இக்கரைக்கு அக்கரை பச்சை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 154 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சோபாவில் சாய்ந்தபடி அன்றைய தமிழ் நாளிதழை புரட்டிக் கொண்டிருக்கிறார்… தமிழ் மறையான். தாய்மொழி தமிழ்மொழியின்பால் கொண்ட பற்றால் ஆழமான காதலால் ‘செல்வம்’ எனும் தன்னுடைய பெயரை ‘தமிழ்மறையான்’ என்று மாற்றி வைத்துக் கொண்டவர் அவர். நாட்டு நடப்புகளை உலக விவகாரங்களை அறிந்து கொள்வதில் அவருக்கு ஆர்வம் அதிகம். ‘ எழுத்தாளன் ‘ என்றால் தன் நாட்டைப் பற்றி சமுதாயத்தைப் பற்றி உலகத்தைப் பற்றி ஓரளவாவது அறிந்திருத்தல் வேண்டும்… அல்லவா ! ஆம் ! தமிழ்மறையான் ஓர் எழுத்தாளன். நாலைந்து கதைகளையோ கட்டுரைகளையோ எழுதிவிட்டு ‘நான் ஓர் பெரிய எழுத்தாளன்’ என்ற கூறித் திரியும்… ‘அரைகுடமல்ல அவர்! எழுத்தாளன் என்பவன் ஓர் நாட்டுக்கு சமுதாயத்துக்கு விழிகளாக விளங்கக் கூடியவன்’ என்பதை மற்ற எழுத்தாளர்கள் மறந்துவிட்டார்களோ இல்லையோ… ஆனால் தமிழ் மறையான் மறக்கவில்லை எழுத்தாளன் என்று மற்றவர்கள் தன்னை நினைக்க வேண்டும் எனும் நப்பாசையில் அவர் எழுத்து துறையில் நுழையவில்லை சமுதாயம் எனும் தோட்டத்திலே தான் காணும் குற்றம் குறை எனும் புற்பூண்டுகளை களையெடுக்க தன் பேனாவை மண்வெட்டியாக பயன்டுத்த துவங்கியவர்தான்…. தமிழ்மறையான். வாய்மை நேர்மை இவைகளை தன்னிரு விழிகளாகக் கொண்ட அவர்… சமுதாயத்தில் காணும் குறைபாடுகளை சிறுகதைகளின் வழி சுட்டிக்காட்ட வேண்டும்” எனும் எண்ணத்தில் 1970-ஆம் ஆண்டில் பேனாவை கையில் பிடித்தவர்தான்…. இன்றுவரை பிடித்துக் கொண்டிருக்கிறார். இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கும் அவர் இதுவரை ஒரு நூல் கூட வெளியிட்டதில்லை! யார்யாரோ விலாசம் தெரியாதவர்கள் எல்லாம் எதையாவது கிறுக்கி புத்தகமாக வெளியிட்டு… “சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு நானும் பெரும்பங்காற்றிவிட்டேன்! புகழின் உச்சியை தொட்டுவிட்டேன் என்று பிதற்றி பீத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழ் மறையான்? அவர் ஓர் விசித்திரமான மனிதர்! விளம்பரத்தை விரும்பாத” மனிதர் “ உங்கள் கதைகள் கொடுங்கள். தொகுத்து புத்தகங்களாக வெளியிட்டு தருகிறோம்” என்று பலர் அவரிடம் கெஞ்சிக்கேட்டுப் பார்த்துவிட்டனர். ஆனால் அவர் மசியவில்லை; இலக்கியத்தை வியாபாரமாக்க அவர் விரும்பவில்லை! அன்றைய பாரதியை போல் இன்றைய ஜெயகாந்தன் போல் அவர் யாருக்கும் தலைவணங்கா இலக்கியவாதியாக திகழ்ந்தார். மனித மனம் ஒரு குரங்கு என்பதை நன்கு அறிந்து வைத்திருந்த அவர்… எல்லோரிடமும் ஓர் அளவோடுதான் பழகுவார்! யாரையும் உற்ற நண்பராக அவர் மணம் ஏற்றுக் கொள்வதில்லை! ஏதாவது இலக்கிய சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு முறைப்படி அழைப்பு வந்தால் மட்டுமே அங்கு அவர் தலைகாட்டுவார். மற்றபடி வீடுதான் அவருக்கு உலகம்; தனிமைதான் அவருக்கு இனிமை!

கிர்ர்ர்க்! கிர்ர்ர்க்! சோபாவுக்கு வலப்புற மூலையில் கிடந்த அந்த சிறிய வட்ட வடிவ மேசையின் மீது அமர்ந்திருக்கும் தொலைபேசிதான் அவரை அழைக்கிறது . பத்திரிகையில் பதிந்திருந்த தனது விழிகளை பிடுங்கி அந்த தொலைபேசியின் மீது அவர் பதிக்க… அவரது வலக்கரம் அந்த தொலைபேசி ரிசீவரை கைப்பற்றுகிறது.

“ஹலோ! வணக்கம்! ஆமாம் தமிழ்மறையான்தான் பேசுகிறேன்! ஓ! நீங்களார என்னா விஷயமுங்க? ‘பிரபல எழுத்தாளர் ‘ வனஜா’ சிங்கப்பூர் வராரா? அவரோடு ஓர் கலந்துரையாடலா? நம்ப ‘முத்தமிழ் மன்றம் ஏற்பாடு செஞ்சிருக்கா? சந்தோஷம்! என்ன? அந்த நிகழ்ச்சியிலே நா அவசியம் கலந்துக்கணுமா? சரி கலந்துக்கிறேன்! சிறப்புரை ஆற்றணுமா? மன்னிக்கணும் எனக்கு பேசத் தெரியாது; எனக்கு பேனாவில் பேசிதான் பழக்கம்! நிகழ்ச்சியிலே நிச்சயம் கலந்துக்குவேன்! கட்டணம் ஐம்பது வெள்ளியா! சரி கொடுத்துடுறேன்; சரி…! நன்றி !” தமிழ்மறையானின் வலக்கன்னத்தை தழுவி நின்ற தொலைபேசி ரிசீவர் மீண்டும் தன் இருப்பிடத்தில் போய் அமர்ந்து கொள்கிறது தமிழ்மறையானின் விழிகள் அந்த தொலைபேசி ரிசீவரை வெறுப்போடு நோக்க ஓர் ஆழ்ந்த பெருமூச்சு அவரது இதயத்தில் நின்று வெளிப்படுகிறது. ‘ச்சே! இவன்களுக் கெல்லாம் வேறு வேலையே…யில்லையா? எவன் வந்தாலும் மாலைப்போட்டு விருந்து வைப்பதே! இவன்களுக்கு பொழைப்பாய் போச்சு! ‘தமிழ்மறையானின் உள்ளம் தான் முணுமுணுக்கிறது. நல்ல காரியங்களுக்கு… ஆதரவற்றோர்… உடல் குறையுள்ளோர்… கோவில் – கல்வி அறப்பணிகளுக்கு நன்கொடை என்றால் ஐம்பது வெள்ளியில்லே… ஐநூறு வெள்ளிக் கொடுக்கக்கூட அவர் தயங்கமாட்டார். ஆனால் தனக்கு பிடிக்காத தேவையற்ற காரியங்களுக்கு செலவு செய்வது என்பது அவருக்கு பிடிக்காத ஒன்று!

குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து இங்கு சுற்றிப்பார்க்க வரும் கலைஞர்களையோ எழுத்தாளர்களையோ வலிய சென்று மாலைப்போட்டு வரவேற்பதும் விருந்து வைப்பதும் ‘அன்பளிப்பு’ எனும் பெயரில் ‘சம்திங்’ கொடுப்பதும் தமிழ்மறையானுக்கு அறவே பிடிக்காது. அதுவும்… குறிப்பாக எழுத்தாளர்கள் வந்தால்… வந்தவர் சுண்டைக்காயாக இருந்தாலும் சரி… பூசணிக்காயாக இருந்தாலும் சரி நம் நாட்டு எழுத்தாளர் களின் முகங்களில் காறி உமிழாத குறையாக… இங்குள்ள எழுத்தாளர்களின் கதைகள் உலகதர அளவில் இல்லை; அவர்கள் தங்கள் எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள முனைய வேண்டும்; தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் கதைகளை நிறைய படிக்க வேண்டும் என்ற நோட்டஞ் சொல் சொல்லிவிட்டு போவதால்தான் அவர்கள் மீது அவருக்கு எரிச்சல்… வெறுப்பு! ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று அன்று ஒரு அறிவிளி சொல்லிச் சென்றதை தெய்வ வாக்காகக் கொண்டு ஓர் சில இந்திய அமைப்புகள் தமிழ்நாட்டு கலைஞர்களை எழுத்தாளர்களை இன்முகம் கொண்டு வரவேற்று அவர்களுக்கு பெருமை சேர்க்கின்றனர். ஆனால் நம் உள்நாட்டு தமிழ் எழுத்தாளர்களை கலைஞர்களை அலட்சியப்படுத்துகின்றனர். நம் பிள்ளைகளின் பசியை வளர்ச்சியை கவனிக்காது அவர்களை அலட்சியப்படுத்திவிட்டு ஊரார் பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டு அவர்களின் வளர்ச்சிக்கு ஏணிப்படியாய் நின்றுக் கொண்டிருந்தால் நம் பிள்ளைகளின் கதி என்னாவது? ஊக்குவிப்பு இல்லாததால் எதிர்காலத்தில் நமது நாட்டில் தமிழ் எழுத்தாளர்களோ…. கலைஞர்களோ இல்லாது போய்விடுவார்களோ என்ற எண்ணம் கலக்கம் அவரது மனதில் அலைமோதுவதால்தான் தமிழ்நாட்டு எழுத்தாளர் கலைஞர்களின் வருகையை அவரது மனம் வெறுக்கிறது. ஆனால்… முத்தமிழ் மன்றத்தில் அவரும் ஓர் உறுப்பினராக இருப்பதால் தனது சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து மன்றம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய ஓர் இக்கட்டான சூழ்நிலை அவருக்கு! ‘ ஆம்! உரலுக்குள் தலையை விட்டால் தலை இடிபடதானே செய்யும்!

முத்தமிழ் மன்றத்தில் ஒரே கலகலப்பு தமிழகத்திலிருந்து வருகை புரிந்திருக்கும் பிரபல எழுத்தாளர் ‘ வனஜாவோடு கலந்துரையாடல் நிகழ்ச்சி… இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகப் போகிறது. வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களும் அனுபவமிக்க மூத்த எழுத்தாளர்களும் வலப்புர வரிசையில் அமர்ந்திருக்க எழுத்தாளர் வனஜாவை நேரில் காணும் ஆவலில் வந்திருந்த வாசகர்கள் இடப்புர வரிசையில் அமர்ந்திருக்கின்றனர். மேடையில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் முத்தமிழ் மன்றத் தலைவரும் செயலாளரும் நிகழ்ச்சிக்கு ஆதரவு தந்த பிரமுகர்களும் அமர்ந்திருக்கின்றனர். எல்லோரும் ஆவலோடு வனஜாவின் வருகையை எதிர்நோக்குகின்றனர். மூத்த எழுத்தாளர்களோடு அமர்ந் திருந்த தமிழ்மறையானும் பெண்ணின் பெயரில் நின்றுகொண்டு எழுதிவரும் அந்த பிரபல எழுத்தாளரின் தோற்றத்தைக்காண ஆவலோடு காத்திருக்கிறார். ஆம்! அகிலன் – மு.வ. பார்த்தசாரதி – புஸ்பா தங்கதுரை, ஜெய காந்தன் போன்றவர்களின் சிறுகதைகளை… நாவல்களை அவர் அதிகம் படித்திருக்கிறார். அந்த எழுத்தாளர்களைப் பற்றி ஓரளவு அறிந்தும் வைத்திருக்கிறார் ஆனால் வனஜாவின் படைப்புகளை அவர் தொட்டுப்பார்த்ததில்லை காரணம் மற்ற எழுத்தாளர்களைப் போல வாசகர்கள் புரிந்து கொள்ளும்வன்னம் கதையை எளிய நடையில் எழுதாமல்… கதைக்கருவை சுற்றி வளைத்து… சுட்டுப் பொசுக்கி சுவைத்தவர்களுக்கு ஜீரணத்தை ஏற்படுத்தாத கதைகூறும் பாணி தமிழ்மறையானுக்கு பிடிக்காததால் அவர் வனஜாவின் படைப்புகளை படிப்பதில்லை; அதனால் அவரைப் பற்றி அறிந்து கொள்ளவும் விழையவில்லை!

ஒட்டகச்சிவிங்கியை போல உயரமான மெலிந்த தோற்றத்தோடு ஒருவர்… அலட்சிய பார்வையை வீசியபடி அரங்கினுள் நுழைகிறார். அரங்கினுள் அலைவீசிக் கொண்டிருந்த சிறு சலசலப்பு மெல்ல தேய்கிறது. மூத்த எழுத்தாளர் ஒருவருடன் நம் இந்திய சமூகத்தில் வளர்ந்து நிற்கும் விவாகரத்து பிரச்னையை குறித்து விவாதித்துக் கொண்டிருந்த தமிழ்மறையான் அவை அடக்கத்தோடு நிமிர்ந்து உட்காருகிறார். அந்த உயர்ந்த மனிதர் அரங்கினுள் நுழைந்ததுமே முத்தமிழ் மன்றத்தின் தலைவர் வண்ணதாசன் ஓடிச் சென்று இருகரங்களையும் பற்றி அரங்கினுள் அழைத்து வந்து ஒலிபெருக்கியை பற்றுகிறார்.

“எழுத்தாளர்களே! வாசகர்களே! இவர்தான் பி ரபல எழுத்தானர் வனஜா! சிங்கையின் எழிலை பருகி போக வந்தவர் : நம் முத்தமிழ் மன்றத்தின் அழைப்பை ஏற்று ந(0து எழுத்தானர் வாசகர்களோடு கலந்துரையாடலில் கலந்து கொள்ன வந்திருக்கார்! அவருக்கு முதலில் நமது நன்றியை தெரிவித்துக் கொண்டு உங்கள் சார்பாகவும் முத்தமிழ் மன்றத்தின் சார்பாகவும் இந்த மலர்மாலையை அணிவிக்கிறேன்|’ ‘ என்று கூறிய படி செயலானர் செல்லப்பன் நீட்டிய மாலையை லாவகரமாக வாங்கி எழுத்தாளர் வனஜாவின் கழுத்தில் சூட்டுகிறார் கர ஒலியால் அந்த சிறிய அரங்கம் அதிர்கிறது; மறுகணம் ஒரே…பளிச்! பளிச்! பளிச்! சற்று நேரத்துக்கு முன்பு முகமெல்லாம் பல்லாக வந்தவர்களுக்கெல்லாம் குளிர்பானப் பாக்கெட்டுகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த வள்ளல்தான் இப்போது புகைப்பட நிருபராக மாறி… குனிந்து -நிமிர்ந்து தாண்டி குதித்து பதுங்கி படுத்து இன்னும் பல கோணங்களில் எழுத்தாளர் வனஜாவை தனது புகைப்பட கருவிக்குள் திணித்துக் கொண்டிருந்தார். அவரின் செயல் சிலருக்கு வேடிக்கையாகவும் பலருக்கு வேதனையாகவும் இருக்கிறது. காரணம் அவர் வேறு யாருமல்ல; முத்தமிழ் மன்றத்தின் செல்லப்பிள்ளை! சிங்கை மணி. சிங்கை மணி பரந்த மனம் கொண்ட பொது தொண்டர். அவர் வெறும் தொண்டர் மட்டுமல்ல, சிங்கைத்தாயின் மடியிலே அவரும் ஓர் எழுத்தாளார்தான்! அவரது செய்கையை தமிழ்மறையானின் விழிக் வேதனையோடு நோக்குகின்றன. எழுத்தாளராக இருக்கும் இவர்… சபையிலே இப்படியா நடந்து கொள்ள வேண்டும்? வந்திருக்கும் அந்த எழுத்தாளர் இவரைப்பற்றி என்ன நினைப்பார்? எழுத்தாளனுக்கே உரித்தான அந்த தன்மான உணர்வு இவரிடம் கொஞ்சங்கூட இல்லையே! சிங்கை மணியின் செய்கை தமிழ்மறையானின் உள்ளத்தை நெருடுகிறது. முத்தமிழ்ச் சங்கத் தலைவர் வண்ணதாசன்… அந்த தமிழ்நாட்டு எழுத்தாளர் வனஜாவை கவிதை மொழியில் புகழோபுகழென்று புகழ வனஜா… அந்த புகழ் மழையில் நனைந்து உச்சிக்குளிர நிற்கிறார்.

தமிழ்மறையானின் சல்லடைக்கண்கள் வனஜாவை சலிக்க ஆரம்பிக்கின்றன! வலப்பக்கமாக வளித்து சீவப்பட்ட தலைமுடி, அடர்ந்த புருவங்கள்… ஒட்டிய கன்னங்கள்…. எடுப்பான மூக்கு… குவிந்த சிறிய உதடுகள். அந்த மேல் உதட்டுக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட பகுதியில் ‘கரு வண்டு அமர்ந்திருப்பது போல் கட்டையான குட்டை மீசை!’ வனஜாவின் தோற்றம் யாரையோ தமிழ்மறையா னுக்கு நினைவுபடுத்த… அவரது சிந்தனையில் ஓர் உருவம்; ஆம்! இரண்டாம் உலகப்போரில் இல்வுலகையே கதிலகங்க வைத்த சர்வாதிகாரி ஹிட்லரின் முகச்சாயல், வனஜாவின் முகத்தில் பிரதிபளிப்பதை காண்கிறார் தமிழ்மறையான். முத்தமிழ் மன்றத் தலைவர் ஒரு வழியாக தமிழ்நாட்டு எழுத்தாளருக்கு புகழ்மாலையை சூட்டி முடிக்க மீண்டும் கர ஒலி. அரங்கை அதிர வைக்கிறது. புன்னகை முகத்தில் ஒளி வீச. .. ஒலிபெருக்கியின் முன் வந்து நிற்கிறார்.. வனஜா. சிங்கையின் எழிலை நம் மக்களின் உழைப்பை… ஒற்றுமையை தமிழரின் தமிழ்ப்பற்றை.. தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி அவர் பேச போகிறார் எனும் எண்ணத்தில் ஆசையில் தன் செவிகளை கூர்மையாக்கிக் கொள்கிறார்… தமிழ்மறையான். ஆனால் ஏமாற்றம்! சிங்கை திருநாட்டைப் பற்றியோ… மக்களின் மாண்பைப் பற்றியோ அவர் பேசவில்லை! இங்கு வந்துபோன மற்ற எழுத்தாளர்களைப் போலவே அவரும் தான் எழுத்துலகில் நுழைந்த விதத்தையும் ஆற்றிய சாதவுகளையும் வெளிக் கொட்டுகிறார். தான் பணியாற்றிய பத்திரிகைகளைப் பற்றியும் தன்னுடைய எழுத்துக்குக் கிடைத்த பரிசு, பதக்கங்களைப் பற்றியும் தன் எழுத்தில் மயங்கி தன்னை வட்டமிட்ட பெண்களைப் பற்றியும் தன்னை மறந்து அவர் சொல்லி மகிழ்ந்துக் கொண்டிருக்க அவ்வப்போது கர ஒலி எழுப்பி… அவர் மென்மேலும் அள்ளிவிடுவதற்கு வடிகால்களை வெட்டிக் கொடுகின்றனர். எழுத்துலக ஏட்டிலே நடைபயில ஆரம்பித்திருக்கும் இளம்பயிர்கள்! உற்சாகமூட்டினால் மண்புழுவும் துள்ளி குதிக்கத்தானே செய்யும்! இளம்பயிர்கள் கைத்தட்டி ஊட்டிய உற்சாகத்தில் வனஜாவின் பேச்சு மடை திறந்த வெள்ளமாகிறது. ஆனால் அந்த பேச்சு… மூத்த எழுத்தாளர்களை முகம் சுளிக்க வைக்கிறது. ஆம்! தனக்குத்தானே அவர் புகழ்மாலைச் சூட்டிக் கொள்கிறார். சுற்றி வளைத்து, ‘இந்த உலகத்திலே தானே பெரிய எழுத்தாளன் இலக்கியவாதி என்பதை அவர் சொல்லாமல் சொல்லுகிறார். அவருடைய பேச்சை வாகர்களும் இளம் எழுத்தாளர்களும் ரசிக்கின்றனர்; மூத்த எழுத்தாளர்களோ ரசிப்பது போல பாவனை செய்கின்றனர். ஆனால் ஜாடைமாடையாக ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தத்தோடு சிரித்துக் கொள்கின்றனர். ஒரு வழியாக வனஜா தன் மடைத்திறந்த பேச்கக்கு முற்றுப்புள்ளி வைக்க.. கர ஒலியால் அரங்கம் மீண்டும் அதிர்கிறது. முத்தமிழ் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சில பேச்சாளர்கள் மேடையில் தோன்றி… தமிழ் இலக்கியத் துக்கு புதுமை சேர்த்தவர்… அறிவியலை நிழலாடவிட்டவர் நம் வனஜாதான் என்று கூறி கனமான புகழ்மாலைகளை அவருக்கு சூட்ட அதனால் அவரது உச்சிக்குளிர அவரது முகமெல்லாம் பல்லாகுகிறது. மேடை முழக்கங்கள் ஓர் முடிவுக்கு வர சிற்றுண்டி வேளை ஆரம்பமாகிறது.

சிற்றுண்டி வேளையின் இறுதியில் கலந்துரையாடல் இடம் பெறுகிறது மூத்த எழுத்தாளர்கள் ஒரு பக்கம் ஓரம்கட்ட…. வளரும் எழுத்தாளர்களும் வாசகர்களும் வனஜாவோடு கைக்குலுக்கிக் கொண்டும்… கையெழுத்து வாங்கிக்கொண்டும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் இருக்கின்றனர். எழுத்துலகின் இளம் பயிர்கள்…. சில… தங்களது எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள அவரிடம்… ஆலோசனை கேட்டு நிற்கின்றனர். அவர் புதிதாக புதுமையாக எண்னா சொல்லப் போகிறார்? என்பதை அறிந்துகொள்ள தமிழ்மறையான் தன் செவிகளை தீட்டிக் கொள்கிறான்.

நிறைய படியுங்கள்! படித்ததை சிந்தியுங்கள் சிந்தித்ததை… காகிதத்தில் கிறுக்குங்கள்; கிறுக்கியதை கூட்டிக் கழியுங்கள்! சிறுகதை எழுதும் ஆற்றல் உங்களை அறியாமலேயே உங்களை வந்தடையும்! என்று…. பிரபல எழுத்தாளர்கள் சிறுகதை எழுத விரும்புவோருக்கு எழுதும் அந்த தாரகமந்திரத்தையே… வனஜாவும் ஓதுகிறார். தமிழ்மறையானுக்கும் ஏமாற்றம்! மூத்த எழுத்தாளர்களின் முகங்களிலே கேலிப்புன்னகை! அலைபாய்கின்றன அப்போது முத்தமிழ் மன்றத் தலைவர் வண்ணதாசன் உள்ளுர் எழுத்தாளர் சிலர் எழுதிய சிறுகதைகளை… கதை பிரதிகளை. கொண்டு வந்து வனஜாவின் கையில் கொடுக்கிறார். “சார்! இது எங்க சிங்கப்பூர் எழுத்தாளர்களோட சிறுகதைங்க! இந்த கதைகளை கொஞ்சம் ஆய்வு செஞ்சி… உங்க கருத்தை சொல்லுங்க சார். அது எங்க எழுத்தாளர்களுக்கு பெருமை சேர்க்கும்!” என்கிறார்.

“உங்க எழுத்தாளர்களோட சிறுகதைங்களா! ஹும்! பார்க்கிறேன்! அப்படி என்னதான் எழுதியிருக்காங்கன்னு! பார்த்து சொல்லுறேன். அலட்சியமாக கூறியபடி அந்த சிறுகதை பிரதிகளை அலட்சியமாக நோக்குகிறார்… வனஜா; அவரை வெறுப்போடு நோக்குகிறார் தமிழ்மறையான். வனஜாவின் கதைகளை படித்திராவிட்டாலும்… தமிழகத்தில் அவர் ஒர் பிரபலமான எழுத்தாளர் என்ற முறையில் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் தமிழ்மறையான். ஆனால் இன்று…? அதோ! கால் மேல் கால் போட்டு சொகுசாக அமர்ந்து கொண்டு வலக்கையால் பூரியை சட்டினியில் நனைத்து சுவைத்தபடி தன் மடிமீது கிடக்கும் கதைப்பிரதிகளை அவரது இடதுக்கரம் பற்றுகிறது; அவரது இடக்கர கட்டை விரல்… ஆள்காட்டி விரலின் துணையோடு முதல் பக்கம் இரண்டாம் பக்கங்களை புரட்டிவிட்டு, ஒரே நாவலாக கடைசிப் பக்கத்துக்கு தாவுகின்றன. ஆம் நுனிப்புல்லை மேயும் மாட்டைப்போல கதைகளை வனஜா ஆய்வு செய்யும் விதம் மூத்த ஏழுத்தாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. ஒருவேளை… ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் மாதிரி… ரெண்டு மூணு வரிகளைக் கொண்டே கதையின் தரத்தை அறிந்து கொள்ளும் ஆற்றல் இவரிடம் இருக்கிறதோ எனும் ஐயத்தில் எல்லோரும் மூழ்கி நிற்க, தனது மடியில் கிடந்த கதைப்பிரதிகளை அள்ளி, அலச்சியமாக வண்ணதாசனிடம் நீட்டுகிறார் வனஜா!

“என்னங்க… சார்….! இந்த கதைகளைப் பத்தி ஒண்ணுமே சொல்லலயே?” நம் எழுத்தாளர்களின் தரத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்கிறார்…. முத்தமிழ் மன்றத் தலைவர் வண்ணதாசன். அவரை அலட்சியமாக நோக்குகிறார் வனஜா – அவரது விழிகளிலே ஏளனம்!

“எனக்கு எதையுமே வெளிப்படையாகப் பேசிதான் பழக்கம். நா உண்மையை சொல்லப் போறேன்; யாரும் என் மேலே வருத்தப்படக் கூடாது; நண்பர் வண்ணதாசன் ‘கதைங்கன்னு சொல்லி இந்த ஸ்கிரிப்டுங்களை கொடுத்தாரு! ஆனா இதுங்களே கதைங்களே இல்லை! வெறும் குப்பைங்க! இதையெல்லாம் கதைங்கன்னு சொன்னால்…. கதைங்களுக்கே மதிப்பில்லாமே போயிடும்! இங்கே கதை எழுத விரும்புறவங்க…. முதல்லே நிறைய கதைங்களை படியுங்க! அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டு எழுத்தாளர்களோட கதைங்களை படிச்சாலே போதும்… கதை எழுதுறது எப்படின்னு உங்களுக்கு புரிஞ்சிடும். அதைவிட்டுவிட்டு சிறுகதைக்கு இலக்கணம் தெரியாமே இப்படி கிறுக்கினால் இதுங்க சிறுகதையாயிடுமா? தலையில்லாமே வாலில்லாமே… சேச்சே! இதுங்களாம் கதைங்கள்…? குப்பைங்க!”. ஏளன வார்த்தைகளை அவர் அள்ளி வீச… மூத்த எழுத்தாளர்களின் முகங்கள் கருக்கின்றன. அங்கே சலசலப்பு! எந்த எழுத்தாளராவது உணர்ச்சிவசப்பட்டு… பொறுமையிழந்து வசைமொழியால் வனஜாவை நாறடித்து விடப் போகிறாரோ என்று எண்ணி அஞ்சிய முத்தமிழ் சங்கத் தலைவர் வண்ணதாசன் தனது விழிகளை மின்னற் வேகத்தில் மூத்த எழுத்தாளர் பக்கம் நழுவவிடுகிறார்; ஆனால் காரியம் மிஞ்சிவிட்டது. இது பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்சாது எனும் தோரணையில் வனஜா ஏளனப் பேச்சை தொடர….. தன்மான உணர்வில் சிலிர்த்தெழுகிறது ஓர் கிழட்டுச் சிங்கம். சிங்கம் கிழடானாலும் அதன் வீர கர்ஜனை முடமாகியா போய்விடும்?

“எங்க நாட்டுக்கு வந்து எங்க சங்கத்துலே உட்கார்ந்துக்கிட்டு நாங்க கொடுத்த பூரியையும் கிழங்கையும் சுவைச்சுக்கிட்டு… எவ்வளவு செளடாலாக எங்க கதைங்களை குப்பையின்னு சொல்லுவீங்க! நாங்க என்னா உங்க மாதிரி பத்திரிகையிலே ஆசிரியராய் வேலைப்பார்த்து மனம்போன போக்கில் கண்டதையெல்லாம் கிறுக்கி அவற்றை நாவல் என்றும்… சிறுகதை என்றும் பெரிசா விளம்பரப்படுத்தி… விளம்பரத்தா லேயே ஓர் எழுத்தாளனாய் உங்களை உயர்த்திக்கிட்ட நீங்க… படிக்கிறவங்க புரிஞ்சிக்கிற மாதிரி ஓர் நாவலோ ஓர் சிறுகதையோ எழுதத் தெரியாத ஓர் அரைவேக்காடு நீங்க| நீங்க போயி எங்கக் கதைங்களை குப்பை – ன்னு சொல்லுறீங்க! எழுத்துத்துறையிலே… சிறுகதை துறையிலே ஊறிப்போன் பழுத்த அனுபவசாலிங்க பலர் இங்கே இந்த சிங்கை நாட்டிலே இருக்கோம்! அதை நிரூபிக்க எங்க நாட்டு எழுத்தாளர்கள் சார்பில் இப்பவே…உங்களோடு போட்டியிட நான் தயார்..! நீங்க தயாரா? “சிங்கை நாட்டின் பழம்பெரும் எழுத்தாளர்களின் ஒருவரான சே.வே.சா தான் தன்மான உணர்வால் குமுறி எழுகிறார். சிங்கை வாழ் தமிழ் எழுத்தாளர்களிலேயே மிகுந்த கோபக்காரராக… விசுவாமித்திரராக விளங்கும் தமிழ்மறையானோ… சபை அடக்கத்தை மனதில் கொண்டு… சே.வே.ச.வை சாந்தப்படுத்துகிறார்.

“அவர் விருந்தினராக வந்திருக்கார்! ஆகையால் விருந்தோம்பலை மனதிற் கொண்டு கொஞ்சம் பொறுமையாக இருங்க சார்! இவர் இப்படி பேசுவதற்கு வழிவகுத்து கொடுத்ததே நாம்தான். தமிழ்நாட்டிலே கொடிகட்டி பறக்கிற எழுத்தாளர்களையெல்லாம் விழுங்கி ஏப்பமிடக்கூடிய உங்களைப் போன்ற பழுத்த எழுத்தாளர்கள்… இலக்கிய வாதிங்க நம்ப நாட்டிலே நிறைய இருக்காங்க! இருந்தும் நம் திறமை வெளியுலகுக்கு தெரியாமலேயே இருக்கு! காரணம்…. நாமே குண்டு சட்டிக்குள்ளே குதிரைய ஓட்டிக்கிட்டிருக்கோம்! நம்ப நாட்டுக்குள்ளேயே நம்ப எழத்துத்திறனை காட்டிக்கிட்டிருக்கோம் நம்முடைய படைப்புகள் நூட்கள்… வெளிநாட்ட வாசகர்கள்…. குறிப்பாக தமிழ்நாட்டு வாசகர்களின் கைகளில் தவழ்ந்தால்தான் நாமும் தமிழ்நாட்டு எழுத்தாளர்களைப் போல் புகழ் பெற முடியும்! குடத்துக்குள் எரியும் விளக்காய் இராமல், குன்றின் மேல் எரியும் விளக்காய் நாம் பிரகாசிக்க வேண்டுமானால் நம்முடைய படைப்புகள் நூட்கள் தமிழ் நாட்டு வாசகர்களை போய் சேர வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டு வாசகர்கள்… எழுத்தாளர்கள் நம்முடைய எழுத்தாற்றலை அறிந்து நமக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள்!” என்று தமிழ்மறையான் சொல்லி முடிக்க உற்சாகமிகுதியால் தலைவர் கைதட்டுகிறார். திரு.தமிழ் மறையான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை! நம் சிங்கை எழுத்தாளர்களை எல்லாம் விரைவில் ஒன்றுதிரட்டி இது குறித்து விவாதித்து ஓர் நல்ல முடிவெடுப்போம்; நமது எழுத்தாளர்களின் ஆற்றலை தமிழ்நாட்டு வாசகர்கள் அறியும்படி செய்வோம்! இன்று… இக்கரைக்கு அக்கரை’ பச்சை! நாளை அக்கரைக்கு இக்கரை பச்சையாகிவிடும். மீண்டும் அரங்கம் கரவொலியால் அதிர்கிறது.

– புது அப்பா!, முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்

அமரர் கா.சங்கையா 1950இல் சிங்கப்பூரில் பிறந்தார். கலைமகள் பாடசாலையில் தனது ஆரம்பப் பள்ளி வாழ்க்கையைத் தொடங்கி அதன் பின்னர் உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் பயின்று தமிழ்மொழியில் தேர்ச்சி பெற்றார். மாணவ பருவத்திலேயே தம் தூவலைத் தூரிகையாக்கித் தாளில் தடம் பதித்தவர். 1965இலிருந்து வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய படைப்புகளுக்கு வரவேற்பு இருந்தன. சிறுவர் நிகழ்ச்சிகளிலும் சிறு வயதிலேயே சிறகடித்தவர். சிறுவர் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழ் மலர், தமிழ்முரசு,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *