இதயம் எப்படியிருக்கிறது?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 27, 2021
பார்வையிட்டோர்: 5,295 
 
 

(1930ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனது நண்பர் கோவிந்தன் ஆஸ்திகர். கொஞ்சம் பிடிவாத குணமுள்ளவர். சுயமரியாதைக் கட்சி அவருக்கும் பிடிக்காது. சமதர்மமென்றாலோ சிரித்துக் கேலி பண்ணுவார். ஒரு நாள் மத்தியானம் 12 மணிக்குச் சாப்பாட்டைப் பற்றி அவருக்கும், அவர் தகப்பனாருக்கும் வார்த்தை நடந்து கொண்டிருந்தது. அச்சமயம் நான் அவர் வீட்டுத் தெருத் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். நான் இருந்தது அவர்கட்குத் தெரியாது.

கோவிந்தன் (தம் தகப்பனாரிடம் மிக்க வருத்தத்தோடு சொல்லுகிறார்) “அப்பா நான்தான் வேலையில்லாதிருக்கிறேன். நீங்களாவது வீட்டில் அடுப்புப் புகையும்படி முன் ஜாக்ரதையாய் ஏதாவது ஒரு ஏற்பாடு செய்திருக்கக் கூடாதா?”

தந்தை: “என்ன செய்வது? இன்றைக்கு வேலை தருவதாகச் சொல்லி, அந்த மனிதன் திடீரென்று நாளைக்கு ஆகட்டுமென்று கையை விரித்து விட்டான். இன்று மத்தியானம் சமையற் செலவிற்கு அம்மா சமாளித்துக் கொள்ளுவாள் என்று நினைத்தேன். அவளுக்கும் தோதில்லை போலும். இராத்திரிச் சாப்பாட்டிற்கு எப்படியாவது ஏற்பாடு செய்கிறேன். அதுவரைக்கும் பல்லைக் கடித்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான். ”

என்று சொல்லி, “அடே அப்பா, நீ வெளியிற் போக வேண்டியிருந்தால் முகத்தைக் கழுவி, நெற்றி நிறைய நாமம் போட்டுக் கொண்டு போ. அப்போதுதான் பட்டினி முகம் தெரியாது” என்று வற்புறுத்தினார்.

பிறகு கோவிந்தன் நெற்றி நிறைய நாமமிட்டு வெளியில் வந்தார். என்னைக் கண்டு திடுக்கிட்டு, இந்நேரம் நீர் இங்கு தானா இருந்தீர் என்று கேட்டார். தமது வீட்டின் நிலை எனக்குத் தெரிந்து விடுவதில் அவருக்கு விருப்பம் இராதது சகஜம். நான் இப்போதுதான் வந்து கொண்டிருக்கிறேன் என்று, இரண்டு தடவை அழுத்திச் சொன்னேன்.

வெயிற் காலத்தில் நானும், அவரும் சாப்பிட்டவுடன் மூன்று மைல் தூரத்திலுள்ள காத்தான் பங்களாவுக்குப் போவது வழக்கம். புறப்பட்டோம்.

வழியில் சுயமரியாதை-சமதர்மம் இவற்றைப் பற்றிய வாதம், என் நண்பரின் முரட்டு மறுப்பு, எனது திகைப்பு, கொஞ்சம் மவுனம் இவற்றைத் தாண்டியதும் இன்றைய உலக நிலையின் ஒரு துளியை நாங்கள் பருக நேர்ந்தது.

வயற்புறத்திலிருந்த களிப்பு மண்ணையெல்லாம் ஒரு புறத்திற் குவித்துக் கொண்டிருந்தனர் சில தொழிலாளர். சேர்த்த மண்ணில் கிணற்று ஜலத்தை மொண்டு மொண்டு ஊற்றிச் சேறாக்கிக் கொண்டிருந்தனர் மற்றும் சிலர். அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் பதப்படுத்திய சேற்றைக் கட்டில் கொண்டு கற்கள் அறுத்துக் கொண்டிருந்தனர் வேறு சிலர். பதப்படுத்திய சேற்றுக் குவியலண்டையில் சில ஏழைத்தொழிலாளர் குனிந்து, முதுகைப் பலகைபோல் காட்ட அம்முதுகில் நிறையக் களிமண்ணை ஏற்றிக் கல்லறுக்கும் இடத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர் இன்னும் சில தோழர். நல்ல வெயிலுக்கிடையில் மணி 2 ஆயிற்று. மரத்து நிழலில் கஞ்சிக் கலயத் தோடு காத்திருந்த இவர்களின் பெண்டிர்களில் ஒருத்தி வீட்டிற் கைப்பிள்ளையைப் போட்டுவிட்டு வந்தேன் என்று கதறினாள். வயிற்றில் பசித்தீ எரிந்து கொண்டிருக்கும் விஷயம் அப்போதுதான் அத்தொழிலாளர்கட்கு ஞாபகம் வந்தது. உள்ளங்கைகளை மாத்திரம் ஒருவாறு சுத்தம் செய்து கொண்டு கஞ்சி குடிக்கத் தாவினார்கள். அவர்கள் தேகத்திலிருந்து வடிந்த வியர்வை நீரைவிடக் குறைந்த எடையுள்ள அந்தக் கஞ்சி கலந்த நீரையுண்டு அவர்கள் திருப்தி அடைய வேண்டியிருந்தது.

என் நண்பர் கோவிந்தன் இக்காட்சியை உருக்கமாகவே நோக்கினார்.

நான்-இந்த ஆபீஸ் எத்தனை மணிக்குக் கலையும் என்பது உமக்குத் தெரியுமா?

இந்தக் கேள்விக்கு அடியில் வருவதெல்லாம் என் நண்பருடைய பதில் : “ஆம். 6-30 மணி வரைக்கும் இவர்கள் வேலை செய்தாக வேண்டும். காலை 7 மணிக்கு இவ்வேலை துவக்கப்பட்டது. மாலையில் அவர் கூலி 6 அணாதான். நாளைக்கு இந்த வேலையும் அவர்கட்குக் கிடைக்காமற் போக லாம். கிடைக்காவிடிற் பெண்டுபிள்ளைகள் சகிதம் பட்டினி தான். இவர்கட்கு வீட்டு வசதியோ, சுகாதார வசதியோ, பஞ்சம் இவ்வளவும் உண்மை. இது பற்றி நீர் என்ன சொல்ல வருகிறீர்?”

“பொது நன்மையை முதலாளிகள் வசப்படுத்திக் கொண்டதுதானே இவர்களின் இவ்விதத் துன்பத்திற்குக் காரணம்” என்று நான் கேட்டேன்.

நண்பர்:- இவர்கட்குத் துன்பமா? அதோ பாரும் அவர்களின் சந்தோஷ ஆரவாரம்!

உண்மையில் அவர்கள் தமக்குள் மாமன், மைத்துனன் முறை கூறிச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆயினும் அவர்களின் உள்ளத்தின் அடித்தளம்?… இதை என் நண்பருக்கு எவ்வாறு காட்ட முடியும்.

நாங்கள் நடந்தோம். மற்றும் வழியில், இடையிற் கோவணத்தோடு வெயிலின் களைப்போடு மூங்கில் வெட்டுவோரும், முழங்காலளவு வயற்சேற்றில் நீந்தியபடி ஏரடிப்போரும், தலை நட்டு முதுகைக் குனித்தபடி வரப்புத் திருத்துவோரும், ஏற்றம் இறைப்போரும், பாத்தி கட்டுவோரும் தங்கள் அபிலாஷை லக்ஷியம் அனைத்தையும் அரை வயிற்றுக்கூழிற் புதைத்து விட்டு மீதியுள்ள உடலால் ஒயாது உழைத்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கோரிடத்தில் ஆற்றுப்பாலம் கட்டிக் கொண்டு இருக்கும் கருமார், கொல்லூற்றுக்காரர், தச்சர் ஆகியோரின் உடலும், தோளும் பம்பரம்போல் ஆடிக் கொண்டிருந்தன. அக்காட்சியைக் கோவிந்தனிடம் காட்டி இந்தப் பாலத்தைக் கட்டிக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்ட முதலாளிக்கு இந்த பாலம் கட்டி முடியும் வரை மாதம் ஒன்றுக்கு 1000 ரூபாய் வருமானம் வருமென்று நினைக்கிறேன். இவ்வொப்பந்தத்தைத் தொழிலாளரே நேரே அடைந்திருந்தால் அவர்கட்குத் தினம் 1-க்குக் கூலி சராசரி 4 ரூபாய் கட்டக் கூடும். அந்த 4 ரூபாயில் 2 ரூபாயோ அவர்களுக்குப் போதும் என்று நினைத்தால் அவர்கள் தினம் 4 மணி நேரம் வேலை செய்தால் போதுமானதாயிருக்கும். ஏதோ அசந்தர்ப்பத்தால் ஒருவனிடம் முதல் சிக்கி விட்டால் அதே காரணத்தால் பொதுமக்களிடம் ஏழ்மை உண்டாகி விடுகிறது. அதன்பிறகு முதலாளிக்கு முதல் வலுப்பது தவிரத் தொழிலாளிக்கு எந்த வகையிலும் முன்னேற்றம் இருக்க வழியில்லை. இதே ரிதீயில் இவ்வுலகம் நடைபெற்றால் உலகில் எதிர்கால நிலை, மக்களை உயிரொடு புதைக்கும் மயானமாகிவிடும் என்பதை நீர் ஆக்ஷேபிக்கிறீரா?

இதற்குப் பதிலாக என் நண்பர் அதோ பாரும் அத்தொழிலாளர்கள் சிட்டுக்குருவிகள்போல் உற்சாகமாக வேலை செய்கிறார்கள் என்று சொன்னார். நாங்கள் போய்ச் சேர வேண்டிய பங்களா இன்னும் சற்றுத் தூரத்தில் இருந்தது. என் நண்பர் முகத்தில் கொஞ்சம் சுருக்கம் ஏற்பட்டது.

நடை ஓடவில்லை. வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை. இது மாத்திரமன்று. ஓர் வரப்பை விட்டு இறங்கும்போது அவர் விழுந்ததற்குக் காரணத்தையும் அவர் என்னிடம் மறைத்துச் சொல்லி மழுப்பினார். நாங்கள் பங்களாவை அடையும்முன், பங்களாவில் எமக்கு இடம் அகப்படாது என்று தெரிந்துவிட்டது. வேலை நிறுத்தம் செய்த ஆலைத் தொழிலாளர் பங்களாவில் நிறையக் கூடியிருப்பதை வழியிற் கேள்விப்பட்டோம்.

எனது நண்பர் எதிரில், எனக்கும் நகரத்திற் சென்று சில்லரை வேலை செய்து விட்டு வீடு திரும்பும் சில ஏழைத்தோழர்களுக்கும் கீழ்வரும் சம்பாஷணை நடந்தது.

நான்:- இன்றைக்கு நீங்கள் தலைக்கு என்ன சம்பாதித்தீர்கள்?
ஏழைகள்:- 4 அணா வீதம் சம்பாதித்தோம்.
நான்:- உங்கட்குக் காலுக்குச் செருப்பிலையா? குடை யில்லையா? உங்கள் சரீரம் இளைத்துப் போகக் காரணமென்ன? நீங்கள் நோய் நொடியின்றி வாழ முடிகிறதா? உங்கள் வாஸஸ்தலம் எப்படிப்பட்டது.

அந்தோ நண்பரே பார்த்தீரா! கடவுளும், கடவுள் மக்களை முன்னேற்றுவிக்கச் செய்த மதமும், அந்த மதம் கற்பித்த மூட எண்ணங்களும் மக்களை ஏற ஆசைப்படவும் விடாது குறுக்கிடுகின்றன என்றேன். என் நண்பருக்கு இந்த வார்த்தையில் ஒன்றும் காதில் விழவில்லை. அவர் மார்பு வலிக்கிறது, மார்பு வலிக்கிறது என்று அலறினார். உஷ்ணம் அதிகப்பட்டால் தமக்கு மார்புவலி வந்துவிடும் என்றும் நலிந்து கூறினார். கோவிந்தனைக் கையில் அணைத்தபடி தேறுதல் கூறிப் பங்களாவுக்குள் ஓர் அறையிற் சேர்த்தேன். கோவிந்தனுக்குச் செய்ய வேண்டிய சிகிச்சையென்ன? உணவு தரவேண்டியதைத் தவிர வேறொன்றுமில்லை என்பது தான் என் எண்ணம். அதற்காகத்தான் ஓடினேன். மாலைப்போது மணி நான்கும் ஆகிவிட்டது.

இதற்குள் பங்களாவில் நிறைந்திருந்த தொழிலாளரிடமும் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது. தொழிலாளர் அன்று ஆலைச்சொந்தக்காரரிடமும் அத்துமீறி நடந்து விட்டார்கள், அதனால் போலீஸ் அதிகாரி குற்றவாளிகளைத் தேடிக்கொண்டு அங்கு வந்தார். நிச்சயம் பொதுஜன அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டே இருக்கும். பெருங்கலகம் உண்டாகித்தான் இருக்கும். காருண்யமுள்ள சர்க்கார் நிலையில் பெருங்குழப்பம் உண்டாகித்தான் இருக்கும். இல்லாவிட்டால் பொதுமக்கள் நலத்தை மாத்திரம் தனியாக கருதித் தியாகம் புரியும் சர்க்கார்ப் பிரதிநிதி போலீஸ் அதிகாரி அங்கு வந்திருக்க முடியுமா?

தொழிலாளிகளான வேலாயுதன், கந்தன் ஆகிய இருவரைப் போலீஸ் அதிகாரி கைது செய்தார். ஆலை முதலாளிக்கு விரோதமாகத் தொழிலாளர்களைக் கலகம் செய்யும்படி தூண்ட உத்தேசித்தற்காகத்தான் அந்த இருவர் மீது ஏற்பட்ட குற்றம்.

இருவரையும் போலீஸ் அதிகாரி கைது செய்துவிட்டு, மற்றத் தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்துபோக வேண்டியதற்காகப் பயமுறுத்தும்போது, வேலாயுதன் முதலிய இருவரும் செய்த பெருங்குற்றத்தை விசாரித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். என் கையிற் கிடைத்த கொஞ்சம் பாலையும், வாழைப்பழங்களையும் ஏந்தி என் நண்பரை நோக்கித் துரிதமாக அந்த வழியாக நான் வரும்போது, ஒரு அதட்டல் வார்த்தை என்னை வழி மறித்தது. என் பெயர் சுப்பன் என்று விடை சொன்னேன். மீண்டும் போலீஸ்காரர் உன் பெயர் விநாயகம் அல்ல? கலகத்தைத் தூண்ட உத்தேசித்தவனல்லவா நீ? வேலாயுதன் கூட்டாளியல்லவா நீ? என்று கேட்டார். நல்ல வேளையாக எனக்கு வந்த சிரிப்பை மற்றொரு துக்கம் தடுத்து விட்டது. ஐயா கலகம் செய்யத் தூண்டும் உத்தேசத்தை எவ்வாறு நீங்கள் கண்டு அறிந்தீர்கள் என்கிறேன்.

போலீஸ்: இங்கிலீஷ் ஆட்சி “ஒருவனுடைய இதயத்தைத் தடவி ஆராயும் வலிமையுடையது” தெரியுமா?

நான் தங்களைப் பரிதாபமாகக் கெஞ்சுகிறேன். ஒவ்வொருவனுடைய இருதயத்தையும் இதுவரைக்கும் தடவிப் பார்த்ததில் சர்க்கார் எதிர்ப்புக்கள் தட்டுப்படுவது தவிர அதன் பக்கத்திலேயே ஏழைமக்களின் பசித்துன்பம் தட்டுப்பட்டதே கிடையாதா? அல்லது உழைப்புக்குத் தக்க பயன் கிடைக்காது. கொதிக்கும் இதயத்தை, உடையும் நெஞ்சத்தை உணரும் உணர்ச்சி அற்றுப் போனீர்களா?

உடனே நான் என் நண்பரை நோக்கி ஓடினேன். போலீஸ் அதிகாரி என்னைப் பின்பற்றி வருவதை நான் உணர்ந்தேன்.

“ஐயோ எனக்கு ஆகாரம் ஏன்? நான் என் இருதயம் வெடித்து விட்டதாக உணருகிறேன். நான் மத்தியானம் சாப்பிட வழியில்லாமற் போயிற்று! நீர் என் திருநாமம் மற்றும் எனது வெளிச் செயல் இவற்றை மாத்திரம் அறிந்தீர். என் உள்ளத்தில் கிடந்த பசித்துன்பத்தையும், அதனால் நான் கண்ட அவமானத்தையும் நீர் எவ்வாறு அறிந்திருக்க முடியும்? அந்தோ நண்பரே, உலகம் இயங்குகிறது. உலக மக்கள் இயங்குகின்றனர். ஆயினும் அவ்வியக்கம் சந்தோஷத்துக்குரியது போல், சுறுசுறுப்புடையது போல் தோன்றலாம். இன்றைய உலகின் உட்புறம் எத்தனை கோணங்கள், எவ்வளவு அவமானம், தற்கொலை, அகால மரணம் அனைத்தும் சவக்குழியை நோக்கி எவ்வளவு விரைவாய்ப் போய்க் கொண்டிருக்கின்றன! ஆ! மார்பு…”

நண்பரே தேறுதல் கொள்க! என்றேன். இதற்குள் போலீஸ் அதிகாரியும் மற்றவரும் நண்பருக்குப் பாலைக் கொடுக்கச் சொன்னார்கள். என் நடுக்கத்தைச் சமாளித்துக் கொண்டு பாலைத் தூக்கினேன்; என் முயற்சி பயனற்றதா யிற்று. என் நண்பர் பிரேதமானார்.

முதலாளியுலகமே! மக்களின் நன்மைக்காக ஆட்சி செய்வதாய்க் கூறும் ஆட்சி நாடகங்களே! ஏழைத் தொழிலாளர் உள்ளத்தின் சாயலை என் நண்பரின் கதியில் அறிகிறீர்களா?

– உண்மை 14-8-71 மலர்-2 இதழ்-8, ஏழைகள் சிரிக்கிறார்கள், 1930, பூம்புகார் பிரசுரம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *