ஆண் நிழல்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2024
பார்வையிட்டோர்: 182 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நிழல்களில் ஆண் பெண் உண்டா என்று கேட்கவேண் டாம். பெண் நிழல்களே கிடையாது; ஆண் நிழல்கள் தான் உண்டு. கிராமவாசிகளுக்கு இந்த உண்மை நிச்சயமாய் பிடிபடாது. என்னைப்போல் பட்டணத்தில் வந்து இருந்தால் தான் புரியும். 

கிராமத்தைப் பாலைவனம் என்று பட்டணவாசிகள் நையாண்டி செய்வார்கள். எனக்கு அப்படித் தோன்றியதே இல்லை. காலையில் எழுந்திருந்து கழனி வழியே சென்றால், இன்பத்தைத் தரும் எத்தனை விதமான பட்சிகளின் குரல்கள்! குயில் எங்கிருந்தோ கூவுகிறது. மீன்கொத்தி கத்துகிறது. வலியன் குறுக்கே பறந்து சென்று, மாட்டு முதுகின்மீது உட்கார்ந்து சவாரி செய்கிறது. தவிட்டுக் குருவிகள் ஐந்தும் ஏழுமாக மேட்டில் வந்து தத்தித்தத்தித் திரும்பி உட்காரு கின்றன. இந்த ஓசைகளெல்லாம் ஏதோ அந்தரங்க இன்பத்தில் என்னை ஆழ்த்துகின்றன. 

மதகடிக்கு வந்தால் பழைய ஆலமரம் இருக்கிறது. எனக்குப் பரிசு அளிப்பது போல என் கையில் இரண்டு பழங்களை உதிர்க்கிறது. அவற்றைச் சாப்பிட முடியாவிட் டால் என்ன? சூரிய வெளிச்சத்தை சாப்பிடவா செய்கிறோம்? சூரியன் நம்மிடம் கொண்டுள்ள அன்பின் சின்னம்தானே வெளிச்சம்! அதைப்போலவே ஆலமரம் நிழலைத் தருகிறது, பழத்தைத் தருகிறது! உலகை வெறுத்துச் செல்ல விரும்பும் சாமியாருக்கு ஜடாபாரம் திரிக்கப் பாலைத் தருகிறது! பல்லையும் வீரியத்தையும் அதைக் கொண்டே உறுதிப் படுத்திக்கொள்ளலாம்-பல் பசையையும் ஓகாசாவையும் வாங்குவதை விட்டால். ஆலமரம் கொடுத்த பழத்தைத் தின்ன முடியாவிட்டால் என்ன? நிமிந்து பார்த்தால், காகங்களும் மைனாக்களும் மரத்தில் கவலையின்றி உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. 

ஆலம் விழுதை ஒடித்துக்கொண்டு பல் தேய்க்க மதகடி யில் உட்கார்ந்தால்-மதகு வழியே ஜலம் சளசள என்று ஒசை இட்டு ஓடுகிறது. மீன்கள் நீரோட்டத்தை எதிர்த்துப் போகின்றன. வாழ்வில் வெற்றி பெறும் வழி மீன்களுக்குத் தான் தெரியுமோ? மகிழ்ச்சியின் உண்மை நீருக்குத்தான் தெரியுமோ? மலையில் பெய்த மழை நீர், நெடுவழியைத் தாண்டிவந்து என் வயலில் பொன்னை விளைவிக்கிறது! தண்ணீருக்கு நான் என்ன பரிசளிக்கிறேன்? மதகடியில் செல்லும் நீர் வாழ்நெறியை விளக்கிப் புலம்புகிறது. 

வீடு திரும்புகையில், முன்பின் அறியாத முதலியார், முன் பரிச்சயமின்றிப் பேசுகிறார். 

‘கிணத்தடிப் படுகை இருக்கல்ல. அந்த மேட்டை வெட்டிக் கலைத்துவிட்டால், பத்து கலம் கூட வருமே! சும்மா விட்டிருக்கீங்களே!’ என்கிறார். 

வீட்டுக்கு வந்த பிறகுதான் பேசியவர் என் பக்கத்து வயல்காரரின் மாமா என்று அறிகிறேன். என் விஷயத்தில் அவருக்கென்ன அவ்வளவு தன்னலமற்ற அக்கறை! ஆனால் ஒன்று. அது கிராமம்; அவர் கிராமவாசி! 

ஆனால் பட்டணத்திற்கு வந்த பிறகு? 

வந்த இரண்டாவது நாள் வாசலில் பசுவைக்கொண்டு வந்து கறந்தார்கள். கிராமத்தில் கன்றுக்குட்டிகள் ஓடிப் போய் பால் குடிக்குமே! 

பட்டணத்துக் கன்றுக்குட்டியை பால்காரன் தன் தோளிலிருந்து கழற்றிக் கீழே வைத்ததும், திகிலடைந்து போய்விட்டேன். வைக்கோல் அடைந்த கன்றுக்குட்டியின் தோலில் நாலு மூங்கில் குச்சி செருகப்பட்டு இருந்தது. பட்டணத்துப் பசுக்கள் ரொம்ப பாபம் செய்திருக்கின்றன என்று தோன்றுகிறது. 

சாப்பாட்டு வேளை வந்ததும் கிராமத்திர வழக்கப்படி காக்காய்க்குச் சாதம் போடச் சொன்னேன். காக்கையைப் பார்க்க வேண்டுமென்றால், பீபிள்ஸ் பார்க்குக்குத்தான் போக வேண்டுமென்று யாரோ சொன்னார்கள். 

ஜாகையைப் பற்றிச் சொல்லவில்லையே! ஒட்டுக் குடித்தனம்! மூன்று குடும்பங்கள் சேர்ந்து குடி இருக்கிறோம். முன் பக்கத்து அறையில் பெரிய இடத்துப் பரிசாரகர் ஒருவரும் அஜந்தா கொண்டை போட்ட அவர் மனைவியும் இருக்கிறார்கள். பின் பக்கத்தில் சினிமாக் கம்பெனியில் கணக்குப் பிள்ளையாக இருக்கும் ஒருவர், அவர் மனைவி, ஒரு குழந்தை – இவர்கள் தான் அந்தக் குடும்பம். என் குடும்பத்தில் நானும் என் மனைவியும் மூன்று குழந்தைகளும். 

பரிசாரகர் காலை ஆறு மணிக்குப் பங்களாவுக்குப் போய் விடுவார். மத்தியானம் பன்னிரெண்டு மணிக்குத்தான் திரும்புவார். பிறகு மூன்று மணிவரையில் வீட்டிலிருப்பார். அப்பொழுது சாப்பிட்டு விட்டுத் தூங்குவார். மறுபடியும் மூன்று மணிக்குப் போய் விட்டு இரவு ஒன்பது மணிக்குத் திரும்புவார். 

பின்பக்கத்திலிருப்பவர் மழை பெய்த நீர் நினைத்தபடி ஓடுவதைப்போல், ஆபீசுக்கு எப்படி எப்படியோ போய்த் திரும்புவார். 

நானோ? விக்ரமாதித்தான் – வேதாளம் மாதிரி. என் முருங்கை மரம் ஒரு பேப்பர் ஆபீஸ். எனக்குக் காடாறு மாதம் என்றால், ஒரு வாரம் விட்டு ஒருவாரம் இரவில் ஆபீஸ் வேலை; பாக்கி நாட்களில் பகலில் வேலை… 

நான் இந்த வீட்டுக்கு வந்து ஒரு மாதமாகப் போகிறது. ஆனால், வந்த மூன்றாம் நாள் வீட்டில் ஒரு காட்சியைக் கண்டேன். அதே காட்சியை ஏறக்குறைய தினம் தவறாமல் வெவ்வேறு உருவத்தில் பார்த்து வருகிறேன். 

கூடத்தில் அங்காடிக் கூடைக்காரி; ஜவுளிக்காரன், நெய்க்காரன்,ரிப்பன்காரன் அல்லது வேறு யாராகவாவது இருக்கலாம். வட்ட மேஜை மகா நாட்டைப் போல் சுற்றிலும் மூன்று குடும்பங்களின் ஸ்திரீ அங்கத்தினர்கள். சினிமாக் காரர் மனைவி, வீசை கத்திரிக்காயை விலைபேசி, பத்து பலம் வாங்கினாள். பரிசாரகர் மனைவி கொந்தமல்லியும் கருவேப் பிலையும் வாங்கினாள். என் மனைவி முருங்கைக்காய் வாங் கினாள். வியாபாரம் முடிந்துவிட்டது. காசையும் கொடுத்து விட்டார்கள். கூடைக்காரி நயாபைசாவாகப் பாக்கி கொடுத்தபோதுதான் குழப்பம் உண்டாகிவிட்டது. இவர் களில் ஒருவருக்காவது நயாபைசா விஷயம் தெரியாது. ஆனால், கூடைக்காரி இவர்களை ஏமாற்றிவிட்டதாக ஒருமிக்க அபிப்பிராயப்பட்டார்கள். நான் குறுக்கிட்டுப் பார்த்ததில், கூடைக்காரி சரியாய்த்தான் பாக்கியைக் கொடுத்திருந்தாள். அப்படியே சொன்னேன். ஸ்திரீகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அதாவது ஒருமித்து எனக்கு அவர்கள் பட்டாபிஷேகம் செய்துவிட்டார்கள் என்று பொருள்;-மு-பட்டாபிஷேகம். 

வியாபாரம் இல்லாவிட்டால் சினிமாக்காரர் வீட்டுச் சின்னக் குழந்தையை வைத்துக்கொண்டு எல்லோருமாகக் கொஞ்சிக் கொண்டிருப்பார்கள். சிலசமயம் குழாய்ச் சண்டை, திண்ணை வம்பின் விளைச்சல், அழகின் இலக்கணத் தைப்பற்றிய மறைமுக விமர்சனம் முதலிய தோன்றத்தான் தோன்றும்.ஆனால், மின்னல் மாதிரி அவை மறைந்துவிடும். எப்படி இருந்தால் என்ன? அவர்கள் நிச்சயம் நிழலாட்டம் ஆடுவதில்லை. நிழலாக இருந்தாலல்லவா? 

ஆனால், ஆண்களோ? எங்கள் வீட்டிலிருக்கும் ஆண் பிள்ளைகளைக் கண்ணால் பார்ப்பதற்கே ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது. அவர் அவர்களுக்கு எதோ ஓயாத வேலை! 

ஒருநாள் காலை ஆறுமணிக்குப் பரிசாரகரைப் பார்த் தேன். அவர் பிரஷ் போட்டுப் பல்லைத் தேய்த்துக்கொண்டிருந்தார். ஆலம் விழுதின் ஞாபகம் வரவே, பசையைப் போட்டுப் பல்லைத் தேய்ப்பதனால் என்ன செலவாகும் என்ற கணக்கில் மனம் லயித்துவிட்டு, ‘புதிதாய்க் குடித்தனம் வந்திருக்கிறீர்களா?’ என்று என்னை அவர் ஒரு வார்த்தை கேட்பார் என்று எதிர்பார்த்தேன். அவர் கேட்கவில்லை. நிழலைப்போல் போய்விட்டார். 

மற்றொரு நாள். சினிமாவில் கணக்குப்பிள்ளையாக இருப்பவரை வீட்டில் கண்டேன். சாப்பிட்டுவிட்டு ரேழிபில் வந்து உட்கார்ந்துகொண்டார். அன்று எனக்கு இரவில் தான் வேலை. பொழுது போகவில்லை. கூடத்திலிருந்து ரேழிப் பக்கம் போனேன். அவருடன் பேச்சுவார்த்தையை எப்படி ஆரம்பிப்பதென்று எனக்குத் தெரியவில்லை. எனவே, வாசற்பக்கம் போய் மேலும் கீழுமாய்ப் பார்த்தேன். ‘என்ன பார்க்கிறீர்கள்’ என்று அவர் கேட்பார் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தேன். மனக்கோட்டை மெய்ப்படவில்லை. சிவனே என்று சவுக்கத்தை விரித்துக்கொண்டு, படுத்துவிட்டார். நிழலுடன் பேச முடியுமா?… 

அதற்குப் பிறகு அவர்களைப் பலதரம் வீட்டில் பார்த் திருக்கிறேன். நிழல்களைப்போல் வருகிறார்கள், போகிறார்கள்; காரியம் செய்கிறார்கள். ஆனால், ஒருவருக்கொருவர் மட்டும் பேசுவதில்லை. 

வீட்டில் இப்படி என்றால் வெளியிலும் நிழல்கள்தான் கண்ணில் படுகின்றன. வீட்டை விட்டால் பஸ் நிற்குமிடம். பரமபதத்தில் புக நினைப்பதுபோல் பலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் இயற்கையாகப் பேசக் காணோம். எதிரிகள்போல் மனதில் குமுறிக்கொண்டிருக் கிறார்கள். பஸ் வருவதும்தான் தாமதம். அணையை உடைத்த வெள்ளத்தைப்போல் அவ்வளவு பேரும் வண்டிக் குள் நுழைகிறார்கள். யார் கால் யார் பூட்ஸின்கீழ் முயலகனா யிற்றோ, யார் கண்டது? இரண்டணா கொடுத்தால் நடராஜப் பெருமான் ஆகும் உரிமை பட்டணத்தில் சல்லிசாகக் கிடைக்கிறது. 

வண்டிக்குள் ஏறினால்தான் என்ன? இடம் கிடைத்து உட்காருகிறவர்கள் தியானத்தில் அமர்கிறார்கள். இந்த புத்தர்களில் பலர் ‘ஹாட்’ போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும்தான் வித்தியாசம். இரண்டொருவர் வெற்றிலை பாக்கை வெறுத்து, அமெரிக்கன் கோந்தைப் போட்டு மென்று கொண்டிருக்கிறார்கள். இடம் கிடைக்காதவர்கள் பிதிர் லோகத்தில் தொங்கும் ஆன்மாக்களைப்போல் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். 

இதெல்லாம் சட்டை போட்ட நிழல்கள் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட வேலையைக் குணம் பார்க்காமல் செய்து கொண்டிருக்கும். 

நானும் நிழலாகிவிடக் கூடாதென்ற கவலை வந்து விட்டது. வீட்டு சாக்கடை இரண்டு மூன்று நாளாக வாசனை அடித்துக்கொண்டிருத்தது. வீட்டுச் சொந்தக் காரருக்கு வாடகையைப் பற்றிய கவலையே ஒழிய, வாசனை யைப்பற்றிய கவலை எதற்கு? வீடு கூட்டியின் வேலை என்று எல்லா ஸ்திரீகளும் அலக்ஷியமாய் இருக்கிறார்கள். சத்திரத்தில் சாப்பிடக் கூப்பிடுவதுபோல, பொதுவாகச் சொல்லிக் கூடப் பார்த்துவிட்டேன். அவர்களுடைய பேச்சு சுவாரஸ் யத்தில் வாசனையே தெரியவில்லையாம்! 

இந்த சில்லறை விஷயத்தை ஆண் நிழல்களா கவனிக் கப் போகின்றன? 

என்னால் தாங்க முடியவில்லை. கிராமவாசியானபடியால் வரிந்து கட்டிக்கொண்டு, ஒருநாள் சாக்கடையை சுத்தப் படுத்தும் காரியத்தில் ஈடுபட்டேன். 

‘என்னாங்க நீங்க? வீடு கூட்டியை ஒரு அதட்டு போடுவதை விட்டுவிட்டு-‘ என்றது ஒரு குரல். 

திரும்பிப் பார்த்தேன். சினிமா கணக்குப்பிள்ளை. ‘நான் கூட நேத்து நெனைச்சேன். வேலை அவசரம்’ என்றது மற்றொரு குரல். 

மறுபடி திரும்பிப் பார்த்தேன். பரிசாரகர் குரல். 

நிழல்கள் பேசிவிட்டன. மறுபடியும் எப்பொழுது பேசுமோ? 

– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *