(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மேகக்கூட்டங்களுக்குள் நுழைந்தது விமானம். வாயில் வைத்ததுமே கரைந்துவிடும் கைகொள்ளாத பெரிய பஞ்சு மிட்டாய் நினைவில் இனித்தது. வானத்தை மறைத்து சுற்றிலும் கொத்துக் கொத்தாய் மேகங்கள்.
“பக்கத்தில் வராதே. உன்னை மிகவும் வெறுக்கிறேன். உன் முகத்தில் முழிக்கவே எனக்குப் பிடிக்கவில்லை.”
அவன் எட்டிப் போனான். எத்தனை வேகமாகப் பறந்தாலும் பிடிக்க முடியாது மேகங்களுக்குள் கலந்து போனான்.
“ஏன்… ஏன் என்னை உனக்குப் பிடிக்கவில்லை…”
“…”
நினைவும் கனவுமாய் மீண்டும் மீண்டும் துரத்தும் காட்சிகள்.
“கேப்டன் குடிக்க ஏதாவது வேண்டுமா…”
மிகச் சாதாரணமாக எதிரில் வந்து நிற்கிறான். விமானப் பணியாளனுக்குரிய சர்வலட்சணங்களுடன். உதடு தவறிச் சிந்தி விடாத சிரிப்போடு சிக்கனமாகப் பேசுகிறான். அவனை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியவில்லை. இந்தச் சிறிய விமானி அறைக்குள் இப்போது இவன் மட்டுமே என்னுடன். இவன் மட்டுமே அறை முழுவதும்.
“என் மீது கருணை காட்ட மாட்டாயா…”
“பயணி அழைக்கிறார்.”
“எனக்குப் பதில் சொல்லி விட்டுப் போ”.
“எனக்குக் காதலி இருக்கிறாள். அவளுடன் எனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. இதற்கு மேலும் நீங்கள் தொந்தரவு செய்தால்… நான் புகார் செய்ய வேண்டியிருக்கும்.”
மிகுந்த மரியாதையுடன் அவளருகில் இருந்த குவளையில் ஆரஞ்சுச் சாற்றை நிரப்பி விட்டு சலனமின்றி நகர்கிறான்.
கைகள் வெலவெலக்கின்றன. கண்கள் பனிக்கின்றன. இறுதியாக இருந்த ஒரே நம்பிக்கை, ஒரே ஆசை, ஒரே கனவு…
கண்ணுக்கெதிரே வானம் வெறுமையாகிறது. மனம் எரிந்து எரிந்து நைகிறது.
விமானம் நாட்டின் வான் எல்லைக்குள் நுழைகிறது. தரைக் கட்டுப்பாட்டு நிலையம் அழைக்கிறது.
“JamboAir 105 pass 204…”
“contact… 132 decimal 7…”
“1327 JamboAir 105…”
“passing 300…”
30,000 அடி உயரத்தில் மௌனமாகப் பறந்துகொண்டிருக்கிறது விமானம்.
“என் தாத்தா எனக்குக் கொடுத்த பேனா. ரொம்ப ராசியானது. உனக்குத் தரமுடியாது.”
“பிளீஸ் சித்தப்பா, இன்னிக்கு நான் முதமுதல்ல ஸ்கூல் போறேன். ஒருநாள் மட்டும் ஒங்க பேனாவை எடுத்திட்டுப் போறேனே.”
“ரொம்ப கெஞ்சிற. பத்திரம். சரியா.”
“சரி சித்தப்பா.”
சொல்லி வைத்தது போல் பேனா தொலைந்துபோனது. சித்தப்பா முகத்தில் முழிக்கப் பயந்து அம்மாவைத் தேடினால், அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த அம்மாவின் முகத்தைகூட பார்க்க முடியவில்லை. எனது முதல் நாள் பள்ளியையோ, பேனா தொலைந்த கதையையோ கேட்க யாருக்குமே நேரம் இல்லை. அது ஒருவகையில் நிம்மதியாக இருந்தது.
இங்கேயே இரு வருகிறேன் என்று சொல்லிப்போன பாட்டிக்குக் காத்திருந்து அந்த ஆஸ்பத்திரி நாற்காலியிலேயே தூங்கிப்போனேன். கண் விழித்தபோது, தம்பியைத் தூக்கி வைத்துக்கொண்டு எல்லாரும் அழுதுகொண்டிருந்தார்கள். யாருமே என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அப்பா பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார்.
“ஒரே சமயத்தில இப்படி இரண்டு இடி விழக்கூடாது. ஒண்ணையே தாங்கமுடியாது… எப்படி சமாளிக்கப் போறாங்கன்னு தெரியலியே.” பக்கத்தில் நின்றவர் பேசியதில் எனக்கு ஒன்றும் புரியவில்லை.
ஆஸ்பத்திரிக்கு வேகமாக வந்த சித்தப்பாவின் கார் விபத்துக்குள்ளாகி, அந்த இடத்திலேயே சித்தப்பா இறந்து போனது ரொம்ப நேரம் கழித்துத்தான் தெரிந்தது. பேனா தொலைந்ததா அல்லது தம்பி பிறந்ததா எது மிக மோசமான துரதிஷ்டம் என்று சொல்லமுடியவில்லை. ஒரே நாளில் சித்தப்பாவும் அம்மாவும் இல்லாது போனார்கள்.
ஆசையான சித்தப்பாவையா… அன்பான அம்மாவையா… யாரை இழந்தது கனக்கிறது… தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த போதுதான் அவன் நெருக்கமானான். கணக்குப் பாடத்தால்.
அவன் போட்டி போட்டதாலேயே எனக்குக் கணக்கு நன்றாக வந்தது. அடித்துப் புரண்டு புத்தகத்தைக் கிழித்து எறியும் அளவுக்குப் போட்டி. தொடக்கநிலை ஆறு பள்ளி இறுதித் தேர்வில் இரண்டு பேருக்குமே ஏ ஸ்டார் கிடைத்த போது, நான் முதலில் அழுதேன். பிறகு அவன் அழுதான். போன் பேசுவோம் என்றும் அடிக்கடி சந்திப்போம் என்றும் ஓராயிரம் முறை உறுதி சொல்லிக்கொண்டு திசையே தெரியாமல் பிரிந்து போனோம். சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அதற்குப் பிறகு எந்தக் கணக்குப் போட்டியிலும் அவனைப் பார்க்கவே முடிந்ததில்லை. நானும் எந்தக் கணக்குப் போட்டிக்கும் போகவேயில்லை.
பெரும் மேகம் ஒன்று விமானத்தை மோதிச் செல்கிறது.
அப்பாவின் இழப்பு, தொடர்ந்து வந்த வறுமை… தோற்றுப் போன காதல்… இளமை வெறுத்துக் கொண்டிருந்த சமயத்தில் ஆறுதலாய் அமைந்தது வேலை… நண்பர்கள்…
நண்பர்கள்… நினைக்கும்போதே உடல் நடுங்குகிறது. இதே வானத்தில்தான் அந்தப் புதிய வாழ்க்கை தொடங்கியது. நாளும் பொழுதும் இதே வானத்தில் இதே மேகங்களூடே… இந்த மேகங்களைச் சிதைத்து மேலே மேலே செல்வதில்தான் எத்தனை இன்பம். ஆகாயப் படையில் எங்கள் ஐந்து பேருக்கும் தனி மதிப்பு. எங்கள் வீரத்திலும் சாகசத்திலும் எல்லாருக்கும் பெருமை. எத்தனையோ தேசிய நாள் கொண்டாட்டங்களில் நாங்கள் சாகசங்கள் செய்திருக்கிறோம்.
சான், மைக்கல், மலர், லே ஹொங், நான். ஆகாயப்படையில் சேர்ந்த சில நாட்களிலேயே நாங்கள் நெருக்கமாகிவிட்டோம். கிட்டத்தட்ட எல்லாருக்கும் ஒரே வயது. எதில் ஒத்துப்போகி றோமோ இல்லையோ சாகசம் செய்வதில் எல்லாருக்குமே ஒரே அளவுக்கு ஆர்வமும் துடிப்பும் இருந்தது. எப்போதும் ஒன்றாகவே ஆகாயமெங்கும் சுற்றிக் கொண்டிருப்போம். தரையிலும் பறந்து கொண்டிருந்தது வாழ்க்கை.
“JamboAir 105 claimbing 350…”
“105 maintaining 350…”
இதைவிட வேகமாக, இதைவிட உயரத்தில், ஒலியை மீறிய வேகத்தில் பறந்தது அந்தப் போர் விமானம். அன்றைக்கும் நான்தான் விமானத்தை ஓட்டினேன். எல்லாரும் ஜாலியாகச் சிரித்துப் பேசி, பாடி, கொட்டமடித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று இயந்திரம் கோளாறானது.
“நான் எப்படியும் சமாளித்துக்கொள்கிறேன். நீங்கள் குதித்து விடுங்கள்” கட்டாயப்படுத்தினேன். என்னை விட்டு விட்டுப் போக அவர்கள் தயங்கினார்கள். அவர்களை இழப்பதை என்னால் கற்பனைகூட செய்ய முடியவில்லை. அவர்களைக் காப்பாற்றுவதற்காக என் உயிர் போனாலும் பரவாயில்லை என நினைத்தேன். அதுகூட நல்ல முடிவாக அமையும் என்றுதான் தோன்றியது. எனக்கு ஏதாவது நடந்தால் இன்சூரன்ஸ் கிடைக்கும். தம்பி அவன் ஆசைப்படி அமெரிக்காவில் மேல்படிப்பைத் தொடர முடியும்… அவர்களை அவசரப்படுத்தினேன். என்னைத் தனியாக விட்டு விட்டு இறங்க மாட்டோம் என்று அவர்கள் அடம்பிடித்தார்கள். விமானம் தாறுமாறாக பறக்கத் தொடங்கி யது. எந்த முயற்சியும் எடுப்பதற்குத் தயக்கமாக இருந்தது.
நல்லவேளையாக தளத்தில் இருந்து எல்லாரையும் குதிக்கச் சொல்லி கட்டளை வந்தது. அவர்களை முதலில் குதிக்க சொல்லி, நான் கடைசியாகக் குதிக்கிறேன் என்றேன்.
விமானம் போகும் போக்கில் போய்விடும் திட்டத்தில் நான் இருந்தேன். ஆனால் அதற்கு முன் அவர்களை எப்படியும் காப்பாற்றிவிடத் துடித்தேன். அவசரப்படுத்தி நான்கு பேரையும் குதிக்க வைத்தேன். அவர்கள் கீழே குதித்ததும் என்ன ஆனாலும் ஆகட்டும் என்று விமானத்துடன் போராடத் தொடங்கினேன். எப்படியோ சமாளித்து அருகில் ஒரு திடலில் விமானத்தை இறக்கிய பிறகுதான் தெரிந்தது. சொல்லி வைத்ததுபோல நான்கு பாரசூட்டுகளுமே விரியவில்லை. நான்கு பேருமே ஒன்றாக…
பேயாக காடு மலை தாண்டிப் பறந்து, அவர்கள் குதித்த இடம் தேடிப்போனபோது எல்லாம் முடிந்துவிட்டது.
இப்போதும் கதறி அழ வேண்டும்போல் இருக்கிறது… உயிருக் குயிரான நண்பர்களைத் தொலைத்துவிட்டு நான் மட்டும் உயிர் பிழைத்ததை எண்ணி எண்ணி ஆண்டுக்கணக்காய் அழுது தீர்த்தாலும் வடு இன்னமும் காயாமல் ரத்தம் கசிந்து கொண்டே… எதிரே இருந்த நாள்காட்டி திகைக்க வைக்கிறது.
இதே மாதம். இதே நாள். இதே மாலை நேரத்தில்தான்…
வெளியில் வெடிக்காத கேவலூடே இழப்புப் பட்டியல் இன்னும் விரிகிறது. காணாமல் போனவை காலம் காலமாய் இந்தக் கணம் வரை தொடர்கிறது. ஏன் எனக்கு மட்டுமே இப்படியெல்லாம் நடக்கிறது. நான் என்ன தவறு செய்தேன்… இதுவரை புரியவில்லை.
போன வருஷம் இப்படித்தான். இளம் விமானிகளுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தபோது விமானத்தில் சிறு கோளாறு ஏற்பட்டது. நிமிடத்தில் சரி செய்து விட்டேன். பெரிய விஷயமே இல்லை. எரிந்த விமானத்திலும் கருகிப் போகாமல் பிழைத்துக் கிடக்கும் பாவி நான். என்ன பெரிதாக ஆகிவிடப் போகிறது. ஆனால் கூட வந்த பயிற்சி விமானி பயந்து விட்டான். தவறு பதிவு செய்யப்படவில்லை என்று பெரிய குற்றமாக ரிப்போர்ட் செய்து விட்டான். என் ராசிதான் தெரியுமே. உடனே பதவி இறக்கி விட்டார்கள்.
கூட அழுவதற்குகூட ஆளில்லாத நான் என்னதான் செய்திருக்க முடியும். எத்தனை நாள் சும்மா இருப்பது. மூளை குழம்பிப்போனது. பிஸினஸில் இறங்கினேன். என் அதிர்ஷ்டத்தைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். யோசிக்காமல் இறங்கிவிட்டேன். கொஞ்ச நஞ்சமிருந்த சேமிப்பும் தொலைந்து, கடன்தான் மிச்சமானது.
ஏதோ இந்த விமானி வேலை கிடைத்தது. இல்லாவிட்டால்… இப்போது தரையில் காலை வைத்ததும் கழுத்தைப்பிடிக்கக் கடன்காரர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறேனோ..
இவனும் முடியாது என்று ஒரேயடியாக மறுத்து விட்டான். ஒரு சாதாரண பணியாள். அவனைவிட எவ்வளவு உயரத்தில் நான் இருக்கிறேன். என்னை மறுத்துவிட்டான். அப்படி என்ன நான் குறைந்து விட்டேன். காதலிக்கிறானாம். கல்யாணம் செய்துகொள்ளப் போகிறானாம். புகார் கொடுத்து விடுவேன் என்று என்னை மிரட்டுகிறானா. எத்தனை திமிர். அகங்காரம். எல்லாம் நான் கெஞ்சுவதால்தானே.
உடல் சூடாகி முகத்தின் நரம்புகள் வீங்கிப் புடைக்கின்றன. காது மடல்கள் துடிக்க, மூக்கு சில்லிட்டுப் போகிறது. அடக்க முடியாமல் துக்கம் வெடிக்கிறது.
மேகங்களுக்கு மேலே சலனமின்றிப் பறந்துகொண்டிருக்கிறது விமானம். துடைத்தெடுத்தது போல் பளிச்சென்று இருக்கிறது வானம். துணை விமானி கழிவறைக்குச் செல்கிறார்.
விரல்களைக் கட்டுப்படுத்த முடிந்த என்னால் மனதை அடக்க முடியவில்லை. மனம், பார்வையை மறைக்கிறது. கண்ணுக்கு எதிரே வானம் மறைந்து, நாள்காட்டி மட்டுமே தெரிகிறது. அவர்களோடு நானும் போயிருந்தால்… போயிருக்க வேண்டும். இனியும் இதற்கு மேலும் எதையும் என்னால் தாங்க முடியாது. வரிசையாக ஒவ்வொரு சுவிட்சாக…
“105 loosing contact…”
தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தின் குரலும் அறுகிறது.
ஆரஞ்சு சாற்றுக்குப் பக்கத்தில்… அது என்ன… ரோஜாப்பூ…
– ‘நான் கொலை செய்யும் பெண்கள்’ சிறுகதைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்றது.
– 1998, நான் கொலை செய்யும் பெண்கள், முதற் பதிப்பு: டிசம்பர் 2007, கனகலதா வெளியீடு, சிங்கப்பூர்.