ஆலங்காயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 17, 2024
பார்வையிட்டோர்: 532 
 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அப்படியானால் அந்த ஊர் சம்பந்தமாக ஒன்றும் தெரியாதென்றா சொல்கிறீர்கள்?” என்றான் ராமசாமி.

“ஆமாம்; அங்கே கோயிலும் இல்லை; குளமும் இல்லை. அதற்குப் பாடலோ, சரித்திரமோ இருப்பதற்கு நியாயம் இல்லை” என்றேன் நான்.

“நன்றாக யோசித்துப் பாருங்கள். அந்த இடத் துக்கு அருகில் காடுகள் உள்ளன. அந்தக் காடுகளில் தினந்தோறும் சென்று விறகு வெட்டி வரும் குடியானவர்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சில சமயங்கள் நாங்கள் ‘சார்ஜ்’ செய்வதுண்டு…அது கிடக் கட்டும். எங்கள் கதை எதற்காக? ஆலங்காயம் என்ற பேருக்கு என்ன அர்த்தம்? அதைப் பிளந்து சோதித்து ஆராய்ச்சி செய்து பாருங்கள். ஏதாவது கிடைக்கும்.”

அவன் அங்கே காட்டிலாகா ஆபீஸில் ஒரு குமாஸ்தா. என்னிடம் அவனுக்கு அபாரமான மதிப்பு. எனக்குத் தெரியாத விஷயம் இநதப பிரபஞ்சத்திலேயே இல்லையென்று அவன் எண்ணியிருக்கிறான். தமிழாராய்ச்சி, சரித்திர விஷயம், ஜோஸ் யம், வைத்தியம் எல்லாவற்றிலும் என்னிடம் சந்தேகம் கேட்பான். ஒவ்வொன்றுக்கும் நான் எப்படியோ பதில் சொல்லிவிடுவேன். ஆனாலும் ‘ஆலங்காயம்’ என்பதற்கு வகை கூற இயலவில்லை. அதைப் பிளந்து பார்த்து ஆராய்ச்சி செய்யுங்கள்’ என்று அவன் கூறவே நான் மெல்லச் சிந்தித்துப் பார்த்தேன்; கற்பனைக் குதிரையைத் தூண்டினேன். ஒரு வழி தெரிந்தது.

“இப்போது தான் எனக்கு ஞாபகம் வருகிறது. எங்கேயோ படித்திருக்கிறேன். பாதிரிகளுடைய ‘டயரியிலிருந்தோ வேறு உத்தியோகஸ்தர்களுடைய குறிப்புக்களிலிருந்தோ ஒரு வரலாறு அறிந்து கொண்டிருக்கிறேன். அது மிகவும் ரஸமான சமாசாரம். இவ்வளவு நேரம் ஞாபகத்துக்கு வரவில்லை” என்று பீடிகை போட்டேன்.

“என்ன அது? சொல்லுங்கள்” என்றான் ராமசாமி.

நான் சொல்லத் தொடங்கினேன்.

***

அந்தக் காலத்தில்தான் இங்கிலீஷ்காரர்கள் இந்தியாவுக்குப் புதிதாக வந்தார்கள். அவர்களு டைய அதிகாரம் சிறிது சிறிதாகப் பரவத் தொடங்கியது. அவ்வதிகாரத்தின் சார்பைத் துணையாகக் கொண்டு பல பாதிரிகள் இந்தியாவுக்கு வந்தார்கள். அவர்கள் இங்குள்ள அஞ்ஞானிகளுக்குப் ‘பரம் பிதா’வின் ‘சிலாக்கியத்தையும் பரிசுத்த வேதத்தின் சிறப்பையும் பற்றிப் பிரசங்கம் செய்யலானார்கள். பலரை ஞானஸ்நானம் செய்வித்துக் கிறிஸ்துவர்க ளாக்கினார்கள். பெரும்பாலும் படித்தவர்களே இல்லாத கிராமங்களுக்குச் சென்று தங்கள் உபதேசத் தைப் பரப்பி வந்தார்கள். அவர்கள் – இந்தச் ‘சுவிசேஷத்தொண்டு’க்காகத் தங்கள் நாட்டிலுள்ள கிறிஸ்துவமத அபிவிருத்திச் சங்கத்தாரால் விசேஷமான ஊதியத்தைப் பெற்றார்கள்.

இவ்வாறு ரக்ஷகருடைய பரிசுத்த ஜீவியத் தைப் பிரசங்கம் செய்து வந்தவர்களுள் ஆலன் என் னும் பாதிரி ஒருவர். அவர் தென்னிந்தியாவில் பல இடங்களுக்குச் சென்று பல தாழ்த்தப்பட்ட ஜாதி யினரைக் கரையேற்றி வந்தார். அவருடைய திவ்ய திருஷ்டி ஒரு சிறிய கிராமத்தின் மீது விழுந்தது. அந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் யாவரும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். பக்கத்திலுள்ள காடுகளுக்கு ஆடு மாடுகளை ஓட்டிச் சென்றும், அங்கு விறகு வெட்டியும் ஜீவனம் செய்பவர்கள்.

அந்தக் கிராமத்திற்கு ஆலன் பாதிரி விஜயம் செய்தார். அப்போது அங்கே மாரியம்மன் திருவிழா நடந்து கொண்டிருந்தது. ஜனங்கள் மிகவும் பயபக்தியோடு அம்மனை வழிபட்டனர். சிலர் அலகு குத்திக்கொண்டு தம்முடைய பிரார்த்தனையை நிறைவேற்றினர்.

ஆலன் பாதிரியார் அங்கே சென்று பார்த்த போது அவருக்கு அந்த ஊர் ஜனங்களிடத்தில் அபாரமான கருணை பிறந்துவிட்டது. “ஓ அஞ்ஞானிகளே! தேவனுடைய பரிசுத்த வழியிலே போவதை மறந்துவிட்டு இந்தமாதிரி அஞ்ஞான வழியிலே செல்லுகிறீர்களே. நம்முடைய மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்து மனிதர்களின் பாவத்தைப் போக்குவதற்காக இந்தப் பூவுலகத்தில் அவதரித்தார். அவ ருடைய அருளைப் பெறுவதற்கு முயலாமல் விக்கிர கங்களை வணங்குகிறீர்களே. கல்லைக் கடவுளென்று கும்பிடுகிறீர்களே! ‘நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே, சுற்றி வந்து மொண மொணென்று தோத்திரங்கள் சொல்லுறீர், நட்டகல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்’ என்று உங்கள் சிவவாக்கியரே சொல்லியிருக்கிறார்”. அவரு டைய பிரசங்கம் கங்கு கரையில்லாமல் அபத்தமான பாஷையில், பாதிரிமார்களுக்கென்றே உள்ள ஒரு தனியான தோரணையில், பிரவாகம் போல் வந்தது. பாவம் பேதைகளாகிய அந்தக் கிராமத்தாருக்கு அவர் சொன்னது ஒன்றும் விளங்கவில்லை.

அவர்களுக்கெல்லாம் குரு ஸ்தானத்தில் உள்ள ஒரு கிழவன் பாதிரியின் பிரசங்கத்தைக் கேட்டான். நம் மாரியம்மனை இவன் வைகிறான்’ என்பது மட்டும் அவனுக்குப் பட்டது. எவ்வளவோ சமயங் களில் மாரியம்மன் அந்தக் கிழவன் மேல் ஆவேச ரூபத்தில் வந்து ஊராருக்கு வாக்குச் சொல்லியிருக் கிறாள். அவனைக் கண்டாலே எல்லோரும் தெய்வம் போல மதிப்பார்கள்.

“இந்தப் பாதிரி கன்னா பின்னாவென்று உளறு கிறான். நம் சாமியைப் பழிக்கிறான். நீங்களெல் லாம் பேசாமல் கேட்டுக்கொண்டிருக்கிறீர்களே என்று கிழவன் கூறினான். அப்பொழுது தான் மற்ற வர்களுக்கு அந்த விஷயம் விளங்கியது. அதுவரையில் பாதிரியையும் அவன் பேச்சையும் வெறும் வேடிக்கையாகக் கவனித்து வந்தார்கள்.

பெரிய கிழவன் சொல்லிவிட்டான். அப்புறம் சும்மா இருக்கலாமா? “ஏய், உன் பேச்சை நிறுத்து. எங்கள் சாமியை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது” என்று கூட்டத்திலிருந்து ஒருவன் கூறினான்.

“ஏன்? நான் சொல்வதில் என்ன தப்பு? நான் உள்ளதைத்தானே சொல்கிறேன்? கல்லையும் மண்ணை யும் செம்பையும் சாமியென்றால் சாமியாகிவிடுமா?”

பெரிய கிழவனுக்கு ரோஷம் வந்துவிட்டது; “ஏய்! நான் சொல்வதைக் கேள்: எங்கள் சாமி சக்தி உனக்குத் தெரியாது. எங்கள் மாரியாயிக்குக் குற்றம் செய்தால் அப்புறம் அதோகதிதான்; ஜாக்கிரதை!” என்று பயமுறுத்தினான்.

பாதிரி அந்த மிரட்டலுக்குப் பயந்தவராகத் தோற்றவில்லை; “அந்தத் தெய்வம் என்னை என்ன செய்துவிடும்? அதைப்போல ஆயிரம் தெய்வங்களை நான் பார்த்திருக்கிறேன்” என்றார்.

“என்ன துணிச்சலடா, இந்தப் படுபாவிக்கு!” என்று யாவரும் அச்சமும் வியப்பும் ஒருங்கே தோற்ற எண்ணினார்கள்.

“இந்தா ; வீணாய்க் கெட்டுப் போகாதே. எங்கள் மாரியாயியின் கோபத்துக்கு ஆளானால் நீ பாழாய்ப் போவாய். பேசாமல் இன்றைக்கே இந்த ஊரை விட்டுப் போய்விடு’ என்று எச்சரித்தான் கிழவன்.

“எனக்கு உங்கள் மாரியாயியினால் என்ன வந்தாலும் வரட்டும். அந்த மாரியாயியின் சக்தி என்னிடம் பிரயோஜனப் படாவிட்டால் நீ கிறிஸ்துவன் ஆகிவிடுகிறாயா?” என்று கேட்டார் பாதிரியார்.

“இன்னும் ஒரு வாரம் பார்க்கலாம். வீணாகக் கெட்டுப் போகாதே. இந்தச் சாமி பொல்லாத சாமி.”

“உங்கள் சாமியின் சக்தியைத்தான் பார்த்து விடலாமே!”

“இன்னும் ஒரு வாரத்துக்குள் மாரியாயி உனக்குத் தக்க தண்டனை அளிப்பாள்” என்று ஆத்திரத்தோடு சொல்லிவிட்டுக் கிழவன் போய் விட்டான். அன்று முதல் அவன் மாரியம்மனை நோக்கி விரதம் இருக்கத் தொடங்கினான்.

***

ஒருநாள் ஆயிற்று; இரண்டு நாட்களாயின. பாதிரி தம் பிரசங்கங்களை நிறுத்தவேயில்லை. மாரியம்மனும் தன்னுடைய கோபத்தைக் காட்டிய தாகத் தெரியவில்லை. “நிச்சயமாகத் தெய்வம் இவனைத் தண்டிக்கும்” என்று கிழவன் சொல்லிக் கொண்டே இருந்தான். ஊரினரெல்லோரும் அவனுடைய வார்த்தைகளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர்.

மூன்றாவது நாள் இரவு அந்தக் கிழவன் ஒரு கனாக் கண்டானாம். அதை அவன் தன் பரிவாரங் களுக்கெல்லாம் கதை கதையாகக் கண்ணில் நீர் ததும்ப எடுத்துச் சொன்னான். “உன்னுடைய விரதத் திற்குச் சீக்கிரம் பலன் கிடைக்கும். உன் வைராக் கியத்தை நான் மெச்சினேன். உன்னுடைய எதிரியை அடியோடு ஒழித்துவிடுகிறேன்” என்று மாரியாயி தன்னிடம் சொப்பனத்தில் சொன்னாளென்று அந்தக் கிழவன் வருணிக்கும் போது கேட்டவர்களுக் கெல்லாம் மயிர்க்கூச்செறிந்தது. நாலாவது நாளே ஆலன் பாதிரி தண்டனையை அடைந்துவிட்டார்.

அன்று அவர் வழக்கம் போல் தம்முடைய கூடாரத்தில் படுத்துக் கொண்டிருந்தார். பாதி ராத்திரியில் யாரோ வாயில் துணி யடைப்பதாகவும் கைகளைக் கட்டுவதாகவும் ஏதோ ஒன்று உடம் பெல்லாம் ஊசி போலக் குத்துவதாகவும் உணர்ந்தார். திமிரிப் பார்த்தார். ஒன்றும் இயலவில்லை. உடம்பெல்லாம் ஊசிகளால் குத்துவதுபோல் இருந்தது. காலையில் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. உடம்பு முழுவதும் சிறு சிறு புண்கள்; ரத்தம் கசிந்து கொண் டிருந்தது. கட்டுக்களை யெல்லாம் மிகவும் கஷ்டப்பட்டு அவிழ்த்துக்கொண்டு கிராம முனிசீப்பிடம் ஓடினார்; “ராத்திரி யாரோ சிலர் என் கூடாரத்துக்குள் நுழைந்து என் வாயில் துணியை அடைத்து உடம்பு முழுவதும் ஊசிகளால் குத்திவிட்டுப் போய்விட் டார்கள்” என்று அவர் புலம்பினார்.

கிராம முன்சீப் கிழவனிடம் பக்தியுடையவன். அவன் கிழவனுடைய விரதம் பலித்ததாகவே கருதினான். ஏகக் கூட்டம் கூடிவிட்டது. “சாமியை வைதால் இப்படித்தான் தண்டனை கிடைக்கும்” என்றான் ஒருவன். “மாரியாயி அல்லவா உடம்பெல்லாம் துளைத்துவிட்டாள்!” என்றான் மற்றொருவன். இந்தக் கும்பலுக்கிடையே ஆலன் பாதிரியார் உடம்பு முழுதும் காயங்களோடு நின்றார். அவருக்கு அப்போதுதான் முரடர்களை எதிர்ப்பதனால் என்ன விளையுமென்பது தெரிந்தது. பேசாமல் தம் பொருள்களைச் சுருட்டிக்கொண்டு ரக்ஷகரை நினைத்தபடியே அந்த ஊரை விட்டுப் போய்விட்டார்.

ஆலன் அந்த ஊரில் காயம் அடைந்தமையால் ‘ஆலன்காயம்’ என்ற பெயர் அதற்கு வந்தது. அது வர வர மாறி ஆலங்காயம்’ ஆயிற்று.

***

இந்தக் கதையைச் சொல்லி நிறுத்தினவுடன் ராமசாமி, “மாரியம்மனா ஆலன் பாதிரியைத் தண்டித்தாள்?” என்று கேட்டான்.

“மாரியம்மன் நேரே வரவில்லை. அவளுடைய பரம பக்தனாகிய கிழவனுடைய கனவில் உத்தரவிட்டாள். அந்தக் கிழவன் மூன்று தடியர்களை அழைத்து மாரியம்மன் கோயிலில் உள்ள ஊசிகள் அறைந்த பாதக்குறடுகளைக் கொடுத்து, ‘நீங்கள் ஒருவருக்கும் தெரியாமல் இவைகளால் அந்தப் பாதிரியின் உடம்பு முழுதும் காயப்படுத்தி வரவேண்டும். இது சாமியின் உத்தரவு. தவறினால் நம் குடும்பமே, நம் முடைய ஊரே நாசமாகிவிடும். இந்த விஷயத்தை வெளியிலே சொன்னால் உங்கள் தலை வெடித்து விடும்; ஜாக்கிரதை’ என்று எச்சரித்து அனுப்பினான். அவர்கள் அவ்வாறே செய்துவிட்டார்கள். மாரியம்மன் அந்தக் கிழவனுக்குப் பிரத்தியக்ஷ மென்பது குழந்தை முதற்கொண்டு சந்தேகமின்றி நம்பிய சமாசாரம். ஆகவே அது மாரியாயியின் ஆக்ஞைதான் என்பதில் அவர்களுக்குக் கடுகளவு கூடச் சந்தேகம் இல்லை. உனக்கு ஏதாவது உண் டாகிறதோ?” என்றேன் நான்.

“சந்தேகம் உண்டோ இல்லையோ; எனக்கு ஊர்ப்பெயரின் காரணம் தெரிந்துவிட்டது; அதுவே போதும்” என்றான் ராமசாமி.

அவனுக்கு மாரியாயியின் சக்தியில் சந்தேகம் இருந்தாலும் இருக்கலாம்; நான் கூறிய கற்பனைக் கதையைப் பற்றி அவனுக்குச் சிறிதும் சந்தேகமே இல்லை. அதை நானல்லவா சொல்லியிருக்கிறேன்!

– கலைஞன் தியாகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1941, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *