(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்தக் கல்லூரிக்கு மாணவர்களும் மாணவிகளும் மாறி மாறி வேகமாக பைக்கிலும் சைக்கிளிலும் பஸ்ஸிலுமாக வந்து சேர, வாசலில் பைக்கில் சிவாவும், விக்னேஷூம் யாருக்காகவோ காவல் நின்று கொண்டிருந்தனர்.
இன்னொரு ஹீரோ ஹோண்டாவில் வேகமாக வந்திறங்கிய மனோகர், “ஹாய் மச்சி… கிளியோ பாட்ரா வந்தாச்சா?” என்றான் கூலிங்கிளாஸைக் கழற்றிக் கொண்டே.
“இல்லைடா அவள் வரவிற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்”
“ஜொள்ளு விடறதுக்காவே சீக்கிரம் வந்து விடுவீர்களே” என்றவாறு பைக்கிற்கு ஸ்டான்ட் போட்டான் மனோகர்
“நம்ம மட்டும் இங்கே எதுக்கு வந்து நிற்கிறோம்?” என்று மறைமுகமாக கேள்வியை எழுப்பியவாறு சிகரெட் பற்றவைத்தான் சிவா.
“சரிடா.. நமக்குள்ளே என்ன தகராறு”. மனோகர் சிகரெட் எடுத்துக்கப்பா என்றான் விக்னேஷ்.
சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தபடி “நான் நேற்று சொன்னதெல்லாம் நினைவிருக்கிறதா? இல்லை மறந்து போயாச்சா?” என்றான் மனோகர்.
”இன்றைக்கு நாம் மஞ்சுளாவிடம் க்ளீயராக பேசி விடுவோம் அவ்வளவு தானே” என்றான் சிவா.
“அவள் வரும் போதே விடுகிற தனி லுக் இருக்கே. அவள் என்னைத்தான் பார்க்கிறாள் என்பது நன்றாக தெரியும். இருந்தாலும் நம்ம பிரண்ட்ஸ் மனம் தளரக் கூடாதே என்பதற்காகத்தான் நான் இன்று பேசி விட வேண்டும்” என்றவாறு விசிலடித்தான் தூரத்தில் புத்தகத்தை கையில் ஏந்தியவாறு நடந்து வந்த மஞ்சுளாவைப் பார்த்தவாறு.
மஞ்சுளாவும் மனோகரின் தங்கை வினிதாவும் சேர்ந்து வந்து கொண்டிருக்க, “மஞ்சு ஒரு நிமிடம் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்” என்றான் மனோகர் அவன் அருகே சிவாவும் விக்னேஷும். வந்துவிட “என்னப்பா காலையிலே சைட் அடிக்க வந்தாச்சா. போய் உங்க வேலையைப் பாருங்கப்பா. அண்ணா ஒழுங்கா காலேஜுக்குப் போற வேலையைப் பாரு” என்றாள் வினிதா.
“சரிதான் போடி போய் உன் வேலையைப் பார். மஞ்சுவிடம் தான் நாங்கள் கொஞ்சம் பேச வேண்டும்” என்றான் மனோகர் கோபமாக.
“வினிதா நீ காலஜூக்குப் போயேன். ஏதோ நம்ம ஜொள்ளர்கள் கேட்கணும் என்கிறார்கள். நான் கொடுத்து விட்டு வருகிறேன்” என்ற வாறு குனிந்து காலில் கிடக்கும் செருப்பைக் கழற்றினாள்.
“மஞ்சு செருப்பையெல்லாம் கழற்ற வரவேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. நாங்கள் ஒன்றும் உன் கையைப் பிடித்து இழுக்கவுமில்லை. இடையில் கிள்ளவுமில்லை. செருப்பைக் கீழே போடு” என்றான் விக்னேஷ்.
“எல்லாம் வீட்டிற்கு வா. அப்பாவிடம் சொல்கிறேன்” என்று மனோகரிடம் கத்தி விட்டுக் கிளம்பினாள் வினிதா.
கழற்றிய செருப்பைக் கீழே போட்டு விட்டு “என்ன கேட்க வேண்டும் சொல்லுங்கள்?” என்றாள் மஞ்சுளா.
“இது நியாயமான விஷயம். நேரடியாக கேட்கிறோம். எங்கள் மூவரில் உனக்கு பிடித்த பையன் யார்?” என்றான் சிவா.
“எதற்கு என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளவா?” என்று சிரித்தவாறு கேட்டாள் மஞ்சுளா.
கொஞ்சம் நிலைகுலைந்த மூவரும் என்ன சொல்வதென்று புரியாமல் நிற்க, சுதாரித்துக் கொண்ட விக்னேஷ்,”மஞ்சு, நான்,சிவா, மனோகர் மூவரும் இங்கே தினமும் உனக்காக காலையிலும் மாலையிலும் காத்திருப்பது உனக்குத் தெரியுமல்லவா?” என்றான்.
“ஓ! நீங்கள் எனக்காக காத்திருந்தீர்கள் என்று தெரியாமல் போனதே. அன்று வினிதா, மனோகரிடம், ‘ஏண்ணா இங்கே நின்று கொண்டிருக்கிறாய்’ என்றதற்கு, ‘சும்மா வானத்தையும் பறவைகளையும் பசும் மரங்களையும் பார்த்துக் கொண்டு நிற்கிறோம்’ என்று சொன்னானே” என்று சிரித்தாள்.
“இது கேலி பேசுகிற நேரமில்லை மஞ்சு. நாங்கள் சீரியஸாக பேசுகிறோம் என்னதான் பதில் சொல்கிறாய்?”
“சிவா வீணாக ஏன் கோபப்டுகிறாய்? நீங்கள் எல்லாம் காலேஜூக்கு ஏன் வருகிறீர்கள்? படிக்கவா, காதலிக்கவா? முதலில் முடியுங்கள். அம்மா, அப்பாவின் கனவை நினைவாக்குங்கள். நேரம் கிடைத்தால் பிறருக்கு உதவி செய்யுங்கள். முடிந்தால் சமூக சேவை செய்யுங்கள். இப்படி ஒரு பெண் பின்னால் சுற்றி உங்கள் நேரத்தையும் காலத்தையும் வீணாக்குகிறீர்களே. உங்களுக்கு என்று வெட்கமாயில்லை” என்று கத்தினாள் மஞ்சுளா.
“பாருடா அன்னை தெரசா வந்திருக்காங்க சமூக சேவை செய்யணுமாம். என்ன மஞ்சு லெக்சர் அடிக்கப் பழகியிருக்கே. உன்னிடம் கேட்டது நாங்கள் எங்களுக்கு அட்வைஸ் இல்லை. அது நிறைய கிடைக்கிறது இந்த நாட்டிலே. எங்கள் மூவரிலே யாரை நீ காதிலிக்கிறேன்னு தெரிஞ்சுக்கத்தான் உன்னிடம் வந்தோம்” என்றான் மனோகர்.
“நான் யாரையும் காதிலிக்கவில்லை என்று சொன்னால் என்ன செய்வீர்கள்?”
“திரும்பவும் நாளையிலிருந்து உன் பின்னால் மூவரும் சுற்ற ஆரம்பிப்போம்?”
“சீ! வெட்கமாயில்லை.ஒரு பெண்ணின் மனதில் இடம் பெறுவது அவ்வளவு ஈஸியில்லேப்பா. சும்மா பேகிபேண்டும், கூலிங்கிளாஸ்ஸூம் போட்டுட்டு வந்தால் பெண்கள் மயங்கி விடுவார்கள் என்று இருந்த காலம் மலையேறிப் போச்சு.
“முதலிலே செயல் வீரர்களாக இருங்கள். நீங்கள் செய்கிற ஒவ்வொரு நல்ல காரியமும் பெண்ணை ஏன் என்னையே கவர்ந்திழுக்கட்டும்.
“படிப்பிலே முதல் மாணவனாக வந்த பிரகாஷ் பின்னால் எத்தனை பெண்கள் சுற்றுகிறார்கள். பார்த்திருக்கிறீர்களா? ஸ்போர்ட்ஸிலே பத்து கோல்டு மெடல் வாங்கிய கணேசனை எத்தனை மாணவிகள் சுற்றி வருகிறார்கள்?”
“சுற்றுப் புற சூழல் வாரம் ஏற்படுத்தி, வாரத்திற்கு ஒரு கிராமம் என்று தெளிவுபடுத்த என்.எஸ்.எஸ். மூலம் கிராமக்கல்வி, கிராமச் சுத்தம், முதியோர் கல்வி என எத்தனையோ சாதனைகள் எற்படுத்தும் சந்திரனின் பின்னால் எத்தனை பெண்கள்.
போங்கப்பா. போய் சாதனை வீரர்களாக மாறுங்கள். வெறும் உடையிலும் அழகிலும் மயங்கும் காலம் மலை ஏறிவிட்டது. எனக்கு உங்கள் மூவர் மேலும் காதலும் இல்லை. கத்திரிக்காவும் இல்லை.
ஐயோ பாவம் வேலையில்லாமல் கால் கடுக்க நிற்கிறீர்களே என்று தான் இரக்கமும் கோபமும் வருகிறது. போங்கப்பா” என்றவாறு வேகமாக கல்லூரிக்கு நடந்தாள் மஞ்சுளா.
மூவரும் அமைதியாக கல்லூரி வாசலில் அடியெடுத்து வைக்க அந்த மூன்று மாணவர்கள் மனதிலும் சாதனை செய்யும் விதைகள் வேரூன்ற தொடங்கியிருந்தன.
– மும்பை துடிப்பு ஏப்ரல், 2001