“என்ன பஸவப்பா… நம்ப கட்சியிலே வேட்பாளர்களின் பெயர்களைப் பரிசீலனை செய்துகிட்டிருக்காங்களே… தலைவர் கிட்டே உன்னோட மனுவைக் கொடுத்தியா…?” என்று கேட்டுக் கொண்டே பரபரப்பாக உள்ளே நுழைந்தான் அழகிரி.
“எதுக்கு….?”
“என்ன, எதுவுமே தெரியாத மாதிரி கேட்கிறே…? தேர்தல்லே நிற்க உனக்கு டிக்கெட் வேண்டாமா! நீ ஜெயிச்சு எம்.எல்.ஏ. ஆக வேண்டாமா?”
“எனக்கு எதுக்கப்பா பதவியெல்லாம்? என்னிக்கும் நான் ஒரு தொண்டனாகவே இருந்துட்டுப் போறேன்…’
அழகிரி விடுவதாக இல்லை.
“நம்ப கட்சிக்காக ஆரம்பத்திலேருந்து பாடுபட்டவங்கள்லே நீ முக்கியமானவன்.. அப்படியிருக்க நீ தேர்தல்லே நிக்கறதுதானே பொருத்தம்… போ… உடனே போய் தலைவர்கிட்டே உன் விருப்பத்தைச் சொல்லு… உனக்கு அவர் கண்டிப்பா சீட் கொடுப்பார்…” என்று வற்புறுத்தினான். அதை மீற முடியாமல் பஸவப்பாவும் தலைவரிடம் தன் மனுவைக் கொடுத்துவிட்டு வந்தான்.
இரண்டு நாட்கள் கழித்துக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் அதில் பஸவப்பாவின் பெயர் இல்லை. அழகிரிக்கு நெஞ்சமெல்லாம் பற்றியெரிந்தது. ‘இரண்டில் ஒன்று கேட்காமல் வருவதில்லை’ என்று கட்சித் தலைவரிடம் ஆவேசத்தோடு சென்றபோது…
தலைவரும் செயலரும் ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். மறைவில் நின்று அவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்டான் அழகிரி.
“ஏன் சார், வேட்பாளர் லிஸ்டில் பஸவப்பாவை விட்டுட்டீங்களே? அவர் பெரிய உழைப்பாளி… இந்தக்கட்சி இன்னைக்கு இவ்வளவு துhரம் வளர்ந்திருக்குன்னா அதுக்கு முக்கிய காரணமே இந்த பஸவப்பாதான்! அவருக்குத் தொகுதியிலும் நிறைய செல்வாக்கு உண்டு… இந்தத் தேர்தல்லே அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாமே!” என்றுசொல்லிக் கொண்டிருந்தார் செயலர்.
“நீங்க சொல்றது ரொம்பசரி… நீங்க சொல்றபடி கட்சிக்கு முக்கியமா பஸவப்பா தேவை. உண்மையா உழைக்கிற தொண்டனும் பஸவப்பாதான்! அதனால் தான் அவனை விட்டு விட்டேன்!”
“நீங்க சொல்றது எனக்குப் புரியலையே…?”
“ஆமாங்க…! பஸவப்பாவை எம்.எல்.ஏவா ஆக்கிட்டா பின்னாலே கட்சிக்கு உண்மையா உழைக்கிறவன் யாரு? இது கூடப் புரியாம நீங்க எப்படிக் கட்சியிலே முக்கிய பொறுப்பு வகிக்கிறீங்க…?” தலைவரின் கூற்றை கேட்ட செயலரும் மறைந்து நின்ற அழகிரியும் திகைத்து, வாயடைத்து நின்றனர்!
– ஆனந்தவிகடன் 9-12-1984.