(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இயற்கையினை ரசித்த காளிதாசன் மேகதூதத்தைப் படைத்தான். மழைவீழ்ச்சி, இடியோசை, சோலைகளின் ஒலி ஆகியன அவனது நூலுக்கு அடிக்கற்களாயின.
ஏனோ தெரியவில்லை. ரசிக்க முடிகின்ற எல்லோருக்குமே படைக்க முடிவதில்லை .
பொட்டல் வெளிகளில் இலுக்குப் புற்களினால் வேய்ந்த சிறு குடிசையில் படுத்துக்கிடந்த படியே மழையோசை, குயிலோசை, காற்றின் அசைவோசை கண்ணெதிரே புல்வெளியில் வெள்ளத்தில் வருகின்ற மீன்கள் துள்ளி விளையாடும் ஓசை ஆகிய எல்லாவற்றையுமே. ருசித்துச் சுவைக்கும் ஏழைவிவசாயிகள் எத்தனையோ ஆயிரம் பேர் இப்புவியிலே இருக்கின்றார்கள். இயற்கையை அப்படியே விட்டிருந்தால் இன்று இப்புவியில் நடக்கும் கொலைகளைவிடக் கலைகளே மிகுந்திருக்கும். என்று பாடியபடி ராணித்தேனியொன்று கூட்டைவிட்டு வெளிவந்தது.
ராணித்தேனியின் பாட்டிலும் ஆட்டத்திலும் ஆகர்சிக்கப்பட்ட ஆயிரம் ஆண்தேனீக்கள் ராணியைச்சுற்றி வட்டமிட்டன.
ராணி மெல்ல மெல்ல மேலே போகிறது. அந்தரத்தில், மிக மிக அந்தரத்தில் ஏனைய தேனீக்கள் எல்லாம் களைத்து விழுந்தபோது. ஒரே ஒரு கதாநாயகன் எஞ்சியிருக்கின்றான். ஏனையோரைவிட்டு விட்டு இருவருமே மேலே செல்லின்றனர். ராணி ஆண் தேனீயிடம் இப்படிக் கேட்டது.
கண்ணா நமது கனிமூனை எங்கே வைத்துக் கொள்ளலாம்?
ஓசோன் படை ஓரத்திற்குச் செல்வோமா ராணி?
ஐயையோ! நாம சீவிக்கின்ற மரத்த மட்டுமா ஓட்டபோடுகின்றான் பாவி மனுசன். அவன் ஓசோன் படையிலேயும் ஓட்டபோட்டுட்டான். அந்தத் துவாரம் வழியா நாம போயிட்டா திரும்பிப் பூமிக்கே வரமாட்டம். வேண்டாம் வேண்டாம் என்றது ராணி.
எங்கேபோவோம் என்று இரண்டும் சிந்தித்தன. சிந்தனையின் மத்தியிலே. கண்ணா உனக்குத் தெரியுமா ராமாயணம் என்கிறார்கள். மகாபாரதம் என்கிறார்கள். இரண்டும் சேர்ந்தது தான் நாம். என்று புரிகிறா கண்ணா என்றது ராணி.
பொடிபோட்டுக் கதைப்பதில் ஆண்களா? பெண்களா? புலிகள் என்று புரியவில்லையே ராணி என்றது ஆண்தேனீ.
இது கூடப் புரியவில்லையா இந்த அசகாயச் சூரனுக்கு. இத்தனை ஆயிரம் பேரையும் தள்ளிவிட்டு வந்த இந்த வீரனுக்கு. வில்லொடித்த ராமனல்லவா நீ என்றது ராணி. அப்போ நீ சீதையா? ராணி. என்றது ஆண் தேனீ. இல்லை இல்லவே இல்லை . நான் மகாபாரத ராணி ……….. உரையாடல் தொடர்கிறது.
முடிச்சுப் போடுவதில் அதுவும் மொட்டைத் தலையையும் முழங்காலையும் முடிந்து காட்டுவதில் வல்லவர்கள் பெண்கள் தானா. ஒன்றுமே புரியவில்லையே என்று சிணுங்கியது ராஜா.
இந்த ஆண்களுக்கு புட்டுப் புட்டு வைத்தால் தான் புரியும் போல. விட்டில் பூச்சி தெரியுமா ராஜா.
ஓ தெரியுமே விளக்கிலே விழுந்து செத்துப் போகுமே அதுதானே. ஏன்றது ஆண் தேனீ. அப்போ உன்னைப் பற்றியே உனக்குத் தெரியாதா? என்றது ராணி.
எனக்கு இப்போ உன்னைப் பற்றித் தான் தெரியுமே தவிர என்னைப் பற்றி எதுவுமே தெரியாது நீ எது சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன் என்றது ராஜா. நீ ராமன் ஆனால் நான் சீதையில்லை . நான் திரளபதி. இரண்டு இதிகாசங்களிலுமிருந்து ஒரு நாயகனும் நாயகியும் சேர்ந்திருக்கின்றோம் என்று ராணி சொல்ல. ஐயோ ராணி எனக்கு மயக்கமாக வருகிறது எதுவுமே புரியவில்லை . என்றது ராஜா.
பூமிக்குச செல்லும் வரை நீ மயங்கியே இருப்பாய் உன்னை மயக்கிய படியே கதையைக் கூறுகின்றேன் ராஜா.
ம்…ம்…ராஜா மயக்கத்திலே விடையளிக்கிறது ராணி தொடர்கிறது.
எங்களுடைய சந்ததி மிகுந்த சாணக்கியம் மிக்கது. நான் நினைத்தால் ஆயிரமோ ஐயாயிரமே எனத் தொடர்ச்சியாக முட்டையிடுவேன். நான் விரும்பினால் இன்னுமொரு ராணியைக் கூட உருவாக்குவேன். இன்னும் சில நாளில் உன்னுடைய இனத்தையே முழுமையாக அழித்து விடுவேன். புரிகிறதா ராஜா. தேவை ஏற்படும் போது புதிய ஆணினத்தையே உருவாக்குவேன். தெரிகிறதா ராஜா.
ம்…ம்…ஆகா என்ன அற்புதம் ராணி. ஆகாயத்திலே என்ன அருமையான உபதேசம். என்றது ராஜா. ராணி தொடர்கின்றது.
என்னுடைய ஆட்சியின் முதல் கட்டமே சமத்துவமான குழந்தைப் பராமரிப்புத் திட்டம்தான். பாவம் மனிதன். எதியோப்பியாவிலே குழந்தைகளை வெறும் கொசுக்களுக்கு உணவாகக் கொடுக்கின்றானே? சமத்துவத்தைப் படிப்பதற்கு மனிதன் எங்களிடம் வரவேண்டும். என்னுடைய வீட்டிலே ஒவ்வொரு அறையின் அளவுத்திட்டமும் இம்மியும் பிசகாது. என்னுடைய தாதிமார் குழந்தைப் பராமரிப்பிலே உலகத்திலே அதியுயர் நிபுணத்துவம் பெற்றவர்கள். உலகின் ஒரே ஒரு சர்வரோக நிவாரணியான தேனைப் படைக்கவல்லவர்கள் என்னுடைய வேலைக்காரப் படையினரே. சற்றிலைற் தொடர்பாடலை விட என்னுடைய வேலைககாரப் படையினரின் தொடர்பாடல் மிகவும் தெளிவானது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எங்களால் ஆக்கப்பட்ட வலையமைப்பாகும் அது.
கூட்டுக்குடும்பத்திற்கும், தேவை ஏற்படும் போது பிரிந்து செல்வதற்கும், தேவையற்றவற்றை அழித்துவிடுவதற்கும் லெனினிற்கு சொல்லிக் கொடுத்தவர் நாங்கள். சோம்பேறியான போது எங்களுடைய ஆணினத்தையே அடியோடு வேரறுப்பவர்கள் நாங்கள் புரிகிறத ராஜா.
ம்….மேலே சொல்லுங்கள் என்றது ராஜா. ராணி தொடர்கிறது. சமத்துவம், சகோதரத்துவம், வினைத்திறன், விற்பன்னத்துவம் ஆகியவற்றை உச்ச நிலையில் கொண்டவர்கள் நாங்கள். ஆனால் மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம் எங்கள் குடும்பத்தை அதன் குதூகலத்தை புகைவைத்துக் கலைப்பதும். முடியாவிட்டால் தீவைத்துப் பொசுக்குவதும். நெஞ்சுப் பெலனுக்கு குஞ்சுவதையென்று சொல்லிக் கடைவாயில் பால்வழியக் கடித்துச் சுவைப்பதும். வேண்டுமானால் விவசாயமென்று சொல்லி எங்களை அடிமைப்படுத்துவதும்.
ஆணவம் பிடித்த மனிதனின் வேலையே என்று சிரித்த ராணி மேலே சொல்லியது. நீ இப்பொழுது என்னுடன் ஒட்டி உறவாடுகிறாய் உன்னை நான் வெட்டி விட முன்பு உனக்கு நான் இன்னும் சிலவற்றைப் போதிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. —
இடைமறித்த ராஜா. அப்போ ராமன் திரளபதியின் கதை முடிந்து விட்டதா ராணி என்று கேட்டது. அதற்கு ராணி முடிந்து விடும். மயக்கத்திலும் நீ விளக்கமாகக் கேட்க வேண்டும். கடந்த முறை எங்கள் கூட்டத்தைக் கலைத்தவர்கள் ஒன்றும் அறியாத ஏழைகள் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் அவர்கள் தொழிலிலே சிறப்புத் தேர்ச்சி அடைந்தவர்கள் போலல்லவா செயற்பட்டனர். நாங்கள் புதிய குடும்பத்தை உருவாக்கிய போதல்லவா அதுநடந்தது. அதைப்பார்த்து நான் உறைந்தே போய்விட்டேன்.
ராஜா நாம் விளிம்புக்கு வந்து விட்டோம் நீ விளிப்பாகக் கேட்கவேண்டும்.. பெரியதொரு போர் உள்ள பாலைமரம் ஒன்றை நாங்கள் கண்டு கொண்டோம். மரம் உள்ளவரை நாம் அதில் சீவிக்கவேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம்.
தட்டுத் தட்டாக வதையைவைக்கும் படி நான் கட்டளையிட்டேன். உன்னைப் போன்ற ஒரு ராமனைச் சந்தித்த பின்னாலேதான் அங்கு முட்டையிட நான் திட்டமிட்டேன். எங்களைக் கண்டு விட்ட அந்த வேடுவனை ஏமாந்த மனிதன் என்று நான் நினைத்தேன். ஆனாலும் எங்களைப் போன்றதொரு புதியகுடும்பத்தைத்தான் அவன் தேடி அலைந்திருக்கின்றான். என்பதை அறிந்த போது தான் ஏமாந்து விட்டவள் நான் தான் என அறிந்தேன்.
எங்களுடைய வேலைக்காரப்படை வினோதமாகப் படைத்துவிட்ட முட்டையிடப்படாத வெற்று வதைகளை சற்றும் உடையாமல் நிதானமாக் வெளியே எடுத்தான் அந்த மனிதன் எல்லா வதைகளிலும் கொண்டு வந்த சீனிக்கரைசலை நிதானமாக ஊற்றி நிரப்பி விட்டு, சுத்தமான தேன் கொஞ்சம் மேலாலே பரவவிட்டான். வதைகளை மிகக்கவனமாக மரத்தினுள்ளே
அடுக்கிவிட்டான். முகத்திலே புன்முறுவல்பரவ மீசையை முறுக்கிவிட்டான்.
என்னதான் நடக்கின்றது என்று பார்க்க பக்கத்து மரக்கிளையில் இரண்டு நாட்கள் தங்கியிருக்க நாங்கள் திட்டமிட்டோம்.
அடுத்தநாள் விடிந்தது. முதலாளியோடு அதே இடத்திற்கு அந்த வேடன் வந்தான். வெற்றிலையைச் சப்பி மந்திரம் சொல்லி மரத்தின் போரினுள் வாயிலிலே வைத்து ஊதிவிட்டான்.
எங்களின் பொல்லாத குத்துக்குப்பயந்து முதலாளி கறையான் புற்றுக்குப் பின்னாலே பதுங்கிவிட்டான். என்றாலும் என்னதான் நடக்கின்றதென்று எட்டிப்பார்தேன். வேடன் தேன்வதைகளை முதலாளியினுடைய பாத்திரத்திலே பிளிந்து கொண்டிருந்தான். பாவம் முதலாளி. மருந்துக்கும், சாமியினுடைய அபிசேகத்திற்கும் நல்லதேன் கொண்டு வருவதாக பலருக்கு அவர் வாக்குறுதி கொடுத்திருந்தார்.
அதையெல்லாம் ஏன் ராணி என்னிடம் சொல்லுகிறாய் என்றது ஆண்தேனீ. இதிகாசங்கள் ஒன்றாகினாலும் மனிதன் திருந்துவானா? இல்லவே இல்லை என்று கூறிய ராணி தொடர்கிறது.
நாங்கள் ஒரேவிதமான வீட்டைக் கட்டுகிறோம் ஒரே விதமான கொலைகளைச் செய்கிறோம். ஆனால் மனிதனோ பலமாடி கட்டுகிறான் பல விதமாகக் கொலையும் செய்கிறான். அப்போ நம்முடைய கதைக்கு முடிவுதான் என்ன ராணி என்று சற்று அலுப்பாகக் கேட்டது ஆண்தேனீ.
புன்முறுவல் செய்த ராணி பொறுமையாகக் கேள்! மரபு அணுக்களை மனிதனால் மட்டுமா மாற்றமுடியும். என்னுடைய போதனை உன்னுடைய அணுவிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். இனிமேல் நான் இடப்போகின்ற முட்டைகள் புதிய படையை மட்டுமல்ல புதிய பரிணாமக் கொள்கையினையும் வகுத்துவிடும். அவை நிச்சயம் மனிதனை மிஞ்சவேண்டும். அப்போது அவன் நமது சந்ததியைக் கெஞ்சவேண்டும் என்று சிரித்தராணி பாவம் மனிதன் சவத்திற்கு மட்டுமல்ல சாமிக்கும் கூட நாம் தேனெடுத்த எச்சில் இதழ்களைப் படைத்து மகிழ்கிறான். ஆனாலும் அவனுக்கு ஆறறிவு என்று சொல்லுகிறான். போதனை புரிகிறதா ராஜா இப்போ உனக்கு மயக்கம் தெளிகிறதா புது யுகம் படைக்கப் போவோமா?
கூடு வந்து விட்டது இருவரும் கூட்டினுள்ளே கூட்டாகப் போகமுடியாது. பிரிந்தவை இரண்டும் தேன்குடிக்க மெதுவாகச் செல்கின்றன.
– மறைமுகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஏப்ரல் 2003, கலாச்சாரப் பேரவை பிரதேச செயலகம், வாழைச்சேனை