அந்த ஆலயத்துக்குத்தான் பிராதான்யம்; உத்ஸவத்துக்குத்தான் மகிமை. அக்கோவிலுக்கருகில் நின்றுகொண்டு வெகு நாட் களுக்கு முன் ஒரு மெய்யன்பன், “ஆத்ம சுகம் வேண்டுமானால் ஆத்மாவை மறந்து சொந்தச் சகோதரர்களுக்குத் தொண்டு செய்யுங்கள் என்று அருளிய பெருந் தத்துவத்தை உலகம் மறந்துவிட்டது!

– கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *