அப்போதுதான் உலகைக்காண கண் விழித்த வெளிச்சம் தன் ஒளிக்கதிர்களால் துளைத்துச் சென்று மண்ணைத் தொட சில நாழிகை நேரம் எடுத்துக் கொண்டது. அடிவானிலிருந்து கதிரவன் எழுந்து நடக்க ஆரம்பித்ததும் மரங்களும் செடி கொடிகளும் புல் பூஞ்சைகளும் நெஞ்சை நிமிர்த்துச் சிலிர்த்து அந்நாந்து வானுக்கு வணக்கம் செலுத்திக் கொண்டன.
பகலெல்லாம் மரத்துக்கு மரம் தாவி கிடைப்பதை உண்டு மரக்கிளைகளில் அதன் இண்டு இடுக்குகளில் அன்றைய இரவுப் பொழுதை மட்டும் வசிப்பிடமாக்கிக் கொண்ட வானரங்கள் ஆரவாரித்து அன்றைய வயிற்று வேட்டைக்குக் கிளம்பி விட்டன. கூடுகளில் இணைகளோடும் குஞ்சுகளோடும் சுகித்தும் கொஞ்சியும் இரவைக் கழித்த பறவையினம் அன்றைய பயணத்தைத் தொடர்ந்தன உணவுக்காக.
காட்டைச் சரிபாதியாக அறுத்துக் கொண்டு ஓடியது அருவி ஒன்று. அதன் நிரந்தரக் குடிவாசிகளான சிறியதும் பெரியதுமான மீனினங்கள் ஓடிப்பிடித்து விளையாடிக் குதுகலித்துக் கொண்டிருந்தன.
இத்தனை ஆரவார மகிழ்வுகளையும் தன்னுள்ளே ஐக்கியப் படுத்திக் கொண்டிருந்த அந்த அடர்ந்த காடு எந்த ஆரவாரமுமற்று அமைதியில் ஆழ்ந்து கிடந்தது.
அவர்கள் வந்த சில லட்சங்கள் பெறுமானமுள்ள நான்கு சக்கர வண்டியை வெகு தொலைவில் நிறுத்தி இறங்கிக் கொண்டார்கள் அந்த நால்வரும்.
பகாங் மாநிலத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த காட்டுக்குள் நுழைந்தார்கள் அவர்கள். வழித்தடமானது இந்தப் பகல் பொழுதிலேயே சற்று முன்னே செல்லும் மனிதனையே கூர்ந்து பார்த்துக் கண்டு பிடிக்க வேண்டியிருந்தது. அவர்கள் போகின்ற இடங்களுக்கெல்லாம் இருட்டும் கவிந்து தொடர்ந்தது. வானிலிருந்து சூரிய ஒளி அடி மண்ணுக்குள் நுழையவே தற்போது கொரோனாவுக்கு போட்ட முள் வேளிபோல் சுலபத்தில் முடியாததாகியிருந்தது. ஆரண்ய இருளுக்குள்ளும் வஞ்சகமில்லாமல் வளர்ந்து போயிருந்த கழுத்தறுத்தான் கோரைகளும் நெருப்பு முள் கொடிகளும் குத்தியும் கீறியும் அவர்கள் முன்னேற்றத்திற்குத் தடைகளை விதித்துக் கொண்டிருந்தன.
இதையெல்லாம் அறிந்த அசகாயர்கள் அவர்கள். ஒவ்வொருவர் கையிலும் சுனைப்பேறியிருந்த நீண்ட ‘பாராங்’ இருந்தது. இயற்கைக்கு மட்டுமே தலை வணங்கும் செடிகளும் கொடிகளும் காட்டுக் கோரைகளும் சரிந்துத் தலைதாழ்த்தி வீழ்ந்தன அவர்களின் கொடு வாட்களுக்கு. எதிர்ப்பட்ட குண்டு குழிகளும் கூட அவர்கள் அணிந்திருந்த முரட்டு ‘பூட்சு’களுக்கு வாளாவிருந்து வழி விட்டுக் கொடுத்தன.
சில மணி நேர போராட்டத்துக்குப் பின் காட்டின் ஒரு பகுதியை அடைந்திருந்தார்கள்.
“அடேங்கப்பா’ இந்த அத்துவானக் காட்ல எங்கப்பா சமவெளியத் தேடுறது. நாம சல்லிசா நெனச்ச மாரி இல்ல…எனக்கு என்னவோ இந்த மொரட்டு காட்டு மரங்கள வெட்டி கொண்டு போயி சேக்கறதுக்குள்ள…சந்தேகமாத்தான் இருக்கு …”
ஒருவன் மலைத்து ஆயாசம் மேலிட ஒரு பெரிய மரத்தின் வேரில் அமர்ந்து விட்டான். அதுவே, ஒரு சிறிய மரம் போன்று தடிமனாகவும் இரை விழுங்கிய மலைப்பாம்பு ஒன்று நீண்டு படுத்துக் கிடப்பதாவும் கற்பனை செய்து மலைத்துப் போனான்.
“பிரதர், இப்பவே இப்படி பின் வாங்கிட்டா எப்படி..? இதையெல்லாம் பாத்து வெறும் மரங்கள்னு கணக்கு போடாதீங்க… ஒவ்வொரு இஞ்சும் பணம். உங்க மனைவி கழுத்தில கெடக்கிற நகையில பவுன பத்திருப்பீங்க… அத விட இங்க இந்த காட்லயும் தங்கமா வெளைச்சிருக்குது. அதுதான் இந்த வெல மதிக்க முடியாத மரங்கள்…”
“இந்த தாவரங்கள் இருக்கே, அதலயும் செங்காய், செங்காய் பத்து மெராந்தி, மெர்பாவ் மரங்களுக்கு வெளி நாட்ல ஏகப்பட்ட கிராக்கி. சில இடங்கள்ல தேக்கு மரங்கள விட நம்ம நாட்டு மரங்களோட மதிப்பு மிக ஒசத்தி. அதோட, இந்த பிராந்தியத்திலயே நம்ம மலேசிய காட்லதா இந்த வகை ‘டிம்பெர்’கெடைக்குது. அதுக்குதானய்யா அரசியல்வாதிங்க போட்டா போட்டி போட்டு காட்ட வளச்சிடராங்க…ஆதாயமில்லாமலா வெறும் பச்ச காட்ட பொது மக்களுக்கு எனாமா கொடுக்குறேன்னிட்டு… பின்னாடி கொறஞ்ச வெளயில வாங்கி அவங்க பொண்டாட்டி புள்ளங்க பேர்ல பட்டா போட்டுக்கிறாங்க…”
“யோவ், கொஞ்சம் யோசிச்சுப் பேசுங்க… நாம என்னவோ… ரொம்பத்தான் யோக்கியனுமங்க மாரி… நாமலுந்தான் நாட்டு வளத்த திருட – காட்டுகுள்ளயும் மரக் கடத்தல் வியாபாரம் செய்ய வந்திருக்கோம்..!”
“சரிப்பா இந்த விவாதத்த இத்தோட நிறுத்திக்குவோம்… நீட்டிக்கிட்டுப் போனா நமக்குள்ள கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் போவும்.” என குழுவின் தலைவன் சற்று கடுமையான எச்சரிக்கை விடுத்தான்.
சொன்னவர் அடங்கி, “நீங்க பயந்துட்டீங்களா…தல…அதெல்லாம் ஏற்படாது..” என சமாதானம் சொன்னார்.
இப்போது…!அவர்கள் பூமத்தியரேகை அடர்ந்த காட்டுக்குள்ளே அடி அடியாக முன்னேறிச் சென்றார்கள். போட்டிருந்த முரட்டு சட்டைகளெல்லாம் வியர்வையில் முற்றிலும் நனைந்து போயிருந்தது. ஒருத்தன் கழுத்தில் அட்டை ஏறி ரத்தம் குடித்து தடித்துப் போயிருந்தது. அதைக் கத்தியால் சதக்கென வெட்டி பீறிட்ட குருதியை வழித்துச் சுண்டினான் அந்த பங்களாதேசி. அதைப்பார்த்து அவர்களுடன் வந்த இலைஞன் சற்று அச்சப்பட்டுப் போனான். தொடர்ந்து பங்களாவின் சுனைப்பேறியிருந்த நீண்ட கத்தி காட்டுச் செடிகொடிகளை வெட்டி வழி ஏற்படுத்திக் கொடுக்க மற்றவர்கள் முன்னேறிக்கொண்டிருந்தார்கள். அவனது செயலானது முருக்க மரத்திலிருந்த வேதாளத்தை வெட்டித் தூக்கிக் கொண்டு போன விக்கிரமாதித்தனை நினைவூட்டியது.
அப்போது..! வானம் இருண்டது. இலேசான இடி முழக்கமும் கேட்டது. சற்றைக்கெல்லாம் இருண்டு கிடந்த காட்டுக்குள் கொஞ்சமாகப் பரவிருந்த வெளிச்சமும் அற்றுப்போய், இப்போது, ஒருவர் முகத்தை இன்னொருவர் காண இயலாமல் கானகம் மையிருட்டை அப்பிக் கொண்டது.
திடீரென அவ்வட்டாரத்தில் பலத்த காற்று வீசியது. வானளாவிய மரங்கள் ஓவென கூச்சலிட்டன. கிளைகள் ஒடிவது போன்ற ஒலி. தொலைவில் கேட்ட இடியோசை இப்போது காட்டுக்குள்ளும் முழங்கியது.
நால்வரும் தாங்கள் கொண்டு வந்திருந்த மழை ‘கோட்டு’களை அவசரம் அவசரமாக மாட்டிக்கொண்டார்கள்.
ஓவென கெக்கலி காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தவன் சடுதியில் நிறுத்திக் கொண்டது போல் எல்லா நடவடிக்கைகளும் கணப்பொழுதில் காணாமற் போயிருந்தது அந்த வனாந்திரதிற்குள்.
“ஐயா… திடீர் மாற்றத்த கவனிச்சீங்களா… நான் என்னவோ காட்டுக்குள்ள மழ கொட்டப்போகுது… மரங்கள்ளால்லாம் வேரோட சாயப்போகுதுன்னு நெனச்ச… இப்படி தடால்ன்னு நெலம மாறிபோச்சு..!” வந்திருந்தவர்களில் வயதில் குறைந்தவன் சந்தேகத்துடனும் முகத்தில் ஏற்பட்டுப் போன பீதியுடனும் கூற, “ஆமாப்பா, எனக்குந்தான் இது ஒரு புதிராவே தெரியுது… காட்டுக்குள்ள இதுவெல்லாம் சகஜம் போல் இருக்கு..!” என இன்னொருவன் அவனுடன் உடன்பட்டான்.
முன்னேறிக் கொண்டிருந்த தலைவன் உறுமினான்.
“இங்க இதெல்லாம் பாத்து பேசிக்கிட்டிருக்க நாம வரல… நம்ம நோக்கமே வேற, பணத்த நெறைய செலவழிச்சியிருக்கன்… இந்த காட்டு மரங்கள வெட்டி வெளியில கொண்டு போக என்னவெல்லாமோ செய்ய வேண்டியிருக்கு… வீணா வெட்டிக் கத பேசாம காரியத்தில மட்டும் கவனமா இருங்க…”
தலைவனின் சிம்மக்குரலுக்கு தற்காலிகமாக அடங்கிப் போனார்கள்.
இப்போது ஒரு குன்றைத் தாண்டி இறங்கிக் கொண்டிருக்கையில் இளங்குமரிகளின் கலகலவென்ற வெண்கலமணி ஒலிப்பது போன்ற சிரிப்பொலி கேட்டது. அந்த நகையொலி காடு முழுமையும் எதிரொலித்தது. அடர்காட்டுக்குள் இவ்வாறான ஒலிகேட்டு சற்று நடுக்கமுற்றுப் போனாலும் சுதாகரிக்கொண்டார்கள்.
சில இளம் நங்கையர்கள் நீரோடைக்குச் சென்று கொண்டிருந்த காட்சி அந்த வனத்திற்கே ஒரு விருந்து போலிருந்தது. அவிழ்ந்து நீண்டு வளர்ந்த கருங்கூந்தலில் அரிய வகையான பூக்கள் சூடியிருக்க பறவைகளின் அழகிய இறகுகள் தலையில் அலங்கரிக்கப் பட்டிருந்தன. தினம் தினம் இயற்கையை தரிசிக்கும் அவர்களின் வளப்பமான மேனியும் மேலழகும் மென்மையான சூரிய ஒளி பட்டு மேலும் மினுமினுத்தன. அவர்களுக்கு இவர்களைப் பார்த்து ஓரளவு அச்சம் ஏற்பட்டுப் போனது. அவர்களின் தலைவி இந்தக் குழுவின் தலைவன் போட்டிருந்த காட்டிலாகா சீருடையைச் சுட்டிக் காட்டி ஏதோ சொல்ல அமைதியாகி சில்லிட்டிருந்த நீர் நிலைக்குச் சென்றார்கள்.
“இப்ப தெரியுதா… நான் ஏன் கள்ளத்தனமா இந்த உடயை போட்டுக்கிட்டு வந்தேன்னு. காட்டிலாகா அதிகாரின்னு நம்பி ஒதுங்கிப் போயிட்டாங்க…பாத்தீங்களா” தலைவன் ஏமாற்றுக் கலையை நன்கு கற்றவன் என்பதை அங்கே பறை சாற்றிக் கொண்டான்.
சற்று தயங்கிய நின்ற தலைவன்,“இப்போ நாம திசை மாரி வந்துட்டோம்…” என கூறிக்கொண்டே ஒரு வரை படத்தை எடுத்து விரித்துப் பார்த்து முணுமுணுத்தான்.
“இந்த வழி சரியா பூர்வ குடிகள் குடியிருப்புக்கு கொண்டு போயிடும். அங்க ‘கம்போங் கெதுவா’ நம்மள பார்த்தா கண்டு பிடிச்சிடுவான். வில்லங்கமாயிடும்… என்னைப் பின் தொடர்ந்து வாங்க…” என வேறு திசையில் நுழைந்தான்.
அடவி சிரித்துக் கொண்டது. ‘இந்த மனுச சென்மங்களுக்கு மண் மேல அளவிட முடியாத ஆச. அதுக்கு எதையும் அழிச்சு காசு சம்பாதிக்கணும்னு சிலர் அலையுராங்களே!’
“ஏங்க நான் சொல்றேன்னு கோவப்படாதீங்க… காடு மனிதர்களுக்கு பல கோணங்கள்ல அணுசரணையா இருக்கு. இந்த பூமியோட தட்ப வெப்பத்தை ஒரே சீரா இருக்க உதவுது. அதோட, நம்ம மலேசிய நாட்டுக்கு மழை வளத்த கொண்டு வர்றதே நெட்டுக்கா வளந்த விருட்சங்கள் காடுகள் தான… இப்படியான இயற்கைய அழிச்சிட்டா…மழ வளமே இல்லாமப் போயிடுமே… இப்படி வறண்டு நிலம் கொண்ட நாடுகள் இருக்கே..பின்ன விழித்து எழுந்து மரங்கள நட்டு வளக்கறதுக்கு என்ன பாடு படுறாங்க..! நமக்கு அந்த மாதிரியான குறை பாட்டை நம்ம காடுகள் வைக்கலயே…”
அவர்களுடன் இந்த பண வேட்டைப் பயணத்தில் கலந்து கொண்ட வயதில் குறைந்தவன் தன் ஆதங்கத்தை முன் வைத்தான்.
“தம்பி நீ சொல்றது தலைவன் காதுல விழுந்துடப் போவுது. இந்த கூட்டத்தில ஒரு புல்லுருவியான்னு நெனச்சிடப்போறாரு… உன்னையும் தோ அந்த ஆளோடு முரட்டுத் தனமா காட்ட அழிச்சிக்கிட்டு போறானே அந்த பங்களா தேசியையும் தவிர்த்து நாங்க பணம் பண்ண வந்த கூட்டம். அரசாங்கத்துக்கு தெரியாம காட்ல ஒரு பகுதிய அழிச்சு மரங்கள வெட்டி லாரியில ஏத்தி வெளிய கொண்டு போனா லட்சம் லட்சமா காச பாத்துடுவோம். இது எங்க தொழில்… பல கடத்தல் தொழில் பத்தி கேள்வி பட்டிருப்பே … அதுல இதுவும் ஒன்னு…”
இதைக் கேட்டஅந்த இளைஞன் வாய் மூடி மௌனியானான்.
அப்போது…! அவர்கள் ஒரு வந்த வழித்தடத்தில் ஒரு நீர் வீழ்ச்சியையும் உடைப்பெடுத்தோடும் ஆற்றையும் கண்டார்கள். குழுவின் முதல்வனின் ஆணைக்கிணங்க தோளில் சுமந்து வந்த உணவும் மற்றைய பொருட்களும் அடங்கிய பைகளையும் இறக்கி வைத்து அமர்ந்தார்கள். இது வரை இறுக்கமாயிருந்த தலைவன் மீண்டும் வரைபடத்தை விரித்துப் பார்த்து அந்த படத்திலேயே சில கோடுகள் கீறி எதனையோ கண்டு பிடித்து மகிழ்ந்து போனான்.
“நண்பர்களே, நாம தேடிக்கிட்டு வந்த தடம் ரொம்ப நெருக்கமான தொலைவிலதான் உள்ளது. அது ஒரு சிறு சமவெளி. அத சுற்றிலும் இந்த காடும் நமக்கு வேண்டிய கனத்த மரங்களும் நெறைஞ்சிருக்கு…”
அந்நேரத்தில்..! சற்று தொலைவு ஒன்றுக்கு நிற்கப் போன வங்களாதேசி “ஐயய்யோ… இங்க வாங்க வாங்க…!” என கூச்சலிட்டான். அங்கு சென்று பார்த்த போது மேலெல்லாம் சிலிர்த்துப் போக ஒருவரை ஒருவர் அச்சத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.
அங்கே..! இருவர் செத்துக் கிடந்தார்கள். அந்த எலும்புக்கூடுகளைப் பார்க்கும்போது சில வருடங்கள் ஆகியிருக்கும் என அனுமானிக்க முடிந்தது.
“இந்த காட்டுக்குள்ள இவங்களும் ஏதாவது தேடி வந்திருப்பாங்க… அதிலயும் எந்த ஒரு முன்னேற்பாடும் இல்ல போலிருக்கு… இதையெல்லாம் நாம பாத்துக்கிட்டிருக்க முடியாது. நமக்கு இதுவெல்லாம் தேவை இல்லாதது…அவர்கள் விதி…” என அலட்சியமாகக் கூறி விட்டு தலைவன் நகர மற்றவர்களும் பின் தொடர்ந்தார்கள்.
“ஐயா, நீங்க உணர்ந்தீங்களோ என்னவோ தெரியல… ஆனா… எனக்குப் படுது..” என இளைஞன் சொல்ல அவனைச் சந்தேகத்துடன் பார்த்து, சொல்லய்யா… என்னதா கண்டீங்க என கேட்க, “நம்மள யாரோ மறைஞ்சிருந்து பாத்துக்கிட்டும் தொடர்ந்தும் வர்ற மாரி ஒரு உணர்வு…” என சொல்லிச் சற்று வெளிறிய முகத்தைக் காட்ட, “அது உன்னோட பிரமை..மொத தடவையா இந்த கருங்காட்டுக்குள்ள நுழைஞ்சிருக்க இல்ல… எது நம்மல தொடர்ந்தாலும் நம்ம தலைவன் துப்பாக்கி கொண்டாந்திருக்காரு சுட்டுப் பொசுக்கிடுவாரு..” என இறுமாப்பாகக் கூறினான்.
மறுநாள் பொழுது விடிந்தது. வழக்கம்போல் கானகம் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பெற்றது.
அவர்களும் இப்போது அவர்கள் தேடி வந்த இலக்குக்கு வந்து சேர்ந்ததில் இளைஞனைத் தவிர மற்றைய மூவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
அது ஒரு சிறு சமவெளி. நடுக்காட்டுக்கு நடுவே அமைந்த ஓர் உறைவிடம். சில சதுர மீட்டருக்கு பெரிய மரங்கள் அற்ற நிலம். அதனைச் சுற்றிலும் வானளாவி ஓங்கி வளர்ந்த காட்டு மரங்கள் அரணாகச் சூழ்ந்து கொண்டிருந்தன.
“இங்க பல வருடங்களுக்கு முன்ன பூர்வ குடிகள் குடியிருப்பு இருத்ததாவும் இப்ப பல கிலோ மீட்டருக்கு தொலைவா உள்ள இடத்துக்கு மாற்றிட்டாங்கன்னும்… இங்க நம்ம தொழில ஆரம்பிச்சம்னா யாரும் சுலபத்தில கண்டு பிடிக்க முடியாதுன்னும்..செய்திய சரியா சம்பந்தப் பட்டவங்க கிட்ட கேட்டு உறுதிப் படுத்திகிட்டே இந்த காரியத்தில இறங்கியிருக்கேன்…”தலைவன் இப்படிச்சொல்லி மற்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினான்.
“ஐயா, இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேல. அரங்சாங்கத்துக்கும் மக்களுக்கும் துரோகம் செய்றதோட காட்டு வளங்களயும் அழிக்கிறம்… இயற்கைக்கு நாம செய்ற துரோகமில்லயா… பணம் சம்பாதிக்க இப்படியான நாச காரியத்தில எறங்கலாமா?”
“தம்பி, காட்டப் பத்தி தெரிஞ்சிக்கினமுன்னு ஆர்வதோட நீ வந்திருக்கே… அந்த மனுசன் கிட்ட, நீயும் ஒரு முதலீட்டாளர்னு ஒரு பொய் சொல்லியிருக்கேன்… நீ பேசறதெல்லாம் அந்த ஆளு கேட்றப் போறாரு. அடக்கி வாசிப்பா …” என ஒரு சிறு பயமுறுத்தல் வர பையன் அடங்கிப் போனான்.
“எல்லாரும் இப்ப நான் சொல்றத கவனமா கேளுங்க… இதுதான் நம்மோடு சாம்ராஜ்யம்… இங்க இருந்துதான் நம்ம ஆட்சி தொடங்கப் போகுது…” குரலில் எல்லைக்கு அடங்காத மகிழ்ச்சியும் கண்களில் ஒரு பெரிய ஒளி வட்டமும் தெரிந்தது குழுவின் முதல்வனுக்கு.
இப்போதும்! இதையும்! ஆயிரம் கண்களும் எண்ணற்ற செவிகளும் கொண்டிருந்த அடர்வனம் கேட்டுக் கொண்டுதானிருந்தது.
“நணபர்களே… மொத வேலையா இந்த எடத்த சுத்தம் செய்யணும். அதுக்கு பெடரோல் இருக்கு. தம்பி, நீ போய் மொதல்ல அங்க அங்க தீ மூட்டு… மத்தவங்க உள்ள இருந்து சின்ன சின்ன புதர்களையும் காட்டுச் செடிகளையும் வெட்டி சுத்தம் செய்வம்…”
இளைஞன் தலைவனின் கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்டான்.
கொஞ்சமாகப் பற்றிக் கொண்ட தீ தன் நாக்குகளை நாலா புறமும் சுழற்றியது. சின்னதும் சற்றுப் பெரியதுமான காட்டுச் செடிகளில் புல் பூண்டுகளில் பற்றிய நெருப்பானது அருகிலிருந்த நெடிதுயர்ந்து ஓங்கி நின்ற மரங்களுக்கும் தன் எல்லையாதிக்கத்தை விரிவுபடுத்தியது. சடத்த ஊழிக்காற்றும் அதற்குத் துணையாகி நின்றது. சற்று நேரத்தில் தீ கோரத்தாண்டவம் ஆடியது. சுற்று வட்டத்தைக் கரியபுகை மூட்டம் சூழ்ந்து எல்லாவற்றையும் மூழ்கடித்தது.
தீ மூட்டிய அந்த இளைஞன் உயிர் காத்துக் கொள்ள அந்த அடர்ந்த காட்டுக்குள் அடைக்கலம் தேடி ஒடினான். அவனை மட்டுமே அடவி அணைத்துக் கொண்டது.