“மலையடிவாரத்தில் மரங்கள் அடர்ந்த, பசுமையை போர்வையாக்கிய இயற்கையின் பெரெழில் எங்களை வசீகரித்தது. வானம் பார்த்த பொட்டல் பூமியில் எப்போது மழை வரும்? என ஏங்கியிந்த நிலை எங்களுக்கு இங்கில்லை. விட்டு விட்டு ஒவ்வொரு நாளும் மழை பெய்யாத நாளில்லை…” கதை சொல்லும் கதையாசிரியரின் அறிவாற்றலுடன், நடந்ததைக்கண் முன் கொண்டு வருவது போல பேரனான சிறுவன் சிகனிடம் கூறினார் பெரியவர் பெரியசாமி.
பேரனின் வகுப்பு ஆசிரியர் சுந்தரம் மாணவர்களது வீட்டுப்பெரியவர்களின் வாழ்க்கை அனுபவத்தை வரலாறு போலக்கேட்டு வீட்டுப்பாட நோட்டில் எழுதி வரச்சொன்னதின் பொருட்டு தாத்தா சொல்வதைக்கேட்டு பேரன் எழுதுவதால் பேச்சு மொழியில் சொல்லாமல், வர்ணனை போல எழுத்து மொழியில் பேசினார்.
எழுதப்படிக்கத்தெரியும் அளவுக்கு மூன்றாவது வகுப்பு வரை திண்ணைப்பள்ளியில் படித்திருந்ததாலும், பல கதைகளையும், கவிதைகளையும் படித்திருந்ததாலும் அவரது பேச்சில் இலக்கிய வீச்சு இருந்தது.
“தொடர் மழையால் சிறு, சிறு நீரோடைகள் காடுகளுக்குள் செல்வதைத்தடுத்து விவசாயம் செய்ய பயன்படுத்த முடிந்தது. குடி தண்ணிக்கும் பஞ்சமில்லை. பல நீரோடைகளின் சங்கமத்தால் ஏற்பட்ட சிற்றோடை. சிற்றோடைகளின் சேர்க்கையில் ஆறு. இவ்வாறு நீர் தேவைகளும், உணவுத்தேவைகளும் பூர்த்தியான நிலையில், கொடிய மிருகங்களின் வாழ்விடங்களும் அருகில் இல்லாததால் அங்கிருந்த ஓரிடத்தில் குடிசை போடத்தொடங்கினார்கள் எனது பெற்றோரும் எங்களுடன் வந்த உறவினர்களும். நாளடைவில் குடிசைகள் கட்டிட வீடுகளாக உருமாறின” சொன்னவர் தொண்டை வறண்டதால் சொம்புத்தண்ணீரை எடுத்துக்குடித்தார்.
“சொந்த ஊரில் மழையின்றி வாழ்வாதாரமே முற்றிலுமாக பாதிக்கப்பட்ட காரணத்தாலேயே, குடிக்கத்தண்ணீர் கூட இல்லாமல் போனதாலேயே பூர்வீக ஊரைச்சேர்ந்த வியாபாரி வேலப்பனின் யோசனையால் ஊரிலிருந்து நூறு மைல் தொலைவில் இருந்த மலையடிவாரத்துக்கு இருபது குடும்பத்தைச்சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்த உடைமைகளை மாட்டு வண்டிகளில் போட்டுக்கொண்டு வந்து நின்றோம். குழந்தைகள் புதிய சூழலில் மகிழ்ச்சியாக ஓடி விளையாடினர். நடு வயதினர் ஓடியோடி இருப்பிடத்தை தேர்ந்தெடுத்து ஓலைகளால் வீடமைத்தனர். பெண்கள் உணவுத்தேவையைப்பூர்த்தி செய்ய வெட்டவெளியில் விறகு வைத்து சமைத்துக்கொண்டிருந்தனர். நானும் எனது மாமன் மகள் பெரிய நாயகியும் அவ்விடத்தை விட்டு பேசிக்கொண்டே வெகு தூரம் இயற்கையை ரசித்த படியே நடந்தோம்” சொல்லும் போதே முகம் மலர்ந்தது.
“ஆற்றோரம் சிறு, சிறு பாறைகள் எங்களை ஈர்க்க, சில முட்செடிகளை ஒதுக்கி மேலேறி சென்று அமர்ந்தோம், படுத்தோம், உருண்டோம். பரவசமடைந்தோம். ஆனந்தம் என்றால் அப்படியொரு ஆனந்தம். இயற்க்கையைப்படைத்த இறைவனுக்கு எப்படி நன்றி சொல்வது? குடிசைகள் போட்ட பகுதியில் உள்ள பாறை மேல் சில கற்களை நட்டு சாமியென நானும் நாயகியும் வழி பட்டதைப்பார்த்து ஊர் மக்களும் பொங்கல் வைத்து, பூஜை செய்து விழா எடுத்து கொண்டாட்டத்துடன் வழி பட்டனர். நிறைய வீடுகளைப்பார்த்த அரசாங்கம் பள்ளிக்கூடம் கட்டியது. குழந்தைகள் படிக்கச்சென்றனர். உணவுக்கு விவசாயம் செய்தோம். ஆடு, கோழி, மாடு என வளர்த்தோம். கவலையேதுமின்றி மகிழ்ச்சியாக வாழத்தொடங்கினோம்” என்று சொன்னவர் காலின் மூட்டு வலி காரணமாக சிறிது நேரம் வெளியே சென்று வந்தார்.
“எங்களைக்காண வந்த உறவுக்காரர்களும், ஊரைச்சேர்ந்தவர்களும் எங்களுடனேயே வீடு கட்டி வாழத்தொடங்கி விட்டார்கள். ஊர் விரிந்து கொண்டே போனது. வந்தாரை அந்த மண் வரவேற்று வாழ வைத்தது. அதற்கு ‘மலையூர்’ என பெயரும் வைத்தோம். இந்த நிலை தொடர ஆயிரக்கணக்காண மக்கள் வாழும் ஊராக மாறியது மலையூர்” சொன்னவர் பெருமூச்சு விட்டார்.
“இத்தன சந்தோசம் கொடுத்த எடத்த உட்டுப்போட்டு எதுக்கு மறுபடியும் இந்த ஊருக்கு வந்தீங்க..?” எனக்கேட்ட பேரனைப்பார்த்து திடீரென சோகமாக மாறிய முகத்துடன் பேசினார் பெரியசாமி.
“அருகிலிருந்த காபித்தோட்டத்து முதலாளி வேலை செய்யறவங்களுக்கு பணம் கொடுத்தார். எதையும் தேடிப்போனால் எங்களுக்கு அறிவு வளர்ந்துரும்னு நெனைச்ச முதலாளி எங்களுக்கு வேணும்கிறதை வியாபாரிகளை வர வெச்சு வாங்க வெச்சிருக்கார்ங்கிறது அப்ப புரியாமல் இப்ப புரியுது எனக்கு” என்றார் கவலையுடன்
“என்னோட தந்தை ‘பெரிய சாமி இங்க வாடா. உனக்கும் பெரிய நாயகிக்கும் அடுத்த மாசம் கண்ணாலம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்’ என்று சொன்ன அடுத்த நிமிடம் பெரிய நாயகியைப்பார்க்க ஓடினேன். அவர்கள் வீட்டில் கோழி அடித்து குழம்பு வைத்து சோறு போட்டார்கள். அன்று என்றுமில்லாத மகிழ்ச்சியாக இருந்தது. அவளது தோட்டச்செடிகளுக்கு நான் நீர் பாய்ச்சும் வேலையை செய்தேன். அவளும் கூடவே வந்து எனக்கு உதவினாள். ஆண், பெண் படைப்பு இல்லையென்றால் இந்த உலகில் இன்று வரை ஜீவராசிகள் இருந்திருக்காது என்பது புரிந்தது. ஆயிரம் வருசம் அவளோடு பிரியாமல் வாழ வேண்டும் என மனம் ஆசைப்பட்டது. அவளது தந்தையான எனது மாமனுக்கு அவரது வேலையை நான் செய்து ஓய்வு கொடுத்த போது என்னை அவருக்கு மிகவும் பிடித்துப்போனது” சொல்லும் போதே பரவசப்பட்டார்.
“கல்யாணத்துக்கு சொந்தக்காரங்களுக்கு அழைப்பு சேதி சொல்ல என்னை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். ஒரு நாள் முழுவதும் நானும் நடந்தே சென்று ஊர் சேர்ந்தேன். மாட்டு வண்டி கேட்டதற்கு ‘ஒருத்தம்போறதுக்கு எதுக்கு மாட்டு வண்டி?’ என்று தந்தை கொடுக்க மறுத்து விட்டார். அனைத்து சொந்தங்களுக்கும் கல்யாண அழைப்பு சொல்லி விட்டு மலையூருக்கு ஒரு வாரத்துக்கு பின் சென்ற போது ஊரைக்காணவில்லை…” என பேச்சை நிறுத்தினார்.
“என்னாச்சு…?” அதிர்ச்சியுடன் கேட்டான் பேரன் சிகன்.
“காட்டாற்று வெள்ளத்தால் நீர் போகும் பாதையில் மரங்கள் இருந்ததால் நீர் போக முடியாமல் ஆறு தன் பாதையை மாற்றியிருந்தது. கதறி அழுதேன். அதைத்தவிர என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அங்கே மாடு மேய்த்துக்கொண்டிருந்த வயதானவர் எனக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தபடி பேசினார்” சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டார். பழைய நினைவுகளால் துக்கம் தொண்டையை அடைத்தது.
“அந்தப்பெரியவர் சொன்னார். ‘இப்படித்தான் ஒரு தடவை எனக்கு சின்ன வயசா இருக்கற போது ஊர்ல கத்தாழங்கெழங்கு பஞ்சம் வந்து சோத்துக்கு வழியில்லாம பல பேர் இங்க குடி வந்தாங்க. அவங்கள வேலைக்காரங்களா வெச்சுத்தான் காப்பித்தோட்டம் ஆரம்பிச்சாங்க. ஒரு தடவ காட்டாற்று வெள்ளம் வந்து மண்ணு சரிஞ்சு ஊரே காணாமப்போயிருச்சு. ஆடு மேய்க்கப்போயி பாறை மேல இருந்ததுனால நாந்தப்பிச்சேன். இப்படி பல வருசங்களுக்கு ஒரு தடவை நடக்கும். விடாம தண்ணி போற ஆத்துல மரம் வளராது. எப்பவாச்சும் அம்பது வருசமோ, நூறு வருசமோ ஒரு தடவ பெரிய மழைக்கு பாங்காட்டுக்குள்ள இருந்து வர்ற பள்ளத்துல தண்ணி முன்ன போற வழில மரம் வளர்ந்து அடைச்சிருந்தா மரமில்லாத எறக்கமான பகுதில பூதர போது மண்ண அரிக்கும். அப்படித்தா ஒரு தடவ ஏழு எருமைகளை அடிச்சுட்டு வந்ததுனால அந்தப்பள்ளத்துக்கு ஏழெருமப்பள்ளம்னே பேரு. மண்ணு சரியும் போது கீழ பள்ளத்துல ஊடுக இருந்தா மூடிப்போடும். அப்படித்தான் எங்க குடும்பம் ஊரோட மொத்தமா அழிஞ்சு போச்சு. அதுல தப்பிச்சது நா மட்டும் தான். இதுல தப்பிச்சது நீ மட்டும் தான்’ னு வயதானவர் சொன்னதைக்கேட்டு எனக்கு தலை சுற்றியது. கண்ணீர் காட்டாற்று வெள்ளமாக அவருக்கும், எனக்கும் ஓடியது. இந்த விபரம் தெரிந்திருந்தால் அங்கே வீடு கட்டாமல் இருந்திருப்போம் என்று அறியாமையை நினைத்து அழுதேன்”
“இப்ப புரியுது. பெரியவங்க சொல்லறதை ஏன் கேட்கனம்னு” என்றான் சிகன்.
“அவர் மறுபடியும் பேசினார். ‘தம்பி மழை பேயிதோ, இல்லியோ நம்மளவுக்கு குடிக்கத்தண்ணியும், சோத்துக்கு தானியமும் இருந்தா நம்ம முன்னோர்கள் காலங்காலமா வாழ்ந்த காட்லயே வாழ்ந்தரோணும். வசதியா இருக்குதுன்னு மிருகம் வாழற பாங்காட்லயும், மண் சரிற மலையோரத்துலயும் ஊடு கட்டிக்குடியிருந்துட்டு, தண்ணி வந்துருச்சு, மண்ணு சரிஞ்சு ஊட்ட மூடிருச்சுன்னு சொல்லறது நல்லாவா இருக்குது?’ என்று வயதானவர் கூறியதைக்கேட்டு, அவர் பேசியதில் இது மனிதர்கள் வாழத்தகுந்த இடமில்லை எனப்புரிந்து கொண்டு பிறந்த ஊருக்கே திரும்பினேன். அதுக்கப்புறம் பூர்வீக ஊரில் மழை பெய்த போது மட்டும் விவசாயம் செய்தேன். அதே ஊரில் ஒரு பெண்ணைக்கல்யாணம் செய்து கொண்டேன். இன்னைக்கு எழுபது வயசானாலும் உன்னைப்போன்ற பேரனோட சந்தோசமா மழையில்லாட்டியும் மரணத்தப்பத்தி பயமில்லாம வாழ்ந்திட்டிருக்கறேன். மழை எப்பவாவது உசுரு வாழ தண்ணி கொடுக்கும். மலை எப்பவாவது மண்ணச்சரிச்சு உசுர எடுக்கும். சொக்க வைக்கிற எந்த விசயமும் கடைசில நம்மை மொத்தமா சிக்க வெச்சுப்போடும். இயற்கையும் அப்படிப்பட்டது தான்” என தத்துவமாகப்பேசினார்.
பெரியசாமியின் சிறு வயது அனுபவங்களை ஒரு நோட்டில் அவரது பேரன் சிகன் எழுதி முடித்திருந்தான். எழுதி வைக்கப்படும் பிறரது அனுபவங்கள் வருங்கால சந்ததிகளுக்கு வழி காட்டியாக இருந்தாலும் அந்த அனுபவக்கருத்துக்களை யாரும் படித்து பின்பற்றாமல் மறுபடியும் அதே தவறுகளைச்செய்கின்றனர் என்பது பெரியசாமியின் கவலையாக இருந்தது.
“இதக்கேட்டதுக்கப்பறம் மலையோரம் ஊடு கட்டப்போவியா…?” என பேரன் சிகனைப்பார்த்துக்கேட்ட போது “போக மாட்டேன் தாத்தா….வாழத்தகுந்த எடத்துல தான் கட்டுவேன்” என சொன்னதைக்கேட்டு பேரனை மகிழ்ச்சியுடன் வாரி அணைத்துக்கொண்டார் பெரியவர் பெரியசாமி.