நிறைய ஆர்டர்கள் கிடைத்த பெருமகிழ்ச்சி எனக்கு. ஊருக்குத் திரும்ப பேருந்து நிலையம் நோக்கி வேக நடைபோட்டேன். வழியில் திண்டுக்கல்-காரைக்குடி பேருந்தை கண்டவுடன் கையைக் காட்டினேன். நிறுத்தி ஏற்றிக் கொண்டார்கள். உட்கார்ந்து பயணிக்க இடமில்லை. சிலர் ஏற்கெனவே நின்று கொண்டுதான் வந்தார்கள்.
விற்பனை பிரதிநிதிகளுக்கே உண்டான அலைச்சல். அதிலும் நான் நுகர்பொருள் விற்பனை பிரதிநிதி. சொல்லவா வேண்டும் அலைச்சலுக்கு. கடை கடையாக ஏறி இறங்கியதால் கால்கள் சோர்ந்து வலித்தன. மிகுந்த களைப்பாக இருந்தேன். மதியம் மூன்று மணி வெயில் வேறு.
பேசாமல் பேருந்து நிலையம் வரை சென்று அடுத்த வண்டியில் உட்கார இடம் கிடைத்தவுடன் வந்திருக்கலாமோ என எண்ணினேன்,””யாராவது இறங்குகிற இடத்தில் உட்கார இடம் கிடைக்காமலா போகும்” மனம் ஆறுதல் சொன்னது.
பேருந்து முழு வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. நடத்துனர் தனது தொழிலில் ஐக்கியமாகியிருந்தார். அவரிடம் சீட்டு வாங்கிக் கொண்டிருந்தவர்கள் சொல்லும் ஊரை நான் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே வந்தேன். “”காரைக்குடி ஒண்ணு குடுங்க. நானும் சீட்டு வாங்கினேன்”
காரைக்குடி, குன்றக்குடி, பிள்ளையார்பட்டி என்று கேட்கிறார்களேயொழிய திண்டுக்கல் அருகில் உள்ள ஊரில் இறங்குபவர்கள் இருப்பது போல தோன்றவில்லை. எனக்கோ கண்டிப்பாக உட்கார்ந்தேயாக வேண்டிய நிலை. மிகுந்த வேதனை பட்டுக்கொண்டிருந்தேன்.
“”நத்தம் ஒண்ணு குடுங்க”
குரல் கேட்டு நிமிர்ந்தேன்.
இரண்டு இருக்கைகள் தள்ளி ஒருவர் வாங்கினார். மெதுவாக நகர்ந்து அவருக்கருகில் சென்று நின்று கொண்டேன். அவர் இறங்கும்போது அந்த இடத்தைப் பிடித்து அமர்ந்துவிடலாம். கொஞ்சம் நிம்மதி தோன்றியது. அதுவரை எப்படியும் சமாளித்துவிடலாம். கூட்டம் அதிகரித்துக்கொண்டே வந்தது.
இடையில் எத்தனையோ இடங்களில் வண்டி நின்றாலும் இறங்குபவர்கள் மிகக் குறைவாகவும் ஏறுகிறவர்கள் அதிகமாகவும் இருந்தனர். இந்தியாவின் முக்கியப் பிரச்னை இந்த மக்கள் பெருக்கம்தான் என்பது நினைவில் வந்தது. அடுத்தடுத்து இந்தியாவின் ஒவ்வொரு பிரச்னைகளும் மனதில் ஓடியதால் என் பிரச்னையைக் கொஞ்சம் மறந்திருந்தேன்.
எனக்குப் பின்னால் யாரோ இறங்க ஆயத்தமாவது போலத் தோன்றவே, சிந்தனை கலைந்தது. எப்படியும் அந்த இடத்தில் அமர்ந்துவிட வேண்டும்- மனம் உறுதி பூண்டது.
அந்த நபர் உண்மையிலேயே இறங்கத்தான் போகிறார். இதோ எழுந்துவிட்டார்.
அவர் சரியாக எழுந்திருக்கும் முன்னமே நான் நுழைந்து அமர்ந்துவிட்டேன். அவர் என்னை ஒரு மாதிரியாக முறைப்பது போல பார்த்துவிட்டுப் போனார். எனது செயல் எனக்கே கொஞ்சம் பிடிக்கவில்லைதான். என்ன செய்வது? வேறு வழி எனக்குத் தோன்றவில்லை.
இடம்பிடித்து அமர்ந்தவுடன் பெரிய நிம்மதிப் பெருமூச்சுவிட்டேன். அசதி, கால்வலி மறைந்துவிட்டன போலத் தோன்றியது. இனி கவலை இல்லை. காரைக்குடி வரை நிம்மதியாகச் செல்லலாம்.
வண்டியின் உள்ளே ஏறியவர்களை நடுவில் போகச் சொல்லி நடத்துநர் விரட்டிக்கொண்டிருந்தார். மீண்டும் வண்டி வேகமெடுத்தது. நான் நன்கு சாய்ந்து உட்கார்ந்து கொண்டு கண்ணை மூடி உறங்குவதுபோல இருந்தேன். பயணிகளில் சிலர் என்மீது இடித்துக்கொண்டும் உரசிக் கொண்டும் நகர்ந்து கொண்டு இருந்தனர்.
சில நிமிடங்களில் என் கால்மீது “நச்’சென்று எதையோ வைக்கிறார்களே யார் என்று பார்த்தேன். கைக்குழந்தையுடன் வந்திருந்த ஒரு பெண்தான் தன் கையிலிருந்த பையை பேருந்தின் அசைவைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அப்படி வைத்திருக்கிறாள். கோபிக்க வழியில்லை. “”உள்ளே நகருங்க” என்று நடத்துநர் தொடர்ந்த அதட்டலினால் அவள் இறுதியாக நிறுத்தப்பட்டது என் அருகில்தான். யாராவது அவளுக்கு இடம் கொடுக்க மாட்டார்களா? எனக்கு இருப்பு கொள்ளவில்லை. யாரும் அவளை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. என்னருகில் அல்லவா கைக்குழந்தையுடன் நிற்கிறாள். நான்தான் அவளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
எழுந்து இடம் தர என்னால் இயலாது. ஆனால் அவளுக்கு உதவவும் வேண்டும் என்ன செய்வது? “பளிச்’சென்று ஒரு யோசனை தோன்றியது. “”குழந்தையைக் கொடுங்கம்மா நான் மடியில் வைத்துக்கொள்கிறேன்” கேட்டு வாங்கிக் கொண்டேன்.
சில விநாடிகளில் குழந்தை சிணுங்க ஆரம்பித்தது. என் யோசனை பயனற்றுப் போனது. வேறு வழி. எழுந்துவிட்டேன். குழந்தையை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு “”நீங்க உட்காருங்கம்மா” என்று சொல்லிவிட்டு, வேறு இடம் கிடைக்கிறதா? என மீண்டும் காத்திருக்கத் தொடங்கினேன். சில கிலோமீட்டர் தூரம் கூட என்னால் அமர்ந்து வர இயலவில்லை. மனதும் உடலும் முன்பைவிட அதிகமாக வலிக்க ஆரம்பித்தன.
போராட்டமும் சமாதானமும் மனதில் மாறி மாறி ஓடிக்கொண்டே திருப்பத்தூர் வரை வந்துவிட்டேன். நிறையப் பேர் இறங்கினார்கள். நின்று கொண்டிந்தவர்கள் ஓரளவிற்கு அமர்ந்து விட்டார்கள். எனக்கும் இடம் கிடைத்தது. மூவர் அமரும் இருக்கையில் நுனி இருக்கை. நடுவிலும், ஜன்னல் ஓரமும் இருவர் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் இருவரும் நன்கு படித்தவர்களாகத் தோன்றினார்கள். பார்ப்பதற்கு அரசு அதிகாரிகள் தோரணையில் இருந்தனர். நல்ல வாளிப்பான உடல்வாகு. பேன்ட், சர்ட் எல்லாம் மிகவும் உயர்தரமானவையாக தோன்றின. கிட்டத்தட்ட இருக்கை முழுவதும் ஆக்கிரமித்து அமர்ந்திருந்தனர். நான் அமர்வதற்கு அரை அடி இடம் கூட இல்லை. சற்று நெருங்கி அமர்ந்து பார்த்தேன். அவர்களிருவரும் தள்ளி உட்கார்ந்து இடம் தருவதாக இல்லை. அவர்களின் அலுவலக காரியமாக மும்முரமாகப் பேசுகிற சாக்கில் என்னைக் கண்டுகொண்டதாக காட்டிக் கொள்ளாமலிருந்தனர்.
“”சார், ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க” மிகவும் நயமாக வேண்டினேன். உடம்பை லேசாக அப்படி இப்படி அசைத்தார்களேயொழிய எனக்கு இடம் கூடுதலாகவில்லை.
“”அடுத்தவர்களுக்கு தம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்” என்று பெரியவர்கள் சொல்வர். ஆனால் இந்தப் பெரியவர்கள் செய்ய வேண்டியதை கூட செய்ய மறுக்கிறார்களே. அரச மரத்தடியில் உள்ள திண்ணையில் அகட்டி உட்கார்ந்து ஊர்க்கதை பேசுவது போல இவர்களிருவரும் பேசிக்கொண்டு வந்தனர்.
பேருந்து வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. வளைவில் செல்லும் போதெல்லாம் நான் கீழே விழாமலிருக்க எனது இடது காலை முட்டுக் கொடுத்தும் வலது கையை இருக்கையின் தலைபாகத்திலுள்ள பிடிமானப் பகுதியில் நீளமாக வைத்து இறுக்கிப் பிடித்தும் சமாளித்துக்கொண்டே வந்தேன்.
அவர்களை நான் ஒன்றும் செய்ய முடியாது. எழுந்து நின்று கொள்ளலாமா? மனது அதற்கும் இடம் கொடுக்கவில்லை. ஆசாமிகள் இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டு சொகுசாக பயணிப்பதை பார்க்கும்போது எனக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. இவர்களை சும்மா விடக்கூடாது என்று மட்டும் எண்ணினேன். “அவர்களுக்கு தண்டனையா கொடுக்க முடியும். சரிவிடு’ என்றும் “இல்லை இவர்களுக்கு பாடம் புகட்டு’ என்றும் மனம் மாறி மாறி உறுத்திக்கொண்டே வந்தது.
“”வைரவன்பட்டி இறங்கு” நடத்துநரின் குரல் ஓங்கி ஒலித்தது. சிலர் இறங்கினர். ஏறியவர்களில் கூலி வேலை செய்பவர்களும் இருந்தனர். ஒரு பெரியவர் மண் வேலை செய்தவராக இருக்க வேண்டும் அவர் தன் சித்தாள் சகிதமாக ஏறினார். ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணிபுரிந்தவராக இருக்கலாம். வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். தலைப்பாகையும் வேட்டியும் நல்ல செம்மண் வண்ணத்திலிருந்தது. சட்டையணியாத உடலில் வியர்வை வழிந்து கொண்டிருந்தது. நன்கு கறுத்த மேனி.
நடத்துனர் வழக்கம்போல எல்லோரையும் “”உள்ளே நகருங்க” என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.
“”அந்தப் பெரியவரை இங்க வரச் சொல்லுங்க” என் முன்னால் அமர்ந்திருந்தவரிடம் சொன்னேன். அவருக்குத் தகவல் சென்றடைந்தது. அங்கிருந்து திரும்பிப் பார்த்தார். நம்பிக்கையற்று பார்ப்பது போலத் தோன்றியது. என்னைக் கவனிக்கிற நேரத்தில் நான் அவரை சைகையால் அழைத்தேன். கூட்டத்தை விலக்கிக்கொண்டு என்னிடம் வருவதற்கு சிரமம் ஒன்றும் அவருக்கு இருக்கவில்லை.
அதுவரை என்னைப் பொருட்படுத்தாத அருகில் இருந்த ஆசாமிகள், நான் என்ன செய்கிறேன் என்று தங்களது பேச்சுக்களை நிறுத்திவிட்டு கவனிக்கத் தொடங்கியிருந்தனர்.
என்னருகில் வந்த அந்தப் பெரியவரை எனது இருக்கையில் அமர வைத்தேன். “”நல்லா உட்காருங்க பெரியவரே! உழைத்துக் களைத்து வந்திருக்கிறீர்கள்” என்று நான் சொல்வதை ஏற்றுக்கொண்டார். புன்னகையுடன் தனது தலைப்பாகையை அவிழ்த்து தனது முகத்திலும் கைகளிலும் உள்ள வியர்வையை துடைத்துக் கொண்டார். தலைப்பாகையில் சொருகி வைத்திருந்த பீடிக்கட்டு கீழே விழுந்ததை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டார்.
விசாலமாக இடம் கிடைத்ததால் பெரியவர் செüகரியமாக அமர்ந்து பயணத்தை தொடர்ந்தது, நானே அப்படி பயணிப்பதாக எனக்குத் தோன்றியது. எனக்கு இப்பொழுது களைப்போ, கால் வலியோ தெரியவில்லை. மாறாக நிம்மதிதான் இருந்தது. நான்தான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டேன். பிள்ளையார்பட்டி கோபுரம் தெரிந்தது. கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.
– ஆ.சு.குமார சுவாமி (ஏப்ரல் 2012)