(1993ல் வெளியான சீர்திருத்த நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“அண்ணா , உங்களிடம் ஒரு உதவி கேட்க வந்தேன். நீங்க எனக்கு எப்படியும் இந்த உதவியைச் செய்ய வேண்டும்.”
அன்று காலைதான், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தில் என் கிராமத்துக்கு உறவினரின் திருமணத்திற்காக வந்திருந்தேன். கிணற் றடியில், கால் முகம் கழுவிக் கொண்டிருந்தேன். குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். எதிர் வீட்டுப் பெண் புஷ்பம். சோர்ந்த முகத்தில் புன்னகையை வரவழைத்தபடி வாஞ்சையுடன் நின்றாள். உதவியை உரிமையுடன் கேட்கும் வார்த்தைகள்.
எங்கள் கிணறு பங்குக் கிணறு. நாலு குடும்பங்களுக்கு உரிமை. இரண்டு ஏற்றமிறைக்கும் துலா, கிணத்தில் தண்ணீர் அள் ளியே தண்ணீரைக் குடிப்பேன். அந்தத் தண்ணீரின் சுவையே தனி, கொழும்பில் குளோரின் கலந்த தண்ணீர் நாள் முழுவதும் குழாயில் ஓடினாலும் கிராமத்திலுள்ள எங்கள் கிணற்றுத் தண்ணீர் போலாகாது. கால் முகம் கழுவுவது, குளிப்பதற்கும் கிணற்றடிக்கே செல்வேன்.
புஷ்பம் எங்கள் வீட்டுக்கு வருவதில்லை. தம்பி மனைவி யோடு பிரச்சனையாயிருக்கலாம். அது பற்றி நான் விசாரிப்பதில்லை. கிராமத்தில் தங்கும் வேளை, காலையில் வேப்பங்குச்சியுடன் ஒரு தடவை அவர்கள் வீட்டுக்குச் சென்று சுகம் விசாரிப்பேன். விதவையான தாயாரும் மற்றொரு சகோதரியுமே வீட்டில், ஆட் டுப் பால் கலந்து காப்பி தருவார்கள். அது ஒரு தனிச்சுவை.
“என்ன புஷ்பம் அப்படி உதவி – சொல்லு. என்னால் முடிந்தால் செய்வேன் தானே”
“அது தான் கேட்க வந்தேன். எனக்கு உதவ இங்கு ஒருவரு மில்லை . மகேந்திரனைப் பொலிஸில் பிடித்து……” அதன் மேல் வார்த்தைகள் எதுவும் வெளிவரவில்லை. நெஞ்சு அடைத்து விம்மி விம்மி அழத் தொடங்கி விட்டாள்.
என் நிலை சங்கடமாகி விட்டது. முகத்தைத் துடைத்தபடி அவளது முதுகில் தட்டித் தேற்ற முயன்றேன். கிணற்றடி. சுற்றிவர உள்ளவர்கள் விம்மல் சத்தம் கேட்டு எங்களைப் பார்க்கலாம் என்பதையே மறந்து அழுது கொண்டிருந்தாள். மச்சினி வந்து எட்டிப்பார்த்து விட்டு போய் விட்டாள்.
கிராமத்திற்கு வந்து விட்டால் கிணற்றடியில் அடுத்த வீட்டா ரைப் பார்த்து சுகம் விசாரித்துக் கொள்வதும் வழக்கம். என்னை கிணற்றடியில் கண்டதும் மற்ற வீட்டுக்குப் பெண் குலவதி வந்து விடுவாள்.
“ஊரில் என்ன புதினம்” என்று கேட்டுவிட்டால் போதும். அவள், ஊர்ச் செய்திகள் அனைத்தையும், சில நிமிடங்களில் தொகுத்துக் கூறிவிடுவாள். கலியாணம், சாவு, வாய் சண்டைகள் தொடக்கம் அரசியல் செய்திகள் யாவும் சொல்வாள். விடுதலை இயக்கங்கள் முகிழ் விடும் காலம். பொலிஸார் வேட்டை உட்பட யாவும் அவளிடமிருந்து அறிந்து விடலாம். கொழும்பிலிருந்து ரெயிலில் படிப்பதற்காக எடுத்து வரும் நூல்களை வீட்டிற்கே வந்து உரிமையுடன் எடுத்துக் கொள்வாள்.
சென்ற தடவை வந்து போதே, புஷ்பம், இயக்கம் சார்ந்த மகேந்திரனைக் காதலிக்கும் செய்தியை குலவதி சொல்லியிருந் தாள். அதன் பின், மறுநாட் காலை புஷ்பம் வீட்டிற்குச் சென்று. தாயாரிடம் சுகம் விசாரித்து, காப்பி சாப்பிடும் போது – புஷ்பம் முகமலர்ச்சியாகச் சிரித்துப் பேசினாள். அவளின் காதல் விஷயம் பற்றி எதுவும் பேசவில்லை. நானும் கேட்கவில்லை.
“எப்படி கவனமாகப் படிக்கிறாயா” என்று மட்டும் கேட்டேன்.
“ஒரே அரசியல் பேச்சுத்தான் இங்கே. படிப்பிலே ஆருக்குக் கவனம்?” தாயார் குறைப்பட்டாள்.
புஷ்பம் நிலத்தைப் பார்த்தபடி சிரித்தாள். எப்படியும் தன் காதல் விஷயம் பற்றி என் செவிக்கு எட்டியிருக்கும் என்பதை அறிந்திருப்பாள். குலவதியை சுற்றுவட்டத்தில் யாவரும் அறிவர்.
“இப்பொழுது மகேந்தரன் எங்கே…?” விம்மலும் அழுகையும் சிறிது ஓய்ந்ததும் கேட்டேன்.
“கொழும்பில் நாலாவது மாடியில் விசாரணை முடித்து விட்டு, பூஸா காம்புக்குக் கொண்டு போய் விட்டதாகச் சொன்னார்கள்”
வாராது கலைந்த முடியைப் பின்னி விட்டிருந்தாள். ஸ்கேர் ட்டும், கலர்விட்ட சர்ட்டும், முகத்தில் வடிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்தாள்.
“வீட்டுக்குப்போ, நாளைக்கு மாலைதான் கொழும்புக்குப் புறப்படுவேன். காலையில் அம்மாவையும் பார்க்க வருவேன், உனக்குத் தெரிந்த விபரங்களை எல்லாம் எழுதி வை கொழும்புக்குச் சென்றதும் என்னால் முடிந்தவரை முயல்வேன்.”
ஆறுதல் கூறி அனுப்பியதும், வேலிப்பக்கமாக நின்று யாவையும் கவனித்துக்கொண்டிருந்த குலவதி வந்தாள். அவள் என்னோடு வீட்டுள் நுழைந்து மகேந்திரன் கைது செய்யப்பட்ட விபரம் யாவும் கூறினாள். என் மச்சினியோடும் அவள் ஊர்வம்பு பேசிப் பொழுதுபோக்குவதில் நெருக்கம்.
“தாயார் காதலை எதிர்க்கவில்லையா…?”
“முன்னர் பொலிடோலைச் சொல்லி மிரட்டுவார்கள். இப் போது தானே இயக்கத்தில் சேர்ந்து விடுவேன் என்று வெருட்ட முடிகிறது.”
குலவதி சிரித்தபடியே அங்குள்ள யதார்த்த நிலைமையைக் கூறினாள். மகேந்திரனையும் நன்கு அறிவேன்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான், தெருவிலே கண் டால் இடைநிறுத்தி, சுகம் விசாரித்து, அரசியல் பேசுவான், தர்க்க நியாயத்திலும் பார்க்க உணர்ச்சியே அவன் பேச்சில் முன்னிற்கும். எதிர்காலத்தில் வீசப்போகும் புயலுக்கு அவனது உணர்ச்சி வெறி முன்னுதாரணமாயிருந்ததை இன்று எண்ணிப் பார்க்க முடிந்தது.
“கொழும்பிலே நீங்கள் பழகும் சிங்களவர் நல்லவர்களா யிருக்கலாம். ஆனால் இங்கே நாங்கள் அறியாத சிங்களத்தில் பேசி உதைக்கும் பொலிஸாரையும், தமிழர் மேல் சுட்டுப் பழகும் சிங்கள இராணுவத்தாரையுமே எங்களுக்கு தெரியும் அடிக்கடி பார்க்கிறோம்.”
கடைசித்தடவை, சந்தியில் கண்ட போது கூறினான். உயர் கல்வியில் புறக்கணிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம். சிங்கள மொழித் திணிப்பு பற்றியெல்லாம், அவன் போலவே மற்றைய இளைஞர்கள் மட்டுமல்ல, கல்லூரிப்பெண்களும் பேசிக் கொண்டனர். வீட்டில் தம்பியாரின் பெண்களுடன் கூட என்னால் விவாதிக்க முடியவில்லை.
விடுதலை இயக்கத்தில் உள்ளவர்களிடையே ஏற்படும் காதலின் ஆபத்துப் பற்றி நான் அறிவேன். இயக்கங்களில் இறுக் கமான கட்டுப்பாடுகள் ஏற்படாத காலம்.
பொலிஸ், இராணுவக்கெடுபிடி இளைஞர்கள் மேல் கடுமையாக இருந்தது.
கொழும்புக்குத் திரும்பிய வேளை ரெயிலில் மகேந்திரனின் பிரச்சினை பற்றியே என் மனமும் அலைந்தது. புஷ்பத்தின் விம்மலும், கண்ணீரும் வேண்டுதலும் தூக்கத்தைக் கலைத்தன.
கலைஞர்கள் யாவரும் காதலுக்கு அளவு மீறிய முக்கியத் துவம் கொடுத்து, இளம் வயதினரை தூண்டி வேடிக்கை பார்க் கிறார்கள் என்பதே என் கருத்து. ஆயினும் காதலிப்பவர்களைப் பிரிக்க வேண்டும் என எங்கும் நான் வாதிடுவதில்லை, முயல்வது மில்லை. காதலரைப் பிரிப்பதால் ஏற்படும் தற்காலிக துன்பத்திலும் பார்க்க, ஒன்றிணைந்து குடும்பம் என்ற நிறுவனத்தில் போராடி அனுபவம் மூலம் காதலின் பொய்மையை அறிந்து கொள்ளட்டும் என்றே விரும்பினேன். தாமே விரும்பி மணக்கும் போது, தம் தோல்வியை மற்றவர்களின் தலையில் போட வேண்டிய தேவை யும் ஏற்படாது என்பதையும் கூறி ஆதரித்து வந்தேன்.
கொழும்பில் சேர்ந்து வேலைகளில் ஈடுபட்டேன். புஷ்பத் திற்கு அன்று ஆறுதல் கூறிய போதும் செயலாற்றி வெற்றி பெறு வதிலுள்ள சிரமத்தை அறிவேன். விசாரணைக்காலமா? வழக்குப் பதிவு செய்து விட்டார்களா? எதையும் அறிய முடியாதிருந்தது.
நெருக்கடியான வேலைப்பளுவில் ஈடுபட்டபோதும் அடிக் கடி புஷ்பத்தின் விம்மலும் கண்ணீரும் என் நெஞ்சில் பளிச்சிட்டுத் துன்புறுத்திக் கொண்டே இருந்தது.
வக்கீல் நண்பர் ஒருவரிடம் உதவும்படி கூறினேன். “18 மாதம் தடுத்து வைக்கக் கூடிய பி.டி.எ சட்டம் அவர்கள் கையில் உள்ளது. எப்படியும் விசாரித்துப் பார்க்கின்றேன்” என்றார். பயங்கரவாத தடுப்புச் சட்டம் பற்றி அறிவேன்.
வக்கீல் நண்பர்கள் கூட நம்பிக்கை தரவில்லை. ஆயினும் அத்தகைய விசாரணைக்குப் பொறுப்பான இன்ஸ்பெக்டர். பொலிஸ் டிப்பாட்மென்ட் பிரிவு பற்றி மட்டும் தெரிவித்தார்.
வாரங்கள் கழிந்தன. புஷ்பத்திற்கு எவ்வித செய்தியும் அனுப்ப முடியவில்லை. காலம் தான் உதவ வேண்டும் என மனதைச் சாந்தப்படுத்திக் கொண்டிருந்தேன்.
அன்று கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு லண்டனி லிருந்து வரும் நண்பன் ஒருவரை அழைத்துவரச் சென்றிருந்தேன். நண்பரின் வருகைக்காக காத்திருந்த போது முன்பு நன்கு பழகி யிருந்த ஏ.எஸ்.பி. எக்கநாயக்காவைக் கண்டேன். ஒரு விசாரணை அலுவலாக முன்னர் பழகிய எக்கநாயக்கா பொலிஸ் அதிகாரிகளின் கிளப்பின் செயலாளராக கொழும்பில் இருந்தான். அவனுக்கு வேண்டிய அவசர அச்சு வேலைகளுக்கு என்னிடம் வருவான். நான் பல வகையிலும் உதவியிருந்தேன். இன்ஸ்பெக்டராக இருந்தவன் ஏ.எஸ்.பி. யாக பதவி உயர்வு பெற்று வேறு மாவட் டத்திற்கு மாற்றப்பட்டிருந்தான்.
சுகம் விசாரித்த பின்னர் அவனது பதவி உயர்வுக்கு பாராட்டி விட்டுச் சொன்னேன்;
“வழியில் கேட்டு விட்டேன் என்று எண்ணாதே…. எனக்கு ஒரு உதவி வேண்டும்.”
“அதிலென்ன? என்னால் இயலுமென்றால் உங்களுக்குச் செய்வேன் தானே. நிட்சயமாகச் செய்வேனே.”
நான் விபரம் யாவையும் சுருங்கக் கூறி, என் கிராமம், அடுத்த வீட்டுப் பெண்ணுக்கு உறுதி கூறி வந்ததையும் தெரிவித்தேன்.
“பையனின் விசாரணைக்குப் பொறுப்பான இன்ஸ்பெக் டரின் பெயர் தெரியுமா”
“சனத் சில்வா”
“அட அவனா? பொல்லாதவனாயிற்றே? இன்று வரையில் என்ன செய்தானோ தெரியவில்லை. அவன் ஒரு சாடிஷ்ட். உண் மையைப் பிடுங்க என்னவும் செய்வான். நாங்கள் சொல்வதைக் கூடக் கேட்கமாட்டான். ஆனாலும் நான் தவறாது முயன்று பார்க்கிறேன். மற்றது உங்கள் அதிர்ஷ்டம்.”
பொலிஸ்காரன் பற்றி மற்றொரு பொலிஸ் அதிகாரி தரும் சர்டிபிக்கெட் எனக்கு அச்சமூட்டியது.
மகேந்திரனின் பெயர் மற்ற விபரங்களைக் குறித்துக் கொண் டான். ஏதோ ஒரு நல்ல முயற்சிக்கு வாய்ப்புக் கிடைத்தது என்ற திருப்தி. இதுவே கடைசி முயற்சியும் என்று எண்ணிக் கொண் டேன்.
தம்பியாருக்குக் கிராமத்திற்கு எழுதிய கடிதத்தில் அடுத்த வீட்டில் புஷ்பத்திடம் சொல்லும்படி சில வார்த்தைகளில் சுருக்க மாக செய்தி அனுப்பினேன்.
“தக்க நண்பர் ஒருவரிடம் சொல்லியுள்ளேன். மிகுதி உன் அதிர்ஷ்டம்”
யாழ்ப்பாணத்திலிருந்து வரும் செய்திகளில் இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்படுவது பற்றி நாள் தோறும் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்தது. கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சம்பவங்கள் நடந்தன.
ஜீப்பில் ஆயுதம் தாங்கியவர் தவிர தனியே பொலிஸாரை யாழ்ப்பாணத்தில் எங்கும் காணமுடியாது.
இரண்டு மாதம் வரை கழிந்திருக்கும். என் சித்தப்பா திடீரென இறந்ததாக இரவு செய்தி வந்தது. காலையில் புறப்படும் யாழ் தேவி ரெயிலில் புறப்பட்டு நண்பகல் ஸ்ரேஷனிலிருந்து நேரடி யாக கிராமத்தில் மரண வீட்டுக்கே சென்றேன். மரண, மயான சடங்குகள் முடிய பொழுது கருகிவிட்டது. அங்கேயே நீராடி விட்டு இரவு வீட்டுக்கு வந்து தூங்கினேன். ஒரே பிரயாண அலுப்பு.
காலையில் கிணற்றடிக்குச் சென்ற போது புஷ்பம் சிரித்தபடி ஓடி வந்தாள்.
“அண்ணா, உங்கள் உதவிக்கு எப்படி நன்றி கூறுவதென்று தெரியவில்லை, உங்கள் செய்திவந்த ஒரு வாரத்திலேயே அவரை வெளியேவிட்டு விட்டார்கள்” நன்றிச் சிரிப்பு. அடுக்கான அவளது பற்கள் பளிச்சிட்டன.
ஏ.எஸ்.பி. எக்கநாயக்காவின் உதவியை அப்பொழுதே அறிந்து என் நெஞ்சு குளிர்ந்தது. அவன் மேல் என் மதிப்பும் உயர்ந்தது.
“மகேந்திரனை ஒரு தடவை நான் பார்க்க வேண்டும். வரச்சொல்லு”
“நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட, நீங்க உதவி வெளியே வந்தும் அவர் இந்தப்பக்கமே இன்னும் வரவில்லை பாருங்கோ…அண்ணா ….”
அதன் மேல் எதுவும் பேசமுடியவில்லை . விம்மி அழத் தொடங்கிவிட்டாள்.
என் நிலை மீண்டும் தர்மசங்கடமாகி விட்டது.
“என்ன நடந்தது? எங்கே அவன்? கடிதமாவது எழுத வில்லையா?”
அவளது அழுகையும் விம்மலும் ஆற சில நேரம் சென்றது. பின்னரே குழந்தையைப்போல் விக்கி விக்கிச் சொன்னாள்.
“கடிதம் எதுவுமே எழுதவில்லை . தன் வீட்டுக்கும் தெரிவிக்க வில்லை “
“அப்போது எங்கே போனான்”
“தலவாக்கொலையில் நிற்பதாக அங்கே கடை வைத்திருக்கும் கந்தையர் வீட்டாருக்கு எழுதிய செய்தி வந்து நானும் அறிய முடிந்தது.”
“அங்கே என்ன செய்கிறானாம்”?
“தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் வேலை செய்கிறார் பாருங்கோ அண்ணா, முன்னர் அவர் என்ன மாதிரியெல்லாம் என்னோடு பழகினார். ஊரெல்லாம் தெரியும். எத்தனை உறுதி மொழியெல்லாம் சொன்னார். பிறகு இத்தனை மாதங்களாக அழுது கொண்டிருந்த என்னை வந்து ஒரு தடவை பார்க்கப் படாதா? எனக்கு ஆறுதல் சொல்லப்படாதா….”
மீண்டும் அழத்தொடங்கினாள். மகேந்திரன்மேல் எனக்கு ஆத்திரமே வந்தது.
இப்படிப்பட்டவர்களா விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடு வது? ஆண்மையில்லாத அயோக்கியர்கள்.
என் மனம் திட்டியது.
“அண்ணா கடிதம் எழுதிப் பார்க்க விலாசமேயில்லை . எனக்காக நீங்கள் அவரைப்பார்த்து என் நிலைமையைச் சொல்லி, ஒரு தடவை இங்கே அனுப்பிவிடுங்கோ . அது எனக்கு மன ஆறுத லாயிருக்கும். ஊர்வாய்க்கும் பதில் சொல்லும். இப்பொழுதே என்னைப் பற்றி வம்பளக்கத் தொடங்கிவிட்டார்கள்.”
இரத்தக் கண்ணீர். இது எங்கே நிற்கப்போகிறது? எத்தனை இளவயது வாலிபர்கள் உள்ளே. எத்தனை பெண்களது மனக் கோட்டைகள் எல்லாம் உடைக்கப்படுகின்றன. என் மனம் பரவ லாக எண்ணி நொந்தது.
இக்கவலைகளுடனேயே கொழும்புக்குத் திரும்பினேன். ரெயிலில் மீண்டும் தூக்கமில்லை.
தலவாக்கொல்லை கொழும்பிலிருந்து மலை நாட்டுப் பகுதி யில் 200 கிலோ மீட்டர்வரை இருக்கும். சென்று அவனைத் தேடிப்பிடித்துப் பேசிவர ஒரு நாள் போதாது. இரண்டு நாளாவது வேண்டும். அதுவும் உறுதியில்லாத பயணம்.
வாய்ப்பான வார இறுதிக்காகக் காத்திருந்தேன். சனி அதி காலையில் புறப்பட்டால் ஞாயிறு இரவு திரும்பிவிடலாம் என்ற நப்பாசை. அங்கும் என் இலக்கிய நண்பர்கள், தொழிற்சங்கத் தோழர் களையும் பார்த்துப் பேசலாம். பசுமைக் காட்சிகளில் நகரத்தை ஓரிரு நாளாவது மறக்கலாம் எனவும் மனம் கூறிக்கொண்டது.
தலவாக்கொல்லை, மலை நடுவே உள்ள சிறிய நகரமே. நண்பகலிலும் குளுமையான காற்று, பஸ்ஸால் இறங்கியதும் தொழிற்சங்க நண்பன் சந்திரனின் அலுவலகம் சென்றேன். முதலில் ஒரு சுவையான தேநீர் ஓட்டலிலிருந்து வரவழைத்துத் தந்தான். உயர்தர தேயிலை வளரும் பிரதேசம். பின்னர் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
மகேந்திரனை நண்பன் அறிந்திருந்தான். இரண்டு மாதத்திற்கும் மேலாக அங்கு தொழிற்சங்கம் என்ற போர்வையில் இயக்க வேலையில் ஈடுபட்டிருப்பதாக சந்திரன் இரகசியமாகச் சொன்னான்.
“நான் மகேந்திரனை ஒரு தடவை பார்த்துப் பேச வேண்டும். அவன் எங்க கிராமம் தான்’
அதற்கு மேலாக நண்பனிடம் எதுவும் கூறவில்லை. ‘காதல்’ விஷயமாக வந்தேன் என்று கூறின் நண்பன் கேலி செய்திருப் பான்.
சந்திரனே அழைத்துச் சென்று மகேந்திரனைப் பார்க்க ஏற்பாடு செய்வதாகக் கூறினான்.
பொழுது சாயும் வேளை, ஏற்றமும் இறக்கமுமாக வளைந்து வளைந்து செல்லும் தெருவில் அரசியல், இலக்கியம் பேசிய படியே ஓய்வாக உலாவுதல் போல நடந்து சென்றோம். பின்னர் புல்தரையில் இருந்து பொழுது மறையும் வரை அரட்டையடித் தோம்.
பொழுது கருகி விட்டது. தெருவிலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் ஒற்றையடிப்பாதையில் அழைத்துச் சென்றான். கால் களை விழிப்போடு வைத்து இறக்கத்தில் நடந்தேன். நண்பனின் வேகத்தில் என்னால் நடக்க முடியவில்லை.
ஒரு வீட்டு வாயிலில் வந்து சந்திரன் கதவைத் தட்டினான். சிறிய வீடு. உள்ளே வெளிச்சம் தெரிந்தது.
“தோழரே வாருங்கள். என்ன ஆச்சரியம் இந்தப் பக்கம்” வியப்போடு ஒரு தேயிலைத் தோட்டம் சார்ந்த இளைஞன் வரவேற்றான். சந்திரன் என்னை அவனுக்கு அறிமுகப்படுத்தி விபரம் சொன்னார்.
“நீங்க சொன்னால் போதும். ஏற்பாடு செய்யலாம். அவர் இங்கே இருக்கட்டும்”
“நண்பர் பார்த்துப் பேசியபின் எங்கள் வீட்டுக்கு வழி காட்டி அழைத்துவா”
“சரி தோழர்”
சந்திரன் போய்விட்டன். அந்த இளைஞன் வெளியே சென்று மகேந்திரனைத்தேடி அழைத்து வருவதாக, என் பெயர் விபரத்துடன் சென்றான்.
வீட்டிலிருந்த சில நூல்களை நான் புரட்டிக் கொண்டிருந்தேன். வந்த வேலையை விரைவில் முடித்துவிடலாம் என்ற நப்பாசை.
அரை மணி நேரம் கழிந்தது.
“அண்ணாவா வாங்க, பார்க்கக் கிடைத்தது பெரிய சந்தோஷம்”
கட்டம் போட்ட சாரத்துடனும், சேட்டுடனும் மகேந்திரன் உள்ளே நுழைந்தான். சிறிது மெலிந்திருந்தான். முகத்தில் எவ்வித சலனமுமில்லை .
“நான் உங்களுக்கு எவ்வளவோ நன்றி கூற வேண்டும். நீங்கள் முயல்வதாக முதலில் செய்தி வந்தது. முக்கியமான ஒருவர் சொன்னபடியாலேயே என்னை வெளியே விட்டான் அந்த மிருகம். ஏ.எஸ்.பி எக்கநாயக்கா என அங்கு பழகிய ஒருவன் இரகசியாக சொல்லியிருந்தான்.”
சிரித்துப் பேசியவனின் முகத்தில் கடுமை தொனித்தது.
“கொழும்பில் என்னை ஒரு தடவை பார்த்துவிட்டு வந்திருக்கலாமே”
“அப்படியும் நினைத்தேன். பின்னர் என்னோடு வெளி யேறிய தேயிலைத்தோட்டத் தோழரோடு இங்கு வந்துவிட்டேன். மன்னித்துக்கொள்ளுங்கள்”
கண்ட இடத்தில் மன்னிப்பு. என் மனம் குறுகுறுத்தது. மகேந்திரனை இத்தனை விரைவில் பார்த்துப் பேசி, அந்த வேலையை முடித்திருக்கலாம் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எப்படியும் புஷ்பத்தின் கண்ணீரைத் துடைத்து விடலாம் என்ற நம்பிக்கை. -கதவு சாத்தப்பட்டதும் என் குரலில் என்னையறியாமலேயே கண்டிப்புத் தொனித்தது.
“நீ வெளியே வந்ததும், என்னிடம் வராதபோதும் பின்னர் ஏன் யாழ்ப்பாணம் செல்லவில்லை?”
“நான் போக விரும்பவில்லை”
“என்னடா பேசுகிறாய் அந்தப் பிள்ளை புஷ்பம் நீ கைதான நாள் தொட்டு எத்தனை கஷ்டப்பட்டாள் தெரியுமா? அழுது கொண்டே இருந்தாள். என்னை உதவும்படி கண்ணீர் விட்டு அழுதாள். அந்த இரத்தக் கண்ணீருக்காகவே நானும் உன்னை வெளியே கொணர முயற்சி செய்தேன்” என்னை அறியாது என் பேச்சில் கடுகடுப்பு ஏற்பட்டது.
“அதற்காக நான் என்னண்ணே செய்யவேண்டும்” தயவான குரல்.
“நீ ஒரு தடவை ஊருக்கு வந்து ஆறுதல் சொல்லி விட்டா வது வந்திருக்கலாமே. மீண்டும் அவள் அழுது கொண்டிருக் கிறாள். ஊரிலே அவள் தலை காட்ட முடியாது தவிக்கிறாள்”
“புஷ்பத்தை நான் பார்க்க விரும்பவில்லை. அதனால் தான் அங்கு போகவில்லை” உதாரமான குரலில் கூறினான்.
மகேந்திரன் போட்ட குண்டு, எனக்கு மேலும் அதிர்ச்சியை மட்டுமல்ல, ஆத்திரத்தையும் ஊட்டியது.
“என்னடா சொல்லுறாய், அவள் உனக்கு என்ன தவறு செய்தாள்? உன்னைவிட்டு வேறு மாப்பிள்ளை தேடுறாள் என்று எவனாவது கதை விட்டானா? அதை நம்புகிறாயா”
“அப்படியெல்லாம் நான் சந்தேகப்படவில்லை. அவள் என்னை மறந்துவிட்டு வேறு மாப்பிளை பார்க்கட்டும். அவள் கல்யாணம் கட்டும் வரை நான் வரமாட்டேன்”
“இப்படியெல்லாம் பேச உனக்கெல்லாம் எப்படியடா துணிச்சல் வந்தது. காதல் பேசி பெண்களை ஏமாற்றி விட்டு விடுதலை இயக்கம் வேறு. இப்படியான ஏமாற்றுப் பேர்வழி களைக் கொண்டதா நீ சேர்ந்த இயக்கம்”
அவனது பதில்கள் என் ஆத்திரத்தைத் தணிக்கவில்லை. அதிகரிக்கவே செய்தன.
“இதற்குள் இயக்கத்தை ஏன் அண்ணே இழுக்கிறீர்கள். இது என் தனிப்பிரச்சினை”
“அப்படியானால் நீ ஒரு கோழை, ஏமாற்றுக்காரன், துரோகி” “எப்படியும் திட்டித்தீருங்கள். நான் கவலைப்பட மாட்டேன்”
“நீ ஒரு பேடி. ஆண்மையில்லாதவன்”
“சரியாகச் சொன்னீர்கள் அண்ணா, ஆண்மையில்லாதவன், நான் ஏற்கிறேன். இதோ பாருங்கள் அந்த மிருகம் செய்த வேலையை…”
அதன் மேல் அவன் வார்த்தைகள் ஓடவில்லை, கட்டியிருந்த கைலியை அவிழ்த்துக் கீழே விட்டான்.
– 1993, முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.
– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல.