(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வியர்த்து விறுவிறுத்துப்போய், ரவி காரியாலயத்திற்குள் நுழையும்போது வழக்கம்போல் மணி இரண்டு பத்து ஆகி விட்டிருந்தது. வெயிலில் நடந்து வந்ததால் உள்ளே ஒரு இருட்டாகத் தோன்றியது.
அவசரம் அவசரமாய் மாடிப் படிகளில் தாவி ஏறி நெடு நீளத்தில் கிடந்த மாடிப் பிரகாரம் வழி நடந்து, உதவி என்ஜினியர்களின் அறைக்குள் நுழையும்போது முதலில் உட்கார்ந்திருந்த சாமி,
‘என்ன ரவி… நீ டிரான்ஸ்பர் கேட்டிருந்தியா?’
என்று முகத்தில் முழுக்க முழுக்க வியப்புக் குமிழியிட கேட்டபோது இவன் அடிவயிறு பகீரென்றது.
‘என்ன…?’ என்று இவன் வாய் அசைந்ததேயானாலும் வார்த்தை நாக்கின் அடியில் ஒட்டிக்கொண்டுவிட்டது.
சாமி, ‘உட்கார்’ என்றபோது யந்திர ரீதியில் அவர் அருகில் கிடந்த நாற்காலியில் இவன் உட்கார்ந்தான்.
‘உனக்கு டிரான்ஸ்பராமே’ என்று தெளிவுபடுத்தியபோது, இவனுக்கு ஒரு நொடிப்பொழுது தன் மூச்சே நின்றுபோய்விட்டது போலிருந்தது.
இப்போது கொஞ்ச நாட்களாக அடிக்கடி உடம்பு படாமலாகி விடும் அவஸ்தை…
பாதியில் நிற்கும் புது வீடு கட்டும் வேலை…!
குழந்தைகள் படிப்பு…!
இப்படி அது இதுவென்று எதுவல்லாமோ ஞாபகம் வந்து தொலைக்கிறது.
அந்த அறைக்குள் உட்கார்ந்திருக்கும் ஏனைய உதவி என்ஜினியர்கள் அசல், போலி கவலைக் குறிகளுடன் தன்னைப் பார்ப்பதை உணர்கையில் இவனுக்கு என்னமோ செய்கிறது.
மேலே ஒன்றும் பேசாமல் எழுந்து இரண்டு மேஜை தள்ளிக் கிடந்த தன் இருக்கையில் வந்து உட்கார்ந்தான்.
மேலே சுழன்று கொண்டிருக்கும் மின் விசிறி காற்றில் மேஜை மீது பேப்பர் வெயிட்டின் கீழ் படபடத்துக் கொண்டிருந்த டைப் பண்ணிய தாளை உருவி எடுக்கும்போது தன் நெஞ்சுக்குள் கீழே கீழே அழுத்திக் கொண்டே போகும் ஒரு பாரத்தை இவனால் நன்கு உணர முடிகிறது.
இவன் கீழ் ஜூனியர் என்ஜினியராக வேலை பார்க்கும் சரத்குமாருக்கு வேலை உயர்வு கொடுத்து இவன் இடத்தில் நியமிக்க, இவனைப் பத்து மைல் தொலைவில் நகரின் ஒதுக்குப்புறத்தில் எந்தச் சௌகரியமும் இல்லாத, அதே சமயம் சகலவித அசௌகரியங்களும் ஒருங்கே அமைந்த ஒரு ஆபீஸில் இடமாற்றம் செய்திருப்பதைத் தெரிவிக்கும் உத்தரவு…
‘பரவாயில்லை… இதே ஊர்தானே!…’ என்றான் பக்கவாட்டில் இருந்த ஒரு சக ஊழியன்…
‘ஹார்ட்டி கன்க்ராஸ்… பீல்ட் ஆபீஸுன்னா பரம சுகம்… இங்கே மாதிரி பெரிய ஆபீஸர்களின் கெடுபிடி ஒண்ணும் இருக்காது…’
இவனுக்குச் சுள்ளென்று ஆத்திரம் மூக்கைப் பொத்துக்கொண்டு வந்தது.
‘மரியாதைக்கி அந்த வாழ்த்தை வாபஸ் வாங்கு… வேணு. முன்னால் அனுதாபம் தெரிவி, ஏற்றுக் கொள்கிறேன்…’ என்று இவன் சத்தம் போட்டபோது தன் மனத்தில் கொழுந்து விட்டெரியும் கோபாக்கினியின் ஒரு சதவிகிதச் சூட்டைக்கூட அந்த வார்த்தைகளில் ஏற்ற முடியாத தன் அசக்த நிலைமை, அவனை இன்னும் மனம் குமுறச் செய்தது.
ஆனால், அவன் முக பாவத்திலிருந்து எதிரிலிருந்த ஜானுக்கு அவன் அகத்தைக் காண முடிந்திருக்க வேண்டும். ‘சாரி ரவி… தப்பாக நினைச்சுக்காதே – நீ ரிக்வஸ்ட் பண்ணியிருப்பேன்னு நான் நினைச்சேன்’ என்றான் ஜானி ஒரு குற்றவாளி தொனியில். ‘நீ எப்படி அப்படி நினைக்கலாம்! வீட்டுப் பக்கத்தில் இருக்கும் இந்த ஆபீஸ் வேண்டாம். பத்து மைல் தொலைவில் இருக்கும் குடிக்கப் பச்சைத் தண்ணி கிடைக்காத, இங்கே கிடைச்சுக்கிட்டிருக்கும் ஐம்பது ரூபாய் டெக்னிக்கல் அலவன்ஸும் அங்கே இல்லை. அந்த ஆபீஸுக்கு டிரான்ஸ்பர் ரிக்வஸ்ட் பண்ண எனக்கென்ன பைத்தியமா?’
மேஜை மீதிருந்த டெலிபோன் கதறியது. இவன் கையில் எடுத்தான்.
‘இது அஜீத்; எக்ஸிக்யூட்டிவ் என்ஜினியர் உனக்கு டிரான்ஸ்பராமே. கன்க்ராஜுலேஷன்ஸ்…’ என்ற அவர் வார்த்தைகளைக் கேட்டதும் அசாத்தியமான கோபத்தில் இவன் உச்சி முதல் உள்ளங்கால் வரை கிடுகிடுவென்று நடுங்கத் தொடங்கிவிட்டது. என்ன எப்படிப் பேசுவது என்றுகூடத் தெரியவில்லை. தன் மேல் ஆபீஸர் எக்ஸிக்கூட்டிவ் என்ஜினியர் ராகவன் நாயரின் அறையில் உட்கார்ந்திருக்கும் இன்னொரு எக்ஸிக்கூட்டிவ் என்ஜினியர்தான் இந்த அஜீத். ராகவன் நாயர் சொல்லித்தான் இவர் போன் செய்கிறார். போனில் அஜீத் தன்னை டயல் பண்ணிப் பேசுவதை கண்ணாடிக்குள் சிரிக்கும் விஷ விழிகளால் பார்த்து ரசித்தவாறு ராகவன் நாயர் உட்கார்ந்திருக்கிறார். இவற்றைக் கற்பனைப் பண்ணிப் பார்த்த போது இவன் இன்னும் உணர்ச்சி வசப்பட்டான். சகிக்க முடியாத ஆத்திரத்தில் உடம்பு உதறல் எடுத்தது.
‘எதுக்கு சார் இப்படி ஆளைப் போட்டுக் கொல்லுறீங்க. சும்மா இருந்த மனுஷனைப் பிடிச்சு டிரான்ஸ்பர் செஞ்சுட்டு இப்படிக் கிண்டிப் பார்ப்பதுதான் பண்பா? உங்களைத் திடீரென்று இப்படி, முன் பின் தெரிவிக்காமல் உங்களுக்குக் கொஞ்சமும் பிடிக்காத இடத்துக்கு டிரான்ஸ்பர் பண்ணிவிட்டு, யாராவது கூப்பிட்டு கன்கிராஜுலேட் செய்தால் எப்படியிருக்கும்?’
‘அப்படீன்னா உங்களுக்கு வில்லிங் இல்லையா…’
‘வில்லிங் என்கிட்டே யாரு கேட்டாங்க.’
அதுக்கு அவர் பதில் செல்வதைக் கேட்கப் பிடிக்காமல் இவன் போனைக் கீழே வைத்தான்.
இப்போது இவன் கீழ் சரத்குமாரின்கூட வேலை பார்க்கும் இன்னொரு ஜூனியர் என்ஜினியரான ஆசாரி சிரித்தவாறு வந்தான்.
‘என்ன சார்… சாருக்கு டிரான்ஸ்பராமே…? சரத்குமாரை உங்க பிளேசிலே போட்டிருக்காங்களா?’
‘ஆமா இங்கே இதெல்லாம் நடக்கும் – தோளில் இருந்து கொண்டே கொஞ்சம் கொஞ்சமாய் செவியை கடிச்சுத் தின்னும் கைங்கரியம்…’
‘சார் அன்னைக்கே நான் சொன்னேனில்லே; மூணு நாலு மந்திரிகள் இவனுக்கு வேண்டி கூப்பிட்டுச் சொல்லியிருப்பதாக…!’
‘அவன் இந்த ஊரில் ஒரு பிளேஸுக்கு ட்ரை செய்கிறான்னு தெரியும். ஆனால், இதே ஆபீஸில் என்னை இப்படி நெட்டித் தள்ளிவிட்டு வந்துவிடப் போறான்னு எனக்குத் தெரியவே தெரியாது.’
‘சார் அவன் கல்யாணம் பண்ணியிருப்பது சமதர்ம புஷ்பம் பத்திரிகை ஆசிரியரின் மகன் பெண்டாட்டியின் தங்கச்சியை! இந்தக் காலத்தில் பத்திரிகைக்காரர்களை எந்த மந்திரியும், ஆபீஸரும் விரோதித்துக் கொள்ளுவாங்களா? இவன் மாமனார் பெரிய முந்திரிப் பருப்பு தொழிற்சாலையின் முதலாளி. இந்த ஆபீஸில் காரில் வந்துபோகும் ஜூனியர் என்ஜினியர் சரத்குமார் மட்டும்தானே சார்.’
‘எப்படியானால் எனக்கென்ன! ஆனா இப்படி கூடவே இருந்து என்னை அவன் வஞ்சிப்பான்னு நான் நினைக்கவே இல்லை.’
ஆசாரி, செக்ஷனுக்குப் போய்விட்டான். இவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை. இனி என்ன செய்வது? ஆர்டர் ஆகிவிட்டது! இனி யார்கிட்டே போய் முறையிடுவது? நான் முறையிட்டால் அதுக்கு செவி சாய்ப்பவர்கள் யாராவது இருந்தால், இப்படி ஒரு காரியம் இவ்வளவு ரகசியமாக திடுதிப்புண்ணு நடந்திருக்குமா?’
மறுபடியும் போன் அடித்தது.
‘இது நெல்சன், ரவியா?’
‘ஆமாம்.’
என்கிறபோது நெல்சன் என்ஜினியர்ஸ் அஸோஸியேஷனின் ஒரு செயற்குழு உறுப்பினர் என்பதும் அவனுக்கு நினைவு வந்தது.
‘டிரான்ஸ்பர் இல்லையா?’
‘ஆமா… உம்… என்ன செய்ய! இது நம் அஸோஸியேஷனும் சேர்ந்துகொண்டு செய்த சதிதானா?’
‘இல்லை ரகசியமாக இருக்கட்டும்; சூப்ரண்டிங் என்ஜினியரின் வேலை. அவர்தான் பிடிவாதமாக நின்னு உங்களை டிரான்ஸ்பர் பண்ணிவிட்டு உங்க இடத்தில் சரத்குமாரை ப்ரொமோட் செய்து, போஸ்ட் பண்ண சீப் என்ஜினியரைத் தூண்டினாராம்.’
‘அப்படியா…! அப்போ இந்தப் பாபத்தில் நம் அஸோஸியேஷனுக்குப் பங்கில்லையா?’
‘இல்லை… இப்போ ஆர்டர் பார்த்துத்தான் எங்களுக்கும் தெரிய வந்தது. சாதாரணமாக, என்ஜினியர்களின் இட மாற்றம் பற்றி நம்
அஸோஸியேஷனிடம் கலந்தாலோசிக்காமல், சீப் என்ஜினியர் உத்திரவில் இப்போதெல்லாம் கையெழுத்துப் போடுவது கிடையாது. ஆனால், இது மட்டும் மிக ரகசியமாக நடந்திருக்குது!’
‘எது எப்படியோ! இந்த விஷயத்தில் எனக்கு க்ரீவன்ஸ் உண்டு. சரத்குமாருக்கு இதே ஊரில் தந்தே தீர வேண்டும் என்றால், இப்போ என்னை டிரான்ஸ்பர் செய்திருக்கும் சவக்கை ஆபீஸில் அவனைப் போட்டிருக்கலாமே. இப்படி ஒருத்தருக்கு வேலை உயர்வு கொடுத்து, அதே ஆபீஸில் போட, புனல்புரத்தில் இருந்து இங்கே வந்து ஆறு மாசம்கூட ஆகியிராத என்னை வெளியே நெட்டித் தள்ளியது பெரிய அநியாயம்.’
‘வாஸ்தவம்’ என்று சொல்லிவிட்டு அவன் போனை வைத்தான். இன்னும் எதை எதையெல்லாமோ சத்தம் போட்டுச்சொல்ல
வேண்டுமென்ற ஒரு ஆவேசம் – மனசுக்குள் பொருமி, பொருமி வந்து கொண்டிருப்பவைகளை முழுதையும் கொட்டித் தீர்க்க முடியவில்லையே என்ற ஒரு ஆதங்கம்.
திடீரென்று, தன்னைச் சூழ்ந்து இருக்கும் இவர்கள் அனைவரிடமிருந்தும் அந்நியப்பட்டுப்போய், தான் மட்டும் தன்னந்தனியே
விடப்பட்டிருப்பதாய் அவனுக்குத் தோன்றியது. தன் பக்கம் நியாயம் இருந்தும் தனக்காகப் பேச ஒரு சக ஊழியன்கூட இல்லையே என்று அவனுக்கு எரிச்சலாக வந்தது.
சரத்குமார் சிரித்தவாறு அந்த அறைக்குள் ஏறி வருவதைக் கண்ணுற்றபோது இவன் இதயம் படக் படக் என்று அடித்துக் கொண்டது. உணர்ச்சி வசப்பட்டு எக்கச்சக்கமாக நடந்துகொண்டு விடுவோமோ என்று அவனுக்குப் பயமாக இருந்தது. ஆனால், அவன் பக்கத்தில் வந்ததும், ‘கன்க்ராஜுலேஷன்ஸ் ஃபார் யுவர் புரொமோஷன்’ என்று வாழ்த்தத்தான் இவனால் முடிந்தது.
‘இல்லே. என்னைப்பற்றி உங்களுக்கு என்னமோ மிஸ் அன்டர்ஸ்டேன்டிங் இருப்பதுபோல் தோணுது. நான் இந்த பள்ளிகொண்டபுரத்தில்தான் ஒரு பிளேஸ் கேட்டேனே தவிர, குறிப்பாக இந்த ஆபீஸிலேயே வேணுமுன்னு கேட்கல்லே.’
பக்கத்தில் இருந்த ரங்கமணி சொன்னான். ‘அப்படின்னா ரவி, நம்ம சூப்பரண்டிங் என்ஜினியரை மீட் பண்ணி சொல்லிப் பாரேன்; சரத்குமாருக்கு இதே ஆபீஸில் வேலை வேண்டுமென்பதில்லை; இதே ஊரில் வேறு ஏதாவது ஆபீஸில் கிடைத்தாலும் போதுமென்று’. அப்படித்தானே அவன் சொன்னான்?
சரத்குமார் ஓர் அசட்டுச் சிரிப்பு சிரிக்கிறான். நெல்சன் போனில் சொன்னது ரவிக்கு ஞாபகம் வந்தது. சூப்பரென்டிங் என்ஜினியரை நேரில் சந்தித்து கேட்டே விடுவது என்று மனசுக்குள் ஒரு குரல் எழும்பி வந்து சொன்னது. அவன் சடக்கென்று எழுந்து நடந்தான்.
அவன் கீழ் ஊழியர்கள் உட்கார்ந்திருக்கும் செக்ஷனைக் கடக்கும்போது, அவர்கள் விழிகள் தன்மீது பாய்வதை உணருகையில், அவனுக்கு அவமானமாக இருந்தது. தன் கீழ் ஊழியன் ஒருவனை வேலை உயர்வு செய்து நியமிக்க, தன்னை நீக்கம் செய்வது என்பது தன் சுயமரியாதைக்கே ஒரு சவால் அல்லவா…! தன்னைவிட இந்த பிளேஸுக்கு அவன்தான் தகுதியானவன் என்று பிரகடனம் செய்து இருக்கிறார்கள். இதற்கெல்லாம் தான் ஒரு கெஜட்டட் ஆபீஸர்… இருந்தும் ஒரு நாயை விரட்டியடிப்பது போல் இப்படிச் செய்து விட்டிருக்கிறார்களே…! அப்படியென்றால் கீழ்ச் சிப்பந்திகளின் கதி?
சூப்பரென்டிங் என்ஜினியர் ராஜசேகரன் நாயரின் அறை மிகவும் அமைதியாக இருந்தது. ராஜசேகரன் நாயர் புன்முறுவல் பூத்தபடி வரவேற்றார். அன்றுவரை இல்லாமல், இப்போது அவர் வழுக்கைத் தலையும், கண்ணாடிக்குள் தெரியும் விழிகளும் ஏதோ ஒரு சினிமா வில்லனைப் போன்ற ஒரு பிரமையை இவனது மனசுக்குள் எழுப்பின. ‘சார்…’ என்று அவன் பேச ஆரம்பிக்கும் முந்தியே ‘உனக்கு, டிரான்ஸ்பர் இல்லையா?’ என்றார் அவர் மிகுந்த அனுதாபத்துடன்.
‘சாருக்கு நேரமே தெரியுமா?’
‘இல்லை; எனக்குத் தெரியாதே. உம்… என்ன செய்ய? டஸ் இன் மேட்டர்.’
‘அப்போ சாருக்கு சம்மதம் என்றால் எனக்குப் பிறகு ஒன்றும் சொல்வதற்கில்லை’ என்று சொல்லும்போது, ‘உங்களுக்கு என்னை வேண்டாமென்றால், உங்கள் கீழ் வேலை செய்தே தீர வேண்டும் என்று கெஞ்சும் அளவுக்கு என் சுயமரியாதை என்னைவிட்டுப் போய்விடவில்லை’ என்று அவன் மனம் தனக்குத்தானே பேசிக் கொண்டது.
‘ஆனாலும் இது பெரிய கஷ்டம் சார்… நான் இந்த ஊருக்கு மாற்றலாகி வந்து ஆறு மாசம்கூட ஆகவில்லை…’
‘சர்வீஸில் இப்படியெல்லாம் நடக்குது. எனக்கும் இப்படித்தான் திடீரென்று ஒருநாள் டிரான்ஸ்பர் ஆயிற்று. சர்க்கிள் ஆபீஸில் இருந்து இங்கே… ஆர்டரைப் பார்ப்பது வரையிலும் எனக்கு எந்த முன் தகவலும் இல்லை!’
இந்த ஆபீஸிலிருந்து நான்காவது கட்டிடம் தான் சர்க்கிள் ஆபீஸ்!
அவன் மெல்ல அந்த அறையிலிருந்து வெளியேறினான். வெளியில் வந்ததும், தன் இருப்பிடத்துக்குப் போவதா, இல்லை கீழேபோய் என்ஜினியர்கள் அஸோஸியேஷன் செயலாளரை நேரில் சந்தித்துக் கேட்பதா என்று உள் போராட்டம். எதுக்கும் வெளியேறும் முன், பார்க்க வேண்டியவர்கள் யாவரையும் பார்த்து, கேட்க வேண்டியதை எல்லாம் கேட்டு விடுவதே சரி என்ற ஒரு தீர்மானத்துடன் அவன் மாடிப் படிகள் வழியே கீழே இறங்கினான்.
அஸோஸியேஷன் செயலர், உதவி என்ஜினியர் நம்பியாரும், நெல்சனும் ஒரே அறையிலேயே உட்கார்ந்திருந்தார்கள். இவனைப் பார்த்ததும், ‘என்ன டிரான்ஸ்பராமே…? நாங்க யாரும் அறியவே இல்லையே… உம்… பரவாயில்லே… இந்த ஊரில்தானே…’ என்று சொன்னான் நம்பியார்.
‘சார்… ஆனாலும், இது ரொம்ப கஷ்டமாகிவிட்டது. ஆர்டரைப் பார்த்ததும் எனக்கு ஒரே ஷாக்கு. இந்த ஊருக்கு நான் மாற்றலாகி வந்து ஆறு மாசம்கூட ஆகல்லே… அதுக்குள்ளே இன்னொரு மாற்றல்… அதுவும் இதே ஆபீஸில் என் கீழ் வேலை பார்க்கும் ஒருத்தனைப் ப்ரமொஷன் கொடுத்துப் போஸ்ட் பண்ணி!’
அவனைச் சொல்லி முடிக்க விடவில்லை – நம்பியார் ‘நீங்க அப்படி ரூல் சொல்ல வேண்டாம். அப்படியென்றால் இந்த ஊரிலிருந்து புனல்புரத்துக்குப்போய் ஒரு வருஷத்துக்குள் உங்களுக்கு இங்கு டிரான்ஸ்பர் தந்தது எப்படி சரியாகும்? உங்க அப்பா இறந்து போனார் என்றால், ஒரு மாசத்துக்கு வேண்டுமென்றால் லீவ் எடுத்துவிட்டு மறுபடியும் அங்கேயே போய் நீங்க ஜாயின்ட் பண்ணியிருக்கணும்… நீங்க அந்தச் சாக்கில் இங்கே வந்துட்டீங்க…’
…இப்படிப் படபடவென்று நம்பியார் என்னென்னமோ பேசிக் கொண்டே போனான்.
இதே ஊரில் ஜூனியர் என்ஜினியராக வேலை பார்த்த தனக்கு வேலை உயர்வு வந்தபோது, தன்னை இங்கே போஸ்ட் பண்ணவில்லை. மாறாக இங்கிருந்து ஐம்பது மைல் தொலைவில் ஒரு மலைப் பக்கம் இருந்த புனல்புரத்தில்தான் நியமித்தார்கள். பிறகு அங்கிருந்து இங்கே இடமாற்றம் தந்ததுகூட, தன் அப்பா திடீரென இறந்து போய் விட்டதால் குடும்பப் பொறுப்பை ஏற்க, தானிங்கே உள்ளூரிலேயே இல்லாமல் முடியாது என்ற காரணத்தினால்! ஆனால் இப்போது இந்த சரத்குமாருக்கு, யாரும் சாகாமலேயே இதே ஊரில் இதே ஆபீஸில் வேலை உயர்வு கொடுத்து நியமித்து இருக்கிறார்களே என்றெல்லாம் மனசில் வார்த்தைகள் சூடு பிடிக்கத் தொடங்கியும், ஏனோ வாயைத் திறந்து நம்பியார்கிட்டே அப்போது வாதிட்டுக் கொண்டிருக்க அவனுக்குத் தோன்றவில்லை.
‘உங்கள் எஸ். இராஜசேகரன் நாயர் சாருக்கு, அண்ணைக்கு ஒரு நாள் அறையில் ஆபீஸ் சமயத்தில் நீங்களும் உம்மரும் மற்ற ஏயீஸின்கூட கூட்டம் கூடி சத்தம் போட்டுப் பேசி கும்மாளம் அடிச்சதைப் பார்த்த போதிலிருந்தே உங்க ரெண்டு பேர்களின் மீதும் அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை. அதனால்தான் உம்மரை இங்கிருந்து கரும்பாறைக்கு டிரான்ஸ்பர் பண்ணப்பட்டது… இப்போ நீங்கள்! நாம் ஜெ.இ. முதல் சீப் வரை ஒரு அஸோஸியேஷன் மெம்பர்கள்தான்; ஆனாலும் ஒரு எஸ்.இக்குத் தன் கீழ் வேலை பார்க்கும் ஒரு என்ஜினியர்ஸ் அஸோஸியேஷனுக்கு குறுக்கே ஒன்னும் நிக்க முடியாது… ஆமா…’
இரண்டு மூன்று மாசங்களுக்கு முன்னால் இந்த ஆபீஸில் புதுசாய் சாங்ஷன் செய்யப்பட்ட மூன்று உதவி என்ஜினியர்களின் பிளேஸுகளில் நியமிக்கப்பட்ட மூன்று சக உதவி என்ஜினியர்கள் உட்கார இடமில்லாது, தங்கள் பக்கத்தில் கிடந்த கஸ்ட் சேயர்களில் வந்து உட்கார்ந்திருந்தார்கள்.
அப்போதே முறைத்துப் பார்த்தபடி அந்த வழி எஸ்.இ. நடந்து சென்றது அவனுக்கு ஞாபகம் வந்தது. டெக்னோகிராட்டுகளை ஒன்று சேர்க்க உழைக்கும் என்ஜினியர்களின் அஸோஸியேஷனே இப்போது சக என்ஜினியர்களுக்கு உட்கார இடம் கொடுத்ததை ஒரு குறையாகச் சுட்டி காட்டுவதைக் கேட்க அவனுக்குச் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.
அஸோஸியேஷன் செய்திகள், புகைப்படங்கள் முதலியவற்றைச் சமத்துவ புஷ்பம் தினப் பத்திரிகையில் வெளியிட சரத்குமாரைக் கூப்பிட்டு நம்பியார் கொடுப்பதை அடிக்கடி பார்த்திருப்பது, இப்போது ஏனோ இவனுக்கு ஞாபகம் வந்து தொலைக்கிறது… இருந்தும் நம்பியாரிடம் சொன்னான். ‘சார் சரத்குமார் சொல்றான்; இதே ஆபீஸில் அவனை நியமிக்க வேண்டுமென்று அவன் கேட்கவே இல்லையாம். எப்படியும் இந்த ஊரில் வேண்டுமென்றுதான் கேட்டானாம். அப்படியானால், என்னை டிஸ்டர்ப் பண்ணாமல் அவனை சவக்கை ஆபீஸில் போஸ்ட் பண்ணியிருக்கலாம் சார்…’
‘ஓஹோ… அப்படியா! அப்படியானால் சீப் என்ஜினியரைப் பார்த்துக் கேட்டுப் பாருங்கோ. இதில் அஸோஸியேஷன் தலையிட முடியாது’ என்றான் நம்பியார்.
அவன் வெளியேறினான்.
சீப் என்ஜினியரின் அறைக்குள் அவன் நுழைகையில் சவக்கை ஆபீஸ் சூப்பிரன்டிங் என்ஜினியர் சாஸ்திரி அங்கே உட்கார்ந்து கொண்டு சீப் என்ஜினியரிடம் வார்த்தையாடிக் கொண்டிருப்பதைக் கண்டதும், எந்த ஆபீசரின் கீழ் தான் இனி வேலை பார்க்கப் போகிறோமோ, அவர்கூட இருக்கையில், அவர் ஆபீஸில் வேலை பார்க்க தனக்கு விருப்பமில்லை என்று முறையிடுவது சரியா என்று அவனுக்கு ஒரு தயக்கம் வந்தது. இருந்தும் அவரை வணங்கி விட்டு ‘சார்’ என்று ஆரம்பித்தான்.
‘உம் என்ன?’
‘இல்லை சார்… எனக்கு டிரான்ஸ்பர் சவக்கை ஆபீஸில்…’
‘ஆமாமா…! இதே ஊரில்தானே…! இப்போ அதுக்கென்ன?’
‘இல்லை சார்… நான் புனல்புரத்தில் இருந்து இங்கே வந்து ஆறு மாசம்கூட ஆகல்லே. அதோடு உடம்புக்கும் நல்லா சுகமில்லே… ஒரு வாரம் முந்தி இங்கே ஆபீஸில் வச்சே சுகமில்லாமலாகி எல்லோருமா டாக்ஸி பிடிச்சு வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டாங்க.’
‘உம் உடம்புக்கென்ன?’
‘வயிற்றில் ஏதோ அஸிடிட்டியோ, அல்சரோ என்னமோ…! இங்கே பக்கத்தில் வீடு ஆனதால் இந்த ஆபீஸுண்ணால் சௌகரியமாக இருக்கும் சார்.’
‘உம்… எம் உங்க எஸ்.இ.தான் ரொம்பப் பர்ட்டிகுலராக இருந்தார். உம் இனி இங்கே பிளேஸ் ஏதாவது வந்த பின்னர் பார்க்கலாம்…! சாஸ்திரி, இவனை உங்க ஆபீசில் போட்டிருக்கேன். இவனுக்கு லைட்டா ஆபீஸ் வொர்க் ஏதாவது கொடு’ என்று கூறிவிட்டு அவர் சாஸ்திரியிடம் வேறெதையோ அஃபிஷியலா டிஸ்கஸ் பண்ணத் தொடங்கியபோது, வேறு வழியில்லாமல் அவன் மெல்ல வெளியேறினான்.
அவன் தன் இருக்கையில் திரும்பி வந்து உட்காரவில்லை. அதற்குள் சரத்குமார் அசட்டுச் சிரிப்பு சிரித்தவாறு வந்தான். ஒரு பேப்பரை நீட்டினான். அதை வாசித்துப் பார்த்தபோது, அன்று மதியத்திற்குப் பிறகு தன்னை ரிலீவ் பண்ணிவிட்டு, அந்த இடத்தில் அவன் வேலையில் சேரும் டிரான்ஸ்பர் ஆப் சார்ஜ் பேப்பர்.
அவனுக்குப் பற்றிக்கொண்டுவந்தது. ‘நாளைக்குக் காலையில் ஆகட்டும். என் பர்சனல் ஃபைல், புத்தகங்கள் அது, இது என்னவெல்லாமோ இந்த என் மேஜைக்குள் அடஞ்சு கிடக்குது… நாளைக்குக் காலம்பர வந்து இதையெல்லாம் எடுத்துவிட்டு மேஜைத் திறவலைத் தர்றேன்; அப்போ இதில் கையொப்பமிட்டுத் தர்றேன்.’
‘இல்லை… இன்னைக்கு நல்ல நாள்; அதனால்…’ என்று அவன் கட்டாயப்படுத்தியபோது இவனால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
‘உங்களுக்கு வேலையில் சேர இன்னைக்கு A.N.ம் நாளைக்கு F.N.ம் ஒன்றுதான், ஒன்றும் நஷ்டமாகாது…’
‘இல்லை… இன்னைக்கு நல்ல நாள்… அதனால் இன்னைக்கே எனக்கு ஜாயிண்ட் செய்தாகணும்…’ என்று அவன் மீண்டும் நிர்ப்பந்தித்தபோது, ‘இன்னைக்குக் கிடைச்ச ப்ரமோஷன் ஆர்டர் நாளைக்கே கிடைச்சிருந்தா?’ என்று இவன் மனசில் தோன்றி யதை வெளியில் சொல்லவில்லை.
‘நாளைக்கு நம்ம டெக்னிகல் மெம்பரின் மகள் கல்யாணம் நடக்க இருக்கே, அப்போ நல்ல முகூர்த்தம் தான்’ என்றபோது, ‘அது பன்னிரண்டு மணிக்குப் பிறகுதான்…’ என்றான் அவன்.
‘நான் ஹை லெவலில் ஏதாவதுபோய் இந்த ஆர்டரை கேன்சல் பண்ண வைத்து விடுவேன் என்று நீங்க பயப்பட வேண்டாம்… அதுக்குள்ள ஹோல்ட் எனக்குத் தெரிந்திருக்குமானால் இப்போ இந்த டிரான்ஸ்பரே நடந்திருக்காது… நீங்க சமாதானமா வீட்டுக்குப் போங்க… நாளைக்குக் காலையில் மேஜைத் திறவலை உங்க கையில் தரும்போது கட்டாயமா கையொப்பம் போட்டுத் தாறேன்’ என்று இவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது, சரத்குமார் உறுமியவாறு வெளியேறி நடந்தான்.
சற்று நேரம் கழிந்து போன் கதறியது.
‘ரவியா?’
‘ஸ்பீக்கிங்…’
‘இது எக்ஸிக்கூட்டிவ் என்ஜினியர் ராகவன் நாயர்.’
‘எஸ் சார்…’
‘என்ன இது! நீ டிரான்ஸ்பர் சார்ஜ் பேப்பரில் கையொப்பம் போட மறுப்பதா சரத்குமார் புகார் செய்கிறானே…’
ராகவன் நாயரின் குரலைக் கேட்டபோதே இவனுக்குக் குபீரென கோபம் மேலே ஏறியது. தன்னை அவர் கீழ்த்தரமாய் அவமதிப்பதாய் ஒரு உணர்வு…
‘எதுக்கு சார் இப்படி சவத்தில் குத்தணும்… நாளைக்குக் காலம்பர கையொப்பம் போட்டுக் கொடுத்துவிட்டுப் போய்த் தொலைஞ்சிடறேன்னு சொல்லிவிட்டேனே. பிறகு எதுக்கு சார் இப்படி மறுபடியும் மறுபடியும் ஆளைப்போட்டு ஆள் மாறி ஆள் மாறி வதைக்கிறீங்க! ஒருநாள் முந்தி தொலைஞ்சு போனால் அத்தனைக்கு ஆச்சு என்று எண்ணும்படி சாருக்கு அவ்வளவு தொந்தரவா நான்…’
‘அதுக்கில்லை… இங்கே சரத்குமார் டெபுடி சீப் என்ஜினியரிடம் இன்னைக்கு உடனடியாக சரத்குமாருக்கு சார்ஜை ஹேன்ட் ஓவர் பண்ணிவிட்டு சவக்கை ஆபீஸில்போய் உன்னை ஜாயின்ட் பண்ணச் சொல்லி ஒரு ஆபீஸ் ஆர்டர் வாங்கிக் கொண்டு வந்திருக்கான். இதை அங்கே கொடுத்தனுப்புகிறேன்…’
‘சார் எது எப்படியானாலும் நாளைக்குக் காலையில்தான் என்னால் கையொப்பம் போட்டுக் கொடுக்க முடியும்…’ என்று சொல்லிவிட்டு அவன் போனை வைத்தபோது அவன் உடல் முழுதும் வியர்வையில் தொப்பு தொப்பென்று நனைந்து விட்டிருந்தது.
மணி ஐந்தாகிக் கொண்டிருந்தது… மேஜை டிராயரை அடைத்துப் பூட்டிவிட்டு ரவி ஆபீஸை விட்டு வெளியேறினான்.
– 13.12.1972
– விவேக சித்தன் 1974.
– இரண்டாவது முகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2012, கிழக்கு பதிப்பகம், சென்னை.