ஆனந்த லகிரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2024
பார்வையிட்டோர்: 27 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜில்லென்ற வெகு மனோகரமான மாலை நேரம். துறைமுகத்தில் கப்பல்கள் நுழைவது போல் மேகங்கள் வானில் வந்து கொண்டிருந்தன. நான் கடைத் தெருவில் சுற்றிக் கொண்டிருந்தேன். கல்யாணக்காரர்கள் போய்க் கொண்டிருந்தனர். சிலருக்குச் சவப் பார்வை, சிலருக்குச் சவநடை. நான் மட்டும் கட்டின்றி, கவலையின்றி மகா ராஜனைப் போலிருந்தேன். எனக்கென்ன கவலை? என் மனமோ பாழடைந்த மடத்தைப் போல் சூன்யமாய், சோம்பல் கணிகையின் மார்பின் மீது படுத்துக் கிடந்தது. திடீரென்று ஒரு எண்ணம் பிறந்தது. “தமசின் தேக்கத் திலிருந்து பூர்ண சைதன்யத்தில் அவசமாவது. எப்படி? என்று எண்ணி முடியுமுன் ஒரு உருண்டை லேகியம் வயிற்றுக்குள் போய் விட்டது… 

இரவு மணி ஒன்றிருக்கும், என் உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஏதோ ஒரு நெருப்பு வெள்ளம் பரவி என்னை எழுப்பிற்று. படுக்கையினின்று எழுந்திருந்து பார்த்தேன். எனக்கு எலும்பே இல்லை; எல்லாம் எரிந்து சாம்பாலாகி யிருந்தன. வெறும் சாக்கைப் போன்ற தோல் உறைதான் பாக்கி, கண்கள் நெட்டி போல் மிதக்கவே, வெளியே பார்த்தேன். பூர்ணசந்திரன் பெரிய வண்ணாத்திப்பூச்சி போல் பறந்து கொண்டிருந்தான். 

ஒரு கணம் சென்றது. உள்ளத்தின் அறிவு-விழிசுடர் வீசிற்று. என் ஜீவ சக்தியில் தீவிரமான உணர்ச்சி பொங் கிற்று. இருந்தாற்போலிருந்து, பறக்கத் தெரியாத பட்சிக் குஞ்சு சிறகுகளை அடித்துப் பதறி விழுவதுபோல் இருந்தது. துயரமென்னும் மாளிகையின் படிக்கட்டுகளில் ஏற ஆரம் பித்தேன். ஆ! என்ன முட்டாள் தனம்! எவ்வளவு சக்தி யற்றது இம்மனம்! எவ்வளவு பயங்கொள்ளி நான்!- என்பன வற்றையெல்லாம் உணர்ந்தேன். உணர்ந்து என்ன பிரயோசனம்? உடம்புக்கு ஒன்றும் வந்துவிடவில்லை. கட்டை என்னவோ கண்முன் கிடக்கிறது. ஒருநாளும் இப்பொழுது சாகப் போவதில்லை என்ற நிச்சயம். இவ்வளவும் எதனால் வந்த வினை என்றும் நன்றாய்த் தெரியும். இருந்தாலும், ரத்தாசாயத்தின் ரேசக பூரகங்கள் ஒவ்வொன்றின் போதும் என்னுள் “குபுகுபு” என்று வெப்பம் நிறைந்தது; மன வேதனையும் சொல்லொணாத் துயரமும் என்னை ஆட்சி கொண்டன. 

இவ்வளவு சம்பிரமங்களுக்கிடையில் என் அறிவு நுட்ப மாகிக் கொண்டே வந்தது எனக்கு ஆச்சரியமாயிருந்தது. வெகு ரகசியமான தத்துவங்களும் நுணுக்கங்களும் தெளிவாய்த் தெரிந்தன. எதிர்காலம், இறந்தகாலம் என்ற இரண்டு ஞாபகங்களும் மறைந்து நிகழும் நிமிஷத்தை ஒளிமயமாக்கின. இடம் வெளி என்ற உணர்ச்சி மாறி மாறி மங்குவதும் ஒளிர்வதுமாயிருந்தது. திடீரென என் உடல் கழன்றது. நான் தனியனாய் கேவலம் ஆத்மாவாய்— நின்றேன்! 

சாதாரண காலங்களில் உடல் வேறு, ‘நாம்’ வேறு என்பதை நாம் உணருவதில்லை. அவற்றினுடைய இரட் டைத் தன்மை தினசரி செய்யப்படும் வினையில் மறைந்து விடுகிறது. ஆனால் அப்பொழுதென்றால், எனக்குள்ளிருக் கும் சிவனார், வெறும் சாட்சி மாத்திரமாக நின்றுகொண்டு, நந்திதேவன்-என் உடம்புதான்!-தவிக்கும் தவிப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். உடம்போ, கோடை காலத்தில் பறக்கும் இலவம் பஞ்சுபோல் மிதந்து கொண்டிருந்தது. இரட்டைகள் தெளிவாய்ப் பிரிந்து நின்றது சற்றுத் தமாஷா யிருந்தது. 

பின்னொரு விஷயம் அறிந்தேன். “அறிவே சக்தி” என்று சொல்லுகிறார்களே அது சுத்தப் பிசகு. உணர்ச்சிக்குப் பிணைக்கப்படாத அறிவு வெறும் ஊமை. பிணம் அணிந்திருக்கும் நகையை ஒக்கும். அப்படிக்கில்லை யென்றால், ஏன் உடம்பு சாகவில்லையென்ற நிச்சய ஞான மிருந்தும் கூறலாம்? 

நான் சொன்னதுபோல், இந்த ‘இரட்டைகள்’ பெரும் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தன. தன்னை விரட்டி வரும் வேட்டை நாயைக் கண்ட முயல்போல் தவித்தேன். 

“அப்பா! இந்தச் சங்கடத்தை எப்படியடா ஒழிக்கப் போகிறோ”மென்று பார்த்துக் கொண்டிருந்தேன். கண்களை மூடிக் குப்புறப் படுத்துக் கொண்டேன். என் கற்பனைகளும் எண்ணங்களும் சூரியனைக் கண்ட வெளவால்கள் போல் மறதி என்னும் மரக்கிளையை நாடின. ஆனால் அவைகளுக்குப் பதிலாக ஒரு வெகு விசித்திரமான சத்தத் தொடர்ச்சி காதில் விழுந்தது. முதல் சத்தத்தைக் காட்டிலும் இரண்டாவது வலுவு. இரண்டாவதைக் காட்டிலும் மூன்றாவது இன்னும் வலுவு. இப்படியே போய்க்கொண்டிருந்தது. என்னவென்று யோசித்ததில் என் இருதயத்தின் ஒலிதான் அப்படி மரம் வெட்டுபவன் போல் சத்தம் செய்தது என்று உதயமாயிற்று. என்னென்ன விசித்திரம் சிருஷ்டியில்! 

மறுகணத்தில் தேகம் ஒரு புள்ளியைப் போலாகி விட்டது. அதுகூடச் சரியல்ல. என் தேகமே விரிந்து முடிவற்ற வெளியுடன் கலந்து போயிற்று. உஹும்! அதுவும் பிசகு! தேகமே காணாமற் போய்விட்டது, போதாதா? ‘‘அடியைப் பிடியடா பாரதபட்டா” என்றபடி பழைய திகில் களும், பயமும், துயரமும் திரும்பிவந்து விட்டன. எனக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தேன். கோணாமாணா என்று எண்ணங்கள் எழுந் தன ”கிணற்றங்கரைக்குப் போய் பிரும்மானந்தமாய் ஸ்நானம் செய்துவிட்டு வரலாமா? அல்லது ஞாயிற்றுக்கிழமை இரவு ஹோட்டல் ‘தாட்’ எங்கேணும் கிடைக்குமா? அல்லது இந்தத் துன்பத்திரையையும், குரூரமான பரவசப்படுதாவையும் சுருட்டித் தள்ளக் கூடிய புத்திசாலி டாக்டர் ஒருவரேனும் ஊரில் கிடையாதா என்று பலவாறு எண்ணிக் கொண்டிருந்தேன். 

துயரத்தில் கொஞ்சம் இடைவெளி கண்டது. அம்மாவைக் கூப்பிட்டுப் பிள்ளையின் யோக்யதையைப் பற்றி வெகு வினயமாய்ச் சொன்னேன். “அப்பா நல்ல காரியம் செய்தாய்!” என்று சொல்லித் தாயார் என்னை அணைத்து கொண்டாள். தாயின் பரிசம் பட்ட மாத்திரத்தில் பயம், திகில் அவ்வளவும் தோல்வியுற்று ஓட்டம் பிடித்தன. 

அதற்குப் பிறகு நாங்களிருவரும் திறந்த மாடிக்குச் சென்றோம். சந்திரன் புழுதிபடிந்த வெள்ளிக் கடைபோல் உருண்டு கொண்டிருந்தான். காற்று மரங்களுக்கிடையில் நோயாளியைப் போல் முனகிக் கொண்டிருந்தது. உடலும், ஆத்மாவும் நன்றாயின. என் அறிவுச் சுடர் நடுங்காமல் எழுந்தது. என்னவோ தோன்றிற்று. தாயாருடன் விக்ரக ஆராதனையைப்பற்றி வாதம் தொடுத்தேன். சிறிதுநேரம் பேசிவிட்டு “வாஸ்தவம் தானப்பா, தேவையில்லை” என்று ஒப்புக் கொண்டாள். அப்பொழுதிலிருந்த மனோவேகத்தில் எப்பேற்பட்ட விஷயத்தைப் பற்றி என்னுடன் யார் வாதாடி யிருந்தாலும் என் தாயாரின் கதிதான். அவ்வளவு தெளிவும் சாதுர்யமும் என்னிடம் விளங்கின.

வாதத்தின் வெப்பம் காட்டாற்று வெள்ளம்போல் குறைந்தது. 

சுற்று முற்றிலும் நிம்மதியான மனத்துடன் பார்த்தேன் மேகங்கள் கலைந்திருந்தன. காலையில் ஊஞ்சலாடும் காற்று இன்பக் கதை சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் முன் போலில்லாமல், ஆற்று மணலில் கிடக்கும் ஒத்தை ரூபாயைப் போல், நீலவானில் சந்திரன் பிரகாசமாய்க் கிடந்தான்.

– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *