ஆலய தரிசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 15, 2021
பார்வையிட்டோர்: 3,562 
 

அபிராமியம்மா மீளாத்துயிலில் ஆழ்ந்திருந்தா. வெள்ளை வெளேறென்ற அவவின் முகத்தில் ஒரு நாணயம் அளவு குங்குமப்பொட்டு

மிளிர்ந்து கொண்டிருந்தது.நிரந்தரப் புன்னகையொன்று இதழ்கடையில் விரிந்து முகத்தை மேலும் பொலிவுபடுத்தியது.

வாழ்வினை நிறைவாக அனுபவித்துப் பூர்த்தியாக்கிச் சுமங்கலியாகப் போகிறேன் என்ற நினைப்பு அவரது புன்னகைக்குக் காரணமாகலாம்.

இந்தக் காலத்தி பூட்டப்பிள்ளையைக் காணும் வரை வாழ்வது சாதாரண காரியமா?

அதிக நோயாலும் அறுபது ஆண்டுகளாகத் தம் ஜீவனோடு கலந்து விட்டவளின் பிரிவைத் தாங்க முடியாமலும் உண்டான துயரங்களைத் தன்னுள் அடக்கி அந்த நினைவுச் சுழியில் அமுங்கியிருந்த பரமசாமியைத் தவிர இந்த மரணத்தை அவரது குடும்பம் இயல்பாக ஏற்றுக் கொண்டது போல இருந்தது. ஒப்பாரி முதலிய சடங்காசாரங்களின்றி சாயி பஜனைக் குழுவின் உருக்கமான பக்திப் பாடல்கள் மட்டும் அந்த வீட்டில் ஓங்கி ஏதோ ஒருவகையான அமைதியை நிலவப்பண்ணியது.

அபிராமியம்மா ,பரமசாமி தம்பதியருக்கு ஐந்து பிள்ளைகள். பரமசாமி கச்சேரியில் கிளார்க்காக உத்தியோகம் பார்த்த போதும் தமது பரம்பரைத் தொழிலான தோட்டத் தொழிலையும் விடவில்லை. அபிராமியம்மா இவரது தோட்டத்தில் தானும் ஒருத்தியாகப் பாடுபட்டிருக்கிறார். இதனால் அவர்களது செவ்வையான வாழ்வில் வறுமை எட்டிப் பார்த்ததில்லை.மூன்று மகன்களையும் படிப்பித்து எஞ்சினியர் ,டொக்ரர் எனப் பெரியவர்களாக்கி விட்டார்கள். பெண்களிலொருத்தி நேர்ஸ். கடைக்குட்டி சாந்தா ஆசிரியை.கடைசி மகன் கொழும்பில் வசிக்கிறார். சாந்தா ரீச்சர் மட்டுமே யாழ்ப்பாணத்தில் குடும்பத்தோடு இருக்கிறார்.ஏனைய பிள்ளைகள் குடும்பமாக வெளிநாடுகளில் வசிக்கிறார்கள்.

கொழும்பிலிருந்த மகன் தாயைப் பார்க்க சென்ற கிழமைதான் யாழ்ப்பாணத்துக்குக் குடும்பத்தோடு வந்திருந்தார்.அந்த மகிழ்ச்சியின் பூரிப்பு அபிராமியம்மாவிடம் தெரிந்ததை நான் இங்கு வந்திருந்த போது நன்கு அவதானித்தேன்.

”ௐம் குஞ்சு நான் வாழ்க்கையில அனுபவிக்க வேண்டியதெல்லம் மகிழ்ச்சியா நிறைவா அனுபவிச்சிட்டன்.அந்தக் கந்தன் என்னை எப்பவும் கைவிடேல்ல.” அப்போது அவ எனக்குச் சொன்ன வார்த்தைகள் இவை.

உலகில் வாழும் எத்தனை சீவன்கள் இத்தகைய திருப்தியை அனுபவிக்கின்றன.? வாழ்க்கை கரடுமுரடாக இல்லவிட்டாலும் தமது செயல்களால் வலியக் குத்தி குதறி எத்தனை பேர் தங்களையும் மற்றவர்களையும் காயப்படுத்திக் கொள்கின்றனர்.

அபிராமியம்மாவின் வாழ்வுக்குத்தான் எத்தனை அர்த்தங்கள். எத்தனை பரிமானங்கள்.

“ நேற்று அம்மா எங்களோட அண்ணாவோட எல்லாம் கதைச்சிட்டு பதினொரு மணியளவிலதான் படுத்தவ.அப்பா நாலுமணியளவில எங்களை எழுப்பி “ஆம்மாவுக்கு என்னமோ செய்யுது.. ஒருக்கா வாங்கோ” எண்டு கூப்பிட்டார். .நாங்கள் எல்லோரும் சுற்றி நிண்டம் அம்மா தண்ணி கேட்டிட்டு எல்லோரையும் ஒரு முறை பார்த்தா.அவவின் பார்வை கடைசியில அப்பாவில நிலைச்சுது.அண்ணா தண்ணி பருக்க ஒருவாய் குடிச்சா.அதோட சீவன் போட்டுது.” பெற்ற தாயின் கடைசி நிமிடங்களை விபரிக்கும் போது சாந்தா ரீச்சரிடம் ஒரு கேவல் எழுந்து ஒரு கணம் அந்த வீட்டை அதிரச் செய்தது.

எனக்குள் முட்டி மோதிக் கொண்டிருந்த துயரம் எத்தனையோ பிரயத்தனம் எடுத்தும் அடக்க முடியாது ரீச்சரின் கேவலோடு இணைந்து வெளிப்பட்டது. எல்லோரும் அதிசயமாக என்னை நோக்கினர்.என்னை நான் கட்டுப் படுத்திக்கொண்டு முழங்கால்களுக்குள் என்னைப் புதைத்துக் கொள்கிறேன்.

“அபிராமியக்காவிண்ட சாவு போல ஆருக்கு வரும் . மனிசி நோய் நொடி எண்டு எதுவுமில்லாமல் குடும்பத்துக்கு நேற்றுவரை உதவி செய்துகொண்டல்லே இருந்தது.” ஏறத்தாழ சம வயது மீனாட்சியின் சொல்லில் யதார்த்தம் மட்டுமல்ல ஆதங்கமும் இருக்கத்தான் செய்தது.

பஜனை நிறுத்தப்பட்டு கிரியைகள் ஆரம்பமாகின்றன.அபிராமியம்மா ,ராமசாமி தம்பதிகளின் வாழ்க்கைச் சிறப்பு அங்கு அலை மோதிய சனங்களின்பெருக்கத்தில் தெரிந்தது.

கிரியைகள் விரைவாக நிகழ்ந்தேறுகின்றன. அபிராமியம்மாவை இறுதியாக என் கண்களுக்குள் அகப்படுத்திக்கொள்ள

வேண்டும் என்ற துடிப்பு உந்த அவவின் உடலுக்கு மிக அருகில் சென்று நிற்கிறேன்.

பேரப்பிள்ளைகள் பந்தம் பிடித்து அபிராமியம்மா மீது தங்களுக்குள்ள உரிமையை நிலைநிறுத்தி நிற்கிறார்கள். அவர்கண்களில் அன்புப் பாட்டியின் இழப்பால் ஏற்பட்ட துயரம் கண்ணீராய் வழிகிறது. அவரது பிள்ளைகள் அவரை வலம் வந்து வணங்குகிறார்கள்.

எனது கண்கள் அபிராமியம்மாவின் முகத்தில் நிலைக்கிறது.அங்கு அவர்கள் தங்கள் தாயைக் கிடத்தியிருக்கிறார்கள்….’?

இல்லை எனது தெய்வமே ….கண்கள் குளமாகின்றன. அந்தத் தெய்வத்தை ஒரு முறையாவது வலம் வந்து கும்பிட வேண்டும் என்ற உந்துதல் என்னையும் மீறி…எனது மூளையின் கட்டளைக்கு அல்ல இதயத்தின் கட்டளையை ஏற்றுக் கால்கள் முன்னேறுகின்றன.அம்மாவின் மிக நெருக்கமான உறவினரோடு நானும் அவரை வலம் வருகிறேன்.எனது தெய்வத்தின் கால்களைக் கட்டிக்கொண்டு கதருகிறேன்.என்னோடு மேலும் இரு பெண்கள் இணைந்து கதருகிறார்கள்.

எங்கள் கண்ணீரால் அபிராமியம்மாவின் பாதங்கள் நனைகின்றன.எங்கள் அழுகை சில நிமிடத்துளிகளை விழுங்குகிறது.

எங்களது இச்செயலின் தார்ப்பரியம் புரியாது சாந்தா ரீச்சர் உட்பட அனைவரும் திகைத்து நிற்கிறார்கள்.

1987 கார்த்திகை மாதம் ..எங்கள் பிரதேசத்தின் அமைதி முற்றாக அழிந்து போயிருந்தது. அன்று இரவு பன்னிரண்டுமணியிருக்கும். இரண்டு துவக்குச் சூடுகள் அந்தகாரத்தைக் கிழித்துக்கொண்டு எழுந்தது.அதனைத்தொடர்ந்த பல சூடுகள் …..இராணுவம் நடமாடும் ஓசைகள்… நாய்களின் குரைப்பொலி ….அந்தக் கிராமத்தின் நித்திரையை முற்றாகக் குழப்பிவிட்டது.

மனதில் இனம் புரியாத பீதியுடன் போர்வைக்குள் என்னை முடக்கிக் கொள்கிறேன்.அக்கா ,அத்தான் எழும்பிக் கதைத்தது பிள்ளையை எழுப்பியிருக்க வேண்டும் . அது வீரிட்டுக் கத்துகிறது.அக்கா அதைச் சமாதானப் படுத்தப் பிரயத்தனப்படுகிறா.

குழந்தையின் அழுகை இராணுவத்தின் கவனத்தை ஈர்த்துவிடுமோ என்ற பயம் என்னைக் குடைகிறது. வேர்வையால் தெப்பமாய் நனைந்துபோகிறேன்.நெஞ்சுப் படபடப்பு காதுவரை கேட்கிறது.

நான் பயந்தது போலவே …இராணுவம் வேலியை வெட்டி உள்ளேவருகிறது .நாய் அவர்கள் வருகையை கட்டியம் கூறுவது போல ஊளையிடுகிறது..

தடார் ..தடார்… எனத் தட்டப்படுகிறது கதவு. கோடிப்பக்கமாக இராணுவத்தின் அழுத்தமான சப்பாத்து ஒலி…..எனது அறை யன்னல் அருகே கறுத்த உருவமாய் ஒரு ஆமி,….அவன் ஆக்ரோசமாக யன்னலில் துவக்கால் ஓங்கியடிக்கிறான்.யன்னல் கண்ணாடி கலீர் என்ற ஓசையுடன் சுக்கு நூறாய் உடைந்து விழுகிறது.

கட்டிலில் கிடந்த நான் ஒரு கணம் செயலற்றுப் போகிறேன்.இரத்தம் உறைந்து கால்கைகள் விறைத்து போகின்றன. தப்பு ..தப்பு ..என்று மனக்குரல் என்னை அறையில் ஊர்ந்து வெளியேற வைக்கிறது.அக்கா குழந்தையுடன் கோலுக்குள் வந்து நிக்கிறா.அவவின் பின் போய் ஒடுங்குகிறேன். கதவு மேலும் ஆக்ரோசமாகத் தட்டப்படுகிறது.இனியும் கதவு திறக்கப்படாவிட்டால் கதவு உடைக்கப்படும் என்பதையும் அதன் விளைவு பயங்கரமானதாய் இருக்கும் என்பதையும் கணித்துக் கொண்ட அத்தான் கதவைத்திறக்கிறார்.அத்தானை வேகமாகத் தள்ளியபடி திபு திபு என்று உள்நுழைந்த இராணுவம் ஒவ்வொரு அறையாக நுழைந்து வருகிறது. ஹிந்தியில் ஏதோ பேசியவாறு வந்த ஒரு ஜவானின் பார்வை என்னில் நிலை குத்துகிறது.

நான் ஒடுங்கிப்போகிறேன்..உடம்பு நடுங்குகிறது.அந்த இடத்திலேயே உயிர் போய் விடக் கூடாதா என மனம் ஏங்குகிறது.

ஒரு கணப் பொழுதில் அத்தான் தாக்கப்படுகிறார்.அக்கா எவ்வளவோ கதறியும் கெஞ்சியும் பலனின்றி நான் அவர்களால் இழுத்துச் செல்லப்படுகிறேன்.தப்புவதற்கு என்னால் எடுக்கப்பட்ட எல்லா முயற்சியும் தோற்றுப் போகக் கிட்டத்தட்ட மயக்க நிலையை அடைகிறேன்.

அந்த உடைந்து பாழடைந்திருந்த வீட்டுக்கு இழுத்துவரப்பட்டபோது அங்கு கிட்டத்தட்ட 20 பேர் அளவில் எங்களூர்ப் பெண்கள்..—அநேகர் என்னோடுபடித்த தோழிகள்…..

பலிக்கடாக்களான எங்களைச் சுற்றி இறச்சியை உண்ணக் காத்திருக்கும் வெறிபிடித்த பசி நாய்களாய் இராணுவம்.

எங்கள் இறுதிக் கதரல் …மண்டபத்தில் எதிரொலித்து எங்களிடமே திரும்பிவருகிறது. எங்களில் பலர் மயங்கி விழுகின்றனர். வாழ்க்கையின் இறுதி நம்பிக்கைத் துளியும் என்னுள் வறண்டு போகிறது.

அப்பொழுதுதான் அந்தப் பேரதிசயம் நிகழ்கிறது.அபிராமியம்மா இராணுவ அதிகாரியோடு அபிராமி அம்மனே தன் பரிவாரங்களுடன் தோன்றியதாய்….

இராணுவ அதிகாரிகளைக் கண்ட போது வெறி நாய்கள் சலூட் அடித்து மெல்ல நழுவப்பார்கின்றன.அனால் அதிகாரிகளின் கட்டளை அவர்களுக்குரிய தண்டனையின் தன்மையை விளக்குகிறது. அவர்கள் மற்றைய இராணுவத்தால் பிடிக்கப்படுகிறார்கள் .

நாங்கள் அபிராமியம்மாவைக் கட்டிக் கொண்டு அழுகிறோம்.அதிகாரிக்கு நன்றி சொல்லி எங்களை அவ பொறுப் பேற்றுக்கொள்கிறா.தெய்வத்தை தொடரும் பக்தைகளாக் நாம்….

அபிராமியம்மவின் அயல் விட்டுப் பெண்ணான கலா பிடிக்கப்பட்டபோது அபிராமியம்மா அவளை விடுவிக்க இராணுவத்தோடு எவ்வளவோ போராடியிருக்கிறா .துவக்குப் பிடியினாலான அடியே அவவுக்குப் பரிசாகக் கிடைக்கிறது.அவ்வாறு போராடியபோதே அங்கு இராணுவ அதிகாரி எவரும் இல்லாததை அனுமானித்துக்கொள்கிறா. இராணுவம் போனபின் அந்தப் பயங்கரமான கண்ட இடத்தில் சுடும் ஊரடங்குச் சட்டம் அமுழில் உள்ள வேளையில் தன்னுயிரைப் பற்றி சிறிதும் பொருப்படுத்தாது ஓட்டமும் நடையுமாய் இராணுவ முகாமுக்குச் சென்றிருக்கிறா ,அங்கே பெரிய கூக்குரலிட்டு இராணுவ அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துத் தமக்குத்தெரிந்த ஆங்கிலத்தில் எங்கள் நிலமையை விபரித்திருக்கிறா.

இராணுவ அதிகாரி நல்லவராக இருந்திருக்க வேண்டும்.மேலும் தம்முடைய ஜவான்களின் திருவிளையாடலும் அது நிகழும் இடமும் அவருக்குத் தெரியாது இருக்க நியாயமில்லை. அதனால் உடன் நடவடிக்கை எடுத்தார்.

அபிராமியம்மா வீட்டை நாம் அடைந்த போது நாம் எல்லோரும் களைத்துப் போயிருந்தோம். யமனின் வாசலுக்குப் போய் வந்தது போலிருக்கிறது.சாந்தா ரீச்சரும் பிள்ளைகளும் கணவர் வீட்டிற்கு சென்றிருந்ததால் நல்லதாகப் போயிற்று. எங்களைக் காலைவரை அங்கேயே தங்க வைத்தா.

“பிள்ளையள் இப்ப நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கோ. முருகண்ட கருணையால நீங்கள் காப்பாத்தபட்டியள். இந்தச் சமூகம் கெட்டது. பனிபுகாரைக் கண்டிட்டு நெருப்புத்தான் எண்டு சத்தியம் பண்ணும் .அதால நடந்த ஒரு விசயத்தையும் நீங்கள் உங்கட வாழ்நாள் வரை வெளியிடக்கூடாது. உங்களைப் பெத்தவை ,உடன்பிறப்புக்களிட்டையும் இதைத்தான் சொல்லுங்கோ. நானும் இதப்பற்றி மூச்சு விடமாட்டன்.”

“எங்களைத் தெய்வமா காப்பாத்தினீங்கள்.நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் கேப்பம்” ஒருமித்துக் கோரஸ் பாடினோம்.

கலகலத்துச் சிரிச்சு இப்படிச் சொன்னா அபிராமியம்மா.”நான் தெய்வமும் மில்லை சந்நிதியுமில்லை. எங்கட முருகமூர்த்தியான்தான் உங்களைக்காப்பாத்த என்னக் கருவியாக்கினான்.”

ஓம் முருகந்தான் உங்களுக்குள்ள புகுந்து எங்களைக் காப்பாத்தினான். ஆனா முருகன் தோன்றின உங்கட உடம்பு எங்களுக்குக் கோயில்தான்.

பத்து வருட இடைவெளியில் நாங்கள் மூன்று பேர்தான் ஊரில் குடும்பமாகச் சீவிக்கிறம். எங்கள் அழுகையின் அர்த்தம் எங்கள் மூவருக்குத்தான்புரியும். இந்த இடத்தில் ஊரவருக்கு நாங்கள் மூவரும் புதிர்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *