கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 9,562 
 
 

நூறு ஆண்டுகளுக்கு முன் சென்னையைப் பற்றி வள்ளலார் ‘தருமமிகு சென்னை’ என்று சொன்னார். அப்போது அப்படி இருந்திருக்குமோ என்னவோ! இப்போது சென்னை என்றதும் பலரையும் பயமுறுத்தும் விஷயம் வியர்வை மழையில் நனைய வைக்கும் பதினோரு மாத வெயில் மட்டுமல்ல. ‘கூலான’ ஆசாமிகளுக்குக் கூட ‘குப்’பென வியர்க்கும் அளவுக்குக் கட்டணம் கேட்கும் ஆட்டோகாரர்களும் அவர்களின் அடாவடியும் தான்.

இந்தியாவின் பிற பெருநகரங்களில் இல்லாத அளவுக்கு சென்னையில் மட்டும் ஆட்டோக்கள் எந்த வரையறைக்கும் சட்டதிட்டத்துக்கும் கட்டுப்படாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன என்பது உண்மை. மீட்டர் போட்டு ஓட்டிய காலத்தில் பலரும் சூடு வைத்து ஓட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது அந்த சூடான மீட்டரையும் காணோம். பத்து வருடத்துக்கு முன்னமே ம்யூசியத்துக்குப் போய் விட்டது. பெட்ரோல் விலை, மோசமான சாலைகள், விலைவாசி, ட்ராஃபிக், ரிட்டர்ன் சவாரி கிடைக்காதது (‘டொக்கு ஏரியா சார்’), ஓனருக்கு கொடுக்க வேண்டிய பணம் (வாடகை வண்டியாக இருந்தால்), ‘டியூ’ (சொந்த வண்டியாக இருந்தால்), வண்டி ‘மெய்ன்டனென்ஸ்’, அது, இது என்று ஏதேதோ காரணங்களை சொல்லி தாங்கள் கேட்கும் கட்டணத்தை நியாயப் படுத்துகிறார்கள். ஆனால் புரியாத விஷயம் என்னவென்றால் இவ்வளவு பணத் தேவை இருப்பவர்கள், அவர்கள் கேட்ட கட்டணத்தை நீங்கள் க?!
??டுக்கத் தயாராக இல்லையென்றால் அலட்சியமாக ‘வண்டி வராது’ என்று எங்கேயோ பார்த்துக் கொண்டு சொல்வது தான். வண்டி ஓடாமல் எப்படித் தான் இவர்களுக்கு வாழ்க்கை வண்டி ஓடுகிறதோ?! பயணி யாராக இருந்தாலும் சரி – தள்ளாத வயதினர், கையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாய் பிள்ளைகளை சுமக்கும் பெண்கள், கீழ்நடுத்தர வர்கத்தினர் – யாருக்கும் கட்டண சலுகை கிடையாது.

இவர்கள் சொல்லும் காரணங்கள் இந்தியாவின் பிற நகரங்களுக்கும் பொருந்தும். ஆனால் ‘மீட்டர் போட்டு தான் ஓட்றாங்க’, ‘திருத்தப்பட்ட கட்டணத்துக்கு ஒரு அட்டவணை வெச்சிகிட்டு அதில் ஊள்ளபடி காசு வாங்கிக்கறாங்க’, ‘ஷார்ட் டிஸ்டன்ஸ் கூட வராங்க ப்ரதர்’, ‘பாக்கி சில்லறையெல்லாம் கொடுத்தாங்க பாஸ்’ என்றெல்லாம் பிற நகரங்களில் ஆட்டோ அனுபவமாக பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்களும் கேள்விப் பட்டிருப்பீர்கள். நிறைய பேருக்கு சொந்த அனுபவமும் இருந்திருக்கும். பின் நம்மூரில் மட்டும் ஏன் இப்படி?

சரி, அதெல்லாம் போகட்டும். என் கதைக்கு வருகிறேன்.

“ஓரே ஒரு இட்லியை சாப்ட்டு கெளம்பி ஓடறீங்களே? அப்படி என்ன தான் ஆஃபீசோ! என்ன தான் அவசரமோ?!” என்று என் மனைவி கத்திக் கொண்டிருந்தாள். அவளிடமிருந்தும் அவள் செய்த இட்லியிடமிருந்தும் தப்பித்து வெளியே வந்து மோட்டார் பைக்கை உதைத்தேன்.

ஒன்பதரை மணிக்கு அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங். இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது என்றாலும் முன்னமே அலுவலகம் போய் விட்டால் மீட்டிங்கிற்கான முன்னேற்பாடுகளை செய்யலாம். இந்த முறை கோட்டை விடக் கூடாது. டெல்லி எஜமானர்களை ‘இம்ப்ரெஸ்’ செய்து ப்ரொமோஷனை வாங்கி விட வேண்டும்.

சோதனையாக பைக் கிளம்பாமல் மக்கர் செய்தது. வாங்கி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாகி விட்டது. ஓரிரண்டு வருடங்களாகவே மரணப் படுக்கையில் தான் இருக்கிறது. அடிக்கடி பழுதாகி செலவு வைத்துக் கொண்டிக்கிறது. “ஒன்னியும் வேலைக்காவாது சார். இஸ்த்துனு கெடக்குது. பேசாம கெடைக்கிற வெலைக்கு வித்துரு” என்று மெக்கானிக் மணி சொல்லிக் கொண்டிருந்தான். உதைத்து உதைத்து கால் வலிக்க ஆரம்பித்தது. கிளம்புவேனா என்றது. வேறு வழியில்லை, ஆட்டோவில் தான் போய்த் தொலைய வேண்டும். வண்டியை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு வீட்டுக்கு எதிரிலேயே இருந்த ஆட்டோ ஸ்டாண்டை பீதியுடன் அணுகினேன்.

‘என் கண்மணிகள்… மலர்.. மதி..’ என்று முதுகில் எழுதியிருந்த ஒரு ஆட்டோவை துடைத்துக் கொண்டிருந்த அந்த ஆட்டோகாரரை முதலில் அணுகினேன்.

திரும்பிப் பார்த்து “வாங்க ஸார். எங்க ஸார் போகனும்?” என்று எனக்கு சேவை செய்வதற்கே பிறவி எடுத்தவர் போல் முதலில் படு பவ்யமாக கேட்டார் அந்த ஆட்டோகாரர்.

“கிண்டி” என்றேன்.

இன்டர்வியூவை ஆரம்பித்தார் ஆட்டோகாரர். அவருடைய ஆட்டோவில் ஏற எனக்கு தகுதி இருக்கிறதா என்பதை அவர் தானே தீர்மானிக்க வேண்டும்!

“கிண்டில எங்க ஸார்? ரயில்வே டேசனாண்டையா?”

“இல்ல, எஸ்டேட்” என்றேன்.

“ரொம்ப உள்ளார போவனுமா?”

“இல்ல மொதல்லயே…”.

மொதல்லயேன்னா? டேசன்லேந்து போ சொல்லோவா? ஒலிம்பியாலேந்து போ சொல்லோவா?

“டேசன்…ச்சீ..ஸ்டேஷன்லேந்து” என்றேன்.

“அப்படியா…?” என்று ஒரு கணம் யோசித்து விட்டு எட்டு கிலோமீட்டர் தூரம் போவதற்கு வண்டிச் சந்தமாக சொத்தில் பாதி கேட்டார் அந்த புண்ணியவான். கோபத்தை அடக்கிக் கொண்டு பேரம் பேசிப் பார்த்தேன். படியவில்லை.

“ரிட்டன் சவாரி கிடைக்காது ஸார். பெட்ரோல் வேற இன்னா வெல விக்குது” என்று நியாயப்படுத்தினார ஆட்டோக்காரர்.

“அதுக்காக உங்க ஒரு மாச பெட்ரோல் செலவை ஒரே சவாரில ஈடுகட்ட பாக்கறிங்களே” என்றேன் புன்னகைத்தபடி.

‘போடாங்க’ என்பது போல் என்னை முறைத்துப் பார்த்து “வராது. வேற ஆட்டோ பாத்துக்கோ” என்று ஒருமைக்குத் தாவினார்.

பரிதாபமாக மற்ற ஆட்டோகாரர்களைப் பார்த்தேன். “எல்லா வண்டியும் அதே ரேட்டு தான். என்னா ஏளுமல? கிண்டியாம்! போறியா?” என்றார் இந்த ஆட்டோகாரர்.

ஏழுமலை கிண்டி ரேஸில் குதிரை காலில் எக்கச்சக்கமான பணம் கட்டித் தோற்றிருப்பார் போலிருந்தது. கிண்டியைப் பற்றி எதுகை மோனையில் அசிங்கமாக கமென்ட் அடித்து “வேற வேலையில்ல?” என்றார். எல்லோரும் சிரித்தார்கள்.

இவர்களுக்கு தண்ணி காட்ட ஒரு அன்னா ஹசாரேவோ, அர்விந்த் கேஜ்ரிவாலோ வரக் கடவது என்று மனதுக்குள் சாபமிட்டு இடத்தை விட்டு நகர்ந்தேன்.

“..தா சாவுகிராக்கி. மூஞ்சியப் பாரு! வன்ட்டானுங்க காலங்காத்தால நாரிப் பாடைங்க” என்று அந்த ஆட்டோக்காரன் தூற்றியது என் முதுகுக்குப் பின்னால் கேட்டது.

சுரீரென்று கோபம் வந்தது. ஆனால் அவர்களுடன் சரிக்கு சமமாக மல்லுக் கட்ட முடியாதே. என்ன செய்யலாம்? இவ்வளவு அவமானப் பட்டதற்குப் பிறகு அவன் கேட்ட கட்டணத்தைக் கொடுத்து ஆட்டோவில் போகக் கூடாது. அதிகம் செலவானாலும் பரவாயில்லை, இவர்கள் கண்ணெதிரிலேயே கால் டாக்ஸியில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு போக வேண்டும் என்று வீண் ஜம்பத்துடன் செல் போனை எடுத்து அடுத்த தெருவில் இருந்த கால் டாக்ஸி நிறுவனத்தின் நம்பரைப் போட்டேன்.

பத்தடி தள்ளி இருந்த அந்த ஆட்டோகாரர்களுக்குக் கேட்கும் படியாக வேண்டுமென்றே சத்தமாக “ஹலோ, இங்க தான் உங்க ஆபிசுக்கு பக்கத்து தெருல இருந்து தான் பேசறேன். கிண்டி போகனும், உடனே கால் டாக்ஸி அனுப்ப முடியுமா?” என்றேன்.

“ஒரு வண்டி கூட இல்ல சார். ஒரு மணி நேரம் ஆகும்” என்று மறுமுனையில் பேசியவர் லைனைத் துண்டித்தார்.

அந்த ஆட்டோகாரர்கள் என்னையே கவனித்துக் கொண்டிருப்பதாக நானாக நினைத்துக் கொண்டு “என்ன? வண்டி உங்க ஆபிஸ் வாசல்ல ரெடியா இருக்குதா? டிரைவர் டீ சாப்பிட போய்ருக்காரா? வேண்டாம்…வேண்டாம். நானே அங்க வந்துர்றேன்” என்று எதிர்முனையில் இல்லாதவரிடம் சத்தமாக பேசியபடி நடக்கத் தொடங்கினேன். என்ன செய்வது?

வேறு வழியில்லை, பேருந்தில் தான் போக வேண்டும். தெரு முனை திரும்பியதும் ஓட்டமும் நடையுமாக பேருந்து நிறுத்தத்தை நோக்கிப் போனேன்.

அங்கு ஏற்கனவே ஒரு இருபது பேர் காத்திருந்தனர். பத்து நிமிடத்துக்குப் பிறகு அடுத்தடுத்து வந்த இரு பேருந்துகளும் நாட்டின் ஜனத்தொகையை பறை சாற்றியபடி வந்தன. ஷேர் ஆட்டோ மாதிரி டிரைவர் சீட்டில் கூட அவருடன் ஒரு பயணி உட்கார்ந்திருந்தது போல் முதலில் தெரிந்து பின்பு பிரமை என்று தெளிந்தேன். எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் படிக்கட்டில் ஒரு கால் கூட வைக்க முடியவில்லை.

என்னுடைய அனுபவத்தில் ஒன்றைப் பார்த்திருக்கிறேன். ஸ்டாண்ட் ஆட்டோகாரர்கள் சொத்தில் பாதி கேட்பார்கள் என்றால் ‘ரன்னிங்’ ஆட்டோகாரர்கள் கொஞ்சம் இரக்க குணமுடையவர்கள். நம்முடைய மாச சம்பளத்தில் தான் பாதி கேட்பார்கள்! அதனால் ‘ரன்னிங்’ ஆட்டோ ஏதாவது காலியாக வருகிறதா என்று பார்த்தால் ஒன்றையும் காணோம்.

கையை பிசைந்து கொண்டு நின்றிருந்த போது என்னை ஒரு ஆட்டோ சவாரியுடன் கடந்து போனது. அதிலிருந்து நான் ‘ரிஜெக்ட்’ செய்த (என்னை ரிஜெக்ட் செய்த?) ஆட்டோகாரன் தலையை வெளியே நீட்டி பான் பராகோ புகையிலையோ ஏதோ ஒரு கண்றாவியை ‘புளிச்’சென்று துப்பிவிட்டு என்னைப் பார்த்து சத்தமாக “இன்னா? கால் டாக்ஸில போவல? அடுத்த பஸ்சுக்கு இன்னும் அர அவுர் ஆவும். …த்தா இங்கியே நில்லு” என்று நக்கலாக சொல்லி விட்டுப் போனான்.

“அவன் கெடக்கறான் ஸார். அரை மணி நேரமெல்லாம் ஆகாது. ஜஸ்ட் ட்வென்டி மினிட்ஸ்-ல அடுத்த பஸ் வந்துடும் பாருங்கோ!” என்று ஆறுதல்(?) கூறினார் பக்கத்தில் நின்ற பெரியவர். நான் அவரை முறைத்தேன்.

இன்னும் இருபது நிமிஷமா? மணி இப்பவே எட்டு நாற்பது. ஒன்பது மணிக்கு பஸ் வந்து, அதில் ஏற முடிந்து, டிராஃபிக்கும் கம்மியாக இருந்தால் கூட ஆபிஸ் போய் சேருவதற்கு ஒன்பதே முக்கால் ஆகி விடும். ஒன்பதரைக்கு மீட்டிங். ‘ஓடிப் போனால் ஒன்பதரைக்குள் போய்ச் சேர முடியுமா?’ என்றெல்லாம் அபத்தமாக யோசித்தேன்.

‘என்ன வாழ்க்கை இது? எல்லோரையும் சுட்டு பொசுக்க வேண்டும்’ என்று அர்த்தமில்லாத கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்த போது ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி’ என்று பெரும் சத்தத்துடன் என் மொபைல் அலறியது. என் மகன் ரிங் டோனை மாற்றித் தொலைத்திருக்கிறான் போலிருக்கிறது.

ஃபோனை எடுத்து “ஹலோ” என்றேன்.

“ஸார்! எங்கே இருக்கேள்?” என்று காது கிழியும்படி கத்தினார் அஸிஸ்டன்ட் மேனேஜர் ராமானுஜம். “டெல்லிகாரா கரெக்டா வந்துடுவா. முதல் ப்ரெசன்டேஷனே உங்களுது தான். ஞாபகமிருக்கோன்னோ? மேடம் வேற டென்ஷனா இருக்கா. உங்கள மூணு தரம் கேட்டுட்டா”. மூச்சு விடாமல் பேசினார் ராமானுஜம்.

“வண்டி ரிப்பேர் ஆயிடுச்சு ராமானுஜம். ஆட்டோ வேற கிடைக்கல. எப்படியாவது வந்துர்றேன். மேடத்த கொஞ்சம் சமாளிங்க ப்ளீஸ். வந்துர்றேன், வந்துர்றேன்” என்று லைனைத் துண்டித்தேன்.

கோபம், இயலாமை, தன்னிரக்கம் என்று பல வித உணர்வுகள் மாறி மாறி என்னை ஆட்கொண்டன. நேரம் ஆக ஆக அலுவலக காட்சிகள் கண் முன் நிழலாட ஆரம்பித்து என்னை பயமுறுத்தியது. இந்த முறையும் பதவி உயர்வு ‘கோவிந்தா’ தானா?

ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தவனை பக்கத்திலேயே ஒலித்த கார் ஹாரன் நிஜ உலகுக்கு கொண்டு வந்தது.

“ஸார்! பைக் என்னாச்சு?” என்று அந்த காரிலிருந்தபடியே கேட்டார் பக்கத்து ஃபிளாட்டில் குடியிருக்கும் வாசுதேவன் நாயர்.

“ஓஃபிஸ் தானே போறது? ஞான் அந்த வழியா தான் போறேன். ட்ராப் பண்ணட்டா?” என்று அவர் கேட்டு முடிப்பதற்குள் பாய்ந்து காரில் ஏறி உட்கார்ந்தேன்.

ஃப்ளாட்ஸ் அசோசியேஷன் மீட்டிங்குகளில் அடிக்கடி நானும் வாசுதேவனும் முட்டிக் கொள்வோம். நான் ‘தணணீர் வாங்கலாம்’ என்றால் அவர் “வேணாம், போர் குழாயை ஆழப்படுத்தலாம்’ என்பார். ‘நைட் செக்யூரிட்டிக்கு ஆள் போடலாம்’ என்பேன். ‘வேண்டாம், அசோசியேஷன் ஆள்காரர்களே மாறி மாறி ஷிஃப்டில் டியூட்டி பார்த்தால் மதி’ என்பார் வாசுதேவன். சமயத்தில் வாக்குவாதம் முற்றிப் போய் ‘உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா’ என்கிற அளவுக்குப் போய் விடும்.

ஆனால் இன்று இருந்த நிலைமையில் நான் எதையும் பொருட்படுத்தவில்லை. சொல்லப் போனால் அது என் கார் போலவும் அவர் என் டிரைவர் போலவும் “சீக்கிரம் ஓட்டுப்பா” என்று என்னை அறியாமல் சொல்லி விட்டேன்.

என்னை ஒரு மாதிரியாகப் பார்த்த வாசுதேவன் “கிண்டி தானே?” என்றார். ஆம் என்பது போல் தலையாட்டினேன். நிமிடத்துக்கு ஒரு முறை மணி பார்த்தேன்.

“பின்னே? ஜோலியெல்லாம் எப்படி போறது? உங்க யூனிட் ‘சிக்’கா இருந்ததே? இப்போ எந்தா ஸ்டேட்டஸ்?” என்று அவர் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் ஊர்ந்து சென்ற டிராஃபிக்கையும் முன்னால் வழி விடாமல் போன ஆட்டோவையும் இடது பக்கம் ஓவர்டேக் செய்யப் பார்த்த டூவீலர் காரனையும் வாய் ஓயாமல் திட்டிக் கொண்டே இருந்தேன்.

“ரிலாக்ஸ்! இந்த சிக்னல் தாண்டியாச்சுன்னா பின்னே ஃப்ரீ ஆயிடும்” என்றார் வாசு. ஆனால் அந்த சிக்னலை கடந்ததும் சாலை அகலமாக இருந்தும் கூட எல்லா வண்டிகளும் மெதுவாகவே சென்றன. “போய்த் தொலையறானுங்களா பாருங்க” என்றேன்.

“அங்க பாருங்க! ஏதோ ஆக்ஸிடென்ட் போலிருக்கு” என்றார் வாசுதேவன்.

அப்போது தான் கவனித்தேன். ஐம்பதடி தொலைவில் சாலையோரத்தில் ஒரு ஆட்டோ பக்கமாக கவிழ்ந்து கிடந்தது. அருகில் ஒரு மணல் லாரி நடைபாதையில் ஒரு சக்கரம் ஏறிய நிலையில் நின்று கொண்டிருந்தது. நடைபாதையில் ஒருவன் தலையை பிடித்த படி உட்கார்ந்திருந்தான்.

சரியாக அந்த இடத்தை நெருங்கியதும் டிராஃபிக் சுத்தமாக நின்றதால் மீண்டும் கவிழ்ந்து கிடந்த ஆட்டோவையும் தலையைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தவனையும் பார்த்தேன். அவன் சட்டையெல்லாம் அங்கங்கே ரத்தக் கறை. ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தவனின் முகத்தைப் பார்த்ததும் ‘அடப்பாவி இவனா?’ என்று நினைத்தேன்.

காலையில் என்னை ஆபாசமாகத் திட்டி பின்னர் நக்கலடித்த அதே ஆட்டோகாரன் தான் அங்கே அடிபட்டுக் கிடந்தான். அத்தனை போக்குவரத்து இருந்தும் ஒருவர் கூட அவனருகில் இல்லை.

‘நல்லா வேணும். என்னையாடா சாவு கிராக்கின்னு சொன்ன?’ என்று ஒரு கணம் என் மனக் குரங்கு குதூகலமாக குத்தாட்டம் போட்டது. பின்னர் அதே குரங்கு ‘சீ! என்ன மனிதன் நீ?’ உன் வயது தான் இருக்கும் அவனுக்கும். உன்னை போல பிள்ளைகுட்டிக்காரனாகத் தான் இருப்பான். போய் அவனுக்கு உதவ முடியுமா பார்’ என்று கட்டளையிட்டது. எனக்கு அவன் ஆட்டோவில் எழுதியிருந்த ‘கண்மணிகள் மலர் மதி’ நினைவுக்கு வந்தார்கள்.

மனசாட்சியின் கட்டளையை மதித்து மனிதாபிமானம் மேலோங்க, அவசரமாக ஆபிஸ் போக வேண்டும் என்பதைக் கூட மறந்து, “மிஸ்டர் வாசுதேவன், வண்டியை கொஞ்சம் ஒரமா நிறுத்த முடியுமா?” என்றேன்.

“என்னாச்சு?” என்று கேட்ட வாசுதேவனிடம் “இல்ல, அந்த ஆக்ஸிடென்ட்….உதவி…” என்று இழுத்தேன்.

“அட விடுங்க ஸார். அவனுக்கு யாராவது சகாயம் பண்ணும். நீங்க சீக்ரம் போகனும்னு பறஞ்சதில்லே?” என்றார் வாசுதேவன்.

சொல்லி வைத்தது போல் ராமானுஜம் மீண்டும் ‘கொலவெறி’யுடன் அழைத்தார். நான் அதைப் புறக்கணித்து “இல்லை வாசுதேவன்! பாவம் அந்த ஆட்டோகாரன். எனக்கு தெரிஞ்சவன் தான். அவனுக்கு ஏதாவது உதவ முடியுமான்னு பாத்துட்டு வந்துடறேன். உங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே?” என்றேன்.

அவர் தலையை ஒரு மாதிரி ஆட்டி தோள்களைக் குலுக்கி “ஓகே” என்றார். அதற்குள் டிராஃபிக் தளர்ந்து விட காரை சற்றுத் தள்ளி சென்று ஓரம் கட்டி நிறுத்தினார்.

நான் காரை விட்டு இறங்கி வேகமாக அந்த ஆட்டோகாரனை நோக்கி ஓடினேன். அதற்குள் ஒரு ஏழெட்டு பேர் அவனை சுற்றி கூடி விட்டார்கள். அவர்களை விலக்கி அந்த ஆட்டோகாரனை அணுகி “என்னாச்சு?” என்றேன்.

“லாரி இட்ச்சி ஆட்டோ கவுந்திச்சி. பட் ஆனா லாரிகாரன் ஸ்பாட்லேந்து எஸ்கேப் ஆய்ட்டான்” என்றான் கூட்டத்திலிருந்த ஒரு ஆள்.

“அய்யோ! என்னப்பா ரத்தம் எல்லாம் வருது! நீ எழுந்து வாப்பா ஆஸ்பத்திரிக்குப் போகலாம்” என்றேன் ஆட்டோகாரனைப் பார்த்து..

என்னை நிமிர்ந்து பார்த்த அந்த ஆட்டோகாரன் “நீயா?” என்றான்.

“தெரியுதா?” என்று புன்னகைத்து “சரி, மெதுவா எழுந்திரு” என்றேன்.

“யோவ் போய்யா அந்தாண்ட. பெரிசா வ்ன்ட்டாரு உதவி பண்றதுக்கு. காலங்காத்தால முதல் போணியே தகராறுல ஆரம்பிச்சியில்ல? இப்ப பாத்தியா இன்னா நடந்திச்சுன்னு?” என்றான்.

சுரீரென்று வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு “ஹலோ, என்ன பேசறே?” என்றேன்.

அவன் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் “உன்னால தான்யா இதெல்லாம். பொறம்போக்கு” என்றான் சம்பந்தமில்லாமல்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. “என்னய்யா இது? மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடறியே?” என்றேன்.

அவனோ “யோவ், யார பாத்து மொட்டன்ற? பேஜாராயிடுவ, எடத்த காலி பண்ணுடா கசுமாலம்” என்று கத்தினான். மேலும் காது கூசும்படியான ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தான். என் குடும்பத்தினர் அனைவரையும் சந்திக்கு இழுத்தான்.

அதற்குள் மேலும் கூட்டம் கூடி விட்டது. ஓரிருவர் அவனை சமாதானம் செய்தார்கள்! எல்லோரும் என்னையே பார்க்க எனக்கு அவமானமாகி விட்டது. ‘ச்சீ, காலையில் நம்மிடம் அசிங்கமா நடந்து கொண்டான். இவனுக்கு போய் பாவம் பார்த்து உதவி பண்ண போனோமே. மறுபடியும் அசிங்கப் படுத்திட்டானே’ என்று நினைத்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்தேன்.

‘இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் திருத்த முடியாது. ஆனால் அதுக்காக என்னை அவமானப் படுத்தியவனை சும்மா விட்டு விடுவதா? அவன் லெவலுக்கு இறங்கி நம்மால் சண்டை போட முடியாது. கையை நீட்டி நம்மை அடித்து விட்டான் என்றால் இன்னும் அவமானம். ஆனாலும் ஏதாவது பண்ண வேண்டும். என்னால் என்ன பண்ண முடியும்’ என்று பலவாறு யோசித்துக் கொண்டே காரை நோக்கி நடந்த போது சாலையை கடந்து வேகமாக வந்த ஒரு டிராஃபிக் போலிஸ்காரர் “இன்னாவாம்?” என்றார்.

கண நேரத்தில் அந்த யோசனை தோன்றியது. “ஆட்டோ மேல லாரி மோதிடுச்சு. நல்லா தண்ணி அடிச்சுட்டு ஓட்டியிருக்கான்” என்றேன்.

“இந்த லாரிகாரனுங்க அக்கிரமம் தாங்கல” என்றபடியே விபத்து நடந்த இடத்தை நோக்கி நடந்த போலிஸ்காரரை நிறுத்தி “ஸார், தண்ணி அடிச்சுட்டு தாறுமாறா ஓட்டி ஆக்சிடென்ட் பண்ணினது ஆட்டோகாரன். ஒரே போதை. தள்ளாடுறான்” என்று சொன்னேன்.

“மவனே! காலைலியேவா? என்னா பண்றேன் பாரு அவனை? வி.ஐ.பி போற நேரம். ட்ராஃபிக் ஜாம் பண்ணிட்டான் பாரு, டேய்!” என்று கத்திக் கொண்டே ஸ்பாட்டை நோக்கி விரைந்தார் அவர்.

‘அப்பாடா! இந்த போலீஸ்காரர் போகிற வேகத்தைப் பார்த்தால் அந்த ஆட்டோகாரனை சுலபத்தில் விடமாட்டார்’ என்று தோன்றியது. ‘அவனிடம் அவமானப்பட்டதற்கு ஏதோ நம்மால் இதையாவது செய்ய முடிந்ததே’ என்று ஒரு அல்ப திருப்தியுடன் சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்தேன்.

போலிஸ்காரர் ஆட்டோகாரனிடம் “என்னடா பொறம்போக்கு? காலையிலியே தண்ணி போட்டுட்டு வண்டி ஓட்றியா சோமாறி?” என்று எடுத்த உடனேயே அதிரடியாய் ஆரம்பித்தார். ஆஹா! எனக்கு காதில் தேனை ஊற்றியது போல் இருந்தது.

“என்னா சார் பேசறே?” என்றான் ஆட்டோகாரன்.

“டேய்! எல்லாம் தெரியும்டா…” என்று மேலும் சகட்டு மேனிக்கு அவனை கெட்ட வார்த்தைகளால் தொடர்ந்து திட்டினார். என் காதில் தேன் ஓவர்ஃப்ளோ ஆனது.

நாம் சொன்னது பொய் என்று போலிஸ்காரருக்குக் கொஞ்ச நேரத்தில் தெரிந்து விடும். ஆனால் அதற்குள் ஆட்டோகாரனை வறுத்தெடுத்து விடுவார். அது போதும் என்று நினைத்துக் கொண்டே காரை நோக்கி விரைந்தேன்.

“எந்தா நீங்க மட்டும்..?” என்று இழுத்த வாசுதேவனிடம் “ஸாரி ஸார். அவன் வேற யாரோ. வாங்க நாம போகலாம். நேரமாயிடுச்சு” என்றபடி காரில் ஏறி உட்கார்ந்தேன்.

பி.கு. நான் செய்தது சரியா தவறா என்பது எனக்குத் தெரியாது. உங்களுக்கும் ஆளாளுக்கு ஒரு கருத்து இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். கூசாமல் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களையும் அதிகாரிகளையும் சட்டையைப் பிடித்து ‘ஏன்டா மாசம் பொறந்தா சம்பளம் வாங்கல?’ என்று கேட்க வேண்டும் என்றோ, ‘சவுதி அரேபியால பண்ற மாதிரி சவுக்கால அடிக்கனுங்க’ என்றோ நம்மில் பலருக்கும் தோன்றும். ஆனால் அப்படி எதுவும் செய்ய மாட்டோம். அவர்கள் கேட்டதை கொடுத்து விட்டு வேலையை முடித்துக் கொள்வோம். ஒரு சிலர் மட்டும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் கொடுத்து இவர்களை கம்பி எண்ண வைப்பார்கள்.

அதே போல நம்மூர் ஆட்டோகாரர்கள் எவ்வளவு கேட்டாலும் ‘என்ன அநியாயமா கேக்கறானுங்க. நல்லா இருப்பானுங்களா’ என்று மனதுக்குள் சபித்துக் கொண்டே அவர்கள் கேட்ட பணத்தை தண்டம் அழுவோம். ஆனால் கூப்பிட்ட இடத்துக்கு வரவில்லையென்றும் அதிகமாகப் பணம் கேட்கிறார்களென்றும் யாரிடமும் புகார் கொடுக்க மாட்டோம். கொடுத்தும் பெரிதாக எந்தப் பலனும் இருப்பதில்லை.

ஆனால் இந்த இரண்டு மகானுபாவர்களிடையே ஒரு வித்தியாசம் இருக்கிறது. லஞ்ச சிகாமணிகள் ‘சம்திங்’ கிடைக்கவில்லையென்றால் அந்த வேலையை செய்ய மாட்டார்கள் அல்லது தாமதமாக செய்வார்கள். அதே போல் ஆட்டோ கண்மணிகள் கேட்கும் தொகையை கொடுக்க விட்டால் ஆட்டோ வராது. ஆனால் அதோடு போனால் பரவாயில்லை. கேட்டது கிடைக்கவில்லை என்ற கோபத்தில் சில ஆட்டோகாரர்கள் மிகவும் தரக் குறைவாக நடக்கவும் மரியாதைக் குறைவாகப் பேசவும் செய்கிறார்கள்.

என்னுடைய கேள்வி இது தான். அப்படி நடந்து கொள்ளவோ பேசவோ அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அந்த உரிமையை யார் அவர்களுக்குத் தந்தார்கள்? அவர்களின் அந்த நடத்தையை நாம் எப்படி எதிர் கொள்வது? எனக்கு இன்று திடீரென்று தோன்றிய வழி இது தான். என்னை அவமானப் படுத்தியவனை பதிலுக்கு வேறோரு வழியில் நான் அவமானப் படுத்தி விட்டேன் என்கிற ஒரு அல்ப திருப்தி. அவ்வளவு தான். இனி ஒரு முறை எவ்வளவு அவசரமாக இருந்தாலும் ஆட்டோவில் பயணிப்பதில்லை என்கிற முடிவும் எடுத்திருக்கிறேன் என்பது உபரித் தகவல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *