செம்பட்டை முடியுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர், இரண்டு கைகளால் நாகஸ்வரத்தை ஏந்தி, தனது வெற்றிலைக் கறை படிந்த உதடுகளில் சீவாளியை வைத்து வாசிக்கத் தொடங்கினார். இவர்களையே ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்த ராவின் உடல், மின்சாரம் பாய்ந்ததுபோல ஒரு கணம் குலுக்கிப்போட்டது. கண்களை மூடினார்.
எட்டு வயதில் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு பெரிய கோயிலில் இருந்து திரும்பி வரும்போது, மேடையில் ஒருவர் நாகஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்தார். அவர் வாழ்க்கையில் கேட்ட முதல் பாடல் அது. தனது அறுபது வயதில் எத்தனை முறை இந்தப் பாடலைக் கேட்டுள்ளார் என கணக்கே இல்லை. ‘ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே…’ என நாயனக்காரருடன் சேர்ந்து மனதுக்குள் பாடினார். நாயன இசை நிற்க, கண்களைத் திறந்து பார்த்தார். வாசலில் ரத்தினம் கோபத்துடன் நின்றிருந்தான்.
‘தலைவர் உள்ள முக்கியமான மீட்டிங்ல இருக்கார். இப்படிச் சத்தமா ஊதுறியே… அறிவில்ல?’ – கத்தினான்.
நாயனக்காரர் நடுங்கிப்போனவராக திண்ணையில் இருந்து கீழே குதித்தார்.
‘மன்னிச்சுடுங்க ஐயா. கட்சி ஆளுங்க பிரியமா கேட்டாங்க. அதான் வாசிச்சேன்.’
‘எந்த நாய்டா அவன்… நேரங்கெட்ட நேரத்துல வாசிக்கச் சொன்னது?’ என ரத்தினம் தெருவில் நின்றிருந்த கரைவேட்டி ஆட்களைப் பார்த்தான். பத்து விரல்களிலும் கட்சிச் சின்னம் பொறித்த மோதிரங்களோடு, பெரிய கடா மீசையுடன் கறுப்பாக மாமிச மலைபோல ஓர் ஆள் தெருவில் நின்றிருந்தான். நாயனக்காரர் அவனைத் திரும்பிப் பார்த்தார்.
அவனைப் பார்த்து, ‘அமைதியா இருங்க. இல்லாட்டித் தொலச்சுடுவேன்’ என்பதுபோல ஒரு விரலை சைகை காட்டி எச்சரித்துவிட்டு, ரத்தினம் கோபமாக வீட்டுக்குள் போனான். ரத்தினத்தின் தலை மறைந்ததும் மீசைக்காரன் நாயனக்காரரை முறைத்துப் பார்த்தான். நாயனக்காரருக்கு உடல் வெலவெலத்துப்போனது.
‘நாய்ப் பொழப்பு. நான் இங்க வரலைனு அப்பவே சொன்னேன். கேட்டியா?’ – தவில்காரன் நாயனக்காரரைத் திட்டிவிட்டு ராவைப் பார்த்தான். நாயனக்காரருக்கு ஐம்பது வயது இருக்கலாம். தவில் வைத்திருந்தவனுக்கு, இருபத்தைந்து வயது இருக்கலாம். எந்த செட்டு என்றுதான் ராவுக்குத் தெரியவில்லை.
ராவ் திரும்பி, வீட்டை ஒருமுறை பார்த்தார். திண்ணை வைத்து செட்டிநாட்டு பாணியில் கட்டியிருந்தார்கள். முன்புறம் கட்சி அலுவலகம்; பின்புறம் தலைவர் வீடு. மொட்டைமாடிக் கம்பத்தில் கட்சிக்கொடி பறந்துகொண்டிருந்தது. தலைவர் இரண்டு கைகளைக் கும்பிட்டு போஸ் கொடுப்பதுபோல போஸ்டர்கள் சுவர் எங்கும் ஒட்டப்பட்டிருந்தன. தெரு முழுக்க, கட்சி ஆட்கள் குழுக்களாகப் பிரிந்து நின்றிருந்தார்கள். டெல்லியில் இருந்து யாரோ பெரிய தலைவர் வரப்போவதாக ரத்தினம் சொல்லியிருந்தான்.
‘ ‘ஆடல் – பாடல், தப்பாட்டம், நாகஸ்வரம் போதும்’னு கட்சியில சொன்னாங்க. நான்தான் சொந்தக் காசைப்போட்டு கரகாட்டம் ஏற்பாடு செய்றேன். நம்மைக் கூட்டணியில இருந்து கழட்டிவிட்டு கடுப் பேத்தினாங்கள்ல… அவனுங்க மண்ணைக் கவ்வணும். அடுத்த ஆட்சி நம்மளோடதுதான்.”
ரத்தினம் நேற்று முன்தினம் தன்னைச் சந்தித்தபோது சொன்னது ராவுக்கு நினைவுக்கு வந்தது. ராவுக்கு நடப்பு அரசியல் எதுவும் பிடிபடுவது இல்லை. விரைவில் தேர்தல் வரப்போகிறது என்று மட்டும் தெரிந்திருந்தது. தேர்தலும் திருவிழாவும்தானே ஆட்டக்காரர்களுக்குச் சோறு போடுகிற காலம்!
ராவின் கவலை, ‘அருமையான ஒரு பாட்டு பாதியில் நின்றுவிட்டதே’ என்பதுதான். ‘ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே…’ என மனதுக்குள் மீண்டும் பாடினார். எட்டு வயதில் பார்த்த அந்த முகம் நினைவில் இல்லை. அவர்தான் காருக்குறிச்சி அருணாச்சலப் பிள்ளை என பின்னாட்களில் தெரிந்தது. அவரைப் பற்றி நினைக்கும்போது எல்லாம், அந்தப் பாடல் காற்றில் எங்கோ ஒலிப்பதுபோல் இருக்கும். காவிரிக் கரை ஓரமாக அரச மர இலைகள் சலசலக்கும் சத்தம்கூட நாகஸ்வர இசையாகவே கேட்கும். எல்லாம் பழங்கதை. காலி பெருங்காய டப்பாவின் வாசனை மட்டுமே மிஞ்சி நிற்கிறது. ராவ் வந்து மூன்று மணி நேரம் ஆகிறது. ரத்தினம் கண்டுகொள்ளவே இல்லை. இடையில் ஒருமுறை எதற்கோ வெளியில் வந்தவன் ராவைப் பார்த்தான்.
‘ஐயா… கட்சிக்காரங்கக்கூடப் பேசிட்டு இருக்கார். கொஞ்சம் வெயிட் பண்ணு’ எனச் சொல்லிவிட்டுப் போனான்.
ராவுக்கு, பீடி குடிக்க வேண்டும்போல் இருந்தது. ‘எழுந்து கடைக்குப் போகும் நேரத்தில் தலைவர் அழைத்தால்?’ என நினைத்துத் தயங்கினார். மூன்று மணி நேரமாக ஒரே இடத்தில் உட்கார்ந்து கால்கள் மரத்துப்போய் இருந்தன.
நாயனக்காரர் மீண்டும் திண்ணையில் உட்கார்ந்தார். வேட்டியில் முடிந்திருந்த வெற்றிலையை எடுத்து, காம்பு கிள்ளி பின்புறத்தில் சுண்ணாம்பு தடவினார்.
‘எந்த ஊர் செட்டு?’ – ராவ், அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
‘மன்னார்குடி.’
‘நெனச்சேன். யாரு… பக்கிரி குரூப்பா?’
‘ஆமா… உங்களுக்குத் தெரியுமா பெரியவரே?’
‘நானும் உங்க ஆளுங்கதான். ஆட்டக்காரங்க’ என்றவர், ‘மன்னார்குடியில எங்க?’ என்று கேட்டார்.
‘பிச்சப்பாப்புள்ள கேள்விப்பட்டிருக்கீங்களா? நான் அவரு பையன் செல்லப்பா. இவன் என் தங்கச்சிப் பையன்… பேரு சுந்தரேசன்’ – அருகில் இருந்த தவில்காரனைக் கைகாட்டினார்.
‘அட… பிச்சப்பா பசங்களா? பிசிறு தட்டாம வாசிக்கும்போதே நினைச்சேன். அப்பாவோட கைப்பக்குவம் அப்படியே உங்ககிட்ட வந்திருக்கு’ எனச் சொன்ன ராவை, அவர்கள் இருவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.
‘உங்க அப்பா செட்டுல நான் ஆடியிருக்கேன் தம்பி… வலங்கைமான் திருவிழாவுல. அப்ப எனக்கு இருபது வயசு. உங்களுக்கு பத்து வயசுனு நினைக்கிறேன். கச்சேரி முடிஞ்சு என் கையைப் பிடிச்சுக்கிட்டு நடந்து வந்தீங்க. என் பெயர் ராமோஜி ராவ். ராவ்னு கூப்பிடுவாங்க.’
‘மன்னிச்சிக்குங்கண்ணே. ஞாபகம் இல்லை. ஆனா, கேள்விப்பட்டிருக்கேன். அப்பா உங்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கார்.’
‘அப்பா செத்த விஷயம் லேட்டாத்தான் தெரியும். சாவுக்கு வர முடியலை’ – ராவ் சொன்னார்.
நாயனக்காரரின் கண்கள் கலங்கின. சீவல் பாக்கெட்டைப் பிரித்து, வெற்றிலையில் கொட்டி மடித்து ராவிடம் நீட்டினார்.
‘இல்லப்பா… இப்ப இதைத் தொடுறது இல்லை.’
‘எந்த செட்லண்ணே ஆடுறீங்க?’
‘இல்லை தம்பி… நான் அதை நிறுத்தி இருபது வருஷம் ஆச்சு.’
‘வேற எதுனா விஷயமா வந்தீங்களாண்ணே?’
‘ரத்தினம், நைட்டு கட்சிக் கூட்டத்துல ஆட வரச் சொல்லியிருந்தான். செட்டு எதுவும் கிடைக்க மாட்டேங்குது தம்பி. அதான் சொல்லிட்டுப் போக வந்தேன்.’
தெருவில் ஒரு வேன் வந்து நின்றது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி… ஒப்பனையுடன் மூன்று பேர் இறங்கினார்கள். பின்னால் இறங்கிய இளைஞர்கள் விஜய், அஜித் தோற்றத்தில் தெரிந்தார்கள். விநோதமான ஜிகுஜிகு உடையுடன், முகம் எல்லாம் மின்னும் பவுடருடன் சில பெண்கள் கிண்டலும் சிரிப்புமாக இறங்கினார்கள். திண்ணையில் இருந்த நாகஸ்வரத்தையும் தவிலையும் அலட்சியமாகப் பார்த்தார்கள். ரத்தினம் வேகமாக ஓடிவந்து அவர்களை வரவேற்றான்.
‘தலைவர் கட்சிக்காரங்களோட பேசிட்டு இருக்காருனு நம்மை வெளியில உட்காரச் சொன்னான். ஆடல்-பாடல் செட்டை மட்டும் உள்ளே அழைச்சுட்டுப்போறான் பாருங்க’ – நாயனக்காரர் சொன்னார்.
வேனின் பக்கவாட்டில் ‘ராக் ஸ்டார் கோஷ்டி’ என பேனர் கட்டியிருந்தார்கள்.
‘முன்னெல்லாம் மன்னார்குடி செட், வலங்கைமான் செட், கும்பகோணம் செட், சுவாமிமலை செட்… இப்படி ஊர் பேரைச் சொன்னா போதும். அவங்க பாட்டன், முப்பாட்டன் வரைக்கும் ஜாதகம் தெரிஞ்சுடும். என்ன ராகத்தை எப்படி வாசிப்பாங்கனுகூடச் சொல்லிடலாம். இந்த டான்ஸ் ஆடுற பசங்க எந்த ஊர்னு கண்டுபிடிக்கக்கூட முடியறது இல்லை. அவங்க மினுக்கு என்ன, தளுக்கு என்ன? நாங்களும்தான் சிங்கப்பூர், மலேசியாவுல போய் ஆடியிருக்கோம். கவர்னர் கையால மெடல் வாங்கியிருக்கோம்; முதலமைச்சர் முன்னாடி ஆடியிருக்கோம். இப்படி அலட்டிக்கிட்டது இல்ல’ – ராவ் சொன்னார்.
‘எங்க அப்பாகூடத்தான் கலைமாமணி அவார்டு வாங்கிச் செத்துப்போனார். என்ன பிரயோசனம்? மாலையும் பட்டயமும் வீட்டுல தொங்குது. இந்தப் பொழப்புக்கு நாலு எருமை மேய்க்கப் போயிருக்கலாம்’ – சுந்தரேசன் வெடுக்கெனச் சொன்னது ராவுக்கு வலித்தது.
‘சோறு போடுற கலையைப் பழிக்காத. சாமிக்கு முன்னாடி போற ஆளுங்க நாம. தெய்வத்தையே நம்ம பின்னாடி வரவைக்கிற கலைடா இது. இப்ப இருக்கிற பசங்களுக்கு என்ன தெரியுது? மேடையில ஆபாசமான அங்கசேஷ்டை, டபுள் மீனிங் டயலாக்கோடு ஆடுறானுங்க. பொம்பளங்க, கொழந்தைங்க கூடுற சபையில கொஞ்சம்கூட வெவஸ்தை வேணாம்?’ – நாயனக்காரர் கோபமாகச் சொன்னார்.
சுந்தரேசன் திண்ணையில் இருந்து விருட்டென எழுந்தான். தெருமுக்கு பெட்டிக் கடை நோக்கி நடந்தான். நாயனக்காரர் அமைதியாக இருந்தார்.
‘உங்க மருமகனுக்கு இதுல விருப்பம் இல்லைனு நினைக்கிறேன். மனசுல இருக்கிற வெறுப்பு, வாத்தியக்காரனோட கையில தெரியும். நம்ம சலிப்பைப் பார்த்து ஜனங்களுக்குச் சலிச்சுடும். கைதட்டும் பாராட்டும்தானே நம்மள மாதிரி ஆளுங்களுக்கு மருந்து…’
‘படிப்பு ஏறலை. அவங்க அப்பா இருக்கிறப்ப தவில் கத்துக்கொடுத்தார். தவில் அடிக்கிறது பிடிக்கலை. துபாய்ல கான்ட்ராக்டர் வேலையாம்… அதுக்கு மூணு லட்ச ரூபாய் கேட்டு அடம்பிடிச்சிட்டு இருக்கான். என் தங்கச்சி படுத்தபடுக்கையா கிடக்கிறா. ஏதோ வருஷத்துக்கு வர்ற நாலு கச்சேரியிலதான் வண்டி ஓடுது.’
‘உங்க பொழப்பாவது பரவாயில்லை. எங்க நிலைமையைப் பாருங்க…’
‘இப்பவும் கரகம் ஆடுறவங்களுக்கு மார்க்கெட் இருக்குண்ணே!’
‘இருக்கு… குட்டைப்பாவாடைக்குக் கீழே தொடையைக் காட்டிக்கிட்டு, மாரை ஆட்டிக்கிட்டு, அசிங்கமான சினிமா பாட்டுக்கு ஆடுறவங்களுக்கு. எப்பேர்ப்பட்ட கலை இது? பாவாடையைத் தூக்கிக் காட்டுறதும், கெட்டகெட்ட பாட்டுக்கு இடுப்பை ஆட்டுறதும், ஆபாசமாப் பேசுறதும்தான் கரகம்னு ஆகிருச்சு. பத்து வயசுல எங்க அய்யா தூக்கிக்கொடுத்த கரகம். முப்பது வருஷமா அதான் சோறு போட்டுச்சு. என்னைக்கு கரகம் மேல மரியாதை போச்சோ, அன்னிக்கே நானும் ஆடுறதை நிறுத்திட்டேன். நான் கடைசியா ஆடினது உலகத் தமிழ் மாநாட்டுல. என் கஷ்டகாலம் பேத்திக்கு கொஞ்சம் உடம்பு முடியலை. கூலி வேலை எதுவும் சரியா அமையலை. அதான் திரும்ப ஆட வந்தேன் தம்பி.’
யோசனையோடு நாயனக்காரர் ராவைப் பார்த்தார்.
‘என்ன தம்பி, ‘இந்த வயசுல இவன் என்னத்த ஆடப்போறான்’னு நினைக் கிறீங்களா? வித்தை, ரத்தத்துல கலந்த விஷயம் இல்லையா? வீட்ல மரப்பெட்டியில இருக்கிற கிளி பொம்மையைப் பார்க்கும்போது என்னை அறியாம உடம்புக்குள்ள ஏதோ ஓடும். இப்ப குடத்தை எடுத்துத் தலையில வெச்சாக்கூட, சாமி வந்த மாதிரி என்னால மூணாங்காலத்துல ஆட முடியும் தம்பி. ஒருத்தனுக்கு நிலைமை சரி இல்லாட்டி, அவனைச் சுத்தி இருக்கிற மனுஷங்க வேணா அநாதையா விட்டுட்டுப் போயிடுவாங்க. ஆனா, வித்தை அப்படி இல்லை தம்பி. கண்ணு மங்கலாத் தெரியுது; கால் தடுமாறுது; ஊசியை மண்ணுல போட்டு, கண்ணால எடுக்கிறப்ப கொஞ்சம் தடுமாறும். கரகத்தோடு ஏணியில ஏறி ஆட முடியாது. ஆனா, பந்தம் சுத்தறது, கரகம் ஆடிக்கிட்டே கம்பு சுத்தறதுல என்னையை ஒரு பய மிஞ்ச முடியாது தம்பி.’
ராவின் பேச்சில் இருந்த உற்சாகம், நாயனக்காரரின் உடலில் இருந்த நரம்புகளில் பரவியது. அங்கேயே பெரியவரின் ஆட்டத்தைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது.
‘செட்டு இல்லாம தனியா வந்திருக்கீங்க?’
‘செட்டுதான் அமையலை. என்ன செய்றதுனு குழப்பமா இருக்கு.’
‘ஏன் எங்ககூட எல்லாம் ஆட மாட்டீங்களாண்ணே?’
‘நன்றி தம்பி… நானே அதான் நெனச்சேன். வாய்விட்டுக் கேக்கக் கூச்சமா இருந்துச்சு.’
‘என்னண்ணே பெரிய வார்த்தை எல்லாம்… எங்க அப்பாகூட ஆடின காலு என்னோட ஆடினா, அப்பா ஆசீர்வாதம் செஞ்ச மாதிரி. நாம ஒண்ணா இருந்தா, ரத்தினத்துக்கிட்ட காசு கூடக் கேட்கலாம். காசு பத்தி பேசிட்டீங்களாண்ணே?’
‘இல்லையே…’ – நாயனக்காரர் குரலைத் தாழ்த்திச் சொன்னார்…
‘திருட்டுப் பசங்கண்ணே இந்தக் கட்சிக்காரனுங்க. அட்வான்ஸ் கொடுக்கிறதோடு சரி. மிச்ச பணத்தை தராம இழுத்தடிப்பானுங்க. அட்வான்ஸ் மட்டும் கொஞ்சம் அதிகமாக வாங்கிட்டா போதும்.’
‘வாசிக்கறதுக்குப் பணம் தர மாட்டானா? அப்புறம் எதுக்கு வாசிக்க ஒத்துக்கிறீங்க?’
‘இல்லாட்டி நாளை பின்ன வேற எங்கேயும் ஆட முடியாது. வேற எங்கேயாச்சும் எதுனா பிரச்னை வந்தா, இவங்க உதவி நமக்குத் தேவைப்படும்.’
‘என் பேத்திக்கு உடம்பு சரியில்லை தம்பி. அவசரமா பணம் வேணும். அதுக்குத்தான் திரும்ப ஆட வந்திருக்கேன்.’
ரத்தினம் வெளியில் வருவதுபோல தெரியவில்லை.
‘அப்படியே காலாற பெட்டிக்கடை வரைக்கும் போயிட்டு வந்துடறேன்’ எனச் சொல்லிவிட்டு, ராவ் திண்ணையில் இருந்து இறங்கினார். எதிரே சுந்தரேசன் வந்துகொண்டிருந்தான். தெருமுனை வரை சென்ற ராவ், சட்டைப்பையில் இருந்து பீடியை எடுத்தார்.
சுந்தரேசன், திண்ணை அருகே செல்லும்போது வீட்டுக்குள் இருந்து டான்ஸ் கோஷ்டி சிரித்தபடியே வந்தது. ரத்தினமும் அவர்களுடன் இருந்தான். அவன் செல்போனை சுந்தரேசன் கையில் கொடுத்துவிட்டு ரஜினி, கமலுடன் தோளில் கைபோட்டு நின்றான். செல்போனில் போட்டோ எடுத்தபிறகு அஜித், விஜயோடு அவனே செல்ஃபி எடுத்துக்கொண்டான். பிறகு குழுவில் இருந்த பெண்களுடன் இன்னொரு செல்ஃபி எடுத்துக்கொண்டான். ரத்தினம் டான்ஸ் கோஷ்டியை வழியனுப்பிவிட்டு இவர்களிடம் வந்தான்.
‘தலைவர்கிட்ட பேசிட்டேன். ‘எல்லாம் சிறப்பா இருக்கணும்’னு சொன்னார். சொன்ன நேரத்துக்கு வந்துடணும். இங்க ஒரு ஆளு இருந்தாரே… எங்க போனாரு?’
‘கூட்டியா…’ என நாயனக்காரர் சுந்தரேசனிடம் கண்ணைக் காட்டினார்.
சுந்தரேசன் தெருவில் இறங்கி வேகமாக ஓடினான். ”பெரியவரே…” எனக் குரல்கொடுத்தான். ராவ் பீடியைக் கீழே போட்டு, காலால் மிதித்து அணைத்து, துண்டால் புகையைக் கலைத்தபடி ஓடிவந்தார்.
‘அண்ணன் உங்களைத் தேடுறார். சீக்கிரம் வாங்க…’
சுந்தரேசன் பின்னாலேயே ராவ் ஓடிவந்தார்.
‘தலைவரு கரகாட்டத்துக்கு ஓ.கே சொல்லிட்டாரு. உனக்கு செட் இருக்குல்ல?’ எனக் கேட்டான் ரத்தினம்
ராவ் நாயனக்காரரைப் பார்த்தார்.
‘எங்காளுதான் தம்பி இவரு. நாங்க எல்லாம் ஒரே செட்டுதான்.’
‘நல்லதாப்போச்சு. அப்புறம் கூட ஆடுறதுக்கு ஒரு நல்ல குட்டியா புடிச்சுக்கொண்டா. இளசா இல்லாட்டியும் ஓரளவு பார்க்கிறமாதிரி நின்னு ஆடற மாதிரி கொண்டா.’
‘பொண்ணா?’ என ஏதோ சொல்ல வாய் எடுத்த ராவின் கையை நாயனக்காரர் அழுத்தமாகப் பற்றி, அவரை மேற்கொண்டு எதுவும் பேசவிடாமல் அடக்கினார். நாயனக்காரர் ரத்தினத்தைப் பார்த்துத் தலையைச் சொறிந்தார்.
‘என்னய்யா?’
‘தம்பி… அட்வான்ஸ் வேணும். மத்த செலவு இருக்குல்ல…’
‘என்னய்யா செலவு? சரக்கு, சாப்பாடு எல்லாம் பசங்ககிட்ட சொல்லிட்டேன். திடல்ல உங்களுக்கு மறைவான இடம் ஒதுக்கித் தந்திருக்கோம். அங்க தங்கிக்கங்க.’
‘இல்ல தம்பி… கரகம் ஆடுற பொண்ணுக்கு, தவில்காரருக்கு…’
சலித்துக்கொண்டே ரத்தினம் பர்ஸைத் திறந்து இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொடுத்தான். நாயனக்காரர் மீண்டும் தலையைச் சொறிந்தார். நீண்ட பேரத்துக்கு பிறகு இன்னொரு இரண்டாயிரம் வந்தது. அவர்களைத் திட்டிக்கொண்டே உள்ளே போனான் ரத்தினம்.
2
ராவ், வீட்டுக்குள் நுழைந்தபோது நண்பகல் ஆகிவிட்டிருந்தது. கயிற்றுக்கட்டிலில் சோர்ந்து படுத்திருந்த சுப்புவின் கழுத்தில் கைவைத்தார். அனலாகக் கொதித்தது. அருகே தொட்டிலில் சுந்தரம் தூங்கிக்கொண்டிருந்தான்.
”ரொம்பத்தான் அக்கறை…” என முணுமுணுத்தபடியே மருமகள் சாரதா அழுக்குத்துணிகளை பிளாஸ்டிக் வாளியில் அள்ளி எடுத்துக்கொண்டு, வீட்டின் பின்னால் இருந்த அடிபம்பை நோக்கிச் சென்றாள். பாவம்… அவள் கஷ்டம் அவளுக்கு.
ராவுக்கு ஒரே மகன். பள்ளிக்கு அனுப்பினார். பத்தாவது தாண்டவில்லை. ஒரு எலெக்ட்ரீஷியனிடம் சேர்த்துவிட்டார். ஓரளவு வருமானம் வர, கல்யாணம் செய்துவைத்தார். ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. பாழாப்போன குடிப்பழக்கம் வந்தது. காலையில் கடைக்குப் போகிறவன், பகல் எல்லாம் அங்கேதான் விழுந்துகிடக்கிறான். மருமகள்தான் வீட்டு வேலைகள் செய்து காப்பாற்றிவருகிறாள்.
சரபோஜி மன்னர் தஞ்சாவூரை ஆண்ட காலத்தில் இருந்து அவரது முன்னோர்கள் எவருமே, இந்தக் கலையைத் தவிர வேறு எதையும் கற்றிருக்கவில்லை. கரகம் ஆடினார்கள்; பொய்க்கால் ஆட்டம், குதிரை ஆட்டம் ஆடினார்கள்; சிலர் குந்தளம், நையாண்டி வாசித்தார்கள்; எப்படிப் பார்த்தாலும் இந்த வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்து செத்துப்போனார்கள்.
ராவ் வீட்டின் மூலையில் கிடந்த டிரங் பெட்டியைத் திறக்க, தூசி பறந்தது. குடம் மங்கிப்போய்க் கிடந்தது. புளி போட்டுக் கழுவினால், பளிச்சென மாறிவிடும். பெட்டிக்குள் பட்டுத்துணிகள், சால்வைகள், புகைப்படங்கள் கிடந்தன. சில காகிதச் சுருள்கள் கிடந்தன. உலோக மெடல்கள் எப்பொழுதோ அடகுக்கடைக்குச் சென்றிருந்தன. பெட்டிக்குள் துழாவ ஓர் அத்தர் பாட்டில், உதட்டுச்சாயம், ரோஸ்பவுடர் கிடந்தன. பச்சை நிறத்தில் உயிரற்ற பிளாஸ்டிக் கிளி ஒன்று கிடந்தது. அதன் சலனமற்ற கண்களையே வெறித்துக் கொண்டிருந்தார்.
திரும்பிவந்த சாரதாவிடம், ராவ் சட்டைப்பாக்கெட்டில் கைவிட்டு, ஐந்நூறு ரூபாயை எடுத்து கொடுத்தார்.
‘ஏது..? புதுசா எங்கேயாச்சும் வேலைக்குச் சேர்ந்திருக்கியா?’
‘திடல்ல கூட்டம் நடக்குது. ஆடப்போறேன்.’
சாரதாவின் கண்களில் வியப்பு அதிகமானது.
‘ஸ்கேன் எடுத்துட்டு வரச் சொல்லியிருக்காங்க. நாளைக்கு டாக்டர் வூட்டுக்கு அழைச்சுட்டுப் போகணும். ஆயிரமாச்சும் வேணும்.’
‘நைட் கச்சேரிக்குப் போறேன். காலையில வந்து தர்றேன்.’
ராவ் வாசல் அருகே சென்று, வெயில் தரையில் பெட்டியைத் தலைகீழாக வைத்துத் தட்டினார். பெட்டிக்குள் இரண்டொரு பாச்சைகள், பெரிய கரப்பான்பூச்சி ஒன்று செத்துக்கிடந்தது. உள்ளே தடுப்பில் இருந்து சின்ன டைரிகள், போட்டோக்கள் எல்லாம் வெளியில் விழுந்தன. டைரியைப் பிரித்துப் பார்த்தார். தேதிவாரியாக அவர் நிகழ்ச்சி நடத்திய ஊர் பெயர்கள் இருந்தன. கறுப்பு வெள்ளை போட்டோக்கள் எல்லாம் செல்லரித்துப்போய்க் கிடந்தன. காமராஜர், எம்.ஜி.ஆரோடு எடுத்திருந்த போட்டோக்களை மட்டும், பாலித்தீன் கவரில் சுற்றி பத்திரமாக வைத்திருந்தார். எல்லா போட்டோக்களிலும் சோகம், வலி, கொஞ்சம் சிரிப்பு, காதல் நினைவுகள் என நினைவூட்ட ஆயிரம் கதைகள் இருந்தன. ஒரு குறிப்பிட்ட போட்டோவைப் பார்த்து அவரது கண்கள் கலங்கின.
கையில் நாகஸ்வரத்துடன் சிரித்தபடி நிற்கும் தண்டபாணி அண்ணனைப் பார்த்தார். நாஞ்சிக்கோட்டையைத் தாண்டி ஒரு கிராமம். அன்று ராவோடு ஜோடி சேர்ந்து ஆடியது கோகிலா. வல்லம் செட். அன்று நாகஸ்வரக்காரர் என்ன வாசித்தார் எனத் துல்லியமாக நினைவுக்கு வந்தது. ‘சித்தாடை கட்டிக்கிட்டு…’ பாடலுக்கு ஆடச் சொன்னார்கள். தண்டபாணி உற்சாகத்தோடு வாசித்தார். யாரோ ஒருத்தன் கோகிலாவின் பின்புறமாகச் சென்று ஜாக்கெட்டைக் கிழித்துவிட்டான். ஆட்டக்காரர்கள் எல்லாரும் அதிர்ந்துபோனார்கள். கோகிலா உடம்பு கூச நின்றிருந்தாள். தண்டபாணி அவரது சால்வையை எடுத்துப் போத்திவிட்டார். ராவ் ஆட்டத்தை நிறுத்திவிட்டு ஜாக்கெட்டைக் கிழித்தவனின் கையைப் பின்னால் முறுக்கினார். எலும்பு மடக்கென முறியும் சத்தம் கேட்டது. கடைசியில் அது சாதி சண்டையில் முடிந்துபோனது. தண்டபாணி அன்று நாகஸ்வரத்துக்கு முழுக்குப்போட்டுப் போனவர்தான். அதன் பிறகு ராவுக்கு சரியான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. பிறகு திருவள்ளுவர் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கிற வேலை, சாந்தி பரோட்டா சென்டரில் சப்ளையர், வாட்ச்மேன்… என பத்துக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்துவிட்டார்.
உள்ளே சாரதாவின் செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது. ‘யாரோ செல்லப்பாவாம்…’
செல்லப்பா அவருக்குத் தெரிந்த இடங்களில் விசாரித்துப் பார்த்துவிட்டதாகவும் எங்குமே கரகாட்டம் ஆடும் பெண்கள் இல்லை என்றும் போனில் சொன்னார். கோயில் திருவிழா நேரம். சிலர் ரத்தினம் பெயரைக் கேட்டுத் தெறித்து ஓடுவதாகச் சொன்னார். ‘உங்களுக்குத் தெரிஞ்ச இடத்தில முயற்சி செஞ்சு பாருங்கண்ணே. எப்படியாச்சும் நைட் ஏழு மணிக்குள்ள திடலுக்கு அழைச்சுட்டு வந்துடுங்க. ஜோடி இல்லாம மட்டும் வந்துடாதீங்கண்ணே. ரத்தினம் கொன்னே போட்டுருவான்’ என மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டு, போனைத் துண்டித்தார்.
3
ராவ், தொம்பன் குடிசைக்குச் செல்லும்போது திலகர் திடல் நோக்கி ஆட்கள் லாரிலாரியாகக் கட்சிக்கொடிகளுடன், கோஷங்களுடன் சாலைகளில் சென்றுகொண்டிருந்தார்கள். ஒருகாலத்தில் திருவாடுதுறை ராஜரத்தினம்பிள்ளை தஞ்சாவூர் வந்தால், சுத்துப்பட்டு கிராம மக்களும் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு, மாட்டு வண்டி ஏறி வருவார்கள் என, ராவின் அப்பா உயிரோடு இருந்தபோது அடிக்கடி சொல்வது உண்டு. ‘கண்களில் நீர் வழிய உடம்பு நடுங்க எப்பேர்ப்பட்ட நாதமய்யா அது!’ என்பார். இப்போது எல்லாம் அரசியல் மீட்டிங் என்றால்தான் கூட்டம் சேர்கிறது.
முத்து மீனாவின் வீட்டு முகவரியை விசாரித்து, அந்தத் தெருவுக்குள் நுழைந்தார். ஒண்டுக்குடித்தனங்கள் நிறைந்த நெரிசலான பகுதி. தேடிவந்த வீட்டின் வாசலில் நின்று கதவைத் தட்டினார். ஒரு சிறுமி கதவைத் திறந்தாள்… பதினைந்து வயது இருக்கும் எனத் தோன்றியது.
‘இங்க முத்து மீனா…”
‘நான்தான் முத்து.’
‘கடவுளே… பேத்தி வயசுப் பெண்ணோடு சபையில ஆடணுமா?’ – ராவின் உடல் ஒரு கணம் கூசியது. ஒரு பெண் இருமியபடியே கலைந்த உறக்கத்துடன் உள்ளே இருந்து வந்தார். ராவை உற்றுப் பார்த்தவர், ‘ஐயா நீங்களாய்யா?’ என முகம் மலர்ந்தார். ராவுக்கும் அவளை அடையாளம் தெரிந்தது.
‘தனம்தானே நீ?’ எனக் கேட்டார்.
‘உள்ளே வாங்கய்யா’ என்ற தனம் பழைய கிழிசல் பாயை தரையில் விரித்தார்.
”ஒரு நிமிஷம் அய்யா. வந்துடறேன்” என தனம் பக்கத்து வீட்டுக்குப் போனாள். ஏழ்மையின் சாயல், வீடு எங்கும் ஒளிவீசியது. முத்துவின் தந்தை புகைப்படத்தில் சந்தனப்பொட்டும் மாலையும் தெரிந்தது. ‘இவனும் நல்ல ஆட்டக்காரன்தான்’ என நினைத்துக்கொண்டார். கல்யாணத்துக்குப் பிறகு தனம் சீர்காழி பக்கமாகச் சென்றுவிட்டதாக யாரோ சொன்னார்கள். அதன் பிறகு இன்றுதான் நேரில் பார்க்கிறார். ஒரு போட்டோவில் முத்து கையில் பள்ளிச்சீருடையுடன் கையில் கோப்பையுடன் நின்றிருந்தாள்.
‘எத்தனாவது படிக்கிறே?’
‘பத்தாவது.’
தேநீருடன், தனம் உள்ளே நுழைந்தாள்.
‘உனக்கு எதுக்கும்மா சிரமம்?’
ராவ் வந்த விஷயத்தைத் தயங்கியபடியே சொன்னார். தனத்தின் முகம் மாறியது.
‘ஒரு வருஷமா பாப்பாவை எங்கேயும் அனுப்பறது இல்லீங்க. வர்றவனுங்க எல்லாம் காலிப்பசங்களா இருக்காங்க. ஏதோ நாலு வீட்ல வேலை செஞ்சு கௌரவமா இவளைப் படிக்கவெச்சுக்கிட்டிருக்கேன்.’
ராவ் முந்தைய தினத்தில் இருந்தே தெருத்தெருவாக அலைந்துகொண்டிருந்தார். அவர் தேடிச்சென்ற பெண்களில் பலர் தொழிலைக் கைவிட்டு சீவல் கம்பெனி, ஜவுளிக்கடை, செல்போன் கடைகளில் வேலைக்குச் சென்றிருந்தார்கள்.
மதியம் திருவள்ளுவர் நகரில் வசிக்கும் ராம்ஜியைச் சென்று பார்த்தார். ராம்ஜியின் தெருவில் கரகாட்டமாடும் பெண் ஒருத்தி இருந்தாள். அவளைப் பற்றி ராவ் விசாரித்தார்.
‘யார் வசந்தியா? இப்பத்தானப்பா செங்கிப்பட்டி போனா…” – ராம்ஜி ரெட்டிபாளையத்துக்கு போன் செய்து விசாரித்தார். மனோஜிப்பட்டியில் விசாரித்தார். சொல்லிவைத்ததுபோல ஒரே பதில்தான் வந்தது. ‘நைட்டு கச்சேரிக்கு இப்ப வந்து செட்டு தேடுறீங்க? சீட்டுக்கட்டுல செட்டு சேர்க்கிற மாதிரில ஈஸியா கேட்கிறீங்க?’
ராவ் திரும்பும்போது, வழியில் தத்தோசியப்பா சந்தில் முத்து என்ற பெண் வசிப்பதாக யாரோ சொன்னார்கள். அங்கு சென்று விசாரிக்க அவள் தொம்பன்குடிசைக்கு இடம் மாறிப்போனதாகத் தெரிந்தது. தொம்பன்குடிசைக்கு வந்து பார்க்கும்போதுதான், தேடிவந்த பெண்ணின் அம்மா தனம் எனக் கண்டுகொண்டார்.
‘சரிம்மா… உன் இஷ்டம். உதவி செய்வேன்னு வந்தேன். உனக்குப் பிடிக்காட்டி வற்புறுத்தலை. நான் வர்றேன்மா’ என எழுந்த ராவின் முகவாட்டத்தைப் பார்த்து, தனத்துக்கு வருத்தமாக இருந்தது.
‘ஒரு நிமிஷம்யா…’ என வீட்டுக்கு வெளியில் மகளை அழைத்துச்சென்ற தனம், அவளிடம் ஏதோ ரகசியமாகச் சொன்னாள். திரும்பிவந்து ராவைப் பார்த்து, ‘அழைச்சுட்டுப் போங்கய்யா’ என்றாள்.
‘ரொம்ப நன்றிம்மா…’
‘நன்றி எல்லாம் சொல்லாதீங்க. எனக்கு உடம்பு சரி இல்லை. இல்லாட்டி நானே அழைச்சுட்டு வந்திருப்பேன்.’
‘பரவாயில்லம்மா. ஆட்டம் முடிஞ்சு நானே ஆட்டோவுல அழைச்சுட்டு வந்து இங்க விட்டுடறேன்’ எனச் சொன்ன ராவ், ஐந்நூறு ரூபாய் பணத்தை தனத்தின் கையில் கொடுத்தார்.
‘காலையில வரும்போது மிச்ச பணத்தைத் தர்றேன்’ என்றார்.
தனம் உள்ளே சென்று ஒரு பையை எடுத்து வந்து முத்துவிடம் கொடுத்தார்.
அவர்கள் அங்கிருந்து கிளம்பி பிரதான சாலைக்கு வரும்போது, ‘ஏன்… ஒரு வருஷமா ஆடப் போகலை?’ – ராவ் கேட்டார்.
முத்து பதில் சொல்லாமல் அமைதியாக வந்துகொண்டிருந்தாள்.
‘இங்க பாரு… உங்க அம்மாவோட ஆட்டத்தைப் பார்த்திருக்கேன். புலிக்குப் பொறந்தது பாயாம போகாதுனு நம்பித்தான் உன்னையை அழைச்சுட்டுப் போறேன். அங்க வந்து ஆடத் தெரியாம முழிக்கக் கூடாது… பாரு.’
முத்து தனது உலர்ந்த உதடுகளைத் திறந்தாள்.
‘போன வருஷம் மாரியம்மன் கோயில் திருவிழாவுல ஒரு ஆளு ஃபுல்லா குடிச்சுட்டு பணம் குத்த வந்தான். ரவிக்கையில குத்தும்போது, ஊக்கை அழுத்தி நெஞ்சுல குத்திட்டான். யாரும் அவனை எதுவும் செய்யலை. நான்தான் சரியா ஆடலைனு எல்லாரும் திட்டினாங்க. சட்டை எல்லாம் ரத்தம். மயங்கி விழுந்துட்டேன். புண்ணு ஆறவே நாலு மாசம் ஆச்சு தாத்தா. இப்ப பரவாயில்ல. ஸ்கூல்ல மட்டும் பசங்க கிண்டல் செய்வாங்க. வேற ஒண்ணுமில்ல தாத்தா…’
அதிர்ந்துபோன ராவ், முத்துவின் முகத்தைப் பார்த்தார். அவளின் குரலில் இருந்த வேதனையை உணர முடிந்தது. இருவரும் பிரதான சாலையைக் கடந்துவந்தார்கள். பேருந்து நிறுத்தம் அருகே ஒரு மருந்துக்கடையைப் பார்த்ததும் ராவின் கால்கள் நின்றன.
‘அந்த சீட்டைக் குடு’ என முத்துவிடம் கேட்டார். தனம் வீட்டின் வெளியில் நின்று முத்துவிடம் ரகசியமாகச் சொன்னது ராவின் காதில் விழுந்திருந்தது.
முத்து கையில் இருந்த துணிப்பையில் இருந்து மருந்துச்சீட்டை எடுத்துக் கொடுத்தாள்.
‘அம்மாவுக்கு என்னாச்சு?’
‘ரெண்டு நாளா காய்ச்சல். விடாம இருமிட்டு இருக்கு. டாக்டர் மருந்து எழுதிக் குடுத்தார். அம்மா வேலை செய்ற இடத்துல இன்னும் காசு வரலை. காசு வந்ததும் மருந்து வாங்கணும்.’
சீட்டில் இருந்த மருந்துகளை அவள் வாங்கியதும், ராவ் சட்டைக்குள் கைவிட்டு மிச்சம் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தார். ஐந்நூற்றுச் சொச்சம் இருந்தது. பணத்தை முத்துவிடம் கொடுத்தார்.
‘இந்த மருந்தை அம்மாகிட்ட கொடு. நான் நாளைக்கு வந்து பார்க்கிறேன். அம்மா ஏதாச்சும் கேட்டா ஆட்டத்தை ரத்துசெஞ்சுட்டாங்கனு சொல்லு…’
காசை வாங்கிய முத்து எதுவும் புரியாமல், குழப்பத்தோடு ராவைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே வீட்டை நோக்கி நடந்தாள். சட்டைப் பையில் சில்லறைக்காசுகளும் ஒரு பீடிக்கட்டும் மட்டும் இருந்தன. எதிரே பெரிய கோயில் கோபுரம் தெரிந்தது. அந்தக் கோயிலே மனிதன்போலவும், கலசம் அவன் தலையில் இருக்கும் கரகமாகவும் அவருக்குள் கற்பனை தோன்றியது. கோயிலை நோக்கி நடந்தார். இருட்டும் வரை அங்கேயே உட்கார்ந்திருந்தார். திடலில் கட்சி மாநாடு தொடங்கிவிட்டதை வானில் வெடித்த வாணவேடிக்கைகள் காட்டிக்கொடுத்தன. எழுந்து வீட்டை நோக்கி நடந்தார்.
‘இந்நேரம் ரத்தினம் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டிருப்பான். வீட்டு வாசலில் ரத்தினம் காத்திருக்கலாம்’ என யோசிக்க பயம் வந்தது. ‘கேவலம் ரெண்டாயிரம் ரூபாய்க்காக டெல்லி தலைவரை திடலில் நிற்கவைத்துவிட்டு, தனது வீட்டை நோக்கிக் கிளம்பிவருவானா என்ன?’ என ஆறுதல் அடைந்தார். ஆனால், ‘காலையில் வந்து கத்துவான். கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுவான். ரெண்டு அடி விழுந்தாலும் ஆச்சர்யம் இல்லை’ என யோசித்த மறுகணமே ‘பயப்படுறதும் அசிங்கப்படுறதும் புதுசா என்ன?’ என தனக்குள் கேட்டுக்கொண்டார். ‘வாழ்க்கை எவ்வளவோ அடிச்சிடுச்சு… இது என்ன சுண்டைக்காய்?’ என மனதைத் தேற்றிக்கொண்டார். பொழுது விடிந்ததும் எங்கேயாவது வெளியூர் சென்றுவிட்டு ஒரு வாரம் கழித்து வந்தால் எல்லாருக்கும் மறந்துபோயிருக்கும். மருமகள் எங்கேயாவது பணம் புரட்டி சுப்புவைத் தேற்றிவிடுவாள். அந்த நாயனக்காரர் நிலைமைதான் பாவம். நாகஸ்வரம், பக்க வாத்தியம் இல்லையே. தனியாவர்த்தனம் செய்யலாம். கரகம் இல்லாட்டியும் அவர்கள் தனி கச்சேரியாக வாசிப்பார்கள். தன்னைப் போன்ற ஆட்களின் பாடுதான் திண்டாட்டம். செட்டு இல்லாமல் பிழைக்கவே முடியாது.
வீட்டை நெருங்கும்போது தெரு உறங்கி அமானுஷ்ய அமைதியாக இருந்தது. ஆனால், யாரோ எங்கோ நாகஸ்வரம் வாசிக்கும் சத்தம் கேட்டது. ‘இந்த நேரத்தில் யார் வாசிக்கிறார்கள்?’ எனக் குழப்பமாக இருந்தது. காதுகளைக் கூர்தீட்டி கேட்டார். பெருமழைக்கு முன்பான குளிர்காற்று ஜில்லென்று வீசிக்கொண்டிருந்தது. வானத்தில் நிலா ஒளிவீசிக்கொண்டிருந்தது. தூரத்தில் நிலவொளியில் பெரிய கோயிலின் கோபுரக் கலசம் தெரிந்தது. ‘ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே… குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே…’ எனப் பாடல் ஒலித்தது. கண்கள் கலங்கியபடி, வீட்டை நோக்கி வேகமாக நடந்தார். அந்தப் பாடல் அவரைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தது!
– நவம்பர் 2015