கதையாசிரியர்:
தின/வார இதழ்: மறுமலர்ச்சி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 9, 2021
பார்வையிட்டோர்: 5,601 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவளுடைய மூதாதைகள் ‘அவளுக்கு’ என்று வைத்துவிட்டுப் போனது அந்த ஆலமரம் ஒன்றைத்தான். அந்த உடைந்த சட்டி விளிம்பில்லாத பானை, அடுப்பாக உபயோகிக்கும் மூன்று கற்கள், தென்னம்பாளை – யாவும் அவளாகத் தேடிக்கொண்டவை. அவள் அறிந்த மட்டில் அவளுக்கு இன பந்துக்கள் யாருமிருப்பதாகத் தெரியவில்லை. எலும்பினாலும், தோலினாலும் மாத்திரமே ஆக்கப்பட்டது போன்ற ஒரு நாய்தான் அவளுடைய பந்து; உயிருக்குயிரான காவலாளியுங் கூட.

காலையில் எழுந்தவுடன் தென்னம்பாளையினால் அம்மரத்தைச் சுற்றி நன்றாகச் சுத்தம் செய்வாள். அருகே இருக்கும் நீரோடைக்குச் சென்று பானையில் நீர்கொண்டுவந்து தான் கூட்டிய இடங்கட்குத் தெளிப்பாள். பின் பழைய சோறு ஏதாவது இருந்தால் தானுமுண்டு தன் நாய்க்கும் கொடுப்பாள். பொழுது நன்றாகப் புலர்ந்ததும், அந்த உடைந்த சட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு பிச்சைக்குப் புறப்படுவாள். போகும்போது தன் நாயை வாத்சல்யத்தோடு தடவிவிட்டுச் செல்வாள். அதுவும் தன் வாலைக் குழைத்து இருதயபூர்வமான நன்றியைக் கண்கள் மூலம் தெரிவிக்கும்.

தெருத் தெருவாக அலைவாள். மூலை முடுக்கெல்லாம் போவாள். யாராவது இரங்கி ஏதாவது உணவு கொடுத்தால், அதைப் பத்திரமாக உண்ணாமல் வைத்துக் கொள்வாள். ‘ஏன் சாப்பிடாமல் கொண்டு போகிறாய்?’ என்று யாராவது கேட்டால் ‘நடக்கமுடியாத ஒரு கிழவனுக்குக் கொண்டு போகிறேன்’ என்று கூறுவாள். அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு ஏங்கியிருக்கும் அந்த நாயின் அருமை அவளுக்கல்லவோ தெரியும். ஆலமரத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கந்தல்களையும் மற்றப் பொருட்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் காவலாளி அல்லவா அது.

சுமார் இரண்டு மூன்று மணிக்குத் தன் இருப்பிடம் நோக்கி விரைந்து செல்வாள். அவளுக்கு முன்னால் அவளுடைய உள்ளம் பறந்துகொண்டிருக்கும். தூரத்தில் வரும்பொழுதே கரிய முகில் கூட்டத்தைப்போல ஆலமிலைகளின் கூட்டம் காட்சியளிக்கும். அவளுடைய உருவங் கண்ணிற்பட்டதும் தாயைக் கண்டவுடன் துள்ளிக்குதித்தோடும் பசுக் கன்றைப்போல் அந்த நாய் ஓடிச் சென்று அவளைச் சுற்றிச் சுற்றி வாலைக் குழைக்கும். அவளும் அன்போடு அதைத் தடவிக் கொடுப்பாள்.

ஆலமரத்தின் கீழே உட்கார்ந்ததும் அவளுடைய களைப்பெல்லாம் மாயமாய் மறைந்துவிடும். கொண்டுவந்ததை நாயோடு பகிர்ந்து உண்பாள். சிறிது நேரம் சென்றபின் பக்கத்திலுள்ள நீரேடைக்குச் சென்று குளிப்பாள். சுமார் ஆறு, ஏழு மணியளவில் அரிசி இருந்தாற் சோறாக்குவாள். இதற்கிடையில் அவளுடைய நண்பர்கள் – காகங்கள், குயில்கள் முதலியன – கா, கூ என்று ஆரவாரித்துத் தாங்கள் வந்திருப்பதை அவளுக்குத் தெரிவிப்பார்கள். எல்லோருமுறங்கியபின் அவளும் அந்த வேரில் தன் தலையைச் சாய்ப்பாள். அந்த ஆலம்வேர் தான் அவளுடைய தலையணை. அவளுடைய குருட்டுத் தாத்தா உறங்கியதும் அதே வேரில் தலைவைத்துத்தான். சீமேந்தால் மெழுகப்பட்ட சுவரைப்போல அந்தவேர் அழுத்தமாக இருந்தது.

அன்றும் அவள் அதே வேரில் தான் தலைவைத்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்கினாள். அந்த நாயும் அவளின் காலடியில் தூங்கிக் காண்டிருந்தது திடீரென்று ஒரு பயங்கரமான கனவு கண்டு துடித்து எழுந்தாள் வாய் என்னவோ கூறி உளறியது மரத்தைச் சுற்றி ஒரு முறை வந்தாள். அப்பொழுதும் அவளுக்குத் திருப்தி உண்டாகவில்லை. நன்றாக ஒரு முறை அண்ணாந்து பார்த்தாள். மரம் மரமாகத்தானிருந்தது. அது முறிந்து வீழ்ந்து விடவில்லை. கண்டது வெறும் கனவாக இருந்தாலும் அவளுடைய உள்ளத்தில் சகிக்கமுடியாத வேதனை குடி கொண்டது. பொங்கி வரும் கண்ணீரை அடக்கினாள் ஆனால் அடக்கமுடியவில்லை. அருகே கவலை தேங்கிய முகத் தோடு நின்ற நாயை அருகிலிழுத்து அணைத்துக்கொண்டாள். அதுவும் தன்னுடைய நாவால் அவளுடைய கரத்தை நக்கியது. இரவுமுழுவதுந் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

பொழுது புலர்ந்ததும் வழக்கம்போல் சட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். அவளுடைய மனம் சஞ்சலப்பட்டது. தான் கண்ட பயங்கரமான கனவை ஒரு முறை நினைத்துப் பார்த்தாள். ஒருவேளை உண்மையில் அப்படி நடந்தால்.. நினைக்கவே அவளுடல். நடுங்கியது. கால்கள் செல்ல மறுத்தன. எத்தனை நாட்களுக்குப் போகமலிருக்கமுடியும்? ஒரு நாள் பிச்சைக்குச் செல்லாவிட்டால் அவளுடைய கதி என்ன? அவளையே நம்பிக் கொண்டிருக்கும் நாயின் கதிதான் என்ன? மனக்கலக்கத்தோடு புறப்பட்டாள். மரத்திலிருந்து இரண்டு மூன்று பனித்துளிகள் அவள் மேல் வீழ்ந்தன. பரிதாபத்தோடு அண்ணாந்து பார்த்தாள். மறுபடியும் பனித்துளிகள் வீழ்ந்தன. அவள் அதைக் கேவலம் பனித்துளிகளாக நினைக்கவில்லை “நிராதரவாக என்னை விட்டுப் போகிறாயா” என்று அந்த ஆலமரங் கதறிப் பெருக்குங் கண்ணீர்தான் அத்துளிகள் என்று நினைத்தாள். அவள் கண்களும் நீரைச் சொரிந்தன.

அவள் பிச்சைக்குச் சென்றுவிட்டாள். ஆனால் மனம் மட்டும் நிம்மதியாயில்லை. வழக்கத்திற்கு விரோதமாகப் பன்னிரண்டு மணிக்கே இருப்பிடத்தை நோக்கி நடந்தாள். எல்லோருங் கூட்டங் கூட்டமாக நின்று எதையோபற்றி ஆனந்தத்தோடு பேசிக் கொண்டு நின்றார்கள். அதை என்னவென்றறிய அவளுக்கு மாசைதான். ஆனால் அவர்களிடம் சென்று அறியக்கூடிய தகுதி அவளுக்கு இல்லை. அவ்வழியால் வந்த ஒரு சிறுமியிடம் விசாரித்த பொழுது ‘எங்கள் கிராமத்திற்கு ரெயில் பாதை போடப் போகிறார்களாம். இன்னுமிரண்டு, மாசத்துள் ரெயில் ஓட ஆரம்பித்துவிடும்’ என்று அப்பா சொன்னார் என்றாள் சிறுமி.

றெயில் வந்தாலென்ன, ஆகாயக்கப்பல் வந்தா வென்ன? பிச்சைக்காரியாகிய அவளுக்கு இரண்டுஞ்சரிதானே? இருப்பிடத்தை நோக்கி அவள் விரைவாக நடந்தாள்.

‘இதென்னடா சனியன்! வேலை செய்ய விடமாட்டேனென்கிறதே’ என்றானொருவன். ஆங்கில உடையில் நின்ற எஞ்சினியரின் கைத் துப்பாக்கி ‘டுமீல்’! என்ற சத்தத்தோடு வெடித்தது. இவ்வளவு நேரமும் மரத்தைச் சுற்றிச்சுற்றித் தன் எஜமானியின் பொருட்களுக்காகப் போராடிய அந்த நாய் மண்ணிற் சாய்ந்தது.

சுமார் கால் மைல் தூரத்தில் வரும்பொழுதே தென்படும் ஆலமரம் இன்று வெகு சமீபத்தில் வந்தும் அவள் கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆலமரம் இருந்த இடம் ஒரேவெளியாக இருந்தது. இரவு கண்ட கனவு அவள் ஞாபகத்திற்கு வந்தது. கையிலிருந்தசட்டி ‘தடா’ லென்று வீழ்ந்தது. மரத்தடியை நோக்கி ஓடினாள். அவளுடைய சாமான்கள் ஒரு பக்கத்தில் எறியப்பட்டுக் கிடந்தன. இன்னொரு பக்கத்தில் அவளுடைய நாய் உயிரற்றுக் கிடந்தது. மறு பக்கம் திரும்பினாள். மாறி மாறி விழும் கோடரிக் கொத்தைத் தாங்க மாட்டாமல் தவிக்கும் மரத்திலிருந்து உதிரம் பெருகுவது போலிருந்தது அதிலிருந்து வடிந்தபால். ‘ஐயோ’ என்றலறிக்கொண்டு ஓடிப்போய் வீழ்ந்தாள். திடீரென்று ஒரு கோடரிக் கொத்து அவளுடைய தலையில் வீழ்ந்தது. எல்லோருந் திகைத்துப்போய் நின்றார்கள். வெண்ணிரத்தமும், செவ்விரத்தமும் கலந்து அடிமரத்தைக் கழுவிக்கொண்டன.

– மறுமலர்ச்சி ஆவணி 1947.

– மறுமலர்ச்சிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1997, ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகள் இருபத்தியைந்து 1946 – 1948, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் சு. குணராசா, வெளியீடு: கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அனமச்சு, திருகோணமலை.

– ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள், முதற் பதிப்பு: ஜூலை 1973, முன்னோடிகள் கலை இலக்கிய விமர்சகர் குழு.

– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *