இன்னும் மழை வரும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 6, 2024
பார்வையிட்டோர்: 856 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மழை சாரலாகத்தூற்றிக் கொண்டிருந்தது. அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது குடை எடுத்து வர மறந்து போய் விட்டது. சுங்க இலாகா அலுவலகத்தில் கொடுக்க வேண்டிய காகிதங்களை சட்டைக்குள் நுழைத்துக் கொண்டு, நனையாமல் ஓடி விட நினைத்தான் குமார்.

இருப்பினும், சுங்க அலுவலகத் திற்குள் நுழைவதற்குள் நன்றாக நனைந்து விட, பையிலிருந்த கை குட்டையை எடுத்து தலையைத் துவட்டிக் கொண்டு, கொண்டு வந்திருந்த பில் ஆஃப் என்ட்ரியையும் மற்ற காகிதங்களையும் துடைத்து எடுத்துக்கொண்டு. தன்னுடைய வேலைகளைத் துவங்கினான்.

பேப்பர்களை ஒவ்வொரு அலுவலர்களிடமிருந்து கையெழுத்து வாங்கி, அனுமதி பெற்று கொடுக்க வேண்டியவைகளைக் கொடுத்து, சிலரிடம் சண்டையிட்டு இன்னும் அதிகமாக பணம் கொடுத்து தினப்படி வேலையைத் தொடர்ந்தான்.

அந்த மேலதிகாரியிடம் வந்த போது, “சார் இந்த டாக்குமென்டில் வேறு எந்த பிராப்ளமும் இல்லை. நான் இன்சூரன்ஸ் காப்பையும், கேட்லாக்கும் சப்மிட் பண்ணி விடுகிறேன். நீங்கள் கையெழுத்திடுங்கள்” என்றான் திரும்பவும்.

அப்படியென்றால் நான் கேட்ட பணத்தைக் கொடு.

“சார், இவ்வளவு பணம் கொடுக்க என் அலுவலகத்தில் அனுமதிக்க மாட்டார்கள்”

“குமார், சும்மா பொய் சொல்லி -டாக்குமென்டை க்ளீயர் பண்ணி விட்டுப் போய் விடலாம் என்று நினைத்தீர்களா? உங்கள் இறக்குமதி செய்யும் நிறுவனத்திடம் இந்தப் பேப்பர்கள் இருக்காது. எனக்கு நன்றாகத் தெரியும்.

அவர்கள் இனி சுவிட்சர்லாந்தை தொடர்பு கொண்டு கூரியரில் பேப்பர் வந்து சேர்ந்து, என்னிடம் காண்பித்து கையெழுத்து வாங்குவதற்குள், துறைமுகத்தில் நீங்கள் கட்ட வேண்டிய வரியும், கன்டெய்னர் சார்ஜும் எனக்குத் தர வேண்டியதை விட ஐந்து மடங்காகி விடும். என்ன சொல்கிறீர்கள்”

“சார். ஒரு நிமிடம் என் மேலாளரிடம் பேச முடியுமா?”

“உங்கள் அலுவலகத்தில் யாரிடமும் நான் பேச வேண்டியதில்லை. இருபத்தையாயிரம் கொண்டு வந்து தந்து விட்டு கையெழுத்து வாங்கிக் கொண்டு போங்கள்”

“சரி சார். நான் அப்புறம் வருகிறேன்” வெளியே வந்த குமார், தன்னுடைய அலுவலகத்தில் ஆய்வாளரிடம் பேச, ஆய்வாளர் கணேசன், “குமார், நான் பணம் கொண்டு வருகிறேன். உடனடியாக வேலையை முடித்து விடலாம்” என்று சொல்லி போனை வைத்தார்.

கணேசன் சுங்க அலுவலகத்திற்கு வந்து, அந்த மேலதிகாரியைச் சந்தித்து, “சார். இருபதாயிரம் வைத்துக்கொள்ளுங்கள். என் பொறுப்பிற்கு இதற்கு மேல் பணம் தர அனுமதியில்லை. நீங்கள் கையெழுத்திட்டால் தான் எனக்கு இன்றைய தேதிக்குள் பொருளை துறைமுகத்திலிருந்து வெளியே எடுக்க முடியும்” என்றான்.

குமாரும் “சார் கொஞ்சம் உதவி செய்யுங்கள்” என்றான்.

“குமார் உங்களுக்கு இதே வேலையாகப் போச்சு. உங்கள் கம்பெனியின் மேலதிகாரியை தொலைபேசியில் அழையுங்கள். நான் பேசுகிறேன்” என்றார் சுங்க அதிகாரி,

“கணேசன் சார், பணத்தைக் கொடுத்து விட்டு காரியத்தை முடித்து விட்டுப் போகும் வழியைப் பாருங்கள்” குமார் கிசு கிசுத்தான்.

“என்ன விஷயம்!” என்றார் சுங்க அதிகாரி.

“ஒன்றுமில்லை சார்” என்று பணம் எடுத்து கொடுத்து விட்டு பேப்பர்களில் எழுதிக் கையெழுத்து வாங்கிக் கொண்டு வெளியேறிய போது மழை நின்று போயிருந்தது.

“என்ன குமார், அடுத்து என்ன செய்ய வேண்டும். அந்தப் பார்ட்டி என் தலையைப் போட்டுக் குடைகிறான். சாயங்காலத்திற்குள் எந்திரம் அவன் தொழிற்சாலைக்குப் போகாக வேண்டும்” என்றார். கணேசன்.

“சார் கொஞ்சம் துறைமுகத்திற்கு வந்து அந்தப் புதுப் பெண் இன்ஸ்பெக்டரிடம் பேசி விட்டுப் போனீர்களானால் நான் இன்றே வெளியே எடுத்து விட முடியும்” என்றான்.

இருவரும் ஒரு டாக்ஸியில் ஏறி துறைமுகம் வந்து, எந்திரம் இறங்கியிருந்த பகுதியில் அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டர், சுங்க அதிகாரி மீனலதாவைச் சந்தித்தனர்.

அந்தப்பெண்அதிகாரி, காகிதங்களைச் சரிபார்த்துவிட்டு, எந்திரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து விட்டு “இந்த டாக்குமெண்டுகள் யாருடையது?” என்று கேட்டார்.

“எங்களுடையது ” என்றான் குமார்.

“இன்சூரன்ஸ், கேட்லாக் எதுவுமே இல்லையே”

“அவை. வேண்டாம் என்று சொல்லித்தானே கஸ்டம்ஸ் ஆபீஸிலே பேசி கையெழுத்து வாங்கி வந்துள்ளோம்”

“என் மேலதிகாரி இப்படி செய்யும் போது நான் என்ன செய்ய முடியும்” என்றார் மீனலதா.

“என்ன குமார், இவர்களுக்கு பணம் கொடுத்துச் சரிகட்ட முடி யுமா?” என்று கிசு கிசுக்க, ” என்ன- ஸார் உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டார் மீனலதா.

“பணம் கொடுத்துச் சரிகட்டித் தானே டாக்குமெண்டுகளைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். இதோ என்றார். பார்த்தீர்களா?”

மேலே காந்தியின் படத்தின் அடியில் லஞ்சம் கொடுப்பது தவறு லஞ்சம் வாங்குவது பாவம்” என்று எழுதியிருந்தது.

சிரித்துக் கொண்ட குமார், “மேடம் இது சுங்க அலுவலகத்தில் எல்லா இடத்திலும் எழுதிப் போட்டிருக்கிறது”என்றான்.

“உங்களுக்கு எவ்வளவு தர வேண்டும்” என்று மெதுவாகக் கேட்டார் கணேசன்.

புன் முறுவல் பூத்த மீனலதா, “சார் எல்லோரையும் ஒரே மாதிரி எடை போடாதீர்கள். இப்போது இந்த டாக்குமெண்டை என்னால் ரிஜெக்ட் பண்ண முடியும். என் மேலதிகாரி பணம் வாங்கி ஓட்டை உடைசல் வழியாகப் புகுந்து காரியத்தைச் சரிகட்டப் பார்க்கிறார். எனக்கு எப்போதுமே தவறு செய்வதில் உடன்பாடு இல்லை. நான் நினைத்தால் உங்களிடம் ஒரு பெரிய கணிசமான தொகை வாங்க முடியும்” என்றார்.

“மேடம், எனக்கு கொஞ்சம் அவசரமாக போக வேண்டும். எவ்வளவு என்று சொன்னீர்கள் என்றால்…” இழுத்தார் கணேசன்.

“ஸாரி, எனக்கு எந்தப் பணமும் தேவையில்லை. இங்கு லஞ்ச ஒழிப்பில் நான் முதல் பெண்ணாக இருந்து, லஞ்சம் வாங்கவோ கொடுக்கவோ கூடாது என்ற உறுதி மொழி எடுத்துள்ளேன்.

ஒவ்வொருவருக்குள்ளும் நாம் சபதம் செய்து கொண்டால் மட்டுமே இது முடியும் என நினைக்கிறேன்.

நான் முதலில் உறுதியாக இருக்க வேண்டும். என் மேலதிகாரியின் கையெழுத்தை நான் மீற விரும்பாததால் நீங்கள் டெலிவரி எடுத்துக்கொண்டு போங்கள்” என்று எல்லா காகிதங்களிலும் கையெழுத்திட்டார்.

மழை ஓய்ந்திருந்ததைக் கவனித்து வானத்தைப் பார்த்த போது, திரும்பவும் மேகங்கள் கறுத்துக் கொண்டு வர, “மீனலதாவைப் போன்ற அதிகாரிகள் இந்தியாவில் இருக்கும் வரை மழை இன்னும் வரும்” என்று எண்ணிக் கொண்ட குமார் தன் வேலைகளின் மூழ்கிப் போனான்.

– 7.3.2004, தினபூமி-ஞாயிறுபூமி.

பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *