இந்த வாரம் ராசிபலன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 10,475 
 
 

இரவு நேர கால்செண்டர்கள் குறித்து ஓர் அலசல் ரிப்போர்ட் எழுதியதற்கு ஏகப்பட்ட வரவேற்பு. பிறகென்ன? அதில் உலகமயமாதலை ‘வாங்கு வாங்கு’ என்று போட்டு வாங்கிவிட்டேன். அதுமட்டுமல்ல இப்போதெல்லாம் உலகமயமாதல், பெண்ணியம் என்கிற மாதிரி வெய்டேஜ்ஜான சமாச்சாரங்களைப் பற்றி எழுதும்போதெல்லாம் அதில் கட்டாயம் எழுதியே ஆகவேண்டும் அது எப்படி எல்லாம் பாலியல் உறவுகளைப் பாதிக்கிறது என்று. இந்தியாடுடே ஜிந்தாபாத். இதற்கெல்லாம் அவர்கள் ஏகப்பட்ட சர்வே நடத்தி புள்ளிவிவரத்துடன் கட்டாயம் நமக்கு வேண்டியதைத் தந்திருப்பார்கள். நமக்கு எந்த பிரசண்டேஜ் வேணுமோ அதை எடுத்துக்கொண்டு இந்தியாடுடே இப்படி சொல்லியிருக்கிறதாக்கும் என்று சொல்லிவிடலாம். எந்த வயதினர், எந்த மாநகரத்தினர், ஆணா பெண்ணா என்கிற செய்திகளை எல்லாம் சொல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. யார் அதை எல்லாம் கண்டு கொள்ளப்போகிறார்கள் சொல்லுங்கள்? திருமண உறவுகள், திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் தொடர்புகள், சிங்கிள் பெரண்ட், இத்தியாதி எல்லாம் கலந்து ஒரு கலக்கல் கட்டுரை எழுதிவிட்டால் ஓரளவு வாசகர்கள் மனசில் இடம் பிடித்துவிடலாம்தான். நாம் எழுதற சின்ன சின்ன விஷயங்களும் சரிதானா, யார்ச் சொன்னது, அவர் சொன்னதெல்லாம் நம்பகத்தன்மையுடையதா என்பதைப் பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளும் அதிகப்பிரசங்கித்தனம் கூடாது.

எப்படியோ இரவு நேர கால்செண்டர் பற்றி எழுதியதில் எனக்கு வேலை உறுதியாகிவிட்டது. மாசச்சம்பளம், போக வர ·பர்ஸ்ட்க்ளாஸ் பாஸ், ரிக்ஷா, டாக்சி செலவு எல்லாம். மாங்கு மாங்கென்று எதைச் சொன்னாலும் தட்டாமல் செய்வதில் சலிப்படைவதில்லை. ஆனால் இந்த் ஆசிரியர்க்குழுவில் இருப்பவர்களைப் பார்த்தால்தான் எரிச்சல் வருகிறது. குண்டும் குழியுமான கண்களும் கன்னமும். தடித்த பிரேமில் மூக்குக்கண்ணாடி ( அது ஏங்க கண்ணுக்குப் போடற கண்ணாடிக்கு மூக்கு கண்ணாடினு பேரு? இதைப் பற்றியும் சுவராஸ்யமா ஓர் அலசல் கட்டுரை எழுதிடலாம்னு
தோனுது!) வயசுக்கு மீறிய வயதான தோற்றம்..பத்திரிகையில் வேலைப்பார்ப்பவர்களுக்கு ஒரு துள்ளும் இளமை இருக்க வேண்டாம்,? அப்பம் தானே அவர்கள் எழுத்திலும் அது தானே பளிச்சிடும்.எப்படியும் இருந்து தொலைக்கட்டும் நாமும் இவர்களுடன் சேர்ந்து இவர்களில் ஒருவராக ஆகி விடக்கூடாது.

வழக்கம்போல எல்லா பத்திர்கைகளிலும் நடக்கிற ஆள்குறைப்பு இங்கேயும் அடிக்கடி நடந்து கொண்டுதானிருந்தது. நமக்கென்ன? என்று எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தால் தான் உண்டு என்று நினைத்துக்கொண்டேன். பத்திரிகையில் வேலைப் பார்க்க வேண்டும் என்பது எத்தனை வருடத்து கனவு. தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுளைத்து இந்த வேலையை இழந்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. இந்தப் பத்திரிகையில் வேலைப்பார்க்கிறேன் என்று சொல்லிக்கொள்ளும்போது எதிராளி மனசில் ஒரு புருவம் உயர்ந்தப்பார்வை விழுமே அதுதான் இந்த வேலையின்
மகத்துவம்.

எப்போதாவது சமையல் குறிப்பு எழுதும் சுப்பலட்சுமி மேடம் எதுவும் எழுதவில்லை என்றால் அந்தப் பக்கத்தை நாந்தான் நிரப்ப வேண்டும். பழைய விமன்ஸ் இரா, ·பெமினா எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறாள் அம்மா. அவள் புத்தக அலமாரியைத் திறந்து எதையாவது ஒன்றிரண்டு மாற்றி எழுதிவிட வேண்டியதுதான். ஒரு முறை எங்கள் பத்திரிகையே வேறு பெயரில் நடத்தும் பதிப்பகத்தின் புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதும் வேலை வந்தது. ரொம்பவும் சிரத்தையாக அந்த நாவலை வாசித்துவிட்டு அதன் குறை நிறைகளை எழுதிக் கொடுத்திருந்தேன். அந்த வாரம் பார்த்தால் குறைகளைப் பட்டியலிட்டு எழுதியது வேறு பெயரிலும் பாராட்டி எழுதியிருந்தது வேறு பெயரிலும் வெளிவந்திருந்தது. இரண்டுமே என் பெயரில் வரவில்லை. என் பெயரில் வராவிட்டால் கூட பரவாயில்லை. அது என்ன இரண்டு புதிய பெயர்கள்! என்ன சார் இது என்று மெதுவாக ஆசிரியரிடம் கேட்டால் அவர் அந்த ஏ.சீ அறையில் சத்தமாக சிரித்து நம்மைச் சுடாக்கியதுதான் கிடைத்த பலன். ‘சரியான கிறுக்கு’ என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே வெளியில் வருவதைத் தவிர வேறு வழியில்லை.

இப்போது கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வாசகர்கள் இருக்கிறார்கள். அதை இரண்டு மடங்காக கூட்ட வேண்டும் என்பது தான் ஆசியருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் டார்க்கெட். அன்று ஆசிரியர் மார்க்கெட்டிங் டீமுடம் பேசிக்கொண்டிருந்தார். கடைசியாக ஒரு சூப்பர் ஐடியா கிடைத்தது. அதாவது தீபாவளையை முன்னிட்டு ஒவ்வொரு வார இதழுடனும் ஓரு லேடீஸ் ப்ளவுஸ் பீஸ் கொடுக்கலாம் என்று தீர்மானமானது. சரி இம்முறை யாரைப் பிடிக்கலாம் என்று யோசனை வந்தபோது கல்பனா சில்க் மாளிகையை எல்லோரும் சொன்னார்கள்.

எப்படி எல்லாம் கல்பனா சில்க் மாளிகையை மடக்கிப்போடலாம் என்று மறுநாள் ஓர் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ஒரு இலட்சம் ப்ளவுஸ் பீஸ் தீபாவளிப்பரிசாகக் கொடுப்பதில் கல்பனாவுக்கு எவ்விதத்திலும் நஷ்டம் ஏற்படப்போவதில்லை. இதன்மூலம் அவர்களுக்கும் விளம்பரமும் அவர்கள் தீபாவளிக்கு கொண்டுவர இருக்கும் புதுப்புது டிசைன் புடவைகளுக்கு மார்க்கெட்டில் டிமாண்டும் ஏற்படும்.ஒவ்வொரு ப்ளவுஸ் பீஸ¤டனும் சேர்ந்து ஒரு பிரபல நடிகையின் விளம்பரப்புன்னகை. கல்பனாவின் தீபாவளி வாழ்த்துகளுடன்.

“இதோ இந்தப் ப்ளவுஸ் பீஸைப்போல மூன்று பிளவுஸ் பீஸ்கள். ஆனால் அதற்கு வெளிவந்திருக்கும் புடவைகள் இரண்டுதான். எனவே உங்கள் ப்ளவுஸ்க்கான உங்கள் புடவைக்கு இப்போதே முந்துங்கள்” என்று அக்கறையான அட்வைஸ். இந்த மார்க்கெட்டிங் ஐடியாவில் கல்பனா சில்க் மாளிகைக்கும் பத்திரிகைக்கும் கொள்ளை இலாபம்.

வாரப்பத்திரிகை என்றால் ராசிபலன் இல்லாமலா? ராசிபலன் எழுதிக்கொண்டிருந்த நாடி ஜோசியர் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கிறராம். மூளையின் நினைவு செல்களில் பாதிப்பு. ரத்த நாளங்களில் அடைப்பு. அவர் ராசிபலன் எழுத இனிமேல் சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. இந்த ஒரு வாரம் மட்டும் ஏதாவது எழுதுங்கள் என்று ஆசிரியர் பிரிண்டுக்கு போவதற்கு முன்பு கேட்ட போது ‘என்ன சார் விளையாடறீங்களா.. நானாவது ஜோசியம் பற்றி எழுதறதாவது!’ ‘ஜோசியம் பற்ரி எழுதுவதுதான் ரொம்பவும் ஈஸி. ஒரு இலட்சம் பேருக்கு மேல் வாசிக்கும் வாரப்பத்திரிகையில் எழுதுவது ஒவ்வொரு வாரமும் அதில் குறைந்தது 100 பேருக்காவது ஏதாவது ஒன்றரண்டு வரிகள் பலிக்கும். வாழ்வில் ஒருமுறை வாரபலன் பக்கத்தில் ஒருவரி நடந்துவிட்டால் போதும் அந்த வாசகன் அதன் பின் தன் வாழ்நாளெல்லாம் வாரபலன் வாசிக்காமல் இருக்க மாட்டான்.இதற்கு முன் ஜோசியர் எழுதி அனுப்பி இருந்ததெல்லாம் அவருடைய கோப்பில் இருக்கிறது. பார்த்துக்கொள்ளுங்கள்.’

இந்த இரண்டு பக்க வார பலன் இல்லாமல் பிரிண்டுக்குப் போகாமல் காத்திருக்கிறது எல்லா மேட்டரும். எதையாவது எழுதித் தொலைக்கவேண்டும்.

பேப்பரை எடுத்து முதலில் வரிசையாக பக்கத்திற்கு நான்கு ராசிகளின் பெயர்களை மறக்காமல் எழுதி வைத்துக்கொண்டேன். முதலில் மேஷம்: நினைத்தக் காரியங்கள் தங்குத்தடையின்றி நடக்கும். திடீர் பணவரவு. வியாபாரிகளுக்கு லாபமில்லை. சனிபகவானுக்கு வழிபாடு செய்துவாருங்கள். மாணவர்களின் கல்விநிலை சிறப்பாக உள்ளது. வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். அதிர்ஷ்ட எண் 4-9

ரிஷபம்: எதிலும் முன்னேற்றம், உயர்வு ஏற்படும்.வியாபாரிகள் லாபம் காண்பார்கள். மாணவர்கள் கல்விநிலை உயர்வை ஏற்படுத்தும்.குடும்பம் இனிமையுடன் நடந்துவரும் ஆனாலும் கணவன் மனைவி உறவு நலமாக இருக்காது. உடன்பிறப்புகள், உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். அதிர்ஷ்ட எண்: 2-5-9

மிதுனம்: எதிலும் பொறுமையுடன் செயல்படுங்கள். நினைத்த காரியங்கள் முயற்சியால் முடியும். குடும்பம் நல்லவிதமாக நடந்து வந்தாலும் கணவன் மனைவி உறவில்தான் வேற்றுமை இருக்கும். தொழிலாலர்களுக்கு உயர்வு உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபமில்லை. மாணவர்களின் கல்விநிலை சிறப்பாக உள்ளது. அதிர்ஷ்ட எண்: 2-4-5

கடகம்: எந்தக் காரியத்தையும் துரிதமாக செய்துமுடிக்கலாம்.எதிர்ப்பு, பகைமையை வென்று காரியம் சாதிப்பீர்கள்.ஜென்மத்தில் சனி இருப்பதால் வீண் அலைச்சல், குழப்பம்தான். எதிலும் விட்டுக்கொடுத்து போங்கள். சனி, குருவுக்கு வழிபாடு செய்துவாருங்கள். மாணவர்களின் கல்விநிலையில் முன்னேற்றம். அதிர்ஷ்டஎண் : 3-7

சிம்மம்: நிதிநிலையில் நெருக்கடி. எதிலும் குழப்பம். விட்டுக்கொடுத்து பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது. பணவரவு இருக்கும். தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைவுதான். வியாபாரிகளுக்கு பரவாயில்லை. மாணவர்கள் கவனமாக படிக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1-5-10

கன்னி: எதிலும் சொல்வார்த்தைகளைப் பொறுமையாகப் பேசுங்கள். மனதில் கோபம் உண்டாகலாம். கணவன் மனைவி உறவு அன்பு பாசம் கொண்டதாக இருக்கும். சிலருக்கு வீடு. நிலம் சொத்துக்கள் ஏற்படலாம். மாணவர்களின் கல்விநிலை உயர்வாகவே உள்ளது. அதிர்ஷ்ட எண்: 4-5-9

இப்படியே துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு வாரபலனை மளமளனு எழுதி டிடிபிக்கு கொடுத்துவிட்டு புதுசா திரைக்கு வந்திருக்கும் படத்திற்கு கிடைத்திருக்கும் பாஸை மறக்காமல் எடுத்துக்கொண்டு வேகமாக வெளியில் வந்தேன். குடும்பம் இனிமையாக நடந்துவரும், கணவன் மனைவி உறவு நலமாக இருக்காது என்றெல்லாம் சம்மந்தா சம்மந்தமில்லாமல் எழுதியிருக்கிறேன் என்று அந்தந்த ராசிக்காரர்கள் என்ன கோர்ட்டில் கேசா போடாப் போகிறார்கள்?

சனிபகவானுக்கு வழிபாடு செய்துவாருங்கள், நினைத்தக் காரியம் நடக்கும் என்று வாரபலனில் எழுதியிருப்பதால் வீட்டில் அம்மா நல்லெண்ணெய், உளுந்து சகிதம் கோவிலுக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள்.நான் மறக்காமல் இந்தியன் எக்ஸ்பிரஸ் சண்டே பேப்பரில் பிஜூன் தாருவாலா சொல்லியிருக்கும் என் ராசிபலனை வாசித்துக்கொண்டிருந்தேன்.

‘எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்ல நேரமிது. உங்கள் படைப்புத்திறன் பலரால் போற்றப்படும். புதிய நட்பு வட்டாரத்திலும் உங்கள் பெயர் இனி பேசப்படும். ‘ அது என்னவோ தெரியவில்லை எனக்கு மட்டும் எப்போதும் இந்தியன் எக்ஸ்பிரஸில் தாருவாலா எழுதியிருப்பது நூற்றுக்கு நூறு அப்படியே நடக்கும்.தாருவாலாவில் நாலு வரிகளை மட்டும் வாசித்துவிட்டு பேப்பரை மடக்கி டீபாயில் வைத்துவிட்டு வழக்கம்போல ரிமோட்டில் டி.வி. சேனலை வரிசையாக மாற்றி ஒரு கலப்பட நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்..

– டிசம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *