இந்தியாக் காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 105 
 
 

“இவனொரு இந்தியாக்காரனடா. இலங்கைத் தமிழன் என்று பொய் சொல்லி இங்கை அகதித் தஞ்சம் கேட்டிருக்கிறான்.” என்று பூலோகத்தார் சுட்டிய இளைஞன் எங்களைக் கடந்துபோய்க் கொண்டிருந்தான். இடத்திற்குப் புதியவனைப்போலவே தோன்றியது. கண்டதில்லை. முதுகில் தொங்கிய பையின் கைப்பிடியை நெஞ்சோடு அழுத்திப் பிடித்திருந்தான். ஒன்றிரண்டு தடவைகள் எங்களைப் பார்த்தான். கண்களில் சிநேகமா அச்சமா என் உய்த்துணரமுடியாத பார்வையிருந்தது. அவன் அப்படிப் பார்த்தபோதெல்லாம் அவனை எரித்துவிடுவது போல பூலோகத்தார் முறைத்தார். “பாரன், களவெடுத்துப் பிடிபட்டவன் மாதிரி அவன்ரை முழியை.. யாரைப் பேக்காட்டலாம் என்று நினைக்கிறார். இமிக்ரேஷன் பொலிஸை வேண்டுமென்றால் ஏமாத்தியிருக்கலாம். பூலோகத்தாரிடம் அது நடக்காது.”

பிபிசி என்றும் வீரகேசரிப் பேப்பர் என்றும் விடுப்பு டொட் கொம் என்றும் முதுகுக்குப்பின்னால் அழைக்கப்படுகிற பூலோகத்தார் இம்மாதிரிக் கதைகளை எப்பொழுதும் விரல் நுனியில் வைத்திருந்தார். அகப்படுகிற நாலு பேருக்கு சொல்லாமலும் விட்டதில்லை. அவர் வேலைக்குப் போவதில்லை. சமூக உதவித்தொகை பெறுகிறார். பென்ஷனுக்கு இன்னும் ஐந்து வருடம் இருக்கத்தக்கதாக வேலையை விட்டிருந்தார். “இனி என்னத்துக்கு வேலைக்குப் போகவேணும். இரண்டு குமருகளையும் நல்ல இடமாப் பார்த்துக் கட்டிக் கொடுத்தாச்சு, மூத்தவனை லண்டனுக்கு எடுத்து விட்டாச்சு. ஊர் வளவுக்கை ஒரு பெரிய வீடு கட்டி முடிச்சிட்டன். ஷோசல் காசில மிச்சம் பிடிச்சுச் சேர்த்தனென்றால் பென்ஷனையும் எடுத்துக் கொண்டு ஊர்ப்பக்கம் போயிடுவன்”

பூலோகத்தார் ஊரில் தனக்கு ஆறு பிள்ளைகள் என பொய்க்கணக்குக் காட்டி பிள்ளைகளுக்கான உதவிப் பணத்தினையும் பெற்றுக்கொண்டதாக சுற்றுவட்டத்தில் ஒரு கதையிருந்தது. கேட்டால், “யாரடா அப்படிச் சொன்னது” என்று எகிறுவார். “பொறாமை பிடிச்ச எளிய சனங்கள், கையில கிடைக்கட்டும் கண்டதுண்டமாக்கிப் போடுவன்.”

ஆனால் தன்னுடைய பூராயங்களுக்கான மூலத்தை பூலோகத்தார் ஒருபோதும் சொன்னது கிடையாது. பதிலுக்கு அவரிடமிருந்து பழைய கோச்சி ரெயின் போன்றதொரு வெடிச்சிரிப்பும், பெருமிதம் மிதந்து வழிகிற வார்த்தைகளும் மட்டுமே கிளம்பும். “ஹா.. ஹா.. டேய்.. இந்தப் பூலோகத்தான் ஒருத்தன்ரை கண்ணைப் பார்த்தே கதையைச் சொல்லுவான்ரா ” அப்படியொரு ஏழாவது அறிவு அவருக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் சமயங்களில் எனக்கும் தோன்றியிருக்கிறது. முதற்தடவை அவரைச் சந்தித்தபோது அப்படிக் குழம்பியிருந்தேன்.

நல்ல நினைவிருக்கிறது. மூன்றாண்டுகளுக்க முன்னர் ஒரு குளிர்காலம். நல்ல பனி பெய்தது. வீடுகளை, மரங்களை, வீதிகளை, ரயில் தண்டவாளங்களை, துாரத்தே மலைகளை, அவற்றின் அடிவாரங்களை மிச்சம் வைக்காமல் வெண்பனி மூடியிருந்தது. வெண்ணிறக் காடு..

ரயிலால் இறங்கி நடந்தேன். மைனஸ் பத்து செல்சியஸைத்தாண்டிய குளிர். காது மடல்களைத் தேய்த்துச் சூடாக்கியபடி படிகளில் இறங்கினேன். படிகள் பனிச் சேறாகியிருந்தன. அதன் ஓரத்துச் சுவரோடு தோளினைச் சாய்த்தபடியிருந்தவரை அடையாளம் தெரியவில்லை. முழங்கால்கள் வரையான கம்பளிக் கோட்டு அணிந்திருந்தார். காதுகளை மூடியபடிக்கு தலையில் கம்பளித் தொப்பியிருந்தது. இரண்டு உள்ளங்கைகளுக்கிடையில் பியர் ரின் ஒன்றை உருட்டியபடியிருந்தார். அவ்வப்போது வாயில் வைத்து அருந்தினார். அவரின் காலடியில் மேலும் இரண்டு பியர் ரின்கள் இருந்தன.

சிறியதாய் ஓர் ஏளனப் புன்னகை என்னில் தோன்றி மறைந்தது. அவரைத் தாண்டி நடந்தேன். கீழே சப்பாத்தும் புதைகிற அளவில் பனியிருந்தது.

“டேய் தம்பி, உன்னைத் தான், ..”

எதிரில் வந்த வெள்ளைப் பெண்ணொருத்தி என்னைத் தொட்டு “அவர் உன்னைத்தான் கூப்பிடுகிறார்” என்றாள். திரும்பவும் படியேறி அருகில் போய் நின்று என்ன என்பதைப்போல பார்த்தேன். அவர் என்னை சற்று நேரம் ஏறிட்டு நோக்கினார்.

“நீ அமரேசன்ரை மகன் தானே”

“ம்”

“போன வருடம்தானே கல்யாணம் கட்டினாய்”

“ஓம்..”

“பக்டரி வேலையெல்லாம் எப்பிடி.. நிறையத் தமிழ் ஆட்கள் அங்கை வேலை போல.. ”

பதிலேதுமின்றி அவரைக் கீழும் மேலுமாகப் பார்த்தேன். இவரொரு சோதிடராக இருக்கக் கூடும். இப்போதெல்லாம் இந்தியாவில் இருந்து இப்படி சோதிடர்கள் வருகிறார்கள். ஒரு சிறிய அட்டையில் குருஜி ஜோதிட மையம் என்றோ, ஆதிபகவான் அற்புத ஜோதிடமென்றோ எழுதி ஏதும் தமிழ்க் கடையொன்றின் ஓரத்தில் குந்திக் கொள்கிறார்கள். எம் ஜி ஆருடன், மூப்பனாருடன், விஜயகாந்துடன், கவுண்டமணியுடன் சேர்ந்தெடுத்த போட்டோக்களை அருகில் பரவி வைத்திருப்பார்கள். கத்தரிக்காய் கால் கிலோ வாங்கப் போனால் “தாயே உன் முகத்தில் தீராக் கவலையொன்று உள்ளது. இப்படி வந்து உட்கார்” என்று கூவுகிறார்கள்.

பதின்ம வயதுப் பிள்ளைகளின் அம்மாக்கள்தான் பெரும்பாலும் சிக்கிக் கொள்கிறார்கள். “பிள்ளையின் பழக்க, வழக்கம் சரியில்லை.” “கூடாத நண்பர்கள் சேர்க்கை,” “இரவுகளில் நண்பிகளுடன் தங்கச் செல்லும் பெண் பிள்ளை..” “அப்பா அம்மா என்று மரியாதை தரத்தெரியாத பையன்” இப்படி எல்லோருக்கும் தீராக் கவலைகள். இரண்டாயிரம் வருடங்களாக பீடு நடைபோடும் தமிழர் பண்பாட்டினை அடுத்த தலைமுறைக்குக் கையளிக்க முடியாத வெப்பியாரத்தினையும் அந்த வரலாற்றுப் பழிக்கஞ்சிய துயரத்தினையும் ஜோதிடர்கள் கபக் என்று பற்றிக் கொண்டு விடுகிறார்கள். சிக்கினால் பரிகாரம், பூஜை, தகடு என்று ஐநுாறு பிராங்குகளுக்கு ஆப்பு நிச்சயமாயிருந்தது.

படிக்கட்டுக்களில் உட்கார்ந்திருந்தவரும் என் முகத்தில் படரும் ஏதேனும் துயர ரேகையைப் படித்திருக்கக் கூடுமென நினைத்தேன். முன்பொருநாள் என் முகத்தில் பிஸினஸ் களை உண்டெனச் சொன்ன ஜோதிடர் நினைவுக்கு வந்தார். இந்த ஏரியாவில்தான் அவர் சுற்றித் திரிகிறார். சீக்கியராக இருக்க வேண்டும். எப்போதும் தலைப்பாகையும் தாடியும் இருக்கும். சற்று வயதானவராயினும் ஜீன்ஸ் ரி சேட்டில் எடுப்பாக இருப்பார். ஆங்கிலத்தில்தான் பேசுவார்.

அன்றைக்கு ரயிலின் ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்திருந்தேன். எதிர், அருகு இருக்கைகள் ஆட்களற்று இருந்தன. அடுத்த நிறுத்தத்தில் ஏறிய அவர் முன் இருக்கையில் அமர்ந்தார். சிநேக பூர்வமாகச் சிரித்தார். பதிலுக்கு கீறலாக புன்னகையைப் படரவிட்டு வெளியே பார்வையை எறிந்தேன். நல்ல வெயில் காலம். பசுமை விரிந்து ஓடிக்கொண்டிருந்தது. துாரத்தின் மலை முகடுகளில் மட்டும் இன்னமும் பனி கரைந்திருக்கவில்லை.

சீக்கியர் என்னை ஊடுருவிப் பார்ப்பதாய்த் தோன்றியது. அது ஒருவித அந்தர உணர்வாயிருந்தது. “ப்ரெண்ட், உனக்குப் பிரகாசமான எதிர்காலம் உள்ளது..” என்றார் சீக்கியர். ஜோதிடமொன்றும் அவ்வளவு பொருட்படுத்தக்கூடியது அல்ல என்று நம்பினாலும் இப்படியாக எங்காவது வாசித்தால், யாரேனும் சொல்வதைக் கேட்டால் உற்சாகம் கண்டபடிக்கு கரை புரண்டு ஓடுகிறது. சற்றுப் புளுகத்தோடு “தாங்ஸ்” என்றேன்.

“உன்னிடம் வர்த்தக ஆற்றலும் மார்க்கெட்டிங் தந்திரோபாயங்களும் நிரம்ப இருக்கிறது”

ஓ, சிங் வரைக்கும் விடயம் போய்விட்டதா என்றுதான் முதலில் தோன்றியது. அதற்கும் ஒரு தாங்ஸ் வைத்தேன். மேலும் நான்கைந்து தாங்க்ஸ் என்னிடமிருந்து வாங்கிய பிறகு “இப்பொழுது எனக்கு ஐம்பது பிராங்குகள் கொடு” என்றார் அவர்.

“என்ன.. ?” நான் முகத்தைச்சுருக்கி அவரைப் பார்த்தேன்.

“ஆம்.. நானொரு ஜோதிடன், எனது தொழிலைச் செய்தேன். நீ பணம் தரவேண்டும்” எடுத்த எடுப்பிலேயே குரலை உயர்த்தினார். சீக்கியர்களுக்குப் பயந்த காலம் ஒன்றிருந்தது. அப்போது அவர்களிடம் முனையில் கத்தி பொருத்தப்பட்ட துப்பாகிகளும் கிரேனைட் குண்டுகளும் இருந்தன.

ரயிலில் சனங்கள் எங்களைப் பார்த்தார்கள். சீக்கியர் குரலை உயர்த்திக்கொண்டே போனார். நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கினேன். “நீயும் இறங்கு பேசலாம்” என்றேன். அவர் இறங்காமலேயே போய்விட்டார்.

இப்பொழுது இவர். படிக்கட்டு ஜோதிடரை எப்படிச்சமாளிப்பது என்று ஒரு தீர்மானத்திற்கு வரமுடியவில்லை. தலையைச் சொறிந்தபடி நின்றேன். காசேதும் கேட்பாரோ..

“என்னடா முழுசுறாய்.. இதெல்லாம் எப்பிடித்தெரியுமெண்டோ..” என்றவர் முதற் தடவையாக வெடிச்சிரிப்பையும் அந்தப் பிரகடனத்தையும் சொன்னார். “டேய் இந்தப் பூலோகத்தான் கண்ணாலை பார்த்தே கதையைச் சொல்லுவானடா..”

அன்றைக்கு அறிமுகமானார் பூலோகத்தார். நல்ல வெயில் நாட்களில் மாலைப் பொழுதுகளில் ஏரிக்கரையோரம் போய் அமர்ந்திருப்பேன். துாரத்தே கண்டுவிட்டு அருகில் வந்து அமர்ந்து கொள்வார். ஒவ்வொரு முறையும் புதுக்கதையொன்றை கொண்டிருப்பார். “ பாலன்ரை பெட்டையும் மூர்த்தியின்ரை பெடியனும் தனியப்போய் இருக்கினம். இரண்டு வீட்டிலயும் பெரும் சண்டை. பெட்டைக்கு இந்த வைகாசி வந்தால் பத்தொன்பது வயசு. ” என்பதையெல்லாம் கண்ணாலே பார்த்துச் சொல்லமுடியுமா என்பது குழப்பமாகத்தான் இருக்கிறது.

பூலோகத்தார் சுட்டிய இளைஞன் பஸ் தரிப்பிடத்தில் காத்து நின்றான். எதேச்சையாக நம்மை நோக்குவதும் பின்னர் பார்வையைத் தாழ்த்திக் கொள்வதுமாக அந்தரிப்பது போலிருந்தது. ஒரு மணிநேரத்திற்கு ஒன்றான இரண்டாம் இலக்க பஸ் வந்தபோது ஏறிக்கொண்டான். குறைவான சனங்களே ஏறினார்கள். மலைக் கிராமமொன்றுக்கு அந்த பஸ் பயணிக்கிறது. பல்நாட்டவரும் தங்கவைக்கப்பட்ட அகதிகள் முகாமொன்று அங்கிருந்தது. அவனும் அங்கு தங்கியிருக்கக் கூடும்.

“அண்ணை உண்மையைச் சொல்லுங்கோ, நீங்கள் அவனை வெருட்டிக் கேட்டுத்தானே இந்தியாக்காரன் என்று கண்டுபிடிச்சனியள்.. ” என்று கேட்டேன். பூலோகத்தார் அவசர அவசரமாக மறுத்தார். “அதொண்டுமில்லை.” என்று மட்டும் சொன்னார்.

பஸ் வளைவில் திரும்பி மறைந்தது. சற்று நேரம் அமைதியாயிருந்த பூலோகத்தார் சட்டென்று “எங்கடை சனங்களின்ரையும் குழந்தைகளின்ரையும் பிரேதம் எரியிற நெருப்பில அவங்கள் குளிர் காயுறாங்கள்” என்று சொன்னார்.

நான் பதிலேதும் சொல்லவில்லை. ஆனால் இது ஒரு கோக்கு மாக்குக் கதை என்று நினைத்தேன். “ஏன் நாங்கள் மட்டும் அதில குளிர்காயலாமோ” என்று நான் கேட்கலாம். அதற்கு “ஓம்.. நாங்கள் குளிர்காயிறது வேறு விடயம். ஆனால் கொழுத்தினவன் குளிர்காயலாமோ” என்ற மாதிரியான பதிலை அவர் வைத்திருப்பார்.

இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வருவதும் இலங்கைத் தமிழ் அகதி என நிரூபித்து அரசியல் தஞ்சம் கேட்பதுவும் ஒன்றும் பரம ரகசியமல்ல.

அப்படி வந்தவர்களில் ஒருவரை சந்தித்திருக்கிறேன். ஜெர்மன் மொழியிலான கடிதமொன்றை வாசித்துச் சொல்வார் என யாரோ வதந்தியைக் கிளப்பியிருக்க வேண்டும். என்னைத் தேடி வந்திருந்தார். அரவிந்தன் என்று தன்னை அறிமுகப்படுத்தினார். சொந்த ஊர் தஞ்சாவூரில் ஒரு கிராமம். இங்கு வந்து ஏழு மாதங்கள் முடிகிறதென்றார்.

அரவிந்தன் கொண்டு வந்திருந்த கடிதத்தில் அவரது அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது. கடிதத்தின்படி அவர் யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளையில் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதாம் ஆண்டு பிறந்திருந்தார். மகாஜனா கல்லுாரில் படித்திருந்தார். தெல்லிப்பளையை இலங்கை இராணுவம் கைப்பற்றியதும் பின்னர் அது உயர்பாதுகாப்பு வலயமானதும் கடிதத்தில் சொல்லப்பட்டிருந்தது.

அக்காலப்பகுதியில் அரவிந்தன் புலிகள் இயக்கத்தில் இணைந்தார். ஐந்து வருடங்கள் அவர்களோடு இயங்கினார். பின்னர் அவரை மலேசியாவிற்குப் படிப்பிற்காக அனுப்பியிருந்தார்கள். ஒருசில மனக்கசப்புக்களுக்குப் பின்னர் திரும்பவும் அரவிந்தனை புலிகள் வன்னிக்கு அழைத்திருக்கிறார்கள். அவருக்கு அச்சமிருந்தது. கொலை செய்து விடுவார்கள் என்ற அச்சம். அவர் வன்னிக்குத் திரும்ப விரும்பவில்லை. இயக்கத்தில் இருந்ததனால் கொழும்பிற்கும் திரும்பமுடியவில்லை.

இவ்வாறாக முதல் பன்னிரெண்டு பக்கங்களில் அரவிந்தனின் வழக்கு விபரங்கள் இருந்தன. தஞ்சக்கோரிக்கையோடு அவரது இலங்கை அடையாள அட்டையையும் இலங்கைப் பிறப்புச் சான்றிதழயும் கையளித்திருந்தார். தெல்லிப்பளை கிராமசேவையாளரின் உறுதிப்படுத்தற் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது.

கடிதத்தின் மிகுதிப் பக்கங்களில் வழக்கு ஏன் நிராகரிக்கப்பட்டது என விரிவாகச் சொல்லப்பட்டிருந்தது. அரவிந்தன் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தார் என விசாரணைகளில் சொல்லியிருந்தாலும் அதனை நிரூபிக்கும் ஆவணங்களைத் தராதபடியாலும், மலேசியாவில் விமானம் ஓட்டும் பயிற்சிக்கான கல்வியைத் தொடர்ந்தார் என்பதற்கான ஆதாரங்களைக் கொடுக்காதபடியினாலும்…. இன்னோரன்ன காரணங்களாலும் கொழும்பில் வாழமுடியும், கண்டியில் வாழமுடியும் என்ற ஆலோசனைகளோடு வழக்கு நிராகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரவிந்தன் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதில் சந்தேகமிருக்கிறது என்ற வார்த்தை ஓரிடத்திலும் இருக்கவில்லை.

நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது மேல் முறையீடு செய்யவோ அரவிந்தனுக்கு முப்பது நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தன. அரவிந்தன் பதட்டமாயிருந்தார். வார்த்தைகள் சீராக வரவில்லை. “பிடிச்சு திருப்பி அனுப்பிடுவாங்களா, நிறையச் செலவழிச்சிருக்கேன், நிறையக் கஸ்டப்பட்டிருக்கோம்.”

“எதுக்கு பைலட் படிப்பு என்று கொடுத்தீங்கள், ஒரு பிளைட்டைத் தந்து ஓடுங்க என்றால்.. அப்படிக் கூட வேண்டாம், கொஞ்சம் விளங்கப்படுத்துங்க என்றால் உங்களால் முடியுமா” என்றேன். முன்பொருமுறை புலிகளின் இசைக்குழுவில் மிருதங்கம் வாசித்தேன் என்றொருவர் சொன்னபோது விசாரணையின் போதே மிருதங்கத்தைக் கொடுத்து எங்கே வாசி என்று கேட்டார்களாம் என்ற கதையொன்று நினைவில் ஓடியது. அரவிந்தன் சற்றைக்கு மௌனமாயிருந்தார். பிறகு “எழுதித்தந்தாங்க, மனப்பாடம் பண்ணிச் சொன்னேன்.” என்றார்.

அரவிந்தனுக்கு நான் என்ன சொல்வதென்று தெரியவில்லை. “ரீயைக் குடியுங்கோ” என்றேன்.

“நான் எல் ரீ ரீ ஈயில் இருந்தேன்னு எப்பிடியாச்சும் புருப் பண்ண முடியாதா..” என்றவர் அடுத்ததாகத் தூக்கிப்போட்ட கேள்வியில் குடித்துக் கொண்டிருந்த தேனீர் புரக்கேறி மூக்கிற்குள்ளால் வந்தது. “அவங்களோட தலைவர் கிட்ட லெட்டர் ஏதாச்சும் வாங்கலாமா..”

அரவிந்தனிடம் மேல் முறையீடு செய்யச் சொன்னேன்.

“கிடைச்சிடுமா..”

“நிச்சயமாச் சொல்லத் தெரியேல்லை. ஆனால் இன்னும் ஒன்றிரண்டு வருசம் இழுக்கலாம்.. இடைப்பட்ட காலத்தில என்ன வேலையென்றாலும் செய்து காசு சேர்க்கப்பாருங்கோ”

பத்து லட்சம் இந்தியரூபாய்களைச் செலவழித்து அரவிந்தன் இங்கு வந்திருந்தார். “நாங்க குடும்பத்தில மூணு பையன்கள்.. ஒரு பொண்ணு, எனக்கு மூத்தவங்க அவங்க.. தஞ்சாவூருதான் பூர்வீகம். விவசாயக் குடும்பம் நாங்க, எல்லாருமே விவசாயம்தான் பாத்திட்டிருந்தோம். கேள்விப்பட்டிருப்பீங்க.. தண்ணிர் பிரச்சனை அப்புறம் நிறைய பிரச்சனைகள். முன்னைய மாதிரி இல்லை. விவசாயம் சரியாகல்லை. அப்பா தவறிட்டாங்க , முதல்ல எங்காவது மிடில் ஈஸ்ற்தான் போவோம்ணு நினைச்சேன். அப்புறம் நம்ம கூட்டாளியொருவன் பாரீசுக்கு போனான். அதான் விவசாய நிலத்த வித்திட்டு வந்திட்டேன். அக்கா கல்யாண வயசில இருக்கிறாங்க.. தம்பிங்களைப் பாக்கணும்..”

அரவிந்தன் திரைப்படக் கமரொ உதவியாளராக வந்திருந்தார். வருடத்தின் தொடக்கத்தில் இங்குள்ள தியேட்டர்களில் இரவு பன்னிரெண்டு மணிக்கும் ஹவுஸ் புல் காட்சியாக ஓடிய தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல் காட்சியை இங்கே பனி நிரம்பிய மலையடிவாரங்களில் படம் பிடித்திருந்தார்கள். சென்னையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாய் நடந்த உண்ணாவிரதமொன்றிற்கு அந்த நடிகர் வரவில்லை என்பதனால் படத்தினைப் புறக்கணிக்குமாறு ஒன்றிரண்டு ஈமெயில்களும் எனக்கு வந்திருந்தன.

பாடலில் கொட்டும் பனியில் நடிகை மெல்லிய சேலையில் குளிரை சிம்பிளாகத் தாங்கினார். பாவம், நடிகர் கைக்கு உறை, ஜக்கெட், கழுத்தைச் சுற்றிய சால்வையென அந்தரப்பட்டார்.

அரவிந்தன் அவர்களோடு வந்தார். அவரோடு மேக்கப்பிற்கு இருவர், நடனக்காரர்களாக இருவர் என மொத்தம் ஐந்து பேர். வருவதற்கு முன்பாக அரவிந்தன் இருபது தடவைகள் தெனாலி படத்தைப் பார்த்தாராம். பயண ஏற்பாடுகளைச் செய்தவர்கள், தெனாலி, நளதமயந்தி, கன்னத்தில் முத்தமிட்டால் முதலான படங்களை ஏராளம் தடவைகள் பார்க்கச் சொல்லிருந்தார்களாம்.

அரவிந்தன் சொன்னார். “உங்களை மாதிரித்தாண்ணே.. நாட்டில வாழ முடியல்ல..”

நிராகரிக்கப்பட்ட வழக்கினை அரவிந்தன் மேன்முறையீடு செய்தார். வன்னியோடு தொடர்பற்றுப் போனதால் எதுவித ஆதாரங்களையும் பெற முடியவில்லையென்று கரித்தாஸ் வழக்கறிஞர் அவருக்காக வாதாடினார். மூன்றாம் விசாரணையில் தனக்கு வாய்த்த மொழிபெயர்ப்பாளர் தெய்வம் என்று ஒருமுறை சந்தித்த போது அரவிந்தன் சொன்னார்.

சரியாக, எட்டாவது மாதத்தில் பதிவுத்தபாலில் அரவிந்தனது தஞ்சக் கோரிக்கை ஏற்கப்பட்ட கடிதமும் சுவிற்சர்லாந்தில் வாழும் பிரஜைகளுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய சிறு கைநுாலும் வந்து சேர்ந்தது. தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு அரச உதவி கிடைக்குமென்ற போதும் அரவிந்தன் ரெஸ்ரோரன்ற் ஒன்றில் வேலை தேடிக்கொண்டார். பகுதி நேரமாக மக்டோனால்ட்டிலும் வேலையில் சேர்ந்தார்.

நீண்டகாலத்தின் பிறகு ஒரு பயணத்தில் பஸ்ஸில் அரவிந்தனைச் சந்தித்திருந்தேன். தனியாக வீடெடுத்து தங்கியிருப்பதாகச் சொன்னார். அக்காவிற்கு திருமணம் சரிவந்திருக்கிறது. அதனால் இந்தியாவிற்கான பயண ஆயத்தங்களை மேற்கொண்டிருக்கிறேன் என்றார்.

பிறகொருநாள், இலங்கையின் வடக்கு கிழக்கில் பிறந்து அகதித் தஞ்சம் கோரிய தமிழர்களுக்கு இந்தியத் துாதரகத்தில் விசா கொடுக்க மறுக்கிறார்கள் என்றும் தனக்கும் விசா கிடைக்கவில்லையென்றும் துயரத்தோடு அரவிந்தன் சொன்னார்.

அரவிந்தனின் கதையை பூலோகத்தாருக்கு சொல்லியிருந்ததாக நினைவு. பதிலுக்கு என்ன சொன்னார் என்பதனை ஞாபகத்தில் கொண்டுவர முடியவில்லை. ஏதேனும் கோக்குமாக்காக அவர் கூறியிருக்கலாம். அவர் அப்படித்தான். வார்த்தைகள் மூளைக்குள் நுழையாமல் நேராக வாய்க்கு வந்துவிடுகின்றன.

நன்றாகப் பனி கொட்டியபடியிருந்த ஒரு நாள், பூலோகத்தார் என்னைத் தேடி வீட்டுக்கு வந்தார். “நாளைக்கு வாறியே, மாவீரர் தினக் கொண்டாட்டத்துக்குப் போயிட்டு வருவம், இங்கையிருந்து பஸ் போகுது..”

வானொலியாகட்டும் தொலைக்காட்சியாகட்டும், மாவீரர் தினக் கொண்டாட்டம் என்றுதான் சொல்கிறார்கள். நாட்டிலேதான் நினைவு கூருகிறார்கள். வெளிநாடுகளில் கொண்டாடுகிறார்கள் என யாரோ எழுதியிருந்ததைப் படித்ததாயும் ஞாபகம்.

தங்கள் சாவு, வெளிச்சத்தின் விதை என நம்பியவர்கள், அருகே அம் மண்ணில் துாங்குகிறார்கள் என்ற நினைப்புத் தருகின்ற உள்ளொடுக்கம் வேறு எங்கேயும் கிடையாதென்றே நம்பினேன். “நான் வரேல்லை, நீங்கள் போட்டு வாங்கோ..”

பூலோகத்தார் என்னை ஒரு புழுவைப் பார்ப்பது போலப் பார்த்தார். “தமிழனாடா நீ..” என்று சத்தம் போட்டுச் சந்தேகப்பட்டார்.

“ரண்டாயிரம் வருசமா தமிழன் அடிமையாவே கிடந்து சாகிறதுக்கு நீங்கள் தானடா காரணம்” என்றுவிட்டு விறு விறு என்று திரும்பி நடந்தார்.

இப்படியாக எங்கு முடிவதெனத்தெரியாது அங்குமிங்குமாக இந்தக் கதை அலைந்து திரிந்த போதே அது நடந்தது. இந்தியாக்காரன் என்னைச் சந்தித்தான். எதேச்சையான சந்திப்பு. அவன் அங்குமிங்குமாய் பார்வையை வீசி பூலோகத்தார் அருகில் இல்லையென்பதை உறுதிப்படுத்தினான். அவரில் அச்சமுற்றிருந்தது போலயிருந்தது. மெல்லிதாகச் சிரித்தான்.

“அவர் உங்க சொந்தக்காரரா..”

“யார்..”

“உங்க கூட இருப்பாரே, வயசான ஐயா..”

“ஓ.. அவரா.. தெரிஞ்சவர், பொழுது போகாமல் கதைச்சுக் கொண்டிருப்பார்..”

“அப்படியா, அவர் காண்கிற இடமெல்லாம் என்னைத் திட்டுகிறார். இந்தியாக்காரன் என்று பொலிசுக்கு சொல்லிக் கொடுத்திடுவாராம்..”

பூலோகத்தாருக்கு ஏன் தேவையில்லாத வேலை என்று நினைத்தேன். மனுசன் உண்ட களைப்புக்கு கொழுப்பெடுத்து ஆடுது..

“நான் எவ்வளவோ சொன்னேன், நம்புகிறார் இல்லை. நேற்று பஸ்ஸில கெட்டவார்த்தையால திட்டினார். குடிச்சிருந்தார்.” அவனது கண்களில் அவமானம் படர்ந்திருந்தது. தலையைக் குனிந்து கொண்டான்.

“சே.. அவர் அப்பிடித்தான். அதை பெரிசா எடுக்காதேங்கோ, நான் அவரிட்டைச் சொல்கிறேன்” என்றேன்.

“இல்லையே.. என்று தொடங்கியவன் மேலும் மேலும் தொடர எனக்கு பூலோகத்தார் மீது இன்னதென முடியாத ஆத்திரம் நெருப்பாய் பரவியபடியிருந்தது. மனதிற்குள் திட்டத்தொடங்கினேன். எப்போதும் தவிர்த்துவிட்டு செல்ல விரும்புகிறவன் அன்றைக்கு அவரைத் தேடி ரயில்நிலைய படிக்கட்டுகளுக்குப் போனேன். காணவில்லை. தமிழ்க்கடையில் யாருக்கேனும் அரசியல் வகுப்பெடுத்தபடி நிற்கக் கூடுமென நினைத்தேன். அங்குமில்லை. இறுதியில் ஏரிக்கரையில் அகப்பட்டார். நன்றாக கால்களை நீட்டியபடி உட்கார்ந்திருந்தார். அருகில் பை இருந்தது. அதனுள் முழுக்கவும் பியர் ரின்கள்.

முன்னால் நின்று கொண்டேன். பூலோகத்தார் நிமிர்ந்து நோக்கினார். அருகில் இரு என்பதைப் போல சைகை செய்தார்.

“அவன் யாரெண்டு உங்களுக்குத் தெரியுமோ” என்றேன். எவன் என்பதைப் போல பார்த்தார். சற்றைக்கு முன்னர் இளைஞன் சொன்ன கதையை அவருக்குச் சொல்லத் தொடங்கினேன்.

***

அவன் சொன்ன கதை

இரண்டு வருடங்களுக்கு முந்தைய நாளொன்றில் பிரான்சுக்கும் சுவிசுக்கும் இடையிலான சிறிய கிராமமொன்றினுாடாக நடந்தே உள்நுழைந்து இங்கு வந்து சேர்ந்தேன். முகாமில் தஞ்சம் கோரிப் பதிந்தபோது, கடவுள் கிருபையில் நான் பிரான்சிலும் ஒருவருடம் தங்கியிருந்தேன் என்பதை அவர்கள் கண்டுபிடித்துவிட வில்லை. துபாய் வந்து, அங்கிருந்து எதியோப்பியா சென்று, பிறகு இந்தோனேசியாவிற்கான பயணப்பாதையில் பிரான்சில் இறங்கி அங்கும் அகதியாயிருந்தேன். பத்து மாதங்களில் என்னை நிராகரித்தார்கள். வேலையில்லை.

சுவிற்சர்லாந்தில் இன்னும் விசாரணை முடிந்துவிடவில்லை. இரண்டாவது விசாரணை ஆறு மணிநேரம் வரை நீண்டது. எனது ஒவ்வொரு பதிலுக்கும் ஒவ்வொரு ஆதாரம் கேட்கிறார்கள். நம்பமாட்டீர்கள், கிளிநொச்சியின் காலநிலை எத்தனை பாகை செல்சியஸ் என்று கேட்டார்கள். சிரிப்புத்தான் வந்தது. மூன்றாவது விசாரணைக்கு அழைப்போம் என்றிருக்கிறார்கள். மண்டையைத் துளைக்கிற கேள்விகளையும் பதில்களையும் சுமந்தபடி திரிகிற நரக வாழ்க்கை இது.

சரியான விசா இல்லையென்பதால் யாரும் வேலை தருகிறார்களும் இல்லை. கிழமைக்கு எழுபது பிராங்குகள் முகாமில் தருகிறார்கள். நாளுக்கு பத்து பிராங்குகளை வைத்து என்ன செய்துவிட முடியும் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனக்குப் பணம் தேவையாயிருக்கிறது. தமிழ்க் கடையொன்றில் களவாக வேலை செய்கிறேன். காலையில் போனால், கழுவித் துடைத்து வர இரவாகும். பன்னிரண்டு மணிநேரம் உடல் முறிகிற வேலை. பொலிஸ் பாயலாம் என்கிற பயம் வேறு. சம்பளம் அப்பிடி இப்படித்தான். விசா இல்லாத ஒருவரை வேலைக்கு வைத்திருப்பதனால் தனக்கு ரிஸ்க் என்றும் அதனால் கால்வாசி சம்பளமே தரமுடியுமென்றும் தமிழ் முதலாளி சொல்லியிருக்கிறார். பரவாயில்லை.. எனக்குப் பணம் தேவைப்படுகிறது.. அப்பாவையும் அக்காவையும் வெளியே எடுத்து விட வேண்டும். அவர்கள் வவுனியா செட்டிக்குளம் முகாமில் இருக்கிறார்கள்.

பாருங்கள், நானும் இங்கு முகாமில்.. அவர்களும் முகாமில்.. உங்களுக்குத் தெரியுமா..? யாருக்கோ பணம் கொடுத்தால் முகாம்களில் உள்ளவர்களை வெளியே எடுத்துவிட முடியுமாம். இராணுவமே கூட்டிச்சென்று விட்டுவிடுமாம். விசாரிக்க வேண்டும். எப்பிடியும் எடுத்துவிட வேண்டும். வெளியே வந்த பிறகு எங்கே செல்வார்கள் என்பதுதான் புரியவில்லை. அப்பா பதுளைக்குப் போவாரா தெரியவில்லை. பதுளை எங்கிருக்கிறது என்று தெரியுமா? அது நுவரெலியாவிற்கு கிட்டவாக இருக்கிறதாம். அல்லது கண்டிக்கு அருகாகவோ தெரியவில்லை.

அப்பா அம்மாவின் சொந்த இடம் எங்கிருக்கிறதென எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆச்சரியமில்லையா. ஆனால் அப்பா தன் சொந்த இடமென ஒருபோதும் பதுளையைச் சொன்னதில்லை. செட்டிக்குளம் அகதிகள் முகாமிலும் சொந்த இடம் கிளிநொச்சி என்றே பதிந்திருப்பார்.

நான் ஒருபோதும் பதுளைக்குப் போனதில்லை. அண்ணனும். ஆனால் அவன் அங்கேதான் பிறந்தான். அப்பா சிறுவயதில் தாத்தாவோடு அங்கே வந்து சேர்ந்தாராம். இந்தியாவில் இராமநாதபுரப் பக்கம் ஏதோ ஒரு கிராமத்திலிருந்தவர்களை வெள்ளைக்காரர்கள் நல்ல சம்பளத்தோடு வேலையென்று அழைத்து வந்திருக்கிறார்கள். அப்பா சொல்லுவார். தாத்தா தன்னைத் துாக்கித் தோளில் சுமந்தபடி மன்னாரிலிருந்து நடந்தே வந்து சேர்ந்ததாக. வழியில் நிறையப் பேர் செத்துப் போனதாகவும்.

மலைநாட்டில் ஏதோவொரு கலவரம் வெடித்தபோது அப்பா அண்ணனைத் துாக்கித் தோளில் சுமந்தவாறு கிளிநொச்சிக்கு ஓடிவந்தார். அப்போதும் நிறையப் பேர் செத்துப் போனார்கள். அண்ணனுக்கு ஒன்றரை வயது நடந்து கொண்டிருந்தது. அவன் கிளிநொச்சியிலேயே வளர்ந்தான். கிளிநொச்சியிலேயே பள்ளிக்கூடம் போனான். அங்கேயே இயக்கத்திற்கும் போனான். கிளிநொச்சியை மீட்குமொரு சண்டையிலேயே செத்தும் போனான்.

சண்டையில் கிளிநொச்சியிலிருந்து இராணுவம் பின்வாங்கியிருந்தது. நாங்கள் மீண்டும் வீட்டுக்குப் போனோம். நிலம் காடுபற்றிக் கிடந்தது. அதனுள் அடையாளம் தெரியாதபடி வீட்டின் ஒரு சுவர் மட்டும் தனித்து நின்றது. அப்பா சொன்னார். அது முன்னரும் காடாய்க்கிடந்த நிலமென. அவர் தன்னந்தனியராய் அதனை வெட்டிச் சீரமைத்தார். இப்பொழுதும் அப்படியே..

நான் உங்களுக்கு அம்மாவைப் பற்றியும் அக்காவைப்பற்றியும் சொல்லவில்லை. அம்மா என் சின்ன வயதுகளிலேயே செத்துப்போனார். வாயில் பெயர் நுழையா ஏதோ ஒரு நோய். அக்காவிற்கும் எனக்கும் நான்கைந்து வயதுகளே வித்தியாசமெனினும் அவளே என் அம்மாவாயிருந்தாள். அவளுக்கொரு கல்யாணம் கட்டிக்கொடுத்துவிட வேண்டுமேன அப்பா ஆசைப்பட்டிருந்தார். யாருக்குத் தெரியும் இப்படியேதும் நடக்குமென..

கிளிநொச்சியிலிருந்து வெளிக்கிட அப்பா ஒருபோதும் சம்மதித்திருக்கார். சென்றமுறை நானும் அக்காளும் அவரை இழுத்து வந்தோம். “நீங்க ரண்டும் போங்க, நான் வரலை.. ” அப்பாவைப்போலவே எனதும் அக்காளினதும் பேச்சிருந்தது. எங்கள் சுற்று வட்டாரத்தில் அப்படித்தான் பேசினோம்.

தொன்னுாற்றைந்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு திருவிழாப்போல சனங்கள் வந்திருந்தார்கள். கிளிநொச்சி கொள்ளாமல் தவித்தது. எங்கள் நிலத்திலும் கொட்டில்கள் போட்டு நிறையப்பேர் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு வன்னிநிலம் ஒத்துக்கொள்ளவில்லை என நினைக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாணத்திற்கே திரும்பிவிட்டார்கள். பெரு வெள்ளம் வடிந்த நிலமாய் திரும்பவும் கிளிநொச்சி வெறுமையானது. அப்பொழுதே நாமும் பதுளைக்குப் போயிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. ஆனால் அப்பா ஒருபோதும் சம்மதித்திருக்கார்.

அப்பா பாவம், முதுமையின் நோய்களோடு முகாமில் என்ன செய்வாரோ.. அவரையும் அக்காளையும் முகாமிலிருந்து வெளியேற்ற வேண்டும். அதற்கு காசு சேர்க்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்த இடங்களில் எங்காவது இரவு வேலை உள்ளதா, களவாகச் செய்ய..

***

எனது மூச்சுக்காற்று சீராக இருக்கவில்லையென்று உணர்ந்தேன். படபடப்பான வார்த்தைகளிலேயே அவன் கதையைச் சொல்லி முடித்தேன். பூலோகத்தாரின் முகத்தில் கலவரம் படரும் என எதிர்பார்த்தேன். அவர் சலனமேதுமற்று ஏரியின் நீர் அலைவைப் பார்த்தபடியிருந்தார். சிலசமயம் என்னிடம் மன்னிப்புக் கேட்கக்கூடும். வயதில் மூத்த ஒருவர் அவ்வாறு கேட்கையில் அதை எதிர்கொள்வதென்பதில் குழப்பமாயிருந்தது.

“சரி பரவாயில்லை, முடிஞ்சால் அவனுக்கொரு வேலை தேடிக்கொடுங்கோ” என்று சொல்லவேண்டும்.

நீடித்த அமைதிக்குப்பிறகு பூலோகத்தாரிடமிருந்து வெடிச்சிரிப்பு அவரது உடலைக் குலுக்கியபடி கிளம்பிற்று. “ஹா.. ஹா.. ஹா.. டேய், மடப்பயலே. அப்பிடிப்பாத்தாலும் கூட அவன் இந்தியாக்காரன் தானே” என்ற பூலோகத்தார் ஏரிக்கரையோரம் என்னைத் தனியே விட்டுவிட்டு எழும்பி தன்போக்கில் நடந்தார்.

-தமிழினி, யூலை 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *