கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2024
பார்வையிட்டோர்: 93 
 
 

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்ன, ஆந்தைமாதிரிப் பார்க்கிறீர், எனக்குப் பயமாய் இருக்கு” என்று சொல்லிவிட்டு, அவன் அவளைப் பார்த்துச் சிரித்தான். 

அவளுக்கு, அவன் தன்னை ஆந்தை என்று சொல்லியது பிடிக்கவில்லை. 

“என்ன, நான் ஆந்தைமாதிரியா இருக்கிறன்? வரவர உங்கட பகிடி கூடித்தான் போச்சு” என்று கூறிய அவன் சகவகுப்புத் தோழி சுகுணா, அவனோடு ஏதோ ஆவலோடு கதைக்க வந்ததையும் சொல்லாது, விரிவுரை வகுப்பை நோக்கி நடந்தாள். 

“இல்ல சுகுணா, நான் சும்மா விளையாட்டாத்தான் சொன் னேன்” என்று அவன் சமாளிக்க முயன்றாலும் அவள் அங்கே நிற்காது கோபித்துக்கொண்டு போய்விட்டாள். 

அவன் அதை எதிர்பார்க்கவில்லை. 

என்றாலும் பின்னர் கன்ரீனில் மதிய போசனத்தின்போது பார்க்கலாம் என்று இருந்துவிட்டான். 

அவன், அவளைப் பார்த்து அப்படிக் கூறியதில் ஓர் உண்மை இருந்தது என்று அவனுக்குத் தெரியும். அவள் அழகானவள் தான். இருந்தாலும் சிலவேளைகளில் அவளைப் பார்க்கும் போது எங்கோ ஓர் ஆந்தை பதுங்கியிருந்து நிழலாடி மறைவதை அவன் கண்டிருக்கிறான். 

ஆனால், அதை அவன் அவளிடம் சொன்னதில்லை. இன்று ஏதோ வாய்தடுமாறி வந்துவிட்டது. இப்படிப் பலரிடம் அவன் தனது அவதானிப்பைக் கூர்மைப்படுத்தும் சில கணங்களில், அவர்களிடம் ஏதோ ஒரு மிருகமோ பறவையோ அல்லது ஏதாவது ஒரு பிராணியோ அல்லது வேறொரு ஜீவனோ, தாவரமோ, ஜடப்பொருளோ பதுங்கியிருந்து கண்சிமிட்டி மறைவதைக் கண்டிருக்கிறான். அது அவனுக்கு ஒரு திகில்தரும் கணங்கள்.

சிலரின் வாயமைப்பு, மட்டைபோன்று நீண்டு தடித்த சொண்டு, நீருக்குள்ளிருந்து வெளியே மேலெழும் முதலையை நினைவூட்டி அவனைப் பயமுறுத்தியிருக்கிறது. சிலரின் கிளிச் சொண்டுபோன்ற வளைந்த சிறிய மூக்கு, பறவையும் மிருகமுமில் லாத ஏதோ ஒரு பிராணியைப் பிரதிபண்ணுவதைக் கண்டிருக் கிறான். சிலரின் தட்டையான மூக்கு, தவளை ஒன்றின் முழு உருவத்தையே காட்டுவதுபோலிருக்கும். இன்னும் சிலரின் விழிக ளில் ஏறிய பச்சிலை நீலம் அல்லது நரைவிழுந்த கோடுகள் அவர்களுக்குள் பாம்பு பதுங்கியிருப்பதுபோல் ஓர் அருவருப்பு அல்லது நச்சுத்தன்மை வெளிவருவதுபோல்… இது முற்பிறப்பின் எச்சங்களா அல்லது பரிணாமப் பிறழ்வுகளா? 

ஒருவரைப் பார்த்ததும் இத்தகைய பார்வைப் பிறழ்வு ஏன் அவனுக்கு ஏற்படுகிறது? அது, அவனது மனவிகாரமா அல்லது பலரின் பார்வைக்குட்படாதவை அவனது பார்வை வீச்சில் சிக்கி விடுகின்றனவா? 

எது எப்படியாய் இருந்தாலும் அவனது மனச்சாய்வும் அதன் வழிவரும் அனுபவச் சிதறல்களும் வித்தியாசமானவைதான். சின்ன வயதிலிருந்தே அவனுக்குப் பேய், பிசாசுக் கதைகளைப் பற்றிக் கேட்பதென்றால் தனி ஆர்வம். அமானுஷ்யமான விஷயங் களை யாராவது விபரிக்கும்போது, வாயைத் திறந்தபடி கேட்டுக் கொண்டிருப்பான். 

திடீரென அவனுக்கு அவனது சின்னக்கால நினைவுகள் ஓடிவந்தன. 

அவனது அம்மா ‘நேரங்கெட்ட நேரத்தில்’ அவனைத் தனி யான இடங்களுக்குப் போகவேண்டாம் என்பாள். மதிய வேளை களில், மம்மல்பொழுதுகளில் ஆலடி அரசடிகளின் கீழ் நிற்க வேண்டாம் என்பாள். ஆனால், இவனோ வேண்டுமென்றே அவ்வாறான நேரங்களில் அவற்றின் கீழ் நின்று, ஏதாவது தனக்கு நடக்குதா என்று பார்ப்பதில் அவனுக்குத் தனியான ஆர்வம். 

ஒருமுறை அவனது வீட்டுக்குப் பின்னாலுள்ள ஆலடி வைரவருக்கு விளக்கேற்றிவிட்டுவரும் வேலையை அவன் அம்மா இவனிடம் ஒப்படைத்தபோது, வேண்டுமென்றே விளக்கேற்றாது விட்டுவந்தான்; ‘வைரவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பமே’ என்பதுபோல். 

வீட்டுக்கு வந்ததும் அம்மா கேட்டாள், “என்னடா விளக்கேத்தினாயா?” 

“ஓம் அம்மா” என்று பொய் சொன்னவன், “விளக்கேத்தா விட்டால் வைரவர் என்னம்மா செய்வார்?” என்று கேட்டான்.

“டேய், வயிரவர் பொல்லாத கடவுளடா. அவரோட சேட்டை விட்டால், அவருக்குக் கோவம் வரும்.” அம்மா சொன்னாள். 

“கோவம் வந்தால்?” 

“கோவம் வந்தால், அவற்றை நாயை விட்டுக் கடிக்கவைப்பார்.”

“ஏன் நாயை விட்டு…?” 

“நாய்தான் அவற்ற வாகனம் எண்டு உனக்குத் தெரியாதே? இப்பதான் பால்குடிமாதிரி விடுத்துவிடுத்துக் கேக்கிற…” 

அது அவனுக்கும் தெரியுந்தான். ஆனால், அம்மா சொன் னதைக் கேட்க அவனுக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. 

‘நான் வயிரவராக இருந்திருந்தால் நல்ல குதிரையை வாகன மாகத் தெரிந்திருப்பன். வயிரவர் ஒரு விடுபேயர்’ என்று தனக்குள் நினைத்தவன், மீண்டும் சிரித்தான். 

அன்று இரவு அவன் வீட்டு நாய் முற்றத்தில் நின்று ஊளை யிட்டபோது அவனுக்கு உள்ளூரச் சிறிது பயமாகத்தான் இருந்தது. ஆனால், அதற்குமேல் அது அவனோடு சேட்டைவிட வரவில்லை – அவன் வயிரவரோடு விளக்கேற்றாது சேட்டை விட்டதற்குப் பின்னரும் என்பதில் அவனுக்கு வெற்றியே. என்றாலும் நாய்க் குணத்தைப் பற்றி அவனுக்கென்ன தெரியும்? ஊளையிட்டுக் கொண்டிருந்த நாய் திடீரென வீட்டைச் சுற்றிச்சுற்றிவந்து குரைக்கத் தொடங்கியபோது மீண்டும் அவனுக்கு விட்டிருந்த பயம் மேலாடிக் கொண்டு வருவது போலிருந்தாலும் அதையும் மீறிச் சிரிப்புத்தான் வந்தது. இம்முறை அவனது சிரிப்புக்குக் காரணம் வயிரவர் அல்ல; அவனது வகுப்பு வாத்தியார் செல்லத்துரையர்தான். மனிசன் வகுப்புக்குள் அடியெடுத்துவைத்த நேரத்திலிருந்து ‘வாள் வாள்’ என்று வாய் ஓயாது கத்திக்கொண்டிருப்பதும், கடைவாய்ப் பல் தெரிகிற அளவுக்கு விகாரமாகச் சிரிப்பதும் அவனுக்கு அவரை அந்த நேரத்திலும் அவன் வீட்டு நாயோடு சம்பந்தப் படுத்திப் பார்க்கவைத்துக்கொண்டிருந்தது. அவன் மீண்டும் சிரித்தான். 

இன்னொரு நினைவு அவனுக்கு ஓடிவந்தது. 

அன்று, அவன் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும்வராததுமாக, “தம்பி, உனக்குத் தெரியுமா உன்ர வல்லிக்கிழவன் தூக்குப்போட் டெல்லோ செத்துப்போச்சு” என்று, அவன் அம்மா தழுதழுத்த குரலில் சொல்லியபோது, இனந்தெரியாத துக்கம் அவன் நெஞ்சை அழுத்திக்கொண்டு மேலெழுந்தது. 

வல்லிக்கிழவன் அவன் வீட்டின் தெற்குப்புறமாக பரந்திருக் கும் தென்னந்தோப்பிலுள்ள கொட்டிலில் தட்டத்தனியாக வாழ்ந்தவர். மனைவியாலும் பிள்ளைகளாலும் கைவிடப்பட்ட நிலையில் அவ்வப்போது அவருக்குக் கிடைத்த கூப்பன் சாமான் களைக்கொண்டு இயலுமானபோது சமைத்துச் சாப்பிடுவார். அனேகமான நேரங்களில் அவன் அம்மா தருவதை, அவன் கொண்டுபோய்க் கொடுத்தால் அவர் பொழுது போய்விடும். அவருக்குச் சாப்பாடு கொண்டுபோகும் சாட்டில், அவர் இருக்கும் இருள்மண்டிய கொட்டிலுக்குப் போவதென்றால் இவனுக்குத் திகில் கலந்த பிரியம். 

“அப்பு” என்று அழைத்துக்கொண்டு அவர் கொட்டிலுக்குள் நுழையும்போதே அவனது கண்கள் இருண்டுபோய்க் கிடக்கும் கொட்டிலின் முகட்டைப் பார்த்த வண்ணமே இருக்கும். அங்கே அவன் கண்களுக்கு விருந்தாக அடுக்கடுக்காக வௌவால்கள் முகட்டில் தொங்கிக்கொண்டிருக்கும். அவன் அவற்றை ஒவ்வொன் றாக எண்ணுவான். எண்ணி முடிந்ததும் சிலவேளைகளில், “அப்பு, இண்டைக்கு ஒரு வௌவால் குறையுதே?” என்று அவரிடமே காரணத்தைக் கேட்பதுபோல் கேட்பான். 

அவரிடமிருந்து மிக ஆறுதலாகவே பதில் வரும். 

“எங்க போச்சுதோ, ஆருக்குத் தெரியும். பூனைகீனை புடிச்சும் இருக்கும்” என்று அவர் கூறும்போது, அவர் கொட்டிலின் இருண் மைபோலவே பதிலும் இருண்மைபூசி வரும். 

அவன் கிழவரின் பதிலில் அக்கறைப்படாது, இருளில் முகட்டு வளைப் பிரதேசத்தில் தொங்கியவாறு ஒருவித கிசுகிசுப்போடு மினுக்கங்காட்டும் வௌவால்களையும் இருளில் கண்கள் மட்டும் மினுங்கக் குந்திக்கொண்டிருக்கும் வல்லி அப்புவையும் மாறிமாறிப் பார்ப்பான். 

அவருக்கும் வௌவாலுக்கும் என்ன தொடர்பு? 

ஏதோ தொடர்பு இருப்பதுபோல் கிழவரின் கண்கள் அவ னுக்குப் புலப்படுத்துவதுபோல்… 

இப்போ அந்த வல்லிக்கிழவன் தூக்குப்போட்டுச் செத்துப் போயிற்று. 

அம்மா சொன்ன செய்தி அவனைச் சில்லிடவைத்தது. 

இத்தனை நாளாய் அவர் கொட்டில் முகட்டில் தொங்கிக் கொண்டிருந்த வௌவால்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து கிழவரையும் தம்மைப்போல் தொங்கவைத்துவிட்டனவே! 

அவனுக்கு அங்கே ‘சதி’ செய்துவிட்டுத் தொங்கிக்கொண்டி ருக்கும் அத்தனை வௌவால்களிலும் பற்றிக்கொண்டு வந்தது. வௌவால்களின் தொங்கும் ஈர்ப்புக்குக் கிழவர் பலியாகிப் போனாரா? 


பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த அவன் அதிலிருந்து விடுபட்டான். 

மத்தியானம் சாப்பிடுவதற்குக் கன்ரீனுக்குப் போனபோது சுகுணாவைச் சந்திக்கலாம் என்று நினைத்தான். 

அவன் நினைத்ததுபோலவே அவள் அங்கே நின்றிருந்தாள். ஆனால், தனியாகவல்ல. அவளோடு நடேசன் நின்று கதைத்துக் கொண்டிருந்தான். அவர்களிடையே நல்ல சுவாரஸ்யமான கதை போய்க்கொண்டிருப்பதுபோல் தெரிந்தது. 

நடேசன் நல்ல உயரமும் வாட்டசாட்டமான உடல்வாகும் உடையவன். நடேசனைப் பார்த்தவுடனேயே இவனுக்கு, சடைத்து வளர்ந்து, கிளைகள் பரப்பிய நெடிய மரந்தான் நினைவுக்கு வரும். 

அவனைப் பார்த்ததும் ஏன் அப்படி மரத்தை நினைத்துக் கொள்கிறான் என்பது அவனுக்கே தெரியாது. அதுமட்டுமல்ல, நடேசனைப் பார்த்ததும் பெரிய சடைத்து வளர்ந்த மரத்தின் நினைவுவர, அது அவனைத் தவிர்க்கமுடியாத வகையில் அவனது சிறுபராய ஊர் நினைவுகளுக்குக் கொண்டுசெல்வது அடிக்கடி நேர்வதுண்டு. அவனது வீட்டின் கொல்லைப்புறத்தில், இவ்வாறு சடைத்து வளர்ந்து, கிளைகள் பரப்பிய மஞ்சவண்ணா. அதன் இருள் மண்டிய கிளைகளுக்குள் சதா ஒரு சோடி ஆந்தை ‘திருதிரு’ வென முழித்துக்கொண்டிருக்க, இவன் அடிமேல் அடிவைத்து அதன்கீழ் போய், ஒளிந்துநின்று பார்ப்பதில் ஏற்படும் திகில்… 

நடேசன் அங்கே மரம்போல் நின்றிருந்தான். 

ஆனால், அந்த மரத்தின் கிளைகளில் ஆந்தை ஒன்றும் இருக்கவில்லை. மரத்தின் கீழே சுகுணாதான் நின்று கதைத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் ஏதோ அன்னியோன்யமான கதையில் மூழ்கியிருந்தனர். அவன், அவர்களைக் குழப்பாது ஒரு மூலையில் போய் இருந்து சாப்பிட்டுவிட்டு, தான் வந்த சுவடு தெரியாமலேயே வெளியேறினான். 

சிறிது காலத்திற்குப் பின்னர் சுகுணா நடேசனைக் கலியாணம் செய்துகொண்டாள். அவர்கள் மணவாழ்க்கை சந்தோஷமாகவே நகர்ந்தது. இரண்டு குழந்தைகள் வேறு. ஆனால், மணம் முடித்து ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் நடேசன் திடீரென இறந்துபோனான். 

அவனால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நடேசன் அவனது நண்பன் மட்டுமல்ல; சொந்த ஊரவன், உறவினன். சுகுணாவும் அப்படியே. 

நடேசன் ஏன் இறந்துபோனான்? 

அவன் இருந்தாற்போல மூக்காலும் வாயாலும் இரத்தம் கக்கி இறந்துபோனான். ஊர்ச் சண்டையில், யாரோ நடேசனிடம் அடிவாங்கிய பகுதி, மட்டக்களப்பிலிருந்து மந்திரவாதியைக் கொண்டு வந்து ‘உடன்பலி’விட்டு அவனைக் கொன்றுபோட்டதாகச் சிலர் கூறினர். வேறுசிலர் அவன் முதல்நாள், தாய்வீட்டுக்குப் போய்விட்டு, இரவு நேரமாகச் சுடலைப்பக்கத்தால் தனியாக வந்தபோது ‘பேய் அடித்ததாக’ச் சொன்னார்கள். 

‘பேய் அடித்த’ கதையைக் கேட்டபோது அவன் ஒருமுறை சுடலைப்பக்கத்தால் இரவு நேரத்தில் தான் வந்த அனுபவத்தை நினைத்துக்கொண்டான். அந்த நேரத்திலும் அந்நினைவு அவன் முன் நிழலாடியது. 

இரவு சூரன் போர் பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது, வேண்டுமென்றே குறுக்கு வழியைத் தவிர்த்து, அவனும் அவனது நண்பனும் கடற்கரை அருகே இருக்கும் சுடலையை ஒட்டிய வழியில் வந்தனர். இவனின் தூண்டுதலால் நண்பனும் இழுபட் டான். ‘நடுநிசி நேரங்களில் கொள்ளிவாய்ப் பேய்கள் நின்றாடும் என்று அவன் பாட்டி சொன்னது அவனுக்கு ஞாபகம். அப்படி எதையாவது காணலாம் என்ற ஆவல் அவனுக்கு. ஆனால், வீடு போய்ச் சேருமட்டும் அப்படி எதையும் அவர்கள் சந்தித்ததாய் இல்லை. வீட்டுக்குப் போனதும் நடந்துவந்த அலுப்பின் காரணமாக வெளிவிறாந்தையிலேயே பாயைப் போட்டு, படுத்துவிட்டான். 

தூக்கம் கண்களை மெல்லச் சுழற்றியபோது, யாரோ மெதுவாக அவனை, “சிவா, சிவா” என்று பெயர் சொல்லி அழைப்பது கேட்டது. உடனே அவன் “ஆரது?” என்று கேட்டவனாய் ‘அவக்’கென எழுந்தபோது, முற்றத்தில் பெரிய வடலிபோல் கரிய நெடிய உருவம் அவனை அழைப்பதுபோல் நின்றது. அதைச் சுற்றி, பலபேர் விகாரமாகச் சிரிப்பது கேட்டது. அவ்வளவுதான், அவன் “அம்மா” என்று அலறவும், அவன் அருகே படுத்திருந்த நாய் பெருஞ்சத்தத்தோடு முற்றத்துக்குப் பாய்ந்துபோகவும், அவன் அம்மா, “என்ன அது?” என்றவாறு வெளியே ஓடிவரவும், வீடு ஒருசில கணங்கள் அல்லோலகல்லோலப்பட்டு அதிர்ந்து நின்றது. வெளியே வீட்டு வேலியனைத்தையும் முறித்துக்கொண்டு குழு மாடுகள் பாய்ந்துபோவதுபோலவும் பெருஞ்சத்தம் ஏற்பட்டுப் பேரமைதி நிலவியது. அதற்குப் பின் அவன் அத்தகைய ‘விஷப் பரிட்சை’களில் ஈடுபட்டதே இல்லை. நடேசனும் பேய் அடித்துத் தான் செத்துப்போனானா? 

எது எப்படி இருந்தாலும் நடேசன் இறந்துபோனதற்குக் காரணம் அவனுக்கு ‘பிரஷர்’ இருந்திருக்க வேண்டும் என்றும் அதனால், இரத்த நாளம் வெடித்து இரத்தம் கசிந்ததென்றும் உள்ளூர் வைத்திய பரிசோதனை கூறியதையே அவனும் சரியென்று நினைத்தான். இருந்தாலும் அவன் மனதின் மூலையில், ஏதும் வித்தியாசமானதைப் பார்க்கும் அதிர்ச்சியிலும் அது நேரலாம் அல்லவா என்ற கேள்வியும் எழுந்துகொண்டே இருந்தது. 

நடேசனின் பிரேதத்திற்குச் செய்ய வேண்டிய கிருத்தியங்கள் முடிந்தன. பிரேதத்தைப் பாடையில் தூக்கிவைத்து, சுடலைக்குக் கொண்டுபோக வேண்டிய நேரம் நெருங்கியது. அப்போது, அங்கிருந்தோர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதுபோல் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அவ்வேளை எங்கிருந்தோ ஓர் ஆந்தை பறந்துவந்து நடேசனின் பிரேதத்தின் தலைமாட்டில் அமர்ந்தவாறு ஒரு சோகமான பார்வையை எறிந்தது. 

“இஞ்ச பார் ஆந்தையை, பிரேதத்துக்கு அருகில் வந்திருக்கு, இது கூடாது” -ஒருவர் கத்தினார். 

“நான் சொன்னன், ‘உடன்பலி’விட்டுத்தான் அவனைக் கொண்டவை எண்டு. அந்தப் பேய்தான் ஆந்தைமாதிரி வந்திருக்கு” என்று இன்னொருவர் குசுகுசுத்தார். 

அவனுக்கும் ஆச்சரியமாகவே இருந்தது. 

அப்போது சோகமே உருவாக இருந்த சுகுணாவைப் பார்க்க அவனுக்குப் பரிதாபமாகவே இருந்தது. 

“ஆந்தை வரக்கூடாது; அதை அடிச்சுக் கொல்லுங்க” என்று இன்னொரு பெரியவர் சொன்னதுதான் தாமதம், அங்கிருந்த விளக்குமாற்றுத் தடியால் ஆந்தைக்கு ஒரே அடி. அது செத்து விழுந்தது. 

ஆந்தை ஏனைய பறவைகள்போல் வேகமாக அசையாது. வெகுநேரம் ஒரே இடத்தில் இருந்தவாறு ‘பார்த்துக்’கொண்டே இருக்கும். இதற்குக் காரணம் அதன் பகல் குருட்டுத்தன்மையோ? அப்படியென்றால் சரியாகப் பிரேதம் கிடந்த இடத்தை நோக்கி எவ்வாறு பறந்து வந்தது? பிரேதம் இருந்த இடத்தை நோக்கி வருவதுதான் அதன் இலக்கென்று நினைப்பது எவ்வளவு சரி ? ஆந்தையைப் பார்க்கும்போது அவனுக்குப் புலிமுகச் சிலந்தியும் நினைவுக்கு வரும். விஷத்தின் மொத்த உருவான புலிமுகச் சிலந்தியும் இவ்வாறுதான் ஒரே இடத்தில் வெகுநேரம் இருந்து ‘திருதிரு’வென முழித்துக்கொண்டே இருக்கும், அடிவாங்கிக் கீழே விழும்வரை! சிலந்திக்கும் ஆந்தைக்கும் என்ன உறவு? பரிணாம வீதியில் ஆந்தையின் பாதையைவிட்டு, சிலந்தி குறுக்குத் தெருவால் ஓடியிருக்க வேண்டும், அப்படியா? 

செத்துவிழுந்த ஆந்தையும் நடேசனின் பிரேதத்தோடு போட்டு எரிக்கப்பட்டது. அதனால், ஆந்தை உருவில் வந்த ‘பேயும்’ ‘எரிக்கப்’பட்டுவிட்டதாக அவர்கள் நினைத்தார்களா? சூக்கும உருவில் வாழும் பேய்பிசாசுகளை ஸ்தூலப் பொருட்கள் பாதிக் குமா? 

அவனுக்கு அந்த நேரத்திலும் ஒரு வினோதமான நினைவு வந்தது. தூக்குப்போட்டு இறந்த வல்லிக்கிழவன் சுடலையில் எரிக்கப்பட்டபோது, அவர் கொட்டில் முகட்டில் தொங்கிக்கொண் டிருந்த ஐந்தாறு வௌவால்களையாவது அடித்துக்கொன்று, அவரோடு ஏன்தான் போட்டு எரிக்கவில்லை என்று அவனுக்கு தன்மேல் ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. அட, சீ! வௌ வால்கள் இப்போதும் அங்கே தொங்கிக்கொண்டிருக்கும், தம்மோடு தொங்கவைக்க வேறு யாராவது கிடைக்கமாட்டார்களா என்பது போல. 

நடேசன் இறந்துபோய் முப்பத்தியோராம் நாள் வந்தது. நடேசனின் சாம்பல் கடலில் கரைக்கப்பட்ட பின்னர் வீட்டில் ‘காய்ச்சிப் படைப்பு’ ஒழுங்குகள் நடைபெற்றன. 

நடேசனின் பிரேதம் கிடந்த இடத்தில் குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. 

அதற்கருகே சமைக்கப்பட்ட உணவு வகைகள் படைக்கப் பட்டிருந்தன. அந்த நேரத்தில் திடீரென ஒருவர், “அங்க பார், ஆந்தையை!” என்று கத்தினார். 

எல்லோர் பார்வையும் அங்கே திரும்பிற்று. 

எரிந்துகொண்டிருந்த விளக்கின் அருகே, சாகடித்துப் பிணத் தோடு போட்டு எரிக்கப்பட்ட ஆந்தையின் குஞ்சுபோல், ஒரு சிறிய ஆந்தை அங்கே குந்திக்கொண்டிருந்தது! 

அதைப் பார்த்த அவனுக்கு உடம்பு சில்லிட்டு வந்தது. 

பாழடைந்த கட்டடத்துள் பறக்கும் வௌவால்கள்போல், பீதியின் நிழல் எறிதல் அங்கிருந்தோர் அனைவரிலும் விழுந்தது. அது யாரைத் தேடி அங்கே வந்தது?

– முடிந்து போன தசையாடல் பற்றிய கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, தமிழியல், லண்டன்.

மு.பொன்னம்பலம் (1939, புங்குடுதீவு, யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் இவர் பங்களித்திருத்து வருகிறார். 1950களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. மு. பொன்னம்பலம் எழுதிய "திறனாய்வின் புதிய திசைகள்" என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011ஆம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *