(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மாதவன் கிராணி தொண்டையை உயர்த்தி நீதிமன்ற சேவகன் கூப்பிடுவதுபோல் கூப்பிட்டார். “முத்துசாமி….முத்துசாமி…”
ஆஜர் சொல்லுவதற்குக் கூட நாவெழவில்லை முத்துசாமிக்கு. வறண்ட நாக்கை எச்சிலால் ஈரப்படுத்திக்கொண்டே முன்வந்து நின்றான். இதயம் என்றுமில்லா வேகத்தில் தடதடவென்று அடித்துக்கொண்டது. மாதவன் கிராணி உட்கார்ந்திருந்த மேசை ஓரம் போய் நின்றான் முத்துசாமி.
“இந்தா, இதிலே கையெழுத்துப் போடு ஒனக்கு மூனு மாசம் பர்மிட், அதுக்குள்ளே வேற எங்கயாச்சம் வேலை தேடிக்கிங்க, இதோட மூணு மாசம் நோட்டீசும் இருக்கு, பர்மிட் முடியும்போது நோட்டிசும் முடிஞ்சிடும். ஆறுமுகம் மூணு….” கிராணி அடுத்த நபரைக் கூப்பிட்டார்.
நோட்டீசையும் பர்மிட்டையும் கையில் பிடித்துக் கொண்டே வெளியில் வந்தான் முத்துசாமி. கைரேகை பதித்த விரலை கால் சட்டையில் துடைத்துக் கொண்டே தன் வீட்டை நோக்கி நடந்தான். அவனைப் போல் பர்மிட் வாங்க ஆபீசின் முன்பு மற்றும் பலர் கூடியிருந்தனர். முத்துசாமி அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர்களில் சிலர் கிராணிக்கு வேண்டியவர்கள், சிலர் தொரைக்குப் பிடித்தவர்கள், வேறு சிலர் கையில் பசையுள்ளவர்கள். எப்படியும் சமாளித்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில்தான் முத்துசாமி அவர்களைப் பார்த்தும் பாராமலும் நடந்து கொண்டிருந்தான்.
“வேலை பெர்மிட் கெடைச்சவங்க செல பேருக்கு திரும்பவும் வேலை கிடைக்குமாமே” என்று முன்னால் யாரோ சொல்லிக் கொண்டு போனது முத்துசாமியின் காதில் வந்து விழுந்தது. கொஞ்சம் ஆறுதலான வார்த்தைகள்தாம். ஆனால் அந்தச் சில பேரில் அவனும் ஒருவனாக இருக்க வேண்டுமே.
“எத்தினி மாசம்?” ஆவலோடு கேட்டாள் முத்துசாமியின் மனைவி. “புல்லுவெட்டு ஆளுக்கெல்லாம் மூணு மாசந்தானாம்” அலுப்போடு கூறிய முத்துசாமி சற்று முன் கிராணியார் கொடுத்த பர்மிட்டையும் நோட்டீசையும் ரேடியோவுக்குப் பக்கத்தில் (அதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பான இடம்) வைத்து விட்டு வெளியே ஐந்தடியில் வந்து உட்கார்ந்தான்.
காலை நீட்டிப் போட்டுக்கொண்டு வெற்றிலையைக் குதப்பிக்கொண்டிருந்த முத்துசாமியின் மனைவி காலை மடக்கிக்கொண்டு ஒருபுறம் ஒதுங்கி உட்கார்ந்துகொண்டாள் முனியாண்டிக்கு எத்தனை மாசம்? அவன் பெண்டாட்டிக்கு எத்தனை மாசம்?” என்றெல்லாம் தனக்கு அதிகப் பழக்கமுள்ள சக தொழிலாளரைப் பற்றியெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தாள் முத்துசாமியின் மனைவி. அவளது கேள்விகளுக்குப் பதில் சொல்ல அவனது மனத்திற்கு அப்போது ஓய்வில்லை.
முத்துசாமியின் மனம் பேயாய் அலைந்து கொண்டிருந்தது. வெளியே வெயில், தோட்டத்தில் பூவும் பிஞ்சுமாய் இருந்த கத்தரிச் செடிகள் வாடிச் சாய்ந்திருந்தன. தொடர்ந்து வெயில் கடுமை யாகவே இருந்தால் அந்தப் பூவும் பிஞ்சுகளும் கருகி உதிர்ந்துவிடக் கூடும். முத்துசாமியின் மனத்திலும் நட்ட நடுப்பகல் வெயில். உள்ளம் வெந்து கொண்டிருந்தது. அதில் ஓடிக் களித்திருக்கும் அவனது எட்டுக் குழந்தைகளின் விதி அடுத்த மூன்று மாதங்களில் புதிதாக எழுதப்பட வேண்டும்.
எங்கெல்லாமோ ஓடிப் பறந்து உருண்டு புரண்டு கிடந்த முத்துசாமியின் மனம் டங்கென்று அவன் முன்னால் வந்து விழுந்தது. “ம்…..சிவப்பு பாஸ்போட்காரனுக்கு எங்க போனாத்தான் வேலை கொடுக்க போறாங்க. நஞ்சானும் குஞ்சானுமா ஏழெட்டு ஆயிடிச்சு, இதுங்கள எங்க இழுத்துக்கிட்டுப் போய் எப்படிக் கஞ்சி ஊத்துவேன்?” புலம்பினான் முத்துசாமி.
“அட என்னாய்யா ரொம்ப அலட்டிக்கிறே, மரம் வச்சவன் தண்ணி ஊத்தாமலா போவான், வாரியா?” முத்துசாமியின் மனைவி வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள். “அடியே அரசு, ஒங்கப் பனுக்குக் கோப்பி கொண்டாந்து குடுடி” என்றாள். கடைசிக் குழந்தையை இடுப்பில் இடுக்கிக் கொண்டே சமையல் கட்டுக்குள் நுழைந்தாள். “ஆமாம், கொண்டா. இன்னு மூணு மாசத்தில எந்தக் கோப்பியும், பாலும் பார்க்கப் போறீங்க?” என்ற முத்துசாமி அவன் மூத்த மகள் அரசு கொடுத்த காப்பியை அப்படியே வாயில் கவிழ்த்துக் கொண்டு வெளியே நடந்தான்.
“மாதவன் கிராணி மனசு வைக்காட்டி மூட்டை கட்டறத தவிர வேறு வழியில்லை. எப்படியாச்சும் அவர் கால்ல, கையில விழுந்தாவது இன்னும் ஒரு ரெண்டு வருசத்திற்கு வேலை கெடைக்கும்படியா செய்திடணும். அதுக்குள்ள பெரஜா உரிமை வந்திடும். இல்லாட்டி வயத்த வாயக்கட்டி கப்ப காசு கெடைச்சா போதுமுன்னு ஊரு பக்கம் ஓடிட வேண்டியதுதான்” என்று முணு முணுத்தபடியே கால்போன பக்கம் போய்க் கொண்டிருந்தான் முத்துசாமி.
அவன் குழி வெட்டி நட்ட இளம் ரப்பர் மரங்கள் காற்றின் தழுவலில் சிரித்தபடி ஆடின. அவன் மனத்தினுள் அழுதபடி நடந்து கொண்டிருந்தான். செக்கச் சிவந்த மண்சாலை எத்தனையோ சஞ்சிக் கூலிகளின் இரத்தக் கலவை அது. அதை வெட்டித் திருத்திய அவனது கைகள் பாறையாய் உரம் பெற்றிருந்தன. ஆனால் மனது உருகிக் குழைந்து கொண்டிருந்தது.
“என்னப்பா முத்துசாமி, கப்பலே கவுந்து போன மாதிரி முகத்தைக் கவுத்துக்கிட்டே?” எதிரே வந்த அடுத்தத் தோட்டத்து அண்ணாசாமியின் குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் முத்துசாமி.
“ஒன்னுமில்லேப்பா, அடுத்த மூணு மாசத்திலே வேற எடம் பார்க்கணுமே, என்ன செய்யலாம்னுதான் யோசிச்சிக்கிட்டு வர்றேன்.”
“ஓ ஒனக்கும் மூணு மாசந்தானா, எனக்கும் மூணு மாசந் தான், என் சம்சாரத்தை அடுத்த மாசமே நின்னுக்கேனுட்டான்.”
“என்னப்பா!” ஆச்சரியத்தோடு கேட்ட முத்துசாமி தொடர்ந் தான். “உன் சம்சாரம் பால் வெட்டுல்லே, அதுக்கு ஆறு மாசமில்ல பெர்மிட்டு கொடுக்கணும்.”
“ஆமாப்பா. பெர்மிட்டு கொடுக்கறதுக்கு முதல் நாளே மரத்திலே ரொம்ப காயம் போட்டுட்டான்னு நோட்டீசு கொடுத்துட்டான்.”
“அதான்னே, பின்ன, செவப்புப் பாஸ்போர்ட்டுக்காரங்கள எப்படிக் கழிச்சிக் கட்டறது, அதுக்கு இதுவும் ஒரு வழிதானே?”
“நாட்டில் நம்ம ஜனங்க இன்னும் என்னென்ன கஷ்டப் படுதுங்களோ, நம்ம என்ன பெரஜா உரிமை வேண்டான்னா சொன்னோம்? பெரஜா உரிமைக்குப் போய்ட்டு பாம் குடுங்கை யான்னா, பாஸ்போட்டுல பேர் மிஸ்டேக்கா இருக்கு. அதைத் திருத்திட்டு வாங்கிறான். அதைத் திருத்த ஆறு மாசம். திருத்திக் கொண்டு போய்க் கொடுத்தா திருத்தினதிலேயே ரெண்டு பிழையை அவன் பார்த்து சொல்றான். இப்படி அவங்களே தப்புத் தப்பா எழுதிப்பிட்டு நம்மலை வருஷக் கணக்கா அலைய வைக்கிறாங்க. எல்லாம் ஒழுங்காயி மலாய் பரீட்சைக்குப் போனா, மலாய்க் காரனுக்கே புரியாத மலாய்ல பேசி, நீ பெயிலு, போடாங்கிறான், அப்புறம் நாமதான் என்ன செய்யறது?” முத்துசாமி தான் குடியுரிமைக்கு மனுச் செய்த வரலாற்றை வேதனையோடு சொல்லி முடித்தான்.
“இது பரவாயில்லையே, எங்கிட்ட வந்தான் ஒருத்தன். என்னமோ இந்தியாக்காரனுக்கு ரொம்ப பாடுபடற கட்சியில் இருக் கிறேன்னான், அம்பது வெள்ளியைக் கொடு. அடுத்த வாரம் பெரஜா உரிமை வீட்டைத் தேடி வரும்னான். இதோ வருஷம் நாலாச்சி. எங்க வருது? அம்பது வெள்ளி போனதுதான் மிச்சம்” அண்ணாசாமி தன் கதையைச் சுருக்கமாகச் சொல்லிக் கொண்டான்.
“ம், நம்ம மாதிரி ரெண்டுங் கெட்டானுங்க எத்தனை பேரு இன்னும் அலைஞ்சிகிட்டு இருக்காங்களோ? சரிப்பா, நீ எங்கே யாச்சும் வேலை தேடப் போனா என்னையும் கூப்பிடு.” முத்துசாமி நகர்ந்தான். எதிர்த் திசையில் இருவரும் பிரிந்தனர்.
முத்துசாமியைப் போன்ற பலரைப் பயமுறுத்தியபடியே இரண்டரை மாதங்கள் ஓடி முடிந்தன. மாதவன் கிராணியை விட்டால் வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்திருந்த முத்துசாமி பல தடவைகளுக்குப் பிறகு இந்தத் தடவை ஓர் உறுதியான பதிலை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவருடைய வீட்டை நோக்கி நடந்தான்.
திறமையுள்ள தொழிலாளர்களுக்குப் பதில் வேறு நல்ல ஆள்கிடைக்காவிட்டால் அவர்களைத் தொடர்ந்து வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு சட்டம் இருக்கிறதாமே; அதை வைத்து ஐயாவை மடக்கிவிட வேண்டியதுதான் என்ற தீர்மானம்தான் அவனை ஓரளவு உற்சாகமாக இயங்கச் செய்தது.
அவனைப் போலவே தேய்ந்து போயிருந்த சிலிப்பரைத் தெரு விலேயே கழற்றி வைத்துவிட்டு மெதுவாக வாசலை அடைந்தான்.
“ஐயா…..” சன்னமான குழைந்த குரலில் ‘முருகா’ என்ற பக்தி நயத்தோடு கூப்பிட்டான். இப்போது முருகன் சிவன் எல்லாமே மாதவன் கிராணிதானே அவனுக்கு, மீண்டும் “ஐயா….” என்றான் அதே குழைவோடு.
“யாரது?” என்ற குரலைத் தொடர்ந்து முடி நிறைந்த நெஞ்சையும் வயிற்றையும் தடவியபடி ஓர் உருவம் வெளிவந்தது. வணக்கம் சொல்லக்கூட வாய்வரவில்லை முத்துசாமிக்கு. வலது கையை காதுக்குமேல் உயர்த்தி தலையை மெல்ல அசைத்தான்.
“ஓ…முத்துசாமியா, வாப்பா” என்றவாறே முன் அறையில் கிடந்த சாய்வு நாற்காலியில் பொத்தெனச் சாய்ந்தார் மாதவன் கிராணி,
“ம்…இன்னும் ரெண்டு வாரந்தானுங்களே இருக்கு…..” முத்துசாமி இழுத்தான்.
“ஓ…வேலைப் பெர்மிட்டைச் சொல்றியா, அது வந்து….இன்னும் யாராரை எடுக்கிறதுன்னு தொரை முடிவு செய்யலியே…..”
“தொரை என்னங்க முடிவு செய்யறது, நீங்க பார்த்து உண்டு, இல்லேன்னா அவரு என்ன மறுக்கவா போறாரு…..?”
“அது சரிப்பா, இருந்தாலும் அவர் பேச்சைத் தட்ட முடியுமா? இரு வாரன்; அடுப்பில என்னமோ தீயுது,” என்ற கிராணியார் பொதுக் பொதுக்கென்று சமையற்கட்டை நோக்கி நடந்தார்.
“அம்மா எங்கே போயிட்டாங்க?” என்ற வினாக்குறியோடு நின்றான் முத்துசாமி. சில நிமிடங்களில் அவரும் வந்தார்.
“ஒனக்குக் கொடுக்கிறதில்ல தொரை மறுப்பு சொல்ல மாட்டார்ன்னுதான் நெனைக்கிறேன். ஏன்னா ஸ்டோர் வேலைக்கு ஒன்னைப் போல வேலை தெரிஞ்ச ஆளு கெடைக்கறது கஷ்டம். நான் சொன்னா தொரை கேட்பாரு. நீ ஏன் கவலைப்படறே?” மாதவன் கிராணி இப்படிச் சொல்லுவார் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. பல நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் இவன் முகம் உண்மையாகவே மலர்ந்திருக்கிறது.
“என்னங்க, நான் உங்களைத் தான் நம்பியிருக்கிறேன்” என்றவன் தொடர்ந்து “ஆமாங்க, அம்மா எங்கே போயிட்டாங்க? ஐயாவே சமைக்கிற மாதிரி இருக்கு?” என்று அடக்கமாகச் சிரித்துக் கொண்டே கேட்டான்.
“அவங்க அம்மா வீட்டில என்னமோ, யாருக்கோ சுகமில்லையாம். அதுக்குப் போயிருக்காங்க, வர ஒரு மாசமாகும்” என்றார் அவர்.
“அது வரைக்கும் ஐயாவே சமைக்கணுமா?” அனுதாபத்தோடு கேட்டான் அவன்.
“என்ன செய்வது! ஒனக்குத் தெரிஞ்சு யாருனா இருந்தா சொல்லேன். இருவது முப்பது கொடுத்து ஒரு மாசத்துக்கு வைச்சிக்கலாம்.”
“எனக்குத் தெரிஞ்ச…..” என்று தலையைச் சொறிந்தான் அவன்.
“ஏம்பா, ஒம் மகள் ஒன்னு சும்மா வீட்டிலேதானே இருக்கு…?”
“ஐயோ! அதுக்கு என்னங்க தெரியும்! சின்னப் புள்ளே…”
“அட எனக்கென்னப்பா, அம்மா மாதிரியா சமைக்கச் சொல்றேன்? ஏதோ ஒரு மாசத்திற்கு…”
“அப்ப சரிதானுங்க,” என்றான் முத்துசாமி.
“சரி, நாளைக்கு வந்து சொல்லு. ஒனக்கு வேலை இருக்குன்னு நினைச்சிக்கோ, போ” எழுந்து உள்ளே சென்றார்.
முத்துசாமியின் மகள் அரசு, பதினைந்து வயது, முற்றும் மலராத மொக்கு. கிராணி வீட்டுக்கு வேலைக்குப் போக அவளுக்குப் பிடிக்கவில்லைதான். என்றாலும் என்ன செய்வது? வேலை பெர்மிட் இருக்கிறதே.
ஒருவாரம் எப்படியோ பயமும் பதட்டமும் இயக்க வேலையைச் செய்து கொண்டிருந்தாள். அடுத்த வாரத்தில் நான்காம் நாள். வழக்கமான நேரத்திற்கு வெகு தாமதித்து ஓடி வந்தாள் அரசு. நேரே அவளின் அம்மாவிடம் ஓடினாள். விக்கி விக்கி அழுதபடியே என்னென்னவோ சொன்னாள். ஏதும் புரியாமல் வெளியில் உட்கார்ந்திருந்தான் முத்துசாமி.
“என்னாங்க…?” பதறினாள் அவன் மனைவி. உள்ளே ஓடினான் அவன். “பச்சை சிசுவை என்ன அநியாயம் பண்ணிட்டான் பாருங்க…” துடித்தாள் அவள். அவனுந்தான்.
இந்நாள் வரை மானங் கெடாது உண்டு உரமேறிய அவன் உடல் நடுங்கியது. “இதோ வாரேன்” சர்ரென வெளியேறினான். வாசலில் கொடியில் காய்ந்து கொண்டிருந்த மனைவியின் சிவப்பு நிறக் கைலியை ஒதுக்கக் கையைத் தூக்கினான். சிவப்பு பாஸ்போர்ட் வேலை பெர்மிட், இன்னும் இரண்டு நாட்களுக்கே வேலை. நினைத்துக் கொண்டவனின் கால்கள் மரச்சட்டங்களென விறைத்துப் போயின. மேலே நடக்கும் துணிவு கால்களுக்கு இல்லை.
– தீபம் 1970, ‘கோணல் ஆறு’ தொகுப்பின் மறுபதிப்பு
– கம்பி மேல் நடக்கிறார்கள், முதற் பதிப்பு: 2006,சிவா எண்டர்பிரைஸ், கோலாலம்பூர்.