(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காற்றில் எழுந்து முகத்தில் அறைந்தது
இரத்த வாடை
சிதறிக்கிடந்தன சதைகள்.
கால்கள் தறிக்கப்பட்டும் கைகள் முறிக்கப்பட்டும்
அரைகுறை கருகிய உடல்கள்
புகைந்தன.
சுவரிலும் தரையிலும் பீறியடித்த
இரத்தக் குழம்பிடை
இன்னும் ஒட்டியிருந்த உயிரில்
கிடந்து நடுங்கின உடல்கள்.
“புலிகளின் இறைச்சியை
எங்கள் நாய்களுக்கு ஊட்டுவோம்”
சுவரொட்டிகள் அறைந்தன.
பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில்
உடைந்து சிதறிய இளைஞர்கள் ஓலம்,
துங்ஹிந்த நீர்வீழ்ச்சியாய்
சொரிந்தது முடிவிலாத்
துயரை.
அவன் ஓர் ஆய்வாளன். அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றி லிருந்து இலங்கைக்கு வந்திருந்தான். அவன் வந்ததின் நோக்கம் பிந்துனுவெவப் புனர்வாழ்வு முகாமில் வாழ்ந்த தமிழ் இளைஞர்க ளில் இருபத்தியேழு பேர் கொல்லப்பட்டதும், பதின்நாலு பேர் படுகாயப்பட்டதுமான வன்முறைச் சம்பவம்பற்றிய ஆய்வை மேற்கொள்வதற்கே. அவரது ஆய்வின் முடிவில் பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அந்த முகாமில் அடைக்கப்பட்டிருந்தவர் கள் புலிகள் இயக்கத்திலிருந்து தப்பி ராணுவத்திடம் சரணடைந்த வர்கள் மட்டுமல்ல, வேறு காரணங்களுக்காகப் பொலிஸாரின் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்களும், அடையாள அட்டை இல்லை என்பதற்காகக் கைதுசெய்யப்பட்ட மலையக இளைஞர்களும் அங்கே இருந்தார்கள்.
இவர்கள் ‘பயங்கரவாத இயக்கத்திலிருந்து விடுபட்டவர்கள்’ என்ற எடுகோளில் அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, பல்வகைத் தொழிற் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. ஆனால், பிரச்சினை என்னவென்றால், அவர்கள் சகலரும் விடுதலைசெய் யப்பட வேண்டிய காலம் கடந்தும் அங்கு அடைக்கப்பட்டிருந்ததே. அவர்கள் தம்மை விடுதலைசெய்யும்படி கோரினர். தமக்கு வரும் கடிதங்கள் கொடுக்கப்படாமல் கிழித்தெறியப்படுவதையிட்டுக் குரல்கொடுத்தனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அங்கு கடமையாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட் டார். அவர் அங்கிருந்து வெளியேறி, அக்கிராமத்து மக்களுக்கு, அவர்கள் கிராமத்தைப் புலிகள் வந்து தாக்கப்போவதாகக் கதை கட்டினார். ஏற்கனவே அந்த முகாமை அகற்ற வேண்டும் என்று குரல்கொடுத்த இனவாத அரசியல்வாதிகளுக்கு, முகாமைத் தாக்கி அழிப்பதற்கு இது சந்தர்ப்பத்தை வழங்கியது. இதைத் தூண்டி, வன்செயலுக்கு வழியமைத்தவர்களாக அப்பிரதேச ஹெட்குவார்ட்டர்ஸ் இன்ஸ்பெக்ரரும், உதவிப் பொலிஸ் சுப்பிரின் டனும் இருந்தனர் என்பதும் ஆய்வில் தெரியவந்தது. காவலில்நின்ற பொலிஸ்காரர்கள் அனைவருக்கும் இது தெரிந்திருந்தது.
தாக்குதல் தொடங்குவதற்கு முன்னரே ‘புலிகளின் இறைச் சியை எங்கள் நாய்களுக்கு ஊட்டுவோம்!” என்ற சுவரொட்டிகள் அப்பிரதேசமெங்கும் ஒட்டப்பட்டிருந்தன.
விடியற்காலையிலேயே புனர்வாழ்வு முகாமைச் சுற்றி கத்திகள், பொல்லுகள் ஆகியவற்றோடு அந்தப் பிரதேசத்து மக்கள் என்ற பேரில் பலர் குழுமியிருந்தனர். சிவில் உடையில் பலவகையாறாக் கள் நின்றிருந்தன.
அப்போது, அங்கே ஜீப்பில் வந்து இறங்கினர் ஹெட்குவார்ட் டர்ஸ் இன்ஸ்பெக்ரரும், உதவிப் பொலிஸ் சுப்பிரின்டனும்.
கூட்டத்தை நோக்கி நடந்துவந்த இன்ஸ்பெக்டர் தன் ‘பட்டன்’ (batton) தடியை நீட்டிச் சைகை செய்தார்.
மறுகணம் –
அவர் மந்திரக்கோல் ஆட்டலில் அங்கு ஆயுதங்களோடு நின்ற அத்தனைபேரும் திடீரென வேட்டைநாய்களாகவும் வெறி நாய்களாகவும் உருமாறின.
அவரோடு வந்த உதவிப் பொலிஸ் சுப்பிரின்டன் திடீரென வெறிநாய்களாக மாறியவர்களுக்கு முகாமைக் காட்டி, ‘சூ’ என்றார்.
வெறிநாய்களின் வேட்டைப்பற்களாகக் கையிலிருந்த ஆயுதங்கள் மாறின.
“புலிகளை ஒழித்துக்கட்டுவோம்!”
பின்னிருந்து கோஷங்கள் எழுந்தன.
நிராயுதபாணிகளாக நின்ற இளைஞர்மேல் வெறிநாய்கள் பாய்ந்தன.
தஞ்சமடைந்தவர்களின் மண்டைகள் சிதறின
ஒவ்வொரு நாயும் ஒவ்வொரு மண்டையை உருட்டி உருட்டிக் குடைந்தன.
தொடைகள் குதறப்பட்டன, கைகள் சிதறப்பட்டன.
சிதறப்பட்ட விரல்களைக் குட்டிநாய்கள் கௌவிச் சுவைத்தன.
பெட்டை நாய்கள் வேறு, கத்திகளோடு சங்காரத்தில் ஈடுபட்டன.
வேதனை அலறலும் கூக்குரலும் அந்தப் பிரதேசத்தையே அதிரவைத்தன.
கதவுக்குப் பின்னால் ஒளிந்த சிறுவன் ஒருவனை வெளியே இழுத்து வெறிநாயொன்று, ஒரே வெட்டாக வெட்டிற்று.
வெட்டுவதற்குத் தேவைப்படும்போது வேட்டைப் பற்கள் நீண்டு கத்திகளாக மாறின. முன்கால்கள் கைகளாக மாறி உயர்ந்தன.
வெட்டும்போது பீச்சியடித்த இரத்தம் நாயொன்றின் கண் களை மறைக்கவே, அந்த இடைவெளிக்குள், அந்த நாயைத் தள்ளிவிட்டு இரண்டு இளைஞர்கள் வெளியே ஓடுகின்றனர்.
முன்னால் பொலிஸ் ‘ட்றக்,’ அதற்குள் புகுந்து அடைக்கலம் கோரலாம் என்று அவர்கள் எண்ணி, அதற்குள் புக எத்தனித்த போது, பொலிஸ் உடைக்குள் இருந்து வேட்டைநாய்கள் வெளி வந்தன.
அவற்றிடம் நீண்டிருந்த பற்கள், துப்பாக்கிகளாக மாறித் தஞ்சமடைந்தவர்களைச் சல்லடையிட்டன.
முகாமிலிருந்து இன்னும் சிலர் இரத்தம் சொட்டச்சொட்ட ஓடிவருகின்றனர்.
அவர்கள் பதின்மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவர்கள்.
இரத்த வாடை, வெளியே நின்ற நாய்களை ஊளையிடவைத்தன
“அந்தா புலிப்பயங்கரவாதிகள் ! கொல்லுங்கள்! கொல்லுங்கள்!”
செத்துவிழுகின்றனர் அந்தச் சிறுவர்கள்.
ஒரு மணித்தியால வெறியாட்டத்தில் அந்த புனர்வாழ்வு முகாமில் இருந்த அத்தனை தமிழ் இளைஞர்களும் வேட்டையாடப் படுகின்றனர்.
அசாதாரண அமைதி மெல்ல எழுந்தது.
திடீரென முகாமே தீப்பற்றி எரிந்தது.
அனுங்கியவாறு குற்றுயிராய்க் கிடந்த உடல்கள் அதற்குள் தூக்கி எறியப்படுகின்றன.
புலிகளின் இறைச்சியைத் தின்ற நாய்கள் மெல்லமெல்ல வெளியே வந்துகொண்டிருந்தன.
– 2005
– முடிந்து போன தசையாடல் பற்றிய கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, தமிழியல், லண்டன்.