செங்கதிர்கள் வலையில் சிக்கிய காலை பொழுதில், பெருநகர வீதிகளின் வாகனச் சண்டையில் போராடி, ஒரு டீ-கடை ஓரமாக தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மெல்ல கடையை நோக்கி சென்று ஒரு கையில் செய்தி தாளை எடுத்து, வாசிக்கத் தொடங்கினான், உமர் எனும் பெயர் தாங்கிய 24-வயதுடன் பயணிக்கும், மாதம் 8000 ரூபாய் சம்பளத்தில் தனியார் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞன்.
நொடி பொழுதுகள் கூட இருக்குமோ தெரியவில்லை, ஒரு கடி,கடித்து வடையை காயப்படுத்திய மறுகணம், சற்று முகம் குழம்பியவனாக, சோக வெளிப்பாட்டோடும் காணப்பட்டான் உமர். காரணம்,
“வாகன விபத்தில் சிக்கிய முருகன் எனும் தொழிற்சாலை பணியாளர், மருத்துவ பலனின்றி காலமானார் – சரியான நிவுணத்துவம் அற்ற மருத்துவர்கள் தான் காரணம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் “
எனும் இந்த செய்தி தாளின் 3-ம் பக்கத்தில் பிரசுரமாகியிருந்த செய்திதான்.
கோபத்தோடும், அழுகையோடும் அப்படியே அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்தான் உமர். செய்தி தாளை மடித்து வைத்து விட்டு, தன் தலையில் கைகளை வைத்தவாறு, தலைகுனிந்து தன் கண்களை இறுக்கிக் கொண்டான்.
மெல்ல, மெல்ல அவனுடைய வாழ்க்கையில் 5-வருடங்களை குறைத்துக் கொண்டு, தன் நினைவலைகளை செயலாற்றினான் உமர்………….
அன்று…….
விவரம் தெரிய, அவன் ஏற்றுக் கொண்ட கனவு, இலட்சியம், தீராத தாகம் நிறைவேறும் காலம் இதுவென்று மனதுக்குள் கூறியவனாக தன் வீட்டிலிருந்து வெளியேறுகிறான், மாத சம்பளத்தில் வேலை புரியும் சிராஜ் எனும் ஏழை தொழிலாளியின் மகன் உமர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, இரண்டு வாரங்களுக்கு முன்பு அதில் 916 மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்ற மன-நிலையோடு மருத்துவக் கல்லூரியின் வாயிலை நோக்கி. கல்லூரி உள் சென்றவன், அங்கு சேர்க்கைகான விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து, அதனை ஒப்படைத்துவிட்டு வெளியேறுகிறான்.
நாட்கள் நகர்ந்தன, வாரங்கள் கழிந்தன, மாதமும் இரண்டு வயதை அடைந்து விட்டது அவன் விண்ணப்பமிட்ட தேதியிலிருந்து, ஆனால் அவனுக்கு அனுமதி கடிதம் வரவே இல்லை. கலை, அறிவியல் கல்லூரிகளெல்லாம் ஆரம்பமாகி அந்த கல்வியாண்டின் ஒரு மாதமும் கடந்து விடவே, உமர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ‘பி,எஸ்,சி.,’ இளநிலையின் இயற்பியல் பிரிவுக்கு வந்திருந்த அனுமதி கடிதத்தோடு சென்று அதில் சேர்ந்து கொண்டான். எதற்க்கும் முன்னெச்சரிக்கையாக அவன் இதற்க்கும் விண்ணப்பித்து இருந்தான்.
மருத்துவ கல்லூரியில் மெரிட்டில் இடம் கிடைக்காது எனும் போது, அவனால் பணம் கட்டி படிப்பது என்பது மிகக் கடினமான ஒன்று. அப்படியே இருந்தாலும் கூட கிடைத்திருக்கும் என்பதும் சந்தேகமே, ஏனெனில் அவன் சார்ந்த சமூகம் கூட்டு தேஷத்தில் தனியாக துண்டிக்கப்பட்டது போல் ஆக்கிவிடப்பட்டது தான்.
இன்னும் சில வாரங்கள் பின்னோக்குவோம்………..
அவன் விண்ணப்பித்துவிட்டு காத்திருந்த நாட்களில் பல தொண்டு நிறுவனங்கள், தான் சார்ந்த சமூகத்திலுள்ள பண முதலைகள், என்று யார் யாரிடமோ சென்று தன் மருத்துவ கல்லூரி படிப்பிற்க்காக உதவி கேட்டான் ஆனால் பலன் ஏதும் கிட்டவில்லை. பாவம் அவன் அறியவில்லை அவனுடைய சமூக பண ஆமைகள் வைத்திருப்பது உண்மையில் தொண்டு நிறுவனம் அல்ல மாறாக அது, தங்கள் உறவினரில் வறுமை பெற்றோருக்கு உதவும் கடைமையை செய்யவே இந்த இது போன்ற விளம்பரங்கள் என்று பின்பு தெரிந்து கொண்டான். மேலும் அந்த உறவினர்களுக்கு கூட தொண்டு நிறுவனர்கள் சரிவர உதவியது கிடையாது இது அவர்களின் தற்பெருமைக்கே என்றும் தெரிந்தது உமருக்கு. ஏற்கனவே இலட்சிய கனவு தடை கண்டது ஒரு புறம் வலிக்க, இப்படி கேவலமான தான் தோன்றிகளின் செயல் மற்றொரு வலி கொடுத்தது அவனுக்கு. இருப்பினும் தன் ஆசிரியர், தமிழ்-செல்வி அவனுக்கு ஒரு ஆறுதலாக இருந்தது.
தனக்கு ஊக்கம் தரும் ‘தமிழ் செல்வி’ ஆசிரியரிடம் சென்று தன் நிலை கூறவே, அவர் உமருக்கு கூறிய வழிகளே இந்த தொண்டு நிறுவன முயற்சிகள் யாவும். அது பலிக்காது போகவே, அவமானமும், தோல்வியும் பெற்ற தோற்றத்தோடு இப்போது மீண்டும் அவன் தன் ஆசிரியர் முன்பு தோன்றினான்.
அவர், தன் இயலாமையை கூறிய ஆசிரியர், இருந்தாலும் தங்களால் இயன்ற அளவு அவனை திடம் கொள்ள செய்து, வேறு துறையில் செல்லு உமர் ! எதிர்பார்த்த எல்லாமும் நடப்பது உறுதியான ஒன்றல்ல. அதற்க்காக துவண்டு விடுவது கோழைத்தனம். பயண பாதையை மாற்றிக் கொள், பயணத்தை நிறுத்தி விடாதே என்று கூறி தன்னிடமிருந்த, 5000-ரூபாயை கொடுத்து, போ சென்று ‘பி.எஸ்.சி., எடுத்து படி என்ற வண்ணம் கூறி அனுப்பி வைத்தார்.
அதனை பெற்ற உமர், மனம் நிறைய வேதனைகளோடு வீடு திரும்பினான். அன்று இரவு பொழுதை பகலாய் மாற்றியது, அவனுடைய சோகமும், சிந்தனைகளும். தீர்க்க முடிவுகளுக்குப் பின் தனக்கு வந்திருந்த அனுமதி கடிதத்தோடு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சென்று பி.எஸ்.சி., இயற்பியல் பிரிவில் சேர்ந்தான்.
அரசு கல்லூரி என்பதால் அவன் ஆசிரியர் கொடுத்த தொகையே போதுமானதாக இருந்தது, எனினும், சிராஜும் தன் பங்கிற்க்கு 3000-ரூபாயை கடினப்பட்டு திரட்டி கொடுத்தார். நல்ல படியாக படிப்பு முடித்து வெளிவந்த உமர் இப்போது ஒரு பன்னாட்டு கம்பெனியில் பணி புரிந்து கொண்டுள்ளான். அரசு போட்டி தேர்வுகளில் போட்டியிட்டுக்கொண்டே…….
உம் கதைக்கு வருவோம்….
கல்லூரி சேர்ந்த ஃப்ளாஸ்பேக்கோடு தன் நினைவலைகளை தடுத்து நிறுத்தின, காற்றின் அதிர்வலைகளால் வந்த செல்லிடப் பேசியின் அழைப்பு மணி. உடனே அவன் புதைந்த அந்த சிந்தனை அருவியில் இருந்து மீண்டெழுந்தான்.
அழைப்பில். இறந்த முருகனின் தம்பி இராமையாவின் தொடர்பு எண்கள் பளிச்சிட்டது.
தொடர்பில் இராமையா, “தம்பி உமர், அண்ணன் தவறிட்டார்பா, கொஞ்ச நீ இங்க வர்றயாப்பா, ஏதோ கையெழுத்து கேட்க்கறாங்க உன்கிட்ட” என்றவாறு அவர் கோரவே, ம்ம்ம்ம் ! என்ற சத்தத்தோடு தொடர்பை துண்டித்தான் உமர்.
இப்போது அவனுக்கு அங்கு செல்ல மன-உறுதி இல்லை, மனதுக்குள் குலுங்கி அழிகின்றான் உமர். என்ன செய்வான் பாவம்! விபத்தில் சிக்கிய முருகனை குத்துயிரும், குலையுயிருமாக யாருமற்ற நிலையில் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றவனல்லவா இவன் !
ஆம்……………. !
நேற்றைய தினம், அலுவலக வேலை முடிந்து, நெடுஞ்சாலையில் தன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, சாலையின் இடது ஓரத்தில் மக்கள் கூட்டமாக நிற்பது கண்டு, அவசரமாக அங்கு அவன் சென்று பார்த்த கணம், ஒரு நடுத்தர வயது தோற்றமுடைய நபர், இரத்த சிதறல்களில் வீழ்ந்து, துடித்து கொண்டிருந்தார். அதை கண்டதும் உமர் பதைபதைத்துவிட்டான். உடனே அவன், அந்த நபரை அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றான். அங்கு இருந்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்ததும் உமரை குற்றவாளியாக பாவித்து விசாரனை மேற்க்கொண்டனர். சற்று தயக்கத்தோடு உமர் நடந்தவற்றை தெளிவாக கூறினான்.
“ஐயா, எப்போதும் போல வேலை முடிச்சுட்டு, வீட்டுக்கு திரும்பிக்கிட்டுருந்தப்போ, ரோடோரமா கூட்டமா இருக்கறது பார்த்து அங்க போனேன். அப்போ இவர்(முருகன்) அங்கு உயிருக்கு போராடி துடிச்சுட்டிருந்தார். அதனால உடனே நான் அவரை இங்க கொண்டுவந்து சேர்த்தேன். ஏதோ லாரி ஒன்னு, இவர் ஓட்டிட்டு வந்த டி.வி.எஸ் வண்டில போதினதுல இப்படியாயிருச்சுனு கூடியிருந்தவங்க பேசிக்கிட்டாங்க. ஆனா நான் அதைப்பத்தி ஏதும் கேட்காம பதற்றத்தோடு இவரை இங்க அவசர அவசரமா கொண்டு வந்துட்டேன், கூடியிருந்த யாருமே உதவிக்கு வரலை இதுதான் நடந்தது ஸார்”.
உமருடைய வாக்குமூலத்தை பதிவு செய்த காவலர்கள், முருகனைப்பற்றி விசாரனை மேற்க்கொண்டு அவரின் குடும்பத்திற்க்கு தகவல் சொல்லவே சிறிது நேரத்தில் முருகனுடைய தம்பி இராமையா, மனைவி முத்துலட்சுமி, அப்பா கந்தன் எல்லோரும் வந்துவிட்டனர்.
வந்தவர்கள் அரசல்,புரசலாக என்ன என்று வினவவே! உமர் அவர்களிடமும் வாக்கு மூலம் கூறினான். சில சட்ட விதிமுறைகளின்பால் உமரிடம் காவலர்கள் கையெழுத்து வாங்கி கொண்டு, காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று தங்க வைத்தனர்.
இதற்கிடையில் சில ஆவேஷ வேடிக்கைகலும் நிகழ்ந்தன. அது என்னவெனில் மருத்துவமனைக்கு வந்த முருகனின் உறவினர்கள் உமரை மூச்சிறைக்க ஏசினர், இராமையாவோ, இன்னும் ஒருபடி மேலே போயி உமரின் சட்டயை பிடித்து, கண்னத்தில் ஒரு பலார் பரிசும் கொடுத்துவிட்டார்.
(இது தேவையா உமருக்கு, எல்லாரையும் போலவும் இவன் சென்று இருக்கலாம், ஆனால் அவன் வளர்ந்த விதம் அப்படியல்லவே. சிராஜ் ஏழை தொழிலாளி என்றாலும் ஆண்மீக நம்பிக்கை அதிகம் பெற்றமையால், சூழ்ச்சிகள் நிறைந்த உலகத்தில் கூட, நற்குணங்களோடு வாழ்ந்து தன் மகனையும் அவ்வாறே வளர்த்தார் அதன் விழைவே உமரின் இந்த நிலை )
பின், சிறிது நேரம் சென்றன காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட உமர் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டான். காரணம் சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் உண்மை குற்றவாளிகளின் தகவலை பெற்றுக் கொண்டனர் ஆகவே இதிலிருந்து உமர் விடுவிக்கப்பட்டான். இருப்பினும் நிபந்தனைகளோடு அனுப்பப்பட்டான்.
இப்போது உமர் செய்யவில்லை என்ற உண்மை அறிந்த, முருகனின் உறவினர்கள் அவனிடம் மண்ணிப்பு கேட்டுக்கொண்டனர். அதன்பின், உமர் அங்கிருந்து வீடு திரும்பினான். சரியாக 8:30 மணிக்கு வீட்டினுள் நுழைந்தான் உமர். எத்தனையோ விபத்துக்கள் பெருநகரங்களில் சாதாரணம் என்றாலும் கூட, நேரிடையாக பார்த்தமையால் இது உமருக்கு பெறும் அழுத்தம் கொடுத்தது. மேலும் குற்றவாளியாக தன்னை பாவித்து பின் விடுவித்தாலும், தற்போது உள்ள சூழலில் காவலர்களின் நிலைபாடு உமருக்கு மேலும் பயம் கலந்த வலியை கொடுத்தது. சரியாக 9:30மணிக்கு தொழுது, முருகனுக்காக வேண்டிக் கொண்டு தூக்கத்தில் வீழ்ந்தான் உமர்.
அதன்பின் நடந்தவைகள் தான் கதையின் தொடக்க நிகழ்வுகள் அவைகளை முன்னரே பார்த்தோம்….
இப்போது இராமையாவின் இணைப்பை துண்டித்த உமர், மருத்துவமனைக்குச் சென்றான். எதிரே தோன்றிய முருகனின் அப்பா நடந்ததை கூற ஆரம்பித்தார். “தம்பி, நீ போன சத்த நிமிஷத்துல அவன் உசுரு போச்சுப்பா, இந்த டாக்டர் பயலுகதான் தப்பு பண்ணிடாங்கனு சொல்றாக, என்று கந்தன் கூறிக்கொண்டு இருக்கும் போதே இராமையா இடைமறித்து பேசத்தொடங்கினார்.
உமர்! “என்னத்த சொல்ல, டாக்டர் சரியான நிபுணத்துவம் இல்லையாம்பா, நீங்க போனதும் கொஞ்ச நேரத்துல அண்ணன அரசு ஆஸ்பத்திரிக்கு மாத்தினாங்கப்பா! கேட்டதுக்கு இது எங்கனால பார்க்க முடியாது, அதான் அப்பிடினு அவங்களே ஆம்புலன்ஸ்ல ஏத்தி கொண்டு போனாங்க அப்புறம் தான் நாங்க இங்க வந்தோம். இங்க வந்ததும் அரசு டாக்டர் அண்ணன் இறந்துட்டார்னு சொன்னாங்கப்பா, உடனே நான் போலீசுக்கு தகவல் கொடுத்தேன். அவங்களும் இங்க வந்தாங்க. அப்புறம் டாக்டர்கிட்ட சொல்லி உடலை போஸ்ட்மாடர்ம் பண்ண சொன்னாங்கப்பா. அதுல விபத்து ஆனது உறுதினும், மேலும் இதுக்கு முன்னாடி சிகிச்சை கொடுத்த தனியார் மருத்துவ டாக்டர்கள் முறையா சிகிச்சை செய்யலனும்னு ரிப்போர்ட் கொடுத்திருக்காங்கப்பா. இல்லைனா காப்பாத்திருக்கலாம்னும் சொன்னாங்க.
அதுக்கப்புறம் போலீஸ் அந்த டாக்டர்களை விசாரிச்சதுல, அவங்க சரியா துறை அனுபவமும், நிபுணத்துவமும் இல்லாதவங்களாம். பணத்தை கொடுத்து சீட்டு வாங்கி படிச்சவங்களாம்பா. இப்படினு விசாரனைல தெரிஞ்சதும் அவங்கல போலீஸ் கைது பண்ணிருக்காங்கப்பா, என்று கூறி ஒரு பெரு மூச்சை வெளிப்படுத்தினார் இராமையா!
பின், உமர் சற்று தயக்கதோடு நான் பேப்பர்ல படிச்சேன்….. இப்ப என்னை…………… என்று உமர் சற்று இழுக்கவே ! உடனே இராமையா, அது ஒன்னுமில்லப்பா நீங்க ஏதோ கையெழுத்து போடனுமாம், உங்க பேர்லதான் அட்மிட் பண்னிருக்கீங்க அதான், அப்படினு சொல்லிக் கொண்டே உமரை கூட்டிட்டு போனார் இராமையா. அதனை படித்து பார்த்துவிட்டு கையெழுத்து போட்டான் உமர். பின்பு முருகனின் உடலை அங்கிருந்து வீட்டுக்கு எடுத்துச் சென்றனர் அவரின் உறவினர்கள்.
சிறிது நேரம் தாமதித்து வெளியேற முயன்ற உமரை காவலர்கள் அழைத்து, காவல் நிலையம் கூட்டிச் சென்றனர். அங்கு அவனிடம் ஒரு கையெழுத்து வாங்கிக் கொண்டு, அந்த லாரி டிரைவரை புடிச்சுட்டோம் இதுல உன்னை சிரமப்படுத்தனதுக்கு மண்ணிச்சுகோப்பா என்று கூறி அனுப்பினர். இதை சற்றும் உமர் எதிர்பார்க்கவே இல்லை இது வேறுமாதிரியான பிரச்சனை தரும் என்று அவன் அழுத்தமாக நம்பினான். காரணம் காவல்துறை அப்படியான ஒன்று என்பதால். ஆனல் மாற்றாக நடந்தது அவனுக்கு ஆனந்த அதிஷயமே !
பின் மெல்ல சிந்தித்தவனாக அலுவலகம் செல்லாமல் வீடு திரும்பினான். இப்போது மீண்டும் நினைவுபடுத்தி பார்த்தான், மருத்துவர் என்ற அவனின் இலட்சிய கனவின், வடுக்கள் நிறைந்த நினைவுகளை.
உமர் பணம் இல்லாததாலே, அவனால் மருத்துவப் படிப்பு படிக்க முடியாமல் போனது எவ்வளவு உண்மையோ, அதைவிட ஆணித்தரமான உண்மை அரசு மருத்துவக் கல்லூரியில் அவனுக்கு சீட்டு கிட்டாது போனது, கல்வியில் அவனுடைய சமூகத்திற்க்கு அரசால் ஒதுக்கப்பட்ட கீழ்நிலையான, யானைப் பசிக்கு, சோலைப்பொரி என்ற நிலையைவிடவும் குறைவான இட-ஒதுக்கீடுதான்…….
உம்ம்ம்ம்! ஒரு வேளை முருகன் காப்பாற்றப்பட்டு இருக்கலாம், அரசாங்கம் உமரின் திறமைக்கு கண் கொடுத்து இருந்தால்……….