இனி எந்தக்காடு…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 6,098 
 
 

forestகரும்பச்சைச் சுனாமி அலைகள் வானைமுட்ட எழுந்ததான அடர்ந்த செழிப்பான காடு. வானளவா உயர்ந்த காட்டின் உச்சியில் குளிர்ந்து போகும் வெண்ணிற முகில்களின் தூக்கம். அது அந்தக் காட்டிற்கு வெண்ணிற ஆடை போர்த்தியதான கோலம்.

பரந்த காட்டின் கரைகளில் சில வரண்ட பகுதிகள். அவை அந்தக் காட்டை அரண் செய்வது போல வறட்சித் தாவரங்களை வாளாக்கிய இயற்கை. எழுந்த சுனாமி அலைகளின் ஏற்றம் மத்தியில் பெரும் மலைகளாகப் பொங்கி எழுந்த கோலம். அந்த மலைகளைத் தடவும் இறகுகளாக மேலும் முகில்களின் செல்லச் சேட்டை அங்கு தொடரும். பூலோக சொற்கம் அந்தக் காட்டிற்கே மட்டும் உரிய சொற்பதமாகும். இவ்வாறாக அதன் செழிப்பும், வளங்களும் அந்தக் காட்டிற்கு வருகின்ற மிருகங்களை அதன் வழி மீண்டும் திரும்பாது தன்னகத்தே தடுத்தாட்கொள்ளும் இயற்கைக் கடவுளாக.

மாமிசமும் மரகதமும் ஒருங்கே படைக்கும் அட்சய பாத்திரமாக. அந்தக் காட்டின் மத்தியில் இருந்து மலைகளில் உற்பத்தியாகிக் கரை புரண்டு வரும் இரு ஆறுகள்; அவை கானகத்தை ஊடறுத்து ஓடி மேலும் பல இடங்களில் செழிப்பை அள்ளிப் பச்சை அலைகளாக வீசிச் செல்லும். எங்கும் பச்சையும், பல வாசம் கொண்ட மலர்களும், உண்ணப்படாது அழுகும் கனிகளுமாக நாசியை நிறைக்கும் இயற்கை நறு மணங்கள். அடர்ந்த பரந்த காடு என்பதால் பயங்கர மிருகங்கள் வாழ்வதற்கு ஆதிகாலத்தில் அது ஏற்ற இடமாகியது. ஆனால் மாற்றத்திற்கு மாற்றம் இல்லை என்பதாக அந்தக் காட்டைப் பல மாற்றங்கள் அலையலையாக அடித்துச் சென்றன.

காலக்காட்டியாகிய இறைதூதர் பிறப்பதற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் காடு இராட்சத மிருகங்களால் ஆளப்பட்டதாய் கூறும் சில இதிகாசங்கள் உண்டு. அந்த இராட்சத மிருகங்கள் வலிமையும், நற்பண்பும், மார்க்கமும் கொண்டதாய் வாழ்ந்து வந்தனவாம்.

அந்தக் காலத்திலே விதிவசத்தில் சிற்பிக்கும் மிருகத்தின் அவதாரம் எடுத்த சிற்பியைச் சிற்பித்த மிருகம் பெண் மிருகங்களின் மதி வஞ்சக யுக்தியால் காடேகியதாம். காட்டிற்குப் புதிதாகப் வந்த சிற்பியைச் சிற்பிக்கும் மிருகத்தின் மீது ஒரு இராட்சத மிருகங்கள் மையல் கொண்டதுவாம்;. அத்தால் சிற்பியைச் சிற்பிக்கும் மிருகங்களுக்கு அவை தொல்லை கொடுத்தன. சிற்பியைச் சிற்பிக்கும் மிருகம் இராட்சத மிருகங்கள் மேல் போர்தொடுத்ததாக அந்த இதிகாசம் தொடரும். அதில் வால் கொண்ட சிற்பிக்கும் மிருகம் கோபத்தில் அந்தக் காட்டை எரித்ததாய்க் கதை நீளும். அந்தக் கதைக்குத் தோண்டிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் தோண்டிய ஆதாரத்தோடு இந்தத் தொண்மையான மிருகங்களின் கதை தொடங்குகிறது.

காலக்காட்டியாகிய இறைதூதர் பிறப்பதற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக அந்தக் காட்டிற்கு வேறு ஒரு காட்டில் இருந்து தமது இனத்ததால் விரட்டப்பட்ட ஒரு தொகை ஆண் நாய்கள் நாக்கைத் தொங்கவிட்ட வண்ணம் மிதக்கும் தளத்தால் வந்து சேர்ந்தன. அவை அந்தக் காட்டின் கரையோர வரண்ட பகுதி யொன்றில் செறிந்து வாழத் தொடங்கின. அதைத் தமது பிரதான வாழ்விடமாக்கின.

தனித்து வந்த அந்த ஆண் நாய்களுக்குப் பெண் நாய்கள் வடக்கே உள்ள மலைசார்ந்த காட்டில் இருந்து அழைத்து வரப்பட்டன என்பதாக நம்பப்படுகிறது. அந்த அழகிய பெண் நாய்களோடு அவை புணர்ந்தன. பெருகின. அந்தக் காட்டுப்பகுதியைத் தமது இராச்சியம் ஆக்கின. நாய்க்குலம் அங்கு நன்றாகச் செழித்தது.

காலக்காட்டியாகிய இறைதூதர் பிறப்பதற்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் காட்டின் வடக்குப் பக்கத்தில் கடல் தாண்டிப் பெருவாரியாக வாழ்ந்த நரிக்கூட்டம் ஒன்று அந்தக் காட்டின் செழிப்பை அறிந்து வேட்டைக்காக வந்து சேர்ந்தனவாம். அவர்களிடம் தங்கள் காட்டைப் பிடிக்கும் உள்நோக்கமும் இருந்தாக நாய்கள் பயந்தன. நரிகளுக்கும் நாய்களுக்குமான போராட்டம் அத்தோடு அந்தக் காட்டில் ஆரம்பமாகியது. சில போரில் நாய்களை நரிகள் வென்றன. சில போரில் தோற்ற நாய்கள் திரும்பி வந்து நரிகளை வென்றன. பின்பு சில போரில் நரிகளிடம் மீண்டும் தோற்றன. அவற்றின் போராட்டம் தொடர்கதையானது. அந்தத் தொடர்கதையில் அவற்றிற்கு இடையேயான வன்மம் விளையத் தொடங்கியது.

நரிகள் பெருவாரியாக வேற்றுக் காட்டில் இருந்ததால் அதன் உதவியோடு நரிகள் கூட்டம் நாய்கள் மீது அடிக்கடி படையெடுத்து அந்தக் காட்டை பலமுறை ஆண்டு வந்தன. அதனால் நரிகள் மீது நாய்களுக்கு அடங்காத கோபமும் பொறாமையும் வளர்ந்தது. அது அந்த நரிகளை இந்தக் காட்டை விட்டு விரட்ட வேண்டும் என்கின்ற வெறியை அந்த நாய்களின் மனதில் தோற்றுவித்தது. நரிகளின் இருப்பு தங்கள் இருப்பிற்கு ஆபத்து என்று அவை நம்பத் தொடங்கின. இருந்தும் பலமுறை நாய்களின் இராட்சியத்தை நரிகளும், வெறுக் காட்டு மிருகங்களும் தட்டிப்பறிக்க அவை பாதுகாப்புத் தேடித் தெற்கு நோக்கி நகரத் தொடங்கின. தெற்கில் இருந்த வளமும், மறைவிடங்களும் அவைகளுக்குப் பிற்காலத்தில் பாதுகாப்பாகவும், அரண்களாகவும் அமைந்தன. அந்த இடங்களுக்கு வேற்று மிருகங்களால் சென்று நாய்களைத் தாக்க முடியவில்லை.

ஒரு சில நாய்கள் தலையின் மயிரை வழித்து, பெண் நாய்களைத் தொடாது, பாலுறவை வெறுக்கும் முறையை தமது மார்க்கமாகத் தூரக்காட்டில் பயின்றன. அவைகளில் சில இந்தக் காட்டிற்கும் வந்தன. அந்தத் துறவு நாய் இந்தக் காட்டில் இருந்த நாய்களின் வரலாற்றைக் கிடைத்ததில் தனது கூரிய நகத்தால் கிறுக்கத் தொடங்கியது. அது அரியுமாவிற்கும் இரண்டுகால் மிருகத்திற்கும் பிறந்த வம்சமே இந்த நாய்கள் என்றும், காட்டிற்கு வந்த பின்பு அங்கு வாழ்ந்த ஆதி மிருகங்களுடன் கூடி இனம் பெருகியதாயும், மண்டை வழிக்கும் மார்க்கத்தை உருவாக்கிய தொண்டுக்கிழநாய் அந்தக் காட்டிற்கு வந்ததாயும், அது கிறுக்கி வைத்தது. அந்த மண்டை வழித்த நாயின் கிறுக்கலை வைத்து நரிகள் நாய்களுக்குப் பின்புதான் அந்தக் காட்டிற்கு வந்தன என்று நாய்கள் வாதித்தன. நம்பின. அத்தால் அது தங்கள் காடெனவும், தாங்களே முதலில் அங்கு வந்த ஆதிக் குடிகள் எனவும் உரிமை கொண்டாடின.

பின்பு சில காலத்தில் சில குள்ளநரிகள் பொதிகளோடு அந்தக் காட்டிற்கு வந்தன. நரிகளுக்கும், நாய்களுக்கும் விற்பதற்காக பல வகைப் பொருட்களை அவை முதுகில் காவி வந்தன. பின்பு அந்தக் குள்ளநரிகள் காட்டின் கிழக்குப் பக்கத்திலும் வேறு பகுதிகளுக்கும் பரந்து வாழலாயின. சில இடங்களில் நரிகளும் குள்ளநரிகளும் வாழ்ந்து வந்தன. சில இடங்களில் நாய்களும் குள்ளநரிகளும் வாழ்ந்து வரலாயின. குள்ளநரிகளுக்குத் தொண்மையாக ஊளையிடும் நரிகளின் பாஹை பிடித்துக் கொண்டது. நாய்களோடு வாழ்ந்தாலும் நரிகளின் பாஹையே அவை பழகின. அவை தங்களுக்கு என்று ஒரு மார்க்கம் வைத்திருந்தன. அதைக் கடுமையாகக் கடைப்பிடித்தன.

இப்படியாக அந்தக் காட்டின் இராட்சியத்தை நரிகளும், நாய்களும் வெல்வதும் தோற்பதுமாகத் தொடர்ந்தன. பின்பு ஒரு காலத்தில் கிழநரி ஒன்றை வென்ற இளம் நாய் ஒன்று அந்தக்காட்டில் ஆட்சியமைத்து. தான் வென்ற கிழநரியை வீரமுள்ள கிழநரி யென்று அந்த இளம் நாய் மரியாதை செலுத்தியது. இருந்தும் அந்த குட்டி நாய்க்கு மனம் அமைதி அடையவில்லை. அது தன் தாய் நாயிடம் நரிகளால் தனது நிம்மதி போனதாய்க் கவலைப்பட்டது.

காலக்காட்டியாகிய இறைதூதர் பிறந்து ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிற்பாடு வியாபாரம் என்று வழி தவறி வந்த வெள்ளை ஓநாய்கள் காட்டை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கின. அந்த வெள்ளை ஓநாய்களிடம் இருந்த கொடுமையான பற்களைக் கண்டு நரிக்கூட்டமும், நாய்க்கூட்டமும், குள்ளநரிகளும் அஞ்சி நடுங்கின. அந்த வெள்ளை ஓநாய்கள் இரத்தத்தைக் குடித்து மரத்தையே உண்ணும் வல்லமை உள்ளவை என்று அவை நம்பின.

வெள்ளை ஓநாய்கள் மிகவும் தந்திரமான விலங்குகளாய் இருந்தன. அவை தங்களது மார்க்கத்தையும், பாஹையையும், பழக்க வழக்கத்தையும் நரிகளுக்கும், நாய்களுக்கும், சில குள்ளநரிகளுக்கும் பழக்கின. அவர்களைப் பார்த்துப் பழகியவர்களை, அவர்களின் கல்வி பயின்றவர்களை, முதன்மைப்படுத்தின. இருந்தும் குள்ளநரிகள் அவர்கள் சொந்த மார்க்கத்தை விசுவாசத்தோடு நம்பியதால் வெள்ளை ஓநாய்களை அதிகம் பின்பற்ற பின்னடித்தன. வெள்ளை ஓநாய்கள் இலகுவாகக் கற்கும் நரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேலும் முன்னிலைப் படுத்தி ஊக்குவித்தன. அது நாய்களுக்குக் நரிகள்மேல் கோபத்தையும், பொறாமையையும் உண்டுபண்ணியது. நாய்களிலும் சில நாய்கள் நரிகளைப் போல கற்று முன்னுக்கு வந்தன. பெரும்பாண்மையான நாய்கள் வெள்ளை ஓநாய்களை நம்ப மறுத்து மேலும் மேலும் தெற்கில் அடைந்து கொண்டதோடு, நரிகள் மீது மேலும் வெறுப்பையும் வளர்க்கலாகின. வெள்ளை ஓநாய்களுக்காக வேலை செய்யவும் மறுத்தன.

இருந்தும் இப்படியாகப் பல நரிகளும், நாய்களும் வெள்ளை ஓநாய்களுக்கு அடிபணிந்தன. அவர்களின் மார்க்கத்தைக் கற்றதோடு அவர்களின் வித்தைக்கும் விசுவாஷமான அடிமைகளாகின. அந்த அடிமைகளை வைத்து வெள்ளை ஓநாய்கள் மேலும் கொடுமையாக நரிகளையும், நாய்களையும், குள்ளநரிகளையும் ஆட்சிசெய்யத் தொடங்கின. வெள்ளை ஓநாய்களைப் போல் தாங்களும் உண்ணப், பார்க்கப், பழகக், கதைக்க வேண்டும் என்று பல நாய்களும், நரிகளும் ஆசைப்பட்டு அந்த வெள்ளை ஓநாய்களைப் பிரதி பண்ணின. வெள்ளை நிறத்தைப் பிரதி பண்ண முடியாத போது அவை ஊளையிட்டும், குரைத்தும் வெகுவாகக் கவலைப்பட்டன.

தெற்கில் இருந்த நாய்கள் நரிகளோடு சேர்ந்து வெள்ளை ஓநாய்களுக்கு ஏதிராகப் போராடினால்தான் வெள்ளை ஓநாய்களை முதலில் காட்டைவிட்டு விரட்டலாம் என்பதால் அவை நரிகளோடு உறவைப் பேணி வந்தன. நரிகளும் அதை நம்பி நாய்களோடு சேர்ந்து வெள்ளை ஓநாய்களுக்கு எதிராகப் போராடின. வெள்ளை ஓநாய்களைக் கலைத்த பின்பு இந்த நரிகளுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்பது நாய்களின் எண்ணம். இந்தக்காட்டு நரிகளும், அயற் காட்டு நரிகளும் சேர்ந்து தங்களை அழித்து விடுவார்களோ என்கின்ற அச்சம் நாய்களின் மனதில் தொடர்ந்தது கூத்தாடியது.

இதற்கிடையில் வெள்ளை ஓநாய்கள் உயரமான காட்டுப்பகுதியில் வேலை செய்வதற்காக சில நரிகளை வேற்றுக் காட்டில் இருந்து அழைத்து வந்தன. அப்படி அழைத்து வந்த நரிகளை நடுக் காட்டில் குடியேற்றின. அந்த நரிகளின் வரவு மேலும் நாய்களை ஐயம் கொள்ள வைத்தது. நரிகளையும், நாய் களையும் பிரித்து வைத்திருந்தால்தான் வெள்ளை ஓநாய்களுக்கு தங்கள் அலுவல் சுளுவாக நடக்க முடியும் என்பது புரிந்தது. அதையே அவர்கள் ஆட்சித் தந்திரம் ஆக்கினார்கள். அதைப் புரிந்த கொள்ள முடியாத நாய்கள் குரைக்க, நரிகள் ஊளையிட ஒன்றின் மீது ஒன்று வன்மம் பாராட்டின.

காலப் போக்கில் வெள்ளை ஓநாய்களுக்கு நாய்களைத் தங்களது அணைப்பிற்குள் எடுக்காது விட்டால் அதன் தொந்தரவு தொடரும் என்பது புரிந்தது. ஒரு கட்டத்தில் வெள்ளை ஓநாய்கள் தாங்கள் தூரக்காட்டில் இருந்து கொண்டவரப்பட்ட ஆட்சி முறை ஓன்றை நாய்களோடு கூட்டாக ஆள்வதற்கு அறிமுகம் செய்து வைத்தன. எதற்கு அதிகமானவை கையைத் துக்குகிறதோ அது நிறைவேற்றப்படுவது அந்த அரசியலில் சாத்தியமானது. கைகள் இல்லாதவை கால்களைத் தூக்கலாம். தூக்கின. நாய்களுக்கு அது உள்ளுரப் புழுகமாகிற்று. தாங்கள் பெரும்பாண்மையாக இருப்பதால் இந்த வெள்ளை ஓநாய்களின் புதிய முறை அவர்களுக்குத் தங்கள் காட்டை இலகுவாக விஸ்தரிக்கும் திட்டத்தை மனக்கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. நரிகளை ஓரங்கட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைத்ததாக அவை எண்ணின. இருந்தும் வெள்ளை ஓநாய்களை விரட்டும் வரைக்கும் தாங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் எடுத்துக்கொண்டன.

திடீரென வெள்ளை ஓநாய்களின் தூரக் காட்டில் இரண்டாவது முறையாகப் பெரும் குளப்பம் ஏற்பட்டது. தூரதேசத்தில் இருந்து வேறு வெள்ளை ஓநாய் ஒன்றிற்கு வெறிபிடித்ததால் இந்தக் காட்டில் இருந்த வெள்ளை ஓநாய்களின் சொந்தக் காட்டை அங்கு ஆக்கிரமிப்பதாய் அது பயங்கரமாக ஊளையிட்டது. ஊளையிட்டதோடு நிற்காமல் தாக்குதலும் நடத்தியது. அதனால் கலக்கமுற்ற வெள்ளை ஓநாய்கள் தங்கள் சொந்தக் காட்டை முதலில் பாதுகாக்க வேண்டும் என்பதைக் கருத்தில் எடுத்துக் கொண்டன.

மறுகாட்டில் வாழ்ந்த பலமான வெள்ளை ஓநாய்கள் நாடுபிடித்த ஓநாய்களுக்கு ஒரு அறிவுரை கூறின. நரிகளிடமும், நாய்களிடமும், வேற்று மிருகங்களிடமும் இருந்து பிடித்து வைத்திருக்கும் தூரதேசத்துக் காடுகளை திருப்பிக் கையழிக்குமாறு அவை அந்த ஓநாய்களுக்கு அறிவுரை கூறின. அத்தால் பிடித்து வைத்திருந்த காட்டுப் பகுதிகளை அதில் முன்பு வாழ்ந்த மிருகங்களிடமே தாமாகக் கொடுத்து, தங்களுக்குச் சார்பாக இருக்குமாறு செய்த பின்பு, தாங்கள் சொந்தக் காட்டிற்கு திரும்ப வெள்ளை ஓநாய்கள் முடிவு செய்தன. அதன்படி இந்தக்காடு நரிகளிடமும், நாய்களிடமும், குள்ளநரிகளிடமும் வந்தது சேர்ந்தது.

வெள்ளை ஓநாய்கள் காட்டைவிட்டுச் சென்றாலும் அதுகள் தங்களோடு கொண்டு வந்த பலதையும் இந்தக் காட்டில் நிரந்தரமாக அலைய விட்டுச் சென்றன. அதை இந்த விலங்குகள் எடுத்து தாங்கள் மாட்டி அழகு பார்த்தன. அப்படிச் செய்தால் தாங்களும் வெள்ளை ஓநாய்கள் ஆகலாம் என்பதாக நரிகளும், நாய்களும் ஒரு சில குள்ள நரிகளும் வெள்ளை ஓநாயின் பூஞ்சல் குணத்தோடு அந்தக் காட்டைப் பார்க்கத் தொடங்கின.

கை தூக்கம் ஆட்சி தொடர்ந்தது. நாய்கள் பெரும்பாண்மையானதால் நரிகளுக்குச் சங்கடமாகியது. நாய்களோடு சேர்ந்து வெள்ளை ஓநாய்களைத் துரத்தப் போராடியது பிழை என்கின்ற எண்ணம் நரிகளுக்கு ஏற்பட்டது. வெள்ளை ஓநாய்கள் தருகிறோம் என்கின்ற காட்டுப் பகுதியையாவது வாங்காது விட்டது மகா தப்பு என்பது புரியத் தொடங்கியது.

நாய்களுக்கு நடுக்காட்டில் வாழ்ந்த நரிகளைப் பார்க்க அந்தரமாய் இருந்தது. அவர்களின் கை தூக்கும் உரிமையைப் பறித்து, வந்த இடத்திற்கு துரத்த நினைத்தன. அதற்காக அயற்காட்டில் இருந்த பெரு நரிகளுடன் ஒப்பந்தம் செய்து ஒருபகுதி நடுக்காட்டில் வாழ்ந்த நரிகளைத் துரத்தின.

பின்பு நாய்களின் பாஹையே ஆட்சிப் பாஹை என்பதாய் நாய்கள் சட்டம் கொண்டுவந்தன. இதனால் நரிகள் தங்களது தொண்மையான ஊளையிடும் பாஹை மதிக்கப்படவில்லை என்று கடுப்புற்றன. நரிகளின் கடுப்பு மேலும் நாய்களை வெறி கொள்ள வைத்தது. அத்தால் நாய் வெறி கொண்ட நரிகள் மீது தாக்குதல் நடத்தின. தெற்கில் இருந்த நரிகளே அதிகமாகத் தாக்கப்பட்டன. சில நரிகள் தாக்குதல் தாங்க முடியாது வடக்கு நோக்கி வாலைத் தூக்கிக்கொண்டு ஓடின. சில நரிகள் கொல்லப்பட்டன. அயற்காட்டில் வாழ்ந்த நரிகள் அதையறிந்து தங்கள் தொண்மை மொழியில் ஊளையிட்டன. ஊர்வலம் போயின. பின்பு மத்திய சர்க்கரவத்தியை எண்ணி அடங்கிப் போயின.

இப்படியாகக் காலம் கழியும் போது ஒரு நாள் மொட்டை நாய் ஒன்று ஆட்சியில் இருந்த நாயைக் கொன்றுவிட, அதன் சோடியான பெட்டை நாய் ஆட்சிக்கு வந்தது. அது வேற்றுக் காட்டில் இருந்து மாமிசம் எடுத்து வராமல் உள்ளுர்க் காட்டிலேயே அதை உற்பத்தி செய்ய வேண்டும் என்று புதிய சட்டம் கொண்டு வந்தது. அது நரிகளுக்கு பெரும் வாய்ப்பானது. அந்த வாய்ப்பை நரிகள் பயன்படுத்தினாலும் நாய்கள் தங்களை அடக்குகின்றன என்கின்ற எண்ணம் நரிகளை வாட்டியது.
இதற்கிடையில் நாய்கள் தந்திரமாக நரிகளின் காட்டுப் பிரதேசங்களை ஊடறுத்து, தங்களிடம் இருந்த அதிகாரத்தைப் பிரயோகித்து நாய்களை அங்கு குடியேற்றின. அதனால் நரிகள் இன்னும் கடுப்பாகின. தாங்கள் தொண்மை மொழியாலும், தொடர்ச்சியான வாழும் பிரதேசத்தாலும் தனி இனமாக இருப்பதை நாய்கள் திட்டமிட்டு அழிப்பதாக அவை ஊளையிட்டுத் திரிந்தன. தங்களால் குரைக்க முடியாது என்பதைத் திட்டவட்டமாக அறிவித்தன.

நாய்களின் தேசத்தில் திடீரெனக் குளப்பம் ஏற்பட்டது. எல்லாமே எல்லோருக்கும் என்பதாகச் சிவப்புக் கொடியைத் தூக்கிக் கொண்டு குட்டி நாய்கள் சில கலகம் செய்தன. ஆட்சியில் இருந்த பெண் நாய் பக்கத்துக் காட்டில் இருந்த பெரு நரிகளிடம் உதவி கேட்டது. அதன் உதவியுடன் புரட்சி செய்த குட்டி நாய்களை சிறைப்பிடித்தும், கொன்றும் வெற்றிவாகை சூடியது. அதன் பின்பு அந்த ஆட்சியில் இருந்த பெண் நாய் மொட்டை வழித்த நாய்களின் மார்க்கமே அந்தக் காட்டுப்பகுதிக்கு முதன்மையான மார்க்கம் என்று அறிவித்தது. அதனால் பொட்டு வைக்கும் நரிகளும், முக்காடு போடும் குள்ளநரிகளும் வேதனையுற்றன. இருந்தும் கை உயர்த்தும் ஆட்சியில் தாங்கள் சிறு தொகையாக இருப்பதை எண்ணிச் சோர்ந்து போயின.

பின்பொரு நாள் நரியின் காட்டுப்பகுதியில் அவர்கள் தொண்மையான பாஹை பற்றிய ஒரு கூட்டம் நடந்தது. காவலுக்கு நின்ற நாய்கள் அதில் தாக்குதல் நடத்தின. சில நரிகளை நாய்கள் கொன்றன. அத்தால் நரியின் காட்டுப்பகுதியில் குளப்பம் ஏற்பட்டது. தாங்களும் நாய்களைத் தாக்க வேண்டும் என்று சில குட்டி நரிகள் கூடி முடிவு செய்தன. அந்தக் குட்டி நரிகளைச் சில கிழட்டு நரிகள் தந்திரமாகப் பாவித்தன. குட்டி நரிகள் தங்களுக்கு விரும்பாத நரிகளையும், நாய்களையும் விரும்பியது போலக் கொன்றன. பிரிந்து, பிரிந்து அவை பல குழுக்களாக இயங்கத் தொடங்கின. தங்களுக்குள்ளும் அவை அடிக்கடி மோதிக்கொண்டன.
இதை அறிந்த நாய்கள் நரிகளைக் கண்காணிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் மும்மரமாகின. குட்டி நரிகளின் குட்டிக் குட்டித்தனமான திட்டத்தில் ஒரு நாய்க் கூட்டம் அகப்பட்டு மடிந்து போயின. பெண் நரிக்குட்டிகளை பிசகிற்கு இழுத்ததாக அதற்குக் குட்டி நரிகள் காரணம் கூறின. காடு முழுவதும் நாய் குளம்பின. நரிகளை வேட்டையாடின. உயிர் தப்பிய நரிகள் தப்பி மீண்டும் வாலைத் தூக்கிக்கொண்டு நரிகளின் காட்டிற்கு ஓடி வந்தன. பின்பு சமாதானமாகி நாய்களின் காட்டுப் பகுதிக்கு மீண்டும் சென்றன.

குட்டி நரிகளின் குழுக்கள் அதற்கெல்லாம் சமாதானம் ஆகவில்லை. அயற் காடுகளில் இருந்த பெரு நரிகளின் சூழ்ச்சி வலையில் விழுந்து அவை மேலும் நாய்களோடு பகை கொண்டன. நாய்களை நரிகளும், நரிகளை நாய்களும் கொன்றன. அதைவிட நரிகளை நரிகள் அதிகம் கொன்றன. இதைப் பார்த்த நரிகள் பல இதற்குள் அகப்பட்டுச் சாகாமல் சுகமாக வாழ்வதற்காக வெள்ளை ஓநாய்களின் தேசங்களை நோக்கிப் படையெடுத்தன. அங்கிருந்து அந்தக் காட்டில் சண்டைபோட்ட குட்டி நரிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்தன. குட்டி நரிகளுக்குக் கிடைத்த உதவியில் அவை அந்தக் காட்டின் சில பகுதிகளைக் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன. அதற்குள் நாய்கள் நுளைய முடியாது காவல் காத்தன.

இப்படியாக பல ஆண்டுகள் கொல்வதிலும் கொல்லப்படுவதிலும் காலம் கழிந்தது. நரிகள் இறக்க இறக்க அவற்றின் தொகை குறைந்தது. நாய்களும் குள்ள நரிகளும் அந்த காட்டில் பெருந்தொகையாகின. வெள்ளை ஓநாய்களின் தேசம் ஒடிச் சென்ற நரிகள் தாங்கள் வெள்ளை நரியாவது எப்படி என்கின்ற எண்ணத்தில் மிதந்தன. அதே நேரம் வெள்ளைத் தேசத்தில் கிடைக்கும் வளத்தை அனுப்பித் தங்கள் காட்டுப் பகுதியை நரிகள் தேசமாக்க வேண்டும் என்று கனவு கண்டன. அதற்காக முனைப்போடு செயற்பட்டன.

நாய்கள் தங்கள் காட்டிற்கு புதிய ஒரு அரசனைத் தெரிவு செய்தன. அந்த சட்டை போடும் மீசைவைத்த நாய் மிகவும் தந்திரமாக யாருக்கும் பயப்படாது நரிகளின் காட்டின்மேல் தாக்குதல் நடத்தியது. வீரமாய் ஊளையிட்ட குட்டி நரிகள் காலத்தால் கிளண்டிப் போய் வீரத்தையும் விவேகத்தையும் இழந்திருந்தன. அதை புதிய நாய் அரசு அறிந்து உக்கிரமாகப் போர் தொடுத்தது. கிளண்டிய குட்டி நரிகளின் குருட்டுப் பார்வையும், மோட்டு வீரமும், உழுத்த தந்திரமும் புதிய வெள்ளைச் சட்டைபோட்ட தந்திரமான நாய் அரசிடமும், தூரதேசத்து வெள்ளை ஓநாய்களிடமும் எடுபடவில்லை. அத்தோடு பெருநரிகளோடு பகைத்தால் அவையும் பழிதீர்க்கக் காலம் பார்த்திருந்தன. விதியை மதியால் வெல்லமுடியாத குட்டி நரிகள் போராட்டம் வீழ்ச்சியை நோக்கியது.

அதேவேளை தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த குட்டி நரிகளின் குட்டி நரிகளைப் கட்டாயமாகப் பிடித்து வந்து தங்கள் கிழட்டுப் பற்களைக் கொடுத்து வெற்றி பெறுமாறு குட்டி நரிகள் போருக்கு அனுப்பி வைத்தன. குட்டி நரிகளின் குட்டி நரிகளைப் பயன்படுத்துவதை கண்டித்து வெள்ளை ஓநாய்கள் குட்டி நரிகள் மீது மேலும் கடுப்பாகின. தெரிந்தும் தெரியாமலும் நாய்களுக்கு உதவி செய்தன.

குட்டி நரிகளின் மேல் கடுப்புற்ற பல தூரக்காட்டு மிருகங்கள் நாய்களுக்கு உதவி செய்ததால் சண்டைக்குச் சென்ற குட்டி நரிகளின் குட்டி நரிகள் தொகை தொகையாக மாண்டதோடு நரிகள் பல மாண்டன. குட்டி நரிகள் தோல்வியைத் தொடர்ந்து தமது அகண்ட காட்டுப்பகுதியை விட்டு நாய்களால் பாதுகாப்பு என்று வகுக்கப்பட்ட காட்டுப் பகுதிக்குள் பயத்தில் சென்று வஞ்சகமாக மாட்டிக் கொண்டன. நாங்கள் ஆட்டுக்குட்டிகள்தான் என்று கூறிய நாய்கள் தொடர்ந்தும் விஷப்பற்களால் நரிகளைக் குதறித் தள்ளின. காலைத் தூக்கி வாலையாட்டி வந்த குட்டி நரிகளையும், சிறைப்பட்ட குட்டி நரிகளையும் நாய்கள் தொடர்ந்தும் குதறித் தள்ளின. ஈற்றில் குட்டி நரிகள் தோல்வியுற்றன.

அத்தோடு நரிகளுக்கும் நாய்களுக்குமான சண்டை ஓய்ந்தது. நாய்களைக் கண்டால் நரிகள் வாலைப் பதித்துப் பௌவியமாக மரியாதை செய்வது நரிகளின் புது இயல்பாகியது.

வெள்ளை ஓநாய்களின் காட்டிற்கு ஓடிய நரிகள் சுகமாக அங்கு வாழ்ந்தன. தமது பொழுது போக்கிற்கு நாய்களிடம் இளந்த காட்டிற்குப் பொம்மை அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்து மகிழ்ந்தன. ஆரவாரித்தன. தங்கள் தொண்மை மொழியில் அடிக்கடி தெருவில் நின்று ஊளையிட்டன. நாய்கள் நரிகளைக் கொன்றதற்காய் அவற்றைக் கூண்டில் ஏற்றிக் குதறவேண்டும் என்று வெள்ளை ஓநாய்களின் தெருக்களில் தொடர்ந்தும் ஓயாது ஊளையிட்டன. குட்டி நரிகள் தங்கள் காட்டில் செய்த குற்றங்கள் பற்றி அவை தங்களுக்குள்கூட மறந்தும் ஏனோ கதைப்பதில்லை. அதைத் தீண்டப்படாத விஷயமாக அவை பேணிப் பாதுகாத்தன.
சொந்தக் காட்டை விட்டு வெளியேறிய பின்பு காடு தனக்கு மீண்டும் சொந்தம் என்று ஊளையிடும் தூரதேசத்து வெள்ளை வேஷம் போட்ட நரிகளைப் பார்த்து வெள்ளைச் சட்டை போடப் பழகிக் கொண்ட நாய்கள் மனதிற்குள் சிரித்தன. நரிகள் அவை ஊளையிடத்தான் செய்யும் என்று அவை எண்ணின.

நாய்களும், நரிகளும் தங்கள் திட்டத்தின்படி மட்டுமே நடக்க முடியும் என்பதை செயற்படுத்தி வெற்றி பெற்றதை எண்ணிய தூரதேசத்து வெள்ளை ஓநாய்கள் அமைதியாகப் பெருமை கொண்டன. உலகம் என்றும் தங்கள் கைங்கரியத்தில், காருண்ணியத்தில்… தமது சேவகத்திற்காய் என்று அவை எண்ணிப் பூரித்தன. இனி எந்தக்காடு? இல்லை எல்லாம் எமது காடே என்று அவை இறுமாந்தன.

– மே 27, 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *