ஆதாமின் பாஷை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 1, 2022
பார்வையிட்டோர்: 7,887 
 

கிழக்கே இருந்த தோட்டத்துக்குள் கிளைபிரிந்து ஓடும் நான்கு ஆறுகளுக்கும் பெயரிட வேண்டிய யோசனையில் இருந்தான் ஆதாம். தினசரி தான் காணும் பொருள்கள் ஒவ்வொன்றுக்குமாகப் பெயர் வைப்பது மட்டுமே அவனது அன்றாட வேலையாக இருந்தது. அவன் இருந்த அதே தோட்டத்தில் ஒரு ஸ்திரி இருந்தாள். அவளை எப்போதாவது விருட்சங்கள் அடர்ந்த பாதையின் உதிர்ந்த சருகுக்குள் சுற்றியலைவதையும், பனியின் திரள்களைச் சேகரித்தபடி, அவிழ்ந்த கூந்தலும் குளிர்ச்சியோடிய கண்களுமாக குனிந்து நிற்பதையும் கண்டிருக்கிறான். அவள் என்ன செய்கிறாள் என்பதை அறிந்துகொள்ள முடியவேயில்லை. சில நேரம் அவள் காட்டுப் பூனைக் குட்டிகளைச் சுமந்தபடி காட்டாற்றின் குறுக்கே நடந்து கொண்டு இருப்பதைப் பார்ப்பான். அவனைப் போலவே அவளும் தான் காணும் பொருள்கள் யாவற்றுக்கும் தினமும் பெயரிட்டுக்கொண்டிருந்தாள். தனக்கு இரண்டு பெயர்கள் இடப்பட்டிருந்ததை எந்தப் பொருளும் ஆட்சேபிக்கவில்லை. அதன்படியே அவன் அவளுக்கு ஏவாள் எனவும், அவள் அவனை ஆதாம் எனவும் பெயரிட்டிருந்தார்கள். ஆதாம் பெயரிடுவதற்காக தினமும் அந்தத் தோட்டத்தின் முடிவற்ற பாதைகளுக்குள் சுற்றிக்கொண்டிருப்பான். ஒவ்வொரு நாளும் அவன் பொருள்களுக்கு வைத்த பெயர் எதுவும் நினைவில் தங்காது போகவே அன்றாடம் பொருள்களைக் கண்டு புதிது புதிதாகப் பெயர் வைக்க வேண்டியிருந்தது. அப்படியும் அவனால் பெயரிடப்படாத எண்ணிக்கையற்ற உயிர்கள் அவனது தோட்டத்தில் இருந்தன. மஞ்சள் கரைசல் போல ஓடிக் கொண்டிருந்த ஒரு ஆற்றின் கரைகளில் நின்றவனாகத் தனது கண்ணில் பட்ட பொருள்களுக்குப் பெயரிட்டுக் கொண்டிருந்தான் ஆதாம். காற்று மிக மெதுவாக வீசிக் கொண்டிருந்தது. அவன் அப்போது இடியோசை போன்றதொரு சப்தத்தைக் கேட்ட வனாகத் தோட்டத்தின் உள்ளேயிருந்த ஜீவ விருட்சத்துக்கு அருகாமை ஓடி வந்தான். அங்கு நிசப்தம் மட்டுமே துள்ளிக்கொண்டிருந்தது. வெயில் இறங்க முடியாத அடர்ந்த மரங்களுக்கு ஊடே அவன் நின்றுகொண்டிருந்தான். ஆற்றின் வேகம் மிக மெதுவானதாகவும் அது பாறைகளைப் போல உறைநிலைக்குப் போவது போலவும் தெரிந்தது. ஒரு காட்டு விலங்கின் கண்ணைப் போல ஆற்றின் கண்கள் அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தன. அவன் நின்றிருந்த இடத்தருகே மரங்கொத்தியொன்று மரத்தைத் தனது கூர்அலகால் கொத்திக் கொத்தி சப்தம் உண்டாக்கிக்கொண்டிருந்ததைக் கேட்டவனாக அதே இடத்தில் ஒரு பாறை மீது சாய்ந்து கொண்டான். அந்த ஸ்திரி தொலைவில் எதையோ தேடிக் கொண்டிருப்பது தெரிந்தது. மரங்கொத்தியின் வேகம் அதிக மானது. பழுத்த ஓர் இலை துண்டிக்கப்பட்டுக் கீழே விழும்போது ஒரு குழந்தையின் அழுகைக் குரல் கேட்டது. அது எங்கிருந்து வருகிறதெனத் தெரியாமல் ஓடினான். விசும்பல் ஓசை செடிகளை விலக்கிப் போய்க்கொண்டேயிருந்தது. கூடவே ஓடினான். இதற்கு முன்பாக அவன் இப்படியொரு குரலைக் கேட்டதேயில்லை. அவனது வேகம் கண்ட பறவைகள் அச்சம் மீறிச் சிறகடித்தன. புற்களின் படுக்கையில் அந்த ஸ்திரி ஒரு சிசுவை அணைத்துக் கொண்டபடி படுத்திருந்தாள். அது செம் பட்டை மயிரோடு உருண்டையான முக அமைப்பு கொண்டி ருந்தது. குனிந்து அதன் இமையை, உதடுகளை கவனித்தான். ஆச்சரியமாகவே இருந்தன. ஆதாம் அதைப் பார்த்துப் பார்த்துச் சிரித்தான். அதற்கு ஒரு பெயரிட வேண்டும் என முடிவு செய்தவனாக காயீன் என அழைத்தான். அந்த ஸ்திரியும் அதே பெயரையே அனுமதித்தாள். அவன் ஸ்திரியின் ஆழ்ந்த கண்களைக் கண்டான். அவள் பரிகாசமூட்டும்படியான ஒரு சிமிட்டலைச் செய்தாள். பிறகு அக்குழந்தையை அவனது கையில் தந்தவளாக தனது பின்னால் வரச்சொல்லியபடி நடந்து போனாள்.

எத்தனை நாள்கள் இருவரும் நடந்தார்கள் எனக் கணக்கிடப் படவே இல்லை . அவர்கள் வழியில் எதிர்ப்பட்ட ஆடுகளைத் தங்களுடன் ஒட்டிக்கொண்டு நடந்தனர். செம்பழுப்பு நிற பூமியில் அவள் காயீனைப் போலவே இன்னொரு பிள்ளையைப் பெற்றாள். அதற்கும் ஆபேல் என ஆதாமே பெயரிட்டான்.

சூரியன் தனியே வீசி அலையும் ஒரு மலையின் சரிவுக்கு வந்தபோது அங்கே யாருமேயில்லை. ஆதாம் சில நாள்கள் தங்க வேண்டுமென்றான். ஏவாள் தனது பிள்ளைகளை விளையாட அனுமதித்தாள். சிறுவர்கள் மலையின் அருகாமையில் போய் குரல் கொடுத்து அதன் பெருக்கத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். காயீன் வளர்ந்து இளைஞனாக மாறும் வரை ஆதாம் வேறிடம் போகவேயில்லை. ஒரு நாளில் ஆத்திரம் மீறிக் காயீன் தாய்க்குப் பிடித்தவமானவனாக இருந்த ஆபேலைக் கற்களால் தாக்கிக் கொலை செய்வதைக் கண்ட ஆதாம் வீறிட்டு அலறினான். இதைக் கேட்ட காயீன் அவர்களை விட்டோடி கிழக்கே நோத் என்ற நகரை அடைந்த சில காலத்தில் ஒரு பெண்ணை அறிந்து தானும் ஏனுக்கைப் பெற்றான். ஏனுக்கு ஈராத் பிறந்தான். ஈராத் மெய்குவேலைப் பெற்றான். மெய்குவேலோ லாமெக்கைப் பெற்றான். லாமெக்கோ இரு ஸ்திரிகள் வழியாக ஆதாள், சில்லாள் என இருவரைப் பெற்றான். இந்த நாள்களுக்குள் திரும்பவும் ஏவாள் ஒரு பிள்ளையைப் பெற்று சேத் எனப் பெயரிட்டாள். தாங்கள் தோட்டத்திலிருந்து வெகுதூரம் வந்து விட்டதால் திரும்பப் போய் விடலாமென ஆதாம் விருப்பப்பட்டான். பிறப்பும் இறப்புமாக தனது காலைச் சுற்றியபடி நீளும் புதிரை அவிழ்க்க முடியாத ஆதாம் எப்போதும் யோசனையிலேயே இருந்தான். கற்கள் மலையிலிருந்து உருண்டு கொண்டிருப் பதைப் பார்த்துக்கொண்டிருப்பது மட்டுமே தினசரி வேலையாக இருந்தது. ஆட்டுக்குட்டிகள் பல்கிப் பெருகிவிட்டன. எங்கும் ஆட்டிரைச்சல், சப்தம் நிரம்பிக் கொந்தளிக்கிறது. தன் கண் முன்னே தனது மனிதர்கள் ஒருவரை ஒருவர் வன்கொலை செய்து கொள்வதையும், நெருப்பிட்டுத் தானிய வயல்களை எரிப் பதையும் ஆதாம் கண்டான். இருந்தும் யாரிடமும் ஒரு சொல் பேசவில்லை. நோவா பிறந்தபோது ஆதாமுக்கு நரையோடிப் போயிருந்தது. அப்படியொருவன் பிறந்திருக்க வேண்டும் என்பதைக் கூட அவன் அறியவேயில்லை . ஒரு நாளில் மழை பெய்யத் தொடங்கியது. இடைவிடாது மழை மிக வேகத்துடன் கொட்டியது. தனது வாழ்நாளில் ஒருபோதும் ஆதாம் இத்தகைய பெருங்கோபத்தை மழையிடம் கண்டதே யில்லை. தான் பெயரிட்ட மழையைத் தானே பார்த்துக் கொண்டிருந்தான். உலகமெங்கும் ஜலம் நிரம்பிக் கொண்டு வந்தது. தனது ஆடுமாடுகளை, கூடாரங்களை மழை இழுத்துக் கொண்டு போனது. மலையின் ஒற்றைப் பாறையில் நின்றிருந் தான் ஆதாம். மழை ஏவாளையும் தன்னோடு இழுத்துப் போனது. இடைவிடாத மழையிலிருந்து தப்பிக்க ஒரு மரக்கலமொன்றைக் கட்டிய நோவா அதில் உலகில் சகல உயிரினங்களிலிருந்தும் ஒரு ஜோடியை எடுத்துக் கப்பலில் சேர்த்தான். பிறகு தனது சகோதரிகளுடன் அவன் படகில் ஏறிக் கொண்டான். மழை அப்போதும் நிற்கவேயில்லை.

ஆதாமின் கண்கள் தண்ணீரின் நீள்வெளியை மட்டுமே கண்டன. ஒரு பெரிய கப்பல் மலையைக் கடந்து போவதைக் கண்டான். அக்கப்பலில் இருந்து பறவைகள் கீச்சிட்டதை மழையை மீறி கேட்க முடிந்தது. தன்னையும் அழைத்துப்போக அவன் பெருங்குரல் கொடுத்துக் கத்தினான். ஆனால் அது கப்பலைச் சென்று சேரவேயில்லை. மலை ஜலத்தினுள் மெல்ல அமிழ்ந்து கொண்டு இருந்தது. சிறிய ஓசையொன்று விட்டு விட்டு சொட்டிட மலை மூழ்கிக்கொண்டிருந்தது. தனது காலைத் தொட்ட தண்ணீரின் வேகம் கண்டு ஆதாம் கத்தியபோது மரங்கொத்தி தனது கொத்துதலை நிறுத்தித் திரும்பிப் பார்த்தது. ஆதாம் சிறிது நேரம் உறங்கியிருக்கக் கூடுமென்ற நினைப்பில் கைகளைத் தடவிப் பார்த்தான். தண்ணீரின் சுவடில்லை. மரங்கொத்தி திரும்பக் கொத்தத் தொடங்கியது. அவன் தான் கண்ட நிகழ்வுகளைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியாமல் படுத்துக்கொண்டிருந்தபோது அந்த ஸ்திரி அருகில் வந்து ஆதாமிடம் கேட்டாள்,

‘புசிக்கப்படாத அந்த மரத்திலிருந்து ஒரு பழத்தை எனக்காகப் பறித்துத் தர முடியுமா?’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *