ஆட்டுக் குட்டிதான்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 5, 2023
பார்வையிட்டோர்: 1,857 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதைமூலம்: ஜேம்ஸ் ஹானலி, இங்கிலாந்து

செக்கச் செவேலென்றிருக்கும் அந்த பஸ், ஏக இரைச்சலுடன் அந்த வளைவைத் திரும்பியது. சூழ்நிலை தாங்கிய அமைதியான வண்ணக் கலவைகளுக்குச் சவால் கொடுப்பதுமாதிரி அந்தச் சிகப்பு கண்களை உறுத்தியது. வண்டியில் இருந்தவர்களுடைய குஷிக்குக் குறைவில்லை. சென்ற இரண்டு மணி நேரமாகத் தொண்டை கம்மும்படி வழி நெடுகத் தங்களது இசைத் திறமையைப் ‘பரத்திக்’ கொண்டு வந்தார்கள். வண்டியில் உள்ளவர்கள் எல்லாம் அதை ‘ஏகமேனியாக’ வாடகைக்கு அமர்த்தி இன்று முழுவதும் ‘ஊர்சுற்றிப் பார்த்து’ வருகின்றனர்.

திடீரென்று வண்டி கிரீச்சிட்டுக்கொண்டு நின்றது. பாட்டு ‘கப்’ என்று ஓய்ந்தது. ஒரே பீதி, குழப்பம், என்ன நடந்தது? பின்பக்கத்துக் கடைசி ஸீட்டில் இரண்டு சுரங்கத் தொழிலாளிகளுக்கு இடையில், இப்படியும் அப்படியும் திரும்ப முடியாமல் உட்கார்ந்திருந்த பூதாகரமான ஸ்திரி கிரீச்சிட்டுக் கத்தினாள். டிரைவர் பின்புறமாகத் திரும்பி ‘அது ஒரு ஆட்டுக்குட்டிதான்’ என்று அறிவிக்க எல்லோரும் ஏகோபித்துச் சிரித்தார்கள்.

‘ஐயோ, ஆஹா’ என்ற குரல்கள் கிளம்பின. முகம் சிவந்துபோன டிரைவர் ஸீட்டைவிட்டு இறங்கித் தரையில் குதித்தான். அந்தச் சிகப்புக் கோரத்தில் உட்கார்ந்திருந்தவர்கள், ஆட்டு மந்தைகள் மாதிரி அவனைத் தொடர்ந்து கீழே இறங்கினார்கள். ரோடில் அங்கும் இங்குமாக நடமாடி என்ன செய்வது என்று புரியாமல் வழியை அடைத்தார்கள். எல்லோரும் பேசினார்கள். அவர்களுடைய கூச்சல் ஆட்டுக்குட்டியின் ஹீனமான கதறலை அமுக்கிவிட்டது. அதனுடைய பின்னங்கால் வண்டியின் பின் சக்கரத்தில் அகப்பட்டு அசைந்து நொறுங்கிவிட்டது. வண்டியின்கீழ் சிறைப்பட்டு நிராதரவாகப் பரிதாபகரமாகக் கிடந்தது. அந்த ஆட்டுக்குட்டியின் கண்கள், அகன்று விரியத் திறந்தபடி, மனம் சற்றும் இளகாமல் அர்த்தம் புரிந்துகொள்ளாமல் குனிந்து மாடுமாதிரி விழிக்கும் டிரைவரின் கண்களைக் கவர்ந்தது. இது இப்படியிருக்க அங்கு கூடிய மனிதர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். சூரியவொளி மனிதர்களின் வெர்ஜூ ஸூட்கள் மேலும், பெண்களின் ட்வீட்,சீட்டி உடைகள் மேலும் பளபளத்தது. அதில் இரண்டு பெண்டுகள் மட்டும் எல்லோரையும் கடித்துத் தின்றுவிடுவது போன்ற பார்வை கொண்ட முரட்டாத்மாக்களாக இருந்தார்கள். ஏதோ தப்பு நடந்துவிட்டது என்பது அவர்கள் மூளையில் உதயமாக ஆரம்பித்தது. எல்லோரும் ஒரே கும்பலாக வண்டியின் பின்புறம் திரண்டு நின்றார்கள். எல்லோரும் அந்த ஆட்டுக்குட்டியைப் பார்த்தார்கள். கால் நொறுங்கிக் கிடக்கும் மிருகமாக அதை அவர்கள் பாவிக்கவில்லை. எங்கிருந்தோ திடீரென்று தங்கள் பாட்டுக்குக் குந்தகமாக குறுக்கே வந்து விழுந்த விவகாரமாகக் கருதினார்கள், அவர்கள். டிரைவர் அங்கிருக்கும் மனிதர்கள் யாவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

’11-10. ஏ.எம். எல்லாம் நான் கான்வேக்கு வண்டியைக் கொண்டு போயிருக்கவேண்டும்’ என்றான். பிறகு சிரித்தான்.வேறு என்ன செய்ய, சிரித்துத்தான் தொலைக்கவேண்டும். ‘உம். ஏதாவது செய்து தானே ஆகணும்’ என்று சொல்லிக் கொண்டே வண்டியில் ஏறினான். ‘விலகிக் கொள்ளுங்கள், ரிவர்ஸ் எடுக்கப் போகிறேன்’ என எச்சரித்தான்.

கூட்டம் விலகி, புல் முளைத்த ஓரத்திற்கு ஓடிச் சென்று நின்றது. வண்டி ‘ஓட’ ஆரம்பித்து, பின் பக்கமாக நகர்ந்தது. இதைக்கண்ட ஒரு ஸ்திரீ ‘ஐயோ பாவம்’ என்றாள். ஜனக்கூட்டம் ‘ஹா, ஹோ’ என இரைந்தது. வண்டி மெதுவாக விலகியது. ஆட்டுக்குட்டி உடனே மறுபக்கமாகப் பொத்தென்று விழுந்தது. அது கதறியது. ஜனக்கும்பலைப் பார்த்தது. ‘ஐயோடியம்மா பாக்கப் பய மாஇருக்கே’ என்றாள் ஒரு பெண். ரத்தம் புழுதியை நனைப்பதைப் பார்த்து விட்டாள் அவள். ‘சனியன், ஒரே ரத்தக் களறி, ஏதாவது செய்யணும்’ என்றான் டிரைவர்.

மோட்டார் சுரங்கத் தொழிலாளிகள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘ஏதாவது செய்து தான் ஆகணும். ஆமாம், அதுதானே சனியன்’ என்கிற மாதிரி இருந்தது அவர்கள் முகம். ஐந்து நிமிஷத்திற்கு முன்வரை எல்லோரும்-குடிக்கக்கூடக் கற்றுக கொள்ளாமல் கூடவரும் அந்த சாக்குருவி தவிர மற்றெல்லோரும் – குஷியாகப் பாடிக்கொண்டு 11-10. ஏ.எம். ரெட் லயன் மது ஹோட்டலுக்குப் போய் விடலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோருடைய மன நிலையும் ஒரே ஸ்தாயியில் நின்றது. ‘இது என்னடா தொந்திரவாக இருக்கிறது’ என்று நினைத்தார்கள். எல்லோரும் ஆட்டுக்குட்டியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று யாவருக்கும் ஒரு எண்ணம் தோன்றியது.

‘வயலில் மெதுவாக அதைத் தூக்கிக்கிடத்தி வைத்து விட்டு, நாம் போவோம்.’

‘ஆமாம், வயலில் அதை எடுத்து வைத்து விட்டு வாருங்கள், போவோம்’ என்றன பல குரல்கள்,

‘அதைக் கொன்று விட்டால் நல்லதல்லவா?’ என்றான் டிரைவர்.

‘அப்போ நீயே கொல்லு, நீதானே டிரைவர்’ என்றாள் தடித்த ஸ்திரீ.

டிரைவர் பின் வாங்கினான்.

‘இங்கே நான் ஒருவன் மட்டுமா ஆண்பிள்ளை, மேலும் ஆட்டுக்குட்டியைக் கொல்லுவது எனக்குப் பிடிக்கவில்லை, இருந்தாலும் சித்தாட்டுக் கறிக் குழம்பு பிடிக்காது என்று சொல்லலே’ என்றான் டிரைவர். எல்லோரும் இந்த ‘ஆசியத்தை’ கேட்டுச் சிரித்தார்கள். ‘நீங்க யாராவது ஒருவர் கொல்லப்படாதா?’ என்று மற்ற ஆண்களைப் பார்த்துக் கேட்டான் அந்த டிரைவர். ஒருவரும் அசையவில்லை.

‘நாம்தான் போவோமே, அதுதான் எப்படியும் செத்துப் போகுமே’ என்றான் ஒருவன்.

இப்படிச் சொல்லியும் ஒருவர்கூட நகரவில்லை. பலத்தை இழந்த அந்த மிருகம் அவர்களையும் தன்னைப் போலப் பலமிழக்கச் செய்து விட்டது போலத் தோன்றியது. அகன்று திறந்து பார்ப்பதற்குப் பரிதாபகரமாக இருந்த அந்தக் கண்கள், தன்னைச் சூழ வட்டமாக நிற்கும் சிவந்த முகங்களை நோக்கி, கும்பலைப் பார்த்து மௌனமாகக் கெஞ்சியது. அவர்களது ‘வெர்ஜு’ ‘ட்வீட்’ உடை களில் நகரத்தின் முடைநாற்றம் வீசியது போலும், அது மெதுவாகக் கண்களை மூடிக்கொண்டது.

‘செத்துப் போச்சு, வாருங்க போவோம்’ என்றான் ஒருவன.

மனப்பாரம் இறங்கியதுபோல கும்பல் பஸ் கதவை நோக்கிச் சென்றது. ஆனால் மறுபடியும் எல்லோரும் கலக்கமுறும் வண்ணம் ஆட்டுக்குட்டி கண்களைத் திறந்து கொண்டது. ‘சீ, என்னடா சனியன். இங்கே ஏதும் கல்லு கிடக்கிறதா பாருங்கள்’ என்று சீறினான் டிரைவர்.

‘வழிய விடுங்கோ – அங்கே’ எனக் கத்தினாள் ஒரு ஸ்திரீ. கும்பல் வேகமாக ஓடி புல்வரம்பு அருகில் நின்றது. ஒரு சின்ன ‘ஸ்போர்ட்ஸ்’ கார் அங்கே வந்தது. அதிலிருந்து ஒரு பெண் இறங்கினாள். ஆட்டுக்குட்டியை ஒரு கணம் பார்த்தாள். பிறகு ஆண்களைப்பார்த்தாள். ‘மோட்டார் ஏறிவிட்டதோ?’ என்று கேட்டாள்.

‘கண்ணும் தெரியலியா?’

‘அப்படித்தான்,’

‘பின்னையேன் அதைத் துடிக்க வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? நிராதரவாகக் கிடக்கும் அந்தச் சின்னக்குட்டியைச் சுற்றி ஆண்களைப்போல் ஏன் நிற்கிறீர்கள்? ‘

அவள் பஸ்ஸின் பின்புறம் சென்றாள். சில பெண்கள் அவளைத் தொடர்ந்தார்கள். புதிதாக வந்தவளை ஆண்கள் ‘உர்’ என்று பார்த்தார்கள். ‘இந்தக்காலத்து நாஸூக்கான, முண்டைகளில் ஒருத்தி’ என்றான் ஒருவன்.

‘ரொம்ப அனியாயமாக இருக்கே, ஐயோ பாவம்’ என்று ஒரு ஸ்திரி தன் அருகில் நின்ற ஒரு பெண்ணைப் பார்த்துச் சொன்னாள். அந்தப் பெண் திடீரென்று காட்டப்பட்ட அந்த அனுதாபத்தைக் கண்டு மலைத்துவிட்டாள். அவள் ரஸ்தாவைக் கடந்து ஓரத்திலிருந்த வேலியில் ஏறினாள். இந்தச் செயல் ஆண்களின் கவனத்தை மட்டும் வெகுவாகக் கவர்ந்தது. வயலுக்குள் சென்று ஒரு கல்லைப் பெயர்த்தாள். பிரகாசமான மண்வர்ண உடையணிந்த ‘குருகா’ ஒருவன் ‘என்னடா செய்யப் போறா?’ என்றான்.

‘என்னையேன் கேட்கிறாய், அதான் கல்லை எடுத்தாள், அதை வைத்துக் குட்டியைக் கொல்லப் போறாள், சீ’, என்றான் வேறொருவன்.

அந்தப் பெண் அந்தப் பெரிய கல்லைத் தூக்கிக் கொண்டு திரும்பி வந்தாள். ஆண்களிடம் வந்து, “இந்தக் குட்டியின் கஷ்டத்தைப் போக்க ஒரு கல்லைப் பார்த்து எடுத்துக் கொண்டுவர இத்தனை ஆண்பிள்ளைகளிலும் ஒருத்தருக்காவது முடியலியே என்பதுதான் ஆச்சரியமாக இருக்கு” என்றாள். பிறகு ஆட்டுக்குட்டியிடம் சென்றாள். அந்தப் பெரிய கல்லை உயரத் தூக்கிப் பொத் தென்று குட்டியின் தலையில் போட்டாள். அதை இரண்டொரு நிமிஷம் பார்த்துக்கொண்டு நின்றாள். பிறகு வேலியருகில் கொண்டு சென்றாள். வேலியின் இடைவழியாக அந்த மிருகத்தை மெதுவாகப் புல்லின் மேல் கிடத்தினாள். பெண்கள் முகத்தை மூடிக்கொண்டார்கள். கிரியை முடிந்துவிட்டதால் பஸ்ஸில் ஏற ஆரம்பித்தார்கள். ஆண்களும் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். எல்லோரும் குசுகுசுவென்று பேசினார்கள். ஒவ்வொருவனும் படியில் கால் வைத்து பஸ்ஸில் ஏறும் பொழுது திரும்பித் தன்னுடைய காரில் சென்று உட்கார்ந்து கொண்ட பெண்ணைப் பார்த்தான். ‘நெஞ்சிரக்க மற்ற பொட்டைக் கழுதை’ என்றான் ஒருவன். எல்லோரும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துகொண்ட பிற்பாடு, ஆண்கள் எல்லோரும் ஏகோபித்து ‘ஆமாம் நெஞ்சிரக்க மற்ற பொட்டைக் கழுதை’ என்றார்கள்.

– தெய்வம் கொடுத்த வரம், தமிழில்: புதுமைப்பித்தன், முதற் பதிப்பு: செப்டம்பர் 1951, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *