ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 25,901 
 
 

ஆத்மாநாமிற்கும் எனக்குமான இடைவெளி நான்கு அடி தூரம். எவ்வளவு தான் நான் நெருங்கி நெருங்கிப்போனாலும் அந்த இடைவெளி அப்படியே தான் இருக்கிறது

என்ற குரல் ஒலித்த போது டோக்கியோ செல்லும் விமானத்தில் பறந்து கொண்டிருந்தான் ஜோதிராம்.

அந்தக் குரல் குமாரசாமியுடையது, இருபத்திரெண்டு வருஷங்களுக்கு முன்பு ஒன்றாகக் கல்லூரியில் படித்தவன். ஒரு வருஷம் ஜுனியர், பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு பேசியது போல அத்தனை துல்லியமாக மனக்குரல் கேட்டது.

பாதிசொருகியிருந்த கண்களைக் கசக்கிவிட்டபடியே மணி பார்த்தபோது இரவு இரண்டரையாகியிருந்தது. இன்னும ஆறுமணி நேரம் பயணம் செய்ய வேண்டும், விமானம் பறந்து கொண்டிருக்கும் இந்த உயரத்திற்குப் பெயரில்லை, அடையாளமற்ற அந்தரமது.

அவனைப் போலவே உறக்கம் பீடிக்காமலிருந்த சிலர் குறுந்திரையில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள், பக்கத்துச் சீட்டிலிருந்த ஜப்பானியன் ஏதோ ஒரு அனிமேஷன் படம் பார்த்து தனியே சிரித்துக் கொண்டிருந்தான். விமானத்தின் இரவு விளக்கு வெளிச்சம் ஏதோ தேவாலயத்தினுள் படுத்துகிடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது

இத்தனை வருஷஙகளுக்குப் பிறகு இந்த இரவில் குமாரசாமியின் குரல் ஏன் மனதில் கேட்க வேண்டும் என அவனுக்குப் புரியவில்லை இவ்வளவிற்குக் குமாரசாமியை சந்தித்து ஒன்பது வருஷங்களுக்கு மேலாகயிருக்ககூடும், நெருங்கிப்பழகியவர்களின் குரல் எத்தனை காலம் ஆனாலும் நமக்குள்ளே ஒலித்துக் கொண்டேதானிருக்குமா.

பி.எஸ்சி கெமிஸ்ட்ரி படித்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு ஆத்மாநாம் கவிதைகள் மீது எப்படி இத்தனை ஆர்வம் வந்தது என ஜோதிராமுக்குப் புரியவேயில்லை.

ஆத்மாநாம் பற்றி வாய் ஒயாமல் பேசிக் கொண்டேயிருப்பான் குமார். அவரது கவிதைகளை உரத்து வாசித்துக் காட்டுவான். ஆத்மநாமிற்குப் பிடித்த மிலிட்டரி பச்சை நிறம், ஆத்மாநாமிற்குப் பிடித்த இசைத்தட்டு என உண்மையில் அவன் ஆத்மாநாமை வழிபட்டான்.

••

குமாரசாமி ஜோதியோடு ஒன்றாகக் கல்லூரியில் படித்தவன். அருகிலுள்ள தென்பட்டி என்ற சிறிய கிராமம் தான் அவனது ஊர், விவசாயக்குடும்பத்திலிருந்து படிக்க வந்தவன். பேஸ்ட்கட்பால் விளையாட்டு வீரனைப் போன்று நல்ல உயரம். கருங்கல்லில் செதுக்கியது போன்ற முகம், மஞசள் படிந்த கண்கள். எப்போதும் கோடு போட்ட முழுக்கை சட்டை, அதில் ஒரு கையைப் பாதிக்கும் மேலே சுற்றிவிட்டிருப்பான். சட்டை பாக்கெட்டில் சிகரெட். தீப்பெட்டி, ரோஜாபாக்கு, சில்லறை நாணயங்கள் கிடக்கும். அதனோடு விரல்நீளமுள்ள சிவப்புப் பென்சில் ஒன்றையும் வைத்திருப்பான்.

அந்த நாட்களில் கெமிஸ்ட்ரி பைனல் இயர் படித்துக் கொண்டிருந்த ஜோதிக்கு இருந்த ஒரே கனவு அமெரிக்காவிற்குப் போய் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்பதே, ஆனால் படித்துக் கொண்டிருந்த சுப்பையா நாயுடு கல்லூரியில் எம்எஸ்சி கூடக் கிடையாது, அது போன்ற சிறுநகரக்கல்லூரிகளில் படிக்கிற மாணவர்களில் பெரும்பான்மையினர் பேங்க், அல்லது ரயில்வே எக்ஸாம் எழுதி வேலைக்குப் போகக் கனவு காண்பவர்கள், சிலர் கல்யாண பத்திரிக்கையில் போட்டுக் கொள்ளப் படிப்பவர்கள்

நல்லவேளை கல்லூரியின் நூலகம் மிகப்பெரியது, அங்கே பத்துக்கும் மேற்பட்ட பன்னாட்டு ஆய்விதழ்களுக்குச் சந்தா கட்டியிருந்த காரணத்தால் படிப்பதற்கு நிறைய விஷயங்கள் கிடைத்தன. நூலகத்தில் உட்கார்ந்து படித்தால் பேராசிரியர்கள் கண்ணில் பட நேரிடுமே என்பதற்காகவே ஜோதி விளையாட்டு மைதானத்திலிருந்த பழைய கேலரியில் உட்கார்ந்து ஆய்விதழ்களைப் படிக்கத் துவங்கினான்.

அப்போது தான் தன்னைப் போலவே ஒருவன் கேலரியின் ஒரு பகுதியில் கையில் புத்தகத்தோடு உட்கார்ந்திருப்பதைக் கண்டான். ஆரம்பநாட்களில் அவனை ஜோதி பொருட்படுத்தவேயில்லை.

திடீரென ஒரு நாள் குமாரசாமி நெருங்கி வந்து சிகரெட் இருக்கிறதா என்று கேட்டான்.

பொதுவாகத் தீப்பெட்டி தான் ஒசி கேட்பார்கள், இவன் நம்மிடம் சிகரெட் கேட்கிறானே என்ற யோசனையுடன், இல்லை என்றான் ஜோதி.

“குடுக்க இஷ்டமில்லையா, சிகரெட் இல்லையா“ எனத் திரும்பவும் கேட்டான் குமார்

“சிகரெட் இல்லை“

நோ பிராப்ளம் என்றபடியே தாவி இறங்கி கல்லூரியை ஒட்டிய நியூ காலனியை நோக்கி நடந்து போகத்துவங்கினான் குமாரசாமி,

திரும்பி வந்த போது, சீனியர் இந்தாங்க என்று ஒரு சிகரெட்டும் கடலைமிட்டாயும் கொடுத்துவிட்டு தன் இடத்திற்குப் போய் உட்கார்ந்து கொண்டான்

ஜோதியை யாரும் அதுவரை அப்படிச் சீனியர் எனக் கூப்பிட்டதில்லை, அத்துடன் தானே கடைக்குப் போய்ச் சிகரெட் வாங்கிவந்து ஒசி கொடுத்துவிட்டு போகிற ஒருவனை அவன் சந்தித்ததேயில்லை

குமார் அப்படி நடந்து கொண்டது பிடித்திருந்தது. கல்லூரி முடிந்து ஹாஸ்டலை நோக்கி மாணவர்கள் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அவனிடம் நீ ஹாஸ்டலா எனக்கேட்டான் ஜோதி

“இல்லை டேஸ் ஸகாலர், நைட் கடைசி டவுன் பஸ்ல தான் வீட்டுக்குப் போவேன். அதுவரைக்குக் காலேஜ் உள்ளேயே தான் சுற்றிகிட்டு இருப்பேன்“ எனச் சொன்னான் குமாரசாமி

அப்படி என்ன படித்துக் கொண்டிருக்கிறான் என அன்று ஜோதி கேட்டுக் கொள்ளவில்லை, அடுத்தச் சில நாட்களுக்குள் அவன் நன்கு பழக்கமாகிவிட்டான்.

குமாரசாமி முதன்முதலாகப் பேச துவங்கிய விஷயமே ஆத்மநாம் பற்றித் தான்

“சீனியர், உங்களுக்கு யாரு ஆதர்சம்“

“எதுக்குக் கேட்குறே“

“ஒருவனுடைய இருபது வயதுகளில் கவிதை நுழைந்துவிட்டால் அதைத் தவிர வேறு ஆதர்சமான விஷயம் இருக்கவே முடியாது. அதிலும் கவிஞனை ஆதர்சமாகக் கொண்டுவிட்டால் அவனால் அதிலிருந்து மீளவே முடியாது, எனக்கு ஒரே ஆதர்சம் ஆத்மநாம், முக்கியமான பொயட். என் வரையில் ஆத்மாநாம் என்பது வெறும் பெயரில்லை, அது ஒரு வெளிச்சம், ஒரு மேஜிக், எனர்ஜி. “

“எனக்குக் கவிதைகளே பிடிக்காது“ என்றான் ஜோதி

“அப்படியானால் நீங்கள் நிலம் வாழும் உயிரினம்“ என்றான் குமார்

“நீ“ எனக்கேட்டேன் ஜோதி

“நான் நீர்வாழ் உயிரினம், ஆனால் தவளையைப் போல அவ்வப்போது நிலத்திலும் வாழ்வேன்“

எதை வைத்துச் சொல்கிறாய்

“சீனியர், நிலம் வாழும் உயிரினங்கள் ஒன்றை ஒன்று வேட்டையாடி வாழக்கூடியவை, முழு லௌகீகவாசிகள். நீரிலும் அப்படியான உயிர்போராட்டம் உண்டு தான், ஆனால் ஏதாவது ஒரு பாறையடியில் ஒளிந்து கொண்டு பூஞ்சையான எதையாவது தின்றுவிட்டு பெருங்கடலின் இசையைக் கேட்டபடியே வாழ்ந்துவிட முடியும், தப்பித்தலுக்கு நிறைய இடமிருக்கிறது“

“நீ பேசுவது புரியவில்லை“

“சராசரிகளின் பேச்சை கேட்டுப் பழகியது உங்கள் தவறு“ என்றான் குமாரசாமி

“சராசரியாக இருப்பது ஒன்றும் சாதாரணமில்லை குமார்“

“கரெக்ட் சீனியர் அது தான் பிழைக்கத் தெரிந்த மனிதனுக்கான பொது அடையாளம். சராசரிகள் பிறப்பதில்லை, உருவாக்கபடுகிறார்கள். “

“இப்படி பேசுவதற்கு ஆத்மாநாம் கற்றுக் கொடுத்திருக்கிறானா“ எனக்கேட்டான் ஜோதி

“சீனியர், கோப்ப்படுகிறீர்களா, சராசரி என்ற வார்த்தையை யார் கேட்டாலும் கோபம் கொண்டுவிடுவார்கள், சராசரியாக வாழ்வதற்கு நிச்சயம் திறமை வேணும் சீனியர், எனக்கும் அப்படி வாழ ஆசையாகத் தானிருக்கிறது“ என்றான்

“இப்போது தான் சராசரிகளுக்கு எதிராகப் பேசினாய், அதுக்குள் என்ன“

“இயலாதவன் அப்படியும் பேசுவான் இப்படியும் பேசுவான்“ எனச்சிரித்தான் குமார்

“உன்னை புரிந்து கொள்ளவே முடியவில்லை“

“கரெக்டா சொன்னீங்க சீனியர். இதற்காகத் தான் நான் கவிதைகள் படிக்கிறேன்“

“எதற்குக் குழப்புவதற்காகவா“

“இல்லை, என்னைப் புரிந்து கொள்வதற்காக“

“இதில் என்ன சிரம்ம் இருக்கிறது“

“என்ன சீனியர் இவ்வளவு எளிமையாகச் சொல்லிவிட்டீர்கள், இந்த உலகத்திலே மிகச்சிரமமான காரியம், ஒருவன் தன்னைப் புரிந்து கொள்வது தான்“

“எனக்கு அப்படி ஒன்றும் சிரமமாகத் தெரியவில்லை“

“அப்படியானால் தன்னைப் பற்றி யோசிக்கவே இல்லை என்று அர்த்தம்“

“யோசிக்க வேண்டும் என்று என்ன அவசியமிருக்கிறது“

“ஒரு அவசியமில்லை, பெரும்பான்மையினர் இப்படித் தானிருக்கிறார்கள், அப்படியே இருநதுவிட்டால் அதிர்ஷடம். உலகம் அப்படியே இருக்கவிடாது, யோசிக்கச் சொல்லும், பிரச்சனைகளில் தள்ளி யோசிக்க வைக்கும், ஒருவேளை யோசிக்கத் துவங்கிவிட்டால் உருப்படாமல் போய்விடுவாய் என ஒடுக்கவும் செய்யவும்“

“குமார், நீ நிறைய உன்னைப் பற்றி யோசித்துக் குழம்பிப் போயிருக்கிறாய்.இதை எல்லாம் உன் ஐம்பது வயதில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே, இப்போதைக்குப் போய்ப் படிக்கிற வழியைப் பார்“

“சீனியர், ஐம்பது வயசில் ஒருவன் தன்னைப் பற்றி யோசிப்பது பயத்தால், அதுவும் சாவு மீதான பயத்தால், நான் வாழும் போது என்னைப் பற்றிப் புரிந்து கொண்டு வாழ ஆசைப்படுகிறேன். “

“இதற்குக் கவிதைகளுக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது“

“ஒருவன் தன்னைப் புரிந்து கொள்ளக் கவிதைகள் மட்டும் தான் எளிதாகத் துணை செய்கின்றன. எனக்குத் திருக்குறள் பிடிக்கும், சாக்லெட் சாப்பிடுவது போல ருசித்து நாவில் இனிமை கரைய படிப்பேன். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி, தன் மெய் வருத்த கூலி தரும் என்றொரு குறள் இருக்கிறது, இதை வாசித்தவுடன் தெய்வத்தால் ஆகாதது என்றால் என்ன, எவை எல்லாம் தெய்வத்தால் ஆகாது, ஏன் ஆகாதது. தெய்வத்தால் ஆகாது என்றாலும் மெய் வருத்தி அதைப் பெற்றுவிடமுடியும் என்றால் நாம் தெய்வத்தை விட மேலா, இல்லை தெய்வம் என்பது கடவுளை குறிக்கவில்லையா இப்படி அந்தக் கவிதை ஏதேதோ எண்ணவோட்டங்களை உருவாக்கிவிடுகிறதில்லையா. கவிதை என்பதே இருப்பதிலிருந்து இன்மையையும் இன்மையிலிருந்து இருப்பையும் உண்டாக்கி காட்டுவது தானே“

“நீ ரொம்பவும் குழப்புகிறாய்“ என்றான் ஜோதி

“ஒரு குழப்பமும் இல்லை, தவளை தண்ணீருக்குள் ஒரு இடத்தில் குதித்து இன்னொரு இடத்தில் தாவி வெளியேறுவது போன்றது தான் கவிதை வாசித்தலும், சொற்களின் இடைவெளிக்குள் நீந்துவது சுகமானது. அதைச் சொல்லி புரிய வைக்கமுடியாது சீனியர்“

“இதெல்லாம் உனது கற்பனை, நிஜத்தில் கவிதை என்பது அச்சிட்ட வார்த்தைகள் மட்டும் தான். ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல ருசியிருக்க்கூடும், ஆனால் கவிதைகள் படித்து வாழ்க்கையில் ஜெயித்தவர் ஒருவருமேயில்லை“

“ஏன் சீனியர் எப்போதுமே முடிவுகளோடு பேசுகிறீர்கள், கொஞ்சம் திறந்த மனதோடும் பேசலாம் தானே“

“திறந்த மனதோடு பேசுவதால் தான் உன்னோடு நேரம் செலவழிக்கிறேன்“

“இது கூட ஒரு முடிவு தான்“

ஜோதிராம் சிரித்தபடியே சொன்னான்

“உன் அளவிற்கு எனக்குப் பேசத் தெரியாது“

“ரொம்பப் பேசிவிட்டோம், ஒரு ஆத்மநாம் கவிதை சொல்கிறேன் கேளுங்கள்“

என்னை அழித்தாலும்

என் எழுத்தை அழிக்க இயலாது

என் எழுத்தை அழித்தாலும்

அதன் சப்தத்தை அழிக்க இயலாது

என் சப்தத்தை அழித்தாலும்

அதன் எதிரொலியை அழிக்க இயலாது

என் எதிரொலியை அழித்தாலும்

அதன் உலகத்தை அழிக்க இயலாது

என் உலகத்தை அழித்தாலும்

அதன் நட்தத்திரக் கூட்டங்களை அழிக்க இயலாது

என் நட்சத்திரக் கூட்டங்களை அழித்தாலும்

அதன் ஒழுங்கை அழிக்க இயலாது

என் ஒழுங்கை அழித்தாலும்

அதன் உள்ளழகை அழிக்க இயலாது

என் உள்ளழகை அழித்தாலும்

என்னை அழிக்க இயலாது

என்னை அழித்தாலும்

என்னை அழிக்க இயலாது

அழிப்பது இயல்பு

தோன்றுதல் இயற்கை

••

இதைக் குமார் சொல்லி நீங்கள் கேட்க வேண்டும், ஒரு நாடகம் போல நிகழ்த்திக்காட்டுவான். கடைசி வரியை சொல்லி முடிக்கும் போது கண்களை உற்று பார்த்தபடியே சொன்னான்

“அழிப்பது இயல்பு

தோன்றுதல் இயற்கை“

எத்தனை எளிமையான வரி. ஆனால் எவ்வளவு மகத்தான அனுபவம். ஆத்மாநாமை கட்டிக் கொண்டு முத்தமிட ஆசைப்படுகிறேன் சீனியர், பாவி செத்துப் போய்த் தொலைந்துவிட்டான், என் வாழ்க்கையில் எந்தப் பெண்ணையும் முத்தமிட ஆசைப்பட்டதே கிடையாது, இந்த மடையனை முத்தமிட ஆசைப்படுகிறேன், அவன் நிகரற்ற கவி. தோற்கடிக்கப்பட்ட கவி. எரிந்த நட்சத்திரம்

ஆத்மாநாமை பற்றிச் சொல்லும் போது குமாரின் முகம் இயல்பாக ஒரு போதும் இருந்த்தேயில்லை, ஏதோ ஒரு அரிய கண்டுபிடிப்பினை அடைந்தவன் முகத்தில் ஒளிர்வது போன்ற ஒரு பிரகாசம், அதே நேரம் கண்டுபிடிப்பினை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லையே என்ற வேதனை இரண்டும் கலந்திருக்கும். தன்னை வீட்டில் யாரும் புரிந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கம் குமாரிடம் அதிகமிருந்த்து, சில நாட்கள் முன்பு தனது அண்ணனை அடித்துவிட்டதாகச் சொன்னான், இது போல ஒருமுறை அவன் தந்தையைக் கொல்ல வேண்டும் என்று கடப்பாரையைத் தூக்கி கொண்டு விரட்டியதாகக் கூறினான், குடும்பத்திற்குள் அவனால் நிலை கொள்ளமுடியவில்லை, அதே நேரம் காதல், வேலை போன்ற கனவுகள் எதுவும் அவனுக்குள் இல்லை.

“வீட்டிற்குப் போகவே பிடிக்கவில்லை, ஆனால் வீட்டை விட்டு வெளியேறி போகவும் பிடிக்கவில்லை“ என்றான் குமார்

“இதற்கு என்ன தான் தீர்வு“

“அதைபற்றி யோசித்தால் துக்கமாக இருக்கும், அப்போது என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறேன், சரி தவறுகள் எனக்குக் கிடையாது சீனியர்“

ஒருநாள் இருவரும் ஹாஸ்டலின் பின்புறமுள்ள குளத்தை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்

திடீரெனக் குமார் கேட்டான்

“சீனியர், இந்தப் பாறைகள், கற்கள், செடிகள் பற்றி எல்லாம் எப்போதாவது நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா“

“எதற்காக யோசிக்க வேண்டும்“

“ஆத்மாநாம் நிறைய யோசித்திருக்கிறான்“

“கவிஞனில்லையா அப்படித் தான் இருப்பான்“

“அது ஏன் கவிஞர்கள் மட்டுமே இப்படியிருக்கிறார்கள்“

“இந்த உலகிலே மிக எளிமையானது கற்பனை செய்வது தான். இயலாதவர்களின் கவசம் கற்பனை“

“என்ன சீனியர் நான் எதை எல்லாம் கஷ்டம் என்று நினைக்கிறேனோ, அதை எல்லாம் நீங்கள் ஒன்றுமேயில்லை என்கிறீர்கள், கற்பனை செய்வது எளிதானதேயில்லை. “

“யார் சொன்னது அப்படி. “

அப்படியா என்றபடியே குமார் கிழே கிடந்த ஒரு கோழி ரோமம் ஒன்றை கையில் எடுத்துக்காட்டி இதைப் பற்றிக் கற்பனையாக ஏதோவொன்று சொல்லுங்க பார்க்கலாம் என்றான்

“குப்பை“ என்றான் ஜோதி

குமார் சிரித்தபடியே கேட்டான்

“நான் கேட்டது கற்பனை. “

ஜோதி அந்தக் கோழி ரோமத்தை கையில் வாங்கிப் பார்த்துவிட்டுச் சொன்னான்

“பறக்க தெரியாத பறவை“.

“இது உண்மை, கற்பனையில்லை“

“காது குடையும் கருவி“

“அது உபயோகம், கற்பனையில்லை“

“இதற்கு மேல் குப்பையில் கிடக்கும் ஒரு பொருளுக்கு நான் முக்கியத்துவம் தர மாட்டேன் குமார்“

“உபயோகமற்றது என்பதால் தானா“

“ஆமாம், இந்த உலகில் தேவையானது, தேவையற்றது என்ற இரண்டு பிரிவுகள் இருக்கிறது, தேவையற்றதை பற்றி யோசிக்கத் தேவையேயில்லை“

“தேவையற்றது, தேவையானது என்பதை எதை வைத்து யார் முடிவு செய்வது. சீனியர், தேவையற்றவைகளாகத் தோன்றுபவை தான் உலகில் அதிகம்,காரணம் அதன் தேவையை இன்னமும் மனிதர்கள் அறியவில்லை“,

“கோழி ரோமத்தை பற்றிப் பேசினாலும் கூடக் குழப்பவே செய்கிறாய் குமார்“

“இது குழப்பமில்லை சீனியர், புரிந்து கொள்ளப்பார்க்கிறேன்“

சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின்

தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது.

இந்தக் கவிதை உங்களுக்குப் புரிகிறதா, இது தான் கற்பனை. இப்படி ஒன்றை கற்பனை செய்யக் கவிஞனால் மட்டுமே இயலும். மனிதர்களின் மகத்தான சக்தி கற்பனை தான். வேறு எந்த உயிரினமும் கற்பனை செய்யுமா எனத்தெரியவில்லை“

“அந்த கவிதையைத் திரும்பச் சொல்லு குமார்“ எனக்கேட்டான் ஜோதி

குமார் ஒவ்வொரு எழுத்தாக அழுத்தமாக உச்சரித்துக் கவிதையைத் திரும்பச் சொன்னான்

“இது ஆத்மநாமின் கவிதையா“

“இல்லை பிரமீள். “

“உனக்கு ஆத்மநாமை தானே பிடிக்கும் என்பாய்“

“ஒரு கவிஞன் தான் மற்ற கவிதைகளைப் படித்துப் புரிந்து கொள்ள வழிகாட்டுகிறான். ஒரு சுடரிலிருந்து இன்னொரு சுடர் பற்றிக் கொள்வது மாதிரி“

••

குமார் இப்படித்தான், வாய் ஒயாமல் கவிதைகள் பற்றியே பேசிக் கொணடிருப்பான், சில சமயம் தான் எழுதிய கவிதைகளைக் கொண்டு வந்து வாசித்துக் காட்டுவான், கவிதை படிப்பதற்குச் சரியான இடம் சுடுகாடு என ஒருநாள் சொன்னான், இன்னொரு நாள் கல்லூரி மரங்கள் தோறும் கவிதைகளை அட்டையில் எழுதி தொங்கவிட்டிருந்தான்

கல்லூரி நாட்களில் அறிவாளிகளாகத் தென்படும் பலர் வாழ்க்கையில் ஏன் ஜெயிப்பதில்லை, ஒரு சராசரியாகக் கூட வாழ முடிவதில்லை, முற்றிலும் தோற்றுப் போய்விடுகிறார்கள், அதைத் தோல்வி என வரையறுக்க முடியுமா எனத் தெரியவில்லை, ஆனால் அடையாளமற்றுப் போய்விடுகிறார்கள்

குமார் அப்படித்தான் நாலாவது செமஸ்டரோடு கல்லூரியை விட்டு நின்றுவிட்டான், எதற்காகப் படிப்பை நிறுத்திக் கொண்டான் எனக் கேட்டதற்கு அவன் பதில் சொல்லவேயில்லை, ஆனாலும் சில நாட்கள் அதே கேலரியில் உட்கார்ந்து கவிதைகள் வாசித்துக் கொண்டிருப்பான், கையில் ஆத்மாநாம் கவிதைகள் என்ற புத்தகம். பெரும்பான்மை வரிகள் அடிக்கோடு போட்ட புத்தகமது

ஒருமுறை ஜோதியிடம் கொடுத்து படித்துப்பார்க்க சொன்னான், ஹாஸ்டல் அறையில் படுத்தபடியே ஜோதி புரட்டி புரட்டி பார்த்தான், ஒன்றுமே புரியவில்லை, மறுநாள் திரும்பக் கொடுத்துவிட்டான், குமார் சிரித்தபடியே சொன்னான்

“சீனியர் நீங்க கிளார்க்ஸ் டேபிள் மட்டும் தான் படிக்க லாயக்கு“

“பெருவாரியானவர்கள் என்னைப் போன்றவர்கள் தான்“ என்றான் ஜோதி

“ஏன் சீனியர் உங்களுக்கு எப்போதும் துணை சேர்த்துக் கொள்கிறீர்கள், அதிலாவது தனியாக இருங்களேன்“

அதைக்கேட்டு ஜோதி சப்தமாகச் சிரித்தான், பிறகு இருவரும் ஹாஸ்டல் அறைக்குப் போய் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்

••

விமானத்தின் விளக்குள் திடீரென ஒளிரத்துவங்கின, உறக்கத்திலும் பசியறிந்து உணவளிக்கும் விமானப்பணிப்பெண்கள் உறைந்த புன்னகையுடன் தள்ளுவண்டியில் பழச்சாறும் மதுபாட்டில்களையும் தள்ளிக் கொண்டு வரத்துவங்கினார்கள். ஒரு கோப்பை ஒயினை வாங்கிக் கொண்டான் ஜோதி. அருகிலுள்ள ஜப்பானியன் சாக்கே வேண்டும் எனக்கேட்டான். கொண்டு வருவதாகச் சொன்னாள் பணிப்பெண்.

ஒயின் கோப்பையைக் கையில் வைத்தபடியே மீண்டும் குமாரைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான் ஜோதி

“கவிதை ஒரு மனிதனை உயர்வு அடையச் செய்யாதா, ஏன் இத்தனை நல்ல கவிதைகளை வாசித்த குமார் வாழ்வில் தோற்றுப் போனான்“

இதற்கான பதிலை முன்எப்போதோ குமார் சொன்னது நினைவில் ஒடியது

“சீனியர், வாழ்க்கையில் ஜெயிப்பது என்றால் பணம் காசு சம்பாதிப்பது, வீடு கட்டிக் கொள்வது, மனைவி குழந்தைகளுடன் சுகமாக வாழ்வது என்பது மட்டும் அர்த்தமில்லை, அப்படிச் சராசரிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை விடுங்கள், வாழ்க்கையில் ஜெயித்தவன் என உண்மையில் எவனும் கிடையாது, வாழ்க்கையின் விசித்திரங்களை, சிக்கல்களைப் புரிந்து கொள்ள இலக்கியம் உதவுகிறது, குறிப்பாகக் கவிதைகள். கவிஞன் வாழ்க்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக ருசித்து அனுபவித்து உண்ணுகிறான், ஒருவனின் இளமையில் கவிதை நுழைந்துவிட்டால் அவன் வேற்றுலகவாசியாக மாறிவிடுவான், இதே உலகிற்குள் அவன் இன்னொரு உலகில் சஞ்சரிப்பான், அப்படிச் சஞ்சரிப்பதை போதை என்பார்கள். கவிதை என்பது போதையில்லை, தெளிவு. விழிப்புணர்வு, உந்துசக்தி. தீராத்துடிப்பு. அதைக் கொண்டே வாழ முயற்சிப்பது ஒரு பைத்தியக்காரத்தனம், எந்தக் கலையும் சோறுபோடாது, கலையைக் கொண்டு வாழ்வதற்குச் சாதுர்யம் வேண்டும், அது வேண்டுமானால் கவிஞனுக்குக் குறைவாக இருக்கலாம், ஆனால் கவிஞர்கள் அடைகிற சந்தோஷமும், அகசுதந்திரமும் மற்றவர்கள் அறியாதது“

“கவிஞர்களை உயர்த்திப் பேசுவது போல உன்னை நீயே உயர்த்திக் கொள்கிறாய் குமார், அப்படி ஒன்றும் கவிஞர்கள் இந்த உலகிற்கு ஆதர்சமானவர்களில்லை, உலகம் ஒரு போதும் அவர்களை வழிகாட்டியாக முன்னிறுத்தியதில்லை“

“அதற்குக் காரணம் வேறு, தான் மட்டும் பறக்கவிரும்புகிறவன் கவிஞனில்லை, உங்களையும் இணைத்துக் கொண்டு பறக்க விரும்புகிறவனே கவிஞன், அது தான் இவ்வளவு போராட்டமும். “

“இதற்கு நீ இலக்கியத்தைப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டியது தானே குமார்“

“இலக்கியத்தைப் பாடமாகப் படிப்பதை விடக் கொடும்தண்டனை வேறு கிடையாது, “ எனச் சொல்லி சிரித்தான் குமாரசாமி

“மற்றவர்கள் உன்னைப் பரிகசிப்பது உனக்கு வேதனையாகயில்லையா“ எனக்கேட்டான் ஜோதி

“யாரை பரிகசிக்காமல் இருந்திருக்கிறார்கள், அவர்களுக்கு ஆதர்சமாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள். அதிகாரிகள், செல்வந்தர்கள், வணிகர்கள், நடிகர்கள், இவர்களிடம் எவ்வளவு தான் கவிதை பற்றிப் பேசினாலும் மண்டைக்குள் ஏறாது என்று தெரியும். எனக்குக் கவிதைகள் போதுமானதாகயிருக்கிறது, அதுவும் ஆத்மாநாமின் கவிதைகள் மட்டுமே போதும் என்றிருக்கிறது “

“இது உனது பலவீனம், நீ ஒளிந்து கொள்ளப் பார்க்கிறாள், நண்டுகள் தான் இப்படி வாழும்“

“நான் நண்டில்லை, ஆமை, உண்மையில் கவிதை ரசிகனாக இருப்பமதென்பது ஆமைகள் தண்ணீருக்குள் வாழ்வது போன்றது, அதற்கு வெளியுலகே தேவையில்லை, எப்போதாவது தனது இருப்பை வெளிக்காட்டிக் கொள்ள மேற்பரப்பில் வந்து சில நிமிசம் நீந்துவிட்டு மீண்டும் அடியாழத்திற்குள் சென்றுவிடக்கூடியது. கவிதையின் ரசிகனும் அப்படிபட்டவன் தான், அவனுக்குக் கவிதை என்பது சொற்களின் சேர்கையில்லை, அது தண்ணீரைப் போன்றதொரு உயிராற்றல். “

“உனது விருப்பத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது குமார், அதற்காக ஏன் உன் படிப்பை கெடுத்துக் கொள்கிறாய், கெமிஸ்ட்ரி பரிட்சை எழுதுவதற்கும். கவிதைக்கும் என்னடா பிரச்சனை“ எனக்கேட்டான் ஜோதி

செமஸ்டர் பரிட்சை எழுத ஹாலில் உட்கார்ந்து பேப்பரை வாங்கினால், மனதில் ஈழக்கவிஞர் மஹாகவியின் ஒரு கவிதை ஒலிக்கிறது, மகத்தான கவிதையது

சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்

சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்

கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்

கடல் மீது இவள் கொண்ட பயம் ஒன்று காணும்

வெறு வான வெளி மீது மழை வந்து சேரும்

வெறிக் கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்

எறிகின்ற கடல் என்று மனிதர்கள் அஞ்சார்

எதுவந்ததெனினென்ன அதை வென்று செல்வார்

இருளோடு வெளியேறி வலை வீசினாலும்

இயலாது தரவென்று கடல் கூறலாகும்

ஒருவேளை முகில் கீறி ஒளி வந்து வீசும்

ஒருவேளை துயர்நீள உயிர் வெந்து சாகும்

இந்த வரிகளை அப்படியே பரிட்சை பேப்பரில் எழுதி கொடுத்துவிட்டு வெளியே வந்து உட்கார்ந்து கொண்டு ஈழப்போரை பற்றி நினைத்து அழுது கொண்டிருந்தேன் சீனியர். எனக்குள் கவிதை மட்டுமே இருக்கிறது, அதற்குள் சோடியம் பைகார்பனேட், பென்சாயிக் ஆசிட் போன்றவற்றைக் கலக்க முடியவில்லை“

“அப்போ நீ படித்து வேலைக்குப் போகபோவதில்லையா“

“நான் ஒண்ணுக்கு போவதற்கே பத்து முறை யோசிக்கிறவன், படித்து வேலைக்குப் போவது எல்லாம் நடக்காத கனவு. அதனால் தான் லியோ லாண்டரி கடையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன், அங்கே தான் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது“

லாண்டரி கடையில் உட்கார்ந்து கொண்டு பில்போட்டபடியே கவிதை படிக்க எப்படிக் குமரால் முடிந்தது. ஒருவேளை கவிதைகள் அவ்வளவு முக்கியமானவை தானா. அதைத் தான் இன்னமும் உணரவில்லையா

••

கல்லூரி முடிந்த பிறகு எம்எஸ்சி படிக்கச் சென்னை கிளம்பிய ஜோதி அங்கிருந்து அமெரிக்கா போய்விட்டிருந்தான், பிறகு குமாரை சந்திக்கவேயில்லை, நீண்ட இடைவெளிக்கு பிறகு குமார் தன்னுடைய கல்யாண பத்திரிக்கை அனுப்பியிருந்தான், அதிலும் ஆத்மாநாமின் கவிதை இடம் பெற்றிருந்தது,

அதன்பிறகு ஒருமுறை விடுமுறையில் பழனிக்கு வந்திருந்த போது மொட்டை தலையுடன் குமாரை சந்தித்தான், கையில் நாலு வயதில் ஒரு மகள், ஆள் அப்படியே இருந்தான், உடலில் ஒரு மாற்றமுமில்லை, அவன் மனைவியை அறிமுகம் செய்து வைத்தபடியே டிவிஎஸ் 50யில் வீடு வீடாகப் போய்ப் பிஸ்கட் பாக்கெட் விற்பதாகச் சொன்னான்.

பிறகு நெருங்கிவந்து ரகசியமான குரலில் சொன்னான்

“என் மனைவிக்குப் புஸ்தகம் படிப்பது பிடிக்காது, அதை எல்லாம் மூட்டை கட்டி தூக்கி எறிந்துவிட்டேன். இப்போது நானும் ஒரு சராசரி “.

“ஆத்மாநாமை“ எனக்கேட்டான் ஜோதி

“என் மகள் பெயர் மது, ஆத்மநாமின் நிஜப்பெயர். “ எனச்சொல்லி சிரித்தான் குமார்.

“ஆத்மாநாமை உன்னால் விடவே முடியாது“ என்றான் ஜோதி

“புஸ்தகமே பிடிக்காத என் மனைவி கூட ஆத்மநாமை படிக்கிறாள், அந்த ஒரு புத்தகம் மட்டும் வீட்டில் அனுமதிக்கபட்டிருக்கிறது, ஒரு ஆச்சரியம் ஒரே கவிதையை நான் ஒருவிதமாகவும் அவள் வேறுவிதமாகவும் படிக்கிறோம், அவளுக்குத் தெரிந்த ஆத்மாநாம் எனக்குத் தெரியாதவன் “

“அவள் ஏன் ஆத்மாநாமை படிக்கிறாள்“

“என்னை சகித்துக் கொள்வதற்குத் தான், வேறு என்ன, அரைமணி நேரம் நாம் எங்காவது வெளியே போய்ப் பேசிக் கொண்டிருக்கலாமா “

அவனை ஜோதி தான் தங்கியிருந்த லாட்ஜிற்கு அழைத்துப் போனான்

“உன் கல்யாணப்பத்திரிக்கை வித்தியாசமாக இருந்த்து, “

“கோவமா சீனியர், கல்யாணம் என்பது என் தனிப்பட்ட விஷயம், இதில் சுயநலத்தைத் தவிர ஒன்றுமேயில்லை, இதில் ஏன் நண்பர்கள் ஒன்று கூட வேண்டும் என எனக்குப் புரியவில்லை, அதான் இது தகவலுக்காக மட்டும் யாரும் கல்யாணத்திற்கு வரத்தேவையில்லை என அச்சிட்டிருந்தேன்“

“உனக்குக் கல்யாணம் ஆன தகவலை நான் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்“

“இளவரசி டயானாவிற்குக் கல்யாணம் ஆன தகவலை ஏன் தெரிந்து கொண்டீர்களோ, அது போலத் தான் சீனியர் “

“நீ மாறவேயில்லை குமார்“

“பொய், என்னிடம் மிச்சமிருப்பது ஆத்மாநாம் மட்டுமே, மற்றபடி நான் ஒரு கெட்டவன். இலைச்சுருள் பிடிப்பவன்“

“உனக்கு என்னதான் பிரச்சனை குமார்“

“எது தான் பிரச்சனையில்லை சீனியர். இந்த இழவெடுத்த காம்ம் படுத்துகிற பாடு தான் என் முதற்பிரச்சனை, காமத்தை மிருதுவானது எனச் சொல்லி வைத்த்து பெரும் பொய், அது ஒரு அவஸ்தை, தவிப்பு, மூச்சுமுட்டல். ஆஸதுமா நோயாளிகளுக்குத் தொண்டையில் சளி நின்று கொண்டு அவஸ்தையை உருவாக்கும், துப்பி வெளியேற்றினால் தான் மூச்சுவிட முடியும், காம்மும் அப்படியானது தான், வடிகால் இல்லாவிட்டால் முழுஅவஸ்தை தான். அதிலும் இணக்கமான காமம் என்பது அரிதினும் அரிதானது, இணக்கமில்லாத காமம் என்பது தக்கையோடு கூடுவது, நிழல்புணர்வு. “

“உன் பேச்சு மாறவேயில்லை குமார், இன்னமும் கவிதைகள் எழுதிக் கொண்டு தான் இருக்கிறாயா“

“ரகசியமாக எழுதி காற்றில் பறக்கவிட்டுவிடுகிறேன், அது ஒரு ஆசுவாசம், வெட்டவெளியில் மூத்திரம் அடிப்பது மாதிரி“

“உனது கிறுக்குதனங்களை உன் மனைவி ஏற்றுக் கொண்டுவிட்டாளா“

“நான் குடிப்பதை, சிகரெட் பிடிப்பதை, ஊர் சுற்றுவதைக் கூட அவளால் ஏற்றுக் கொள்ள முடிகிறது, படிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதற்குத் தான் நிறையச் சண்டை போட்டிருக்கிறேன்“

“நீ மட்டுமில்லை, நானும் தான். என் மனைவிக்கும் படிப்பது பிடிக்காது என்றான் ஜோதி

“எனக்குக் காரணம் புரிந்துவிட்டது சீனியர்“

“என்ன காரணம்“

“புஸ்தகங்களுக்குள் காணாமல் போகிறவர்களுக்குப் பெரிய ஆசைகள், கனவுகள் இருக்காது, குடும்பம் நடத்த நிறையக் கனவுகள, ஆசைகள் வேண்டும், அதை அடைய பரபரப்பாக ஒட வேண்டும், தோற்க வேண்டும், “

“நான் நிறையச் சம்பாதிக்கிறேன், கனவு காணுகிறேன்,ஆனாலும் நான் படிப்பதும் மனைவிக்குப் பிடிக்கவில்லை தானே“

“அப்படி பார்த்தால் எத்தனை கணவர்கள் மனைவி புத்தகம் படிப்பதை அனுமதிக்கிறார்கள்“

“பேச்சை திருப்பிப் போடுகிறாய், பிரச்சனை புத்தகங்களில் இல்லை, நமது கவனம் எதில் குவிகிறதோ, அதுவே நாம் ஆகிறோம், நிஜத்தில் புத்தகம் என்பது இன்னொரு பெண். “

“சீனியர், நீங்களும் பேசக்கற்றுவிட்டீர்கள்“

“நீ பழைய மனிதன்தான் என்கிறது ஒரு புத்தகம்

புதிய மனிதன்தான் என்கிறது இன்னொரு புத்தகம்“

இதுவும் ஆத்மநாம் கவிதை தான், எனக்கு நேரமாகிறது, இன்னொரு முறை சந்தித்து விரிவாகப் பேசலாம், உங்கள் கார்டு கொடுங்கள் என அவசரமாகக் குமார் கிளம்பிப் போனான். ஏனோ அவன் பாவம் என்று தோன்றியது

••

இதன் ஆறு ஆண்டுகளுக்குப்பிறகு ஜோதி செகாந்திரபாத்தில் உள்ள எண்டோமின் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது ஒரு பின்மதியம் குமார் வந்திருந்தான், உருக்குலைந்து போன தோற்றம். அடர்ந்த தாடி, குழிவிழுந்த கண்கள், கையில் ஒரு துணிப்பை வைத்திருந்தான்,

“நான் இங்கே வேலை பாக்கிறேன் என எப்படிக் கண்டுபிடித்தாய்“ எனக்கேட்டான் ஜோதி

“விக்டரைப் பார்த்தேன், அவர் தான் அட்ரஸ் கொடுத்தார்“

“சொல்லு குமார், ஏன் இப்படி இருக்கே, என்ன ஆயிற்று உன் வேலை“

“அதை எல்லாம் விடுங்க சீனியர், எனக்கு ஒரு பொஸ்தகம் போடணும், எழுதின கவிதைகள் எல்லாம் இந்தப் பையில் கிட்க்கு, அதை ஒரு கவிதை தொகுப்பாகக் கொண்டு வரணும்“

“நான் என்ன செய்யணும்“

“ஐந்தாயிரம் பணம் தரணும், அதை நான் திருப்பித் தர மாட்டேன்“

“தர்றேன், இப்போ என்ன வேலை செய்துகிட்டு இருக்கே“

“ஒன்றரை வருஷம் வேலை எதுவும் செய்யலை, பத்மா கார்மெண்ட் கம்பெனிக்கு வேலைக்குப் போறா, நான் வீட்டை பாத்துகிட்டு பிள்ளைகளை வளர்க்கிறேன்“,

“தப்பா எடுக்க மாட்டேன்னா ஒரு கேள்வி குமார், இப்போ எதுக்கு உனக்கு இந்தக் கவிதை தொகுப்பு“

“இதை எனக்கு நானே ஒரு வருஷமா கேட்டுகிட்டே தான் இருந்தேன், உண்மையைச் சொன்னா ஒரு காரணமும் கிடைக்கலை, அற்ப ஆசைனு வச்சிகிடலாம். “

“ஏன் உன்னை நீயே அவமானப்படுத்திக்கிடுறே குமார், இது ஒன்றும் அற்ப ஆசையில்லை, கவிதை எல்லோரும் எழுத முடியாது, நீ எத்தனையோ வருஷமாக எழுதிக் கொண்டிருக்கிறாய், இதுவரை புத்தகம் போட்டதேயில்லை“

“என்ன ஆச்சு சீனியர் உங்களுக்கு, என்னைக் கேலி செய்யுறீங்க“

“இல்லை குமார், ஐ ரெஸ்பெக்ட் பொயட்ரி. “

செக் வாங்கிக் கொண்டு திரும்பி போகும்போது குமார் சொன்னான்

“பொஸ்தகம் வந்தவுடனே அனுப்பி வைக்குறேன், பிடிச்சிருந்தாலும் பிடிச்சிருக்காட்டியும் எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை, எனக்குக் கவிதைகள் எழுதப்பிடிக்கும், வாசிக்கப் பிடிக்கும் அவ்வளவு போதும்“

குமாரசாமி கவிதை தொகுப்பினை வெளியிடவில்லை, நண்பர்களிடம் வாங்கிய பணத்தைக் குடித்துச் செலவழித்துவிட்டான் என்றும், இப்போது முன்பு வேலை பார்த்த அதே லாண்டரியில் திரும்ப வேலை செய்வதாகவும் விக்டர் சொல்லியிருந்தான், பின்பு விக்டரே தானே குமாரசாமியின் கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக்கி அதற்கு ஒரு வெளியீட்டுவிழாவும் நடத்தினான், அந்த விழாவிற்குக் குமாரசாமி வரவில்லை. அதைப்பற்றிக் கேட்டதற்கு

“ஊரை கூட்டிவைத்து முதலிரவு நடத்த முடியாது“ என்று பதில் குமார் சொன்னதாக விக்டர் கூறினான்

நண்பர்களுக்கு விநியோகம் செய்ய விக்டர் இருநூறு பிரதிகளைக் குமாரசாமிக்குக் கொடுத்திருந்தான், அத்தனையும் ஒருநாளில் வெந்நீர் எரிக்க அடுப்பில் போட்டுவிட்டதாகச் சொன்னான் குமாரசாமி

இப்படிக் குமார் குறித்து நிறையப் புகார்கள், கட்டுக்கதைகள் நண்பர்களுக்குள் உலவிக் கொண்டிருந்தன, ஒருமுறை குமாரை நெல்லை ரயில்வே ஸ்டேஷன் உள்ளே வைத்து பார்த்த போது சபரிமலைக்கு மாலைபோட்டிருந்தான், கறுப்புச் சட்டை, தாடி, கழுத்தில் ருத்ராட்சமாலை. சாயவேஷ்டி. என்ன கோலமிது என ஜோதி கேட்ட போது அமைதியான குரலில் சொன்னான்

“கடவுளே போதுமானதாகயிருக்கிறார். அதான் மலைக்குப் போகிறேன்“

“உனது எல்லாப் பிரச்சனைகளுக்கு ஒரே காரணம் தானிருக்கிறது, அதை நீயே தான் உருவாக்கி கொண்டாய்“

“கவிதை என்னைச் சீரழித்துவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள் சீனியர், ஆனால் என்னை விடுதலை தான் செய்திருக்கிறது. மனதளவில் நான் மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறேன். காசில்லாதவனின் சந்தோஷத்தை இருப்பவனால் புரிந்து கொள்ளமுடியாது. “

“முன்பு ஒரு நாள் நீ ஒரு தவளை என்று சொன்னது நினைவிருக்கிறதா குமார், நிஜத்தில் நீ தவளை கூடயில்லை, வெறும் தலைப்பிரட்டை“

“என்மீது கோபப்படுகிறவர்கள் அத்தனை பேரும் என்னை நேசிக்கிறார்கள், நான் நேசிக்கும் அனைவரும் என்மீது கோபபடுகிறார்கள்“,

“அதற்கு நீ தான் காரணம், உன்னை யாரும் ஒரு போதும் புரிந்து கொள்ளப்போவதில்லை, காரணம் நீயும் ஒரு கவிதையைப் போன்றவன் தான், அவரவர் புரிதல் அவரவருக்கு“

“ஆமாம் சீனியர், நான் மிக மோசமான பால்யகாலத்தைக் கொண்டவன், அய்யா என்னை அடிக்காத நாளேயில்லை, மிக மோசமான பள்ளிவாழ்க்கை கொண்டவன், ஆசிரியர்கள் என்னைத் திட்டாத நாளேயில்லை, கல்லூரி தான் எனது முதற்திறவு கோல், எனது விருப்பத்தின் படியே நான் வாழ முயன்ற நாட்கள் கல்லூரியில் தான் துவங்கியது. எனக்கு வீடு, ஊர், மனிதர்கள் எதுவும் பிடிக்காமல் இருந்த நாட்களில் தான் கவிதை அறிமுகமாகியது, என்னை உதறி வெளியேற நான் தயார் ஆக இருந்த மனநிலையில் தான் கவிதை எனக்குள் இறங்கியது, நாட்டுசாராயத்தைக் குடிப்பது போலச் சூடாக, நெஞ்சு எரிய கவிதைகளைக் குடித்துத் தீர்த்தேன், அந்த மயக்கம் என்னை விடவேயில்லை, அது என்னைக் காப்பாற்றியது, கவிதை தந்த உஷ்ணத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், கவிதை உண்மையில் பெரும் நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது. அந்தக் கதகதப்பில் என்னை வளர்த்துக் கொண்டேன், உலகம் கவிதைகளை வாசனை திரவியத்தைப் போலக் கருதுகிறது, வெறும் பரிமளம் மட்டுமே அதற்குப் போதுமானது. நான் கவிதைகளை ஏற்றுக் கொண்டதோ, அதை நம்பி வாழ்வை ஒப்படைத்ததோ தவறில்லை, தவறு இதை உலகம் அங்கீகரிக்க மறுத்தது தான். முழுமுட்டாளை கூட வாழ அனுமதிக்கும் சமூகம், கவிஞனை வாழ விடுவதில்லை என்பது தான் நிதர்சனம்“

எனச் சொல்லியபடியே குலுங்கி அழ ஆரம்பித்தான் குமாரசாமி, இத்தனை வருஷங்களில் அந்த நிமிசம் தான் அவன் அழுவதை ஜோதி காண்கிறான், அதுவும் சபரிமலைக்கு மாலை போட்ட ஒருவன் ரயில் நிலையத்தில் கவிதையை நினைத்துக கொண்டு அழுவது அபத்தமானதாகத் தோன்றியது

இருவரும் ஒன்றாகத் தேநீர் குடித்தோர்கள், குமாரின் ரயில் வந்த போது அவன் சொன்னான்

கற்பனையிலேயே செத்துப்போ என்றது மனம்

நானும் செத்துப்போனேன்

கற்பனை உலகில் உயிர் வாழ்ந்தேன்

எல்லோரும் சந்தோஷமாய் இருந்தார்கள்

நானும் என் நண்பர்களும்கூட

அற்புதமான ஓவியங்களைப் பார்த்தேன்

நெஞ்சின் ஆழத்திலிருந்து

துவங்கிய இசையைக் கேட்டேன்

உன்னதமான கலை இலக்கிய வடிவங்களை

தரிசித்தேன்

உண்மையான கவிதைகளை எழுதினேன் படித்தேன்

முழுமையான இதழ் ஒன்றை நடத்தினேன்

ஒரு நாள் என் சாய்வு நாற்காலியில்

அமர்ந்துகொண்டிருக்கும்பொழுது

என் மனம் கேட்டது

எப்படி இருக்கிறாய் என்று

நன்றாய் இருக்கிறேன்

பசிதான் தீரவில்லை என்றேன்“`

இதுவும் ஆத்மாநாம் தான் என்றபடியே அவன் ரயிலினுள் ஏறி சென்று கொண்டிருந்தான், அந்தக் கவிதையை ஜோதி மட்டுமில்லை, பிளாட்பாரத்திலிருந்த பலரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள், அதற்குப் பிறகு குமாரை சந்திக்கவேயில்லை, உடல்நலிவுற்று எங்கோ சிகிட்சை எடுத்தான் என்றும், இப்போது ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் கேள்விப்பட்டான், அடுத்த ஆண்டு ஊருக்குப் போயிருந்த போது ஏனோ குமாரை சந்திக்க விருப்பமேயில்லை.

இத்தனை வருஷங்களுக்குப் பிறகு இப்படி நடுவானில் ஏன் அவன் மனதில் ஒலிக்கத் துவங்கினான், தனிமையை உக்கிரமாக உணர்பவன் மனது கவிதையை நோக்கி நகரும் என்பது தான் காரணமா. நினைவின் அடுக்கில் இருந்த என்றோ குமார் சொன்ன ஆத்மாநாமின் கவிதை கொப்பளிக்கத் துவங்கியது

தன்னை மறந்து உச்சாடனம் போல அதைச் சொல்லிக் கொண்டிருந்தான் ஜோதிராம்,

“நீ உலகத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கிறாய்

என்கிறது மனித இனம்

நான்

வேலையைக் கேட்கவில்லை

உணவைக் கேட்கவில்லை

குடியிருப்பைக் கேட்கவில்லை

கேட்பதெல்லாம் ஒன்றுதான்

நான் வேறு நீ வேறு

என்பது பொய்

நானும் நீயும் ஒன்றுதான்

என்பதை உணர்“

பக்கத்து இருக்கையில் இருந்த ஜப்பானியன் திரும்பி பார்த்து கைகளை லேசாகத் தொட்டு உடல்நலமில்லையா என ஆங்கிலத்தில் கேட்டான்,

“இல்லை கவிதை சொல்கிறேன்“ என்றான் ஜோதி

“நீங்கள் கவிஞரா“

“இல்லை நான் கேட்ட கவிதை, ஆத்மாநாமின் கவிதை“

என அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தான் ஜோதி, கேட்டு முடித்த ஜப்பானியன் கைகுலுக்கியபடியே மிக நல்லகவிதை என்றபடியே ஜப்பானிலும் இது போன்ற கவிதைகள் எழுதிய ஒருவன் இருந்தான், அவனது பெயர் டகுபோகு இஷிஹவா, குடி, வேசை என அலைந்தவன், 26 வயதில் காசநோய் பாதித்து இறந்து போய்விட்டான், ஜப்பானிய இலக்கியத்தில் முக்கியமான கவிஞன்“

“ஆத்மாநாமும் 33வது வயதில் தற்கொலை செய்து கொண்டுவிட்டான்“ என்றான் ஜோதிராம்

அதைக் கேட்ட ஜப்பானியன் முகம் வெளிறிப்போனவன் போல “கவிஞர்கள் வாழ்வதற்கு இந்த உலகம் ஏற்றதில்லை“ என்றான், பிறகு பெருமூச்சுடன் சொன்னான்

“என் மனைவிக்குப் புத்தகம் படிப்பது பிடிக்காது, நான் அலுவல நூலகத்தில் தான் கவிதைகள் படிக்கிறேன்“

“உலகம் முழுவதும் இப்படித்தான்“ எனச் சொன்னான் ஜோதி.

அதன்பிறகு இருவரும் மாறிமாறி கவிதைகள் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். காலை ஒன்பது மணிக்கு டோக்கியோ வந்து இறங்கிய போது அந்த ஜப்பானியன் மிகுந்த நன்றிவுணர்வுடன் சொன்னான்,

“தூக்கமற்ற மிகச்சிறந்த இரவு, கவிதைகளுக்கு நன்றி, ஒவ்வொரு மனிதனும் தன்னுடையதைத் தவிர வேறு பல வாழ்க்கைகளைக் கற்பனையிலாவது வாழ ஆசைபடுகிறவன், அதற்குக் கவிதைகள் தானே எளிய வழி “

விசா பரிசோதனை, செல்லவேண்டிய கருத்தரங்கம், அதற்கான முன் தயாரிப்பு வேலைகள், இரவு சரியாகச் சாப்பிடாத வயிற்றுவலி எல்லாம் ஒன்று சேர்ந்து ஜோதிக்குள் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த்து, ஜோதி தலை அசைத்தபடியே சொன்னான்

“அரிகாதோ“

ஜப்பானியனும் தலைவணங்கி “அரிகாதோ“ என்றதுடன் ஏதோ யோசனையில் கேட்டான்

“நீங்கள் ஏன் ஆத்மாநாமை மொழிபெயர்க்க கூடாது. “

அந்த நிமிசம் மனதிற்குள் குமாரசாமி பலமாகச் சிரிக்கிற குரல் ஜோதிக்கு மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி

  1. மனதை சஞ்சலபடுத்திய சில கதைகளில் இதுவும் ஓன்று… குமாரசாமியின் மனதை ஒற்றிய எண்ணஓட்டமாக சிலநேரமாய் இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *